தனிக்குடித்தனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 3,887 
 
 

நான் அண்ணன் வீட்டு வாசல் படி தாண்டி உள்ளே நுழைந்த அடுத்த வினாடி எதிரே தரையில் அமர்ந்திருந்த என் அண்ணி செண்பகத்தின் கண்கள் குபுக்கென்று கொப்பளித்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

‘ஏன்…? ஏன்..?’ எனக்குள் பதற்றம் பெட்ரோலில் பட்ட தீயாகப் பற்றியது.

நான், அண்ணன் அர்ச்சுனன் வீட்டிற்கு அருகில் ஒரு சில கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறை இல்லையென்றாலும் மாதம் ஒருமுறை கண்டிப்பாகச் சென்று அண்ணன், அண்ணி, மகன், மருமகள் , பேரப்பிள்ளைகளை நலம் விசாரித்து வருவது உண்டு. அப்படியே அண்ணன் குடும்பமும் என் வீட்டிற்கு வருகை. அப்படி இந்த முறை சென்ற போதுதான்..அண்ணி அழுகை.

அண்ணன் குடும்பம் என்னைவிட வசதி. நான் அரசு வேலையிலிருந்து அகலக்கால் வைக்காமல் குப்பைக் காட்டுபவன். அண்ணன் அப்படி இல்லை. மகன் பல தொழில்களில் இறங்கி சில கோடிகளுக்குச் சொந்தக்காரர்.

அண்ணிக்குச் சர்க்கரை, இரத்த அழுத்தம் நோய்கள் உண்டு. அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் அவைகளின் வீரியம் கொஞ்சம் அதிகமானால் முகம் வாடி இருப்பாள்.

தற்போது அப்படியோ..?! அதன் தாக்கம் இந்த அழுகையோ..! சந்தேகம் வர…

அவள் எதிரே அமர்ந்து…

“என்ன அண்ணி..?” குரலைத் தாழ்த்தி மெதுவாய்க் கேட்டேன்.

“ச…. சண்டை…!” துக்கம் தொண்டையை அடைக்க விம்மினாள்.

“எ… என்ன சண்டை..?”

“நான் சொல்றேன் மாமா..!” என்று குரல் கொடுத்துக் கொண்டே அடுப்படியில் இருந்து மருமகள் வந்தாள்.

மாலினி நல்லப்பெண் குடும்பத்திற்கு ஏற்ற குத்து விளக்கு. திருமணம் முடிந்து ஐந்தாண்டுகள் ஆகி இரண்டு குழந்தைகள் பெற்றும் இதுவரை சண்டை சச்சரவு என்கிற மனக்கசப்பு இல்லை.

தற்போது ஏற்படக் காரணம்…? – கேள்விக்குறியாய் அவளைப் பார்த்தேன்.

“மாமா செய்யிறது கொஞ்சமும் சரி இல்லே மாமா. மகன் கண்டிச்சார். அதனால் வீட்டை விட்டு வெளியே போறேன்னு போய்ட்டார் மாமா.” ரொம்ப ரத்தினைச் சுருக்கமாகச் சொன்னாள்.

அப்பனுக்கும் பிள்ளைக்கும் சண்டை என்றால் அண்ணன் இப்படி உதார் காட்டி இருக்கலாம் ! எனக்குப் புரிந்தது.

“எங்கே போனார்…?” அண்ணியைப் பார்த்தேன்.

“தெரியலையே..” துக்கமாகச் சொல்லி கையை விரித்தாள்.

“பொய் மாமா. அவர் பெரிய பெண் வீட்டில் இருக்கார்.”

அண்ணனுக்கு இரண்டு பெண்கள்.இருவருமே அக்கம் பக்கம் ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள்.

“சரி. அண்ணன் கோபித்துக்கொண்டு செல்லும் அளவிற்கு என்ன சண்டை..?” என்றேன்.

“சொல்றேன் மாமா. நான் தாலிகட்டி இங்கே குடித்தனம் வந்த காலத்திலிருந்தே…என் அம்மா, அப்பா, அண்ணன், தங்கைகள் யார் இங்கே வந்தாலும் அத்தை, மாமாவுக்குப் பிடிக்கிறதில்லே.”

“ஏன் என்ன காரணம்…?”

“என் வீடு ஏழையாம். அதனால் அவர்கள் இங்கே வந்தால் நான் அள்ளிக் கொடுத்துவிடுவேன் என்கிற பயம். ”

“அப்படியா..??!” எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஆமாம் மாமா. நான் வந்த நாள் முதலாய் அவர்கள் இந்த வீட்டிற்கு வந்தால் எங்களை ஓரக்கண்ணால் கவனிப்பு, சாடை மாடை பேச்சு. என் வீட்டுக்காரரும் இதெல்லாம் தப்புன்னு அப்பாவையும் அம்மாவையும் எத்தனையோ தடவை கண்டிச்சார். இன்னைக்குப் பொறுக்க முடியாமல் வார்த்தை தடிக்க பேசிட்டார். மாமா கிளம்பிட்டார்.” சொன்னாள்.

“குடும்பத்துல சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வருவது சகஜம். ஆனா எதுவும் மத்தவங்க மனசைப் பாதிக்கிறதாய் இருக்கக்கூடாது. புகுந்த வீட்டுக்கு வந்தவள் பிறந்தகத்துக்கு அள்ளிக் கொடுக்கிறதாய் நினைக்கிறதெல்லாம். தப்பு. அண்ணி நீங்க திருத்திக்கோங்க. நான் அண்ணனைச் சமாதானம் செய்து அழைத்து வர்றேன்!” கிளம்பினேன்.

இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் வழியிலேயே என் அண்ணன் ஒரு மரத்தடியில் தனிமையில் அமர்ந்திருந்தான்.

“என்னடா ! கோபமா…” அருகில் சென்று அமர்ந்தேன்.

“ஆமா..”

“ஏன்…?”

“என் மான அவமானத்துக்கெல்லாம் அந்த சண்டாளிதான் காரணம்…”

“யார் மருமகளா..?”

“இல்லே. உன் அண்ணி!”

அதிர்ச்சியாய்ப் பார்த்தேன்.

“வள்தான் அந்த பெண் வந்த நாள் முதலாய் பிறந்த வீட்டுக்கு அள்ளிக்கொடுத்துடுவாள்ன்னு அந்த வீட்டு மக்கள் இந்த வீடு வந்து நுழைந்தால் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கவனித்து சாடை மாடையில் திட்டுவதையே வேலையாய் வைத்திருந்தாள். நான் கண்டித்தும் கேட்கலை. இன்னைக்கு மகன் தட்டிக்கேட்டதும் தாய்க்கும் மகனுக்கும் வாக்குவாதம். ஆயிரம்தான் இருந்தாலும் நான் கட்டின மனைவியை விட்டுக் கொடுக்க முடியுமா..? நான் மகனைக் கண்டிக்க வாக்குவாதம். கிளம்பிட்டேன்.”

“சரி. நீரடித்து நீர் விலகாது கிளம்பு.”

“இல்லேடா. நான் உன் அண்ணியை அந்த வீட்டை விட்டு வெளியே கிளப்பி தனிக்குடித்தனம் நடத்தனும் என்கிற முடிவோடுதான் வெளி வந்தேன்” சொன்னான்.

“தனிக்குடித்தனமா.?”

“மகன், மருமகளுக்கு என் மனைவி கோணல் புத்தி தெரிந்து போச்சு. இனி தொட்டத்துக்கெல்லாம் சண்டை வரும், கசப்பு வரும். அவர்கள் வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்வதற்குள் நாங்க தனிக்குடித்தனம் போகலாம் என்கிற முடிவோடுதான் வெளி வந்தேன். நீ என் மனைவியிடம் விசயத்தைச் சொல்லி என்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடு” சொன்னான்.

“நீ சொல்றது நியாயம். வருமானம், வீடு..?”

“கிராமத்து பண்ணை வீடு சும்மாதானே பூட்டிக்கிடக்கு. மகன் வீட்டிலிருந்து விவசாயத்தைப் பார்த்த நான் இப்போ என் சொந்த வீட்டிலிருந்தே பார்க்கிறேன்.” சொன்னான்.

மாமியார், மருமகளுக்குள் மனக்கசப்பு, குடும்பத்தில் குழப்பமென்றால் என்றால் முதியோர் இல்லம் சென்று ஒதுங்கி முடங்காமல் இது நல்ல முடிவு.!

திருப்தி வர, “சரி” எழுந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *