கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 5,229 
 
 

ஐப்பசி மாத அடை மழைப் பொழுது…..

கிழிந்து போன கோரைப்பாயிலிருந்து எழுந்து குத்துக்காலிட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் சிங்காரு.

வானம் கருமேக மூட்டமடித்து நச நசவென்று தூறிக்கொண்டே இருந்தது.

திரும்பிப் பார்த்தான். தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளும் பாயை விட்டு விலகி மண் தரையில் சுருண்டு படுத்து…… ஒன்று தன்னுடைய கிழிந்து போன கைலியையும், இன்னொன்று அம்மாவின் அழுக்குப் புடவையையும் போர்த்திக்கொண்டு தூங்கியதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

சுவரோரத்தைப் பார்த்தான்.

மனைவி குப்பாயி படுத்திருந்த இடம் காலியாக இருந்தது.

காலைக்கடனுக்குத் தோப்புப்பக்கம் போயிருக்க வேண்டும். – புரிந்தது.

அடுத்தப் பக்கம் திரும்பி சனி மூலையை நோட்டமிட்டான்.

அடுப்பு சாம்பலின் கதகதப்பில்……. பூனை முன்னங்கால்களால் முகத்தை மூடிக்கொண்டு வெகு சுவாரஸ்யமானது தூங்கிக் கொண்டிருப்பதை பார்க்க ரொம்ப அழகாக இருந்தது.

‘ இரண்டு நாட்களாக அடுப்பை பற்றவைக்கவில்லை. இந்த அடைமழைக்காலத்தில் சாம்பல் இன்னுமா கதகதப்பாக இருக்கிறது..?! ‘ – நினைத்துக்கொண்டான்.

சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாட்களாகியதால் அந்த குளிர்கால வேளையிலும் பசி வயிற்றைப் பிசைந்தது.

இந்தக் குளிரில் சூடாய், ஆவி பறக்க பத்து இட்லிகளைத் தின்றுவிட்டு , ஒரு கிளாஸ் நிறைய முழு அளவு டீ குடித்தால் எவ்வளவு இதமாக இருக்கும்..? ‘ – என்று நினைக்கும்போதே அவனையும் அறியாமல் நாக்கில் எச்சில் ஊறியது.

உட்கார்ந்தபடியே வலைந்து இடது கால் சட்டைப் பையில் கையை விட்டு….. வெளியே எடுத்தான். இரண்டு ருபாய் நாணயம்.

‘ இதுதான் இன்றைய சொத்து..!! ‘ நினைத்து பெருமூச்சு விட்டான்.

அது அவனைச் சொல்லிக் குற்றமில்லை. பொதுவாகவே மழைக்காலத்தில் அவ்வளவாக போக்குவரத்து இருக்காது. அதனால் சவாரி சரிவர கிடைக்காது. அதிலும் இரண்டு நாட்கள் அடைமழையில் சுத்தமாக சவாரியே இல்லை, கிடைக்கவில்லை.!!

நேற்று மதியம் மனைவியின்… ‘சிலவட்டுக் ‘காசைத் தட்டி முட்டிப் பொறுக்கி….. அந்தக் காசில் பொறையும்,டீயும் வாங்கி குழந்தைகள் அரைவாசி வயிற்றையும், தன் கால்வாசி வயிற்றையும், குப்பாயி அதற்கும் குறைவாகவும் வயிற்றையும் நனைத்துகொண்டாகி விட்டது. அதிலிருந்து இதுவரை ஒரு பருக்கை வயிற்றுக்குள் போகவில்லை. இரவு வந்து குழந்தைகள் பசிக்கின்றது என்று அழுவதைப் பார்க்கப் பாவமாக இருக்க… தெரு கோடியிலிருக்கும் ‘பெட்டிக் ‘ கடையில் கடனுக்கு இரண்டு பன்களை வாங்கிக் கொடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரையும் மொண்டு வைக்க… அவர்கள் தின்றுவிட்டு, குடித்துவிட்டுத் தூங்கிவிட்டார்கள். பாவம் ! வயிறுகுப் போதுமோ போதாதோ..?!

இரவு பசி…! தூக்கத்தில் பாயில் போய்விட்டது. இப்போது எழுந்ததும் பசிக்குமோ. என்ன செய்வது…? – கலக்கமாகக் குழந்தைகளைப் பார்த்தான்.

அந்த நேரம் பார்த்துதான் குப்பாயி குடிசைக்குள் நுழைந்தாள் . முந்தானையால் தலையில் முக்காடு போட்டிருந்தாள். முக்கால்வாசி நனைந்திருந்தாள். முக்காட்டை நீக்கி முகத்தைத் துடைத்து தலையைத் துவட்டிக்கொண்டே…

” எளவெடுத்த மானம். அடைச்சிக்கிட்டு உடமாட்டேங்குதே..!? ” முணுமுணுத்தாள்.

சிங்காரு அவளைப் பார்த்தான். இரண்டு நாள் பட்டினியில் கண்கள் ரொம்ப உள்ளே போயிருந்தது. கன்னங்கள் ஒட்டியிருந்தது.

‘ இரண்டு நாள் ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்றால் பாவம் அவள்தான் என்ன செய்வாள். ?! ‘ – பச்சாதாபப் பட்டுக்கொண்டான்.

ஆனால் அவள்….

” என்ன பார்க்குறே… ” கேட்டாள்.

” உனக்காகவாவது நான் சவாரிக்குப் போவணும். சவாரி கிடைக்கனும் குப்பு…” முனகி எழுந்தான்.

” இங்கே மட்டும் என்ன வாழுதாம்..!? ” என்று அவன் முகவாயைப் பிடித்தவள்….

” கடவுளே..! இன்னைக்காவது சவாரிக் கிடைக்கனும். கால் காசு மனுசன் கொண்டு வரனும்ப்பா ! ” வேண்டிக்கொண்டாள்.

” சரி. நான் புறப்படுறேன். நீ புள்ளைங்களைச் சத்துணவுக்கூடத்துக்கு தொரத்திவிடு ” சொல்லி போர்த்தி இருந்த கைலியைக் கீழே இறக்கிக் கட்டிக்கொண்டு ஓரமெல்லாம் நைந்து நூல் பிரிந்து தொங்கிய காக்கிச் சட்டையை எடுத்துக் கொண்டு ஆயத்தமானான்.

” ம்க்கும் ! இந்த புள்ளங்களாவது ஒருவேளைக் கஞ்சி வயிறாரக் குடிக்கும்னு நெனைச்சாலும் இந்த அடைமழையில பள்ளிக்கூடம் ரெண்டுநாள் லீவாம்..!! ‘ குப்பாயி நொடித்து வருத்தமாகச் சொன்னதைக் கேட்டதும் இவனுக்குச் சொரேரென்றது.

‘ ஐயோ ! புள்ளைங்க நேத்திக்கும் சாப்பிடல. இன்னைக்கும் சாப்பிடலேன்னா தாங்காதே !! ‘ – இதயத்தில் கணம் வந்து வயிற்றைப் பிசைந்தது அவனுக்கு.

‘ இன்னைய வயித்துப்பாட்டுக்குச் சம்பாதிச்சே ஆகணும்..!! ‘ ஒரு முடிவுடன் வெளியே புறப்பட்டான்.

வாசலில் வந்து மழையில் நனைந்து கிடைக்கும் ரிக்ஸாவைத் தொட்டதும் சில்லென்றிருந்தது.

வானம் இன்னமும் சகட்டுமேனிக்கு நிதானமாகத் தூறிக்கொண்டிருந்தது.

ஒரு நாளைக்கு அம்பது ரூபாய் வீதம் இன்றோடு மூன்று நாட்களுக்கு வண்டி வாடகை நூற்றி ஐம்பது கொடுக்க வேண்டும்.

ரிக்ஸா சொந்தக்காரன் மழையின் காரணமாக இரண்டு நாட்களாக வாடகை வசூலிக்க வரவில்லை. இன்றைக்கு எப்படியாவது வந்துவிடுவான்.

” ஐயா ! வண்டி ஓடல. சவாரிக்கு கிடைக்கல.” – என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான்.

வாடகைத் தரவில்லை என்றால் வண்டியை இழுத்துக் கொண்டு போய்விடுவான். ஆக… வாடகைக்கும் சம்பாதிக்க வேண்டும் ! கிடைக்குமா…?! ‘ – நினைக்கும்போதே சிங்காரருவிற்கு வயிற்றைக் கலக்கியது.

‘ சரி. இன்னைக்கு எப்படியாவது சம்பாதிச்சிடுவோம்..!! ” ரிக்ஸாவைத் தள்ளி பிரதான சாலைக்கு வந்து ஏறி மிதித்தான்.

இரண்டு நாட்களாக மழையின் காரணமாக ரிக்ஸாவை மிதிக்காததால் ஏறி இரண்டு மிதி மிதித்ததுமே முழங்காலும், கெண்டைக்கால் சதையும் வலித்தது.

வலிக்காதே! இரண்டு நாள் பட்டினியில் பலம் குறைந்து வலிக்கின்றதா..!? அப்படித்தானிருக்கும். இன்னும் இரண்டு மிதி மிதித்தால் சரியாகப் போய்விடும். ! – நினைத்து மிதித்தான்.

வானம் இப்போது பெரு மழையைக் குறைத்துக்கொண்டு பூந்தூறல் போட்டது.

சந்தோசமாக…. ‘ சவாரி எதுவும் கூப்பிடாதா..? ! ‘ – பார்த்துக்கொண்டே வண்டியை மிதித்தான்.

அவனுடைய துரதிர்ஷ்டம் அரைக்கிலோ மீட்டர் தூரம் பேருந்து நிலையத்தை நோக்கி வந்தும் ஒரு சவாரியும் கிடைக்கவில்லை.

இந்த மழை மட்டுமில்லையென்றால் நான்வர்றேன், நீ வர்றேன் நேரு இந்நேரம் எத்தனைச் சவாரி கிடைத்திருக்கும். ஆனால் இன்று…?!… ஒன்றுகூட இல்லை. காரணம் மழை !

மழையை மனசுக்குள்ளேயே கெட்டவார்த்தைகளால் திட்டித்தீர்த்து சபித்தான்.

பாதி சுமாரான மழையிலும், மீதி பூந்தூறலிலும் வந்ததால் சிங்காரு சுத்தமாக நனையவில்லை என்றாலும் முக்கால்வாசி நனைந்திருந்ததால் உடம்பு குளிரில் வெடவெடத்தது. கையும் காலும் மரத்துப் போனது.

ரிக்ஸாவை பேருந்து நிலைய சிமெண்ட் தளத்தில் நிறுத்திவிட்டு இறங்கி தலையைத் துவட்டிக்கொண்டு சட்டையைப் போட்டுக்கொண்டான். இவனைத் தவிர வேறு ரிக்ஸாக்கள் எதுவும் அங்கு நிற்க வில்லை. மழையி காரணமாக யாரு வரவில்லை.

பேருந்து நிலையத்தில் வழக்கமாக பேருந்துகள் வந்து போய்… ஊர்ந்து கொண்டிருந்தாலும்… வெயில் காலத்து கலகலப்பில்லை. நிலையத்தில் மட்டுமில்லாமல் எந்த பேருந்துகளிலும் கூட்டமில்லை.

இவன் வந்து நின்ற இரண்டு மணி நேரத்தில் ஒரு சவாரிக்கூட கிடைக்கவில்லை.

‘ச்சே ! இந்த நாய்ப் பொழப்பு பொழைக்கிறதைவிட செத்துப் போய் தொலைக்கலாம். ! ‘ – வெறுப்பாக வந்தது. அதே சமயம் மனைவி, மக்களை நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைத்தது.

இன்றைக்கும் பட்டினிதானா??! சவாரியே கிடைக்காதா..!? ‘ என்று வெறிக்கும்போதுதான்…

எவனோ ஒருவன் முகத்துக்கு நேரே மழையைக் கைகளால் மறைத்துக் கொண்டு இவனை நோக்கி வந்தான்.

” என்ன சார் ரிக்ஸாவா…? ” சிங்காரு வலியக் கேட்டான்.

” ஆமா…”

கேட்க சந்தோசமாக இருந்தது இவனுக்கு.

” எங்கே..? ”

” பூவம் கிராமத்துக்கு..”

பத்து கிலோமீட்டர் தூரம் ! சரியான சவாரி.

” ரேட்டு நியாயமா போட்டுக்கலாம். குந்து சார் ”

” சவாரி நானில்லே. ”

” லேடீசா..? வயசாளியா…? எங்கே போய் ஏத்தனும் சொல்லுங்க..? ”

” லேடீஸ் இல்லே. அரசு மருத்துவ மனையில ஒரு பொணம் ஏத்திப் போகணும்…”

அவன் சொல்லி முடிக்கவில்லை.

இவனுக்குத் திக்கென்றது.

இந்தத் தொழிலுக்கு வந்ததிலிருந்து இவன் ‘அந்த ‘ சவாரி செய்ததில்லை. அதையெல்லாம் செய்பவன் வேலு ஒருத்தன்தான். எவ்வளவு தூரமாய் இருந்தாலும் செல்வான். ஒரு நாளைக்கு ஒரு சவாரிதான். அந்த ஒரு சவாரியிலேயே ஐநூறு அறுநூறு கிடைக்குமாறு பார்த்துக்கொள்வான். இதற்காகவோ… அல்லது சவாரி செல்லும்போது பயமில்லாமல் செல்வதற்காக எப்போதும் தண்ணியிலேயே அரசு மருத்துவமனை முன்பு வண்டியைப் போட்டு காத்திருப்பான்.

ஒரு நாள் மழையில் இந்தமாதிரி சவாரி அடித்துவிட்டு வந்தவன்தான் ஒரு வாரகாலமாக உடம்பு சரியில்லாமல் எமலோகம் சென்றுவிட்டான். பாவம் எதைப்பார்த்து பயந்தானோ. இல்லே நோய்நொடி பிணத்தை ஏற்றிப்போய் அந்த நோய் வந்து செத்தானோ என்னமோ.

இந்த காரியங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை வந்த பிறகு இப்போது அப்படிப்பட்ட சவாரிகள் ரிக்ஸாவுக்கு வருவதில்லை. அதனால் யாரும் அரசு மருத்துவமனை முன்பு வண்டியை விடுவதில்லை.

சிங்காரு அந்த சவாரி செய்வதில்லை. பிணத்தை ஏற்றிச் சென்றால் வண்டி இடையில் பழுதாகும், வீணாகிப் போய்விடும் என்கிற நினைப்பு. அதுமட்டுமல்ல பிணமென்றாலே இவனுக்குப் பயம்.

மேலும் ரிக்ஸாவை வாடகைக்குக் கொடுக்கும்போதே…

” இதோ பாரு. நீ எவ்வளவு பாரம் வேணுமின்னாலும் ஏத்திக்கோ. ஆனா பொணம் மட்டும் ஏத்தக்கூடாது. அது ஏத்தினால் வண்டி வீணாப்போயிடும்.எனக்குத் தெரியாதுன்னு மட்டும் நெனைச்சி ஏத்தாதே. கண்டிப்பாத் தெரியும். ” சொல்லி கண்டித்துதான் கொடுப்பார்கள். அதனால் இந்த சவாரிக்கும் இவனுக்கும் எட்டாத தூரம்.

கிடைத்தது ஒரு சவாரி. அதுவும் பிண சவாரி ! – நினைக்கும்போதே இவனுக்கு உடல் நடுங்கியது. ஓனரை நினைக்க பயம் வந்தது. அவரையாவது எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம்.

ஆனால்….. பசி, மனைவி, குழந்தைகள்……. நினைக்க……

” சரி. வர்றேன் ” துணிந்தான்.

” எவ்வளவு கேட்கிறே..? ” வந்தவன் கூலி பேச ஆரம்பித்தான்.

வர்றேன்னு சொல்லியாச்சு . அப்புறமென்ன பேச வேண்டியதுதான். ! நினைத்த சிங்காரு… எவ்வளவு கேட்கலாம்…? யோசித்தான்.

” என்ன..? ” இவன் யோசனையைப் பார்த்து அவன் கேட்டான்.

வண்டி வாடகை நூத்தம்பது, அரிசி புளி ஐநூறு….. என்று மனசுக்குள் கணக்குப் போட்ட சிங்காரு….

” ஆயிரம் குடு ” சொன்னான்.

வந்தவனுக்குத் திக்கென்றது. முகம் கலவரமானது.

” அதிகம் ! ” சொன்னான்.

” மழை, தூரம், குக்கிராமம், திரும்பறதுக்கு வாடகை, வண்டி பழுதானால் செலவு…. எல்லாம் கணக்குப் பண்ணித்தான் கேட்குறேன். ”

வந்தவன் முகத்தில் ஈயாடாவில்லை.

” ரொம்ப ஏழைப்பட்டக் குடும்பம்.” அவன் ஈனசுரத்தில் முனகினான்.

” நான் மட்டுமென்ன வசதியானவனா…? ஏழைதான். மூணு நாளா பொழப்பு வேற இல்லே…சாமி ” முனகினான்.

வந்தவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அப்படியே நின்றான்.

மழை தூர ஆரம்பித்தது.

” சரி சார். நீ எவ்வளவு ரூவா தருவே…? ” இவனே அவனிடம் கேட்டான்.

” ஐ…. ஐநூறு….” இழுத்தான்.

” பாதி ரூவா தறேங்கிறீயே சாமி நியாயமா..? மழை கோட்டு வேற இல்லே. இந்த மழையில தலையில சாக்கைப் போட்டுக்கிட்டு அவ்வளவு தூரம் சொட்ட சொட்ட மிதிச்சி வரனும். பொணமின்னாவே ரொம்ப கணக்கும்.ரொம்ப கஷ்டம் சாமி.”

” எ…. எழுநூறு…”

” கடைசியா எட்டு நூறு குடு. அதுக்கு கொறைஞ்சி சத்தியமா கட்டுபடியாகாது! ” சிங்காரு கறாராக பேச்சை முடித்தான்.

” சரி ” வந்தவன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

‘ அப்பாடி….! ஏதோ ஆண்டவன் புண்ணியம் ! ‘ என்று மனதுக்குள் sசந்தோசப்பட்டுக்கொண்ட சிங்கரு இருக்கைக்குப் பின்னால் இருந்த சாக்கை மடித்து முக்காடாய்ப் போட்டுக்கொண்டு ரிக்ஸாவில் ஏறினான்.

வண்டி அரசு மருத்துவமனை நோக்கிச் சென்றது.

வானம் அதிக மழைக்காக இன்னும் கரு மேகங்களைத் திரட்டி அதிகமாக கருக்க ஆரம்பித்தது.

ரிக்ஸா மருத்துவமனை பிரதான கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்து பிணக் கிடங்குவிற்கு முன் நின்றது.

அங்கே… வாசலில் ஸ்டெக்ச்சர் ஒன்று இருந்தது. அதற்கு அருகில் கீழே வெள்ளைத்துணியால் மூடி ‘ அது ‘ கிடத்தப்பட்டிருந்தது.

அருகில்…. தலைவிரி கோலத்தில் அழுது அரற்றிக்கொண்டு ஒருத்தி இருந்தாள்.

அங்கு போவோர் வருவோர் ‘ அதை’ யும் அவளையும் அனுதாபமாகப் பார்த்துக் கொண்டு சென்றார்கள்.

சிங்காரு வண்டியை விட்டு இறங்கினான். அழைத்து வந்த ஆளும் இறங்கினான். இருவரும் பிணத்தின் முக்காட்டை நீக்காமல் அதை மெல்ல தூக்கி வண்டியில் சாய்வாக இருத்தினார்கள்.

வண்டியில் ஏற்றப்பட்டதுமே……அவள் அழுகையை அடக்க முடியாமல் …’ ஓ…’ வென்று கதறினாள்.

” தோ …பாருக்கா. நடந்தது நடந்து போச்சி. இனி அழுது என்ன ஆவப் போவுது..? ” அவன் சமாதானப்படுத்த… அவள் கொஞ்சம் மட்டுப்பட்டாள்.

” அக்கா..! நான் சைக்கிள்ல முன்னாடிப்போய் ஆக வேண்டிய காரியத்தைக் கவனிக்கிறேன். நீ ரிக்ஸாவுல உட்கார்ந்துக்கிட்டு ஆடாம அசையாமப் புடிச்சுக்கிட்டு வா… ” சொன்னான்.

ஆணான தனக்கே பிணமென்றால் பயமாக இருக்கையில் ஒரு பெண் சடலத்தின் அருகில் அமர்ந்து பிடித்துக் கொண்டு வருவதாவது..? – சிங்காருவிற்குச் சட்டென்று கோபம் வந்தது.

” இந்தா சார்…! அறிவிருக்கா உனக்கு. ஆயிரந்தானிருந்தாலும் ஒரு பொம்பளையைப் புடிச்சுக்கிட்டு வரச்சொல்றீயே… அதுக்குப் பயமா இருக்காது…? ” சத்தமாகக் கேட்டான்.

” அதில்லே…! புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருதான். நான் பக்கத்து வூட்டுக்க்காரன். அவுங்களுக்கு வேற ஆளில்லே. நான்தான் போய் மத்தக் காரியங்களைக் கவனிக்கணும்….”

சிங்காருவிற்கு நிலைமை புரிய மௌனமானான்.

அதற்குள் அந்தப் பெண்ணே ரிக்ஸாவில் ஏறி … சடலத்திற்கு அருகில் அமர்ந்து பிடித்துக் கொள்ள… சிங்காரு வேறு வழி இல்லாமல் பக்கவாட்டுப் படுத்தாக்களை இறக்கி மூடிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

வந்தவன்… கட்டிட சுவரோரம் சாத்தி இருந்த தன் அரத பழைய சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக மிதித்தான்.

ரிக்ஸா நகரத்தைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றிருக்காது…. கமறிக்கொண்டிருந்த வானம் ‘ சோ ‘ வென கொட்டத் தொடங்கியது.

மழையின் உக்கிரம் சிங்காருவின் மேல் பட்டு சுல்லு சுல்லுவென்று வலித்தது. பொருட்படுத்தாது மிதித்தான். வழி…..?

மழையின் இரைச்சலை மீறி அந்தப் பெண் விசும்புவது கேட்டது.

இறந்துவிட்டவன் கணவனில்லையா..! எவ்வளவு நேரம் உயிரற்ற சடலத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்து மனதைக் கல்லாக்கிக்கொண்டு வர முடியும்..? அழுகை, ஆற்றாமை இருக்கத்தான் செய்யும். ! ‘ – நினைத்துக் கொண்ட சிங்காரு வேகமாக மிதித்தான்.

அந்த அழுகை நிற்காமல் ஒப்பாரியாக மாறி பெருங்குரலெடுத்து அழுவதைப் பார்த்தபோது சிங்காருவிற்கு வேறொரு கவலை வந்தது.

மூடிய ரிக்ஸாவில் ஒரு பெண் அழுது கொண்டு வந்தால்… வண்டியில் பிணம் போகின்றது என்று போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் கண்டிப்பாக ஊகிக்க வாய்ப்புண்டு. அப்படி ஆகிவிட்டால் நாளைக்கு உயிருள்ளவர்கள் சவாரிக்கு அழைக்கக் கொஞ்சம் அச்சப்பட்டுத் தயங்குவார்கள். பிழைப்பு வீணாகிப் போய்விடும். ! – இந்த நினைப்பு வந்ததும் சிங்காரு ரிக்ஸாவை ஓரமாக நிறுத்தி கீழ் இறங்கி… படுதாவை விலக்கி… கெஞ்சும் குரலில்…

” இதோ பாரு தங்கச்சி. ! உன் துக்கம் பெருசுதான். இன்னா செய்யுறது..? அழுவாதே ! நீ அழுதின்னா வண்டியில பொணம் போறது தெரியும். ரோட்டுல போற வர்ற அத்தனை பேரும் அத்தனை பேரும் வண்டியை பயமா பார்ப்பாங்க. அடுத்த நாள் ஒரு பய என்னை பொணம் ஏத்திப்போன வண்டின்னு சவாரிக்கு அழைக்க மாட்டான். தயவு செய்து என் பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுடாதம்மா. வாயில துணியை வைச்சுக்கிட்டு சத்தம்போடாம பொறுமையா அழுதுகிட்டு வாம்மா. ” சொல்லி கை எடுத்து கும்பிட்டான்.

அவள் அடங்கிப் போனாள்.

கொஞ்ச தூரம்தான் வண்டி சென்றிருக்கும்…. உள்ளே மறுபடியும் மெல்லிசான செருமல் சத்தம்.

எத்தனை முறை கெஞ்சி, கையெடுத்துக் கும்பிட்டாலும் இந்தப் பெண்ணின் துக்கம் மாறப் போவதில்லை. மட்டுப்படப்போவதில்லை. விதி… ! மிதித்தான்.

இப்போது பெருமழையோடு கொஞ்சம் காற்றும் சேர்ந்து கொண்டு வண்டியைப் பின்னால் தள்ளியது. வயிற்றில் வேறு பலமில்லை. மிதிப்பதற்கு கஷ்டமாக இருந்தது. வண்டியில் அதிக பாரம் ஏற்றி மிதிப்பதை போல கஷ்டமாக இருந்தது.

பொணம் கனக்கும் ! என்று சொல்வது உண்மைதான் ! – நினைத்துக் கொண்டு முடிந்த வரையில் சிங்காரு வேகமாக மிதித்தான்.

வழி வேறு தெரியாமல் ….” ஏம்மா..! இப்படித்தான் போவனுமா..? ”என்று இரண்டொரு இடங்களில் நிறுத்தி அந்தப் பெண்ணிடம் வழி கேட்டு கேட்டுச் செல்வது அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.

இதுவரையில் தார் சாலையில் சென்றுகொண்டிருந்த ரிக்ஸா ஓரிடத்தில் வந்து … இப்படிப் போங்க…” என்று அந்தப் பெண் சொல்லி வழி காட்டியதும்…கிராமத்திற்குச் செல்லும் அந்த மண் சாலை சேறும் சகதியுமாக இருக்கவே… பாரத்தில் வண்டியின் சக்கரங்கள் மண்ணில் அழுந்தியது.

ஏறி மிதித்தால் நகராது தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும்! – தெளிவாகத் தெரிய…இறங்கித் தள்ளினான். முடியவில்லை. !!

இவன் கஷ்டத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்த அவளும் இறங்கி…. வண்டியைப் பின் பக்கம் தள்ளி உதவி செய்ய வண்டி கொஞ்ச தூரம் செல்வதற்குள் இவனுக்கு நாக்குத் தள்ளியது. அந்த விடா மழையிலும் வேர்த்தது.

” ஏன்.. தங்கச்சி ! இன்னும் எவ்வளவு தூரம் இப்படிப் போகணும்..? ” கேட்டான்.

” கொஞ்ச துரம்தாண்ணே..! ” சொன்னாள்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு சிங்காரு தள்ள விலா எலும்புகள் புடைத்து… வலித்தது.

நல்லவேளையாக வண்டி பிடித்தவன் இரண்டு ஆட்களுடன் ஓடி வந்து இவனுக்குத் தள்ளி உதவி செய்ய….

‘ அப்பாடி…! ‘ – இவன் ரிக்ஸாவைக் கொண்டு வந்து அந்த குடிசை வாசலில் நிறுத்த மயக்கம் வந்தது.

அதை இறக்கக்கூட திராணி இன்றி அந்த குடிசை முன் உள்ள மண் தரையில் மழை நீர் ஓட்டத்தையும் பொருட் படுத்தாது ஒரு ஓரமாக அமர்ந்தான்.

பிணத்தை வண்டியை விட்டு இறக்கி வீட்டில் கிடைத்துவதற்குள்.. பெண்கள் கூட்டம் ஓடி வந்து ஒப்பாரி வைக்க…. அந்த பாதி மயக்கத்திலும் இவனுக்கு மனசை என்னவோ செய்தது.

இந்த மரணத்தில் தாக்கம், அவலத்தையெல்லாம் கேட்காமலிருக்கத்தானோ வேலு எப்போதும் தன்னை மறந்த நிலையில் இருக்கின்றான் ! இவனுக்குள் நினைப்பு வந்தது.

சிறிது நேரம் அப்படியே கண்களை மூடிக்கொண்டு சாய்ந்திருந்து விட்டு விழித்துப் பார்த்தான்.

வண்டி வாசலை விட்டு நகர்த்தி ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

மனிதனின் கஷ்ட நஷ்டம் தெரிந்த புண்ணியவான்கள் நகர்த்தி வைத்திருக்கின்றார்கள். – நினைத்துக் கொண்ட சிங்காரு வண்டி அமர்த்தியவனைக் கண்களால் துழாவினான்.

அவன் இரண்டு வீடு தள்ளி யாருடனோ பேசிக்கொண்டு வருவதைக் கவனித்தான் .

மழை இப்போது சுத்தமாக விட்டுப் போயிருந்தது.

வரட்டும் ! வாங்கிக் கொண்டு புறப்படலாம். ! ” நினைத்தவன் கூரையிலிருந்து சொட்டு சொட்டாக விழும் மழை நீரை விரலால் தாங்கி விட்டான்.

அவன் வந்தும் இவனைக் கவனிக்காமல் குடிசைக்குள்ளே சென்றதை பார்த்து… ‘ வரட்டும் ! ” காத்திருந்தான்.

வரவில்லை.

எட்டிப்பார்த்தான். பிணத்தின் தலைமாட்டில் மனைவி அழுது அரற்றிக்கொண்டிருக்க… அவளுக்குப் பின்னால் கையைக் கட்டிக்க கொண்டு அவன் நின்றிருந்தான்.

” வாய்யா ! வந்து கூலியைக் கொடுத்துட்டுப் போ…” என்று இந்த துக்க நேரத்தில் எப்படி கேட்டு வாங்குவது..?!

சிங்காரு சங்கடமாக நெளிந்தான். இதுவரை மழையினாலும் உழைப்பினாலும் பதுங்கிக் கிடந்த பசி வயிற்றைக் கிள்ளியது.

இன்னொரு முறை சிங்காரு அவனை எட்டிப் பார்த்தான்.

‘ கொஞ்சம் இரு வைத்து தர்றேன் ! ‘ – என்பது போல் அவன் இவனுக்குச் சைகை காட்டினான்.

‘ வரட்டும் ! ‘ – சிங்காரு உட்கார்ந்தபடியே அந்த தெருவை நோட்டமிட்டான்.

சாலையோரம் உள்ள அந்த கிராமத்து தெருவில் மொத்தம் பத்துப்பதினைந்து வீடுகள் மட்டுமே இருந்தது. எல்லாம் கீற்றுக் குடிசைகள். எல்லாருமே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள விவசாயக் குடும்பம். தெரிந்தது.

இன்னும் அந்த ஆள் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.

என்ன !! ஆள் கேட்டுத்தான் கொடுப்பான் போலிருக்கே…! ” இவனுக்குள் தோன்ற அவனைக் கை காட்டி அழைத்தான்.

அவன் ஒருவித தயக்கத்துடன் வந்தான்.

சிங்காரு உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து…

” சார் ! கூலியைக் குடுத்தா நான் போவேன்..” சொன்னான்.

” வண்டியை எடுத்துக்கிட்டு வாங்க. தர்றேன். ! ” சொல்லி அவன் முன்னே நடந்தான்.

‘இங்கேயே கொடுக்கக் கூடாதா..?! ‘ முணுமுணுத்துக்கொண்டே அவன் பின்னால் சிங்காரு ரிக்ஸாவைத் தள்ளிக் கொண்டு நடந்தான்.

கொஞ்சம் தூரம் தள்ளி …..இதோ தருவான் , அதோ தருவான் என்று எதிர் பார்த்துக்கொண்டு நடந்த சிங்காருவிற்கு அவன் அப்படி எதுவும் கொடுக்காமல் மெளனமாக நடப்பதைப் பார்க்க…. சில்லறை இல்லையா …?! ” நினைத்தான்.

” ஏன் சார் ! எங்கே வந்து தரப் போறீங்க. ஏன் சில்லறை இல்லியா..? .” இவனாகவே கேட்டான்.

அவன் திரும்பி..

” வாங்க தாறேன் ..’ நடந்தான்.

” எங்கே..”

” டவுன்ல வந்து…”

” ஏன்…?? ”

நடந்தவன் நின்றான்.

கேள்வி கேட்டு நின்ற சிங்காருவை கொஞ்சம் ஆழமாகப் பார்த்து…பின் தணிந்த குரலில்…

” கையில நூறு ரூபாதான் இருக்கு. ஊர்ல வந்து பாக்கியைப் புரட்டிக் கொடுக்கலாம்ன்னு நெனைச்சி வந்தா… இங்கே யார்கிட்டேயும் பைசா இல்லே. புருசனைப் பறிகொடுத்த அந்த அக்காகிட்டேயும் கையில் மடியில ஒண்ணுமில்லே. பாவம் அவுங்களை சொல்லிக் குத்தமில்லே. எல்லாரும் ஏழைங்கதானே ! அதனால….” சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் நிறுத்தினான்.

” அதனால….” சிங்காருவிற்குத் திக்கென்றது. அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

” அக்காகிட்ட விசயத்தைச் சொன்னேன். அக்கா வெறும் மஞ்சள் கயித்தைக் கட்டிக்கிட்டு…இதைக் கழற்றிக் கொடுத்திருக்கு. இத வித்து உங்களுக்குப் பணத்தைக் கொடுத்துட்டு… மேல ஆக வேண்டியக் காரியத்தைப் பாருன்னு சொல்லிச்சு. வேற வழி இல்லே. வாங்கிகிட்டு வந்துட்டேன். டவுன்ல வந்து காசாக்கித் தரணும்.” சொல்லி சட்டைப் பையில் கையை விட்டு தாலியை எடுத்துக்காட்ட….

பார்த்த சிங்காரு உறைந்தான். துடித்துப் போனான்.

அறுபட வேண்டிய தாலிதான். ஆனால்…. அது அதற்கான காலத்திற்கு முன்பே அறுக்கப்பட்டதை நினைக்க….. அவன் உடம்பு நடுங்கியது.

மெல்ல தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டு ஒருகணம் நிதானித்தான்.

” ஐயா ! நீங்க கையில் எவ்வளவு பணம் வைச்சிருக்கேன்னு சொன்னீங்க..? ” ஈனசுரத்தில் கேட்டான்.

” நூறு..”

” அதைக் கொடுங்க கிளம்பறேன்..”

” வ… வந்து …” அவன் தயங்க….

” உங்க நிலமையைப் பார்த்து இந்த பணமும் வேணாம்ன்னு சொல்லிப் போயிடுவேன் ஐயா. ஆனா என் குடும்பத்துல ரெண்டு நாளா கொலைப்பட்டினி. நூறை க் கொடுங்க போதும் வயித்தை நனைச்சிக்கிறோம். ! ” கை நீட்டினான்.

அவன் கொடுக்க மனமில்லாமல் கனத்த இதயத்துடன் அந்த தாளை சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொடுக்க…

வாங்கிக் கொண்ட சிங்காரு… மெல்ல ஏறி வண்டியை விட்டான்.

பார்த்துக்கொண்டு நின்ற இவனுக்கு…. கண்கள் தளும்பியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *