சிவன் சொத்து!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 11,343 
 
 

“கெட்டி மேளம் ! கெட்டி மேளம் !” குரல்கள் எதிரொலித்தன. “கொட்டாதே கெட்டி மேளம் ! நிறுத்து… நிறுத்து மேளத்தை !” குரலைத் தொடர்ந்து மேளக்காரக் கிழவன் கையிலிருந்த கொம்பையே பிடுங்கிக் கொண்டு ருத்திராகாரமாய் நின்றhள் அகிலாண்டம் ! ‘கொட்டாதே கெட்டி மேளம் !’ என்று மேளக்காரனுக்கு உத்தரவிட்ட நட்டோடு ‘கட்டாதே தாலியை‘ என்று மகனை நோக்கிப் பாய்ந்தாள். மாப்பிள்ளை கை நடுக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த தாலியையும் ‘லடக்’கென்று பிடிங்கிக் கொண்டு வீராங்கனையாக நின்று கொண்டிருந்தாள். தாலியை நோக்கி தலை கவிழ்ந்திருந்த தங்கம் தலையைத் தூக்கவேயில்லை. அவள் விழிகளில் கண்ணீர் திரையிட்டது. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, “ஏன் இப்படி தாலியை கட்டும் நேரத்தில் அகிலாண்டம் தாலியைப் பிடுங்கிக் கொண்டு கலாட்டா செய்கிறாள்?” என்று தங்கத்திற்கு மட்டுமல்ல… கல்யாண மண்டபத்தில் கூடியிருந்தவர்கட்குத் கூட அதிர்ச்சி இன்னும் தெளியவில்லை.

“தாலிக்கு மட்டும் கழுத்தைத் தெறந்து காட்டினவள் இதுவரை ஏன் மூடி மூடி மறைச்சு வைச்சாள் தெரியுமா ?” அகிலாண்டம் ஆர்ப்பரித்தாள். கூடியிருந்த ஒரு சிலர் கூட நினைத்தார்கள், “அப்படி என்ன மறைத்து வைக்கும்படி கழுத்திலே… தேமலா அல்லது வேறு ஏதாவதா ?” அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும்படி நேரவில்லை… தங்கத்தின் தந்தை சிவராமன் அப்போதுதான் அதிர்ச்சியிலிருந்து மீண்டார். “நாங்க எதுவுமே மூடி மறைக்கலையேம்மா. கொழந்தை கழுத்திலே ஒண்ணும் இல்லையே ஒரு மாசு மரு கெடையாதே… பத்தரை மாற்றுத்தங்கம் சம்பந்தியம்மா”

“அதைத்தான் நானும் சொல்றேன் கழுத்தைத் தொடச்சுவச்ச மாதிரி வச்சால் எப்படி?” அகிலாண்டம் எங்கே வருகிறாள் என்பதும் சிலருக்கு லேசாகப் புரிய ஆரம்பித்தது.

“நீங்க என்ன சொல்கிறீர்கள், சம்பந்தியம்மா ?” உண்மையிலேயே ஒன்றும் புரியாதவராகத்தான் கேட்டார் சிவராமன்.

“சொல்லுறேன் சுரைக்காய்க்கு உப்பில்லை என்று கல்யாணப் பெண் மேடையிலெ வெறுங் கழுத்தாகவா இருப்பாள் ?”

சிவராமன் மெல்ல சுதாரித்துக் கொண்டார், “நீங்க தானேம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாலெ கொழந்தை கழுத்திலே இருந்த மணியை.. . ”

“வாங்கி ஒறைச்சுப் பார்த்தேன்… அறுந்து போச்சு யாரு இல்லேன்னா இப்போ ?”

“பின்னே என்ன ? கட்டவேண்டியதுதானே தாலியை ?” முதல் முறையாக நண்பருக்காக வாயை திறந்தார் குருக்கள் சதாசிவம் !

“பின்னேயும் கட்டலாம்… முன்னேயும் கட்டலாம்… கல்யாணப் பெண் கழுத்துக்கு ஏன் ஜப மாலையும் மணி மாலையும் ?”

“சரி… மணி மாலையா வேண்டாம்னா நாளைக்கே அதை அழுச்சு சங்கிலியா மாத்திடுவோம்… அதுக்கு இப்போ என்ன தடை ?” சதாசிவம் தான் கேட்டார் !

“யார் வேண்டாம்னா மணி மாலையை ?… கூட ஒரு சங்கிலியாவது போட்டு வைக்க வேண்டாம்ன்னுதான் கேட்கிறேன் ” அகிலாண்டத்தின் குரலில் ஒரு அழுத்தம் !

“அப்படி எதுவும் பேச்சில்லையே சம்பந்தியம்மா… ” சிவராமன் தயங்கித் தயங்கி சொன்னார்.

“இதுக்கெல்லாம் கூட பேச்சு வேணுமா ? தலை ஒட்டி கையெழுத்துப் போடணுமா என்ன !” அகிலாண்டத்தின் குரலில் ஒரு கேலி… கிண்டல்…

“ஒரு பேச்சு நாணயம்தானே இதெல்லாம் ? திடீரென்று பேச்சு மாறினால் ?…” சதாசிவம் தான் மீண்டும் சிவராமனுக்காக குறுக்கிட்டார்.

“அப்போ என்னை நாணயம் கெட்டவள்-ன்னு சொல்றேளா ? அப்படியானால் எங்கள் பிள்ளை எதுக்கு ? வேறு அரிச்சந்திரன் பரம்பரையிலே சுடுகாட்டு காவல்காரனாப் பாருங்க” அவள் முடிக்கவில்லை… சிவராமன் துடித்து விட்டார்.

“அப்படியெல்லாம் கல்யாண வீட்டிலே பேசாதீங்க அம்மா…” சிவராமன் காதுகளில் கையைப் பொத்திக் கொண்டதை எடுக்கவில்லை.

“பின்னே என்ன ? சாப்பாட்டு அயிட்டம்கூட முன்னாலே ஸ்டாம்ப் ஒட்டி எழுதி வாங்கணுமா உங்கள் கிட்டே ?”

“சாப்பாட்டு விஷயமும் சங்கிலியும் ஒண்ணாயிடுமாம்மா ?” சதாசிவத்தால் சும்மா இருக்க முடியவில்லை “ஆயிரம் ரூபாயாவது வேண்டாமா ?”

அகிலாண்டம் சளைக்கவில்லை “ஆயிரம் ரூபாய்க்கே கூலிபோக ரெண்டு சவரன்தானே கிடைக்கும் ”

“ரெண்டு சவரனுக்கு நான் இப்போ எங்கே போவேன் ?” சிவராமன் அழுதுவிடுவார் போல இருந்தது.

“எப்போதான் உங்களால் முடியப் போறது இப்பவே முடியலைன்னா ?”

“வாஸ்தவம்தாம்மா… இப்பவும் முடியாது… எப்பவும் முடியாதுதான்… சிவன் கோயில் பரிசாரகத்திலே சில்வர்.. . பித்தளை கூட வாங்க முடியாதுதான் ”

“இப்பவே லாட்டரின்னா பின்னாலே மட்டும் லாட்டரியா அடிக்கப்போறது?” இரக்கமே இல்லாதவளாகப் பேசினாள் அகிலாண்டம்.

சதாசிவத்துக்குப் பொறுக்க முடியவில்லை, கொழந்தையை கண்ணைக் கசக்கிண்டு மணையிலே உக்காத்தி வச்சிண்டு. இதெல்லாம் என்ன பேச்சு ? இதற்கு மேலும் பேசாமல் இருக்கக் கூடாதான்னு கிராம பட்டாமணியமும் ஆரம்பித்தார் “இப்போ சட்டமே இருக்கு இதெல்லாம் கேட்கக்கூடாதுன்னு”.

ஆனால் பாவம் அவருக்குத் தெரியாது ஆயிரம் பட்டாமணியங்களை அப்படியே விழுங்கி விடக் கூடியவள், அகிலாண்டம் என்று !

“எந்த சட்டம் எங்களை என்ன செய்துவிடும் ? நாங்க ஜம்னுபோய் ஜெயில்லே போய் ஒக்காந்துட்டு வர்றோம்… இவள் மகாராணியாய் ஆயுசு பூரா அப்பன் வீட்டிலேயே வாழாவெட்டியா கெடக்கட்டும் ?” சிவராமன் பதறிப் போய் விட்டார்.

“அம்மா… கொழந்தை தாயில்லாப் பொண்ணு… ” சிவராமன் குழைந்தார் “அவள் கண்கலங்கக் கூடாது… ”

“இவன் கூடத்தான் தகப்பனில்லாத பிள்ளை… நாளைக்குக் கஷ்டப்படலாமா ?”

அகிலாண்டத்தை அவள் தீர்மானத்திலிருந்து இம்மியும் அசைக்க முடியாது என்பதை அவர்கள் நன்றhக உணர்ந்து கொண்டிருந்தார்கள். இனிமேலும் அவளிடம் பேசித் தோற்க ஒருவருக்கும் துணிவில்லை.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக சதாசிவம்தான் கேட்டார். “முடிவாக நீங்கள் என்னதான் சொல்லுகிறீர்கள் ?”

“முடிவென்ன, முதலென்ன ? தங்கச் சங்கிலி இல்லாமல் தங்கத்தின் கழுத்தில் தாலி ஏறாது !”

“அம்மா… அம்மா… அப்படிச் சொல்லி விடாதீர்கள்… இந்தக் கல்யாணம் நின்று போனால் எங்கள் மானம்… மரியாதை… வாழ்க்கை எல்லாமே பாழாயிடும்… ” அகிலாண்டத்தின் காலில் விழப் போன சிவராமனைத் தூக்கி நிறுத்தினார் சதாசிவம்… அகிலாண்டம் அசைந்து கொடுக்கவில்லை.

“நிறுத்துங்கள் சிவராமய்யர்… கல்லுக்குள்ளே ஈரம் இருக்கலாம், இரும்புக்குள்ளே இருதயம் இருக்கலாம். ஆனால் இந்தம்மாகிட்டே இரக்கத்தை எதிர்பார்க்கறது பைத்தியக்காரத்தனம்… சங்கிலிக்கு நானாச்சு கட்டச் சொல்லுங்க தாலியை” சதாசிவம் ஆவேசம் வந்தவரைப் போலப் பேசினார். அகிலாண்டம் குரல் குழைந்தது “எங்க கல்யாணத்திலே கூட இவன் அப்பா தெறந்த கார் இல்லைன்னு ஜானுவாசம் வேண்டாம்னு… ”

அவள் முடிக்கவிடவில்லை. சதாசிவம் “முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ளே தாலிகட்டியாகட்டும், ஹும் சீக்கிரம்… நீங்க கௌம்பறதுக்குள்ளே சங்கிலி உங்க கைக்கு வந்துடும் ”

சதாசிவம் அப்படி சொல்லி முடித்தபோது அங்கே ஒரு அமைதி. சிவராமன் அவர் மார்பில் தலையைப் புதைத்துக் கொண்டுவிசும்பினார் “அண்ணா அண்ணா சதா சிவண்ணா,
“அகிலாண்டத்தை யாரும் ஏமாற்றி விட முடியாது. சங்கிலி இல்லேன்னு பொண்ணு இங்கேயேதான் ” இரண்டாவது முறையாக பட்டாமணியத்தின் குரல் அவளைப் பேச விடாமல் தடுத்தது “அம்மா உங்களுக்கு சதாசிவத்தைத் தெரியாமல் இருக்கலாம்… சிவபெருமான் கூட சொன்ன வார்த்தை மீறலாம். சதாசிவ குருக்கள் சத்தியம் தவற மாட்டார்”.

மீண்டும் “கெட்டி மேளம்” “கெட்டி மேளம் ” குரல்கள் எதிரொலித்தன… அந்தக் குரலில் பழைய மகிழ்ச்சி இல்லை… கெட்டி மேளத்திலும் வலிமை இல்லை… கல்யாணமே கலகலப்பை இழுந்துவிட்டது” ‘காமா சோமானு’ எப்படியோ கல்யாணம் நடந்தால் போதும் என்ற நினைவுடன் வந்தவர்களும் விடைபெற ஆரம்பித்தனர். மணமக்கள் முகத்தில் கூட மகிழ்ச்சி இல்லை…

மகிழ்ச்சியாயிருந்தவள் அகிலாண்டம் ஒருத்திதான்… அவள் கையில் சதாசிவம் செய்த சத்தியம் சங்கிலியாக ஊசலாடியது. திருப்பித் திருப்பிப் பார்த்து திருப்தியடைந்தவளாக தன் கழுத்தில் போட்டு விட்டால் திரும்புமோ திரும்பாதோ என்ற பயம் அவளுக்கு !

வாசலில் வண்டி வந்து நின்றது… அகிலாண்டமும், பிள்ளையும் முன்னே போய் ஏறி உட்கார்ந்து விட்டார்கள். தங்கம் தந்தையிடம் போகவே இல்லை. நமஸ்கரித்து விட்டுக் கிளம்பினாள்… தாயில்லாப் பொண்ணுன்-னு துயரத்தையே காட்டாது வளர்த்த அவருக்கு அவளால் எவ்வளவு துன்பம் ? அவமதிப்பு ? நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது.

சதாசிவ குருக்கள் அருகே வந்தாள். “பெரியப்பா” வார்த்தை வெடித்துக் கொண்டு வந்தது… அப்படியே வேரற்ற மரமாக அவர் காலடியில் விழுந்து விட்டாள்.

“தீர்க்க சுமங்கலியாய் இரும்மா… உனக்கு ஒரு கொறையும் வராது… ” சதாசிவம் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். தங்கம் மெல்ல எழுந்து வண்டியை நோக்கி அடி வைத்தாள்.

வண்டி சத்தம் மெல்ல தேய்ந்து மறைந்தது. இதற்காகவே காத்திருந்தவராக சிவராமன் சதாசிவத்தின் மார்பில் மீண்டும் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறினார், “இப்படி செய்துவிட்டீர்களே அண்ணா !”

“நீங்களும் என்னைப் போலத்தான்… ”

“எல்லாருக்கும் தெரிந்தது தானே ”

“என்னதான் ஒண்டிக்கட்டை யானாலும் உங்களிடமும் குன்று மணிப்பொன் கூட”

“கெடையாதுதான் அதனாலென்ன ?”

“எனக்கென்னவோ பயமாயிருக்கு… சிவன் சொத்து…”

“எல்லாமே அவன் சொத்து தானேய்யா ?”

“இருந்தாலும் !… ”

“இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு வேறே சொத்து ஏதய்யா ?”

“அது என்னவோ உண்மைதான்… ஆனாலும்… ”

“நம்ம உத்தியோகத்தி லென்ன இருக்கு ? வெறும் பட்டை… பெருமாள் கோயிலானலும் பிரசாதமாகவாவது அப்படியே சாப்பிடலாம் ”

“நம்மை நம்பி கடன் கூட கொடுக்க மாட்டான் ?”

“நெலம் வெளஞ்சாத்தானே கோயிலுக்கு வெளக்கு… நமக்கு சம்பளம் ?”

“சிவன் சொத்து குல நாசம்னு சொல்லுவாளேன்னு தான் பயமாயிருக்கு !”

“எல்லாமே அவன் சொத்து… நாம மட்டும் யாரு ? நாமும் அவன் சொத்துதானே ? அவனை விட்டால் நமக்குதான் வேறசொத்து என்ன இருக்கு ?”

“அதனாலே அவன் சொத்திலே கை வைக்கலாமா ?”

“யாருக்கு வச்சோம் ? அவனுடைய ஒரு குழந்தை… அம்பாளோட கொழந்தை… கண்கலங்கலாமா ?”

“பாவ புண்ணியம்னு பார்த்தால்… ?”

“பாவமோ சாபமோ எனக்குத்தானே சிவராமய்யர் ? நாளைக்கே கூட சந்தோஷமாய் ஜhம் ஜhம்னு ஜெயிலுக்குப் போனாக்கூட சந்தோஷம்தான் !”

“சதாசிவண்ணா” அலறினார் சிவராமன், “நீங்க ஒரு தெய்வம் ”

“ஆமாம் சிவராமய்யர் தெய்வமோ, பூதமோ எதுவானாலும் நான் செய்ததைத்தான் செய்திருக்கணும்… ஒரு கொழந்தை கல்யாண மேடையிலே கண்கலங்கற போது பாவம் என்ன, பழி என்ன நாம நரகத்துக்குப் போனால் என்ன ? ஜெயிலுக்குப் போனாலென்ன ?”

“தோலை செருப்பாத் தைச்சு போட்டாவது கடனை தீர்த்துடணும் ?”

“எப்படி தீர்க்கறது ? யார் தீர்க்கறது ? அவன் கடனை அவனே தான் தீர்த்துக்கணும்… அகிலாண்டம்மா தான் சொன்னாளே லாட்டிரி அடிக்கிற நமக்கு இனிமே லாட்டரி அடிச்சாதான் ”

“அடிச்சாச்சு… லாட்டரி அடிசாச்சு… ” சொல்லிக்கொண்டே வந்தவர் பட்டாமணியம் தான். அவர் கையில் ஒரு தந்தியிருந்தது.

“என்ன சொல்றேள் ? யாருக்கு லாட்டரி அடிச்சிருக்கு ?”

“உமக்குதான் ஐயா சிவராமய்யர்… மதுரை ஏஜெண்ட் அடிச்சிருக்கான்… உம்ம பங்குக்குகூட்டுச் சீட்டிலே ஆயிரம் ரூபாயாம். ”

சதாசிவம் தந்தியை வாங்கிப் பார்த்தார், “பார்த்தீரா சிவராமய்யர் வேடிக்கையை ? லாட்டரி லட்சமும் இல்லை… ஐநூரும் இல்லை. உம்ம பங்கு உம்ம தேவை ஆயிரம்தான் ?”

“சிவன் அவன் சொத்தைக் காப்பாத்திண்டுட்டான் !”

“நான்தான் சொன்னேனே அது அவன் பொறுப்புன்னு கௌம்பும் மதுரைக்கு புது சங்கிலி வாங்கி அகிலாண்டத்துக்கு சாத்திட்டு பழசை கொண்டு வந்துடுங்கோ”

“ஆமாம்… சம்பந்தி அம்மாவுக்கும் புதுசுன்னா கசக்குமா !”

“பழசை வாங்கிண்டு கொடுங்கோ… அகிலாண்டம்… ஜாக்கிரதை !”

“எங்காத்திலே தான் தபால்காரன் தபாலோடு சேர்த்து தந்தியையும் வழக்கம் போல கொடுத்திருக்கான்… என்னவோ ஏதோன்னு கல்யாணம் தடைப்படுமோன்னு அவள்தான் வாங்கி உள்ளே வச்சுட்டாளாம்… நான் போய் பிரிச்சுப் பார்த்தால்… ” பட்டாமணியத்துக்கு மகிழ்ச்சி கரைபுரண்டது.

“சிவன் அவன் சொத்தை காப்பாத்திண்டதுதான் எனக்கு சந்தோஷம் ” சிவராமன் மீண்டும் சொன்னார்.

“சதாசிவம்… சிவராமன்… நீங்க எடுத்துக் கொடுத்த சங்கிலி மட்டும் சிவன் சொத்து இல்லை… அதை மட்டும் அவன் காப்பாத்திக்கலை… வருஷக்கணக்கிலே கோயிலே கதின்னு இருக்கேளே … நீங்கதான் அவன் உண்மையான சொத்து… சிவன் சொத்து… அதைத்தான் அவன் இப்ப காப்பாத்திண்டிருக்கான்.”

பெரியவர் பட்டாமணியம் பேச்சில் ஒலித்த சத்தியம் அவர்முகத்திலும் ஒளிர்ந்தது ?

– செப்டம்பர் 01 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *