கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 7,230 
 
 

அன்றோடு அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஒரு வாரம் ஆகியிருந்தது.இதுவரையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்பதோடு இனிமேலும் பிரமாதமாக அவரது உடல் தேறி விடுமென்றோ ..முந்தைய நிலைக்கு வந்து விடுமென்றோ எந்த நம்பிக்கையும் கன்னையாவுக்கு இல்லை. அதைப் பற்றிய வருத்தமும் அவனுக்கு இருந்ததாகச் சொல்லிவிட முடியாது. ஏதோ…மனசு ஒட்டாமல் ,கிராமத்துக்கும் டவுன் ஆஸ்பத்திரிக்கும் அலைந்து கொண்டிருந்தானே தவிர ..அவனுடைய உள்ளம் என்னவோ அப்பாவின் உபாதைகளிலிருந்து விலகியே இருந்தது.

நெடுநெடுவென்ற உயரமும்,அதற்கேற்ற பருமனுமாய்க் கண்ணில் அறைகிற கருப்பு நிறத்தோடு கூடிய முரட்டுத்தனமான தோற்றமும், தணிவான குரலில் பேசியே அறியாத மூர்க்கமான குரலும் கண்டு பயந்தவனாய்ப் பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடமிருந்து சற்று எச்சரிக்கையான தொலைவில் நின்றிருந்ததைப் போலவே …இப்போதும் வேறு காரணங்களால் அவன்,அவரிடமிருந்து விலகியே நின்றிருந்தான். அன்றைக்கு விவரம் புரியாத சிறு வயதில்,அம்மாவின் சேலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு , பயம் கப்பிய மிரட்சியோடு அரைப் பார்வையாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் போலத்தான் …இன்று, இருதய நோயின் கடுமையால் கண் செருகி,வீரியமான மருந்துகளின் துணையோடு அவர் உறங்கும் நிலையிலும்…..சலிப்போடு அவன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘’ஐயாவைப் பார்த்தியாடா?’’
– நாள் தவறாமல் சாப்பாட்டுக் கூடையுடன் உள்ளே நுழைந்த மறு நிமிடம், அம்மா அவனிடம் கேட்கும் வினாவுக்கு, அவரது கட்டில் இருக்கும் திசையை நோக்கி ,ஒரு பார்வை வீச்சை மட்டும் அனுப்பிவிட்டு அவன் மௌனமாகிப் போவான்.நோயாளியாய்ப் படுத்துக் கிடக்கிற அப்பாவைப் பார்ப்பதை விடவும், வார்டின் அந்தத் தனியறையில் ஒரு கர்ம யோகியைப்போலக் காரியமாற்றிக் கொண்டிருக்கிற அம்மாவைப் பார்ப்பதிலேதான் அவன் கணங்கள் கழியும்!

கண்ணில் தளும்பி வழியும் கருணையும்….அத்தனை அழகில்லாத முகத்தையும் கூடப் பொலிவாக்கும் அருளுமாய்ச் சிறுகூடான உடல்வாகு கொண்டு…சற்றே அழுத்திப் பிடித்தாலும் கூட முறிந்து விடுபவளைப்போலத் தோற்றமளிக்கிற அம்மா!
முற்றாக மாறுபட்டுப்போன இரண்டு மனிதப் பிறவிகளுக்கு முடிச்சுப் போட்டு வைப்பதிலேதான் இந்த இயற்கைக்கு எத்தனை வேகம் !

தோற்றமும்,குணங்களும் மாறுபட்டிருந்தாலும் கூடப் பரவாயில்லை!
சண்டைச் சேவலின் வாகான பிடியில் வசமாக மாட்டிக் கொண்ட சோகை பிடித்த பெட்டைக் கோழியாய்….அப்பாவின் மூர்த்தண்யமான ஆளுமையில் மனசும்,உடலும் நசுங்கிப் போய் அம்மா குப்பையாய்க் கிடந்த சந்தர்ப்பங்கள்…,எத்தனைதான் முயற்சி செய்தாலும்,அவனது நினைவுச் சேமிப்பிலிருந்து நீங்குவதாக இல்லையே?

‘’ஸார்! கொஞ்சம் எழுந்திரிச்சு அந்தப் பக்கம் போறீங்களா? டாக்டர் ‘ரவுண்ட்ஸ்’வர்றதுக்குள்ளே வார்டைத் துடைச்சு சுத்தம் பண்ணணும்..’’

அறையின் மூச்சு முட்டலுக்குள் அடைந்திருக்கப் பிடிக்காமல் ….பார்வையாளர் கூடத்தில் அமர்ந்திருந்த கன்னையா, ஊழியரின் குரலால் சிந்தனை கலைந்து எழுந்தவனாய்,அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தான்.

‘’என்ன தம்பி! அப்பா உடம்பு எப்படி இருக்கு ? அவரைப் பாக்கத்தான் போய்க்கிட்டிருக்கேன்’’-ஆஸ்பத்திரி முகப்பில் எதிர்ப்பட்ட ஊர்க்காரர் ஒருவர் நலம் விசாரித்தார்.

‘’இப்பக் கொஞ்சம் பரவாயில்லீங்க…உள்ளே போய்ப் பாருங்க ! அம்மா கூட இருக்காங்க!’’

சுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொள்ள அவன் நினைத்தாலும் அவர் விடுவதாக இல்லை.

‘’ஹ்ம்! அந்தக் காலத்திலே …யாருக்குமே இல்லைன்னு சொல்லாமே கர்ண மகாராசா மாதிரி வாரிக் கொடுத்தவர் உங்கப்பா!உங்க வீட்டுக்கு வந்திட்டுப் பசிச்ச வயத்தோட யாருமே போனதில்லை!…அந்தப் புண்ணியமெல்லாம் அவர் உசிரக் காப்பாத்தாம போயிடுமா என்ன?”

பேசிக் கொண்டே அவர் நகர்ந்து போனதும் கன்னையா தனக்குள் சிரித்துக் கொண்டான்.

’இந்தக் கர்ண மகாராசா கை வைத்ததெல்லாம் யாருடைய கஜானாவில் என்பது….அவருக்கெப்படித் தெரிந்திருக்கப் போகிறது..?’

கர்ப்பக்கிரகத்திலே அலங்கரம் செய்து வைத்த அம்மன் சிலையாய்த் தகதகத்துக் கொண்டிருந்த அம்மாவை…எங்கோ மியூசியத்தின் மூலையில் மூளியாகிக் கிடக்கிற சிற்பத்தைப் போல உருவிப்போட்டுவிட்டுத் தன்னுடைய அப்பன் பாட்டன் தேடி வைத்த சொத்தையும் கோட்டை விட்டவரல்லவா அவனுடைய அருமைத் தந்தை!

இரவு, பகலென்ற கால பேதங்களின்றி,அவர்களது வீட்டுத் திண்ணையில் ஒரு தொடர் ஓட்டம் போல நடத்தப்படும் அந்தச் சீட்டுக் கச்சேரியில் அவர் ஜெயித்ததாகச் சரித்திரமே இல்லையே…? அவர் தோற்பதற்காகவே விடிய விடிய நடக்கும் அந்தத் திண்ணைக் கூத்திற்கு…மணிக்கொரு தரம் தேநீரும், வெற்றிலை வகையறாக்களும் ,குடிதண்ணீரும் கொடுத்து ஓய்ந்து போய் …அம்மா சற்றே தலையைச் சாய்ப்பதற்குள், கோழி கூவி, வெள்ளி முளைத்துப் போன நாட்கள்தான் எத்தனை?

அறிவிப்பே கொடுக்காமல், அகால நேரங்களில் நண்பர்கள் என்ற பெயரில் பெரியதொரு பட்டாளத்தையே அழைத்து வந்தபடி, வாசலிலிருந்தபடியே ஆர்ப்பாட்டமாகக் குரல் கொடுப்பார் அப்பா. பார்வதி என்ற அம்மாவின் அழகான பெயர், அவர் வாயிலிருந்து….,செல்லமாக வேண்டாம்…- முழுசாக உதிர்ந்து கூட ஒரு நாளும் அவன் கண்டதில்லை.

‘’ஏய்..’’என்ற விளி ஒன்றுதான் பத்து வீடு கேட்க அவர் கண்டத்திலிருந்து ஒலிபெருக்கியைப்போல உரத்து முழங்கும்.

‘’த பாரு ! கூட்டாளிங்க ஒரு பத்துப்பேரு வந்திருக்காங்க! இன்னும் அஞ்சு நிமிசத்திலே பருப்புப் பாயாசத்தோடே இலை போட்டாகணும்..’’

முகத்தைக் கூடப் பார்க்காமல் அதிகாரத் தொனியில் ஆணையிட்டுவிட்டு அவர் அகன்று போவார். விடிந்தது முதல் தொழுவத்திலும், வயற்காட்டிலும் ,அடுப்படியிலுமாய் மாறி மாறி இடுப்பொடிந்து …உழைக்கிற இயந்திரமாகவே அம்மா ஆகி விட்டிருக்கிற விஷயமோ…,பெருங்காயம் வைத்த பாண்டமாய் இரும்புப் பெட்டியிலும், அஞ்சறைப் பெட்டியிலும் குடும்பத்தின் பரம்பரைப் பெயர் ஒன்று மட்டுமே பாக்கி இருந்த யதார்த்த நிஜமோ…எதுவுமே பிரக்ஞையில் உறைக்காது அவருக்கு! கையிலே பிடித்திருந்த சீட்டுக் கட்டின் மீது காட்டிய கவனத்தையும்,கரிசனத்தையும் கூட அம்மாவின் மீது எப்போதாவது அவர் காட்டியிருந்ததாக அவனுக்கு நினைவில்லை.

’’என்னண்ணே இங்க நின்னுகிட்டிருக்கே?’’- கன்னையாவின் ஒரே தங்கை திலகா பெட்டியும், கையுமாக எதிரே நின்று கொண்டிருந்தாள்.

‘’அடேடே..வா திலகா வா! ஊரிலேயிருந்து நேரே வர்றியா ?வா..உள்ளே போய்ப் பேசலாம்’’

‘’எப்படி இருக்காரு அப்பா?’’

-உணர்ச்சியோ,உருக்கமோ இல்லாமல் தான் உதிர்த்த கேள்விக்கு விடையையும் எதிர்பாராதவளாய் அவளே தொடர்ந்தாள்.

‘’ஆமாம்! இருந்துங் கெடுத்தான்..செத்துங் கெடுத்தான்கிற மாதிரி..அப்பா நல்லா இருந்தப்பவும் அம்மா சுகப்படலை. ஏதோ நிறைஞ்ச மனுஷியாய்ப் பூவோடேயும், பொட்டோடேயும் நடமாடிக்கிட்டாவது இருந்தா ! இப்ப அதையும் பிடுங்கிக்கப் பார்க்கிறாராக்கும்…?’’

ஆங்காரத்தோடு பேசிய திலகாவின் கோபத்திலிருந்த நியாயம், கன்னையாவுக்குப் புரியாமல் இல்லை.

தன் உயிரின் வார்ப்பாக…உதிரத்தின் பங்காக,….மணியான இரண்டு குழந்தைகள் வீட்டுக்குள் வளைய வருவதைப் பற்றியோ…அவர்களை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைப் பற்றியோ அப்பா கவலைப்பட்டதே இல்லை.வீட்டில் வெந்நீர் போடுகிற தாமிரத் தவலையை விலைக்கு விற்றுவிட்டுக் கன்னையாவின் கடைசிப் பரீட்சைக்குப் பணம் கட்டுவதற்காக அம்மா பதுக்கி வைத்திருந்த பணத்தை எப்படியோ மோப்பம் பிடித்து எடுத்துக்கொண்டுபோய்….என்றைக்கோ உறவு விட்டுப் போன தூரத்துப் பங்காளியின் கொழுந்தியாள் கல்யாணத்திற்கு மொய் எழுதி விட்டு வந்தவரல்லவா அவர்?அதற்கப்புறம்,கன்னையா எப்படிப் பணம் கட்டிப் பரீட்சை எழுதினான் என்பதைப் பற்றியோ, அதற்கு அம்மா செய்ய வேண்டியிருந்த தியாகங்களைப் பற்றியோ …அவர் கேட்டுக் கொண்டதுமில்லை.

ஒரே மகளான திலகத்தின் திருமணத்திலும் கூடக் கல்யாணப் பெண்ணின் தந்தையாய்ப் பெயரளவுக்கு அவரை மணவறையிலே அரை மணி நேரம் நிறுத்தி வைப்பதற்கு…….,சீட்டாட்டக் கோஷ்டியிடமிருந்து அவரைப் பிய்த்துக் கொண்டு வருவதற்கு அம்மாதான் போராட வேண்டியிருந்தது.

தனி ஒருத்தியாகவே வடம் பிடித்து,ஒரு வழியாகக் குடும்பத் தேரை அம்மா நிலைக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும்…..உல்லாச சல்லாபங்களில் குலுங்கியபடி நகர்ந்து கொண்டிருந்த அப்பாவின் வாழ்க்கைத் தேர் …வயோதிகத் தள்ளாமையால் நொடித்துப்போய்த் தானாகவே பழுதுபட்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது.

அண்ணனும்,தங்கையுமாய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தபோது
,,இங்கே கன்னையாங்கிறது யாரு?”
என்று ஒரு நர்ஸ் விசாரித்துக் கொண்டிருந்தாள்.

வேகமாகச் சென்று,தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனிடம்,
’’பெரிய டாக்டர் உங்க கிட்டே ஏதோ பேசணுமாம்..உடனே போய்ப்ப் பாருங்க,,,
என்றாள் அவள்.

அண்ணனும்,தங்கையுமாய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தபோது
,,இங்கே கன்னையாங்கிறது யாரு?”
என்று ஒரு நர்ஸ் விசாரித்துக் கொண்டிருந்தாள்.வேகமாகச் சென்று,தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனிடம்,
’’பெரிய டாக்டர் உங்க கிட்டே ஏதோ பேசணுமாம்..உடனே போய்ப்ப் பாருங்க’’
என்றாள் அவள்.

வீண் படாடோபங்களைத் தவிர்த்ததாய்….ஒவ்வொரு அங்குலத்திலும் சுத்தத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்த அந்த அறையில், சாந்தம் தவழும் கண்களுடனும், இனிய புன்னகையுடனும் டாக்டர் அவனை எதிர் கொண்டார்.

“வாங்க மிஸ்டர் கன்னையா!..இப்படி உக்காருங்க’

அவர் சொல்லப்போவதை முன் கூட்டியே அனுமானிக்க முடிந்தவனாய்…..

“என்ன டாக்டர்….சீரியஸா ஏதாச்சும்…”

” ….ம்..வெளிப்படையாச் சொல்லணும்னா,உங்க அப்பாவுடைய உடல்நிலை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு…..நிலைமை,எந்த நேரத்திலேயும்,எப்படி வேணுமானாலும் மாறலாம்.ஆனா….இப்ப அதைப் பத்திப் பேச நான் உங்களைக் கூப்பிடலை!..இப்படி ஒரு ஆபத்தான நிலையிலே படுத்திருக்கிறப்பவும்…உங்க அப்பாவோட ஞாபக சக்தி…ரொம்ப ஆச்சரியமானதா இருக்கு.! கொஞ்சம் கூடத் தடுமாற்றம் இல்லாம…நினைவு பிசகாம தன்னோட அனுபவங்களை எங்க கிட்ட வாய் ஓயாம எப்படிப் பேசறார் தெரியுமா?”

ஒரு நொடியில்…விஷயம்,கன்னையாவுக்குச் சப்பிட்டுப் போனது.!

‘ஆமாம்!..இதுதான் இப்ப ரொம்ப அவசியம்!குடும்பத்தைத் தவிர வேறு இடங்களிலே …நல்ல மனுஷன் மாதிரிப் பாசாங்கு பண்றதுதான் அவரோட கூடப் பொறந்த குணமாச்சே…’

அவனது நினைவோட்டத்தை டாக்டரின் பேச்சு இடைமறித்தது.

”சரி….அதிருக்கட்டும்.! நாளைக்கு என்ன ‘நாள்’ங்கிறது உங்களுக்கு நினைவிருக்கா?”

விடை தெரியாமல் அவன் விழிப்பதைப் பார்த்துவிட்டு அவரே தொடர்ந்தார்.

”நளைக்கு உங்க அப்பாவோட பிறந்த நாள்..!ஹிஸ் சிக்ஸ்டியத் பர்த்டே”

கன்னையாவின் சலிப்பு மேலும் கூடிப் போனது.
ஏதோ நாகரிகம் கருதி, வெளிநடப்புச் செய்வதற்கு அவன் முயற்சி செய்யாவிட்டாலும் கூட…,அமர்ந்திருந்த இருக்கை அவனுக்கு முள்ளாக உறுத்தத் தொடங்கியது.

”பொதுவா..கணவன்,மனைவி இரண்டு பேரும் உயிரோட இருந்தா…உங்க குடும்பங்களிலே இந்த நாளை அறுபதாம் கல்யாணமாக் கொண்டாடுவீங்க இல்லே…?”

”அதுக்கு இப்ப என்ன டாக்டர் ? உடம்பு சரியாகி ஊருக்குப் போனாப் பார்த்துக்கலாம்!”என்றான் அவன்.

””நோ..நோ..பேஷண்ட்ஸோட உடம்பை விட மனசுதான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்! நீங்க அதைப் பத்தியெல்லாம் கவலையே படவேண்டாம்! வீட்டுச் செலவும்,ஆஸ்பத்திரிச் செலவுமா நீங்க கஷ்டப்படறது எனக்குத் தெரியாதா என்ன…?நாளைக்கு வழக்கமா எங்க பிரார்த்தனைக் கூட்டம் நடக்கிற அதே வேளையில …சிம்பிளா எங்க மருத்துவ மனையோட சார்பா …நானே ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடறேன்”

”எதுக்கு டாக்டர் அனாவசியமா….?”

”இதோ பாருங்க கன்னையா…எது அவசியம்…எது அனாவசியம்கிறதெல்லாம் தனிப்பட்ட மனுஷங்களைப் பொறுத்து மாறுபடற விஷயம்! ரைட்..நாம நாளைக்குப் பார்க்கலாம்”

ஏ.சி.குளிரின் இதத்தை விட்டு வெளியே வந்த கன்னையாவின் முகத்தில் பளீரென்று அறைந்த வெயிலின் எரிச்சலைப் போலவே அவன் மனமும் எரிந்தது.
‘கருமாதி பண்ணுகிற நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் …கல்யாணம் கேட்கிறதோ கிழவனுக்கு…?’

சர்வநாடியும் ஒடுங்கிப் போய்…வாழ்க்கையே தன்னிடமிருந்து விடைபெற்றுப் போய்க்கொண்டிருக்கிற சந்தர்ப்பத்திலும் கூடப் போலிக் கௌரவமும்….பொய்யான வாழ்க்கை முறைகளும் அவரிடமிருந்து விடைபெறுவதாக இல்லையே என்று மனம் நொந்தான் அவன்.

மறு நாள் காலையில் அந்த மருத்துவ மனையின் முகமே மாறியிருக்க…,வரவேற்புக் கூடமே ஒரு திருமண மண்டபமாக உரு மாற்றம் பெற்றிருந்தது.
புறநோயாளிகளும்,உள்ளே தங்கிச் செல்லும் சிகிச்சை பெறுபவர்களும்,டாக்டர்களும்,நர்ஸுகளும்,ஊழியர்களுமாய்…மொத்த மருத்துவமனையும் அங்கே கூடியிருக்க…,நடுநாயகமாக நாற்காலி போட்டுக் கன்னையாவின் பெற்றோரை உட்கார வைத்திருந்தார்கள்.கவலை தோய்ந்த முகத்துடன்,தன் தாயையே பார்த்தபடி…ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தான் கன்னையா.

ஏற்கனவே ஒடுங்கிப் போயிருந்த அம்மாவின் தேகம்….அத்தனை பெரிய சபையில் உட்கார நேர்ந்த கூச்சத்தால்…நத்தையாய்ச் சுருண்டு,நாற்காலியோடு ஒட்டிக் கிடந்த தோற்றம்,அவன் மனதைப் பிசைந்தது.

‘இத்தனை நாள் பண்ணின அக்கிரமம் பத்தாதுன்னு…வெளியிலே,வாசல்லே வந்து கூடப் பழகாத ஒரு கிராமத்துப் பொம்பளையைக் கோமாளி வேஷம் போட்டுப் படிச்சவங்களுக்கு முன்னாலே நிறுத்தி வச்சுக் கேவலப்படுத்தணுமாக்கும்”
ஏனோ…அப்பாவின் இந்த விபரீதமான இந்த ஆசை..,அம்மாவை அகௌரவப்படுத்திவிடக் கூடுமென்றே தோன்றிக் கொண்டிருந்தது அவனுக்கு.

கூடியிருந்தவர்களுக்கு நர்ஸுகள் இனிப்பு வழங்கிக் கொண்டிருக்க…,பெரியதொரு புகைப்படக் கருவியைச் சுமந்தபடி சுறுசுறுப்புடனும்,சுவாரசியத்துடனும் போட்டோக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார் டாக்டர்.

தம்பதிகளைப் பாராட்டிப் பேசித் தன் கையால் பெரிய சைஸ் ரோஜாப் பூ மாலைகளை அவர் எடுத்துத் தர ..அவர்களும் மாலை மாற்றிக் கொண்டபின் …தணிந்த குரலில் டாக்டரின் காதில் அப்பா ஏதோ பேசுவது அவனுக்குத் தெரிந்தது.சம்மதத்திற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிவிட்டு அவர் நகர்ந்து செல்ல…,கம்மிப் போன குரலில் மெள்ளப் பேச ஆரம்பித்தார் அப்பா.

‘’நாள் கணக்கா..நிமிசக்கணக்கான்னு நிச்சயமில்லாத இந்த நிலைமையிலே …,மணவறையிலே உட்கார்ந்து மாலை போட்டுக்கணும்னு நான் ஆசைப்பட்டது எனக்காக இல்லே! எனக்குக் கழுத்தை நீட்டின ஒரே பாவத்துக்காக…நாப்பது வருசமா…எங்க குடும்ப பாரத்தைப் பொதியாய்ச் சுமந்து களுத்தொடிஞ்சு நிக்கிறாளே இந்தப் புண்ணியவதி…இவளுக்குப் பதில்மரியாதை பண்ணணும்னு கொஞ்ச நாளாவே ஒரு தவிப்பு! எங்களோட வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்து முட்டுக் கொடுத்தே முதுகு முறிஞ்சு போய்க் கிடக்கிற இவளைப் பலரறியச் சபை கூட்டிப் பாராட்டணும்னு மனசுக்குள்ளே ஒரு பதைப்பு! இத்தனை வருச தாம்பத்தியத்திலே எனக்குச் சமதையா அவளை நான் நெனச்சது கூட இல்லை! ஆனா …உண்மையிலே அவளுக்குச் சமமா நிக்கிற தகுதி கூட இல்லாதவனாத்தான் என்னோட வாழ்க்கையை நான் நடத்தி இருக்கேன்! இப்பக் கூட என் கையால மாலை போடறதாலே புதுசா எந்தக் கௌரவமும் அவளுக்குக் கிடச்சுடப் போறதில்லே!ஆனா…அவளை நான் பெருமைப் படுத்தினாத்தான்,கண்ணை மூடறதுக்குள்ளே ஒரு மனுசன்கிற கௌரவமாவது எனக்குக் கிடைக்கும்! அதனாலேதான் …வலிஞ்சு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நானாவே ஏற்படுத்திக்கிட்டேன்!”

தொடர்ந்து அவர் பேசிக் கொண்டே போனாலும்…அதெல்லாம் கன்னையாவின் மனதில் பதிவாகவில்லை.கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் …திரை தூக்கிக் கிடைத்த தரிசனமாய்…எந்த ஒரு மனுஷப் பிறவிக்குள்ளும் …மென்மையான மறுபக்கம் ஒன்று …சாம்பல் போர்த்திய நெருப்பாக உள்ளடங்கிக் கிடப்பது அவனுக்கு அர்த்தமாகத் தொடங்கிய அதே வேளையில்….வாழ்க்கையில் முதல் தடவையாக…அப்பா என்ற ஆதுரத்தோடு அவரைப் பரிவாகப் பார்க்கவும் தோன்றியது அவனுக்கு.

(நன்றி: சிறுகதை வெளியீடு-சங்கச் சுடர், தில்லித் தமிழ்ச்சங்கம்,ஜன,2010)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *