காய்ச்சமரம்

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 44,032 
 

நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி.அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது.

நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக் காடு. நாலுசோடி உழவு மாடு. தொழுநிறைய கால்நடைச் செல்வங்கள். நிறைஞ்ச வெள்ளாமைக் குடியிருக்கும் வீடு பூர்வீக
வீடு போக மூணுகார வீடுகள்.

நிம்மாண்டு நாயக்கருக்கும் பேரக்காளுக்கும் மொத்தம் 8 பிள்ளைகள். 4 ஆம்பளப்பிள்ளைகள். 4 பொம்பளப் பிள்ளைகள். பொம்பளப் பிள்ளைகளை நல்ல இடத்துல கட்டிக் கொடுத்திருக்கு. ஆம்பிளப் பிள்ளைகள் நாலு பேருக்கும் நல்ல இடத்திலே பெண் எடுத்திருக்கு.

நிம்மாண்டு நாயக்கருக்கும் பேரக்காளுக்கும் பிள்ளைகள் மேல் கொள்ளைப் பிரியம். பேரக்காள் வாக்கப்பட்டு வரும்போது 100 பவுன் நகையோடு வந்தாள். அந்தக் காலத்திலே நூறு பவுன்னா சும்மாவா? பொம்பளப் பிள்ளைகளுக்குப் போட்டது போக மீதியைப் பேரப் பிள்ளைகளுக்கும் போட்டாச்சு.

நாளடைவில் சொத்தைப் பிரிக்கணும் சொத்தைப் பிரிக்கணும் என்று சிறிசுகளுக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஆனால் சொத்தைப் பிரிச்சுக் கொடுங்க என்று நேரடியாக அப்பாவைக் கேட்க பையன்களுக்குப் பயம். எப்படியோ இந்த விசயம் பெரியவரின் காதுகளுக்கு எட்டியது. ஒரு நாள் பருத்திக் காட்டுக்குப்போய்விட்டுத் திரும்பும் போது அலுப்புத்தாங்க முடியாமல் நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்கள். பேரக்காளைப் பார்த்து,

“பேரக்காள். என்னடி சொல்றே? பையன்கள் சொத்தைப் பிரிக்கணும்னு ஆசைப்படுறாங்களாம். நீ ஏதும் கேளவிப் பட்டாயா? ஆசைப்படுறாங்களாம். நீ ஏதும் கேள்விப் பட்டாயா? என்றார் நிம்மாண்டு.

“இதிலே என்ன இருக்கு? எப்ப இருந்தாலும் அவங்கிட்ட ஒப்படைக்க வேண்டிய பாரம்தானே. பிரிச்சுக்கொடுத்திட வேண்டியது தானே? நமக்கும் வயசாகிப் போச்சு. கிட்ணா. ராமான்னு உட்கார்ந்து சாப்பிடவேண்டிய காலத்திலே ஏன் இப்படி லோலோன்னு அலைஞ்சு திரியணும்” என்றாள் பேரக்காள்.

பேரக்காள் சொன்ன பிறகு அப்பீல் ஏது?

மறுநாள் பையன்கள் நாலு பேரையும் வரச்சொன்னார்கள், நிம்மாண்டு நாயக்கர். பாகப் பிரிவினை பற்றி அவர்களிடம் பேசினார். அவர்களும் சரி என்று தலையாட்டினார்கள்.

“சரி அப்ப நீங்க மத்தியஸ்தர் ஒருவரைக் கூட்டி வாருங்கள்” என்றார் பெரியவர்.

“நீங்க பார்த்து எப்படிச் செய்தாலும் சரிதாம்ப. நீங்க என்ன ஒரு கண்ணில வெண்ணெயும். ஒரு கண்ணில் சுண்ணாம்புமா வைக்கப்போறீங்க” என்றார்கள் பையன்கள்.

“அப்படி இல்லேடா கோட்டிப் பயபுள்ளைகளா! பாகம் பிரிக்கிற துண்ணா மத்தியஸ்தர் ஒருத்தர் கட்டாயம் வேணும். போயி யாரையாவது ஒருத்தரைக் கூட்டிக்கிட்டு வாங்க என்றார் பெரியவர்.

பையன்கள் நால்வரும் பாறைப்பட்டி கந்தசாமி நாயக்கரைக் கூட்டி வந்தார்கள். பாறைப்பட்டி நாயக்கர் எல்லோருக்கும் பொதுவானவர். ஊர்ப் பெரிய மனுசன். தெற்கு வடக்கு போய் வரும் மனுசன். விபரம் தெரிந்தவர்.

பாறைப்பட்டி நாயக்கர் வந்தார். “வாங்க பாறைப்பட்டி மாப்ள!” என்று சிரித்தப்படி நிம்மாண்டு நாயக்கர் வரவேற்றார்.

பாறைப்பட்டி நாயக்கர் தொழுவத்திலேயே உட்கார்ந்து கொண்டார். வீட்டுக்குள் உட்கார்ந்தா வெத்திலை எச்சி துப்ப எந்திரிச்சு எந்திரிச்சு வெளியே வரணும். தொழுவம்தான் சரி. பேரக்கா காப்பித் தண்ணி கொண்டு வந்தாள். காப்பி குடித்த பின்பு பாறைப்பட்டி நாயக்கர் வெற்றிலை போட்டார்.

நிம்மாண்டு மெல்லப் பையன்களின் ஆசைகளைச் சொன்னார்.

“என்னைக்கி இருந்தாலும் அதைச் செஞ்சிட வேண்டியது தானே” என்று ஒத்துக்கொண்டார் பாறைப்பட்டி நாயக்கர்.

வீட்டிலிருந்து பருத்தி. வத்தல். மல்றீ. தானியங்கள் உட்பட மொத்த சொத்தும் நான்கு பாகங்களாகப் பிரிகக்ப்பட்டன.

எல்லாம் வாய்க்கணக்காகவே சரி தானே என்று கேட்டார் பாறைப்பட்டி. பையன்கள் தங்கள் மனைவிமார்களிடம் சென்று கலந்து பேசினார்கள். பின்பு வந்து சரி என்றார்கள்.

நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட சொத்துக்கள் துண்டுச் சீட்டுக்களில் எழுதப்பட்டன. அவற்றைப் பாறைப்பட்டி நாயக்கர் சுருட்டிக் குலுக்கிப் போட்டார். இளையவன் முதலில் ஒரு சீட்டை எடுத்தான். பிறகு ஒவ்வொருத்தரா வந்து சீட்டு எடுத்தார்கள். சீட்டில் எழுதப்பட்டுள்ள சொத்துக்கள் எடுத்தவர்க்கு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீடு என்று பிரிக்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வசதியும் இருந்தது. வசதிக்குறைவும் இருந்தது. மருமகள்கள் கண்களுக்கு வசதிக் குறைவே பெரிதாகப்பட்டது. பூர்வீக வீடு அண்ணனுக்குக் கிடைத்தது.
அண்ணன் யோகக்காரன் என்று தம்பிகளுக்குப் பட்டது. வயித்தெரிச்சல் தொடங்கிவிட்டது.

பாகப் பிரிவினை ஒருவழியாக முடிந்தது என்று பாறைப்பட்டி நாயக்கர் நினைத்துக் கொண்டார். இந்த நேரத்தில் நிம்மாண்டு நாயக்கர் விறுவிறு என்று பூர்வீக வீட்டுக்குள் போனார். வெங்கலத்தவலை ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தார். பாறைப்பட்டி நாயக்கருக்கு முன்னால் தவலையைக் கவுத்துத் தட்டினார். நாணயங்கள் விழுந்தன. எல்லாம் வெள்ளிக் காசுகள். வெள்ளைக்காரன் காலத்து வெள்ளிக்காசுகள்.

அந்தக் காலத்தில் 12 வெள்ளிக் காசுகளுக்கு ஒரு பவுன் தங்கம் வாங்கலாம். மொத்தம் 2000 காசுகள் இருந்தன. காசுகளையும் சரிசமமாகப் பகிர்ந்தார்கள். காசுகளை மகன்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் போது நிம்மாண்டு நாயக்கரின் முகத்தைப் பார்க்கணுமே. மனுசன் முகத்திலே ஒரே
சந்தோசம்.

“நம்ம அப்பா மாதிரி இந்த ஊரிலே யாரு பிள்ளைகளுக்கு இப்படிப் பகிர்ந்து கொடுத்திருக்காங்க” என்று பிள்ளைகள் பெருமையாக நினைத்துக் கொண்டார்கள்.

“பொல்லாத கிழவரு! இது மாதிரி இன்னும் எம்புட்டுப் பணத்தை எங்கெங்கே புதைச்சி வச்சிருக்காரோ?” என்று எல்லோரும் நினைத்தார்கள்.

பாறைப்பட்டி கவலைப்பட்டார்.

“இப்போ இந்தக் கிழவர் பண்ணியது வம்பான வேலை. பையன்களுக்கு ஏற்கெனவே போதுமான அளவு கொடுத்திருக்கு. வத்தல். பருத்தி. உளுந்து. மல்லி முதல் கொண்டு அவ்வளவும்
கொடுத்தாச்சு. இப்ப போயி இவரு ஏன் பணத்தையும் பகிர்ந்து கொடுக்கணும். நோக்காடு. சாவுன்னா பிரயோசனப்படுமே” என்று பாறைப்பட்டி நினைத்துக் கொண்டார்.

நிம்மாண்டு, பாறைப்பட்டியைப் பார்த்துச் சொன்னார் ” இத்தனை நாள் பிள்ளைகள் என் கையை எதிர்பார்த்து இருந்தாங்க. இனி நான் அவங்க கையை எதிர்பார்த்து இருக்கணும்.” என்று சொன்னார்.

பிறகு பிள்ளைகளைப் பார்த்துச் சொன்னார். “பாருங்கப்பா! இருக்கிறது எல்லாத்தையும் உங்களுக்குக் கொடுத்தாச்சு அம்மா போட்டிருக்கிற கம்மல். நான் போட்டிருக்கிற வெள்ளி
அரணாக்கயிறு மட்டும்தான் மிச்சம். இனி எங்களுக்கென்ன? மூணு வேளைக்கஞ்சி. கட்டிக்கிடத்துணி. தலைக்கு எண்ணெய்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் நிம்மாண்டு நாயக்கர்.

நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் ஒவ்வொரு மாதமும் ஒரு மகன் வீட்டில் இருப்பது என்று முடிவானது.

முதல் தடவை எந்தப் பிரச்சனையும் இல்லை. நாலு வீட்டிலும் நல்ல கவனிப்பு. நாளாக நாளாக நிலைமை மோசமானது.

மூன்று வேளைச் சாப்பாடு இரண்டு வேளை ஆனது. இரண்டு வேளைக் காப்பி ஒரு வேளை ஆனது. பேரக்காள் பிரியமாய்ப் போடும் வெற்றிலையும் நிறுத்தப்பட்டது. அடுத்த அடுத்த மாதங்களில் தலைக்கு எண்ணெயும் போச்சு. உடு மாத்துத் துணி குறைஞ்சாச்சு.

வயசாளிகள் இருவரும் மெலிந்து போனார்கள்.

உடம்பெல்லாம் வங்கு வத்திப் போச்சு இரண்டு பேரும் சாயம் போன கந்தல் துணி போல ஆயிப்போயிட்டாங்க. எண்ணெய் தேய்க்காததால் தலை அட்டுப் பிடித்து பிசுபிசுவென்று ஆகிப்போனது. தாங்க முடியாமல் பேரக்காள் ஊர்க்குளத்தில் போய்க் களிமண்ணைத் தலையில் தேய்த்து குளித்து வந்தாள்.

அன்று பார்த்து. தற்செயலாய்ச் சின்ன மகள் அப்பா அம்மாவைப் பார்த்துப் போக வந்தாள். வந்தவள் நிலைமையைப் புரிந்து கொண்டாள். கோபத்தோடும் ஆங்காரத்தோடும் அண்ணன்களையும் மதினிகளையும் திட்டித் தீர்த்தாள்.

நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் குனிந்த தலைநிமிராமல் கண்ணீர் வடித்தார்கள். தன்னோடு
வந்துவிடும்படி மகள் அம்மா அப்பாவைக் கேட்டாள். கொஞ்ச நேரம் பெரியவர் பேசவில்லை. பிறகு சொன்னார்.

“சம்மந்தகாரங்க வீட்டுல போய் இருக்கிறது நல்லது இல்ல அம்மா! நீ நிம்மதியா ஊருக்குப் போம்மா!” என்றார்.

அன்று இரவு வயசாளிகள் இரண்டு பேருக்கும் தூக்கம் வரலை. ஆதரவு இல்லாத நிலையை நினைச்சு நினைச்சு கலக்கினாங்க. பேரக்காள் நிம்மாண்டு நாயக்கரின் காதில் மெதுவாகக் கேட்டாள். “எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிருவோமா?”

அவருக்கும் அதுதான் சரி என்று பட்டது. சரி என்றார் நிம்மாண்டு. இரண்டு நாள் கழித்து நடுவுள்ள மகள் வந்தாள்.

அப்பா அம்மாவுக்குப் பிடிச்ச பலகாரம் பண்டமெல்லாம் கொண்டாந்து தந்தாள். அவர்கள் நிலைமையைக் கண்டு கண்ணீர் விட்டாள். போகும் போது அப்பா அம்மா கையில் கொஞ்சம் பணம் கொடுத்து. “நினைக்கிறத வாங்கித் தின்னுங்க!” என்று சொல்லி விட்டுப் போனாள்.

ஊரைவிட்டுப் போக நினைச்சிக்கிட்டு இருந்த அவங்களுக்கு இந்தப் பணம் உதவியாக இருந்தது. மகள் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு ஒரு நாள் அதிகாலை வயசாளிகள் இருவரும் கோவில்பட்டி புறப்பட்டுப் போனார்கள்.

தெரிந்தவர்கள் கண்ணில் படாமல் பயந்து பயந்து நடந்தார்கள். கம்மலையும் வெள்ளி அரணாக் கயிற்றையும் விற்றார்கள். சாமியைக் கும்பிட்டு ரயிலேறி மதுரைக்குப் போனார்கள். மதுரை ரயில்வே ஸ்டேசனில் கணக்கு வழக்கில்லாது கூட்டம். என்ன செய்யிறது. எங்க போறதுன்னு தெரியாம இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தாங்க.

அந்தக் கூட்டத்திலேயும் பேரக்காகிட்டே ஒரு சின்ன குழந்தை வந்து ஒட்டிக்கிட்டது. பேரக்கா குழந்தையை அணைச்சிட்டாள். குழந்தையின் குடும்பம் இராமேஸ்வரம் போகுது. எங்க போறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்த இவங்களும் ராமேஸ்வரம் பேயிடலாம்னு முடிவு பண்ணி புறப்பட்டுப் போனாங்க.

ரயில் பேரக்காளைக் குலுக்கிக் குலுக்கித் தாலாட்டியது, பேரக்காள் ரயிலில் தூங்கினாள்.

“எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் பிறந்த பொண்ணு! இப்படி ஆயிட்டதே”ன்னு பேரக்காளைப் பார்த்து நிம்மாண்டு நினைத்தார். நினைக்கவும் அவருக்குக் கண் கலங்கியது.

இவர்கள் கண்காணாமல் போன சமாச்சாரம் முதலில் ஊருக்குத் தெரிந்து விட்டது. பிறகுதான் பிள்ளைகளுக்குத் தெரிந்தது. பிள்ளைகள் மனசு பதறுச்சு. என்ன இருந்தாலும் பெற்ற தாய் தகப்பன் இல்லையா.

மருமக்கமார்கள் “எங்கனயாவது கிடக்கும்”னு எரிச்சலோடு சொன்னங்க.

ஒரு நாள் ஒரு செய்தி காட்டுத் தீ போல் வந்தது. “கிணத்துல ஒரு தாத்தாவும் பாட்டியும் பொணமா மல்லாக்க மெதக்குறாங்களாம்!”. எல்லோரும் ஓடிப்போய்ப் பார்த்தாங்க. ஆனா இவங்க
இல்ல. பிள்ளைகள் கொஞ்ச நாள் தாய் தகப்பனை ஓடி ஆடித் தேடினார்கள். ஒரு தகவலும் கிடைக்கலை. நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் கண்காணாமல் போய் நாலைஞ்சு வருசமாச்சு. ஊரு மறந்து போச்சு.

ஒரு நாள் நேத்திக்கடன் செலுத்த பாறைப்பட்டி நாயக்கர் ராமேஸ்வரம் போனார். சாமி கும்பிடுவதற்காகக் கோவிலுக்குப் போனார். கோவில் வாயிலில் இரண்டு பக்கத்திலும் பிச்சைக்காரங்க உட்கார்ந்திருந்தாஙக. பாறைப்பட்டி நாயக்கர் தற்செயலாத் திரும்பிப் பார்த்தார். திகைச்சு நின்னுட்டார்.

எங்கேயோ பார்த்த முகமா இருக்கேன்னு கவனிச்சார். பதறிப்போனார். அந்தப் பிச்சைக்காரர்கள் வரிசையில் நிம்மாண்டு நாயக்கரும் பேரக்காளும் இருந்தாங்க. ரெண்டு பேர் தலையும் மொட்டை போட்டிருக்கு. பாறைப்பட்டியால தாங்க முடியல. தலையில தலையில அடிச்சுக்கிட்டார்/ கோன்னு அழுதார்.

வயசாளிகள் இருவரும் அழவில்லை. கண்ணில் இருந்து ஒரு பொட்டுக் கண்ணீர் வரலை. நிம்மாண்டு நாயக்கர் பாறைப்பட்டி நாயக்கரை முன்னப் பின்னத் தெரியாத ஆளைப்பார்ப்பது போல் பார்த்தார்.

பேரக்காளுக்குப் பாறைப்பட்டி நாயக்கரை அடையாளம் தெரிந்தது. வாயைத் திறந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசினாள்.

“எம்பிள்ளைங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

Print Friendly, PDF & Email

4 thoughts on “காய்ச்சமரம்

  1. காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.. அவர்கள் காய்த்து பழுத்த மரம்.. துன்பத்திலும் துயரத்திலும் பிள்ளைகள் நலன் நாடும் பெற்றோர்.. கண்ணில் நீர் வரவழைக்கும் கி.ரா.வின் கதை…

  2. மண்மணம் மாறாத நெகிழ்ச்சியான எழுத்து அய்யா

  3. மண் மனம் மாறாத தெற்கத்தி சீமையின் எழுத்து நடை.தமிழ் உள்ளவரை ராஜநாராயணனின் புகழ் என்றும் நிலைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *