(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அருள் சுரக்கும் ரம்ழான் மாதம் இது. எல்லோரது முகங்களிலும் உற்சாகம் அணையுடைத்துப் பாய்கிறது. நன்மைகளைக் கொள்ளை அடிக்கும் மாதமிது என்பார்கள். இருக்காதா பின்னே? நன்மைகளை எதிர்கொள்ளலாம். ஆன்மீகச் சுகத்தை அருகணைத்துக் கொள்ளலாம்; என்பது விசுவாசிகளின் கணிப்பு. மேகத் திரை விலகும் முன்னிரவில், இரு முனையும் கூர்மையான பிறைநிலா, வானில் ரம்மியமாக பவனி வந்தது. ஜன்னல் திரை விலக்கி, எட்டிப் பார்க்கும், பருவப்பெண்ணின் பொலிவு முகம் போல், அது கோலம் காட்டியது.
தலைப்பிறையைத் தரிசித்துவிட்ட பேரானந்தம் சிறுவர், பெண்கள் முகங்களில் பளிச்சிட்டது. கிராமம் சுறுசுறுப்பில் களை கட்டியது. கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கியது. தொழுகை தராபீஹ், குர்ஆன் ஓதல், நீயத்து வைத்தல் போன்ற சகல காரியங்களாலும், இல்லங்கள் விழிப்படைந்தன.
சபீனா துயரம் செறிந்த முகத்துடன் வாசற்படியில் அமர்ந்நதிருக்கிறாள். அவளது உள்ளுணர்களில், பிழிந்துருக்கும் துயர நினைவோட்டங்கள். பாதையின் சந்தடிகளில் மனம் ஒன்றாது, நீண்டதொரு பெருமூச்சுவிட்டாள். இயலாமையின் இறுக்கம் அடிமனதைத் துளைத்தது. தலைப்பிறை தொடுவானில் சுடர்ந்தது. இனி பிள்ளைகள் மூவருக்கும், தனக்கும், பின்னிரவு சஹர் உணவு சமைக்க வேண்டும்.
கையில் காசின்றி நோன்புக் கடமைகளை எவ்வாறு நிறை வேற்றுவது? ஆண் துணையோ, வருவாயோ இன்றி, இரண்டு குமருப் பிள்ளைகளோடும், சின்ன மகனோடும், நாட்களைக் கடத்துவது, பாரிய சுமைகளாகி, அவளது அன்றாட வாழ்வு பாதிப்பில் திணறியது. பகல் பொழுது பூராவும், உபவாசம் இருப்பதற்கு, உடம்பில் தெம்பு வேண்டுமே. இரவு கொஞ்சம் புஷ்டியான ஆகாரம் உட்கொண்டால் தான், பகல் பொழுதின் பசிக்குத் தாக்குப் பிடிக்கும்.
சாப்பாடுதான் நோன்புக்கு ஆதாரசுருதியா? ஒரு பேரீச்சப் பழத்தை சாப்பிட்டுவிட்டு, நோன்புபிடித்த அடியார்களைப் பற்றி வரலாறு சொல்கிறதே! தீனும் தேவை, த்தீனும் தேவை, முன்னது ஆன்மாவுக்கு, பின்னது உடலுக்கு. கையில் காசின்றி, கொடுத்துதவ யாருமின்றி நான்கு வயிறுகளுக்கு, நோன்புநாளில் சஹர் வேளைக்கு, சுவையாகச் சமைத்துப் போட சபீனாவுக்கு வக்கேது?.
‘இண்டைக்கு பட்டினி நோன்புதான்! தலை நோம்பெண்டு என்னத்த செய்ய?’
பொருளாதார நெருக்கடியில் அனலிலிட்ட புழுவாய், அவள் மனம் வெந்து தவித்தது. மூத்தவள் பெரோஸா, ஜன்னலுக் கருகில் அமர்ந்து பக்தியோடு குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தாள். இளையவள் சரீனா சோர்ந்து போய், தாயோடு நெருக்கமாய் வந்து ஒட்டிக்கொண்டாள்.
“இண்டைக்கு ராவைக்கு நோன்பு புடிக்க, என்ன உம்மா செய்யப் போற?” ஆவலோடு கேட்டாள் இளையவள்.
மகளின் முகத்தை வெறுமையோடு, சுவாரஸ்யமின்றி பார்த்தாள் தாய்.
“என்ன செய்ய மகள்! அல்லாஹ் வைச்சபடி நடக்கும். இல்லாட்டி எல்லாம் பட்டினி நோன்பு புடிப்போம்!” மகன் உம்மாவின் மடியில் தலையை வைத்தவாறு,
“எனக்கேலா பட்டினி நோன்பு புடிக்க, உம்மா! அடுத்த வூட்டு கமால்ட வாப்பா, கடைக்குப் பெயித்து, எறைச்சி, தயிரு, வாழப்பழம், எல்லம் மிச்சமா கொண்டாந்தீக்கி. எங்கட வூட்டில தான் எப்ப பாத்தாலும், இல்ல!”
சின்னவன் வீட்டில் நித்தமும் நிலவும் வறுமைக்கு எதிராய் போர்க்கொடி தூக்கினான். சபீனாவின் மன அரங்கில் பழைய நினைவுகள் அரங்கேறின.
“அவரு உசிரோட இருக்கச் செல்ல, எங்களுக்கு எந்தக் கொறையையும் வைக்கல்ல. ராவுபகலெண்டு பொன்ஜாதி, புள்ளகள், எண்டு பறந்து திரிஞ்ச எங்கட தல எழுத்து இப்பிடியாப் போன. யா அல்லாஹ்! முப்பது நோன்பும், பெருநாளும், எல்லா வருஷமும் மனசு போல நடந்த ஐஞ்சி வருசத்திற்கு முந்தி, அந்த வாகன விபத்து நடக்காம இருந்தீந்தா இண்டைக்கும் இந்தக் குடும்பம், நிம்மதியா சந்திக்கும். இனி எங்களுக்கு அல்லாஹ் விட்ட வழிதான். அந்த மனிசன் சுவர்க்க வாதியாச் சேரோணும்!”
சபீனா நெஞ்சுருகிக் கண்ணீர் சொரிந்தாள்.
அவளது துயரப்பிரலாபம் பிள்ளைகளையும் நெஞ்சுருக வைத்தது. அமீனின் மறைவிற்குப் பிறகு, குடும்பச் சுமை, சபீனாவின் தலைக்கு இடம் மாறியது. ஏழைப் பெண்ணான அவளால், கூன்விழுந்து நிர்க்கதியில் வீழ்ந்துவிட்ட, இந்தக் குடும்பத்தை எவ்வாறு நிமிர்த்திவிட முடியும்? அவளுக்குச் சவாலாய் அமைந்துவிட்ட வாழ்வியல் அழுத்தங்கள் இவை.
“இந்தக் கொமருகள் ரண்டையும் எப்படிக் கரைசேர்ப்பேன்? சின்னவனை நல்லாப் படிக்க வைச்சி, எப்போ மனிசனாக்குவேன்? போன வருசம் நோன்புக்கெண்டா, எங்கட ஊரு அனஸ் ஹாஜியாரு, ஏழு எளியதுகளுக்கு தல நோன்பண்டைக்கே, போதுமாக நல்ல ஒதவிகள். செஞ்சாரு. அவருக்கு அல்லா பரக்கத் செய்யயோணும். இந்த வருஷம் பாவம், பாரிச வாதத்தில் யாவாரமும் பட்டுப் பெயித்து, வியாதீல படுத்துட்டாரு. கஞ்சக் கபோதிகள் நல்லா இருக்கியானுவள். நல்ல மனுசருக்குத் தான், எல்லாப் பொக்கத்தாலேயும் கஷ்டம்.”
சபீனா ஆற்றாமையினால் புலம்பிக் கொண்டிருந்தாள். இந்த வறுமைப் பிடியிலிருந்து மீட்சி பெற அவள் விடியல் சுபஹிப் எழும்பி, கடையப்பம் சுட்டு விற்று வந்ததில், பிள்ளைகளுக்கு ஒரு நேர ஆகாரமாவது கிடைத்து வந்தது. இனி ஒரு மாதத்திற்குப் பெரிய முடக்கம் தான். நோன்பு நாட்களில் கடையப்பம் கேட்டு எவன் வருவான்? இத்யாதிப் பிரச்சினைகள், அவளின் உள்ளுணர்வுகளை உலுப்பிக் கலைத்தன. பள்ளிவாசல் ஒலிபெருக்கியிலிருந்து அறிவித்தலொன்று காற்றோடு கலந்து வந்தது. “ரம்ழான் தலைப்பிறை தென்பட்டுள்ளதால், ஜமா அத்தார்கள், தராபீஹ், தொழுகைக்கு வருமாறு அழைக் கின்றோம்.”
வானத்தை அக்கறையோடு அண்ணார்ந்து பார்த்தாள் சபீனா. தங்கத்துண்டை நறுக்கி ஒட்டினாப் போன்று, அழகு ஜோதியாய், ரம்ழான் பிறை, சுடர்ந்தது. ஊரும், பள்ளிவாசலும், உற்சாகத்தில் மிதந்தன. பக்கத்து வீட்டுப் பெண்கள், தலையில் முக்காட்டை இட்டவாறு, அலுவல்களில் சுற்றிச் சுழன்றனர்.
சபீனாவின் வீட்டில் இன்னும் அடுப்பெரியவில்லை . அது வயிற்றில் தாராளமாக எரிந்தது. பிள்ளைகளின் முகங்களில் கவலையின் ரேகைகள் படர, அங்கு ஒரு அசாதாரண மௌனம் நீடித்தது. அவள் அடுப்படிக்குச் சென்று, அசிரத்தையாக, சட்டிப் பானைகளைத் தடவிப் பார்த்தாள். எப்போதோ பத்திரப்படுத்தி வைத்திருந்த, கொஞ்சம் அரிசி கண்ணில்பட்டது. இன்னொரு பாத்திரத்தில், வைத்திருந்த, கொஞ்சம் மரவள்ளிக் கிழங்கும் இருந்தது. அவள் நெஞ்சை நேராக நிமிர்த்தி ஒரு சோக நெடுமூச்செறிந்தான்.
‘அல்ஹம்துலில்லாஹ்! இதக் கொண்டாவது இண்டைய நோன்பை தொடங்கலாம்’, என்ற நினைப்பில் வேலையில் மூழ்கினாள்.
முகத்தை அஷ்டகோணமாக்கிக் கொண்டு, இளையவள் சொன்னாள். “இது என்ன உம்மா! வெறும் மஞ்சக்காயும், சோறும், திண்டுட்டு நோன்பு புடிக்க ஏலுமா? சஹர் சாப்பாட்டுக்கு * என்னத்தத் திண்ணுற?”
அவளது கேள்வியில் வக்கற்ற ஏழ்மையின் தொனி, காட்டமாய் கலந்திருந்து, அந்தக் கேள்விக்கணை சபீனாவின் நெஞ்சைக் கீறிக் கிழித்தது. கையிலிருந்த கிழங்கையும், கத்தியையும் மூலையில் தூக்கி எறிந்தாள்.
ஆத்திரமும், அழுகையுமாக வார்த்தைகள் உஷ்ணமாக வெடித்தன. “நான் என்னத்தடீ செய்ய? எல்லாம் சேந்து உம்மாட சதைய பச்சையா, வெட்டித் திண்டுட்டு, நோன்பு புடியுங்க! அந்த மனுசனுக்குத் தந்த மௌத்த, அல்லா எனக்குத் தந்தீக்க, நிம்மதியாப் பெயித்தீப்பன். இப்ப நானொருத்தி ஈந்துகொண்டு கருமம் தொலைக்கிற.”
கண்ணீர் மடை உடைத்துப் பெருக, தொண்டை கரகரத்தது. தலை கிறுகிறுத்தது அவளுக்கு. வேலைகளை நிறுத்திவிட்டு, நிலைப்படியருகே அமர்ந்து கொண்டு, உரத்த குரலில் அழுதாள். உம்மாவின் துயரம்கண்டு பேதலித்து வாரிசுகள், வாய்பேசா மௌனிகளாயினர். அவர்கள், ஓதலும், தொழுகையும் முடித்து, பசித்த வயிறுகளோடு படுக்கைக்குச் சென்றனர்.
சோகங்களை அடைகாத்து அனுபவப்பட்ட சரீனா மீண்டும் அடுக்களைக்குச் சென்று இருந்ததைக் கொண்டு சமைத்துவிட்டு, தொழுது துவாச் செய்துவிட்டு, ஆன்மீக ஆறுதல் பெற்றவளாய் பசிமறந்து பாயில் சரிந்தாள்.
பக்கத்தில் நிர்விசாரமாக உறங்கும் சின்னவனின் தலையை விரல்களால் வருடிக் கொடுத்தாள். பழைய நினைவுகளை மீண்டும் மீட்டிப் பார்க்க மனம் விரும்பினாலும், உடல் அசதியில் சிறிது கண் அயர்ந்தாள். மூடிய இமைச்சிறகுகளில், கனவொன்று கருக்கொண்டது. அமீன் சிரித்த முகத்துடன், கம்பீரமாக காட்சி கொடுத்தான்.
“சபீனா! இண்டைக்கு தலை நோன்புதானே! கோழி தயிரு, பழம், மரக்கறி, அரிசி, எல்லாச்சாமானும் கொண்டு வந்திரிக்கி, பிள்ளைகள் எல்லாரையும் எழுப்பி நோன்பு புடிக்க வையுங்கோ! அல்லாஹ் சொல்றான், நோன்பாளிகளுக்கு கூலி கொடுக்கும் பொறுப்பு எனது சொந்தக் கண்காணிப்பில் இருக்கு, எண்டு, முப்பது நோன்பையும் முழுக் குடும்பமும் சரியா புடிக்கோணும்!”
அவளால் நம்ப முடியவில்லை . தன்னைப் பிடித்து பேயாட்டம் போடும் துயரங்கள் எல்லாம், இனி சூரிய ஒளியில் மறையும் பனித்துளிகளாக அகன்றுவிடுமா? இனி காலமெல்லாம் அவரோடு கைகோர்த்துக் கொண்டு வாழும், பாக்கியம் வந்து விட்டதா? கனவுச் சுழற்சி, நினைவின் எழுச்சி, எல்லாம், கைநழுவிப் போக, மறுகணம், கண்விழித்துப் பதறியடித்துக் கொண்டு எழுந்தாள்.
அற்ப சந்தோஷத்தை ஒரு கணம் மட்டும் தந்துவிட்டுக் கலைந்து போன, அந்தக் கனவை எண்ணி மனதிற்குள் குமைந்தாள். தடுமாறித் தவிக்கும் மனதை ஆசுவாசப்படுத்தி யவாறு, மீண்டும் உறக்கத்தைச் சிறையிட எத்தனித்தாள், தோல்விதான். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. வீட்டு முற்றத்தில் வாகனமொன்று, நிறுத்தும் ஓசை கேட்டது. தொடர்ந்தாற் போல் யாரோ உரையாடுவது தெளிவின்றி கேட்டது.
சிறிது நேரத்தில்,
“தாரு வூட்டுல, சபீனா தாத்தா! கதவத் தொறங்கோ !” கேட்டுப் பழக்கப்பட்ட குரலாக உணர்த்தினாலும், பதட்டம் தணியாமல், “தாரு இந்த நேரத்தில?” என்று வினவியவாறு கதவைத் திறந்தாள். நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்த வாலிபர், சிலர் வாசலில் நின்றார்கள்.
“சபீனாதாத்தா! கொழும்பிலிருந்து ரபீக் ஹாஜியார், வந்திருக்கிறார், ஸக்காத் கொடுக்க. நிறைய பணம் சாப்பாட்டுச் சாமான் எல்லாம் கொண்டு வந்திரிக்கார். ஊரில உள்ள ஏழைகள்ட லிஸ்டை நாங்க குடுத்தோம். அதில முதலவாது இடம் உங்கட தான். நோன்பு முப்பதுக்கும் தேவையான எல்லாச் சாமான்களும் இதில் இரிக்கி. இந்தாங்க இதில் பணமும் இரிக்கி. ஒரு சந்தோஷமான செய்தி. உங்கட குடும்பத்தப் பத்தின எல்லாத் தகவல்களையும் ஹாஜியாருகிட்ட சொன்னோம். உங்கட மகள்கள் இரண்டு பேருக்கும் ரெண்டு தையல் மெசின்கள், தாரதாக, வாக்குறுதி தந்தீக்கிறார்.”
சபீனாவின் வீட்டிற்குள் சாமான் பொதிகளை, கொண்டு வந்து வைத்தார்கள் இளைஞர்கள்.
“அல்ஹம்துலில்லாஹ், ஒங்க எல்லோருக்கும் அல்லாஹ் நாயன் பரக்கத் செய்யோணும்” சேலைத் தலைப்பால் தலையை மறைத்தவாறு, இரு கையேந்தி துவா கேட்டாள்.
அவர்கள் சென்றதும், கதவைச் சாத்த வந்த சபீனா, எதேச்சையாக வானத்தைப் பார்த்தாள்.
ரம்ழான் மாதத்து தலைப்பிறை
பிரபஞ்சத்தை எழிலூட்டிக் கொண்டிருந்தது.c
– 20 டிசம்பர் 1998 – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005