சவண்டிக் கொத்தன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 9,472 
 
 

வீட்டில் ஒரே கலகலப்பாயிருந்தது. அப்படி கலகலப்பை உண்டாக்கினது பெரும்பாலும் குழந்தைகளே. அந்தச் சூழலில் அப்படிச் செய்யக்கூடாது என்று தெரிந்திருந்தால், அவர்களும்கூட அப்படிச் செய்திருக்கமாட்டார்கள்தான். பெரியண்ணனும், சின்னண்ணனும் அத்தானிடம் நாளைய சடங்குகளுக்கு வேண்டிய ஏற்பாடு பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அம்மா எதுவும் பேசவில்லை. ஏதோ பெரிதாய்ச் சிந்திக்கிற மாதிரி பெரிய கண்களால் சுற்றிலும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவ்வப்போது ஏதாவது தனக்குத் தோன்றியதைத் தனக்கே சொல்லிக் கொண்டிருந்ததோடு சரி.

அப்பா செத்துப் போய்ப் பத்து நாட்கள் ஓடிவிட்டன. உழைப்பின் பலன் தெரியும் உடம்பு அவருக்கு. வைரம் பாய்ந்தது; எண்பத்திரண்டு வயதிலும் ஆஜானுபாகுவான தோற்றம். அத்தனை பேரையும்–கடைசியான ரகு உட்பட எட்டுபேரை–வளர்த்து ஆளாக்க எத்தனை உழைத்திருக்க வேண்டும் ? அவர் சடலத்தைத் தூக்கக்கூடக் கஷ்டப்பட்டுப் போனார்கள்.

சாவுதான் எப்பேர்ப்பட்ட விஷயம் ‘ இத்தனைக் காலம் நெருங்கிப் பழகிய ஒருவரை இனிப் பார்க்கவே முடியாது. அந்தக் கம்பீரமான மனிதன் இருந்த–சென்ற–இடங்களையெல்லாம் வெறும் காற்று மட்டுமே நிரப்பிக் கொண்டிருக்கும் என்பது சாதாரண விஷயமா ?

எல்லோரின் இயக்கங்களையும் குருக்களையர் திடுமென வந்து கலைத்தார்.

‘என்னப்பா, ஆரமிக்கலாமோல்லியோ… ‘ என்று நீட்டி முழக்கிக்கொண்டே வந்தார் அவர். எல்லார் பார்வையும் வாயில் பக்கம் திரும்பியது. பெரியண்ணன் அவர் பக்கம் திரும்பி, ‘ஓ, ஆரமிக்கலாம் மாமா, எல்லாம் ரெடியாயிருக்கு ‘ என்று சொல்லி, நடுக்கூடத்தில் ஒரு பலகையைப் போட்டார்.

சில நிமிடங்களுக்குள் அந்த இடத்தில் சடங்குக்குத் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டன. ‘மூணுபேரும் ஒக்காருங்கோப்பா ‘ என்று சொல்லிக்கொண்டே பலகையில் உட்கார்ந்தார் குருக்களைய்யர்.

தர்ப்பைப் புல்லைப் பிய்த்து ஹோமகுண்டத்தைச் சுற்றி வைத்தார். முன்னால் இருந்த மூன்று பேருக்கும், ‘காலுக்கடியில் போட்டுக்கோ ‘ என்று சொல்லி இரண்டிரண்டு புல்லைக் கொடுத்தார. இலையில் கிண்ணங்கள் செய்து கொண்டே பேசினார் அவர்.

‘இன்னிக்கு அப்பா இறந்துபோன பதினோராம் நாள் ‘ சவண்டி, அதாவது பிரேத ரூபத்தில் உலாவிக்கொண்டிருக்கிற அப்பாவோட ஆவிக்கு அன்னம்படைச்சு, ஹோமம் பண்ணி, பிதுர் ரூபத்துக்கு மாத்தறது. நாளைக்கு அந்தப் பிதுர் ரூபத்தைத், தாத்தாவோட, கொள்ளுத் தாத்தாவோட பிதுர்களோட சேர்க்கணும், ஆக, அப்பா தங்களோட மூதாதையர்களோட சங்கமமாயிட்டார்ன்னு அர்த்தம். இன்னிக்கு ஒரு பிராமணனுக்கு–அப்பாவோட பிரேதமா பாவிச்சுச்–சாதம் போடனும். நாளைக்கு மூணுபேர்–அப்பாக்கு, தாத்தாக்கு, கொள்ளு தாத்தாக்கு-இதுதான் சவண்டி… ‘ என்று சடங்கை விளக்கிவிட்டு, ‘என்னப்பா அவன் வந்தானா ? ‘ என்று கேட்டார் அத்தானிடம்.

அவர் கேட்டது சவண்டிக் கொத்தனை. அதாவது பிரேதமாக பாவிக்கிறவனை. ‘உம், வந்தாச்சு, ‘ என்றார் அத்தான்.

‘குளிச்சு தெளிச்சு எல்லாம் பண்ணினானா ? ‘

‘ஓ…ஆச்சு. ‘

‘ஏன்னா, நமக்கு முன்னால செஞ்சாதான் திருப்தி. ஆத்தில குளிச்சிட்டு வான்னா, குளிக்காமயே குளிச்சேம்பான். யாரு கண்டது ? ‘ சிரித்துக்கொண்டே சொன்னார் குருக்களைய்யர். இது கேட்டு ஹாலில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

ரகு மட்டும் அமைதியுடன் இந்த நிகழ்ச்சிகளைக் கவனித்த வண்ணமிருந்தான். அவனுக்குக் கொல்லைப்புறம் கிணற்றடியில் நின்று கொண்டிருந்தவன் நினைவுக்கு வந்தான்.

ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, ஈரவேட்டியைக் கைகளால் உயர்த்திப் பிடித்துக் காய வைத்துக் கொண்டிருந்தான், சவண்டிக் கொத்தன். அவனுடைய உடை என்று சொல்லிக் கொள்ள, அவனிடமிருந்தது, அந்த வேட்டியும் துண்டும் மட்டுமே. இரண்டு மாதங்களுக்கு முன் இப்படித்தான் ஒரு வீட்டில் சவண்டி சாப்பிட்டபோது வைத்துக் கொடுத்தது. வேட்டியைக் காய வைத்தபடி அப்பாவியாக விழித்தபடி நின்று கொண்டிருந்தான் அவன்.

ப்ரேதஸ்ய கிருஷ்ணமூர்த்திஸ் ஸ்ர்மானாம்–அஸ்மைபோம்… என்று அந்த மந்திரத்துடன் ஹோமத்தை முடித்துக் கொண்டார். பின் ‘சரிப்பா அவன வரச் சொல்லுங்கோ, ‘ என்றார் குருக்களைய்யர்.

சற்றைக்கெல்லாம் வந்தான் அவன்.

ஒரு வாழை இலையில் அவனை உட்கார வைத்தார்கள். இன்னொரு பெரிய இலையை அவன் முன்னால் வைத்தார்கள். டம்ளரில் தண்ணீர் வைத்தார்கள். குடும்பத்தின் ஆண் வாரிசுகளும் அவர்களின் மனைவிமார்களும் ‘அவனை ‘ மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தார்கள்.

‘ப்ரேதஸ்ய கிருஷணமூர்த்திஸ் ஸர்மானாமாஹஉம், ‘ என்று அவன் கையில் மூன்று ஸ்பூன் தண்ணீர் விட்டார் பெரியண்ணன்.(கிருஷணமூர்த்தி –அப்பா பெயர்.)

‘என்னப்பா, பார்த்து நிதானமாச் சாப்டு என்ன ? பார்த்துக் கேட்டுப் பரிமாறுங்கோம்மா, ‘ என்றார் குருக்களைய்யர்.

கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்தான் சவண்டிக் கொத்தன். கூனிக்குறுகிப் போயிருந்த அவனது தேகமும், சர்க்கஸ்காரனுக்கு — அவன் குச்சியைக் காட்டிச் செய்யும் அதட்டலுக்குப் பணியும் விலங்குபோல் அமைதியாய், ‘என்ன செய்யணுமோ சொல்லுங்கோ, செய்யறேன் ‘ என்கிற வண்ணமிருந்தது அவன் இருந்தது.

சித்தப்பா அவனுக்கு முன்னால் போய், ‘எது வேணுமோ, கேட்டு திருப்தியா சாப்டுப்பா. உன் திருப்திதான் எங்க திருப்தி. ‘ என்றார்.

இதைக் கண்ட குருக்களைய்யர், ‘போரும் இப்பிடி வாங்கோ. சும்மா பலவந்தப்படுத்தக்கூடாது. அவன் நிறையச் சாப்டா நமக்குத் திருப்திதான். ஆனா அவன் வயித்தில எடம் வாண்டாமோ ? ‘ என்று சொல்லி அசட்டுச் சிரிப்புடன் ‘இப்படித்தான் என்னாச்சு தெரியுமோ ? கோவில் வீதி அம்மாஞ்சி வீட்ல அவா தாத்தாவுக்கு சவண்டி சாப்பிடறவனுக்கு எதிர்ல உட்கார்ந்திண்டு ‘இன்னுங் கொஞ்சம் …இன்னுங் கொஞ்சம் ‘ ன்னு நச்சின்டே இருந்தான் அம்மாஞ்சி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான் இவன். கடசில பாதியோட எழுந்து போயே போய்ட்டான் ‘ ‘ கெக்கெக்கே என்று சிரித்தார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

‘…அது மாதிரி– எத்தனை முடியுமோ அத்தனதான் முடியும். ‘

சிரிப்பலை ஓய்ந்தது. சவண்டிக் கொத்தன் கண்களை மட்டும் உயர்த்தி அவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு எச்சிலை விழுங்கினான்.

ரகுவுக்கு ஒண்ணும் புரியவில்லை. ஒருத்தனைச் சாப்பிடவும் உட்கார வைத்து, அவனுக்கு முன்னாலேயே அவனைச் சார்ந்தவனை இப்படி பேசிச் சிரிக்கவும் வேணுமா ?

ரகுவின் மனதில் மீண்டும் கொல்லைப்புறம் … அந்தச் சவண்டிப் பிராமணன் சொன்ன வார்த்தைகள் காதுகளில்….

இருபத்தைந்து வயதேயான தனையொத்த வாலிபனின் நிலைதான் எத்தனை அலங்கோலம் ? எப்படியெல்லாம் படுத்துகிறது இந்தச் சமூகம் அவனை.

‘…சார் நா பி.யு.சி. படிச்சிருக்கேன், அப்பாக்கு சமையல் வேலை. அம்மா இல்லை. போய்ட்டா. எனக்கு மூணு தங்கச்சிங்க. நாலு வருஷமா வேலை கிடைக்காம அலைஞ்சிண்டிருந்தேன். பிரயோஜனப்படலை. கடசீல அப்பா, தற்காலிகத்துக்கு இதுக்குப் போன்னு அனுப்பினா… ‘

‘இதுவும் இப்ப ஒரு வருஷமாச்சு. வேறே எங்கயும் முயற்சி பண்ணிப்–பெரிய ஹோட்டல் மாதிரி எங்கயாச்சும் போனா, எஜெண்டுகள் விட மாட்டேங்கறா… ‘

‘ஏஜெண்டா ? ‘ –ரகு குறுக்கிட்டான்.

‘ஆமா… உங்க குருக்கள் மாதிரி…அவாதான் வந்து சொல்லுவா, இன்ன தேதிக்கு இன்ன வீட்டுக்கு வான்னு… இந்தத் தொழிலுக்கு யாரும் சட்னு வரமாட்டா. அதுனால எங்கயாவது வேலை கிடைச்சுப் போனாலும், இவங்க நம்மளப் பத்தித் தப்பாப் பேசி வேலையப் போக்கிடுவாங்க… ‘

‘ஒண்ணுமே புரியலை சார். எதிர்காலம் ஒரே இருட்டாயிருக்கு… ‘

‘உங்களுக்கு இதில என்ன கிடைக்கும் ? ‘

‘எங்களுக்குன்னு அம்பதோ எழுபத்தஞ்சோ உங்கள்ட்ட வாங்கிண்டு. எங்ககிட்ட பதினஞ்சோ இருவதோ தருவா. தவிர வேட்டி துண்டு. தங்களுக்கு வேண்டியவங்களுக்கு ரெண்டோ மூனோ சேத்துக் குடுப்பா. ‘

‘அது யாரு அவங்களுக்கு வேண்டியவா ? ‘

‘வேற வேலைக்குப் போக முடியாதுன்ற நிலைல இருக்கிறவா–வயசானவா… ஏஜென்டுகள்கிட்ட மத்தவாளபத்தி சொல்லி ரெண்டு காசு கூடப்பாக்க ஆசையுள்ளவா… என்ன சார் வாழ்க்கை ? எப்பப் பிணம் விழும்னு பாக்கற வாழ்க்கை…மலை மலையாத் தங்கச்சிங்க. ‘

கரகரப்பான, ஆனால் அமைதியான குரலில் அவன் பேச்சு இன்னமும் எதிரொலித்தது. கிணற்றுக்குள்ளிருந்து வருகிற குரல், பயந்து வரும் குரல்.

‘…தப்பித் தவறிக்கூட நா சொன்னதை வெளிய விட்டுடாதீங்கோ சார். அனுதாபத்தோட கேட்டேள். என் பாரத்தக் கொஞ்சம் எறக்கீட்டேன், அவ்வளவுதான். ஏஜண்டுக காதுக்குப் போனா அவ்வளவுதான். ‘

நினைவலை அறுந்தது. சுற்றிலும் அமைதி. சாப்பிடுபவனையே பார்த்துக் கொண்டிருக்கிற கண்கள். வெளியில் குழந்தைகளின் இரைச்சல். வாழ்க்கையில் ஒவ்வொன்றும்- ஒவ்வொருவரும், மற்றொன்றை-மற்றொருவரைச் சார்ந்தே நிற்க வேண்டும்-முடியும் என்பதே போல சுவரில் நாட்காட்டிகள், சுவர்க்கடிகாரம் இத்யாதி… இத்யாதி…

கேட்கலாமா வேண்டாமா என்கிற தொனியில் சவண்டிக் கொத்தனிடம் கேட்டார் பெரியண்ணன், ‘ஒனக்கு எந்த ஊருப்பா ? ‘

அவ்வளவுதான்.

எங்கிருந்துதான் வந்ததோ அந்த அவசரம் ‘ குருக்களைய்யர் பரபரப்புடன், ‘அப்பிடியெல்லாங் கேக்கக் கூடாது, ‘ என்று பெரியண்ணனைத் தடுத்தார்.

அவர் மட்டுமல்ல, எல்லோரும் குருக்களைய்யரைப் பார்த்தனர். நிதானமாகச் சொன்னார் அவர்.

‘ஏன்னு கேட்டா…வந்திருக்கறது யாரு, என்னன்றது நமக்குத் தெரியாது பாருங்கோ. தூரத்துச் சொந்தமாக் கூட இருக்கலாம். ‘

‘…ஒருக்கா என்னாச்சு…அம்பியோட அப்பா செத்துப் போனப்ப, சவண்டிக்கு வந்திருந்தவங் கிட்டப் பேச்சுக்குடுக்கப் போயி, சுத்திச் சுத்திப் பார்த்தா, செத்துப் போனவரோட அத்தை பையன். ரொம்ப நாளா அவாளுக்குள்ள ‘டச் ‘சில்ல போலிருக்கு. அவா தூரமா போயிட்டா. போக்குவரத்து இல்லே. கத கெட்டுதா ‘ அப்புறம் என்ன செய்யறது… ? ஒண்ணும் வழியில்லை. இவாளுக்கும் சங்கடம். அவனுக்கும் சங்கடம். வேற வழியில்லாம அவன் சாப்டுட்டுப் போனான். இத்தனைக்கும் தீட்டுக் காக்க வேண்டியவன்…

‘…அது மாதிரி நமக்கு எதுக்கு சொல்லுங்கோ, யாரு என்னன்ற விஜாரமெல்லாம், நமக்கு காரியமாகணும். அவ்வளவுதான். என்ன ? ‘ நீட்டி முழக்கினார்.

‘ஆமாமா…அதெல்லா வாஸ்தவந்தான்… ‘ என்றார் சித்தப்பா. பெரியண்ணனும் சின்னண்ணனும் சிரித்தனர் சப்தமின்றி பல்லைக் காட்டிக் கொண்டு.

சின்னண்ணன் தனக்கே உரிய பாணியில் தலையாட்டிக் கொண்டே சொன்னான். ‘புண்ணியமுண்டு…இதுக்கெல்லாம் குடுத்து வக்யணுமே…புண்ணியமுண்டு. ‘

மீண்டும் அங்கே அமைதி.

ஒரு வழியாக அவன் சாப்பிட்டு முடித்தான்.

அவன் கையில் மூன்று ஸ்பூன் தண்ணீர் விட்டார் பெரியண்ணன். அவன் அதைக் குடித்துவிட்டுக் கைகழுவி விட்டு மீண்டும் அந்த இலையில் வந்து அமர்ந்தான்.

குருக்களைய்யர் ஒரு தட்டில் வேட்டி துண்டும், ஏதோ பணமும் எண்ணி, வைத்தார். வெற்றிலை பாக்கும் வைத்து பெரியண்ணனை அவனிடம் கொடுக்கச் சொன்னார்.

மறுபடியும், ‘ப்ரேதஸ்ய கிருஷ்ணமூர்த்திஸ் ஸர்மானாமாஹஉம்: அஸ்மைபோம்… ‘

குடும்பத்தினர் மூன்று முறை அவனை வலம் வந்து நமஸ்கரித்தனர்.

‘எங்கேப்பா, எல்லாம் அந்தப் பக்கம் திரும்பிக்கோங்கோ. அவன் போறதை யாரும் பாக்கக்கூடாது. நாகு, வழில யாரையும் நிக்க வேண்டான்னு சொல்லு ‘ ‘ குருக்களைய்யரின் சொல்லின்படி ‘டக் ‘ கென்று எல்லாம் நடந்தது. (நாகுதான் அத்தான்)

‘சரிப்பா போய்ட்டு வா, நாளைக்கு நா சொன்னவாளை வரச்சொல்லு. என்ன, திருப்திதானே ? குருக்களைய்யரின் குரல் மட்டும் அவர்களுக்குக் கேட்டது. சவண்டிக் கொத்தன் தலையை ஆட்டியிருக்க வேண்டும். இல்லையெனில் திருதிருவென விழித்தபடி குருக்களைய்யரைப் பார்த்திருக்க வேண்டும். அவன் குரலே கேட்கவில்லை.

அவன் எப்படித் தலையை ஆட்டியிருப்பான். துணி, வெற்றிலை பாக்கு இதையெல்லாம் ரெண்டு கைகளிலும் பிடித்துக் கழுத்துக்கிட்டக் கொண்டு போய்க் கும்பிடும் பாவனையில் குனிந்து தலையை ஆட்டியிருப்பானா ?

‘திரும்பிக்கோங்கப்பா… ‘ என்ற குருக்களைய்யரின் குரல் கேட்டதும் திரும்பினர்.

ரகுவுக்கு மண்டையில் அடித்த மாதிரி இருந்தது அது.

எத்தனை கெஞ்சலாக கேட்டான் அவன் ? இதுக்கு மேலேயும் இரங்கல் தொனி என்று ஒன்று உண்டா ? வாழ்க்கையில் பட்ட அவஸ்தை…புழுவாக நெளிஞ்சு உடம்பைக் குறுக்கி எத்தனை பாடுபட்டுச் சொன்னான் அவன் ‘

‘…சார் உங்களப் பாத்தா நல்லவாளாத் தெரியறது. ஏதாது ஹெல்ப் பண்ணுங்கோ சார். எங்கயாச்சும் ஒரு கம்பெனியிலே கூட்டற வேலை கிடைச்சாலும் போதும். ஏஜெண்டுகள் அங்கெல்லாம் வந்து கெடுக்க முடியாதுன்னு நம்பிக்கை… ‘

முதலிலேயே அவன் விலாசத்தை வாங்கி வைத்திருக்கலாம்தான். இப்படி ஆகும் என்று யாருக்குத் தெரியும் ?

அனேகமாக…

‘ஏன் மாமா, நாளைக்கும் இன்னிக்கு வந்தவர் வருவாரா ?… ‘ எண்ணத்தின் வெளிப்பாடாய் கேள்வி முளைத்தது குருக்களைய்யரிடம்.

‘யாரு, அவனா ? ம்ஹஉம், கூடாது. முதநா வந்தவா மறுநா வரக்கூடாது. ‘

ஐயோ என்றாகிவிட்டது.

சடங்கு முடிந்து வெளியே போய்ப் பார்த்தான். இல்லை. அவன் போய்விட்டான்.

இப்படியாக இன்றைய நாள் சடங்கு முடிந்தது.

மதியம்.

எல்லோரும் சாப்பிட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

நாளைய சடங்குகளுக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர் சிலர்.

பெரியண்ணனும், பெரியண்ணியும் ஒரு மூலையிலும், சின்னண்ணனும் சின்னண்ணியும் இன்னொரு மூலையிலும் உட்கார்ந்திருந்தார்கள்.

நிலக்கடலையைச் சுத்தம் செய்தபடி மாமி, சித்தி இன்னும் அக்காமார்கள்.

குழந்தைகள் அந்தப் பெரிய கூடத்தை வட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்தன.

‘அத்தப்பா…அத்தப்பா… ‘ என்று சின்னண்ணன் குழந்தை ரகுவின் கால்களை வட்டமிட்டபடி…

எனக்கு இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்கிற பாவனையில் அம்மா.

சித்திதான் முதலில் பேசினது.

‘பிரேதச் சோத்தத் தின்னு தின்னு, மூஞ்சி பிரேதம் மாதிரியே ஆயிடுத்து அவனுக்கு… ‘

இதைக் கேட்டு ‘ஹஹ்ஹ்ஹா ‘ என்று சிரித்தாள் அவள் பெண்.

சில பெண்டிர் புன்னகைத்தனர்.

‘இந்தக் காலத்திலயும் இதுக்கெல்லாம் ஆள் கிடைக்கிறதே, இதுவே பெரிய விஷயம்… ‘ பெரியண்ணன் பேச, சின்னண்ணன் குறுக்கிட்டான்…

‘…ஆமா…எல்லோரும் பிரஸ்டாஜ் பாத்துட்டுப் போய்ட்டாங்கன்னா என்னாகறது ? என்றான் அவன்.

‘வேலைக்குப் போய்ப் பொச்சு வணங்காம, உக்காந்து திங்கணும்னு நினைக்கறதுகள் இந்தத் தொழிலுக்குத்தான் வரும்… ‘ சித்தியின் இந்த கண்டுபிடிப்புக்காக இன்னொரு முறை சிரித்தாள் அவள் பெண்.

‘வேலை கிடைக்காம எத்தனை கஷ்டத்துக்கப்புறம் அவன் இதுக்கு வந்திருக்கான் தெரியுமா ? ‘ சித்தியிடம் கடிந்து கொண்டான் ரகு.

‘…ஆக, இறந்து போனவரோட ஸ்தானத்தில வச்சு சோறு போடறோம்னு பேரு பண்ணற ஒருத்தருக்கு, நீங்க குடுக்கற நிஜமான மரியாதை இதுதான். இல்லையா… ‘ அவன் வார்த்தையில் வெட்கிப் போனாள் சித்தி.

‘ப்ச்… ‘ மொச்சுக் கொட்டினான் சின்னண்ணன்.

‘புண்ணியமுண்டு. இதுக்கெல்லாம் குடுத்து வகயணுமே புண்ணியமுண்டு… ‘ என்றான் அவன்.

ரகு மெதுவாகக் கேட்டான், ‘புண்ணியமுண்டா ? ஒண்ணு செய்வோமா ? நானும் நீயும் வேலைய விட்டுட்டு இந்தத் தொழில்ல எறங்கிடலாமா ? புண்ணியம் கிடைக்குமே …அது என்ன சாதாரண சமாசாரமா ? ‘

சின்னண்ணன் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *