துருவங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 1,725 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமீதாவுக்கு நெஞ்சு கொள்ளாத தவிப்பு! நீண்ட நாட்களாய்ச் சந்திக்காமல் இருந்துவிட்ட இளமைக் காலத் தோழி பஷீரா இப்போதுதான் தன் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளது கையும் காலும் பரபரக்கத் தொடங்கி விட்டன. அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கால் நடையாகவே பஷீராவைப் பார்க்கப் புறப்பட்டு விட்டாள்.

“சினேகிதியைப் பார்க்கப் போறே வெறுங் கையோடவாப் போறது, பஷீரா தன் பிள்ளையோட வந்திருக்காளாம், ஏதாச்சும் பிள்ளைக்கு எடுத்துக்கிட்டுப் போம்மா!” என்ற தாயின் வார்த்தையை மனதில் போட்டுக் கொண்டு குழந்தைக்காக வீட்டில் இருந்த பரிசுப் பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அமீதா.

கடந்து போய் விட்ட மூன்று ஆண்டுகள் மனதில் கடுமையான இறுக்கத்தை உண்டாக்கியதில் சோர்ந்து கிடந்த உடம்பில் புதிய தெம்பும்… குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்து இப்போது பிள்ளையோடு வந்திருக்கும் தோழியைப் பார்க்கப் போகும் ஆர்வமும் அமீதாவைக் கொஞ்சம் வித்தியாசப் படுத்தியிருந்தது. வீட்டில் அமர்ந்து மகளையே பார்த்திருந்த தாயின் கண்ணில் நீரையும் வரவைத்தது. ஆருயிர்த் தோழியை ஆர்வத்துடன் வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டாள் பஷீரா அந்தத் தழுவலில் உண்மை அன்பின் வெளியீடு அமீதாவின் நெஞ்சைத் திணற வைத்தது.

“எப்படி இருக்கே பஷீரா…! இவ்வளவு நாளா எந்தச் செய்தியும். இல்லாம… இந்தப் பக்கமும் வராம அங்கேயே தங்கிட்டியே… கணவன் வீடு அவ்வளவு புடிச்சிப் போச்சா உனக்கு இப்படியா எங்களை மறந்து போறது…?”

உரிமையோடு வந்த வார்த்தைகள் அவர்களின் நட்பின் ஆழத்தை உணர்த்துகின்றன.

“அப்படியெல்லாம்நான் யாரையும் மற்றக்கலேடி… என்னோட கையையும் காலையும் காலந்தான் கூடிப் போட்டுடுச்சு… எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையால இப்ப நான் சந்தோஷமா இங்கே வந்திருக்கேன். நான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன் அமீதா இப்பத்தான் இறைவனின் கருணை கெடச்சிருக்கு…”

அமீதாவின் கைகளைப் பற்றிக் கொண்டு பஷீரா கண் கலங்க அமீதா துடித்துப் போகிறாள். “என்னடி இது… புதுசா குண்டைத் தூக்கிப் போடுறே… வசதியான இடத்தில தானே வாக்கப்பட்டுப் போனே… அப்படி என்ன கஷ்டம் வந்துச்சி உனக்கு”…

தோழியின் கேள்வியைக் காதில் வாங்கிக் கொண்டே அவளுக்குச் சுவை நீர் எடுத்துவரப் போனாள் பஷீரா. இருவருக்கும் சுவை நீரையும் பிஸ்கட்டுகளையும் எடுத்துக் கொண்டு வரும்போது இரண்டு வயதுச் சிறுவன் ஒருவன் ஓடிவந்து அவள் கால்களைச் சுற்றிக் கொண்டான். அதைப் பார்த்த அமீதா ஓடிப்போய் அவனைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டாள்.

“பஷீரா… உன் மச்சானைப் பார்க்கிற மாதிரியே இருக்காண்டி உன் பையன்… இவ்வளவு அழகான பையனை வெச்சிக்கிட்டு உனக்கென்னடி கவலையும், கஷ்டமும்”

தோழியைக் கோபித்துக் கொள்வதுபோல் கேட்டுக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தாள் அமீதா.

“கவலையும் கஷ்டமும் இவன்தானே… ! இவன் வராம இருந்திருந்தா என்னை நீ பார்த்திருக்கவே முடியாது..”

“நிக்காஹ் முடிஞ்சு மூணு வருஷமாகியும் எங்களுக்குப் பிள்ளையில்லேன்னு உறவுக்காரங்க குறை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க… தன் வயசில இருக்கிற சிநேகிதர்கள்லாம் தங்கனோட பின்ளைகளை வெச்சு கொஞ்சிக் குலாவுறதைப் பார்த்து என் மச்சானுக்கும் மனசில ஆசை வந்து அதை வெளிக்காட்டிக்க முடியாம மூடிமறைச்சிக்கிட்டு மனசிலேயே போட்டு புழுங்கிக்கிட்டிருந்தாரு மனுஷன்…

மாமனாரு மாமியாரெல்லாம் ரெண்டாம் தாரம் கட்டிக்கச் சொல்லி அவருக்குப் புத்தமதி சொன்னப்பக் கூட அவர் என்மேல இருந்த பாசத்தினால வேண்டாமுன்னு சொல்லிட்டாருடி… ஆனா இருதலைக் கொள்லி எறும்பா அவரு தவிச்சது எனக்குத்தான் தெரியும்…”

பஷீராவின் மனத்துயரத்தைத் தோழியிடம் இறக்கி வைத்த நிம்மதியில் ஒரு பெருமூச்சுடன் நிறுத்தினான்.

“கவலைப் படாதே பஷீரா… !அல்லாஹ் யாருக்கு எதுன்னு முடிவு பண்ணியிருக்கானோ அது நிச்சயம் நடக்கும். அதுதான் தங்கச் சிலையாட்டம் மகன் வந்துட்டானே… அப்படியே உன் ஊட்டுக்காரரை உரிச்சி வந்திருக்காண்டி… நீ சந்தோஷப்படத்தஸின இவன் இருக்கான். கவலையை விடு… கையில குழந்தையை வெச்சிக்கிட்டு கண் கலங்கினா அப்புறம் அது மனசில ஏதாவது நெனைப்பு வந்துடப் போவுது…”

சொல்லிக் கொண்டே மடியில் இருந்த குழந்தையைக் கீழே இறக்கி விட்டான் அமீதா…

சுவைநீரைக் கோப்பையில் ஊற்றிக் கொண்டே பஷீரா கேட்டாள்.

“எப்ப வந்தே அம்மா வீட்டுக்கு… உன் பிள்ளைங்க வீட்டுக்காரரெல்லாம் சவுக்கியமா இருக்காங்களா அமீதா… அப்பவே உனக்கு ரெண்டு பசங்க இருந்தாங்கனே… இப்பவும் அவுங்க மட்டுந்தானா… இல்லே எண்ணிக்கை கூடியிருக்கா?”

சுவை நீரைத் தோழியிடம் நீட்டியவாறே பஷரா மெல்லக் கண்சிமிட்டுகிறாள். அதைப் பார்த்து அமைதியாய் நீண்ட பெருமூச்சை விடுகிறாள் அமீதா…

“சவுக்கியத்துக்கு என்ன கொறைச்சல் பஷீரா… நெறயவே நெறஞ்சிருக்கு ஆனா கைக்கெட்டினதுதான் வாய்க் கெட்டாமப் போச்சுடி…”

வார்த்தையோடு கண்ணீர் முத்துக்களும் வெளிவந்து பஷீராவை அதிர வைக்கிறது. பதறிப் போய் தேர்ழியின் முக்ஷிதைத் தன் கையால் நிமிர்த்துகிறாள்.

இருவரின் கண்களும் ஒருசில மணித் துளிகள் சநிதித்துத் திரும்புகின்றன. தோழியின் மனதில் புதைந்து கிடந்த சோகமும்- துன்பமும் அத்தச் சில மணித்துளிகளிலேயே… பஷீராவை நிலைகுலைய வைக்கின்றது ஆதரவாய் அவளின் தோளைப் பற்றுகிறாள் ஆறுதலாய்க் கேட்கிறாள்.

“நீ நெனைக்கிற மாதிரி நான் கணவனோட வாழலே பஷீரா… என் பிள்ளைகளோட அம்மா வீட்டுலதான் இருக்கேன். தனியா இருக்கேன். என் படிப்புக்கேத்த வேலையிருக்கு… நல்ல வருமானமும் இருக்கு…சுயகால்ல நிக்கறேன். பிள்ளைங்க முகத்தைப் பார்த்துப் பொழுதைக் கழிக்கிறேன்…

“ ஏன்…? ஏன்டி இப்படிப் பண்ணினே…கணவனை விட்டுவிட்டு ஏன் வத்தே_ நல்ல மனுஷனாத்தானே உன் கணவன் இருந்தாரு… வசதியான வாழ்வு: அழகான ஆண்பிள்ளைகள்… அப்புறம் என்னடி குறை உனக்கு… எதனால இந்த வாழிக்கையை அமைச்சிட்கிட்டே…” பஷீரா தோழியைக் கடுமையாக் கேட்கிறாள்.

“குறை எனக்கில்லேடி… அவுங்களுக்குத்தான்… என் கணவனுக்குத்தான் நான் குறையாய் போயிட்டேன். என்னோட ரெண்டாவது பையன் பொறந்ததுமே எனக்கு ரொம்ப முடியாமப் போச்சுடி… மருத்துவர் தாம்பத்ய உறவு கொஞ்ச நாளைக்கு வெச்சுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு… ஆறு மாச காலம் எனக்குப் பூரண ஓய்வு தேவைன்னு சொல்லிட்டாங்க… அந்த இடைப்பட்ட காலத்தில தன்னோட உடம்பு சுகத்துக்காக இன்னொருத்தியைக் கட்டிக்க என்கிட்டே சம்மதம் கேட்டாரு கணவர். திங்கற சாப்பாட்டை வேணுமின்னா இன்னொருந்தருக்குப் பங்குபோட்டுக் கொடுக்க மனம் வரும்… கட்டிய கணவன் கட்டிலை இன்னொருத்திக்குப் பங்கு போட்டுக் கொடுக்க யாருக்கு மனசு வரும் பஷீரா… அதுதான் எங்களோட பிரச்சினை… நான் என் பிள்ளைங்களை கூட்டிக்கிட்டு அம்மாக்கிட்டே வந்துட்டேன், நீயே சொல்லுடி நான் செய்தது சரிதானே… !”

கண்களில் நீர் கொப்பளிக்த் தன்னைப் பார்த்துக் கேள்வி கேட்கும் தோழியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பஷீரா அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். மௌனமாய்ச் சில வினாடிகள் ஒட….

“நீ ரொம்ப அவசரப்பட்டுட்டே அமீதா… உன்னோட சுயநலத்துக்காக உன்னோட கௌவரத்திற்காக உன்னோட பிள்ளைங்க எதிர்காலத்தை நீ வீணாக்கிட்டியேம்மா… உன்னோட அன்பும் ஆதரவும் மட்டும் உன் பிள்ளைகள வளர்த்துடும்னு நீ போட்ட கணக்கு தப்புக் கணக்குடி… உன் பிள்ளைகளுக்கு எவ்வளவு தான் நீ அன்பையும் வாழ்க்கை வசதிகளையும் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் அது ஒரு தகப்பன் கொடுக்கிற அன்புக்கு ஈடாகுமா…?”

“அதுக்காக என்னை விட்டுக் கொடுத்துப் போகச் சொல்றியா… என்னோட வாழ்கையை இன்னொருத்தியோட பங்கு போட்டுக்கச் சொல்றியா? இவ்வளவு பேசற நீ உனக்கு இப்படி ஒரு நெலமை வந்தா நீ ஏத்துக்குவியா… இன்னொருத்திக்கு உன் கணவனை நீ விட்டுக் கொடுப்பியா?”

ஆத்திரமாய்க் கேட்கும் தோழியைப் பார்த்து மென்மையாய்ச் சிரிக்கிறாள் பஷீரர்.

“விட்டுக் கொடுத்து வாங்கினது தானே இந்த வாழ்கையும் இந்தச் சந்தோஷமும்… அன்னிக்கு எனக்குக் குழந்தை இல்லேங்கிற பிரச்சினையில எங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் இருந்த மனப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வெச்சதே நான் தானே அமீதா… என் கணவரே மனம் மாறி இன்னொருத்திய தேடறதுக்கு முன்னாடி நானே அவருக்காக ஒரு விதவையைத் தேடி நிக்காஹ் பண்ணி வெச்சேன். மகராசி வந்த பத்தாவது மாசமே இவன என்கையிலே குடுத்துட்டா… இவன் என்னோட புள்ளையா இருந்து எங்களை வாழ வைக்கிறான்:”

“என்ன சொல்றே நீ..! நீயே உன் கணவனுக்கு ரெண்டாந்தாரம் பண்ணி வெச்சியா… நெஜமாவா சொல்றே… எப்படி இந்த அளவுக்கு உனக்கு மனசு வந்துச்சி… அதுவும் கட்டியவன்… கட்டிலைப் பங்கு போடற துணிச்சல் எப்படி வந்துச்சி…”

“பங்கு போடலியே நான்… பகிர்ந்துகிட்டோம்… கணவனும் மனைவியும் இன்பமும் துன்பமும் லாபமும் நஷ்டமும் ரெண்டு பேருக்குமே சமம்னு பகிர்ந்துகிட்டோம். கணவன் மனைவின்னு ஆனதுக்கப்புறம் வர்ற எல்லாமே ரெண்டு பேரையும் சேர்த்துத் தானே… எங்களுக்கு எதனால சந்தோஷம்னு தெரிஞ்சதும் அதை நாங்களே தேர்வு பண்ணி முடிவும் பண்ணிக்கிட்டோம். எந்தப் பிள்ளையினால எங்க வாழ்க்கை கெட இருந்துச்சோ… அதே பிள்ளையை வெச்சு எங்க வாழ்க்கையை நாங்க உறுதிப்படுத்திக்கிட்டோம்.

நீதான் அவசரப்பட்டு உன்னோட பிள்ளைங்க வாழ்க்கையை நிர்மூலமாக்கிட்டே. ஒரு சின்ன சந்தோஷத்துக்காக உன் கணவனுக்கு நீ விட்டுக் கொடுத்திருந்தா உனக்கும் உன் பி்ள்ளைங்களுக்கும் எவ்வளவு பெரிய கௌரவமும் செல்வாக்கும் இந்தச் சமுதாயத்தில கெடைச்சிருக்குமின்னு கொஞ்சம் நெனைச்சிப் பாரு…”

பஷீரா பேசிக் கொண்டிருந்தாள். அமீதாவுக்கு அழுகை பொங்கியது.

“பொண்ணும் பூமியும் ஒண்ணுன்னு சொல்றது பொறுமையில பூமியை மிஞ்சி நிக்கனுமிங்கிறதால தான்… நம்ம அம்மா பாட்டியெல்லாம் அனுபவிக்காத கஷ்டத்தையா நாம அனுபவிக்கிறோம் அவுங்கல்லாம் காத்த பொறுமையினாலதான் நாமெல்லாம் இந்தக் கௌரவமான வாழ்க்கைய… அனுபவிக்கிறோம். அவுங்கெல்லாம் உன்னாட்டம் தூக்கிப் போட்டுட்டு வத்திருந்தா இன்னிக்கு உன்னை அடையாளம் காட்ட ஒரு “இன்ஷியல்” கூட இருந்திருக்காதே அமீதா…”

அமீதா பஷீராவைக் கட்டிக் கொண்டாள். மனதின் துயரம் நீராய்ப் பெருகி அவளது தோளை நனைத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் இறுகிக் கிடந்த இதயம் மெல்ல மெல்ல உருகத் தொடங்குகிறது.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *