சிதம்பர ரகசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 7,774 
 
 

தனக்கும் பிள்ளை, குட்டி என்றிருந்தால், தான் இப்படி ஓயாது மனைவியிடம் `பாட்டு’ கேட்க வேண்டியிருக்காதே என்று ஆயிரத்தோராவது முறையாக சிதம்பரம் தன்னைத்தானே நொந்து கொண்டார்.

`புத்தகத்தை எடுத்து வெச்சுக்கிட்டு படிங்களேண்டா! எப்போ பாத்தாலும், என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு?’ என்று, எல்லா அம்மாக்களும் தொணதொணப்பதுபோல, தான் பெற்ற செல்வங்களை விரட்டியபடி இருந்திருப்பாள் சிவகாமி.

இந்தப் பெண்களுக்கு பொழுது போகத்தான் ஆண்டவன் பிள்ளைகளைக் கொடுக்கிறானோ என்று ஒரு கேள்வி அவர் மனதில் உதித்தது. இதையே கருவாக வைத்து ஒரு கதை புனைந்தால் எப்படி இருக்கும்?

மேசை டிராயரை இழுத்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த கோடு போட்ட காகிதக் கத்தையை எடுத்துக்கொண்டார்.

சிவகாமிக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ, உடலதிர உள்ளேயிருந்து வந்தாள். அவளைக் கண்டதும், முகத்தைச் சுளிக்காமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டார் சிதம்பரம்.

சமைப்பதும், சாப்பிடுவதுமே இப்பிறவி எடுத்ததன் பயன் என்றிருப்பவளின் உடல் சுற்றளவைப் பற்றி குறை கூற என்ன இருக்கிறது! கையில் எப்போதும் ஒரு கரண்டி–ஏதோ அம்மன் கை சூலம் மாதிரி. தகுந்த ஆடை அணிந்து, உடலைச் சற்று பார்க்கும்படியாக வைத்துக்கொள்வாளா என்று பார்த்தால், அதற்கும் வழியைக் காணோம். இரவு, பகல் என்றில்லை, எப்போதுமே கூடாரத்தை நினைவூட்டும் ஒரு அங்கி, குதிகால்வரை. தோள்வரையே நீண்டிருந்த தலைமுடியை ரப்பர் பாண்ட் போட்டுக் கட்டி, `தேங்காய் குடுமி`யாக முடித்திருந்தாள்.

`கண்ணுக்கு லட்சணமா புடவை கட்டிக்கயேன்!’ என்று சொல்லிப் பார்த்திருக்கிறார்.

`அதான் கல்யாணம் ஆகிடுச்சே! இன்னும் என்ன அழகு வேண்டிக்கிடக்குதாம்!’ என்று முரட்டுத்தனமாகச் சொல்வதோடு நில்லாமல், வேலை நிறுத்தம் வேறு செய்வாள் — சமையல், வீட்டைச் சுத்தப்படுத்துதல், இன்னும் எல்லா சமாசாரங்களிலும்.

“ஆரம்பிச்சுட்டீங்களா? இப்படி எழுதி, எழுதி என்னத்தைக் கண்டீங்க? பெருமையா சொல்லிக்கிற மாதிரி ஒரு விருது, பட்டம், பணமுடிப்பு ஏதானும் வாங்கியிருக்கீங்களா? இப்படி கிறுக்கற நேரத்தில நாலு பசங்களுக்கு பாடம் சொல்லிக் குடுத்தாலாவது பணம் பாக்கலாம்!” ஓயாது கத்தியோ, அல்லது நாற்பது வயதைத் தாண்டியதால் பெண்களுக்கான சுரப்பி தகறாறு செய்ததாலோ, குரலும் ஆண்பிள்ளைத்தனமாக இருந்தது.

வழக்கமான பல்லவிதான். இருந்தாலும், அவளுக்கு ஏதாவது பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால், லேசில் உள்ளே போகமாட்டாள். பெரரியலோ, குழம்போ தீய்ந்து போயிருக்கும். வேறு வழியில்லாமல், அதைத்தான் சாப்பிட்டாக வேண்டும். கற்பனையில் அவளை திட்டித் தீர்ப்பதோடு அவருடைய வீரம் தணிந்துவிடுவதால், நேரில் பார்க்கும்போது குழைவார். இரவு நேரம் என்று ஒன்று வந்து தொலைக்கிறதே!

“நான் என்ன செய்யறது, சிவகாமி? மாசத்துக்கு ஒண்ணு, ரெண்டு கதையோ, கட்டுரையோ பத்திரிகையில வந்துகிட்டுத்தானே இருக்கு! நானும் நாப்பது வருசமா எழுதறேன். அதுக்காக எவன் காலிலேயாவது விழுந்து, `பட்டம் குடுங்க. வீட்டில ரொம்ப குறைப்படறாங்க’ன்னு கெஞ்சச் சொல்றியா? இல்லே, சம்பந்தப்பட்டவங்களைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழட்டுமா?”

“பத்திரிகையில போடறாங்கன்னு பீத்திக்கறீங்களே! அதில கை நிறைய காசு கிடைக்குதா?”

சிதம்பரம் வாளாவிருந்தார். இந்த சமாசாரத்தைப்பற்றி ஏற்கெனவே அவளுடன் அலசியாகி விட்டது. இப்போது அவருடைய வாயைக் கிண்டி, சண்டை பிடித்து பொழுதைப் போக்கவென மீண்டும் அதைக் கிளப்புகிறாள்!

அவருடன் வேலைக்குச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் `டியூஷன் செண்டர்’ என்ற பலகையை வீட்டின்முன் தொங்கவிட்டு, இரண்டு மாடி வீடுகளுக்குச் சொந்தக்காரர்களானது அவருக்குத் தெரியாததல்ல. ஆனால், பணமோ, பரிசோ பெரிதில்லை, எழுதும் தருணங்களே மகிழ்ச்சி பொதிந்தவை என்ற எண்ணப்போக்கு கொண்ட அபூர்வ மனிதர் அவர்.

சிதம்பரத்தைப் பொறுத்தவரை, எழுதுவது என்பது மூச்சு விடுவதுபோல. ஒவ்வொரு எழுத்துப் படிவத்தாலும் மனித வாழ்க்கையும், மனிதர்களின் மனவக்கிரங்களும் புரிந்துபோவதாக அவர் நினைத்தார். அத்துடன், நாடு முழுவதும் நம் எண்ணங்கள் பரவுகின்றனவே என்ற நிறைவே அவருக்குப் போதும். சிவகாமிக்கு இதெல்லாம் புரியாது.

என்றாவது ஒரு நாள் தானும் ஒரு நல்ல எழுத்தாளர்தான் என்பதை அவள் ஒப்புக் கொள்வாள். அதற்கான காலம் வராமலா போய்விடும்!

சிதம்பரம் எதிர்பார்த்த காலம் விரைவிலேயே வந்தது — ஒரு கடித ரூபத்தில். `உங்களைப் போன்ற அனுபவம் மிக்க எழுத்தாளர்..’ என்று ஆரம்பித்திருந்தது கடிதம்.

நம் கூடவே இருப்பவர்களுக்குத்தான் நமது அருமை புரிவதில்லை என்ற மனத்தாங்கலுடன், “சிவகாமி!” கூவினார்.

அடித்துப் பிடித்துக்கொண்டு வந்த மனைவியிடம், கடிதத்தை வீசிக் காட்டினார். “என் எழுத்தைப்பத்தி என்னமோ சொன்னியே! இப்போ பாத்தியா?”

அவள் கண்கள் விரிந்தன. “ஏதானும் முதல் பரிசு கிடைச்சிருக்கா? ஆயிரமா, ரெண்டாயிரமா?”

“அதைவிடப் பெரிசு!” என்றார் கர்வத்துடன் தலையை நிமிர்த்தியபடி. “ஒரு சிறுகதைப் போட்டிக்கு என்னை நீதிபதியா இருக்கும்படி கேட்டிருக்காங்க!”

தண்ணீர் தெளித்ததும் அடங்கிப்போகும் கொதிக்கும் பாலைப்போல், சிவகாமியின் உற்சாகம் அடங்கியது. “இவ்வளவுதானா? என்னமோன்னு நினைச்சு ஓடி வந்தேன்!”

“சாதாரணமா சொல்றியே! என்னை எவ்வளவு பெரிய எழுத்தாளன்னு மதிச்சா, இப்படி ஒரு வாய்ப்பைக் குடுப்பாங்க! நாடு தழுவிய போட்டி, தெரிஞ்சுக்க!”

“எவ்வளவு பணம் குடுப்பாங்க?”

“அடி யாருடி இவ, காசிலேயே கண்ணா இருக்கா! எனக்கு வர்ற சம்பளம் நம்ப ரெண்டு பேருக்கு தாராளமா இருக்கு. இன்னும் என்ன பேராசை?” என்று அடித்துப் பேசியவருக்கு, தனக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்ததென்ற ஆச்சரியமும் எழாமலில்லை. தானும் ஒரு திறமையான எழுத்தாளன்தான் என்று யாரோ ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்! வேறு என்ன வேண்டும்!

இரண்டு நாட்கள் கனவிலேயே மிதந்தார் சிதம்பரம்.

ஒரு நாள் இரவு, தொலைபேசி அழைப்பு வந்தது. அவருடைய பால்யத்தோழன், சத்யா. இப்போது ஒரு பிரபலமான தினசரியில் ஆசிரியராக இருக்கிறார். எப்போதாவது பொது நிகழ்ச்சிகளில் பார்க்கையில், தலையசைப்புடன் சரி. இடுப்பே மறைந்து, நெஞ்சுக்குக்கீழ் எல்லா இடத்தையும் பருத்த வயிறு ஆக்கிரமித்துக்கொண்டு, பணத்தைத் `தண்ணி’யாகச் செலவழிக்கும் அவருடைய `பெரிய மனித’ப் பழக்கம் ஒன்றை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அப்போதெல்லாம், இவரும் தன்னை மதிக்கவில்லையே என்ற வருத்தம் எழும் சிதம்பரத்திற்கு. `பெரிய ஆளாயிட்டாரு. நம்பளை மதிச்சுப் பேசுவாரா!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். அந்த சத்யாதான் வலியக் கூப்பிடுகிறார்!

அன்பு சொட்டச் சொட்ட குசலம் விசாரித்துவிட்டு, கடந்த கால நினைவுகளையும் இடிச்சிரிப்புடன் அசை போட்டுவிட்டு, “நீங்க அந்தப் போட்டிக்கு நீதிபதியாமே?” என்று விஷயத்துக்கு வந்தார் சத்யா.

இது ரகசியமாக வைத்திருக்க வேண்டிய சமாசாரம் அல்லவோ? இவருக்கு எப்படித் தெரிந்தது என்று ஒரு சந்தேகம் உதித்தது சிதம்பரத்தின் மனதில். “கேட்டிருக்காங்க,” என்றார், பட்டும் படாமலும்.

தயங்கித் தயங்கி, நிறைய பேசினார் பால்ய நண்பர். இறுதியில், “கதையோட தலைப்பு, தர்ம யுத்தம். மறக்காதீங்க!” அத்துடன், பசித்த முயலுக்கு காரட்டை நீட்டுவதுபோல் வேறொன்றும் சொன்னார்.

அவருக்குப் பிடி கொடுக்காது, “படிச்சுப் பாக்கறேன்!” என்று சொல்லி, ஒரு வழியாக அந்த உரையாடலை முடித்தார் சிதம்பரம். மூச்சை அடைப்பதுபோல் இருந்தது. சாதனை என்று தான் நினைத்தது சோதனையாக முடிந்திருக்கிறதே!

“யாருங்க?” என்று விசாரித்தாள் துணைவி.

“ஒனக்கு ஒண்ணுமில்ல!” அவருடைய குழப்பம் ஆத்திரமாக வெளிப்பட்டது.

போட்டிக்கு வந்திருந்தவைகளில் பதினைந்து கதைகளைப் பொறுக்கி அவருக்கு அனுப்பி இருந்தார்கள்.

தர்ம யுத்தம்!

அந்தக் கதையை எழுதினவர் பெயர் இல்லைதான். ஆனால், சத்யா தான் இவருக்கு முன்னரே தெரிவித்திருந்தாரே — அவருடைய மனைவியின் கைவண்ணமென்று!

மாதாந்திரப் போட்டியில் பரிசுத்தொகை ஒன்றும் பெரிதில்லை என்றாலும் பெருமைதான்.

மேலும், நிரந்தர நோயாளியான மனைவிக்கு எவ்வகையிலாவது மகிழ்ச்சி ஊட்ட வேண்டும் என்ற தீவிர முனைப்புடைய `நல்ல` கணவராக இருந்தார் சத்யா.

தான் பட்ட நன்றிக்கடனைத் தீர்க்க, சத்யாவின் தினசரியின் ஞாயிறு பதிப்பு விரைவில் அறிவிக்கப்போகும் நாவல் போட்டியின் முதல் பரிசான ஐயாயிரம் வெள்ளி சிதம்பரத்துக்குத்தான் என்று ம் அடித்துக் கூறியிருந்தார்.

குறிப்பிட்ட கதையை அடியில் வைத்துவிட்டு, பிற கதைகளை ஊன்றிப் படித்தார் சிதம்பரம். ஒன்று தேறியது.

`கதாசிரியர் சிந்தனை வளமுடையவர், மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கிறார், ஆட்டுமந்தைகளாக வாழ்வதிலேயே நிறைவு கொள்ளும் மனிதர்களை நையாண்டி செய்கிறார்,` என்று விமரிசனம் எழுதினார். ஒப்புக்காக சத்யா குறிப்பிட்டிருந்ததையும் படித்துவைத்தார். சிபாரிசு இருந்தால் பரிசு கொடுக்கலாம் என்ற ரகம்.

சிதம்பரத்துக்கு யோசனை பிறந்தது. தான் அதைத் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை விமரிசனத்தில் எழுதினால், யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை. முன்பின் தெரியாத எவருக்கோ பரிசு கிடைக்க வழி செய்வதைவிட, தெரிந்த பெண்ணின் கதையைப் புகழ்ந்துவைத்தால், தான் இன்னும் எழுதவே ஆரம்பிக்காத நாவல்வழி ஐயாயிரம் வெள்ளி கிடைக்கக் கூடும். பரிசு நிச்சயம் என்றானபின், கருப்பொருள் சம்பந்தமான ஆராய்ச்சி எதுவும் செய்யாது, நடை, பாத்திர வர்ணனை என்று மெனக்கிடாது, எப்படி வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.

இப்படி எண்ணம் போகையிலேயே சிதம்பரத்துக்கு அவமானமாக இருந்தது.

`எல்லாராலும் ஒங்களைமாதிரி எழுதிட முடியுமா, சார்? சரஸ்வதி கடாட்சம் ஒங்களுக்குப் பரிபூரணமா கிடைச்சிருக்கு!’ என்று அதிகம் பழகியிராதவர்கள்கூட எவ்வளவு முறை அவரிடம் கூறியிருக்கிறார்கள்!

அப்போதெல்லாம், நம்பிக்கை இல்லாது, `அப்படியா சொல்றீங்க? நான் ஒண்ணும் பெரிசா –பரிசோ, பட்டமோ — வாங்கலியே!’ என்று கேட்டது நினைவுக்கு வந்தது.

`அதெல்லாம் பேசி வெச்சுக்கிட்டு குடுக்கறாங்க! விடுங்க! அதுவா முக்கியம்!’ என்ற பதில் இப்போது நினைவில் எழுந்தது.

எத்தனையோ போட்டிகளில் தான் கலந்துகொண்டும், முதல் பரிசு மட்டும் கைக்கெட்டாத கனியாகவே இருந்ததன் ரகசியம் இப்போது புரிந்தது.

ஏற்பாட்டாளர்களின் நெருங்கிய உறவினர்களும், பத்திரிகைகளில் தொடராக விஞ்ஞானப் பகுதி, கல்வி, மருத்துவம் என்று சம்பளம் எதுவும் வாங்காது எழுதுபவர்களுமே அதைப் பெற தகுதி உடையவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள்!

தான் பெற்ற ஏமாற்றம் இன்னொரு நல்ல எழுத்தாளர் அடையக்கூடாது. தனக்கு வாய்த்ததுபோல் அவருக்கும் ஒரு மனைவி இருந்து, `உபயோகமா ஏதாவது செய்யுங்களேன். இப்படி எழுதி, எழுதி எதைச் சாதிச்சீங்க?’ என்று தூபம் போட்டு, அவர் எழுத்துலக ஈடுபாட்டுக்கே இருட்டடிப்பு செய்துவிட்டால்?

அடுத்த முறை தனது பழைய நண்பர் சத்யாவை ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கண்ட சிதம்பரம் அவரை நோக்கிப்போனார்.

முகத்தை தொண்ணூறு பாகை அளவில் திருப்பியபடி, அவரைக் கடந்தார் மாஜி நண்பர்.

சிதம்பரத்தின் கற்பனை விரிந்தது. அதில் சத்யா மனைவியிடம் மாட்டிக்கொண்டு விழித்தார்.

`என்னோட கதைக்குத்தான் பரிசுன்னு அடிச்சுச் சொன்னீங்களே! நீங்க ஒரு பத்திரிகை ஆசிரியரா இருந்து என்ன புண்ணியம்?’

– Mintamilgooglegroup – 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *