கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 1,652 
 

(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எழுந்து நின்று பிரசங்கம் செய்வது போன்றதல்ல வளைந்து நெளிந்து வாழ்க்கை நடத்துவது?

மனித சமுதாயத்தின் துன்பங்கள் எங்கே இருந்து ஆரம்பிக்கின்றன? என்பது தீர்க்கப்படாத விஷயம் மட்டு மல்ல, பரிகாரம் கிடைக்காத துர்ப்பாக்கியமும் கூட.

மதமும் வாழ்க்கையும் இரண்டறக கலந்து கிடக்கும். ஒரு சமூகத்தில் ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்படாத பிர சங்கங்களினாலோ வேதாந்த விசாரங்களினாலோ எவ்வித பயனுமில்லை .

தன் கண்களிலே துளிர்த்த நீரைப் பெருவிரலால் தொட்டுத் துடைத்து விட்டு புரண்டு படுத்தாள் செயிறம்பு.

வானத்தை முட்டும் மாளிகைகள் எவ்வளவு உண் மையோ அவ்வளவு உண்மை பூமியைத் தொட்டு நிற்கும் மண்குடிசைகளும். அந்தச் சிறிய கிராமத்திலே மனிதத் தன்மையின் இடுப்பு ஒடிந்த விட்ட தரிசனத்தைக் கட்டியங் கூறி நின்றது அந்த ஓலைக் குடிசை. இரண்டு முழ அகலத்தில் ஒரு திண்ணை , கூரைப்பத்திக்கும் பூமிக்கும் மூன்று அடி இடைவெளி; அதை மறைக்கும் கைங்கரியத்தைச் செய்து கொண்டிருந்தது ஒரு ஓட்டை விழுந்த சாக்கு.

திண்ணையில் செயிறம்பின் வாப்பா படுத்திருப் பதற்கு அறிகுறியாக இருமல் சத்தம் வந்து கொண்டிருந் தது. திண்ணையின் இடது புறமாக வீட்டின் வாசல் கதவு ஓலைப்படலையின் உருவத்தில். எட்டடிக் குச்சில் என்பார் களே அது தான் அந்த வீட்டின் பரப்பு!

அணைந்து போவதற்காக எரிந்து கொண்டிருந்த ஒரு தகர விளக்கு, அதற்குச் சற்று அப்பால் நாலைந்து மண் பானைகள் சேர்ந்த ஒரு அடுக்கு, பக்கத்திலே சிறட்டையால் மூடிய தண்ணீர் குடம், ஒரு மரப்பெட்டி, மூலையிலே இழுத்துக் கட்டிய கயிற்றுக் கொடி; அதிலே சுந்தைத் துணிகள். இவைகள் தாம் அந்த வீட்டில் வாழ்க்கையின் நடுவிலே பிதுங்கிய சம்பத்து.

இவைகளுக்கு மத்தியிலேதான் ஒரு கிழிந்த பாயில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தாள் செயறம்பு. அவளுக்குத் தூக்கம் வரவில்லை. தூக்கம் எங்கிருந்து வரும்? அடுத்த வீட்டில் கலியாணம்! செயிறம்பின் உயிர்த் தோழி ருக்கியா வுக்கு கலியாணம். கலியாண வீட்டு உணர்ச்சியின் உந்தலுக்கு உள்ளத்தைப் பறிகொடுத்து கூரை முகட்டைப் பார்த்தபடி படுத்துக் கிடந்தாள் அவள்.

செயிறம்பின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து கிடந்த ஒரு உயிர் இன்று மணப்பெண்ணாக மாறி விட்டாள்! நாளை மனைவி பிறகு அவள் பாதை வேறு; ஆனால்! இவள்?

வாழ்க்கையில் இரண்டு வருடங்கள் பிந்திப் பிறந்தவள் ருக்கியா? காது குத்து தில் இருந்து பூப்பெய்தியது வரை ருக்கியா பிந்தித்தான் வந்தாள். ஆனால் கலியாணத்தில் மட்டும் செயிறம்புவை முந்தி விட்டாளே?

கலியாணத்திற்கு பந்தக்கால் நாட்டி வெள்ளை கட்டி நிறத் தாள்களால் சோடனை செய்தது வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் செயிறம்பு. அந்த வேலைக ளெல்லாம் வேடிக்கை விசயமாகத்தான் தெரிந்தது அவளுக்கு.

ஆனால் அன்று மாலை பெட்ரோமாக்ஸ் விளக்குக ளின் ஒளிக் கதிர்கள் இருளை நீக்கிப் பளிச்சென்று பாய்ந்த பொழுது அவள் உள்ளத்திலும் ஏதோ ஒன்று பாய்ந்தது . அதன் பிறகுதான் அவளுக்கு மெல்ல மெல்ல விசயங்கள் புரிந்தன. புரிந்து கொண்ட பிறகு நெஞ்சை உறுத்தின.

கலியாண வீடென்றால் இலேசுப்பட்டதா? எத்தனை விதமான கூக்குரல்கள்! அதிகாரக் குரல்; அன்புக்குரல்; கேலிக்குரல்; இத்தியாதி இத்தியாதி! இவைகளையெல்லாம் கிரகித்தபடி உணர்ச்சிகளை உள்ளடக்க முடியாமல் தவித்துப் போனாள் செயிறம்பு. கலியாண வீட்டிலே ஒரு குரல்;

“என்னத்தகா … பார்த்து கிட்டு…? பொண்ணுக்கு மருதாணியப் போடுங்க.”

இதையடுத்து மற்றொரு குரல்;

“மச்சியக் கூப்பிடுகா …. அவதான் போடட்டும் மொதல்ல…’

இந்தச் சத்தங்கள் காதில் விழுந்ததும் செயிறம்பு தன் வலக் கரத்தைப் பார்த்தாள். பத்து நாளைக்கு முன்பு தான் ஹஜ்ஜரப் பெருநாள் வந்து போனது. அன்று கையில் இட்ட மருதாணியின் சாயச் சிவப்பு இன்னும் மறைய வில்லை. அதற்குள் இன்னொரு முறையா? இது மணப் பெண்ணுக்கு மருதாணி போடும் சம்பிரதாயம், வளமையான முத்திரை.

மருதாணி போடுவது இஸ்லாமியப் பெண்களுக்கு ஒரு கலை. இந்தக் கலை செயிறம்புக்குக் கை வந்திருந்தது. புத்தி தெரிந்த நாள் முதலாய் பெரு நாள் காலங்களில் கைக்கு மருதாணி போட ருக்கியா செயிறம்பை நாடித்தான் ஓடி வருவாள்; ஆனால் இன்று?

இயற்கை உவந்தளித்த அழகு, செயிறம்பிடம் பரி பூரணம் பெற்றிருந்தது. இந்த அழகிலே ருக்கியாவுக்குக் கொள்ளை ஆசை. நினைத்த பொழுதெல்லாம் செயிறம் பின் கழுத்திலே தனது இரு கரங்களையும் போட்டு இழுத்து இறுக அணைத்தபடி ருக்கியா சொல்லுவாள்,

“அடி செயிறம்பு! நீ மட்டும் ஆம்பிளையா இருந்தா. நான் ஓன்னத்தாண்டி கட்டிக்குவன்.”

இந்த அணைப்பிலே இருவர் மார்பும் இருகி நிற்கும். இருவருடைய நெஞ்சில் இருந்தும் சூடான மூச்சுக் கிளம்பும். அப்படிப்பட்ட ருக்கியா இன்று ஒருவருக்குக் எழுத்தை வளைந்து கொடுக்க ஆயுத்தமாகி விட்டாள். ஆனால் செயிறம்பு?

விழித்துக் கொண்டு படுத்திருப்பது ஒரு பயங்கர சோதனை. சிந்தனைகளுடன் படுக்கையில் புரண்டு அலுத்துப் போன செயிறம்பு எழுந்து வீட்டுச் செத்தையில் இருந்த ஓரு ஓட்டையினூடாகக் கலியாண வீட்டைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

கண்வழி புகுந்து உள்ளத்தைத் தொட்ட அந்தக் காட்சி யிலே உணர்வைச் சுண்டிவிடும். ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது அவளுக்கு. புரிந்தும் புரியாத ஒரு உணர்ச்சியின் சீண்டல் உடலெல்லாம் பாய்ந்து பரவியதிலே ஏற்பட்ட ஒரு பர பரப்பு. வாழ்க்கையின் நாதம் அந்தக் கலியாண வீட்டில் இருந்து தான் பிறக்கிறது என்பதை அறிந்து கொண்டது போன்ற ஒரு அங்கலாய்ப்பு.

இளமையின் துருதுருத்த நரம்புகள் சூடேறி இரத்தம் கொதித்துக் குமிழ் விட்டு, வெடித்து வெளியேறுவது போன்ற ஒரு வெது வெதுப்பு. எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு மணப்பெண் இருக்கும் இடத்தில் தான் போய் உடகாந்து கொள்ள வேண்டுமென்கிற ஆவல்! செய்ய வேண்டுமென்ற துருதுருப்பு; செய்ய முடியாத பெண்மை யின் ஏழ்மை.

இந்தப் போராட்டங்களுக்கு மத்தியிலே உடலெல்லாம் வியர்வை சொட்ட கைகளால் அடிவயிற்றை அமுக்கிப் பிடித்தபடி நின்றாள் செயிறம்பு செத்தையில் தீமூட்டு மளவிற்கு அவள் மூச்சு சூடேறி இருந்தது. இந்த சமயத் தில் தான் கல்யாணப் பந்தலை நோக்கிக் கூச்சல் போட்ட படி வந்தான் ஒரு சிறுவன்.

“மாப்பிள வாராரு! மாப்பிள வாராரு!!”

“மாப்பிள வாராரு!” செயிறம்பு வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டாள். தன் விரல்களால் வேலியின் ஓட்டையைப் பெரிதாக்கிக் கொண்டு ஆவலோடு பார்வை யைச் செலுத்தினாள். இந்த மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவளுக்குமிருந்தது.

ஆறு மாதத்துக்கு முன் இந்த மாப்பிள்ளையைத்தான் செயிறம்புக்குப் பேசினார்கள். ஆனால் அவன் இன்று ருக்கியாவின் மாப்பிள்ளையாக வந்து கொண்டிருக்கிறான்.

செயிறம்புவிற்கு இந்தப் பையனை மாப்பிள்ளையாக எடுக்க முயற்சி செய்தார் அவள் தந்தை. முயற்சி பலிக்க வில்லை. சீதனம் என்ற கொடுமை அந்த முயற்சியில் மண்ணை வாரிப்போட்டு விட்டு மறுபக்கம் திரும்பிக் கொண்டது. ஆமாம். பணம் பாதையை மாற்றி விட்டது.

செயிறம்பின் தந்தை ஒரு தொகைப் பணம் சீதனம் தருவதாகச் சொன்னார். மாப்பிள்ளை அதை விட இரண்டு மடங்கு கேட்டான். பாவம் அந்த அப்பாவித் தந்தை ஏழை மட்டுமல்ல நோயாளியும் கூட; அவ்வளவு பணத்துக்கு எங்கே போவான்?

அதன் பிறகு செயிறம்பின் வீட்டில் இருந்த கலியாணம் ருக்கியாவின் வீட்டுக்கு மாறியது. ருக்கியாவின் சகோதரர் கள் நல்ல உழைப்பாளிகள் மாப்பிள்ளை கேட்ட தொகையைக் கொடுக்க சம்மதித்தார்கள். கலியாணம் நிச்சயமாகியது பெண்ணுக்காக அல்ல. பொன்னுக்காக கலியாணம் அங்கே நடக்கிறது.

இந்த எண்ணங்களால் நெஞ்சு வெடிக்குமளவுக்கு விம்மித் தணிந்தது.

வெடி கிளப்பிய கிடு கிடுப்பு ஒரு புறம். பெண்களின் குரவை ஒலி மற்றொரு புறம். இந்த ஓசைகளுக்கு மத்தி யிலே மாப்பிள்ளை கலியாணப் பந்தலுக்குள் நுழைந்தான்!

கலியாணச் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து விட் டன. கோப்பி பலகாரம் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். செயிறம்பின் மனதில் எழுந்த புயல் ஓயவில்லை . அந்தப் புயலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் தான் எப்படிச் சோர்ந்து போனாள்? நெஞ்சு வலித்தது போல அவள் கால்களும் வலித்தது பெருமூச்சு விட்டபடி அந்தக் கிழிந்த பாயில் தளர்ந்து விழுந்தாள்.

நேற்றுத் தன்னைப் போல் தனியாகக் குமரியாக இருந்த ருக்கியா இந்து மனைவியாக மாறிவிட்டாள்! பணம் எப்படியெல்லாம் மனிதனை மாற்றி விடுகிறது? ஒரு பெண் ணுக்கு மட்டும் தான் ஆண் தேவையா? ஆணுக்குப் பெண் தேவையில்லையா? தேவையென்றால் இந்த ஆண்கள் ஏன்? ஆடு மாடுகளை விலை கூறி விற்பது போல் தங் களைத் தாங்களே விலை கூறி விற்கிறார்கள்,

“மஹர்ப் பணம் கொடுத்த பின்னர் தான் கணவன் என்ற உரிமையோடு ஒரு பெண்ணின் கையைப் பிடிக்க வேண்டும்” என்று குர் ஆன் கூறுவதாக ஹதீஸ் சொல்லுகிறார்கள்.

இது வெறும் பிரசங்கம் மட்டும் தானா? வாழ்க்கையின் நடைமுறைக்கு வரவேண்டாமா? குர் ஆனின் கோட்பாடு களை வாழ்க்கையிலும் கடைப்பிடித்தாலென்ன?

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அந்த இளம் உள்ளத்தின் ஆசைகள் எல்லாம் கரைந்து கண் வழி யாக வந்து கொண்டிருந்தன. கேட்ட பணத்தைக் கொடுத் திருந்தால் அந்தக் கலியாணத் திருக்கோலம் அத்தனையும் இந்த வீட்டில் அல்லவா நடந்திருக்கும்? வாழ்க்கையின் தலைவாசலில் இன்று செயிறம்பு அல்லவா நின்றிருப்பாள்.

இந்த இடத்தில் அவள் உடல் சிலிர்த்தது. நெஞ்சு விம்மித் தணிந்தது. நாவறண்டு தாகம் எடுத்தது. பக்கத் தில் இருந்த தண்ணீர்க் குடத்தை இழுத்து அது மூடி இருந்த சிரட்டை நிறைய நீரை கொண்டு குடித்தாள்,

தாகம் தீர்ந்ததா?

எப்படித் தீரும்?

தாகம் நாவில் அல்ல; அவள் நெஞ்சில் இருந்தது!

– 1968, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *