தன் வினை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,146 
 
 

மகன் ஜெகன் வீட்டை விட்டு வெளியேற…. இதயம் வலித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம்.

‘என்ன கேள்வி..? என்ன வலி.?” நினைக்க நினைக்க முகமெங்கும் வியர்வை.

சிவகாமி, கணவரின் வேதனை உணர்ந்து அருகில் வந்தாள்.

“நம்ம புள்ளை தானே. ! பேசினாப் பேசிட்டுப் போறான். மன்னிச்சுடுங்க, மறந்துடுங்க…” ஆறுதலாகச் சொல்லி அருகில் அமர்ந்தாள்.

“இ… இல்லே சிவகாமி. அவன்…..” தணிகாசலம் திக்கித் திணறினார். அவருக்கு அதற்கு மேல் பேசமுடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது மனைவி மடியில் தலை வைத்து அப்படியே சோபாவில் சுருண்டு படுத்தார்.

சிவகாமி கணவரை ஆதரவாக அணைத்துத் தட்டினாள்.

அதே சமயம்…. எதிர் சுவரில் இருந்த புகைப்படத்தில் மாமனாரோடு இருந்த மாமியார் இவளைப் பார்த்துச் சிரித்தாள்.!!

தணிகாசலம் குடும்பம் ரொம்பப் பெரிசு. ஒரு அக்காள். அடுத்து தணிகாசலம், அப்புறம் தொடர்ச்சியாக நான்கு தங்கைகள் , .கடைசியில் இரண்டு தம்பிகள்.

அது குடும்பக் கட்டுப்பாட்டுக்கு முன்னுள்ள காலம். இஷ்டத்திற்குப் பெற்றுக் கொண்ட நேரம். சொத்து பத்துகளை விட மக்கள் செல்வம்தான் மகத்தான செல்வன் என்று சுகித்திருந்த காலம்.

குழல்னிது யாழினிது இன்பம் என்பர் தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்…..

குரலுக்கேற்ப அவர்கள் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அப்புறம்தான் மக்கள் தொகை பெருக்கம், கட்டுப்பாடு.!

தணிகாசலம் வீட்டில் சாப்பாட்டுக்கு கவலை இல்லை. கிராமத்தில் அவர் அப்பா மிராசு. சில ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்.

தணிகாசலம் பட்டப்படிப்புத் தொடும்போது அக்காவிற்குத் திருமணம். பட்டப்படிப்பு முடித்து பக்கத்து நகரிலுள்ள தாலுக்கா அலுவகத்தில் ஆள் அரசாங்க வேலைக்குச் சென்றபோது , தங்கைகளெல்லாம் பத்தாம் வகுப்புகளுக்குக் கீழ். தம்பிகள் பள்ளியைத் தொடும் வயசு இல்லாதவர்கள்.

தணிகாசலத்திற்குக் காலாகாலத்தில் திருமணம். அடுத்த பத்தாம் மாதம் ஆண் குழந்தை ஜெகன். அதற்கடுத்து மூன்று வருட இடைவெளியில் சுதன் என்று இரண்டு பிள்ளைகள். இவர்கள் மூன்றாம் வகுப்பு, ஒன்றாம் வகுப்பு செல்லும்போது .. இருந்த சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்று இரண்டு தங்கைகளுக்குத் திருமணம். அடுத்தத் திருமணத்திற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும்போதுதான்….. சிவகாமி சுதாரித்தாள்.

“என்னங்க…?” கணவனரைத் தனியே அழைத்தாள்.

“என்ன..?” தணிகாசலமும் அவள் அழைத்த வீட்டின் பின்கட்டிற்குச் சென்றார்.

அக்கம் பக்கம் பார்க்காமல் சுற்றி கிற்றி வலைக்காமல்…..

“நான் இந்த வீட்டு வந்து பத்து வருசமாச்சு. நமக்குன்னு என்ன சேர்த்து வைச்சிருக்கீங்க..?” நேரடியாகவே விசயத்திற்கு வந்தாள்.

தணிகாசலத்திற்குத்தான் மனைவி என்ன சொல்ல வருகிறாள் ? புரியவில்லை. குழப்பமாகப் பார்த்தார்.

“ஒன்னும் சேர்த்து வைக்கலை….!!” என்று அழுத்தம் திருத்தமாக பதிலையும் சொன்னாள்.

தொடர்ந்து… ‘’ உங்க தங்கச்சி திருமணத்துக்காக சேமிப்பு, சம்பள வருமானம். இருந்த சொத்து பத்துகள் காலி. மீதம் இருக்கிறது மிராசு என்கிறதுக்குப் பெருமையாய் பிசாத்து இந்த ரெண்டு கட்டு ஓட்டு வீடு. இதுவும் உங்களுக்கு மொத்தமா சொந்தம் கிடையாது. பொண்ணுங்களுக்கு கிடையாதுன்னாலும் பின்னால ரெண்டு ஆம்பளைப் புள்ளைங்க தம்பிங்க இருக்காங்க. அவுங்களுக்கும். கலியாணம் காட்சிகள் இருக்கு. உழைச்சு எல்லாரையும் கரை ஏத்துனதுக்கு சன்மானம் மூணுத்துல ஒரு பாகம். பிசாத்து என்ன கிடைக்கும்ன்னே தெரியாது. கண்டிப்பா நாம செலவழிச்சதுல கால்வாசி தேறாது. அதையும் உங்க அம்மா அப்பா சாவுக்குச் செலவழிச்சா சரியாய்ப் போச்சு. கடைசியில ஓட்டாண்டி.!!

நாம இப்பவே மூட்டையைக் கட்டிக்கிட்டு தனிக்குடித்தனம் போறதுதான் புத்திசாலித்தனம். அப்படிப்போனாத்தான் நாம நம்ம புள்ளைங்களை நல்ல படிப்பு படிக்க வச்சு. கரை ஏத்தலாம். பிற்காலத்துக்கு நமக்கும் ஏதாவது பணம் காசு சேர்க்கலாம்.” – விலாவாரியாக எடுத்துச் சொன்னாள்.

யோசித்துப் பார்த்த தணிகாசலத்திற்கு மனைவி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரிந்தது.

படபடவென்று அடுத்து ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்தார்.

இரண்டு நாட்களில் ஊஞ்சலில் அமர்ந்திருந்த அப்பாவிடம் சென்றார்.

அம்மா சமையலிலும், சிவகாமி அறையிலும் இருந்தாள்.

கணவன் சொல்லப் போவதைக் கேட்க காது கொடுத்துக் கொண்டிருந்தாள்.

” அப்பா !” தணிகாசலம் மெல்ல அழைத்தார்.

“என்ன..?” அவர் ஏறிட்டார்.

“நான் தனிக்குடித்தனம் போகலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன். !” என்றார்.

“ஏன்…” அவர் துணுக்குற்றார்.

“இந்த கிராமத்திலிருந்து நகரத்திற்குப் பேருந்து போக்குவசதி இல்லே. பசங்க படிப்புக்கும், நான் வேலைக்குப் போய் வரவும் கஷ்டமா இருக்கு….”

“இத்தினி வருச காலமா இங்கிருந்துதான் போய் வந்தே..?”

“இப்போ நேராநேரத்துல வரனும்ன்னு அலுவலகத்துல ரொம்ப கெடுபிடியாய் இருக்கு. புள்ளைங்க படிப்பு, டியூசன் எல்லாத்துக்கும் சரியான வசதி இல்லே.”

“வந்து….” ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

“என்னங்க…!” அவர் மனைவி இருந்த இடத்திலிருந்து கணவருக்குக் குரல் கொடுத்தாள்.

“என்ன..?” இவர் இங்கிருந்து கேட்டார்.

“அவன் போகட்டும். !”

“விசாலாட்சி !” இவர் திடுக்கிட்டார்.

“புருசன் பெண்சாதி பேசினதைக் கேட்டேன். அவுங்க தனிக்குடித்தனம் போக முடிவு பண்ணிட்டாங்க. நீங்க எது சொல்லி தடுத்தும் பலனில்லே..”என்று சொல்லிக் கொண்டே அவள் கணவர் அருகில் வந்தாள்.

சிவகாமி இதைக் கேட்டுத் திடுக்கிட்டாலும்….மாமியார் தங்களுக்குச் சாய்வாகப் பேசியது சந்தோசமாக இருந்தது.

தணிகாசலம்தான்……

” இல்லே… விசா ! தாய்க்குத் தலைமகன், கைக்கு உதவி ஒத்தாசையாய் இருக்கிற வீட்டுக்கு மூத்தப்பிள்ளை, இருக்கிற பொட்டப் புள்ளைங்களைக் கரை ஏத்தின பிறகு போனா நமக்கு உதவியாய் இருக்குமேன்னு நினைச்சேன்.” அவர் தன் மனத்திலுள்ளதை மறைக்காமல் சொன்னார்.

“அவனை நம்பியா பெத்தீங்க…?!”

இந்தக் கேள்விதான் அவருக்குப் பெரிய அதிர் வை ஏற்படுத்தியது.

“விசாலாட்சி…!” துணுக்குற்றுப் பார்த்தார்.

“பெத்த நமக்குத் புள்ளைங்களைக் காப்பாத்தி, கரையேத்த தெரியும். அப்படியே தெரியல, முடியலைன்னா அது அவுங்க விதி.

இப்போ இவன் வெளியே போனாத்தான்…. புள்ளைங்க படிப்பு செலவை கவனிக்கிறதோடு தனக்கும் பின்னால உதவ நாலு காசு சேமிக்க முடியும். தலைப்புள்ளைதான் குடும்பத்தைக் கட்டிக்காக்கனும், கரை சேர்க்கனும்ன்னு என்ன கட்டாயம்…? பின்னால ரெண்டு இருக்கில்லையா..? சாண் ஆண் பிள்ளையானாலும் ஆண் புள்ளைங்க. உங்க ஏங்கதாங்களுக்கு உதவும். அவனைத் தடுக்காதீங்க..’’ தீர்க்கமாக சொன்னாள்..

சிறிது நேரம் மெளனமாக இருந்த அவர்…

“சரிப்பா. உன் விருப்பம்.” அறையும் குறையுமாக தலையசைத்தார்.

அவ்வளவுதான்….

அப்பா மனசு மாறிவிடக்கூடாதே ! என்கிற அவசரத்தில் அடுத்து தணிகாசலம் தான் தயாராய்ப் பார்த்து வைத்திருந்த வாடகை வீட்டில் குடும்பத்தோடு குடி ஏறினார்.

வீட்டில் குடி புகுந்த அன்றே…

சிவகாமி தன் கணவனிடம்…

“இங்கே பாருங்க. நாம தனிக்குடித்தனம் வந்தாச்சு. இனி நம்ம குடும்ப முன்னேற்றம், புள்ளைங்க படிப்பு, வாய்ப்பு வசதிதான் முக்கியம். அதை விட்டுவிட்டு… ‘நான் அம்மாவைப் பார்க்கனும், அப்பாவைப் பார்க்கனும்’ ன்னு பொறந்த வீட்டுப் பக்கம் போய் வரப் பழக்கம் வைச்சிருந்தால்.. அவுங்க கஷ்டம், ஏங்காதங்களுக்கு நீங்க உதவும்படி ஆகும். அதனால அங்கே போக்குவரத்து வைச்சிக்காம அந்த கிராமத்தையே மறந்துடுங்க.” கண்டிப்பாய்ச் சொன்னாள்.

தணிகாசலமும் மனைவி சொல்லே மந்திரமாக மாறினார்.

இந்த தனிக் குடித்தனம் மகிழ்வில் ஆசைக்கு ஒன்றுக்கு இரண்டாக பெண் குழந்தைகள் பெற்றார்கள்.

தனியாக வந்த நாளிலிருந்தே தணிகாசலம் பிறந்த வீடு மறந்தார்.

தம்பி, தங்கைகள் திருமணத்திற்குக் கூட வேற்றுக் குடும்பவாசியாய் போய் மொய் எழுதிவிட்டு வந்தார்.

இதோ இப்போது இவர் தலைமகன் ஜெகன் எம்.பி.ஏ முடித்து சென்னையில் நல்ல கம்பெனியில் வேலை. அதோடு மட்டுமில்லாமல் தன்னோடு வேலை பார்க்கும் அழகான பெண்ணைப் பார்த்து காதல், திருமணம். தனிக்குடித்தனம். கணவன் மனைவிக்கு நல்ல சம்பளம்.

அவன் தன் தாய் தகப்பன் வீட்டை மறந்து மாமனார் மாமியார் வீட்டோடு ஒட்டு உறவாடல். !!

இங்கே தணிகாசலத்திற்கு……

முதல் திருமணத்தைத் தடபுடலாக நடத்த வேண்டுமென்று ஜெகன் திருமணத்தில் கொஞ்சம் நஞ்சமிருந்த கை இருப்பு காலி.

அடுத்தவன் எம்.பி.ஏ படிப்பு, இரு பெண் பிள்ளைகள் வளர்ப்பு, படிப்பு என்பதில் திணறல். வேலையில் இருந்து வேறு ஓய்வு.

வேறு வேலையாய் வந்த மகனிடம்…” ஜெகன் ! கஷ்டமா இருக்கு. பணம் தேவை” என்று கேட் ட்டார்.

அவனோ….

“இல்லேப்பா.! நான் அங்கே 80 லட்சத்துக்கு வீடு ஒன்னு விலை பேசி முடிச்சிட்டேன். எனக்கே கஷ்டம். !” நிறுத்திக் கொண்டான்.

“என்னப்பா..! குடும்பத்துக்கு முதல் பிள்ளை, மூத்தப்பிள்ளை…. உன்னாலதான் எல்லா காரியமும் முடிக்கனும்னு நெனைச்சா..இப்படி சொல்றே…?” திகைத்துக் கேட்டார்.

“என்னப்பா சொன்னீங்க..? மொதல் பிள்ளை, மூத்தப் பிள்ளைதான் குடும்பத்தைத் தாங்கனுமா..? இது என்ன நியாயம். பெத்ததுக்குக் கடனாய்ப் படிக்க வச்சீங்க. கடமைக்குக் கலியாணம் முடிச்சீங்க. அதுவும் பெண் பார்க்கும் செலவெல்லாம் கூட கிடையாது. இப்படி இருக்கும்போது பெத்தப் புள்ளையிடம் பிரதிபலன் எதிர்பார்க்கிறது எப்படி சரி..? சரி .அதை விடுங்க. நீங்க தாங்கினீங்களா…? யோசிங்க…” என்று சொல்லிவிட்டு திரும்பி க் கூடப் பார்க்காமல் விறுவிறு வென்று இறங்கி வீட்டை விட்டுச் சென்றுவிட்டான் தணிகாசலத்திற்கு வலிக்காமல் என்ன செய்யும்..?

இப்போது படத்தில் இருக்கும் விசாலாட்சி மருமகள் சிவகாமியைப் பார்த்து சிரிக்காமல் என்ன செய்வாள்…?

அவளுக்கும் வலித்தது.

வலியிலிருந்து ஒருவழியாக மீண்டு எழுந்த தணிகாசலம்…

“பெத்தப் புள்ள சோறு போடலைன்னு புகார் கொடுத்தால் பையன் கம்பி எண்ணனும் என்கிற சட்டம் பெத்தவங்களுக்குச் சாதகமாய் இருக்கிற இந்தக் காலத்துல பையன் என்ன பேச்சு பேசிட்டுப் போறான் பார்த்தீயா சிவகாமி…?” என்று கேட்டு அவர் மனைவியைப் பார்த்தார்.

“விடுங்க. இந்த எதிர்வினை நம்மோடு முடிய ட்டும். பேரப்புள்ளைகள் வழியா நம்ம புள்ளைங்களைத் தொட்டு தொடர்கதையாக வேணாம்ன்னு வேண்டுவோம். அதுதான் நாம செய்ததுக்குப் பிரதிபலன் !” ஆறுதலாக சொல்லி கணவர் கையைப் பிடித்து பெருமூச்சு விட்டாள்.

“ஆமாம் சிவகாமி…”என்று தணிகாசலமும் வருத்தத்துடன் சொல்லி தலைகவிழ்ந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *