கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 13,201 
 
 

நேற்றிரவு கூட வனஜாக்கா, கிணற்றில் நீர் இரைக்கும் சத்தம் என் கனவில் கேட்டது. சத்தம் என்றால் உருவம் இல்லையா? இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் கனவில் காட்சியைவிட ஓசையே மேலோங்கி இருந்தது. பொழுது விடிந்து வெகு நேரத்திற்குப் பின்னும் சங்கிலிச் சகடையின் ஒலி அதிர்வுகள் கசிந்தபடியே இருக்கின்றன. இப்போது என்றில்லை. எப்போதுமே இப்படித்தான். வனஜாக்கா வரும் கனவுகளில் உருவங்களை விட

ஓசையே தூக்கலாக இருக்கிறது. கிணற்றடியில் சகடை உருளும் ஓசை. ஒருவேளை சகடைச் சத்தம்தான் வனஜாக்காவின் ஒலி வடிவமாக இருக்குமோ?

நீர்க்கொடி

சங்கிலிக் கயிற்றால் வனஜாக்கா கிணற்றில் நீர் இரைக்கும் சத்தம் மூன்று தெருவுக்கும் கேட்கும். மூன்று தெருக்களைக் கடக்கும் ஓசை, பக்கத்து வீட்டுக்காரனான என் காதுகளில் எவ்வளவு கனமாக ஊடுருவி இருக்கும்? கிணறுகளில் சணல் தாம்புக் கயிறுகளால் நீர் இரைக்கும்போது, இரும்புச் சகடை உருளும் சத்தம் மட்டுமே கேட்கும். புதிதாக வரத் தொடங்கியிருந்த சில கருப்புநிற டயர் கயிறுகளிலும் அதே சத்தம்தான் வரும். இரும்புச் சகடையில் சங்கிலிக் கயிறு உரசும் சத்தம் மட்டுமே பேரோசையாக காற்றில் எழுந்து பரவும். ஊரில் இரண்டு மூன்று கிணறுகளில் மட்டுமே சங்கிலிக் கயிற்றுச் சகடைகள் இருந்தன. தெற்குத்தெரு தாடிக்காரர் வீடு, அல்லிக்குளத்து சிங்காரு வீடு, மூன்றாவதாக வனஜாக்கா வீடு.

நாளின் பெரும்பகுதி நேரங்கள் வனஜாக்கா கிணற்றடியிலேதான் நின்று கொண்டிருக்கும். பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது, பூஜை சாமான் தேய்ப்பது என வேலைகள் தொடரும். என் வீட்டுக் கிணற்றடியில் இருந்து பார்த்தால் அக்கா நீர் இறைப்பது அழகாகத் தெரியும். மஞ்சள் தேய்த்து குளித்த வாசனையுடன் புடவைக் கொசுவத்தை இடுப்பில் சொருகியபடி தண்ணீர் மொள்ளும் காட்சி இப்போதும்கூட கண்ணிலேயே நிற்கிறது. சில நேரம் நானும் அங்கு சென்று கிணற்றுக்குள் தலை நீட்டிப் பார்ப்பேன். சலசலவென சத்தமிட்டபடி வெறும் வாளி கிணற்றுக்குள் செல்லும். தளும்பத் தளும்பத் தண்ணீரை நிரப்பிக் கொண்டு மேலே வரும். அதைப் பார்க்க எனக்குப் பிடிக்கும். அக்காவும் என்னிடம் பேச்சுக் கொடுத்தபடியே வேலை பார்க்கும்.

கிணற்றுக்குள் தலைநீட்டிப் பார்க்க எனக்குப் பிடிக்காமல் போனது மகேந்திரனால்தான். அவன் செய்த கொடுஞ்செயலைப் பார்த்த பிறகு கிணற்றுக்குள் தலை நீட்டவே பயமாகிவிட்டது எனக்கு.

நாள் முழுதும் கிணற்றடியிலே நிற்கும்

வனஜாக்கா, அங்கு இல்லாத நேரம் என்பது பின்மதியம் மட்டுமே. சாப்பிட்ட பின் சிலோன் ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்டபடியே, கூடத்து குறட்டில் தலை சாய்த்து சற்றே கண் அயரும். அந்த நேரத்தை தனது கொடுஞ்செயலுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொள்ள தொடங்கியிருந்தான் மகேந்திரன்.

கிணற்றடிக்கு வரும் அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு பூனைக் குட்டிகள் இருக்கும். கண் விழித்து ஓரிரு நாட்களே ஆகியிருக்கும் அந்த இளங்குட்டிகள் ஒன்றும் புரியாமல் மெல்லிய குரலில் “மியாவ் மியாவ்’ எனக் கத்திக் கொண்டிருக்கும். சிரித்தபடியே அவற்றை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போடுவான். கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கியபடியே மரணபீதியில் பூனைக்குட்டிகள் ஓலமிடுவதைப் பார்த்து உரக்க சிரிப்பான். அந்தக் காட்சியின் கொடூரத்தில் நான் அப்படியே உறைந்து போய் நிற்பேன். பயத்தால் வெளிறிப்போகும் என் முகத்தைப் பார்த்து, “”பயந்தாகுளிப் பயடா நீ” என்று கை தட்டிச் சிரிப்பான்.

பூனையைக் கிணற்றில் போட வேண்டாமென எவ்வளவோ கெஞ்சியிருக்கிறேன். என் பேச்சை அவன் கேட்கவே இல்லை. ஊருக்குள் எந்த மூலைமுடுக்கில் பூனைகள் பிரசவித்தாலும் எப்படியோ கண்டுபிடித்து விடுவான். குட்டிகளைத் தூக்கி வந்து கிணற்றில் போட்டு விட்டு ஆனந்தமாகச் சிரிப்பான். பூனைகளைக் கொல்வது பெரும்பாவம் என்று அம்மா சொன்னதை அவனிடம் சொல்லி, எச்சரித்தும் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அந்த துஷ்டனோடு சேரவேண்டாம் என அம்மா என்னைக் கண்டிக்கத் தொடங்கியது அதற்கப்புறந்தான்.

பக்கத்து வீடு, சின்னம்மா மகன், ஒரே வகுப்பு மாணவன் என்ற வகையில் அவன் எனக்கு நெருக்கமான கூட்டாளியாக இருந்தான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பூனைக் கொலையை அவன் விட்டு விடவில்லை என்ற போதும், அம்மாவுக்குத் தெரியாமல் நான் அவனுடன் பழகிக் கொண்டுதான் இருந்தேன். பால்ய சினேகிதத்தின் முதல் முளை அல்லவா? எப்படி சட்டென்று துண்டித்து விட முடியும்? பொழுதுவிடிந்து பொழுது போனால் அவன் முகத்தில்தானே விழிக்க வேண்டும்.

பூனைக்குட்டிகளைக் கிணற்றில் தூக்கிப் போடுவது மாபாதகம் என்றும் அதற்குத் தண்டனையாக ஏழேழு பிறவிக்கும் பல துன்பங்களை அனுபவிக்க நேரும் என்றும் அம்மா சொன்னது, அவ்வளவு சீக்கிரம் பலிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அடுத்து வந்த கோடை விடுமுறையிலேயே அது நடந்து விட்டது. ஆம். கோட்டப்பாடி பாட்டி வீட்டுக்குப் பரீட்சை லீவுக்குப் போன மகேந்திரன், தேன் என நினைத்து பூச்சி மருந்தை நக்கியதால் அநியாயமாகச் செத்துப் போனான்.

என்னை உலுக்கிய முதல் மரணம் அதுதான். பெரியாஸ்பத்திரி ஆம்புலன்ஸ் வேனில் எடுத்து வரப்பட்டு சின்னம்மா வீட்டு முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்த அவனுடைய பிணம் இப்போதுகூட மனசைப் பிசைகிறது. ஊர் மொத்தமும் கூடி மாரில் அடித்துக் கொண்டு அழுதது. அகால மரணமல்லவா?

லீவுக்கு ஊருக்குச் சென்றவன் பிணமாக ஊர் திரும்பியதை என்னால் தாங்கவே முடியவில்லை. அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு அழுதேன். தாளாத அதிர்ச்சியிலும் பீதியிலும் என் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. வயிற்றைக் கலக்கியது. மாலை வரை வெளியே வரவேயில்லை. பிணம் எடுக்கும் வேளையில் தாத்தாவுடன் வந்த அம்மா பாடி எடுக்கப் போறாங்கப்பா, நீதான் அவனுக்கு ரொம்ப இஷ்டமான சினேகிதன். ஒரே ஒரு தடவை வந்து மொகம் பாத்துடு. இல்லேன்னா அவன் ஆவி இங்கேயே அலைஞ்சிக்கிட்டிருக்கும் என்று கெஞ்சியதால் கடைசி நேரத்தில் மனம் கரைந்தேன். அம்மாவின் புடவையில் முகம் புதைத்தபடியே சென்று மகேந்திரனின் உடலைப் பார்த்தேன். அவன் முகத்தைப் பார்க்கச் சகிக்காமல் என் முகத்தைப் பொத்திக் கொண்டு “ஓ’வென்று அழுதேன். சிறிது நேரத்திலேயே அம்மா என்னை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டது.

சின்னம்மா வீட்டில் ஒலித்த ஒப்பாரி ஓசைகளில், கிணற்றுக்குள் மூழ்கி துடிக்கத் துடிக்கச் செத்துப் போன பூனைக்குட்டிகளின் மரண ஓலங்களே எதிரொலிப்பது போல இருந்தது எனக்கு. ஊருக்குள்ளும் அவ்விதமாகவே பேசிக் கொண்டனர். அவனுடைய அகால மரணத்திற்குக் காரணம் பூனைக் கொலைகளே என்றும் பூனையையும் பசுமாட்டையும் கொல்லும் பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் துரத்தும் என்றும் வானாகோவன்னா தாத்தாவும் தாடிக்கார தாத்தாவும் என் தாத்தாவோடு ரகசியமான குரல்களில் பேசிக் கொண்டதைக் கேட்டு உறைந்து போனேன். இரவுகளில் தூக்கமின்றிப் பல நாட்கள் தவித்தேன். மகேந்திரனுடைய முகமும் பூனைக்குட்டிகளின் முகமும் எப்போதும் என் கண்முன்னே நிழலாடிக் கொண்டே இருந்தன. பாவங்களுக்கான தண்டனைகள் ஜென்மங்களைக் கடந்தும் தொடருமா? என்ற கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது.

மகேந்திரன் செத்துப் போனதிலிருந்தே வனஜாக்கா மிகவும் ஒடிந்து போய்விட்டது. வீட்டின் கடைக்குட்டி என்பதால் எல்லோருக்குமே அவன் மேல் பாசம் அதிகம். வீட்டுக்கு தலைச்சன் குழந்தை என்பதால் வனஜாக்காவுக்கும் அவன் மேல் கொஞ்சம் கூடுதலாகவே ஓட்டுதல் இருந்தது. என்னையும் அக்காவுக்கு ரொம்பவே பிடிக்கும். சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போனால் அவனோடு சேர்த்து எனக்கும் சாப்பாடு பரிமாறும். நொறுக்குத் தீனி நேரம் என்றாலும் அப்படித்தான். நீருண்டை, பச்சைபயறு தோசை, முடக்கத்தான் அடை என ஏதோ ஒரு தீனி கிடைக்கும். எந்தப் பாகுபாடும் இன்றி எனக்கும் அவனுக்கும் சம பங்கு கொடுப்பதாலேயே எனக்கும் அக்காவை ரொம்பப் பிடித்து போயிற்று.

சின்னம்மாவின் சிரித்த முகம் வனஜாக்காவுக்குத்தான் அச்சுஅசலாக வாய்த்திருந்தது. பல் எடுப்பாக இருப்பதுகூட அதற்குத் தனி அழகாகத்தான் இருந்தது. மல்லிக்கா வனஜாக்காவுக்கு இளையது. ஆனால் அது அவ்வளவு ஒட்டுதலாக கலகலப்பாக யாரிடமும் பழகாது. தொப்பாசு சித்தப்பாவின் சிடுமூஞ்சி முகம் மல்லிக்காவிடம் அப்படியோ அப்பிக் கொண்டதுபோல் இருக்கும்.

சித்தப்பாவின் சிடுமூஞ்சி எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. எனக்கு மட்டுமில்லை. என் வயசொத்த ஊர்ப் பசங்கள் யாருக்குமே அவரைப் பிடிக்காமல் போனது. அதற்கு பல காரணங்கள் இருந்தன.

சிவன் கோயில் சூரிய பூஜை, மாரியம்மன் கோயில் தீ மிதி விழா, விநாயகர் சதுர்த்தி, பெரிய கார்த்திகை என எல்லா கோயில் திருவிழாவிலும் சித்தப்பாதான் உண்டகட்டி விநியோகஸ்தர். அவருடைய உடம்பும் கைகால்களும் சராசரியானவை அல்ல. குள்ளமான உடம்பில் முறுக்கிவிட்டது போல கைகால்கள் விறைத்துக் கொண்டு நிற்கும்.

கருத்தச்சிறுத்த கைகளால் பித்தளை பிரசாத வாளிக்குள், ஓர் உருண்டை புளியோதரையை அமுக்கி நசுக்கி அரை உருண்டையாக வெளியே எடுத்து தொன்னையில் போடுவார். கொண்டைக்கடலை சுண்டலும் நாலேநாலுதான் கையில் வரும். உண்டகட்டி போதாத எவனோ ஒருவன் பின்னால் நகர்ந்து இரண்டாம் முறையாக தொப்பாசுவிடம் பிரசாதம் வாங்க கையை நீட்டுவான். அவனுக்குப் பிரசாதம் விழாது. நங்கென்று உச்சி மண்டையில் குட்டுதான் விழும். வலி தாங்க முடியாத ஆத்திரத்தில் “கஞ்சப் பிசிநாறி, காட்டுப்பூன தொப்பாசு’ என்று கத்தியபடியே கோயிலை விட்டு வெளியே ஓடுவான். அவ்வளவு கூட்டத்திலும் களவாணிகளைச் சித்தப்பா எப்படித்தான் கண்டுபிடிப்பாரோ? தெரியாது. அந்தத் திறமைக்காகவே கோயில் நிர்வாகம் அவரைப் பிரசாத விநியோக வேலைக்குச் சரியான ஆள் என்று தொடர்ந்து வைத்திருந்தது. ஊர்ச் சிறுவர்களுக்குத்தான் தொப்பாசு சித்தப்பா எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே ஆகிப்போய் இருந்தார்.

கோயில் திருவிழாக்கள் மட்டுமல்ல, ஊருக்குள் நடக்கும் நிச்சயதார்த்தம், ஓலை எழுதுதல், கல்யாணம், பெண் ருதுவான சடங்கு, பிள்ளை பதினாறு தொடங்கி துக்க வீட்டு கருமாதி வரைக்கும் தொப்பாசு சித்தப்பாதான் பந்தி மேற்பார்வை. பிரகாரத்திற்கு முன்னால் நந்தி உட்கார்ந்திருப்பது போல சாப்பாட்டு பந்தி நுழைவுவாயிலில் தொப்பாசு சித்தப்பா நின்று கொண்டு சாப்பிட வருபவர்களை ஒழுங்குப்படுத்தி உட்கார வைப்பார். முதல் இரண்டு பந்திகளில் முந்திக் கொண்டு உட்கார வரும் சிறுவர் பட்டாளத்தை அதட்டியபடி வெளியேற்றுவார். அவரது பார்வைக்கு டிமிக்கிக் கொடுத்துவிட்டுப் பந்தலின் பின்பக்கமாக புகுந்து வந்து பந்தியில் உட்காரும் பசங்களை அமுக்கி பிடிப்பார். தலையில் குட்டி காதைத் திருகி வெளியே இழுத்துக் கொண்டுபோய் விடுவார். வலியிலும் அவமானத்திலும் கடுப்பாகும் சில முரட்டுப் பசங்கள் திருமணப்பந்தலின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் தாம்பூலத் தட்டை எடுத்து தொப்பாசு முகத்தில் வீசி அடித்து விட்டு ஓடி விடுவார்கள்.

இப்படி சிறுவர்களைச் சீண்டிக்கொண்டே இருக்கும் தொப்பாசுவைப் பழி வாங்க வேறு சில அபூர்வமான சமயங்களும் வாய்க்கும். சராசரியான நடைவாகற்ற சித்தப்பா சில நேரங்களில் கப்பி ரோட்டில் நடக்கும்போது கல்தடுக்கி கால் இடறி கீழே விழுந்து விடுவார். தானாக சுதாரித்து எழ அவரால் முடியாது. மல்லாக்க கவிழ்ந்து விடும் கரப்பான் பூச்சியைப்போல் கைகால்களை அடித்துக் கொண்டு கிடப்பார். யாராவது பார்த்துவிட்டு ஓடி வந்து கை தூக்கி விடுவார்கள். அந்த சந்தர்ப்பங்களில் அவரைப் பார்த்துவிடும் சிறுவர்களின் மகிழ்ச்சியைச் சொல்லி மாளாது. “”ஏய் கரப்பான் பூச்சி தொப்பாசு கீழ விடுந்துடுச்சுடா” எனக் கோரஸôக சிரித்தபடி கை தட்டி ஆரவாரம் செய்வார்கள்.

சின்னம்மா வீட்டில் மகேந்திரனும் மல்லிக்காவும் சராசரி உடலமைப்புக் கொண்டவர்களாக இருந்தனர். வனஜாக்காவுக்கும் சேகர் அண்ணனுக்கும் சித்தப்பாவைப் போன்றே கரட்டு உடல் வாய்த்து விட்டது. இப்படி உடல் அமைவது கூட முன்ஜென்ம பாவம் என்றே தாத்தா சொல்வார். சின்னம்மா வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரண சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது எனக்கும் ஜென்ம சாபங்களின் மேல் நம்பிக்கை வந்தது.

மகேந்திரன் இறந்து சில மாதங்களிலேயே சின்னம்மாவும் பலியானது. அய்யனார் சவுக்குத் தோப்பு பக்கம் பொழுது சாய்ந்த பின், பெண்களோடு ஒதுங்க போன சின்னம்மா பாம்பு கடித்து செத்துப் போனது. பூனைகளைக் கொன்ற பாவம் தொப்பாசு வீட்டை சுற்றுவதாகவே அப்போதும் கதைகள் உலவின.

எடுப்பான முன் பற்களாலும் கரட்டு உடலாலும் வனஜாக்காவின் கல்யாணம் தாமதமாகி கொண்டே போனது. சின்னம்மாஇறந்து சில மாதங்கள் கழித்துதான் ஒரு வரன் கூடி வந்தது. மாயவரம் பக்கம் கூறைநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு எப்படியோ வனஜாக்காவைப் பிடித்து போனதால், ஒரு வருஷ துக்கம் கழிந்த பின் வந்த, சித்திரை மாதத்தில் திருமணமும் நடந்தது. வனஜாவுக்குக் கடவுள் கண்ணத் தொறந்திட்டான் என்றே ஊர் சந்தோஷப்பட்டது. நானும்தான். ஆனால் அந்த சந்தோஷம் சில மாதங்கள் கூட நீட்டிக்கவில்லை.

வனஜா மலடு என்பதாகவும், ஏமாற்றி தன் தலையில் கட்டி வைத்து விட்டதாக அவள் கணவன் ஓயாமல் சண்டையிடுவதாகவும் எங்கள் வீட்டுத் திண்ணையில் கூடும் அக்கம்பக்கத்து பெண்கள், அம்மாவுடன் பேசிக் கொண்டனர். மலடி என்ற வார்த்தைக்கு அப்போது எனக்கு அர்த்தம் புரியவில்லை.

அடுத்த சில மாதங்களுக்குப் பின் ஒரு நாள் வனஜாக்கா இறந்து விட்டதாக நள்ளிரவில் தந்தி வந்தது. அழுது அடித்துக்கொண்டு விடியற்காலை, முதல் பேருந்தில் ஏறி உறவினர்கள் அனைவரும் மாயவரம் போனார்கள். வனஜாக்கா கால் தடுக்கி வீட்டுக் கிணற்றில் விழுந்து இறந்து விட்டது என்றும் குழந்தை பெற வக்கற்ற மலடி என்பதால் புருஷனே அடித்து கிணற்றில் போட்டு விட்டதாகவும் ஊருக்குள் மீண்டும் மரணக் கதைகள் வலம் வரத் தொடங்கின.

பூனைகளைக் கொன்ற பாவம், பூர்வஜென்ம சாபம் சின்னம்மா வீட்டைச் சுற்றுவதாக பல மாதங்களுக்கு ஊருக்குள் பேச்சிருந்தது. மனிதனுக்குத் தொப்புள் கொடி உறவு போல கிணறுகள் எல்லாவற்றுக்கும் நீர்க்கொடி உறவு உண்டு என்றும் பிறந்த வீட்டின் கிணற்றில் வனஜாவின் தம்பி பூனைகளைக் கொன்று போட்ட மாபாதகம், புகுந்த வீட்டுக் கிணறு மூலமாக பழி தீர்த்துக் கொண்டதாகவும் தாத்தாவின் சினேகிதர்கள் திண்ணையில் சீட்டாடும்போது பேசிக் கொண்டனர்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பியதாக பல கதைகள் தொன்றுதொட்டே சொல்லப்பட்டு வருகின்றன. கிணற்றுக்குள் பூதங்கள் இருக்குமா? அல்லது கிணறே ஒரு பூதம் தானா? கிணற்றில் விழும் கற்களாய் எனக்குள் சதா கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *