தப்புக்குத் தண்டனை…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 5,883 
 
 

” நீங்களா கத்தியை எடுத்து ஒருத்தருக்கொருத்தர் குத்திகிட்டு சாகப் போறீங்களா.! …இல்லே … நானே இந்த துப்பாக்கியால உங்க ரெண்டு பேரையும் சுட்டு அந்த காரியத்தைச் செய்யவா. ..? ” – கேட்ட…..

வரதராசனுக்கு வயது 50 .சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். வலது கையில் ரிவால்வர் அசத்தலாக சம்பந்தப்பட்டவர்களைக் குறி பார்த்து இருந்தது.

அவருக்கு எதிரே உள்ள டீபாயில்…. பளபளவென்று இரண்டு கத்திகள். அதேப் பக்கத்தில் ….

நிர்மலா அவசரக் கோலத்தில் புடவையை அள்ளிப் போர்த்திருந்தாள்.

அவளருகில் நின்ற சுரேஷ்… கீழே பேண்ட் மாட்டியதோடு சரி. சட்டை, பனியன்களைக் கையில் அள்ளி வைத்திருந்தான்.

இருவர் முகங்களிலும் சாவை அருகில் பார்க்கும்… சவக்களை.!!

வரதராசன்…. இப்போதுதான் இவர்களைக் கட்டிலில் கையும் மெய்யுமாகப் பிடித்தார். துப்பாக்கியைக் காட்டி அவர்களை அப்படியேக் கூட்டி வந்து நிறுத்தி…. கேள்வி.

” ம். .ம். .. சொல்லுங்க. ..? ” அதட்டினார்.

” அத்தான். ..! ” நிர்மலா பயந்து நடுங்கினாள்.

”ச்ச்சூ ! அந்த வார்த்தையை உச்சரிக்காதே. அப்படி அழைக்க உனக்கு அருகதை இல்லே. ..” – வரதராசன் தன் நிலையிலிருந்து கொஞ்சமும் மாறாமல் தெளிவாய்ச் சொன்னார்.

அடுத்து… அவள் வாயைப் பொத்திக் கொண்டு செருமினாள்.

சுரேஷ் பொறியில் மாட்டிக்கொண்ட எலியாகத் தத்தளித்தான்.

” சா. ..சார் !….. மே …மேடம்தான் என்னை. ..” தடுமாறினான்.

” பொய் ! இவன்தான் என்னை. ..” நிர்மலா குறுக்கிட்டாள்.

” மன்னிக்கனும் மகாராணி ! மகாராஜா ! எனக்கு யார் மேல் தப்பு இருக்கு, எங்கே, எப்படி…. அது இருக்குன்னு நல்லவேத் தெரியும். ஒருத்தர் மேல ஒருத்தர் குத்தம் சுமத்தி என்ன ஏமாத்த வேணாம். ” கறாராக சொன்னார்.

”அத்தான் ! இந்த ஒரு தடவை மட்டும் என்னை மன்னிச்சுடுங்க. ..” நிர்மலா கண்ணீரைக் கூடத் துடைக்காமல் கெஞ்சினாள்.

” மன்னிக்கிறதா. .. உன்னையா. .” வரதராசனிமிருந்து வார்த்தைகள் வெறுப்பாக வந்தது.

தொடர்ந்தார்.

” நிர்மலா ! எனக்கு வயசு 50 .உனக்கு 25. உனக்கும் எனக்கும் முடிச்சிப் போட்டது நான் செய்ஞ்ச மகா தப்பு..!! உணர்றேன் !. நான், உன்னை பெண் பார்க்கும்போதே. . …உங்களுக்கும் எனக்கும் சரிபடாதுன்னு சொல்லி மறுத்திருக்கனும். நான் எனக்கு ஏத்தவளை பார்த்து முடிச்சிருப்பேன். ஆனா. . நீ என்னைப் பார்த்தியோ இல்லையோ. . என் பணத்தைப் பார்த்து உடனே சம்மதிச்சுட்டே. அப்போதே இந்த கிழவனுக்குத் துரோகம் செய்து சொகுசாய் வாழலாம்ன்னு தீர்மானம் பண்ணிட்டே. நானும் உன் மனசு தெரியாம கழுத்துல தாலியக் கட்டிட்டேன். நிர்மலா. ..! நீ ஒருத்தனோட பழகி இருந்தாக்கூட நான் மறந்து, மன்னிச்சி …உனக்கு விருப்பம் எப்படியோ அப்படி வாழுன்னு சொல்லி விருப்பப்பட்ட ஆளோட உன்னைச் சேர்த்திருப்பேன். ஆனா. . நீ , இன்னைக்கு ஒருத்தன், நாளைக்கு ஒருத்தன்னு பலபேர்.! உன்னை மன்னிச்சா அந்த ஆண்டவன் என்னை மன்னிக்கமாட்டார். ” நிறுத்தினார்.

‘ சாவு நிச்சயம் ! ‘ நிர்மலா அவரைப் பயத்துடன் பார்த்தாள்.

” இதோ நிக்கிற பையன் கல்லூரி படிக்கிறவன். அவன் செஞ்ச பாவம் கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு வந்தான். நீ இவனை அங்கே இருந்து மடக்கிப் புடிச்சு இழுத்துக்கிட்டு வந்துட்டே. எனக்கு எல்லாம் தெரியும். உன் முதுகு மேல எப்போதுமே எனக்கு ஒரு கண். எங்கே ,எப்படின்னு…. உன்கிட்ட அகப்பட்டவன் பேரையெல்லாம் பட்டியல் போட்டு சொன்னா தங்கமாட்டே….. ”

” சார். .! அப்போ என்னை மன்னிச்சுட்டீங்களா. .? ” சுரேஷ் அப்பாவியாய்க் கேட்டான்.

” நீ ஒரு வயசு பொண்ணு கூப்பிட்டு வந்திருந்தா தப்புன்னு சொல்லமாட்டேன். ஒரு பொம்பளைக் கூப்பிட்டு வந்திருக்கே. மறுத்திருந்தா…. யோக்கியன். அடுத்தவன் மனைவி வலிய வந்தாலும் அவளைத் தொட்டது தப்பு. ” நிறுத்தினார்.

சுரேஷ் முகம் பொசுக்கென்று விழுந்தது.

” ஆக. .. நீங்க ரெண்டு பேரும் தப்பு செஞ்சிருக்கீங்க. நான்….. ஒன்னு, ரெண்டு, மூணு எண்ணி முடிப்பேன். அடுத்த வினாடி… ஆளுக்கொரு கத்தியை எடுத்து ரெண்டு பேரும் ஒரே நேரத்துல ஒருத்தரை ஒருத்தர் குத்தனும், சாவனும் ! ”

‘ பயங்கரமான தண்டனை. .! ‘ நினைத்துப் பார்க்கவே இருவருக்கும் நெஞ்சு நடுங்கியது.

” நானே உங்களைத் துப்பாக்கியால சுட்டு சாகடிக்கலாம். ஆனா. .ஜெயிலுக்குப் போவேன், கம்பி எண்ணுவேன், தூக்கு தண்டனை கிடைக்கும். தப்பு செய்ஞ்சது நீங்க. நான் ஏன் தண்டனை அனுபவிக்கனும். ? ”

‘ சரியான கேள்வி ! ‘ சுரேஷும் நிர்மலாவும் திருதிருவென்று விழித்தார்கள்.

” கத்தியை எடுத்து என்மேல திடீர்ன்னு பாய்ஞ்சுடலாம்ன்னு மட்டும் கனவு காணாதீங்க. கத்தியைவிட துப்பாக்கிக்கு வலிமை அதிகம். பொட்டு பொட்டுன்னு சுட்டுடுவேன். ”

‘ கிழவன் பலே கில்லாடி ! ‘ – இருவர்க்குள்ளும் ஓடியது.

” நிர்மலா !…. நான் பலே கில்லாடிதான். வயசுப் பொண்ணு, தவற வாய்ப்புண்டுன்னு நெனச்சி… உன் மேல கண் வைச்சே கலியாணம் முடிச்சேன். நீ தப்பு செய்ய ஆரம்பிச்சதுமே. . கையும் மெய்யுமாய் மாட்டனும்ன்னு துப்பாக்கியோடு நிழலாய்ப் பின் தொடர்தேன். இன்னைக்கு வசமா மாட்டிக்கிடீங்க…” நிறுத்தினார்.

”அத்தான். .! எங்க ரெண்டு பேரையும் மன்னிச்சு விட்டுடுங்க. நாங்க கண்காணாத இடத்துக்குப் போய் பொழைச்சிக்கிறோம். ! ” நிர்மலா கெஞ்சினாள்.

” இதுவும் நல்ல யோசனைதான். செய்யலாம்.! கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டாள். திருப்தி இல்லே…. ஓடிட்டாள்ன்னு ஊர் சொல்லும். வயசுப் பொண்ணைக் கட்டிக்கிட்டான்னு கேவலமா பேசின பூமி. இந்த அவமானம் தூசு. இல்லே. .. அதுக்கு இது தண்டனைன்னு கூட நினைச்சி சமாதானமாகலாம். ஆனா. . நிர்மலா நீ எனக்குத் துரோகம் செய்ஞ்சா மாதிரி இந்த சுரேஷுக்கு செய்வே. காரணம். .. நீ ஆம்பள ருசி எடுத்து அலைய ஆரம்பிச்சவள். எவன்கிட்டேயும் ஒழுங்கா வாழ மாட்டே. பாவி . .! படிக்கிற பையன்களாய்ப் பார்த்து கெடுத்தியேடீ….! உனக்கு என்ன உடல் கொழுப்பு..? ”

நிர்மலா தலை கவிழ்ந்தாள்.

” சுரேஷ் ! என்ன. ..! . நான் ஒண்ணு, ரெண்டு, மூணு எண்ணவா. ..? ரெடியா. .? ”

” சொல்லுங்க சார் ! மொதல்ல நான் இவளைச் சாகடிச்சிட்டு ஜெயிலுக்குப் போறேன். இந்த மாதிரி பொம்பளைங்க ஊர் உலகத்துல வாழ்றது தப்பு. வாழ்ந்தால் என்னைப் போல வயசுப் பசங்களைக் கெடுத்திடுவாளுங்க. ” ஆத்திரப்பட்டான்.

” வெரிகுட் ! நீ தெளிஞ்சுட்டே. ! ” என்ற வரதராசன், ” ஒண்ணு…….. ரெண்டு……..மூணு. …! ” முடித்தார்.

சுரேஷ் , நிர்மலா. ..இருவரும் ஒரே நேரத்தில் கத்திகளை எடுத்தார்கள்.

‘ எவர் குத்து முதல் குத்து. .!’ யோசிக்கும்போதே … கண்ணிமைக்கும் நேரத்தில் சுரேஷ்தான் நிர்மலா வயிற்றில் ஆழமாகப் பாய்ச்சினான்.

” ஐயோ. .! அம்மா. ..! ” சாய்ந்தவளை விடாமல் குத்தினான்.

அவள் உடல் துடித்து, ஓய்ந்தும்… நிறுத்தவில்லை. ஆத்திரம். ..!!

” நிறுத்து ! ” வரதராசன் அதட்டினார்.

அதன் பிறகே அவன் சுய நினைவிற்கு வந்தான்.

வரதராசன் எழுந்து சுரேஷ் அருகில் சென்றார்.

” கத்தியை என்கிட்டே கொடுத்துட்டு ஓடு. .” இடக்கையை நீட்டினார்.

” சா. ..சார். .! ” அவன் வெளிறினான்.

” எந்த பெண் அழைத்தாலும் கிழவனும் வருவான். நீ வயசுப் பையன். வந்தது தப்பில்லே. நீ வாழ வேண்டியவன்… ஓடு. உன் தப்புக்கு இது தண்டனையாய் இருக்கட்டும். நிர்மலாவைச் சுட்டு உன்னை விட்டிருக்கலாம். உனக்கும் தவறை உணர வைக்கணும் என்கிறதுக்காகத்தான் இப்படி தண்டனை. இந்த கொலை…. நீ வாழ் நாள் முழுக்க அடுத்வேளைப் பத்தி நினைக்காதிருக்கும். கொடு.! ” கையை நீட்டி கத்தியை ப் பற்றினார்.

” சார். .!… ” சுரேஷ் ..தழுதழுத்து வரதராசன் கால்களை பிடித்து குலுங்கி குலுங்கி அழுதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *