கல்யாணச் சந்தையிலே…

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 5,956 
 

“வாங்கோ….வாங்கோ..எல்லோரும் வரணும்.முறையாகவும் உற்சாகமாகவும் வரவேற்றார் பெண்ணின் தகப்பனார்.

எல்லோரும் வீட்டினுள்ளே சென்று அமர்ந்தனர். சம்பிரதாயமாக காபி, டிபன் உபசாரம் முடிந்தது. “பெண்ணை வரச் சொல்லுங்கோ”  என்றவுடன் பெண்ணும் வந்து வணங்கி விட்டு ஹாலில் அமர்ந்து கொண்டாள்.

மாப்பிள்ளையின் தகப்பனார் “பெண், பையன் ஜாதகங்கள்  நன்கு பொருந்தி உள்ளது. பரஸ்பரம் இரண்டு குடும்பத்தை பற்றியும் தெரிந்து கொண்டோம். போட்டோக்கள் பார்த்து ஒரு அபிப்ராயம் வந்ததால்தான் நாங்கள் பெண்ணை நேரில் பார்க்க வந்தோம். உங்கள் அபிப்பிராயம் தெரிந்தால் மேற்கொண்டு நாம் தொடரலாம்” என்றார் சிரித்த முகமாக.

“நாங்களும் முன்பே கலந்து பேசி இருந்தோம். எங்களுக்கும் சம்மதமே …… என்றார் பெண்ணின் தகப்பனார்”.

“எங்களுக்கு  வரதட்சிணை, நகை, பாத்திரம், சீர்வரிசை என்று எதிர்பார்ப்புகள் கிடையாது. உங்க பெண்ணுக்கு நீங்க விருப்பப்பட்டு செய்வது உங்கள் இஷ்டம். கல்யாணம் நல்லபடியாக நடத்திக்கொடுங்கள் அது போதும். நாங்கள் செலவுகளை ஷேர் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இது  உபசாரமாக,  ஒப்புக்கு சொல்லவில்லை உண்மையாகத்தான் சொல்கிறேன் ” என்றார் பையனின் தகப்பனார்.

மாப்பிள்ளை என்ன சொல்கிறார் ? பெண்ணிடம் ஏதும் பேச விரும்புகிறாரா ?

“ஆமாம். பெண்ணிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்…..இல்லையில்லை . சில கருத்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தனியாக பேச வேண்டும் என்றில்லை. இங்கேயே பேசலாம்தான்.” என்றான் மாப்பிள்ளையாக வந்திருந்த ராகவன்.

என் அப்பா சொன்னது போல இரண்டு பக்கமும் ஓரளவிற்கு ஒத்து வந்த பின்புதான்  நான் இந்த சந்திப்பிற்கே சம்மதம் சொன்னேன். எனது நண்பர்கள் சிலருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும், என் பெற்றோரிடம் சில பெண்களின் பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுமே என்னை இப்படி சிந்திக்க வைத்தது. இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாக கேட்கிறேன் என்றே நினைத்துக்கொள்ளலாம்.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கண்டிஷன்கள் போடறது, வரதட்சிணை கேட்டது என்பதெல்லாம் அந்த காலம். இப்ப பெண்கள்தான் கண்டிஷன்கள் போடுகிறார்கள்.

இப்போ பெண்களும் படிச்சிருக்காங்க, வேலைக்கு போறாங்க, சம்பாதிக்கிறாங்க. நல்ல விஷயம்.

எல்லோருக்குமே தன் வாழ்க்கைத்துணை அழகு, அன்பு குணம், படிப்பு, உத்தியோகம், வசதி எல்லாவற்றிலும் சிறந்து இருக்க வேண்டும் என்ற ஆசை, எதிர்பார்ப்பு இருக்கும். அது நியாயம்தான்.

ஆனால் கார், சொந்த வீடு, நிறைய பேங்க் பாலன்ஸ் இருக்க வேண்டும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி இல்லையா? 28-30 வயதிற்குள் இத்தனை வசதிகளையும் அடைவது இன்றைய காலத்தில் எல்லா ஆண்களுக்கும் முடியக்கூடிய செயலா என்பதை யோசிக்கிறார்களா?

வாடகை வீட்டில் வசிக்கும் இளைஞர்கள் திருமணத்திற்கு தகுதி இல்லாதவர்களா ? அல்லது இப்படி கண்டிஷன் போடும் பெண்கள் எல்லோரும் வாடகை வீடு இல்லாமல் சொந்த வீட்டில்தான் வசிக்கிறார்களா ?

தனக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை குறித்து எதிர்பார்ப்புகள் ஒரு ஆணுக்கும் இருக்கும். அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு எந்த அளவிற்கு நாம் பொருந்துகிறோம் என்று யோசித்துப் பார்க்கிறார்களா ?

எல்லா தகுதிகளிலும் சிறந்த ஒரு வரன் வேண்டும் ஆனால் அவனை அந்த நிலைமைக்கு கொண்டு வர பாடு பட்ட  அவனது பெற்றோர் வேண்டாம் என்றால் எந்த  வகையில்  நியாயம் ? அவனுக்கென்று சில கடமைகள் இருக்கும் இல்லையா ? அதை விட்டுவிட முடியுமா ? ஆண், பெண் இருவரும் சமம் எனும்போது இருவரது பெற்றோரும் சமம்தானே ?

சென்ற தலைமுறைகளில் மாப்பிள்ளை வீட்டினர் அதிகாரம் செய்தனர்; கொடுமைப் படுத்தினர் என்பதற்காக இன்றைய தலைமுறை ஆண்களை பழி வாங்குவது என்ன நியாயம்?    

பெண்களுக்கு சம உரிமை வேண்டும். செயல்பாடுகளில் சுதந்திரம் வேண்டும் என்பதெல்லாம் வரவேற்க வேண்டியதுதான். என்னை பொறுத்த வரை சுதந்திரத்திற்கும் தான்தோன்றித்தனத்திற்கும் ஒரு நூலளவுதான் வித்தியாசம்.

இதையெல்லாம் ஏன் இப்போ, இங்கே கேட்கிறேன்  என்று நினைக்கலாம். இன்றைய பெண்களின் மனப்போக்கு புரியவே இல்லை. இவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று ஒரு சின்ன ஆசைதான்.

எங்கள் வீட்டை பொருத்த வரை இந்த மாதிரி கண்டிஷனுக்கெல்லாம் அவசியம் இல்லை. என்னை பெற்றவர்கள் என் கூடத்தான் இருப்பார்கள். எங்கள் வீட்டிற்கு வரும் பெண்ணை நன்றாக வாழ வைப்போம். நிச்சயம் சந்தோஷமாக இருப்பாள் என்ற நம்பிக்கையை நாங்கள் கொடுக்கிறோம் .

நான் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டதற்கு மிக்க நன்றி. சரி என்று தோன்றினால் , சம்மதம் சொன்னால் எனக்கும் சம்மதமே. சரியான கோணத்தில் என் எண்ணங்களை புரிந்து கொண்ட ஒரு பெண் எனக்கு வாழ்க்கை துணையாக கிடைக்க இருக்கிறாள்  என்று மகிழ்வேன். இல்லாவிடில் ஒரு ப்ரெண்ட் வீட்டிற்கு நட்பு முறையில் ஒரு விசிட் என்று எடுத்துக்கொள்வேன்” என்று ஒரு நீண்ட சொற்பொழிவாற்றி முடித்தான்.

“என்னம்மா நீ உன் எண்ணங்களை சொல்லம்மா” என்றார் பெண்ணின் தகப்பனார், இப்போது பெண் ராதா பேச ஆரம்பித்தாள்.

நான் இன்றைய பெண்களின் பிரதிநிதியாக பேசவில்லை. இவரது கேள்விகளுக்கு  என் கருத்துக்களை சொல்கிறேன்.

வரதட்சிணை, நகை, பாத்திரம், சீர்வரிசை என்பதெல்லாம் இப்போது பிரச்னை இல்லை. மாப்பிள்ளை வீட்டினர்தான்  உயர்த்தி ; பெண் வீட்டினர் தழைந்து போக வேண்டும் என்ற எண்ணம் தான் இன்னும் முழுமையாக  மாறிவிடவில்லை. 

அழகு, அன்பு,குணம், படிப்பு, உத்தியோகம் இவை இயல்பான எதிர்பார்ப்புகள்தானே ; அதுவும் எந்த விதமான ஈகோ பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். மற்றபடி சொந்த வீடு, கார், நிறைய பேங்க் பாலன்ஸ் …. இவை எல்லாம் இருந்தால் சந்தோஷம். ஆனால் இருந்தேயாக வேண்டும் என்று கண்டிஷன் போடுவது தவறுதான். ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் எல்லா பெண்களுமே இப்படி கண்டிஷன்கள் போடுவதில்லை.

ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பிற்கு அவள் வளர்ந்த சூழ்நிலையும் வளர்க்கப்பட்ட விதமும்தான் காரணம். போன ஜெனரேஷன்களில் முக்கால்வாசி கூட்டுக் குடித்தனம், வீட்டில சொல்லிக்கொடுக்கவும், புரிய வைக்கவும் சொந்தங்கள் இருந்தாங்க. விட்டுக்கொடுத்தலும் அனுசரணையும் தெரிந்தது. ஆனால் அது இப்போ கொஞ்சம், கொஞ்சமாக மாறி விட்டதே.

இன்றைய சமூகத்தில் கிட்டத்தட்ட எல்லோர் வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு  குழந்தைகள்தான். பெத்தவங்களும் அவர்களை செல்லமாகவே வளர்த்து விட்டார்கள். ஆண்களுக்கு கல்யாணத்திற்கு பிறகு  இட மாற்றம் என்பது  இல்லை. ஆனால் கேட்டதெல்லாம் கிடைக்கப்பெற்று, தன் இஷ்டப்படி இருந்த பெண்கள் பிறந்த வீட்டின் சலுகைகளை புகுந்த வீட்டிலே எதிர்பார்க்கும்போதுதான் பிரச்சனை வருகிறது.

படித்து முடித்து,  வேலை  கிடைத்து , சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் கல்யாணவயசு வந்தாச்சு, குரு பலன் வந்தாச்சு என்று வரன் பார்க்க ஆரம்பிக்கும் பெத்தவங்க,  பெண்ணோ பையனோ அவர்களிடம் பேசி புதிய உறவுகள், புதிய சூழ்நிலைக்கேற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் பக்குவத்தை உண்டாக்க வேண்டும். திருமண வாழ்க்கையின் முக்கியத்துவத்தை, அவர்களுக்கான பொறுப்புகளை, கடமைகளை உணர  வைக்க வேண்டும். மொத்தத்தில் மனோரீதியாக அவர்களை தயார் படுத்த வேண்டும்.

காலம் காலமாக மாமியார்-மருமகள் பிரச்னை என்றே சொல்லப்பட்டு வரும் இந்த சமூகத்தில் எந்த ஒரு பெண்ணுக்குமே கொஞ்சம் அச்சம் இருக்கத்தானே செய்யும். எந்த விதமான பிரச்னையும் வராமல் இருக்க ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தனிக்குடித்தனம் என்பதிற்கு பெண்கள் ஆசைப்படுகிறார்கள். பழக்க, வழக்கங்கள், பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும்  வித்தியாசப்படலாம். அதை முழுமையாக மாற்றிக்கொண்டே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. குறை கண்டுபிடிக்காமல், சொல்லி கொடுத்து ஒரு “கம்போர்ட் ஸோன்” உணர செய்தால் எந்த ஒரு பெண்ணுமே மாமனார் மாமியாரை மற்றுமொரு பெற்றோராகவே கருதுவாள்.  

சுதந்திரம் என்று தனியாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இயல்பாக இருக்க விட்டாலே போதும். கட்டுப்பாடு, அலட்சியம் என்று வரும்போதுதான் அதை மீறி செயல்படுவார்கள். அது உங்களுக்கு தான் தோன்றித்தனமாக தெரிகிறது 

தனது எண்ணங்களை மற்றவர் மீது திணிக்காமல், நியாயமான கருத்துக்களை புரிந்து கொண்டு, ரசனைகள், விருப்பங்கள் தெரிந்துகொண்டு, உறவுகளை மதித்து, கஷ்ட நஷ்டங்களில் கை கொடுத்து,விட்டுக்கொடுத்தலும், அனுசரித்து போவதும் இருவரிடமும் இருக்வேண்டும்.

“நீயா- நானா” என்று ஈகோ பார்க்காமல் “நீயும்-நானும்” என்று  இணைந்து நடந்தால் குடும்பம் நன்றாக இருக்கும்.  இது எல்லோருக்குமே பொருந்தும். உரிமைகளில் சம பங்கு இருப்பது போல கடமைகளிலும் சம பங்கு உண்டு என்பதை உணர வேண்டும்.

ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும் போது இரண்டு பக்க பெரியோர்களும் அவர்களை வாழ்த்தி, நல்லதை எடுத்துக்கூறி ஒரு வழிகாட்டியாகஇருக்க வேண்டும். கல்யாணம் என்பது இருவர் இணையும் உறவு மட்டுமல்ல ; இரண்டு குடும்பங்கள் இணையும் உறவு என்பதுதான்  என் கருத்து.இரண்டு பக்க பெற்றோரையும் இருவரும் அன்புடன் மதிக்க வேண்டும். மருமகள் புகுந்த வீட்டிலும் மகளாகவும், மாப்பிள்ளை வேட்டகத்திலும்  பிள்ளையாகவும் நடந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி.

இது போல மனம் விட்டு பேசினாலே போதும். கடமைகளில் கை கொடுக்க காத்திருப்பார்கள். எனது கருத்துக்களை கேட்டதிற்கு ரொம்ப சந்தோஷம் என்று பேசி முடித்தாள் ராதா.

“அப்போ உங்கள் இருவருக்கும் சம்மதம்தானே” என்று ராகவனின் அன்னை கேட்க “ஏம்மா …. பெண்தான்  கருத்துக்களை கேட்டதில் சந்தோஷம். கை கொடுக்க காத்திருக்கிறேன் என்று சொல்லி விட்டாளே . பிறகென்ன ?”  என்று சிரித்தார் அப்பா.

“அப்படித்தானா….?” என்று ராகவன் ராதாவைப் பார்க்க அழகாய் புன்முறுவல் பூத்து நாணத்துடன் தலை குனிந்தாள் அவள்.

அவளைப் புரிந்தவர்களாக அவளது அன்னையும் தந்தையும் “மாப்பிள்ளை முதலிலேயே சம்மதம் சொல்லி விட்டார். பெண்ணுக்கும் சம்மதம்” என்றனர்

அப்புறம் என்ன? “சுபஸ்ய சீக்கிரம்”.  எல்லோருக்கும் சந்தோஷமே ….. சிரித்து மகிழ்ந்த பெரியவர்கள் மேற்கொண்டு ஜோசியரை பார்த்து நிச்சயதார்த்தம், கல்யாணத்திற்கு முஹூர்த்தம் பார்க்கலாம் என்று பேசி முடித்தார்கள்.

“ராதா-ராகவ கல்யாண வைபோகமே”

Print Friendly, PDF & Email

4 thoughts on “கல்யாணச் சந்தையிலே…

  1. Hi Kalyani….. please read the other few stories also written by me and let me have your comments. I will be very happy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *