மணி ஏழாகி விட்டது, ‘ஆறு பத்துக்கு’ ‘டாணென்று’ வீட்டுக்குள் வந்து விடும் வாசுகியை இன்னும் காணவில்லை. செல்வத்துக்கு பயமாய் இருந்தது, ஏன் இன்னும் வரவில்லை. என்னவாயிற்று இவளுக்கு?
இதுவரை இப்படி காலதாமதமாக வந்ததில்லை. அப்படியானாலும் செல் போனில் ஒரு வார்த்தை கூப்பிட்டு சொல்லி விடுவாள். ‘நேரமாகும்’ என்று சொல்லியிருந்தால் நானாவது பஸ் நிறுத்தத்துக்கு போய் நின்று கூட்டி வரலாம், அவளுக்கு இரண்டு மூன்று முறை ‘செல்லில்’ முயற்சித்தான். அழைப்பு போய் கொண்டேதான் இருந்தது, ‘எடுக்க ஆள் இல்லை’ என்று பதில் சொல்லி கொண்டே இருந்தது.
இவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த முருகன் மெல்ல அப்பாவின் அருகில் வந்து என்னப்பா, அம்மாவை இன்னும் காணலையே, வேணா நாம் போய் பஸ் ஸ்டாப்பில நின்னு பார்த்துட்டு வரலாமா? மகனின் கேள்வி அந்த சூழ்நிலைக்கு அவனுக்கு மனதுக்கு இதமாய் இருந்தது.
வேணாம் தம்பி, நீ பாப்பாவை பார்த்துக்க, நான் வேணா அப்படியே பஸ் ஸ்டாப் வரைக்கும் போய் பார்த்துட்டு வந்துடறேன். அம்மா வந்தா கூட்டிட்டு வந்துடறேன். சரிப்பா, நீ போய்ட்டு வா, நான் பாப்பாவை பார்த்துக்கறேன்.
சரி கதவை சாத்திக்க, நானோ, அம்மாவோ வந்தா மட்டும் கதவை திறக்கணும் சரியா? மகனிடம் சொல்லி விட்டு சட்டையை போட்டுக்கொண்டு வெளியே வந்தான்.
ஐந்தாவதுதான் படிக்கிறான், எவ்வளவு பொறுப்பாய் இருக்கிறான். மகனை பற்றி பெருமிதமாய் நினைத்துக் கொண்டவன், மனதுக்குள் மனைவியை பற்றிய கவலைகள் சூழ்ந்து கொண்டன. பாவம் இவளை பக்கத்தில் எங்காவது ஒரு இடத்தில் வேலை பார்த்து கொடுத்திருந்தால் இவ்வளவு தொல்லை கிடையாது.
செல்வம் மனைவி வாசுகி வேலை செய்யும் இடத்துக்கு அருகில்தான் முதலில் குடி இருந்தான். அங்கு தண்ணீர் கஷ்டம், வாடகை அதிகம் இவைகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நகரின் எல்லைக்கு குடி வர வேண்டியதாகி விட்டது. இங்கு வாடகையும் கம்மி, தண்ணீர் பிரச்சினை குறைவுதான், இருந்தாலும் வேலைக்கு போய் வர எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது. இவளே இரண்டு பஸ் மாறித்தான் வேலைக்கு போக வேண்டியிருக்கு. இவனும் காலையில எட்டு மணிக்கு கிளம்பி அஞ்சு கிலோ மீட்டர் தள்ளி வேலைக்கு போய் விட்டு வந்து, அவனுடன் இவளும் காலையில ஏழரைக்கெல்லாம் கிளம்பி, குழந்தைகள் பாவம், அவர்களே தயார் செய்து கொண்டு பக்கத்தில் இருக்கும் ஸ்கூலுக்கு போய்க்கறாங்க, அதுக்குள்ள அவ சமையல் வேலைய முடிச்சு, இவங்களுக்கு எடுத்து வச்சு, அப்புறம் பெரியவங்க இரண்டு பேருக்கு சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி சாப்பிட்டு பஸ்ஸுக்கு ஓட… சட்டென ஒரு சைக்கிளின் மணி யோசை செல்வத்துக்கு நிகழ் உலகத்தை கொண்டு வந்தது.
அப்பொழுது ‘108 ஆம்புலன்ஸ்’ ஒன்று அவனை கடந்து சத்தமிட்டு தாண்டி சென்றது. இவனுக்கு அதன் சத்தம் மனதுக்குள் ஒரு பயத்தை உருவாக்கியது.
யாரோ அடிபட்டு விழுந்துட்டாங்க, போன் பண்ணி ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்க, அருகில் ஒருவர் பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லிக்கொண்டே சென்றார்.
பஸ் நிறுத்தத்தில் ஒன்பது வரை காத்திருந்தான். அங்கிருந்தவாறே நான்கைந்து முறை அவளுக்கு செல் போனில் முயற்சிக்க, எந்த வித பதிலுமில்லை. அவள் கூட வேலை செய்பவர்களின் நம்பர் எதுவும் வாங்கி வைக்கவில்லை. அவள் வேலை செய்யும் கம்பெனி நம்பர் இருந்தது, அதில் முயற்சித்தான், ஐந்து நிமிடம் அழைப்பு சென்ற பின்னால் “ஹலோ” யாருங்க, இவன் தன்னை அறிமுகப்படுத்தி அவங்க போயிட்டாங்களா?
அவங்க எல்லாம் அப்பவே போயிட்டாங்களே?
நீங்க?
நான் வாட்ச்மேன். நாங்க ஆபிசை ஆறரை மணிக்கெல்லாம் பூட்டிடுவோம், அவரின் பதில் இவனுக்கு ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. ஐந்தரைக்கெல்லாம் வேலை முடிந்து கிளம்பினால் கூட ஆறு மணி இல்லை ஆறரைக்கு வீட்டுக்கு வந்து விடலாம்.
என்னவாயிற்று? இந்த கேள்வி மனதை கொதிக்க வைக்க, சரி வீட்டுக்கு போகலாம், அங்கு வந்திருக்கலாம். வேக வேகமாக வீட்டை நோக்கி நடந்தான். கடும் இருள் சூழ்ந்து விட்டது. அவன் அந்த சந்துக்குள் தடுமாறி நடந்தான். அவன் வீடு அமைதியாய் இருந்தது, அவள் வந்திருந்தால் கதவாவது திறந்திருக்கும், இல்லை அவளாவது வெளியே நின்றிருப்பாள்.
கதவை தட்டி முருகா அழைத்தான். ஐந்து நிமிடம் அமைதி, பாவம் தூங்கியிருப்பான், மீண்டும் முருகா அழைத்தவுடன் உள்ளை அசையும் சத்தம்..அப்பா.. குரல் வரவும், ‘நான் தான்’ முருகா கதவை திற.
தூக்க கலக்கத்தில் கதவை திறந்த முருகனின் பார்வை இயல்பாய் அப்பாவை தாண்டி பின் புறம் பார்க்க யாருமில்லாததால் அப்பாவை கேள்விக்குரியாய் பார்த்தான்.
இல்லை முருகா, அம்மாவை காணலை, சொல்லும் போதே அவனுள் அழுகை பெருக ஆரம்பித்து விட்டது. ‘அப்பா’..முருகனும் மெல்லிய கேவலை வெளிப்படுத்த சட்டென தன் நிலை பெற்ற செல்வம் கூடாது, மனம் விட்டு விட்டால் குழந்தைகளுக்கு சிரம்ம், சரி வா..உள்ளே போலாம், அவனை அழைத்து உள்ளே நுழைந்தான்..
காலை எட்டு மணிக்கெல்லாம் மனைவி வேலை செய்யும் கம்பெனி வாசலில் நின்றான். கூடவே முருகனும், அவன் தங்கை ராணியும் இருந்தார்கள். இருவரையும் பள்ளிக்கு அனுப்ப மனம் வரவில்லை. கம்பெனிக்குள் உள்ளே நுழைந்த பெண்களுக்குள் ஒரே கசமுசா..”வாசுகிய காணோமாமா” இப்படி ஒருவருக்கொருவர் குசு குசுவென பேசி அவனை பரிதாபமாக பார்க்க அவனுக்கோ முள் மேல் நிற்பது மாதிரி இருந்தது.
ஒன்பது மணிக்கு கம்பெனி மேலாளர் வந்தார். வந்தவுடன் ஒரு பெண் அவரிடம் சென்று வாசுகியை காணோமாம் சொல்லவும், அவர் யாரு? ஒரு நிமிடம் யோசித்தார். அதற்குள் அந்த பெண் வாசுகியின் உருவத்தை பற்றி கொஞ்சம் அழகாய், சுருட்டை முடியாய், (குரலில் பொறாமை கூட தென்பட்டிருக்கலாம்) வர்ணிக்க, அவருக்கு பல்பில் வெளிச்சம் வந்தது போல் பிரகாசமாகி அந்த பெண்ணா? குரலில் எகத்தாளமா? ஏமாற்றமா?
செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார். தம்பி அந்த பெண் சரியா அஞ்சரைக்கு இங்கிருந்து “பஞ்ச்” பண்ணிட்டு கிளம்பிட்டதா சொல்றாங்க. குரலில் மெல்லிய இரக்கத்துடன், கம்பெனியில அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுதான், மத்தபடி வெளியில எப்படீன்னு நாங்க சொல்ல முடியாதில்லையில்லையா? அவர் என்ன சொல்ல வருகிறார் என்று செல்வத்துக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. புரியும் போது அவர் அங்கிருந்து சென்றிருந்தார். அப்படியானால் அவர் சொல்ல வந்தது என்ன? அவள் எங்காவது போயிருக்கலாம் என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார். ஆத்திரம் வந்தது செல்வத்துக்கு.
கம்பெனிக்குள் ஒருவர் மெல்ல் அருகில் வந்து தோளை தட்டி மத்தவங்க அப்படித்தான் பேசுவாங்க, மனசுல வச்சுக்காதீங்க, முதல்ல அவங்களை தேடறதை பாருங்க, ‘போலீஸ் ஸ்டேசன்ல’ கம்பிளெயிண்ட் கொடுத்து பாருங்க..
போலீஸ் ஸ்டேசனா? நினைக்கும்போதே அவனுக்கு குலை நடுங்கியது, அந்த பக்கம் எல்லாம் திரும்பி கூட பார்த்ததில்லை. முகத்தில் கவலை அப்பிக் கொள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவனுக்கு அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை என்பது ஞாபகம் வர ஒரு சிறிய ஓட்டலுக்கு கூட்டி சென்றான்.
வீட்டுக்கு வந்தவனுக்கு அடுத்து என்ன் செய்வது என்று தெரியவில்லை? யார் நமக்கு உதவுபவர்கள், நினைக்கும்போது தனக்குள் ஒரு கழிவிரக்கம் வந்து சூழ்வதை தடுக்க முடியவில்லை. அவன் ஊரில் அவனை சுற்றி திரிந்த அத்தனை நணபர்களும் இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தார்கள். ஆனால் இந்த நகரில் யார் நாம் கூப்பிட்டவுடன் நமக்கு உதவிக்கு வருவது? நாம் வேலை செய்யும் இடத்திலிருந்து கூப்பிட்டால் ஓரிருவர் வரலாம், ஆனால் அவர்களை என்ன சொல்லி கூப்பிடுவது? முதலில் நம்முடைய அப்பா, அம்மாவையோ, வாசுகியின் அப்பா, அம்மாவையோ கூட எப்படி கூப்பிடுவது?
முன்றாம் நாள் தயங்கி தயங்கி போலீஸ் ஸ்டேசன் வாசலில் வந்து நின்றான். என்னயா? இந்த கேள்வியை முதல் டேபிளில் உட்கார்ந்திருந்த மீசை போலீஸ் கேட்டவுடனே அவனுடைய நாக்கு மேலண்ணத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.
ஐயா..அவனது தடுமாட்டத்தை பார்த்தவுடன் அவருக்கு மெல்ல உற்சாகம் பிறக்க என்ன விசயம்? குரலில் அதிகாரம் மேலோங்க, அதற்கு மேல் தாங்க முடியாமல் பயத்துடன் தன் மனைவியை காணவில்லை..அழுகையினுடன் சொன்னான்.
இவனது அழுகை, துடிப்பு அவரை எதுவும் செய்து விடவில்லை, ஓ..ஓடிப்போன பிரச்சினையா? இவங்களுக்கு வேற வேலையே இல்லை, இந்தா பாரு அந்த டேபிள்ள உட்கார்ந்திருக்காரு பாரு, அவர்கிட்டே கம்பிளெயிண்ட் எழுதி கொடுத்துட்டு போ..
செல்வத்துக்கு அப்ப்டியே ஓடி விடலாமா? என்று தோன்றியது. பக்கத்தில் நின்றிருந்த மகனை பார்த்தான். அவனது முகம் கன்றி சிவந்திருந்தது. தன் அம்மாவை இவர்கள் எப்படி எல்லாம் தப்பாக பேசுகிறார்கள் என்பது கூட அந்த பிஞ்சின் மனதுக்குள் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது அதை விட அடுத்து அவர் செய்த செயல்..
ஏம்ப்பா..ராஜேந்திரா..இதா பாரு இந்த ஆள் பொண்டாட்டி ஓடி போயிடுச்சாம், கேசை வாங்கிக்க, சொல்லி விட்டு அவரே சத்தமிட்டு சிரிக்க செல்வத்தின் உடம்பு அவமானத்தில் அப்படியே சுருங்கியது.
கேஸ் எழுதி கொடுப்பதற்குள் அந்த போலீஸ் அவனிடம் கேட்ட கேள்வி, அந்த பொண்ணுக்கு யார் கூடயாவது?… கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.. எல்லாம் அவளது நடவடிக்கை பற்றியேதான்..அவனுக்கு ஏன் இங்கு வந்தோம் என்றாகி விட்டது. அக்கம் பக்கமும் இவன் குழந்தைகளுடன் சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்து தனக்குள் பேசி சிரிக்கும் ஒரு சில பெண்கள், ஒரு சில ஆண்கள்.
இவர்களுக்கு தெரியுமா தன்னுடைய மனைவியை பற்றி? அல்லும் பகலும் தன் குழந்தைகளை பற்றியும், கணவனின் நலத்தை பற்றியுமே கவலை பட்டு கொண்டிருக்கும் அவளை காணவில்லை,. என்றவுடன் எப்படியெல்லாம் பேசுகிறது. வாசுகியின் அப்பா, அம்மா இதை கேட்டால் எப்படி துடித்து போயிருப்பார்கள். வேண்டாம் ஊருக்கு சொல்லி அனுப்பி விடலாம். இனிமேல் என்னால் இந்த பேச்சுக்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை.. அழுது கொண்டே குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்தவன், வாசலில் யாரோ வயதானவர் நின்று கொண்டிருப்பதை பார்த்தான்.
வேட்டி பழையதாய் இருந்தாலும், துவைத்து கட்டியிருந்தார். முகம் களையாக இருந்தது. தம்பி அவனையும் குழந்தைகளையும் ஆறுதலாய் அணைத்து கொண்டவர், உங்க சம்சாரத்தைதான தேடறீங்க? இந்த கேள்வி அவனுக்குள் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தை பரப்ப..ஐயா..அடுத்த சொல் அழுகையாய் வர பயப்படாதீங்க,…அவங்க பிழைச்சுகிட்டாங்க, நல்லாயிருக்காங்க, அப்படீன்னு சொல்ல மாட்டேன், வாங்க பெரியாஸ்பத்திரிக்கு போலாம், உங்க மூணு பேரையும் கூட்டிட்டு வரணும்னு அழுதுட்டு இருக்கு..அவர் சொல்ல அப்படியே அவர் தோளில் சாய்ந்து ஐயா என்ன சொல்றீங்க.. வாசுகிக்கு….? அவர் அவன் தோளை தட்டி ஆறுதலாய் அதுதான் பயப்படாதீங்கன்னு சொல்லிட்டேனே? ஆட்டோ ஒன்றை அழைத்தார்.
படுக்கையில் தலையில் கட்டுடன் படுத்து கிடந்த வாசுகியை பார்த்தவுடன் இவனுக்கு எதுவும் பேச தோன்றவேயில்லை. குழந்தைகள் பாய்ந்து சென்று அவளிடம் ஒட்டிக்கொள்ள அவள் சிரமப்பட்டு அவர்களை அணைத்துக்கொண்டாள். இவன் பரிவுடன் அவள் தலையை தடவிக்கொடுத்தவன் அவனை கூட்டி வந்தவருடன் மெல்ல வெளியே வந்தான்.
தம்பி உங்க மனைவி படுத்திருக்கற பெட்டுக்கு பக்கத்துலதான் என் சம்சாரம் படுத்திருக்கு, உங்க சம்சாரத்தை இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு லாரிக்காரன் அடிச்சு போட்டுட்டு போயிட்டான். ‘ரோட்டுல கிடந்திருக்காங்க’அப்ப அவங்க வச்சிருந்த தோள் பை, செல்போன் எல்லாத்தையும் எவனோ எடுத்துட்டு ஒடியிருக்கணும், அதனால அவங்களை அடையாளம் பார்க்க முடியாம, அங்கிருந்தவங்க நூத்தியெட்டுக்கு கூப்பிட்டு ஆஸ்பத்திரியில கொண்டு வந்து சேர்த்துட்டாங்க, இரண்டு நாளா நினைவில்லாம இன்னைக்கு காலையில தான் விழிச்சு பார்த்தாங்க, நாங்க பக்கத்துல போய் மெல்ல விசாரிச்சப்பத்தான் அவங்க எல்லா விவரமும் சொல்லி உங்களை எப்படியாவது கூட்டிகிட்டு வர சொல்லி சொன்னாங்க.. அவர் சொல்லிக்கொண்டே போக, அவரின் கைகளை பிடித்து அழுதான். அவர் அவனை தோளில் சாய்த்து இங்க பாருங்க, அழுக கூடாது, அவங்க பிழைச்சிட்டாங்க, இன்னும் இரண்டு மூணு நாள்ல நல்லாயிடுவாங்க, மனசு விடாதீங்க.
கடவுளே……இந்த மூன்று நாட்களில் அவன் பட்ட வேதனை அவமானம், இவள் வேகமாய் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவள் பக்கத்து தெருவில் பழங்கள் வாங்கி கொண்டு போகலாம் என்று அடுத்த தெருவுக்குள் நுழைந்து சென்று கொண்டிருந்தவளை அங்கு வந்த லாரி அடித்து விட்டு போய் விட அப்படியே விழுந்தவள்….
வீட்டுக்கு பக்கத்தில் நடந்தும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, அதை விட என்னை அன்று தாண்டி சென்ற ‘நூத்தியெட்டு ஆம்புலன்ஸ்’ இவளைத்தான் எடுத்து சென்றிருக்கிறது. கடவுளே, இது என்ன வாழ்க்கை.. மனசுக்குள் இறைவனிடம் சண்டையிட்டான்.
மனைவி வாசுகியை அவளது அப்பா, அம்மா, இவனுடைய அப்பா, அம்மா, அது போக உறவினர்கள் சுற்றியிருக்க, இவனுடைய கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் வந்தது. அருகில் அவனிடம் விடை பெற வந்தவர் இவனை போலவே வாசுகியை சுற்றியுள்ள உறவுகளை பார்த்து கொண்டிருந்தார்.
சரி தம்பி நாங்க கிளம்புகிறோம், அவளை நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க, எங்க கேட்டாத்தானே? நம்ம கடை வியாபாரத்தை நானும் எம் மவனுமே பாத்துக்குவோமுன்னு சொன்னாலும், எங்க இரண்டு பேரை சாப்பாட்டுக்கு அனுப்பிச்சுட்டு அந்த நேரத்தில இந்த வேகாத வெயில்ல வந்து உக்காந்துக்குவா. குரலில் தன் மனைவியை பற்றிய பெருமை.
ரொம்ப நன்றிங்க, எங்க குடும்பத்துக்கு நீங்க தெய்வம் மாதிரி வந்தீங்க ஐயா, இந்த மூணு நாள்ல இந்த சமுதாயம் மேலயே எனக்கு வெறுப்பு வந்துடுச்சுங்கய்யா, ஒருத்தரை எந்தளவுக்கு மட்டமாக்கி சந்தோசப்பட்டுக்கற வர்க்கமா இருக்குது, ஒருத்தருக்கு கூட விபத்து நடந்திருக்கலாமோன்னு கூட தோணலையா? அப்படீன்னு நினைக்கறப்போ..கண்களில் நீர் வர வார்த்தையை முடிக்க முடியாமல் தடுமாறினான்.
தம்பி சமுதாயத்தை குறை சொல்லாதீங்க, அது எப்பவுமே இதா இங்க படுத்திருக்குதுங்களே இந்த நன்றியுள்ள ஜீவன்கள் மாதிரி, நீங்க பேசாம போயிட்டிருந்தீங்கன்னா, அதுவும் ‘நம்மளை ஒண்ணும் செய்யமாட்டான்’அப்படீன்னு பேசாம இருக்கும், அதே கொஞ்சம் பயந்த மாதிரி போனீங்கன்னா, ஓ இவன் பயந்தவன், இவனை நாம் மிரட்டினா பயப்படுவான் அப்படீன்னு நினைக்கும், இல்லே நீங்க கல்லை எடுத்துட்டு அதை அடிக்கற மாதிரி போனீங்கன்னா, பயத்துல எழுந்து ஊளையிடும், இல்லையின்னா ஓடும், தள்ளிப்போய் எல்லாம் ஒண்ணு சேர்ந்து குலைக்கும்.. நீங்க பாசமாய் நடிச்சுட்டு அதுகளுக்கு பிஸ்கட், ஏதாவது கொடுத்தீங்கன்னா, உங்களை கண்டா வாலை குழைச்சுட்டு பக்கத்துல நிக்கும், இப்படி நாம் என்ன செய்யறமோ அதுக்கு தகுந்த மாதிரி அது நம்ம கிட்டே பிரதிபலிக்கும். சொல்லிக் கொண்டிருக்கும் போதே..
வாசுகியின் கம்பெனியிலிருந்து பத்திருபது பெண்கள், அவளது படுக்கையை நோக்கி வர அவர்களுடன் அவரது மேலதிகாரியும் வந்தார். வாசுகியிடம் “ என்னம்மா இப்படி ஆகிப்போச்சு” வருத்தத்துடன் சொல்ல, அந்த மேலதிகாரி “நான் கூட உன் ஹஸ்பெண்ட்கிட்டே சொன்னேன் கேட்டுப்பாரு “அந்த பொண்ணு தங்கமான பொண்ணு டூட்டியில சின்சியர்னா அப்படி சின்சியர்” என்னமோ நடந்திருக்கணும் அப்படீன்னு சொன்னேன். சீக்கிரம் நல்லாகி வந்து சேரு. உன்னைய மாதிரி நல்ல வேலைக்காரங்க இல்லாம கஷ்டமாய் இருக்கு, சொன்னவரை பார்த்து புன்னகை பூப்பதை தவிர செல்வத்துக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. காரணம் அவனும் இந்த சமுதாயம்தானே.
அவர் இப்பொழுது பாசமாய் நடித்து“பிஸ்கட்டுடன்”வந்திருக்கிறார். பெரியவரை சிரிப்புடன் பார்த்தான். அவனது எண்ணம் புரிந்த அவரும் புன்னகை புரிந்தார்.