நொண்டிக் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 4,097 
 
 

1

மாலை வெயில் மங்கிக்கொண் டிருந்தது. பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிய குழந்தைகள், புஸ்தகங்களை வீசி எறிந்துவிட்டுத் தெருவில் ஒரு வீட்டுவாசல் முன் கூடி, எல்லை கடந்த உற்சாகத்துடன் தங்களுக்கு வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டில் ஈடுபட்டன. திடீரென அவர்களிடையே தகராறுகளும் அபிப்பிராய பேதங்களும் முளைத்து எழுந்து மறைவது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

திண்ணையில் உட்கார்ந்து ஞானம் மற்றக் குழந்தை களின் உற்சாக ஓட்டங்களில் லயித்துப்போய் ஸ்வா ரஸ்யமாகப் பார்த்துக் கொண் டிருந்தான். அடுத்த திண்ணையில் தான் மீனா உட்கார்ந்து கண்களைப் பொத்திக்கொண் டிருந்தாள். குழந்தைகள் எல்லாம் பதற்றத்தில் ஒளிந்து கொள்ள இடம் தெரியாமல் தெருவில் ஓடித் தத்தளித்துக் கொண்டு இருக்கும். புது இடம் தெரியாமல் பழைய இடத்திலேயே ஒளிந்து அகப்பட்டுக்கொண்டவண்ணமாக இருக்கும். இந்தச் சமயம் ராதா; அடுத்தமுறை அலமு; மறுபடியும் ராதாவின் முறை; பிறகு ஹீதா, லக்ஷ்மி; இப்படியாகச் சட்டுச் சட்டென்று மாறிக்கொண்டே இருக்கும், திரைப்படக் காட்சிகள் போல் ஒரு குழந்தைக்கும் சூசகமாக ஒளிந்து, அவ்வளவு சாமர்த்தியமாக அலைக் கழிக்கத் தெரியாது.

ஞானம் விளையாட்டையே பார்த்துக்கொண் டிருந் தான். அவர்களோடு கலந்து தானும் விளையாட முடிய வில்லையேயென்று அவன் குழந்தை உள்ளம் கற்பனை செய்து கொண்டு இருந்தது அந்தக் குழந்தைகளுக்கு எப்படித் தெரியும்?

விளையாட்டு ரசனையில் ஞானம் ஈடுபட் டிருந்த மனநிலையில் கையில் பிடித்துக் கன்னத்தில் பதித்துக் கொண் டிருந்த ‘சிலேட்’ அவனை அறியாமல் தவறி விட்டது. சமாளித்து அதைப் பிடிக்கப்போனவன் கை வீச்சுக்கு மிஞ்சிவிடவே கைகளைப் பின்னரித்துக் கொண்டான். மறு விநாடி ‘சிலேட்’ கீழே கிடந்தது. அவன் கைகள் ‘சிலேட்டை எட்டமுடியாமல் திண்ணை நடுவே உயர்ந்து நின்றது. அதை எப்படி எடுப்பது பரக்கப் பரக்க விழித்துக்கொண்டே விளையாட்டுச் சிறுமிகள் இருந்த அடுத்த திண்ணைப் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

‘சிலேட்’ விழுந்த சப்தம் கேட்ட குழந்தைகளும் அதேசமயம் அவன் பக்கம் பார்த்தன.

“யாராவது இந்தச் ‘சிலேட்’டை எடுத்துக் கொடுக்க மாட்டேளா?” என்று ஞானம் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

அவன் வாய் திறந்து கேட்கவும் குழந்தைகள் பயந்து போய்விட்டன. இதுவரை அவனோடு அவை பேசினது மில்லை; அவன் இருந்த பக்கமே அவை போனதும் இல்லை. ஒன்றை ஒன்று ஏதோ ஒருவித அர்த்த புஷ்டி யுடன் பார்த்துக் கொண்டன. ஒவ்வொன்றின் முகத்திலும் பீதிக் குறிகள் கிளம்பின. தயங்கித் தயங்கிப் பின்னுக்குப் பதுங்கின. அந்தச் சமயத்துக்கு விளையாட்டு நின்று போய்விட்டது.

குழந்தைகளின் தயக்கத்தைக் கவனித்த ஞானம், “மாட்டேளாடி?” என்று ‘சிலேட்’டுப் பக்கம் கை நீட்டிக் கேட்டான். அவன் பார்வை பரிதாபமாக இருந்தது.

ஆனால் இந்தக் கெஞ்சுதல் கூடக் குழந்தைகள் மனத்தைத் தொடவில்லை. சிறுமிகளின் மனம் பயத்தால் நிரம்பி இருந்தது . ஞானத்தை நெருங்குவதே ஆபத்தென்ற ஓர் எண்ணம் அக்குழந்தைகளின் மனத்தில் ஸ்திரப்பட்டு இருந்தது.

“நான் போய் எடுத்துக் கொடுக்கமாட்டேண்டி, அம்மா!” என்று இரண்டு மூன்று சிறுமிகள் நிர்த்தா க்ஷிண்யமாகக் கூறி அப்புறம் போய் விட்டனர்.

“அம்மாடி! எனக்குப் பயமாயிருக்கு” என்று ராதா கண்களை விரிய வைத்துக்கொண்டு சொன்னாள்.

திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த மீனா இதைக் கவனியாமல் இல்லை. “ஐயோ, பாவம் ! எடுக்க முடியாமல் திண்டாடுகிறது பாருடி!” என்று இடம் நகராமலே பயம் கலந்த தொனியில் இரக்கத்தோடு பேசினாள்.

அவள் வாய் அனுதாபங்கூட இரண்டொரு சிறுமி களுக்கு அதிகமாகப்பட்டது. “போடி போ! காலைப் பாரு: கோரமாக இருக்கு” என்றாள் அலமு.

“ஆமாண்டி, அதன் கிட்டக்கப் போனால் எல்லோரையும் கிள்ளிவிடுகிறதாம்; பைத்தியமும் வேறே யாண்டி!” என்று இன்னும் ஒரு சிறுமி தன் யூகத்தைக் காட்டினாள்.

இதுதான் குழந்தைகள் ஞானத்தைப்பற்றி நினைத்திருந்ததெல்லாம்.

***

ஞானம் பிறந்து ஆறு கோடைகளைப் பார்த்திருக் கிறான். ஆனாலும் அவன் இன்னும் நடை பழகவில்லை. ஏன் , நிரந்தரமாகவே அந்த ஜீவன் பாதங்களைத் தரையில் ஊன்றி அடியெடுத்து வைக்க முடியாது. பிரம்ம சிருஷ்டிக்கு மாற்று ஏது? வேஷ்டி விளிம்பிற்கு மேலாக வாழைப்பூ முனை போல் சூம்பிப் போய் எலும்பு இல்லாத சதைப் பிண்டமாகப் பாதங்கள் வெளிக்காட்டி நிற்கும் அந்தக் கோரந்தான் குழந்தை உலகத்தோடு அவனுக்குத் தொடர்பே இல்லாமற் போகும்படி செய்து விட்டது.

ஞானம் என்ற அழகான பெயர் அவனுக்கு இடப் பட்டிருந்தும் நொண்டிப் பிள்ளை என்று தான் ஊரார் அவனைப்பற்றிப் பிரஸ்தாபித்தார்கள்.

தன் சிருஷ்டி கோரத்தின் கடுமையை அவனால் பூரணமாக உணர முடியவில்லை. இதரக் குழந்தைகள் அறிந்து வித்தியாசம் பாராட்டின!

ஓடி ஓடி விளையாடின குழந்தைகளின் விளையாட்டில் ஈடுபட்ட ஞானம் குதூகலமடைந்தான். துள்ளிக் குதிக்கும் பாதங்களைப் பார்த்துப் பரவசமடைந்து கொண்டே கண்களைத் தன் பாதத்தின் பக்கம் திருப்புவான். அவனுக்கே புரியாத ஒருவிதச் சந்தேகம், தெளிந்து நிலைக்காத ஒரு வேதனை, நிழல் போலத் தோன்றும். அடுத்தக்ஷணம் அந்த நினைப்பு அழிந்து விளையாட்டுக் கவனம் வந்து விடும்.

***

ஞானத்தை விட மீனாவுக்கு ஒரு வயது அதிகம் இருக்கும்.

எட்டி நின்று ஞானத்தையே பார்த்துக்கொண் டிருந் தாள் மீனா. ஞானத்தின் பரிதாபமான பார்வையும், அவன் கைக்குத் திரும்பக் கிடைக்க வழி இல்லாமல் கீழே கிடந்த ‘சிலேட்டையும் மாறி மாறிப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் மனம் கிளர்ச்சி அடைந்தது. ‘ஐயோ, பாவம், அவனால் அந்தத் திண்ணையிலிருந்து இறங்கி எப்படி அதை எடுக்க முடியும்? நடக்க முடியாதே, பாவம்!’ என்ற நினைவு ஊறியது சிறுமி மீனாவுக்கு .

“பாவம், எடுத்துக் கொடுத்துடுவோம்” என்று சொல்லி முடிப்பதற்குள் குழந்தைகள் அவள் மீது சீறி விழுந்தன.

மீனா தயங்கி நின்று யோசித்தாள். அவளுக்கும் உள்ளூற ஞானத்தை நெருங்குவதற்குப் பயம். ஆனால் நொண்டிப்பிள்ளையின் கெஞ்சும் பார்வை அவள் மனத்தில் தைத்து விட்டது. அந்தச் சில நிமிஷங் களுள் பலவிதச் சிந்தனைகள் அவள் மனத்தில் குறுக் கிட்டு ஓடின. ‘எடுத்துக் கொடுப்பதா, வேண்டாமா? ஐயோ பாவம் ! – கிட்டப்போனதும் ஏதாவது பண்ணி விட்டால்? – ஹ ஹம் ; தள்ளியே நின்று கொடுத்து விட்டு வந்து விடுவோமே ! இல்லாவிட்டால் திண்ணை மேல் வச்சுட்டு வந்து விடுகிறேன்’ என்றெ நினைத்துக்கொள்வதனால் முகக்குறி அடிக்கடி மாறிற்று. அதேசமயம் மீனாவைப் பார்த்து ஞானம் கையை அலைக் கவும், அருகில் நின்ற குழந்தைகள் அவளை , “போகா தேடி” என்றதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கூட்டத்திலிருந்து விர்ரென்று பாய்ந்து ஓடினாள். பரபரப்புடன் ‘சிலேட்டை எடுத்துத் திண்ணை விளிம்பில் ஒரு பக்கம் தடாலென்று வைத்து விட்டுத் திரும்பவும் சகாக்களுடன் சேர்ந்து கொண்டாள். அவளுக்கு இருந்த பயத்தில் “மீனா ! மீனா!” என்று ஞானம் கூப்பிட்டது கூட அவள் காதில் விழவில்லை.

மீனாவின் முகத்தில் ஒரு பெரிய காரியத்தை – மற்றக் குழந்தைகள் செய்யத் தவறிய ஒரு கடமையைச் செய்துவிட்ட ஒரு கர்வம், திருப்தி இருந்தது அப்போது.

2

மற்றச் சிறுமிகள் அவளை ஒரு தரம் விறைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் விளையாட்டில் ஈடுபட்டனர். “சிலேட்’டைக் கையில் வாங்கிய ஞானம் மறுபடி ரசனையில் ஈடுபட்டான். ஆனால் அவன் பார்வை இப்போது பெரும்பாலும் மீனாவின் ஓட்டத்திலும் உருவத்திலுமே லயித்து இருந்தது.

குழந்தைகளின் மனத்தில் எந்தவிதமான உணர்ச் சியும் நிரந்தரமாகத் தங்குவதில்லை. வளர வளரத்தான் மனிதன் குரங்காகிறான். எதிலும் தன் பிடிவாத முத்திரையைப் பார்ப்பதில் அவன் மனம் உற்சாகம் அடைகிறது. குழந்தைகள் சண்டை இட்டுக்கொள்வதும் ஒத்துப்போவதும் எவ்வளவு சுலபம்! எவ்வளவு சீக்கிரம்!

குழந்தை உலகத்துடன் ஞானத்துக்குத் தொடர்பு ஏற்படுவதற்கு மீனாதான் காரணமாக இருந்தாள், மீனாவுடன் ஞானத்துக்குப் பழக்கம் ஏற்பட அந்தச் சம்பவம் காரணமாக இருந்தது போல!

சிறுமிகள் விளையாட்டு மும்முரமாக ஆக ஞானத்தின் உற்சாகம் அதிகரித்துக்கொண் டிருந்தது. ஒளியத் தெரியாமல் தவிக்கும் குழந்தைகளுக்குப் புதிய புதிய இடங்களைக் காட்டிக்கொண் டிருந்தான். முதலில் அவன் வார்த்தைகளைக் கேட்க மறுத்த குழந்தைகள் மீனா வழிவைத்ததும் கொஞ்சம் துணிவு கொண்டன. மீனாவுக்கு அவன் காட்டிய ஒளிவிடங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் தவித்த மற்றக் குழந்தைகளின் பொறாமையே அவர்களை அவனோடு நெருங்கச் செய்தது. கொஞ்சங் கொஞ்சமாகக் குழந்தைகள் மனத்தில் ஞானத்தைப்பற்றிய கோர சித்திரம் அழிந்து கொண்டு வந்தது. ஞானமும் தங்களைப் போல ஒருவன் என்ற நினைப்புத் தோன்ற ஆரம்பித்தது அவர்களுக்கு .

நீண்ட சிறைவாசத்துக்குப்பின் விடுதலையான கைதியின் நிலைமையில் இருந்தான் ஞானம். தனிமையில் தத்தளித்துப் பொருமிய அவன் ஹிருதயத்தைப் பல உள்ளங்கள் தொட்டுக் கரைக்கு இழுத்தன. கட்ட விழ்த்து விடப்பட்ட அவன் உற்சாகம் பல திசைகளிலும் ஓடிப் பாய்ந்தது. போகப் போகக் குழந்தைகளின் விளையாட்டில் ஞானம் பூரணமாக ஈடுபட்டு விட்டான். ஓடி ஒளிய யோசனை கேட்கும் குழந்தைகளுக்குப் புதுப் புது இடங்களை எத்தனை விதவிதமாகக் காட்டிக்கொண்டிருந்தான் அவன்!

அந்த நிலைமையிலும் குழந்தைகள் எட்டி நின்று தான் அவனிடம் யோசனை கேட்கும். மீனா ஓடிவந்து, “எங்கேடா ஒளிந்து கொள்ளட்டும்?” என்று ஆவலோடு கேட்கும் போது அவளுக்கு விசேஷமான ஒளிவிடம் காட்டுவதில் அவன் எவ்வளவு குதூகலம் அடைந்தான்! அவனை அறியாமல் மீனாவிடம் அவன் மனம் தனிச் சலுகை காட்ட ஆரம்பித்து விட்டது. மீனாதானே அவனைக் குழந்தை உலகத்திற்குள் இழுத்து விட்டாள்?

குழந்தைகள் யோசனை கேட்கும் போதும், கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கும் போதும், தானே அங்கங்கே சென்று ஓடிவிளையாடுவதாக நினைத்துக்கொண்டான் ஞானம். ஓடும் குழந்தைகளுடன் அவன் ஹிருதயமும் ஓடிச் சென்று அவர்களோடேயே திரும்பி வரும் பார்க்கப்போனால் குழந்தைகள் விளையாட்டாலும் தன் யோசனைகளாலும் அடைந்த ஆனந்தத்தைப்பற்றிக்கூட அவனுக்கு அக்கறை இல்லை. சுயநலத்துடன் தான் அவன் அதில் ஈடுபட்டிருந்தான் என்று கூடச் சொல்லலாம். அந்த விளையாட்டிலும் யோசனையிலும் அவன் சந்தோஷம் அடைந்தான். அந்தத் திருப்திதான் அவனுக்குப் பெரிதாக இருந்தது. மாயக்கண்ணன் ரூபம் போல் அவன் ஹிருதயம் பல ரூபங்களாகப் பிரிந்து அவனை மகிழச் செய்து கொண்டிருந்தது.

ஓடும் குழந்தைகளின் அத்தனை கால்களும் தன்னுடையவை போன்ற உணர்ச்சிதான் அவன் வெறி உள்ளத்தில் பதிந்து கிடந்தது. அப்போது அத்தனை கால்களும் அவனுடையனவாக இருக்கும் போது அவனுக்குக் கால்கள் இருந்தாலென்ன, இல்லாவிட்டால் தானென்ன? இத்தகைய காட்சியின் நினைப்பில் அவன் தன் மனத்தைப் பறி கொடுத்து இருந்தான்.

3

அன்றும் வழக்கம் போல் குழந்தைகள் விளையாட ஆரம்பித்தன. கொஞ்ச நேரந்தான் சென்றிருக்கும். அதுவரையில் அமைதியாக நடந்த விளையாட்டுத் திடீரென்று நின்று விட்டது. அவன் உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் தடை கட்டுவதுபோல், அதுவரை கண்ணாமூச்சி பொத்திக்கொண்டிருந்த சிறுமி இனி முடியாதென மறுத்துவிட்டாள்; திண்ணையினின்று குதித்துத் தானும் ஓடி ஒளியத் தயாரானாள்.

இனி யார் பொத்துவது? ஆட்டத்தில் ஓடியாடி நேரடியாகக் கலந்து கொள்வதில் ருசிகண்ட சிறுமிகள் பொம்மை போல் உட்கார்ந்து பொத்திக்கொண் டிருக்கத் தயாராக இல்லை. பல்லக்கு ஏற எல்லோரும் தயார்; சுமக்க மாத்திரம் தயாராக இல்லை.

ஞானத்தின் மனம் சஞ்சலப்பட்டது. விளையாட்டு நின்றது குழந்தைகள் மனத்தில் கூட அவ்வளவாகப் படவில்லை, சண்டை மும்முரத்தில். சுய நலத்துடன் வேடிக்கை பார்ப்பதில் லயித்து ஆத்ம திருப்தி கொண்ட ஞானத்துக்குத்தான் உறுத்தியது; உற்சாகம் குன்றியது. ஒவ்வொரு க்ஷணமும் அவன் சாதகமான முடிவை எதிர்பார்க்கப் பார்க்க ஏமாற்றந்தான் அதிகமானது.

அவன் வேண்டுகோள்களும் பயன்படவில்லை.

குழம்பிய மனத்துடன் கொஞ்சம் யோசித்தான். சரேலென்று அவன் முகம் பிரகாசத்துடன் மாறியது. “மீனா ராதா, நான் பொத்துகிறேன்; நீங்கள் ஓடி ஒளியுங்கோ!” என்று ஆசையைக் கொட்டிக் கூறிவிட்டு, அவர்கள் ஸம்மதத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு சிறுமியின் முகத்தையும் ஆவலுடன் நோக்கினான்.

விளையாட்டைப் பார்க்க அவன் மனசு அவ்வளவு ஆத்திரப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் தன் தன் விளையாட்டை ரசித்தது. ஞானமோ அத்தனை பேர் விளையாட்டையும் ரசித்தான்.

ஆனால் பழைய பயம் இன்னும் முழுவதும் மறைந்து விடாமல் அந்தக் கோர நினைவு அந்தக் குழந்தை உள்ளங் களில் இருந்தது. அவர்கள் பார்வை அதைக் காட்டிக் கொடுத்தது. ஸம்மதிப்பதா? மறுப்பதா? அவர்களால் நிதானிக்க முடியவில்லை. பழைய கசப்பு மாறி வந்த நிலைமைக்கும், பயத்தின் சாயல் முற்றும் அழியாத நிலைமைக்கும் நடுவே கிடந்து அவை தத்தளித்தன. எல்லாக் குழந்தைகளும் மீனாவைப் பார்த்தன, அவள் தான் அந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென எதிர் பார்ப்பது போல்.

மீனா ஞானத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் ஆவல் கண்கள் அவளைச் சம்மதிக்கும்படி கெஞ்சு வதுபோல் இருந்தன. “நல்லதாப் போச்சு ; வாங்கோடி, நித்யம் அவனே பொத்துவான்” என்று உற்சாகம் காட்டிச் சிறுமிகளை இழுத்தாள். குழந்தைகளுக்கு அரை மனசு. ஆனால் அவசியமும் அவசரமும் அவர்களை விரட்டின.

“மீனா கிட்டப் போன போது ஒன்றுமே செய்ய வில்லையே!” என்றது ஒரு குழந்தை. அடுத்தடுத்து ‘ஒவ்வொரு குழந்தையின் வாயிலும் அபிப்பிராயத்தின் எதிரொலிகள் உண்டாயின.

மீனா முன் இழுக்க ஞானம் இருந்த திண்ணைப் பக்கம் முன்னால் காலெடுத்து வைத்தார்கள். பாதங் களின் கோரம் அவர்கள் கண்களில் பட்டது. கால்கள் பயத்துடன் மீண்டும் பின்வாங்கின.

அவர்கள் காலெடுத்து வைத்ததும், மீண்டும் பின்னரித்ததும் ஞானத்துக்கு ஒரு மாதிரியாக இருந்தன. என்ன தோன்றியதோ தெரியவில்லை, கால்களை இழுத்து வேஷ்டிக்குள் மறைத்துக் கொண்டான்; குழந்தைகளைப் பொத்துவதற்குத் தயாரானவன்போல் இருந்தான்.

“மீனா!” என்று கை நீட்டிக் கூப்பிட்டான் ஞானம். மீனா ஓடிப்போய் அவன் முன்னின்று கண்ணாமூச்சிக்குத் தயாரானாள். குழந்தைகள் பயம் அதோடு நொறுங்கிப் போய் விட்டது. நிரந்தரமாகக் கண்பொத்த ஓர் ஆள் கிடைத்துவிட்டான், அவர்களுக்கு. அவனால் ஓடி விளையாட முடியாது. அவர்களிடையிலும் சண்டை ஏற்பட வழி இல்லை, இனி!

“கண்ணாமூச்சி ரே ரே…”

4

இத்தனை வருஷங்களாக ஆடி இராத விளையாட்டு அத்தனையும் ஒரே அடியாக விளையாட விரும்பினவன் போல் வெறியுடன் கண்பொத்துவதில் ஈடுபட் டிருந் தான் ஞானம். உள்ளூற மக்கிப்போய்க் கிடந்த அத்தனை உற்சாகமும் அவன் மனத்திலிருந்து வெடித்துக் கிளம் பினது போல் இருந்தது.

மீனாவின் ஓட்டமும் உருவ முந்தான் அவன் கவனத்தை விசேஷமாக இழுத்துச் சென்றன. அவள் ஒளியும் இடம், தப்பும் வகை இவைகளையே கண்கள் பார்த்துக்கொண் டிருக்கும். தூரத்தில் அவள் ஓடி வரும்போது ஆர்ப்பரிப்பான். அவள் தப்புவதைக் கண்டு தானே தப்பிவிட்டது போல் பூரிப்புக் கொள்வான்.

விளையாட்டுப்போக்கில் மீனாவிடம் அவனுக்கு ஒரு. தனிப்பற்றுதல் ஏற்பட்டு விட்டது. அவனுடைய அத்தனை உற்சாகத்துக்கும் அவள் தானே காரணம்? மீனா பிடிபடாமல் இருக்க வேண்டும் என்ற கவலை தான் சதா அவனுக்கு. நடுநிலைமை வகிக்க வேண்டிய இடத்தில் பாரபக்ஷ எண்ணம் விழ ஆரம்பித்தது. ஆனால் அந்தச் சலுகையை ஆட்டத்தில் எப்படிக் காட்ட முடியும்? முடியாதே.

மீனா சேர்ந்தாற்போல் இரண்டு மூன்று தரம் பிடி பட்டு விட்டாள் . யாரையாவது பிடித்தால் தான் அவள் நிலைமை மாறும். ஓடவும் பிடிக்கவும் முடியாமல் களைத் துப்போன அவள் முகத்தை ஞானம் கவனித்தான். அவன் முகமும் கலக்கம் காட்டியது. ‘ஐயோ ! யாராவது அகப்பட்டுக்கொள்ள வேண்டுமே’ என்று உள்ளூறத் தெருக்கோடிப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டான். பயனில்லை. காட்டி விடலாமா என்ற அற்ப எண்ணங்கூட அவன் மனத்தில் ஒவ்வொரு சமயம் தோன்றிவிட்டது. ஆனால் எப்படியோ தன் ஸ்தானத்தின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டான்.

மீனாவும் ஒருவாறு ஒரு சிறுமியைப் பிடித்து விட்டாள்!

மறுமுறை மீனா தான் ஒளிந்து கொண் டிருந்த இடத்திலிருந்து மெதுவாக எட்டிப் பார்த்தாள். அவளைத் தேடிய சிறுமியின் கால்கள் அவளை நோக்கிப் பாய்ந்தன. மீனாவை விரட்டினாள்.

தெருக்கோடியிலிருந்து குடல் தெறிக்க ஓடிவந்தாள் மீனா. வேகத்தில் அசைந்தாடும் அவள் பின்னலுக்கு நேராக விரட்டிய சிறுமியின் நீட்டிய விரல்கள் ஓடி வந்தன.

இன்னும் சில எட்டுக்கள் தாம்! மீனா பிடிபட்டு விடுவாள்; சந்தேகமே இல்லை.

ஞானத்தின் மனசு பதைத்தது. அவள் அகப்படக் கூடாதெனத் துடித்தது. தாம் பணம் கட்டிய பந்தயக் குதிரையின் ஓட்டத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களைப்போலத் தவித்தான்.

“மீனா! மீனா! ஓடிவா!” என்று அடித்தொண்டையி லிருந்து கத்தினான். உட்கார்ந்தவாறே கைதட்டினான். தவ்வித் தவ்வி எழுந்தான். விளையாட்டு வெறியுடன் மீனா மீதுள்ள கவலையும் கலந்தது. அவள் ஞாபகந்தான் அவன் மனசு முழுவதும். தன்னைப் பற்றிய நினைவே அவ்வளவாக இல்லை.

மீனா கிட்ட நெருங்கி விட்டாள். இன்னும் சில எட்டுக்களே பாக்கி! அவள் அவனைத் தொட்டு விடலாம்.

ஆனால் விரட்டிய சிறுமியின் வேகம் கொஞ்சமும் தளரவே இல்லை. மீனாவின் பின்னலைத் தொட்டால் கூடப் போதும். இடையிலுள்ள தூரம் முன்னிலும் குறைந்துவிட்டது.

ஞானத்தின் துடி துடிப்புத் தாங்க முடியவில்லை. மீனா பிடிப்படக் கூடாது என்ற ஆத்திரம் அவனை மெய்ம் மறக்கச் செய்தது.

“மீனா! மீனா! தொடு என் கையை, சீக்கிரம்!” என்று தன்னை அறியாமல் எழும்பிக் கையை நீட்டி விட்டான். அவனுக்கு இருந்த ஆத்திரத்திலும் வெறியிலும், நீட்டிய கையைத் தொட்டு விடமாட்டாளா என்ற ஆசையிலும், கால்கள் இருந்திருந்தால் இறங்கிக்கூட எதிர்த்து ஓடியிருப்பானோ என்னவோ?

வேகமாக எழும்பி விட்டான், திண்ணை நுனியை மறந்து.

“மீனா தொட்டுட்…” – அவன் முடிக்கவில்லை.

பலத்த சப்தத்துடன் தலை தரையில் மோதி உடல் சாய்ந்து விழுந்தது.

அதே சமயம் அவனை ஓடித் தொட்ட மீனாவின் விரல்களில் அவன் சூம்பிய பாதந்தான் பட்டது.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *