தாய்ப்பால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 2,641 
 
 

கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருந்த பொழுது அந்த இடத்தை தாண்டி கடந்து சென்ற பெண்ணின் பார்வை பாபுவின் மீதே இருந்தது. அப்பொழுதுதான் பந்து மட்டை வீசுபவனின் கால் பக்கம் பட “ஹவ் இச் தட்” கூவிக்கொண்டிருந்த பாபு அந்த பெண் தன்னை பார்த்துக் கொண்டேகடந்து செல்வதை பார்க்கவில்லை. ஆனால் அம்பயராக நின்று கொண்டிருந்த முரளி என்ன “மாம்ஸ்” அவங்க உன்னையே பாத்துட்டு போறாங்க? குரலில் கிண்டலா? இவனுக்கு புரியவில்லை. இவனும் அந்த பெண்ணை திரும்பி பார்த்தவன் இவளா? முகத்தை சுழித்தான்.

வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். பதினைந்து வயது பையனான தன்னை எங்கு பார்த்தாலும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு போவது இவனுக்கு அசூயையாக இருந்தது. அதுவும் நண்பர்கள் மத்தியில் இதனால் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் வசிப்பது அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பு பகுதி. அதனால் அங்கு வசிப்பவர்களின் பிள்ளைகள்தான் அந்த காலனி முழுக்க விளையாண்டு கொண்டும், சுற்றிக்கொண்ம் இருப்பார்கள். இந்த பெண்ணை போன்ற சிலர் வெளியிலிருந்து வந்து காலனி வாசிகளுக்கு வீட்டு வேலை, தோட்ட வேலை செய்து கொடுப்பார்கள். இந்த பெண் நான்கைந்து வீடுகளுக்கு துணி துவைத்து கொடுத்து கொண்டிருக்கிறாள். இது இவனுடைய கூட்டாளிகள் அனைவருக்கும் தெரியும்.

அம்மா அப்பாவிடம் இதை பற்றி பேச இவனுக்கு கூச்சமாக இருந்தது. அந்த பெண்ணாவது இதை புரிந்து கொள்வாளா என்றால் அதுவும் இல்லை. எத்தனை பேர் கூடியிருந்தாலும் அவனை கண் கொட்டாமல் பார்த்து செல்வாள்.

தான் பார்க்க வாட்டசாட்டமாய் இருப்பதாலா? சே..சே.. அப்படி பட்ட எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. அப்புறம் ஏன்? ஏதாவது நின்று பேசினாலாவது கேட்கலாம் ஏன் இப்படி என்னை பார்த்துக்கொண்டே செல்கிறீர்கள் என்று?

ஒரு முறை அம்மாவுடன் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். எதிரே அந்த பெண்.இவனுக்கு திக்கென்றிருந்தது. அம்மா கூட வரும்போது இந்த பெண் இவனை உற்று பார்த்தால்? அம்மா அந்த பெண்ணை கண்டதும் என்ன பொன்னம்மா எப்படி இருக்கே/ கேள்வியை கேட்டு அந்த பெண்ணை நிறுத்தினாள். இவனுக்கு பகீரென்றது. அந்த பெண் நல்லாயிருக்கேன்,

அவனை பார்த்து “நல்லா வளர்ந்துட்டாங்க” சொல்லும் போதே பரிவு தெரிந்தது.

ம்..ம்.. வளர்ந்துட்டான், அம்மா புன்சிரிப்புடன் சொல்ல, நல்லா படிக்க வையுங்க அம்மா? சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் நகர்ந்து சென்றதும், அம்மாவிடம் யாரும்மா இவங்க? கேட்டான். அவங்க கொஞ்ச நாள் நம்ம வீட்டுல வேலை பாத்துட்டு இருந்தாங்க. நீ பிறந்து மூணு வயசு வரைக்கும் நம்ம வீட்டுல வேலை செஞ்சுச்சு. அதுக்கப்புறம் நான் உங்க வீட்டுக்கு வரலைன்னு சொல்லி நின்னுடுச்சு. சரி வா.. நேரமாச்சு..அதற்கு மேல் அவனால் எதுவும் கேட்க முடியாமல் அம்மாவை பின் தொடர்ந்தான்.

இரண்டு மூன்று மாதங்கள் ஓடியிருக்கும், அப்பா அம்மாவிடன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அம்மா அதெல்லாம் முடியாது,நமக்கே அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு இருக்குது, இப்ப வேற இதென்ன செலவு? அப்பா அப்ப்டி சொல்லாத, அந்த பொண்ணு மாடா வேலை செஞ்சுச்சு, அந்த நன்றி விசுவாசத்துக்காவது ஏதாவது செஞ்சாகணும்?

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை, என்னம்மா அப்பா என்ன கேக்கிறாரு? நீ மாட்டேன்னு சொல்லிகிட்டு இருக்கே? அவருக்கென்ன, அன்னைக்கு நம்ம கூட பேசிகிட்டு இருந்துச்சே, அந்த பெண்ணுக்கு உடம்புக்கு முடியாம ஆஸ்பிடல்ல இருக்காமா? அதுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவலாமுன்னு கேட்கிறாரு உங்கப்பா.

அதுக்கென்னம்மா, உதவிதான? ஆமாண்டா உதவிதான், ஆனா நம்ம நிலைமைக்கு அது பெரிய செலவு, உங்கப்பா கொஞ்சம் பணம் அப்படீங்கறது எவ்வளவு தெரியுமா? பத்தாயிரம் கொடுக்கணும்கறாரு.

இவனுக்கு ஆச்சர்யமும், அதிர்ச்சியாகவும் இருந்தது. நம்முடைய குடும்பமே அரசாங்க உத்தியோகமென்றாலும் வரும் வருமானத்தில் அடித்து பிடித்துத்தான் செலவு செய்வார்கள். அதிலும் மாதம் முதல் தேதி என்றால் இருவருக்கும் ஒரே சச்சரவாகத்தான் இருக்கும். அப்படி ஒரு சூழ்நிலையில் அப்பா சுளையாக பத்தாயிரம் தரவேண்டும் என்று சொல்வது இவனுக்கு அதிகபட்சமாக தெரிந்தது. ஆனால் அப்பா அப்படி “தாம் தூம்” என்று செலவு செய்பவருமல்ல. இது இவனுக்கு நன்றாக தெரியும். அப்படிப்பட்ட அப்பா அந்த பெண்ணுக்கு பணம் தரவேண்டும் என்று வற்புறுத்துவது ஏன்?

ஒரு வாரம் ஓடியிருந்தது. அப்பா அவனை என் கூட வா என்று அழைத்தார். அப்பா அவனை அதிகமாக வெளியே அழைத்து செல்வது குறைவு. அம்மாவுடன்தான் இவனது பயணம் எல்லாம். அதிசயமாய் அப்பாவுடன் கிளம்பினான்.

இருவரும் அந்த காலனியை விட்டு வெளியே வந்து மெயின் ரோட்டில் நடக்க ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரம் நடந்து பின் ரோட்டோரத்தில் இருந்து குடிசைப்பகுதிக்குள் நுழைந்தனர். ஒரே சந்தடியும், குப்பையும் கூழமுமாய் இருந்த அந்த ஏரியாவுக்குள் பாபு நுழைவது முதல் முறை. கொஞ்சம் அருவருப்புடனே அப்பாவை பின் தொடர்ந்தான். இருவரும் சந்து சந்தாக நுழைந்து ஒரு குடிசை வாசலில் நின்றனர்.

பொன்னம்மா..பொன்னம்மா. அப்பா சத்தம் போட அந்த குடிசையின் உடைந்து காணப்பட்ட கதவு திறந்து ஒரு ஆள் வெளியே வந்தான். அப்பாவை பார்த்தவுடன் கட்டியிருந்த கைலியை அவிழ்த்து விட்டு ஐயா வாங்க..உள்ளே அழைத்தான். அப்பா செருப்பை கழட்டி விட்டு எந்த தயக்கமுமில்லாமல் உள்ளே நுழைந்தார். இவன் கொஞ்சம் அருவருப்புடனே உள்ளே நுழைந்தான்.

அங்கே கண்ட காட்சி..

இவனை தினமும் பார்த்து கடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண் வெறும் நாராய் பாயில் படுத்திருந்தாள். இவர்களை கண்டதும், ஐயா வாங்க, கை கூப்பி விட்டு எழ முயற்சிக்க அப்பா பொன்னம்மா..எந்திரிக்காதே, அப்படியே படு. சொல்லி விட்டு, இப்ப எப்படி இருக்கு? அன்புடன் கேட்டார். பின்னால் வந்த அந்த ஆள் பொன்னம்மாளின் கணவன், இன்னும் ஒரு மாசம் ஆகும் நல்லாகறதுக்குன்னு சொல்லியிருக்காரு டாக்டரு. மருந்து மாத்திரையை கரெக்டா சாப்பிட சொல்லியிருக்காரு. நீ வேலைக்கு போகலையா? இவளை இப்படி விட்டுட்டு நான் எப்படி போகறதுங்க? எங்களுக்குன்னு யாரு இருக்காங்க? குரலில் அழுகை கலந்து வந்தது.

மாரியப்பா மனசு விடாதே. இந்தா இந்த பணத்தை வச்சுக்க? ஒரு மாசம் நல்லா கவனிச்சுக்க, கையில் நூறு ரூபாய் கட்டு கொடுப்பதை பாபு பார்த்தான்.அந்த பெண் ஏதோ முணங்குவது கேட்டது இவர்கள் திரும்பி பார்க்க அந்த பெண் வேண்டாமென்று தலையசைப்பது தெரிந்தது. மாரியப்பன் அவள் அருமே சென்று தலை மாட்டில் ஏதோ சொல்ல அந்த பெண் ஏதோ முணங்குவது தெரிந்தது. அப்பா சட்டென அவள் அருமே சென்று மாரியப்பா பொன்னம்மா அப்படித்தான் சொல்லும், எனக்கும் ரொம்ப பண முடைன்னு தெரிஞ்சதனால அப்படி பேசறது. அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க நிம்மதியாய் இருங்க. சொன்னவர் சரி நாங்க கிளம்பறோம், கிளம்ப எத்தனிக்க..மீண்டும் அவள் ஏதோ சொன்னாள். திரும்பியவர் பாபுவை பார்த்து உன்னைத்தான் கூப்பிடுகிறாள். பக்கத்தில் போய் பார் பாபு மெல்லிய பயத்துடன் அவள் அருகில் சென்றாள். அவள் இரு கைகளையும் தூக்கி அவன் இரு கன்னத்தை தொட்டு முத்தமிட்டாள்.

வெளியே வந்த இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அப்பா ஏதோ கவலையில் இருக்கிறார் என்பது புரிந்தது..

நான்கைந்து நாட்கள் கழித்து அந்த பெண் இறந்து விட்டதாக ஒரு ஆள் வந்து சொல்ல அப்பா கிளம்பினார். பாபுவும் எதுவும் சொல்லாமல் அப்பாவுடன் கிளம்பினான். அம்மா முகம் இந்த செய்தியினால் வருத்தமைடைந்திருந்தது நன்றாக தெரிந்தது.

இப்பொழுதெல்லாம் பாபு நண்பர்களுடனும், தனியாகவும் காலனிக்குள் சுற்றும்போது அந்த பெண்ணின் நினைவுகள் வந்து செல்லும். அப்பாவிடம் ஒரு நாள் பொறுக்க முடியாமல் கேட்டு விட்டான். எதுக்கப்பா அந்த பொண்ணுக்கு அவ்வளவு பணம் கொடுத்தீங்க?

அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரும்போது எனக்கும் உங்கம்மாவுக்கு கல்யாணம் ஆகி இரண்டு மூணு வருசம் ஆகியிருந்தது.. அந்த பொண்ணுக்கு அப்பத்தான் கல்யாணம் ஆகியிருந்துச்சு. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்த நேரமோ என்னமோ உங்கம்மா வயித்துல நீ வந்து பிறந்தே. அப்ப அந்த பொண்ணும் முழுகாம இருந்திருந்தா. அதனால அவளை அதிகமா வேலை செய்ய சொல்லமாட்டா உங்கம்மா. உங்கம்மாவுக்கு காய்கறியில இருந்து என்னென்னவெல்லாம் சத்தானது கிடைக்குமோ எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து கொடுப்பா. நான் காசு கொடுத்தாலும் வாங்க மாட்டா. கை நிறைய சம்பளம் கொடுக்கறீங்க, அது போதும் என்பா.

நீ பிறக்கறதுக்கு ஒரு வாரம் முன்னாடி அவளுக்கு ஒரு பையன் பிறந்தான். ஆனா நாங்க போய் பாக்க முடியலை. காரணம் உங்கம்மாவுக்கு பிரசவம் ரொம்ப “கிரிட்டிக்கல்லா” இருந்துச்சு. முதல்ல உயிரோட குழந்தைய பெத்தெடுக்க முடியுமாங்கற கண்டிசன்ல இருந்துச்சு. எப்படியோ கடவுள் புண்ணீயத்துல உன்னைய பெத்தெடுத்த உங்கம்மா சுய நினைவில்லாம மூணு மாசம் கோமா ஸ்டேஜுக்கு போயிட்டா. நீயும் பிழைப்பியா அப்படீங்கற கண்டிசன்ல இருந்தே. நான் என்ன பண்ணறதுன்னு திகைச்சு போயிருந்தேன்

அப்பத்தான் இந்த பொண்ணு தினமும் வீட்டுக்கு மூணு மணி நேரத்துக்கு ஒருக்கா வந்து உனக்கு தாய்ப்பால் ஊட்டிட்டு, அப்புறம் தன்னோட வீட்டுக்கு போவா. இப்படி தொடர்ந்து மூணு மாசம் உனக்கு தாய்ப்பால் கொடுத்துட்டு இருந்தா. அப்படியே அவர் குரல் சோகத்தில் உள்ளே போக அவன் அப்பவையே பார்த்துகொண்டிருந்தான். பாவம் அவ விதி அந்த குழந்தை மூணு மாசத்துலயே….. …அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தி விட்டார். இங்க உங்கம்மாவுக்கு நினைவு திரும்பிடுச்சு.

அப்புறமா ஆறு மாசம் கழிச்சு அவ மறுபடி வேலைக்கு வந்துட்டா. இருந்தாலும் உன்னைய பாக்குறப்ப எல்லாம் அவளுக்கு அவள் பையன் ஞாபகம் வருதுன்னு வேலைய விட்டு நின்னுட்டா. அதை விட வருத்தம் என்னன்னா இனிமேல் அவளுக்கு குழந்தை பிறக்கறதும் கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாராம்.அதையும் வேலைய விட்டு நிக்கும்போதுதான் சொன்னா.. உங்கம்மாவுக்கும் அதே நிலைமைதான். அவ உயிரோட இருந்தாலே போதும்னு உன்னோட நிறுத்திட்டோம்.

பாபுவுக்கு அந்த பெண் தன்னை உற்று உற்று பார்த்து சென்றது எதற்கு என்று இப்பொழுது புரிந்தது.

பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *