கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 9,648 
 
 

அம்மா வராந்தா கேட்டை அகலத் திறந்து விட்டிருந்தாள். விசாலமாக திறந்திருப்பதைப் பார்ப்பது சற்று அசாதாரணக் காட்சியாக இருந்தது- வராந்தா ஆடை துறந்து திடீரென அம்மண கோலம் பூண்டது போல சிமிந்துத் தரை விரிந்து திறந்தபடி கிடந்தது. வெற்றுத் தரையில் முற்றிய மாலை வெயில் பாய்ந்து பரவி விழுந்திருந்தது. வெயில் ஏறி ஏறி உச்ச சூட்டில் கனன்று சிமிந்துத்தரை வெடித்துப் பிளந்துவிடுமோ எனத் தோணியது . தரையின் அகன்ற வெளிச்சம் விழுந்து கண்கள் கூசின. தரை வெப்பத்தால் உடலில் சட்டென சூடு பாய்ந்தது. மிக மெல்லிய காற்று தொடங்கியிருந்தது. அடிக்கும் வெயிலுக்குச் சன்னமான காற்று ஒரு பொருட்டே அல்ல. மாலை முதிரும் வேளையில் காற்று கனமாகலாம். அம்மாவின் கைகளில் தானியங்கிச் சாவிக்கொத்து குருவியின் அலகு போல துருத்திக் சற்றே நீண்டிருந்தது.. அதனைக் கதவருகே இருக்கும் ஆணியில் தொங்க விடாமல் வாசலைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

“ஏம்மா கதவத் தெறந்திட்டு வாசப்படியில நிக்கிறீங்க? பாருங்க வெயில் அடிக்குது, கண்ணு கூசுது” என்றேன். அம்மா ஒன்றும் பேச வில்லை. என் வார்த்தைகள் காதில் விழவில்லையோ என் சாவிக்கொத்தை அவள் பிடியிலிருந்து பெறப் பார்த்தேன். என் ஸ்பரிசத்தால் பிடியை மேலும் இறுக்கினாள். அவளிடம் எந்தச் சலனமுமில்லை.

அவள் முகத்தை ஏறிட்டு “அம்மா “ என்றேன். அசைவில்லை. இம்முறை அழுத்தமாக. விரக்தியுற்று தோளைத் தொட்டு மெல்ல உலுக்கினேன். என்னைத் திரும்பிப் பார்த்துச் சலித்து, “அப்பா வர நேரம்” என்றாள். என் சமநிலைக் குலைந்து, அவள் தோளிலிருந்த சட்டென்று என் கையை விலக்கினேன். என்னுள் திடீர் விதிர்ப்பு. மனம் சற்று பின் வாங்கியிருந்தது. ஒரு எதிர்பாரா அதிர்ச்சி என்னைத் தாக்க ஸ்தம்பித்துப் போனேன். ஒரு கணம்தான்! பின்னர் சுதாரித்துக் கொண்டேன். நான் அவள் கண்களைக் கூர்மையாக நோக்கினேன். அம்மா எந்தச் சலனமும் இல்லாமல் என் பார்பவையைப் பொருட்படுத்தவில்லை.பின்னர் .

“ அம்மா என்னாச்சு ஒங்களுக்கு?” அவள் கண்களை விரித்து மீண்டும் என் பக்கம் திரும்பினாள். விழிகளில் ஒளி சன்னமாய்ப் பாய்ந்திருந்தது. மிக அண்மையில் இருந்ததால் விழிப்படலத்தில் ஈரம் மின்னுவது பளிச்செனத் தெரிந்தது.

“ அவர் எறந்து ரெண்டு மாசத்துக்கு மேலாவுது !” என்றேன். அவள் ஒரு விநோதப் புன்னகையை என் மீது வீசினாள். அதனைப் புன்னகை என்று சொல்லிவிட முடியாது, அது ஒரு கேலிப் பார்வை.

“கதவச் சாத்துங்கம்மா”.

மீண்டும், “அவர் வரும் நேரம்,” என்றாள். அதே ஜதி மாறாமல். தீக் குச்சியை உரசியதும் உண்டாகும் தீப்பொறி போல எனக்குள் மெல்லிய கோபம் திரண்டு கொண்டிருந்தது.

“ அம்மா அப்பா செத்து கருமாதி கூட முடிஞ்சிடுச்சு,” என்னோட வாங்க என்று கையைப் பிடித்து இழுத்து அப்பா படத்துக்கு மாலை போட்டு பொட்டிட்ட சிறிய பூசை மேடையருகே இழுத்துச் சென்றேன். அவள் என் இழுப்புக்கு தயாராகபடி தள்ளாடி பின் தொடர்ந்தாள். பார்வை நுழைவாயிலிருந்து விலகியிருக்கவில்லை. அவளைப் படத்தினருகே நிறுத்தினேன். காமாட்சியம்மன் விளக்கொலியில் அப்பாவின் முகம் வெளுப்பேறி அசைந்துகொண்டிருந்தது. திரி சிறிதாகிப் போன கரியச் சாம்பல் பென்சிலில் நுனியை நினைவு படுத்தியது, சிறு குழந்தையின் சிவந்த கால் சிறுவிரலாய் சூம்பி, நிமிர்ந்தாடியது தீபம். அது கொழுந்து இலைபோலும் காற்றின் அசைவுக்கு ஆடிக்கொண்டிருந்தது. அப்பாவின் நெற்றியில் குங்குமப் பொட்டு உப்பிச் சிதறி- சிதறிய இடம் சிலந்தி வலைபோலப் பின்னலிட்டிருந்தது. கொழுந்தின் பிம்பம் நெஞ்சுப் பகுதியில் விழுந்துத் துலங்கியது. வாடிய பூக்களின் வாடை சுவாசத்தை உரசியபடி இருந்தது, உதிரியாக வாடாத மலர்களின் வாசம் கொஞ்சம். கசிந்து நாசிக்குள் வலிந்து நுழையும் ஊதிபத்திப் புகை மரண வாசத்தின் எச்சத்தை நினைவுகூர்ந்தது. படத்தின் கீழ் சிதறிய உதிரிப் பூக்கள் வண்ணக் கோலமிட்டிருத்து. எரிந்த சாம்பலான திரியிடமிருந்து கருகும் வாடையும் இணைப்பாக. அப்பா சன்னலற்ற சிறிய அறைக்குள் அடைக்கலமாகியிருந்தார். இரு மாதங்களுக்கு முன்னால் வரை வீடு முழுதும் வியாபித்திருந்தவர். என்னை அசைத்தது. ஒவ்வொருமுறையும் அந்த அறையைக் கடக்கும் போதும் , நிழலாகிப் போன அப்பாவின் பிம்பம் கண்களில் படும்போது அவரின் இழப்பு மெல்ல மெல்லக் கறைந்து சோகம் வற்றியிருந்தது. ஆனாலும் கண்மாறாமல் பார்க்கும் தருணங்களில் எனக்குள் ஓர் அதிர்வு ஊடுருவி கடந்து போனது. அம்மா கைகளைத் தரையில் ஊன்றாமல், நின்ற நிலையிலிருந்தே சரிந்து அப்படியே சம்மனமிட்டு அமர்ந்தாள். ஐம்பதை நெருங்கியிருந்தவள் கைத்தாங்கல் இல்லாமல் அமர்வதை அதிசயமாகப் பார்த்தேன். என்னை நான் மறந்து சலனமற்று நின்றேன், அவளின் சரிவு என்னைச் சுய நினைவை மீட்டது. சட்டென உடைந்து அழுதாள். அப்போது அம்மா அப்பாவின் இறப்பை அங்கீகரித்த நிறைவு எனக்கு.

சற்று நேரத்தில் சோகத்தைத் துறந்து, மீண்டும் எழுந்து வாசற்பக்கம் வந்து வராந்தா கேட்டை ரிமோட் கொண்டு சாத்தியபடி. “அப்பா வந்துட்டார்” என்றார். எனக்கும் மீண்டும் குழம்பியது.

அப்பா இறந்து ஏழாம் துக்கம் வரை உடனிருந்து மீண்டும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். தங்கைக்கும் அதே நிலை. விடுப்பெடுத்துக்கொண்டு கருமக்கிரியைக்கு வந்துவிட்டு மூன்றாம் நாள் திரும்பிவிட்டோம். அம்மா தன்னந் தனியாளாகிப் போனாள். எல்லா அறையும் மனித சுவாசமற்று முடங்கிய நிலை. நிசப்தம் அறைக்குள் அடங்கிக் கிடந்தது. நடமாட்டம் அற்றுப்போன , வெற்றுப் பொழுதுகள். பேச்சுக்குரல் ஒலிக்காத அறைகள். வேறு வழியில்லை . துணையில்லை தனிமையாகத்தான் காலம் தள்ளவேண்டும். ஒற்றையாளாய்ப் போன அம்மாவின் இருப்புக்கு மாற்றாலாக வேறு வழிதேட விழைந்துத்கொண்டிருந்தது மனம். வேலை நேரத்தில் குறுக்கே விழும் அம்மாவின் நினைவுகளின் சுமை தாங்காமல் உடன் அழைத்துப் போக எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. அவள் பிடிவாதமாய் இருந்தாள். இடம் பெயரப் போவதில்லை என்ற திட்டவட்டம் அவளிடம். தங்கையும் உட்காரவைத்து பாடம் நடத்தினாள். மூனு பேரும் கோலாலம்பூர்ல ஒரே வீட்ல இருந்திடலாம் என்றாள். எங்கள் கோரிக்கையைச் சீர்தூக்கிக்கூடப் பார்க்காமல் உடனடியாக, ‘அவரோடையே இருக்கப்போகிறேன்,’ என்றாள் மெல்லிய குரலில்.”அவரோட எப்படிம்மா .இருப்பீங்க? ஒனக்குப் பைத்தியாமா பிடிச்சிருச்சு?” என்று கேட்கும் அளவுக்கு அவளின் பிடிவாதம் சினத்தைக் கிளர்த்திவிட்டிருந்தது. “ இல்லாதவரோட எப்படி இருக்க முடியும்?

“ காலையிலேர்ந்து அவரு வேலவுட்டு வர வரைக்கும் இல்லாதவரோடதான் இத்தனி நாள் இருந்திருக்கேன்” என்றாள், எங்கள் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல்.

“ இப்போ, நெரந்தரமா இல்லியேம்மா…” இதைச் சொல்லும் போது எனக்குள் கருணையற்ற இழை உருண்டோடியது. என் கருணையின்மை எனக்கும் பிடிக்கவில்லை. அதற்காக சற்று வெட்கினேன். அம்மா உட்செலுத்திய பிடிவாதத்திடன் பிரதிபலிப்பின் உணர்வலைகள்.

“ஒங்களுக்குத்தான் அப்படி,” என்றாள் தணிந்த குரலில். எங்களுக்குள் அந்த வார்த்தைகளின் பொருளைத் திணிக்கும் முயற்சியில். நாங்கள் புண்பட்டது அவள் பொருட்படுத்தயிருக்க மாட்டாள் போலும்.

அன்று இரவு அம்மாவின் அறையில் படுக்க ஆயத்தமானேன். படுக்கையில் ஓதிப்பார்க்கலாம். அப்பாவின் ஆடைகள் நிறைந்த அலமாரியின் ஒரு கதவு திறந்திருந்தது. அப்பாவின் துணிமணிகளை என்ன செய்வது என்ற உதிரி எண்ணம் என்னை மெல்லத் தொந்தரவு செய்தது. அவற்றுக்கான் உடல் இல்லாமல் அவை நிராதரவற்றதாய் உள்மனதில் ஓடியது! என்ன செய்யமுடியும் அவற்றை? நினைவின் எச்சமாயிருப்பதைத் தவிர? விளக்கை அணைத்தேன். அம்மா உள்ளே வந்து விளக்கைப் போட்டாள். அப்பாவின் சட்டை சிலுவாரை ஐயர்ன் செய்து, குழந்தை போல ஏந்திவந்து அலமாரிக்குள் பவ்வியமாய்த் தொங்கவிட்டாள். அவளின் செயல்பற்றி கேட்டு அர்த்தமற்ற பதிலில் மேலும் குழம்பத் தயாராயில்லை! ஆனால் அச்செயல் என்னை வெகுவாகக் கலவரப்படுத்தியது.

நான் அப்பா இடத்தைல் சாய்ந்து படுத்திர்ந்ததைக் கண்டவள் , அதிர்ந்து பார்த்து , “ஒன் ரூமுக்குப் போ’” என்றாள். “ நீ தனியா படுப்பியேம்மா” என்றேன். “நான் தனியா இல்லை.” என்றாள் . அவள் குரலில் திண்ணமான அழுத்தம். என்னுள் விருட்டெனப் பீதி ஊர்ந்து ஏறிச் சிலிர்த்தது.

அம்மா மனம் சிதறியிருப்பதான வலிமையான சமிக்ஞை அது! அவளை ‘மறுநடவு’ செய்வது அத்துணை எளிதல்ல என்று பட்ட்டது!.

நாளை மறுநாள் கே.எல் திரும்ப வேண்டும். உடனடியாக அவளை ஒரு சைக்காட்ரிசிடம் கொண்டு போக, டாட்கர் தோழியின் உதவி கேட்டேன். சைக்க்காட்ரிஸ்ட் மறுநாளே அப்போய்ண்ட்மண்ட் கொடுத்திருந்தார்.

“ஏன் டாக்டரப் பாக்கணும்? நான் சுய நெனைவோடத்தான் இருக்கேன்,” என்றாள்.

“இல்லம்மா, நாங்க நிம்மதியா வேலை செய்யணும். நீங்களும் இங்க ஆரோக்கியா இருக்கணும். அந்த உறுதி எங்களுக்கு வேணும். எங்களுக்காக வாங்க,” என்று கைப்பிடித்துக் கெஞ்சினேன் .ஒரு மன சிகிட்சைக்காகக் கொண்டு போவது அம்மாவுக்குத் தெரிந்துவிடக் கூடாது.

“அவர் இந்த வீடல்தான் இருக்கார் என்னோட, எனக்கென்ன வேறு வேண்டிக்கெடக்கு?.”

“பரவால்ல இருக்கட்டும்.” நான் சமரசத்துக்கு வந்ததும் அவள் உடன் பட, அழைத்துச் சென்றேன். டாக்டரிடம் முன்னமேயே அம்மாவின் விநோத போக்கைப் பற்றி விளக்கிச் சொல்லி வைத்திருந்தேன்.

இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு, அவளுக்கு (Schizophrenia) மனச்சிதை துவக்க நிலையில் இருக்கலாம் என்று சந்தேகப் பட்டார் . கணவரின் மறைவை உள்வாங்க சிலருக்கு நாள் பிடிக்கும். பல காலம் புரிந்துணர்வோடு வாழ்ந்த தம்பதிகள். இப்போதைக்கு மருந்து மாத்திரை வேண்டாம், இது கொஞ்ச காலம்தான் இருக்கும், ஆறேழு மாதம் ,பின்னர் மெல்ல மெல்ல இல்லாமல் போக வாய்ப்புண்டு, அஞ்சவேண்டியதில்லை,” என்றார்.

அம்மா மறைவாக இருந்த தருணத்தில், “வேறு பாதிப்பு ஏதும் இருக்குமா?” எனறு கேட்டதற்கு ”அவர்களால் யாருக்கும் தொல்லை இருக்காது, அவர்களே சுய உளச்சிகிட்சையில் ஈடுபடவேண்டும், அதாவது, எனக்கொன்றுமில்லை என்ற சுதாரித்துப் பழகவேண்டும்,” என்று கூறிவிட்டார். மனம் சற்றே ஆறுதலடைந்தது. ஆனால் அந்த சுய சிகிட்சை முறையை அம்மா எப்படி மேற்கொள்வாள்? அப்பாவோடு வாழ்வதான பிரக்ஞையை எப்படிக் கலைப்பது? எப்படி மீட்பது?

அம்மாவை ஒற்றையாய் வீட்டில் விட்டு விட்டு வருவதற்கு இருவருக்குமே மனம் ஒப்பவில்லை. அவரை உடன் அழைத்துக் கொண்டுபோகும் சாத்தியக் கூறுகள் பலனளிக்கவில்லை என்பதால் எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை. அந்தத் தருணத்தில்தான் தங்கை சொன்னாள்.

“அம்மா, அப்பாவோடு வாழ்வதாக கற்பனை செய்து கொள்கிறாள். அப்பா தன் நிழலை இறக்கும் போது எடுத்துச் செல்லவில்லை போலிருக்கிறது. அம்மா அவரோடு வாழ்வதாக கற்பனையே செய்து கொள்ளட்டுமே. அது அம்மாவுக்கு திருப்தியளிக்கிறதென்றால் நாம் ஏன் அதைக் கெடுக்க வேண்டும்? இப்படியே விட்டு விடலாம்,” என்றாள்.

எனக்கு அது சரியாகவே பட்டது. ஆனால் ஒரு நிழலோடு வாழ்கிறாள் என்ற நினைவு என்னைச் சிதைத்தது. அது என்ன வாழ்க்கை? அப்படி என்ன சுகம் அதில்? கற்பனை வாழ்க்கை மட்டுமே நிறைவைத் தர முடியுமா? என்ற பல புதிர்கள் என்னுள் மொய்த்துக் கிளறின. சற்று சுதாரித்துபோது தாய்மை உணர்வின் கரிசனம் சமன் செய்தது.

நாங்கள் கிளம்பி விட்டோம். அம்மா எங்கள் பிரிவுக்காகக் கண்கலங்கவில்லை. எங்களுக்குத்தான் அவளை தனித்து விட்டதில் குற்றமனம் இருந்தது.

அம்மாவின் போக்கு தொடக்கத்திலிருந்தே எங்கள் விழிகளை உயர்த்தின.

கரும்மக்கிரியை அன்று நள்ளிரவில், தாலி அறுக்கும் சடங்கு நடைபெற ஏற்பாடாகி இருந்தது.

அம்மா தலை நிறைய பூவைக்கப்பட்டு, முகத்தில் மஞ்சலிடப்பட்டு, நெற்றி நிறைய குங்குமப் பொட்டிட்டு, தாலிக் கயிற்றில் மஞ்சள் தோய்த்து, கல்யாணக் கூரை உடுத்தி, மலர் மாலை அணிவித்து நடுக்கூடத்துக்கு அழைத்து வரப்பட்டாள். எல்லாப் பெண்களும் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டு காத்திருந்தனர். அம்மா நடுக் கூடத்துக்குக் கொண்டு வரப்பட்டு அமர்த்தும் வரை பிரக்ஞையற்று ஒன்றுமே பேசவில்லை. ஆனால் தாலி நீக்கும் சடங்கு நடைபெறும் வேளையில் அதனை வன்மையாகத் தடுத்தாள். நான் இப்படியே விட்டு விடுங்கள், அவர் என்னோடு இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.” என்று கூறிவிட்டாள்.

ஓரிரு குரல்கள் எதிராக எழுந்தன. “தாலி நீக்குவதா இல்லையா என்பதை நான் தான் முடிவெடுக்கணும். நீங்க இல்லை,” என்றாள் காளியாகி. எல்லாரும் வாயடைத்துப் போனார்கள்.

வேலை நேரத்தில் அம்மாவின் தனிமை நினைவு ஆற்று வெள்ளமெனச் சுழித்து சுழித்து ஓடியது. அம்மா ஆரோக்கியமாக இருக்கிறாள் ஆனால் அந்த புகை மூட்ட வாழ்க்கைதான் குறுக்கே படிந்த வண்ணம் இருந்தது.

அம்மா அவரைத் தேடித் தேடி தொலைந்து கொண்டிருக்கிறாள். கடந்து போன வாழ்நாட்களில் மிச்சத்தில் தன்னை தோய்த்துக்கொண்டிருக்கிறாள். அன்னியோன்ய தாம்பத்ய பந்தத்தின் எச்சம் அம்மாவின் மனதுக்குள்ளிருந்து இன்னும் விடுபடவில்லை. அந்த வாழ்வை நேசிக்கிற அவளின் நம்பிக்கை ஒரு பெரும்புதிராய் ஊதிப் பெருகிக்கொண்டிருந்தது. அதை அவள் பரவசம் அடைகிறாளா ஏக்கப் பெருமூச்சு செரிகிறாளா என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டிருந்தது. அம்மா அந்த நினைவுகளின் தடங்களில் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒரு நினைவு குறுக்கு வெட்டாக ஓடினாலும், அவளின் அந்த விநோத தரிசனம்’ எங்களை இம்சித்தவாறுதான் இருந்தது.

தொலைபேசி அவளின் அப்போதைய நிலவரத்தை அறிந்துகொள்ள உதவியது. ஆனால் அம்மா ஒரு முறையேணும் தொடர்பு கொண்டதில்லை.

மூன்று மாதங்கள் கழித்த ஒரு விடுமுறையில் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியிருந்தோம். என்னை வெளிநாட்டில் ஒராண்டுகாலம் ஒரு பயிற்சிக்கு அனுப்ப என் வேலையிடம் என் அனுமதிக்காகக் காத்திருந்தது. அம்மாவின் ஆசிக்காக இந்த விடுமுறையைப் பயன் படுத்த நினைத்தேன்.

“நீ அவரைக் கேளு, அவர் என்ன சொல்றார் அதன் படி நட.” என்றாள்.

“நீங்கதானம்மா சொல்லணும், அவர் எப்படிம்மா அனுமதி கொடுப்பார்? என்றேன்.

“எதா இருந்தாலும் இவ்வளவு நாளும் அப்பாகிட்டதான சொல்வீங்க, அப்படித்தான் இதுவும்,” என்றாள். ஒரு அதிர்வு மனதில் நிலைகொண்டது. நான் நிலைகுலைந்தேன். அம்மா மாறவில்லை. அப்படியென்றால் அம்மா வேறொரு மனுஷியாக…! அம்மாவிடம் ஏன் இந்த இயந்திரத் தனம்? திரும்பத் திரும்ப பழைய நினைவில் தோய்ந்து ஊறி……..

நான் உற்று நோக்கினேன் எனக்கு அவள் வெற்று உருவம் போலத்தான் காட்சியளித்தாள். ‘அம்மா’ என்ற அந்த உயிரியல் தோற்றம் அற்றவராக. அவள் முகத்தில் எண்ணற்ற முறை கோபத்தையும் அன்பையும் அறியாமையும் நெகிழ்வையும் தன்னம்பிக்கையையும் அச்சத்தையும் பார்த்திருக்கிறேன். இப்படி ஒரே உணர்வைத் தேக்கி நிலைத்த முகத்தை பார்த்ததில்லை. அப்படியோர் ஒர் அர்த்தமற்ற தோற்றம்.

அம்மாவை மீண்டும் டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போக வேண்டித் திட்டமிட்டேன். ஆனால் அவள் அதற்கு உடன்படப்போவதில்லை. முதல் முறை கொண்டு சென்ற போது டாக்டரின் சிகிட்சை அவள் விரும்பவில்லை. அப்பாவின் இல்லாமையை உணர்த்த நினைத்த அந்த உரையாடலை அவள் வெறுப்பதை முகச் சமிக்ஞை வெளிக்காட்டியது. வெளியே வந்ததும் அவளின் எதிர்க்குரல் இன்னும் நினைவில் ஆடியது.

அப்பாவிடமிருந்து அம்மா ஒரு கணம்கூட விலகியதில்லை.

திருமணமோ, பிறந்தநாளோ, பேரங்காடியோ ஒரு ஜோடிப் புறாக்களைப் போலத் திரிந்தார்கள். இருவருக்குமான புரிந்துணர்வின்மை ஒரு இரவோடு காலாவதியாகிவிடும். அதே பழைய சிரிப்பு, அதே பழைய நேசம் கால் கோலிட்டுவிடும் மறுநாள் காலையே.

நான் தங்கையிடம் சொன்னேன். அம்மா அப்படியேத்தான் இருக்காங்க. அப்பாவ அனுமதி கேளுங்கிறாங்க. அவர் எப்படி அனுமதி கொடுப்பார்? பைத்தியக் காரத் தனமா இருக்கே…”

“பரவால்லா, அம்மா பார்க்க, நீ அவர் படத்துகிட்ட நின்னு கேட்டுப்பார்’,” என்றாள்.

“ஒனக்குமாடி…பிடிச்சிருச்சு,” அவள் சிரித்தாள். “அம்மா திருப்திக்காக” என்றாள்.

உடன் படாத மனநிலையோடு அன்று சாயங்கால பூசையறைக்குச் சென்றேன். அப்பாவின் படம் நீக்கப்பட்டிருந்தது. அப்பா அம்மாவின் படுக்கையறைக்கு இடம் மாறி இருந்தார். மாலையும் குங்குமப் பொட்டும் நீக்கப்பட்ட படம். அகல் விளக்குக் கூட இல்லை. என் கோரிக்கை அம்மாவின் காதில் விழும்படி அப்பா படத்தின் முணு முணுமுனுத்தேன். ஒரு கணம் மெல்லிய சிலிர்ப்பு உள்ளே இழையோடி அசைத்தது. அப்பாவின் படத்தை கூர்ந்து நோக்கும்போது உண்டாகும் உணர்வு என்று விட்டுவிட்டேன். அம்மாவின் முகம் மெல்ல மலர்ந்திருந்தது.

அன்று இரவும் அம்மா தனியாகத்தான் படுத்திருந்தாள். என் துணையை அவள் விரும்பமாட்டாள் என்று உறுதியாகத் தெரியும்.

எனக்கு தூக்கம் வரச் சற்று நேரமானது. தங்கை பக்கத்தில் உறங்கிவிட்டிருந்தாள். அப்பாவிடம் பேசியதும். அவரின் பதில் தரமாட்டார் என்ற கேலி நினைவும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

பின்னர் நான் உறங்கிப் போன பிரக்ஞை இல்லை.

திடீரென்று, ஒரு வெடிச்சத்தம் ஒலித்ததுபோல இருவரும் ஒரே நேரம் திடுக்கிட்டு விழித்துக் கொண்டோம். தூண்டில் முள்ளில் மாட்டிய மீனின் கண்களாய் மிரண்டு அகலத் திறந்திருந்தன தங்கையின் விழிகள். மெல்லிய வியர்வை கழுத்தில் மின்னியது. எனக்கும் அதே நிலை. அறை முழுதும் பீதி. நள்ளிரவு கடந்துவிட்ட அகால வேளை. நிசப்தத்தின் ஆதிக்கமும் இரவின் அசைவின்மையும், ஒன்றிணைந்திருந்தது. . பதறியடித்து ஓடிவந்தவளாய்

அவளிடம் மேல் மூச்சு கீழ் மூச்சு விரைந்தது. அலைபோல நெஞ்சு ஏறி இறங்கியது. மூச்சிக் காற்றின் தணல் முகத்தில் அறைந்திருந்தது. கையை மெல்ல நகர்த்தி என் இடது கரத்தை அழுந்தப் பற்றியிருந்தாள். நான் என் தங்கையைப் பார்த்தேன். திரும்பி அவளும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு கணம் ஒருவரை ஒருவர் கண்மாறாமல் சிலையைப் பார்ப்பது போல பார்த்தவண்ணம் இருந்தோம். அவள் பார்வையில் மிரட்சி என்னை உலுக்கியது.

“அப்பா……” என்றாள் சுவர்ப் பக்கம் கைநீட்டி, அரண்ட சன்னமான குரலில். கண்களை அறை முழுதம் அலையவிட்டபடி. எனக்கு உடல் உதறியது. அடிப்பாதம் சில்லிட்டு உச்சந்தலைவரை ஊர்ந்து ஏறி சிலிர்த்தது. நா வரண்டு மேலண்ணித்தில் ஒட்டாமல் “எனக்கும் தெரிந்தார்” என்றேன்.

சொற்பொருள்:

1. வராந்தா கேட்: முன்வாசல் கிராதி

2. தானியங்கி சாவிக்கொத்து : ஆண்டோமேட்டிக் (விசை வழி இயங்கும் திறக்கும் மூடும் கருவி)

3.குருகும்: கருகும் என்றிருக்கவேண்டும்

4.சிலுவாரை ஐயன் செய்து: கால்சட்டை (பேண்டுக்கு ஸ்திரி போடுதல்)

5.அதே பழைய நேசம் கால் கோலிட்டு விடும் அபாயம்: பழைய உறவு மீண்டும் வலிமையாவது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *