நிரந்தரமற்ற நிழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 5,188 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரயில் கிளம்புவதற்கு பத்தே நிமிடங்கள் தான் இன்னும் டிக்கெட் எடுக்கவில்லை. ஒரு டிக்கெட் எடுக்கவா? ரெண்டு டிக்கட் எடுக்கவா?

ஒரு டிக்கெட்தான் என்பதை அவளால் ஒப்புக் கெள்ளவே முடியவில்லை.

ரெண்டு டிக்கெட் எடுத்திடலாம் வந்திருவார்தானே வராம என்ன?

அதிகாலை ஆறுமணிக்கு முன்னமே வீட்டிலிருந்து கிளம்பி, ரோட்டில் வந்து, டாக்சிக்காகக் காத்திருக்கும்போதே… ஏற்கனவே கனத்துக் கொண்டிருந்த ராதிகா வின் மனம் மேலும் காயப்பட்டு ஓவென ஓலமிடத் தொடங்கியது.

கூட வராவிட்டாலும் கூட, அக்கரையோடு கூட்டிக் கொண்டு போய் விடவாவது காரை எடுத்துக்கொண்டு வரமாட்டாரா என எதிர்பார்த்தாள் அதனால், வந்து நின்ற ஓரிரு வாடகை வண்டிகளையும் கூட, வேண்டாமென்று சைகை காட்டி விட்டு, வெறுமனே நின்றிருந்தாள்.

வாகனங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த அந்த வளாகத்தில் அவள் வாய் விட்டு அழுதாள்.

அழுது அதிக நாட்கள் ஆகிவிட்டனவே அதனால்தானே அடக்க முடியாத அருவி அவள் கன்னங்களில் உடைப்பெடுத்துக் கொண்டு ஓடியது.

வெளியூர் பயணத்திற்கு, துணைக்கு வருவதாக வாக்குக் கொடுத்து பின் இரவுக்குள் மறு உறுதிப் படுத்துகிறேன்….. என்று சொல்லிச் சென்றவனிடமிருந்து இன்னமும் எந்த தகவலும் இல்லை. என்றாலும் நேற்றே நேராக இரயில் நியைத்துக்கு வந்து விடுவதாக சொல்லியிருந்ததால்….. எதற்கும் அங்கு போய்க் காத்திருக்கலாம்… என்ற ஆறுதலோடு, அடுத்து வந்த வண்டியை நிறத்தி ஏறிச் சென்றாள்.

ஏழு நாற்பத்து ஐந்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஆறு முப்பதுக்குத்தான் டிக்கெட் விற்கும் கவுண்டரை திறந்து விட்டார்கள். வார நாள் ஆதலால் அதிக கூட்டம் இல்லை.

ராதிகா கண்ணனின் வருகைக்காக கால் கடுக்க இடுப்பு நோக நின்றுகொண்டிருந்தாள், அங்குள்ள வசதியான இருக்கைகளிலே உட்காரக் கூட அவளுக்குப் பொறுமை இல்லை. நுழைவாயிலுக்கும் பொது தொலைபேசிக் கூண்டுக்குமாக அடிக்கொருதரம் நடந்து கொண்டிருந்தாள்.

ரெண்டு டிக்கெட் எடுத்திடலாமா? கடைசி வரைக்கும் வரலைன்னா? திருப்பித் தர முடியாது. யாரையாவது தேடி விக்கனும் ஆ போனா போகட்டும் முப்பது ரிங்கட்.

இன்னும் கொஞ்ச நேரம் வரட்டும். இல்லே பயணத்தையேரத்து பண்ணிட வேண்டியதான் ரத்து செய்திட்டு? எங்கே போறது? திரும்பி போனா, வீட்ல என்ன சொல்றது?

பலவாறான குழப்பங்களோடு பரிதவித்துக் கொண்டிருந்தாள்.

தூர பயணத்தில்…தோளில் சாய்ந்து… தொட்டுக் கொண்டும் ஒட்டிக்கொண்டும்….உறக்கத்தின் கிறக்கத்தில் ஒன்றித்த சுகத்தின் ஒய்யாரத்தில்….

எண்ண எண்ண இனிக்கும் வண்ண வண்ணக் கனவுகளையும் கற்பனைகளையும் ஏந்தி, ஏங்கிக் கிடக்க, இவள் இதயத்தில் எல்லையற்ற ஆசைகளை ஏற்றி விட்டிருந்தவன் வரவே இல்லை.

ராதிகா துடித்தாள் இன்னுயிரே போவது போன்ற இம்சையில் இங்கு மங்குமாக, இமைகள் படபடக்க இன்னலுற்றுத் தவித்தாள்.

இன்னும் பத்தே நிமிடங்கள்…பட்டர்வெர்த் செல்லும் ரயில் கிளம்புவதற்கு

ரயிலை போகவிட்டு இங்கேயே உட்கார்ந்திடலாம்… பைத்தியம் மாதிரி…

எவ்வளவு தூரம் எத்தனை மணிநேரம் நான் தனியா பயணம் போகனுமா?

அப்படி நினைக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு கண்ணன் வரணும் வரணும் வேண்டினாள்.

நீங்க வரலைன்னா, நான் தனியா போகமாட்டேன் நீங்க கூட இல்லாம, எனக்கு ஒரு விழா, விஷேசம் ஒன்னும் வேணாம்.

கண்ணனோடு கண்ணோடு கலந்து விட்ட பின்பு, அவன் இல்லாமல், தனியாக எங்கேயும் செல்லப் பிடிக்கவில்லை ராதிகாவுக்கு தன்னோடு அவன் சேர்ந்திருக்க வேண்டுமென்றே விரும்பினாள்.

நாடு தழுவிய நிலையில் நான்கு மொழிகளில்….இலக்கியப் போட்டியின் வரலாற்றிலேயே முதன் முதலாக அதிகத் தொகையான ஐயாயிரம் ரிங்கட் அன்பளிப்பாகக் கொடுத்து வெற்றி பெற்ற எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விழா ஒன்றுக்கு பினாங்கு மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வுக்காகத் திட்டம் போட்ட பயணம்தான்.

நான் போகல் பரிசுத் தொகையை போஸ்ட்ல அனுப்பிடுவாங்க.

அன்புக்குரியவன் அருகில் இல்லாத பல இன மக்கள் முன்னிலையில் நடக்கும் அந்த பிரம்மாண்டமான விழா, அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை .

சே சே உன்னை கௌரவிக்கிற ஒரு சிறப்பான நிகழ்ச்சி என்னாலே நீ போகாம இருக்க வேணாம் நான் வர்றேன் கண்டிப்பா வர்றேன் அழாதே.

கை பிடித்து நம்பிக்கையூட்டிச் சென்றவன்… கைவிடுவானா இப்படி?

வீட்டிலிருந்து யாரையும் துணைக்குக் கூட்டிச் சென்றிருக்கலாம்…அவள் பரிசு பெறுவதை அவர்கள் பார்த்து சந்தோஷப் படுவார்கள்.

ஆனால் வேண்டியவனோடு சேர்ந்து போக வேண்டுமென்று…வேண்டுமென்றேதானே, யாரும் கூட வரவேண்டாமென்று வேண்டிக்கொண்டு, வேண்டிய ஏற்பாட்டைச் செய்தாள்.

அந்த சாமாத்தியத்துக்கு சதி நேர்ந்து விட்டதோ…

எல்லாம் இழந்த தனி மரமாக ஒதுக்கப்பட்டு, ஒடுங்கி, ஒடிந்து நிற்கிறாளே

தனிமை தனிமை தனிமை வாழ்நாளெல்லாம் வெறுமைதானா? தனிமையின் கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா?

ஆயிரம் பேர் முன்னே, அக்னி வலம் வந்தும்…அத்தனையும் அற்பமாகி, பொசுங்கிப் போலியாகிப்போன, அந்தரங்க அரங்கின் சுந்தர சுகங்கள்

சூடாத முல்லையானாலும், சுடுகின்ற நிலவாய் ஜொலித்தவள்.

சுட்டு விரலாவது தொட்டு விடத் துடித்த தோழர்களையெல்லாம் வெட்டி விட்டு…… விரட்டி விட்டு….. கட்டுப்பாட்டுக்குள் பூட்டிக் கிடந்த கடிந்த மனம்…. இன்று கனிந்த மனமாய்…… கண்ண னைக் கண்டதால்…மாறுதல் வேண்டி ஆறுதல் தேடியோ…

வயதையும் வரம்பையும் மீறி, ஒரு வாய்ப்பில் ஏற்பட்ட ஈர்ப்பில், தொலைந்து போன இதயம் அவனுக்கும் அதே நிலை அதனால், அட்டியில்லையென்று ஒட்டிக் கொண்டவர்கள்.

கடைசி நிமிடம் வரை காத்திருந்தாள் கைத் தொலை பேசிக்குப் பத்து தடக்ைகு மேல் அழைத்து விட்டாள் மணி அடித்துக்கொண்டே இருக்கிறது…. ஆனால், மறுபதிலே இல்லையே ஏன்? தொலைபேசி கோளாறா இல்லை தொட்டவனே கோளாறா….? சதியா இல்லை சாகசமா?

சரியாக எதையும் தீர்மானிக்க முடியவில்லை.

கூட வரத்தான் சாத்தியப் படவில்லை. கூட்டி வந்து வழியனுப்பலாம் அல்லவா? அல்லது ஓடி வந்து ஒரு வார்த்தை இல்லை ஒரு தொலைபேசி அழைப்பு? ஒன்றுமே இல்லை ஏன்?

தகுதிக்கு மீறி எண்ணமும் ஏக்கமும் தேவையா உனக்கு?

கன்னங்க கன்னமாக மாறி, மாறி அவளை யாரோ அல்ல கண்ணணே அறைந்து, அறைந்து கேட்பது போல உணர்ந்து, அதிர்ந்து

அவமானப்பட்டுப் போனாள்!.

ஒரு கணம் ஒரு யுமகாக, ஒரு கணம் சிந்தித்தாள்!.

“இத்தனை அலட்சியம் உள்ள ஒரு ஆளுக்காக, அத்தனை சிறப்பு மிக்க விழாவை நான் புறக்கணிக்கனுமா?”

மறுகணமே, மின்னல் வேகத்தில் ஓடிப்போய் ஒரு டிக்கெட் வாங்கினாள்! ஓரிரு நிமிடங்களில் ஓடிப் போய் ஏறிவிட்டாள்!!

‘ராதிகா’வின் வருக்ைகாகவே காத்திருந்தது போல நின்றிருந்த ரயில், அவள் வந்து ஏறியவுடனேயே நகரத் தொடங்கியது!.

ரயில்தான்! நகர்ந்தது ரணப்பட்ட அவள் மனம் மட்டும் நகரவே இல்லை. பாழாய்ப்போன அதுதான் இன்னும் பாடாய்ப்படுகிறதே!.

ஒரு வேளை அவர் தாமதமாக வந்திருக்கலாம்! வந்திருப்பாரோ?

கன்னத்தில்… கற்பனையில் அறைவாங்கி, நிஜமாகவே அவமான உணர்ச்சி தாக்கிய பிறகும் கூட அப்படி ஒரு நப்பாசை! அற்பாசை!

அற்ப ஆசைக்காக இந்த மனம், இப்படியெல்லாம் அவஸ்தைப்பட வேண்டுமா? வேண்டாம் அப்படி பக்குவப் பட்டு மனம் தீர்க்கமடைந்தால்தான் வேதனைகளே இருக்காதே. ‘வேண்டும்’! என்றுதானே மீண்டும் விரும்புகிறது.

நாட்டின் துரித வளர்ச்சிகளில் ஒன்றான துரித ரயில் சேவையில் துன்பங்களை மறந்து இன்பமாக பயணிக்க… தொலைக் காட்சி, தொலைபேசி, உணவகம், குளிர் சாதன வசதிகளோடு கூடிய அந்த செகன்ட் கிளாஸ் கோச் வெறிச்சோடி… இருக்கைகள் பல காலியாகக் கிடந்தான்…… வெறிச்சோடிய அவள் இதயத்தைப் போலவே

அவளுக்கு அது வசதியாக இருந்தது.

அழுவதற்கு.

இருவராக உட்கார்ந்திருக்க வேண்டிய இடத்தில் அவள் ஒருத்தி மட்டும்…

இதயத்தைக் கிள்ளியவன்…. அந்த இருக்கையில் …. அவள் பக்கத்தில் இல்லையே.

அழுதாள் ! அழுதாள்! அப்படி அழுதாள் !

டிக்கெட் பரிசோதகர் வந்து தோளைத்தட்டிக் கூப்பிடுவது கூட தெரியாமல், உடைப்பெடுத்தக் கண்ணீர் உருண்டோடுவதையும் துடைக்காமல் உட்கார்ந்திருந்தாள்…..

பரிசோதகர், இப்படிப்பட்ட பல கேஸ்களை பயணங்களின் போது கண்டு பழகிப் போனவராக இருந்திருக்கலாம்… அதனால், ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல், அவர் கடமையை முடித்துப் போய்க் கொண்டிருந்தார்.

அவள் உருகி வடித்த கண்ணீரையெல்லாம்….ஒற்றி எடுத்த திசு பேப்பர்களும் நனைந்து, நசிந்து தீர்ந்து விட்டன.

வண்ண வண்ணமாய்ப் பூத்திருந்த எண்ணக் கனவுகளையெல்லாம் கலைந்து நிலைகுலைந்து போன ஏமாற்றத் திலிருந்து மீள முடியாமல் இன்னமும் அழுதுகொண்டே இருந்தாள்.

பெண்ணாக்குள்ளே…எண்ணங்களை விதைத்து, ஏக்கங்களை வளர்த்து, ஆசைகளைத் தூவி விட்டு, பின் அமைதியாக, அலச்சியமாக இருந்து விடுவதே ஆண்களின் குணம்!.

ஆசை வைத்து விட்டு, பின் அவதி படக் கூடாது!

அது நன்றாகவே தெரிந்திருந்தும் கூட, அதில் விழுந்து விடாமல், விழிப்பாக இருக்கத் தெரியாமல், வழி மாறி, விழி பிதுங்கி, வழியும் கண்ணீரில் கரைந்து உருகுவதோ பெண்களின் மனம்!?.

பல இன கலைஞர்கள் வழங்கிய கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்த நடனங்கள், வகை வகையான உணவுகளடங்கிய விருந்துபசரிப்போடு கூடிய பரிசளிப்பு விழாவில், இறுதிவரை இருந்து பார்த்து, பாஸ்பரம் எல்லோருடனும் கலந்து பேசி மகிழ்ந்திருக்க வேண்டிய மனநிலையில் இல்லை.

பரிசை மட்டும் பெற்றுக்கொண்டு பறந்தோடி வந்து விட்டாள் ராதிகா.

உள்ளூர் விமான முனையத்தில் வந்து இறங்கிய உடனே, முதல் வேலையாக கண்ணனுக்குத்தான் போன் செய்தாள்!!!

என்னாச்சி? ஏன் வரல? ஏன் எந்தத் தகவலும் இல்ல?

கூட்டாளிங்க கூட போனே…ஓவரா குடிக்க வச்சிட்டானுங்க…ஒன்னுமே தெரியல.

சாவதனமாய், சாதாரணமாய் வந்த அந்த பதில், அவள் இதயத்தில் சாட்டையடியாய் விழுந்தது!.

நான் துடிச்சிக்கிட்டிருந்திருக்கேன்…நீங்க குடிச்சிகிட்டுருந்திருக்கீங்க….

மாபெரும் விழாவில் மாநில முதலமைச்சரிடமிருந்து பாராட்டும் பரிசும் பெற்ற மகிழ்ச்சியை மறந்து விட்ட ராதிகா’வை, மகா பாரமாய்த் தாக்கிக் கொண்டிருந்தது… கண்ணனால் ஏற்பட்ட பாதிப்பும் பரிதவிப்பும்!.

ராதிகாவுக்கு இப்போது பாதிப்பும் இல்லை பரிதவிப்பும் இல்லை பக்குவப்படுத்திக்கொண்டாள்!. தனக்குக் கிடைத்த பரிசு பாராட்டு – கௌரவம் எல்லாம், பெறற்கரிய பேறு! என, பூரிப்பில் ஆழந்து கொண்டிருக்கிறாள்….

பொய்யானவனை – போலியானவனை – வாழ்க்கைக்கு உதவாதவனைத் தூக்கி எறிந்து விட்டாள்.

தனிமைக்கு! தவிப்புக்கு துணை! அன்பு! ஆதரவு!

இது இது என்றெல்லாம் அலட்டிக் கொள்வதே இல்லை. அறிவோடும் மன அடக்கத்தோடும் அவள் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஆழ்ந்து போகிறாள் !!

நிரந்தரமற்ற நிழலோடு ஒட்டி நிற்க நினைக்கவில்லை!

“கரம் பிடிப்பேன்…கண்ணீரைத் துடைப்பேன்…கடைசிவரை துணையிருப்பேன்…”

ஆரம்ப ஆசையின் உணர்ச்சி வேகத்தில், உதிர்கின்ற கவர்ச்சி வார்த்தைகளோடு, கண்ணா மூச்சி காட்டி விட்டு, காணமால் போய் விடுகின்ற கயமைத் தனங்களைக் கண்டு கொண்டு, வாழ்க்கையை வென்று காட்ட வேண்டும் என்ற விவேகமான முடிவை வேகமாக எடுத்து விட்டாள்!!

– கதை இலக்கியமும் உரைநடையும், இளநிலை பட்டப்படிப்பு, முதற் பதிப்பு: 2008, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *