கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 5,443 
 

வாசற்கதவு தட்டப்பட்டது. கூந்தலை வாரிச்சுருட்டிக் கொண்டாள். கொண்டையை முடிந்தபடி கதவை அணுகிக் கொண்டியை எடுத்தாள். இற்றுப்போன மாம்பலகைக் கதவு. அதன் இடுக்குகள் வழியாக குளிர்க் காற்று நாலைந்து இடங்களில் பீறிட்டது. குளிர்ந்த நீர்த் தாரைகளின் தொடுகை போலிருந்தன அவை. வெளியே மழை பெய்து ஓய்ந்திருக்கவேண்டும். கதவைத் திறந்து, வெளியிருளில் மினுங்கிய இரு கண்ணாடிக் கண்களைப் பார்த்தாள். நாகம் ஆளுயரத்திற்குத் தரையிலிருந்து பத்தி தூக்கி நின்றிருந்தது. வெளிக்காற்றில் நீர்த்திவலைகள் கலைந்திருந்தன. முற்றத்து மரங்களெல்லாம் கிழக்குப் பக்கமாகச் சாய்ந்து கொந்தளித்துக் கொண்டிருந்தன. அதிகச் சத்தமில்லாமல் வானம் அதிர்ந்தது. பின்பு ஒரு மின்னல் மெலிதாகத் துடிதுடித்து மறைந்தது. நீர்த்துளிகள் கிழக்கு திசைநோக்கி ஒளிர்ந்தபடிப் பாய்ந்து செல்வது தெரிந்து அணைந்தது. நாகத்தின் கரிய உடல் சேறு படிந்து நிமிர்ந்திருந்தது.

ஏதும் பேசாமல் விலகி வழிவிட்டாள். நாகம் பத்தியை சுருக்கித் தணிந்தது. இடைநடையின் ஓரத்தில் தலைவைத்து வீட்டுக்குள் உற்றுப் பார்த்தது. பிறகு நிதானமாக வழிந்து, சுவரோரமாக நகர்ந்து உள்ளே வந்தது. கதவைத் தாழிட்டுவிட்டுத் திரும்பினாள். சாணி மெழுகப்பட்ட சுவர்களிலிருந்து குளிர் பரவியது. சாணித் தரையில் நீர்த்துளிகள் சன்னமாகப் பரவி, எலிக்குஞ்சின் ரோம உடல்போல, மெல்லிய சிலிர்ப்புடன் இருந்தது. கால் பதிந்த இடம் கரிய தழும்பாக ஆயிற்று. கொடித்துணிகள் மெல்ல நெளிந்து கொண்டிருந்தன. கூரையின் இடைவெளி வழியாக உள்ளே பீறிட்ட காற்று தலைக்குமேல் சுழித்து, குப்புறப் பொழிந்தது.

கால் நடுங்க பாயை அடைந்து அமர்ந்துகொண்டாள். சேலை சுருங்கிப்போய் மரவுரிபோலக் கிடந்தது. எச்சில் கன்னத்தில் வழிந்திருந்தது. புறங்கையால் துடைத்தபடி நாகத்தைப் பார்த்தாள். பார்வையை உடனே விலக்கிக்கொண்டாள். ஆயினும் வலுக்கட்டாயமாகக் கண்களைப் பிடுங்கியது கரிய நெளிவு.
வளைந்து தேங்கியது. உடற்சுருளின் மையத்திலிருந்து தலை மேலெழுந்து காற்றை உண்பதாக செவிள்களை உப்பியது. கழுத்து மெல்ல வீங்க ஆரம்பித்தது. பின்பு இருபிறமும் அது சிறகுபோல விரிந்து, படமாக ஆயிற்று. திரண்டு மேலெழுந்த தலையுடன் சொடுக்கப்பட்ட உடல் மெல்ல அசைய நின்றது. வழவழப்பான, ஈரக் கரிய உடலுக்குள் எலும்பு வளையங்கள் வழுக்கி நெளிந்தன. தலையைத் திருப்பித் திருப்பி அறையைச் சுற்றிப் பார்த்தது. சிவந்த நாக்கின் தழல்நுனி நெளிந்தது.

`நான் கொடையொண்ணும் பாக்கி வச்சேல்ல’ என்று அவள் தலைகுனிந்தபடிச் சொன்னாள். குற்றம் ஒளித்த பாவனையில் கை நகங்களைப் பார்த்தாள். நாகம் நாபறக்க சட்டென்று திரும்பியது. ரலையில் புழுதிப் படலத்தால் போர்வையிடப்பட்ட புள்ளோர்க் குடம் தூங்கியதைப் பார்த்துவிட்டு அவள் கண்களைச் சந்தித்தது. அவள் வயிற்றுக்குள் புள்ளோர்க் குடத்தின் விம்மல் ஒருமுறை அதிர்ந்தது. குளிர்காற்று உடைகளுக்குள் புகுந்து நடுங்க வைத்தது. பதறிய குரலில், `நாகப்பாட்டுக்கு இப்பம் ஆரும் விளிச்சியதில்ல, பாடிக் கேக்கவும் ஆரும் வாறதில்ல. அப்பன் போனதுக்கு பிறவு…’ என்றாள்.

சிமினி விளக்கு இரு செம்புள்ளிகளாகப் பிரதிபலித்த மூடாத கண்களின் இடைவெட்டால் அவள் சொற்களின் நுனி முறிந்தது. சட்டென்று கோபத்தை மீட்டி, திரட்டிக்கொண்டாள்.

`என்னெளவுக்கு அப்பிடி பாக்குதீரு? வாறப்பளே கெவுனிச்சேன். ஒரு மேதிரி மெரட்டி மெரட்டி கண்ணை உருட்டுதீரு. வேற ஆரும் வந்திட்டுண்டா எண்ணு பாக்குதீராக்கும்? நல்லாப் பாத்துக்கிடும். இஞ்ச இருக்குல்லா பத்தாயமும் பெட்டியும் பாதாள அறயும்… செண்ணு நல்லா நெரடிப் பாத்துக்கிடும். சம்சயம் தீரட்டு.’

நாகம் `உஸ்ஸ்’ என்று மூச்சுவிட்டது. பத்தியை மீண்டும் சுருக்கியபோது அதன் முகத்தின் தீவிரம் மறைந்து, ஒரு புழுத்தன்மை குடியேறியது. அவளுக்குள் முதல்முறையாக அருவருப்பு எழுந்து, தொண்டையை அடைத்தது. அத்தனை உக்கிரத்தின் அடுக்குகளுக்கும் கீழே, உண்மையில் அது ஒரு புழுதான் என்ற எண்ணம் எழுந்தது. விஷம் நிரம்பிய புழு – அவ்வளவுதான். குமட்டுவதுபோல அவளுக்கு உடம்பு உலுக்கியது.

நாகம் தலை உறைந்து நிற்க, உடலை இழுத்துச் சுருட்டிக் கொண்டது. அவள் தொண்டையில் ஒரு வறட்சி ஏற்பட்டது.

`உமக்கிப்பம் என்ன வேணும்?’ என்றாள், உதட்டைக் கடித்து தன்னை அழுத்திக்கொண்டபடி.

நாகம் அவளை வெறித்தது.

`என்னவேய் நினைச்சிருக்கேரு? உமக்கு என்ன குறை வச்சோம்? எட்டுத் தலைமுறையா உம்ம அடிமைகளாட்டு பாடி அலைஞ்சது மதியாவேல்லியா? எங்களை சீவிக்க விடமாட்டீரா? எதுக்கிப்பம் கேறிவந்து மெரட்டுதீரு?’

நாகம் நா பறக்க அவளைப் பார்த்தது. `உஸ்ஸ்’ என்று சீறியது.

`உனக்கு என்ன வேணும் இப்பம்? சொல்லிப்போடும். குடுத்துக்களிச்சிடுதோம். நீரு சாமியில்லை. எங்கிளுக்க கொலத்துக்கு விழுந்த சாபம். குடுத்திருதோம். விட்டுப்போட்டு போயிரும். இல்ல, எங்கிளுக்கு சங்கப் பெளந்து குடுச்சம் பெறவுதான் போவீரு எண்ணு சென்னா அதைச் செல்லும், அப்பிடி தீரட்டும் எங்கிளுக்க எளவெடுத்த சாபம்’ – அவளுக்கு மூச்சிரைத்தது.

நாகம் தலையைத் தரையோடு தேய்த்தபடி மெல்ல நகர்ந்தது. தரையின் ஒவ்வொரு பள்ளத்திலும் சற்று நேரம் தாடையைப் பதித்தபடி கவனித்தது. பின்பு மெல்ல பாயின் விளிம்பில் ஏறியது. அதற்குள் அதன் உடம்பு நெளிந்ததனால் சேறு உலர்ந்து மண்ணாகக் கொட்டிவிட்டிருந்தது. அதன் உடம்பின்மீது அசைவு, ஓர் அலைபோல தலை அருகே புறப்பட்டு, வாலை அடைந்து, நுனியில் ஒரு துவளலில் முடிந்தது.

நாகம் `உஸ்ஸ்’ என்றது. அதன் நாக்கு போர்வை மீது தவழ்ந்தது. `தீந்துதா, இல்ல இன்னியும் வல்லதும் பாக்கியுண்டா?’

முழங்காலை மடித்து குந்தி அமர்ந்தபடி அவள் கேட்டாள். நாகம் மூச்சு ஒலிக்க மெல்ல நகர்ந்தது. தலையணையின் மையத்தின் கரிய எண்ணெய்ப் பரப்பை முகர்ந்தது. சற்று உள்ளடங்கிய பதைப்புடன் அவள் அதைப் பார்த்திருந்தாள். இம்முறை அவள் குரல் தயங்கியது. `என்னவாக்கும் மோந்து மோந்து பாக்குதீரு? புள்ளுவத்தி வீட்டில் சவ்வாதும், பன்னீரும் மணக்கும் என்னு நெனச்சீராக்கும்? கவிச்சிதேன் அடிக்கும். பிடிச்செங்கி இரியும். இல்லங்கி ஸ்தலம் காலி செய்யும்…

நாகம் புள்ளோர்க் குடத்தை பார்த்தது. சட்டென்று ஆக்ரோஷமாகப் படமெடுத்து எழுந்து சுவர்கள் முழங்கச் சீறியது.

அவள் ஒருகணம் பீதியில் குறுகிப் போனாள். ஆங்காரம் வடிந்து, தன் மானுடப் பிறவியின் எல்லைகளை உணர்ந்தவள்போலக் கூசினாள். பாய்ந்து எழுந்துபோய் புள்ளோர்க் குடத்தை எடுத்து வந்தாள். வாறுகடைகள் தொய்ந்திருந்தன. முழந்தோலும் கடகமும் தூசுபடிந்து இற்றுப்போயிருந்தன.

விளக்கின் மங்கல ஒளியில் நாகத்தின் நிழல் பிரம்மாண்டமாக அவள் மீதும், அறை முழுக்கவும் பரவி நின்று மெல்ல ஆடியது. பின் அடங்கியது. அவள் நடுநடுவே நாகத்தைப் பார்த்தபடி வாறுகடைகளை இழுத்தாள். தாளக்கட்டைகளைச் செருகி, தோற்பரப்பை இறுக்கினாள். விரலால் மெல்லத் தொட்டபோது அது `இம்ம்ம்’ என்று அதிர்வடைந்தது. அவள் உடல் திடுக்கிட்டுப் பதறியது. மூச்சு வாங்கியது. கடவளைவை தொடைகளின் நடுவே பொருந்தியபடி, அமர்ந்தாள். இருமுறை மீட்டினாள். அந்த ஒலியல்ல, ஏதோ பழைய நினைவின் அதிர்வுதான் அது என்றுபட்டது. கைகள் செயலற்று நின்றன. அவளுக்கு நாகப் பாட்டின் ஒரு வரிகூட நினைவு வரவில்லை.

அவள் கண்கள் கண்ணீரால் கனத்தன. தொண்டையை அடைத்த கரிப்பை விழுங்கியபடி பாட முயன்றாள். சட்டென்று வேறு யாரோ பாடுவதுபோல அவள் குரல் பாடிக் கொண்டிருப்பதை அவள் கேட்டாள்.

`ஆயிரம் தலையுள்ள ஆதிசேஷன் –

ஆயில்யம் திருநாளில் ஜனிச்சோனல்லோ’

– நாகம் மெல்லத் தலையசைத்தது. அதன் உடம்பு முழுக்க அசைவுகள் உருண்டு சென்றன. அதன் நிழல் நீண்டது. மடங்கியது. சட்டென்று துடித்தாடியது. அவள் குரலில் அதிர்வுகள் முழங்கி நிமிர, அறைக்குள் செஞ்சுடரொளியும், நிழல்களும் அசைந்தன. கொடித் துணிகளுக்குள் ஏதோ காற்று புகுந்துகொண்டது. அறையே நின்று கூத்தாடியது. பாடலின் வழியாக மறைந்துபோன முகங்களும், குரல்களும், மணங்களும் நினைவை நிரப்ப அவள் கண்ணீர் விட்டாள்.

தன் கரத்தருகே ஸ்பரிசத்தை உணர்ந்தாள். நாகம் அவளருகே பத்தி மடக்கி வந்து சுருண்டிருந்தது. கையை அதன்மீது வைத்தாள். விரல்கள் நடுங்கின. நடுக்கத்தை மறைக்க அழுந்தப் பற்றினாள். மீன் செதிலின் வழுவழுப்புடனும், குளிர்ச்சியுடனும், உயிருள்ளவற்றுக்கே உரிய இனம்புரியாத சதை அதிர்வுடனும் இருந்தது அது. கண்களைத் திறந்து அதன் தலை என்று அறிந்தாள். பயமும், பதற்றமும் கலந்த கிளர்ச்சியை அவளுள் எழுப்பியது அது. மெல்ல அதன் தாடையின் வெண்ணிற, வழுவழுப்பான அடிப்பகுதியை வருடினாள். படம் சுருங்கி ஒரு குழந்தைபோல அவள் மடிமீது தவழ்ந்து சுருண்டு ஏறியது. வருடினாள். அதன் நா துடிதுடித்தபடி வெளிவந்தது. அவள் தன் சுட்டுவிரலால் அதைத் தொட்டாள். மண்புழுக்கள் கையில் நெளிவது போலிருந்தது. விரலைச் சற்று உள்ளே நகர்த்தி அதன் வாய்க்குள் விட்டுவிட வேண்டும் என்று ஒருகணம் அவள் மனம் அவளை உந்தியது. இரு நீண்டு வளைந்த வெண்பற்களை மங்கிய ஒளியில் தெளிவாகக் காண முடிந்தது, அவற்றின் நுனியை விரலால் அழுத்திவிட வேண்டும்… அணையில் விரிசலிட்டுப் புடைத்து அதிரும் மதகுப் பலகைபோல தன் உடம்பை உணர்ந்தாள்.

தன் சுட்டுவிரல் தன்னை மீறி முன் நகர்வதை அவளே தாங்க முடியாத பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பற்களின் கூரிய ஸ்பரிசம். அவள் விரல் படபடத்தது. என்ன ஆகும்? நீல நிறமான விழப்பூ ஒன்று கண்களுக்குள் விரிவது போலவா? ஆயிரத்தில் ஒரு பங்கு இமை நேரம். ஒரு எண்ணம் உதிக்கும் நேரம். முடிவதில்லை. எத்தனையோ முறை. முடிந்ததில்லை. பல்லாயிரம் யானைகளினால் முன்னால் உந்தப்பட, அதற்கிணையான கண்ணுக்குத் தெரியா பல்லாயிரம் மத்தகங்கள் எதிர்த்து உந்த, இம்மிகூட நகராமல், சக்தி துடிக்கும் கணங்கள். அழுத்தத்தின் அதி உச்சம். பிறகு வெறுமை. மனம் முறுக்கி அழுகை பொங்கி வரும். பித்துப் பிடித்தவள் போல மார்பில் அறைந்து, தலைமயிரைப் பிய்த்தபடி வீறிட்டலற வேண்டும் என்று வெறி எழும்.

தசைநார்கள் துவண்டன. உடம்பு முழுக்க நீராவிபோலப் படிந்து விட்டிருந்த வியர்வை திடீரென்று குளிர்ந்தது. கண்களைக் கொட்டியபடி, மூச்சை இழுத்து விட்டபடி, அந்தப் பற்களைப் பார்த்தாள். அரை வெண்மையாய் அவை ஒரு புன்னகையின் பிரமை தந்தன. கூர்ந்த பற்கள் முன்நீட்ட, விஷமும் அகந்தையும் கலந்த சிரிப்பு. பார்வையை விலக்கிக் கொண்டாள். மீண்டும் அதன் நிலைத்த கண்களைப் பார்த்தாள். உடம்பு தூக்கிப் போட்டது. இத்தனை நேரம் அதன் கண்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தனவா?

திடீரென்று அவளுக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. அவளுக்குள் உருவாகும் எண்ணங்கள் எவையும் அவளுடையவையல்ல என்று. இத்தகைய எண்ணங்கள் எல்லாமே அவள் அந்தக் கண்களைப் பார்த்த கணம் முதல்தான் உருவாகின. ஏதோ மந்திரம் வழியாக இந்த எண்ணங்களை அவளுள் கொட்டுகிறது அது.

அவளுக்குப் பயமாக இருந்தது. தன் எண்ணங்களை ஒதுக்கப் பிரயத்தனப்பட்டாள். நாகத்தின்மீது கைகளால் மேலும் அழுத்தமாக வருட ஆரம்பித்தாள். அதனுள் எலும்புகள் அசைந்தன. மீண்டும் அக்கண்களைப் பார்த்தாள். அவற்றில் மாறான ஒன்று இருந்தது. விஷமும், தாபமும், ஆணவம் மிக்க உருளலும் மட்டுமல்ல. வெறுப்பு. விழியோரங்களைச் சுருங்கி அதிரவைக்கும் குரோதம். குரோதமா? அவளுக்குள் ஆதரவின்மையும், சுயபரிதாபமும் ஏற்பட்டது. அழ விரும்புகிறவள்போல முகம் நெளிய அப்படியே படுத்துக்கொண்டாள். சுவர்மீது, தலைமீது அப்படியே பதிந்துவிட விரும்புகிறவள்போல உடல் தவித்தாள். அதைத் தன் உடம்பின்மீது எடுத்துப் போட்டுக் கொண்டாள். அதன் தலையைத் தன் மார்பின்மீது வைத்து அழுத்தினாள். மெதுவாக வளைந்தபடி அவள் உடல்மீது வெம்மையைக் கொட்டியது. அவள் கண்களைத் தாழ்த்தி அதன் கண்களைப் பார்த்தாள். சிறிது பச்சை நிறம் கலந்த கண்ணாடி போன்று ஒளிர்ந்தன.

`எனக்கு அடுக்க கோவம் வல்லதும் உண்டுமா?’

நெளிந்த நாக்கு அவள் கழுத்தில் இளம் சூடாகப்பட்டு வழுக்கியது.

`நான் வல்ல தெற்றும் செய்திட்டுண்டா?’ அவளை முகர்ந்தபடி அது `உஸ்ஸ்’ என்றது.

`வல்லதும் உண்டெங்கி செல்லிப்போடும்.’

அதன் வால் மெதுவாக போர்வையை உதறி வந்து அவளுடைய உள்ளங்கால்களைத் தொட்டது.

`நான் எண்ணும் உமக்க அடிமயாக்கும். இந்தச் சங்கில இதுவரை வேற ஒரு நெனைப்பு வந்ததில்லை. உம்ம மேல ஆணையாட்டு செல்லுதேன். முடிப்புரை அம்மை மேல ஆணையாட்டு செல்லுதேன்…’

அதன் வால்நுனி அவள் பெருவிரலைச் சுற்றியது. நெளிந்து சென்ற அதன் வரிய முனை அவள் உள்ளங்கால்களை மெல்லச் சுரண்டியது. அவள் உடம்பில் சிலிர்ப்பு பரவியது. வாய்விட்டுச் சிரித்துக் கூவியபடி அவள் அதை உடம்பால் அள்ளிக்கொண்டாள். அவள் உடம்பு எங்கும் சூடான வியர்வை நிரம்பியது. கண்களின் ஓரம் கண்ணீர் நிறைந்து வழிந்தது. தலையைத் தலையணையின் இருபுறமும் அசைத்தபடி, கீழுதட்டைக் கடித்தபடி அவள் துள்ளிப் புரண்டு சிரித்தாள். அவள் உடம்பில் சிவப்பாக தடிப்புகள் உருவாயின. காது மடல்கள் ரத்தம் குழம்பிக் கொதித்தன. உடம்பு குளிரில் புல்லரித்தபோது தன் நிர்வாணத்தை அறிந்தாள். ஏதோ ஒரு கணத்தில் அவள் சிரிப்பு இடைவெளியற்ற கிரீச்சிடலாக மாறியது. அவள் புரளப் புரள உடம்பைச் சுற்றி வரிந்து முறுகியபடி நாகம் அவளை முழுக விழுங்கியதுபோல தலையும் பாதங்களும் மட்டும் மிஞ்சின. ஒற்றைக் கரத்தால் அவளை நொறுக்க விரும்பியதுபோல அவள் தோளிலும் விலாவிலும் அழுத்தம் தெறித்து, எலும்புகள் உரசி இறுகின. வலி உச்சந்தலையை மோதியது.

சில கணங்களுக்குள் உறுப்புறுப்பாகச் சிதறிக் கிடப்பவள்போல, நூறு நூறு காட்டு விலங்குகள் நக்கி நக்கி நீர் அருந்தும் காட்டுத் தடாகம் போலத் தன்னை உணர்ந்தாள். நாய்க்குடைபோல அடிவெளுப்புத் தெரிய, தன்மீது கவிந்து ஓங்கி நின்றிருந்த பெரிய பத்தியின் அடிப்பகுதியை அண்ணாந்து பார்த்தாள். கருஞ்செம்மை நெளிய நாக்கு பறந்து கொண்டிருந்தது. கழுத்தின் தசைகள் பெரிய தோற்பை போலச் சுருங்கி விரிந்துகொண்டிருந்தன. நிமிர்ந்த முகம் அறையைத் திரும்பித் திரும்பிப் பார்த்தது. ஆணவம் திமிறிய அந்தத் தலை திருப்பல்கள் அவளுள் தாங்க முடியாத மன நெகிழ்ச்சியை உருவாக்கின. அவள் அழ ஆரம்பித்தாள்.

`எனக்க ராசாவே, எனக்க பொன்னு தம்புரானே’ என்று கேவினாள். `எனக்க ஆரும் இல்ல எனக்க ஏமானே. எனக்கு நீரல்லாம ஆரும் இல்ல தம்புரானே. அடியாத்திக்கும் என்னை ரெட்சிக்கணும் தம்புரானே…’

அவள் குரல் கம்மிச் சிதறியது. அர்த்தமற்ற சொற்களும், கேவல்களும், விம்மல்களும் தெறித்தன.

அவளைப் பிணைத்திருந்த கரிய உடல் முழுக்க அதிர்ந்தபடி முறுக்கிக்கொண்டது. அதன் வாய் அகன்று திறக்க `அக் அக்’ என்ற ஒலி எழுந்தது. நாலைந்து முறை தலை உதறிக்கொண்டது. கழுத்து சொடுக்கிக் கொண்டது. வாயிலிருந்து நுரை வழிந்தது. பின்பு மெல்ல அதன் தாடைகள் விரிந்து வெடித்து விடுபவை போல இழுபட்டன. கழுத்துச் சதைகளில் அதிர்வுகள் அதிகரித்து ஓர் உச்சகட்ட உலுக்கலில் அவை ஸ்தம்பித்தன. இருமல் ஒன்று தடைபடும் ஒலி. பின்பு இருள் வெளுத்து, அறையில் மிக மெல்லிய நீல ஒளி பரவியது.

நாகத்தின் வாயில் நீலச்சுடர் ஒன்று தெரிந்தது. முதலில் ஒரு மின்மினியை அது கவ்வி வைத்திருப்பதுபோலத் தோன்றியது. பின்பு அதை அது மெல்ல, சற்றுத் தள்ளி அவளுடைய தலைமாட்டில் தரையில் வைத்தது. அந்தக் குமிழ் மொட்டு விரிவதுபோல இதழிதழாக சுடர் விரித்துக்கொண்டிருந்தது. அது ஒரு விளக்கு போலவும், நீலக்கல் போலவும் ஒரே சமயம் தெரிந்தது. நீலனிற ஜூவாலையில் மூழ்கி சுவர்களும், கூரையும் தரையும் கொடித்துணிகளும், அடுக்குப் பானைகளும், உறிகளும் எல்லாம் நீல நிறத்தில் தெரிய ஆரம்பித்தன. உடம்பு குளிர்ந்து விரைத்திருக்க, ஒரு பெரிய நீர்ப்படுகையின் அடியில்தான் மல்லாந்திருப்பதாகப்பட்டது அவளுக்கு. நீலத் திரவத்தினுள் மூழ்கித் துவண்டு ததும்பும் கூரை, சுவர்கள், தளம். அவள் உடம்பின் வளைவுகள்கூட நீல அலையின் உறைவுபோல ஆயின. அவளைத் தழுவி இறுக்கிய கரிய உடல் அவ்வொளியில் முற்றிலும் கரைந்து போய்விட்டிருந்தது. அவளால் அதை அள்ள முடிந்தது. தழுவ முடிந்தது. பார்க்க முடியவில்லை. மெல்ல அவளை அவ்வுடல் ஏந்தி அந்தரத்தில் தூக்கியது. நீல ஒளியின் ஓர் அலை அவளைக் கீழிருந்து அறைந்து தெறிக்கச் செய்தது. நுரைத்துக் கொந்தளிக்கும் ஓர் அருவி அவளுக்குள் புகுந்தது. எண்ணங்களும் பிரமைகளும் சிதறி அவள் நீலம் மட்டுமாக எஞ்சினாள். தடையின்றி நீலத்தில் மிதக்க ஆரம்பித்தாள். கூரை இல்லை. வானம் இல்லை. எல்லை விளிம்பில் ஒரு கணநேரம் முன்னும், பின்னும் தத்தளிப்பு. பின்பு அதிராட்சத விரல் ஒன்றினால் சுண்டப்பட்ட புழுபோல நீலப்பிரவாகத்தில் முடிவின்றி விசிறப்பட்டாள்.

எப்போதோ விழித்துக்கொண்டபோது திடுக்கிட்டாள். புலன்கள் கூச ஓர் நினைவு வந்தது. படபடப்புடன் மார்பை அள்ளியபடி எழுந்து அமர்ந்தாள். தலை சுழன்றது. இருட்டு தேங்கிய மூலையில் யாரோ நிற்பதுபோல அடுக்குப்பானை. உறிகள் காற்றில் விரைந்தோடிக் கொண்டிருந்தன. பற்களைக் கிட்டிக்க வைக்கும் குளிர். கைகளால் துழாவினாள். சற்றுத் தள்ளி நாகம் படுத்திருந்தது. கண்கள் பழகியபோது இருட்டு வெளிறியது. அதன் மூடாத கண்கள் ஒளிர்ந்தன.

`சமயம் கொறெ ஆயிருக்குமே?’ என்றாள். அது விழிப்படைந்தது போல தெளிந்தது. பின்பு நீண்டு சுவரோரமாக ஒண்டியபடிச் சென்றது. அவளுக்குள் எண்ணங்கள் ஏதுமின்றி காலியாக இருந்தது. அது தரையை முகர்ந்தபடி, தயங்கித் தயங்கிப் போவதைப் பார்த்தபோது அவளுக்கு உடம்பு கூசியது. அந்தப் புழுத்தன்மை, முழு வீச்சுடன் மீண்டும் அவளை அடந்து வயிறு சுருங்கி குமட்டலெடுத்தது. வெறுப்பும், கோபமும் எழுந்தது.`நீரு என்னைவிட மாட்டீரா?’ என்றாள் ஆங்காரத்துடன். `எனக்க சென்மத்த தொலைச்சுப் போட்டுதான் அடங்குவீரா?’

நாகம் திரும்பிப் பார்க்காமல், வழிந்து சென்றது. அவள் ஓடிப்போய் வழிமறித்தாள்.

`செல்லும், என்னத்துக்கு இப்பம் வந்தீரு? ஒம்ம மறந்து இருந்தேனே. மனுசியாட்டு ஒரு நாளெங்கிலும் இருந்து சாவ விடமாட்டீரா?’

நாகம் வாசலை அடைந்து, கதவருகே வளைந்து, மெல்லத் தலைதூக்கி அவளைப் பார்த்தது,

`தெறக்கமாட்டேன். கேட்டதுக்கு பதில் சொல்லிப்போட்டு நீரு போனா போரும்… தூ… நீரெல்லாம் ஒரு சாமி, ஒமக்கெல்லாம் ஒரு சத்தியம். ஒமக்கு நான்போட்ட பலியும் தந்த காணிக்கயும் கொறெயா? அதுக்க ஒரு கனிவெங்கிலும் நீரு காட்டினீரா?’

நாகம் ஆளுயரத்திற்கு எழுந்து படம் விரித்தது. வாய்திறந்து, நாக்கு பறக்க, சுடரும் கண்களுடன் அவளைப் பார்த்து அதிர்ந்தது.

`கொன்னு போடும். அதெங்கிலும் செய்யும். ஒமக்கு நானிட்ட பலிக்கு அதையெங்கிலும் செய்யும். இனி என்னெக் கொண்டு ஒக்காது. உமக்க எச்சிலாட்டும் இருக்க எனக்குக் களியாது. என்னை நீரு கொன்னாலும் செரி…’ குரல் உடைந்து விம்மி விம்மி அழுதாள். ஆங்காரத்துடன் மார்பை ஓங்கி அறைந்தபடி வீரிட்டாள்.

நாகம் சீறி வாலால் ஓங்கித் தரையை அறைந்தது. அழுகை அடைத்து, விக்கித்து நின்றாள். கண்கள் அதன் கண்களைத் தொட்ட கணம் அவள் உடம்பு விறைத்தது. கனவில்போல நடந்து சென்று கதவைத் திறந்தாள்.

நாகம் சுருங்கி, படிகளில் தலைவைத்து மெல்ல மடிந்து இறங்கிச் சென்றது.

மழை ஓய்ந்து வானம் வெளுத்து சாம்பல் நிறமாகப் பொழுது விடிந்திருந்தது. மரங்களில் நீர் சொட்டும் ஒலி. காற்றேயில்லாத நிச்சலனமான தோட்டம். முற்றத்தில் தேங்கித் தண்ணீரில் வானத்து ஒளி தளதளத்தது.

நாகம் சேற்றில் இறங்கித் திரும்பாமல் நேராகச் சென்றது. அது சென்ற இடத்தில் நீர் தேங்கிப் பிரதிபலித்து, அது தன் சட்டையை உரித்துப் போட்டபடியே போவதுபோலத் தெரிந்தது. தேங்கிய நீரில் அது தலையால் தொட்டபோது அலைகள் எழுந்து வானம் தெளிந்தது. சற்றுத் தயங்கிய பிறகு, வளைந்து நீரைத் தொடாது விலகிச் சென்றது. தோட்டத்துச் சருகுகளுக்குள் அது நுழையும் மெல்லிய நெரியுமொலி கேட்டது. ஒரு கணம் எண்ணங்கள் இல்லை.

பின்பு அவள் பரபரத்தாள். பாய்ந்து இறங்கி குளிர்ந்த சேற்றில் ஓடி, தோட்டத்தின் விளிம்பை அடைந்து பதற்றத்துடன் தேடினாள். இருட்டுக்குள் ஈரச் சருகில் நீர் சொட்டும் ஒலியுடன், தோட்டம் உறைந்து நின்றிருந்தது. அவள் அதுவரை எப்போதும் உணர்ந்தறியாத தீவிரமான தனிமை உணர்வை அடைந்தாள். பாய்ந்து குடிசைக்குள் ஓடி, போர்வைக்குள் சுருண்டு, உடல் நடுங்குமளவு.

– இந்தியா டுடே, 1995 (நன்றி: https://www.jeyamohan.in)

Print Friendly, PDF & Email

1 thought on “நாகம்

  1. இது கதையல்ல.. நாகத்தின் அருகே நான் நிற்பது போன்ற உணர்வு..!! வாசகர்களின் உணர்வைத் தட்டி எழுப்ப ஜெயமோகன் போன்ற மிகச் சிலரால் மட்டுமே இயலும்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *