கங்கைக் கரைத் தோட்டம்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 8,223 
 

இந்த முறை எப்படியும் ஒரு பத்து அல்லது பதினைந்து நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் கணவர் சுப்பிரமணியனோடு அலகாபாத் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடியே தீர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு புறப்பட்டு விட்டாள் சப் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி.

நினைத்தபடியே திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு லோகேஷ்வர் ஆலயத்தையும் தரிசித்துவிட்டு அலகாபாத் கடை வீதி வழியே தன் கணவரோடு சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த உருவம் விஜயலெட்சுமியின் கண்களில் தென்பட்டது.

கங்கைக் கரைத் தோட்டம்காவி வேட்டியுடனும், காவி மேல் துண்டுடனும் வெற்று மார்பகங்களுடனும், எண்ணெய் பசையற்ற செம்பட்டை படர்ந்த தலைமுடியுடனும் அந்த உருவம் படுவேகமாக நடை போட்டுச் சென்றதைக் கண்ட விஜயலெட்சுமி சற்றே திகைத்துப் போனாலும் அவரது பரந்து விரிந்த நெற்றியும், கிட்டத்தட்ட நெற்றிப் புருவம் வரை வளர்ந்திருந்த முட்டைக் கருவிழியும் அவரைத் துல்லியமாகக் காட்டிக் கொடுத்து விட்டன. அவர் தனது சக ஊழியர் ராஜலெட்சுமியின் கணவர் வெகுளாபரணன் என்பதை.

அது மட்டுமல்லாது, தன் கணவர் சுப்ரமணியத்தோடு சென்னைப் பொதுப் பணித்துறையில் பணிபுரிந்த துணைநிலைப் பொறியாளர் என்பதும் அவளுக்கு நன்றாகவே தெரியும்.

தன் கணவர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி பல நாள்களாக எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை எனக் கூறி ராஜலெட்சுமி அடிக்கடி சொல்லி வருத்தப்பட்ட சம்பவங்களும் விஜயலெட்சுமியின் நினைவலைகளில் வந்து போன அடுத்த கணமே… “”அதோ பாருங்கள் உங்கள் நெருங்கிய நண்பர் வெகுளா காவி உடையுடன் வேகமாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்” என தன் கணவர் சுப்பிரமணியிடம் கூறிய அடுத்த கணமே… “”எங்கே…? எங்கே…?” எனக் கூறியபடியே விரைந்து அவரை நோக்கி நடக்க… விஜயலெட்சுமியும் போலீஸூக்கே உரித்தான பீடு நடையுடன் வேகமாக நடந்தாள்.

வெகு நேரத்திற்குப் பிறகு ஒரு சத்திரத்தின் படிக்கட்டுகளில் போய் அமர்ந்தார் அந்த நபர்.

தன்னை வெகுவிரைவில் அடையாளம் கண்டு கொண்டு விடுவார் என்ற நம்பிக்கையில் இயல்பாக “ஹலோ வெகுளா ஹெள ஆர் யூ” என்றார் சுப்பிரமணியன். “”கியா…? கோன் ஹை தும்?” புருவத்தைச் சுருக்கியபடி அவர் கேட்ட அந்தக் கேள்வி உண்மையிலேயே சுப்பிரமணியத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் சற்றே தடுமாறித்தான் போய்விட்டார்.

ஆனால் போலீஸூக்கே உண்டான இயல்பான புத்தியால், வெகுளாபரணனைப் பார்த்து “”சார் உங்கள் குரலே உங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. வீணாகப் பொய் சொல்லாதீர்கள்” என்றாள் சற்றே அதிகாரத் தோரணையுடன்.

“”என்ன மிரட்டுகிறீர்களா? நான் வெகுளாவும் கிடையாது. பரணனும் கிடையாது. உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள்” எனக் கூறியபடியே அந்த இடத்தைவிட்டு கிளம்ப எத்தனித்தார்.

சட்டென்று அவரது தோள் பட்டையைப் பிடித்து அழுத்தியபடியே “”இதோ பாருங்கள் மிஸ்டர் வெகுளா பரணன், ஏற்கெனவே சென்னை சேத்துப்பட்டில் உள்ள காவல் நிலையத்தில் உங்கள் மீது “காணவில்லை’ என்ற தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நான் அங்குதான் பணிபுரிகிறேன். உங்களைக் கண்டுபிடித்து உங்கள் மனைவி ராஜலெட்சுமியிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளது. நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை என்றால் இங்குள்ள காவல் நிலையத்தின் மூலமாக விசாரிக்க வேண்டிவரும். என்ன சொல்கிறீர்கள்? என்று மேலும் அதிகாரத் தோரணையில் கேட்டாள் விஜயலெட்சுமி.

அந்த அதிகாரத் தோரணைப் பேச்சு வெகுளாபரணனை சற்றே அசரத்தான் வைத்துவிட்டது.

உடனடியாகப் பணிந்துபோய், “”விஜி மேடம், உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நானும் உங்கள் கணவர் சுப்பிரமணியனும் எப்பேர்பட்ட நண்பர்கள் என்பதும், உங்களுக்கு நன்றாகவே தெரியும். நான் அவனை “சுப்பிணி சுப்பிணி’ என்று வாயாரக் கூப்பிட்டுப் பேசுவதும் அவன் என்னை வெகுளா.. வெகுளா… என வாய் நிறையக் கூப்பிட்டுப் பேசியதும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக்கூடிய சம்பவங்கள் இல்லையே விஜி மேடம். அதேபோல் நீங்களும் என் மனைவி ராஜலெட்சுமியும் ஒரே டிபார்ட்மெண்டில் பணிபுரிந்து எப்படி உயிருக்கு உயிராகப் பழகினீர்கள் என்பதும் எனக்கு மறந்தா போய்விடும் விஜி மேடம். அப்படிப்பட்ட உங்களிடம் போய் நான் உங்களை யார் என்றே தெரியாது என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறேன் என்றால் அதன் வீரியத்தை, தாக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள் விஜி மேடம். நான் வாழ்க்கையை முற்றிலுமாக வெறுத்து விட்டேன் விஜி மேடம். தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள் மேடம். ப்ளீஸ் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்னைப் பார்த்ததாக யாரிடமும் கூற வேண்டாம் மேடம், குறிப்பாக என் மனைவியிடமும் குழந்தைகளிடமும் கூறவே கூறிவிடாதீர்கள். நான் வருகிறேன் மேடம்” எனக் கூறியபடியே அந்த இடத்தைவிட்டு வேகமாகக் கிளம்ப முற்பட்டார்.

அவரது கைகளை இறுக்கமாகப் பிடித்தார் சுப்பிரமணியன். “”இதோ பார் வெகுளா. உன் வழியில் குறுக்கிட நான் தயாராக இல்லை. ஆனால் உற்ற நண்பன் என்ற வகையில் உன்னிடம் ஒன்றை மட்டும் நான் கேட்க ஆசைப்படுகிறேன். என்னிடம் சொல்ல

விருப்பம் இருந்தால் சொல். இல்லையென்றால் வேண்டாம் என்ன கேட்கட்டுமா?”

வாஞ்சையுடன் சுப்பிரமணியன் கேட்ட கேள்வி வெகுளாவை நெகிழ வைத்துவிட்டது.

“”கேள் சுப்பிணி, உனக்கு இல்லாத உரிமையா?”

“”டிபார்ட்மெண்டைப் பொறுத்தவரை உனக்கு மிக மிக நல்ல பெயர். உழைப்பும் நேர்மையும் கொண்ட ஒரு நல்ல அசிஸ்டெண்ட் என்ஜினீயர் என்ற நல்ல பெயர் இன்றும் நம் டிபார்ட்மெண்டில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உனக்கு மேல் அதிகாரியாக இருந்த எக்ஸிக்யூடீவ் என்ஜினீயராக இருந்த அந்த ராஜகோபால் செய்த ஊழல் எங்கே உன் தலையில் வந்து விழுந்துவிடுமோ என்ற பயத்தில் சற்றும் யோசிக்காமல் க்ஷண நேரத்தில் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் ராஜிநாமா செய்தது வரை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதன் பிறகு இப்படி வாழ்க்கையே வெறுத்து, மனைவி குழந்தை குட்டிகளைத் துறந்து துறவறம் பூணக்கூடிய அளவுக்கு என்னதான் உன் வாழ்வில் நடந்துவிட்டது வெகுளா?”

துறவறம் பூண்ட பிறகும் வெகுளாவின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்துவிட்டது சுப்பிரமணியத்தின் கேள்வி.

மெதுவாகத் தொடர்ந்தார் வெகுளா பரணன்.

“”ஆத்திரத்தில் அவசரப்பட்டு கிடைத்தற்கரிய அரசாங்க உத்யோகத்தை ராஜிநாமா செய்தது என்னமோ இமாலயத் தவறுதான். ஆனால் ரியல் எஸ்டேட் கொடிகட்டிப் பறக்கும் இந்த நாளில் ஒரு திறமை வாய்ந்த சிவில் என்ஜினீயருக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கும் என நினைத்தது, அதைவிடப் பெரிய இமாலயத் தவறு சுப்பிணி.

வேலையை ராஜிநாமா செய்த அடுத்த கணமே பல பிரைவேட் கம்பெனிகளில் வேலைக்காக அலைந்தேன்.. அலைந்தேன்.. அப்படி ஒரு அலை அலைந்தேன் சுப்பிணி. எல்லா இடங்களிலும் இருபத்து ஐந்திலிருந்து முப்பத்து ஐந்து வயது வரை தேர்ந்தெடுத்தார்களே தவிர என்னைப் போன்று நாற்பத்தைந்து வயது உடையவர்களை சீண்டவே இல்லை சுப்பிணி. அப்படியே தேர்ந்தெடுத்தாலும் மிக மிகக் குறைந்த சம்பளமே கொடுக்க முன் வந்தார்கள் சுப்பிணி. அப்படியே கொடுக்க முன்வந்தாலும், என்னைவிட வயதில் குறைந்தவர்களிடமும் அனுபவம் அற்றவர்களிடமும் பணிபுரியச் சொன்னார்கள் சுப்பிணி. எப்படியும் எனது திறமைக்கும் அனுபவத்திற்கும் தகுந்த வேலை கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கையோடுதான் நாள்களைக் கழித்தேன் சுப்பிணி.

இதற்கிடையில் வருமானம் இல்லாத காரணத்தாலும், வெட்டியாகப் பொழுதைக் கழித்த காரணத்தாலும் வீட்டிற்குள்ளேயே மனைவி ராஜீ மூலமும் } ஏன் குழந்தைகள் மூலமும்கூட அவமானப்பட நேரிட்டது சுப்பிணி.

எல்லாம் நல்ல வேலை கிடைத்து வருமானம் வர ஆரம்பித்துவிட்டால் சரியாகி விடும் என எண்ணிப் பொறுத்துக் கொண்டுதான் போனேன் சுப்பிணி.

ஆனால் நாளுக்கு நாள் அந்த அவமானம் அதிகரித்துக்கொண்டே போனதே தவிர, குறையவே இல்லை சுப்பிணி. ஒவ்வொரு விஷயத்திற்கும் தாலி கட்டிய மனைவியே நக்கல் செய்வதும் ஈன்றெடுத்த மகளே கேலி செய்வதும் சகஜமாகிக்கொண்டே போனது சுப்பிணி. பல நாள்கள் மன உளைச்சலால் சாப்பிடுவது கூட இல்லை சுப்பிணி.

இப்படித்தான் ஒரு நாள் அதிகாலை வேளை, பசி அடிவயிற்றைப் போட்டுக் கலக்கி எடுத்துக் கொண்டிருந்தது. பால்காரர் பால் பாக்கெட்டைப் போட்டு விட்டுப் போயிருந்தார்.

டிக்காஷனையும் போட்டுவிட்டு பாலைக் காய்ச்சி ஒரு கப் காப்பியைப் போட்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தபடியே காபியை உதட்டருகில் கொண்டு

போனபோது…. “”டேய்” என்ற ஒரு சப்தம். திரும்பிப் பார்த்தபோது…. ராஜீ கத்திய கத்தலை அஷரம் பிசகாமல் அப்படியே சொல்கிறேன். நீங்களும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள் விஜி மேடம்” எனக் கூறியபடியே அவர் விஜயலெட்சுமியை ஏறிட்டுப் பார்த்தபோது உண்மையிலேயே அவர் கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது.

தன்னைத்தானே சுதாரித்துக் கொண்டு அவர் மேலும் தொடர்ந்தார்:

“”இங்கே என் மூஞ்சியப் பாருடா ராஸ்கல். உப்புப் போட்டுத்தான் திங்கிறியா? இல்ல வேறு ஏதாவது போட்டுத் திங்கிறியா..? சோறுதான் சாப்பிடறயா இல்ல வேற ஏதாவது சாப்பிடறயா..? சொல்லுடா கம்மனாட்டி..? ஒடம்பிலே சொரணைங்கறதே கெடையாதாடா ஒனக்கு? வெளில போயி நாலு காசு சம்பாதிக்க வக்கில்லாட்டாலும், பொண்டாட்டி காக்கி சட்டைப் போட்டு சம்பாதிக்கற காசுலேதான் இந்தக் காபியை சாப்பிடறோம்கற நினைப்பாவது உன் மனசுலே இருக்காடா நாயே. ஒடம்பிலே கொஞ்சமாவது சொரணைங்கறது இருந்தா அந்தக் காப்பியை அப்படியே வெச்சுட்டு வெளிலே போய்த் தொலைடா.

அதற்குமேல் அங்கு நான் உட்காரவில்லை. அன்று வெளியேறியவன். இன்றுவரை நான் அங்கு செல்லவில்லை. இல்லாதவனுக்கு இல்லாளும் இல்லை என்றாகிவிட்ட பிறகு இந்த வாழ்க்கை எனக்கு எதற்கு சுப்பிணி? தனது தாய், தனக்குத் தாலி கட்டிய கணவனைப் பார்த்து இப்படியெல்லாம் பேசுகிறானே என்று நான் பெற்றெடுத்த மகள் கொஞ்சமாவது வருந்தியிருக்க வேண்டாமா சுப்பிணி? பெற்ற மகளாக இருக்கட்டும் கட்டிய மனைவியாக இருக்கட்டும் எல்லாமே காசில்தான் அடங்கி இருக்கிறதா சுப்பிணி? இந்த வேலை இல்லாத நாள்களைத் தவிர மற்ற நாள்களிலெல்லாம் இவர்களையெல்லாம் நான் எப்படி எப்படியெல்லாம் வளர்த்தேன் என்பதை அறவே மறந்து விட்டார்களே சுப்பிணி? நன்றி விசுவாசமே இல்லாத இந்த ஈன ஜென்மங்களுக்காக உழைத்துச் சம்பாதிப்பதைவிட, இப்படி துறவியாகவே திரிவது மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டேன் சுப்பிணி. தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாமல் இங்கிருந்து போய்விடுங்கள் விஜி மேடம். உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. ப்ளீஸ்.” வேகமாக நடையைக் கட்டினார் வெகுளா பரணன்.

சட்டென்று அவர் கைகளைப் பற்றி நிறுத்திய விஜயலெட்சுமி “”இதோ பாருங்கள் மிஸ்டர் வெகுளா. ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு நீங்கள் தாராளமாகப் போகலாம்” என்றாள்.

“”என்ன? கேளுங்கள் விஜி மேடம்.”

“”மிக.. மிகக் கேவலமாகப் பேசிய உங்கள் மனைவியின் பேச்சு நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கதுதான். அந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நீங்கள் வீட்டைவிட்டே வெளியேறி துறவறம் பூண்டதையும் நியாயம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இதேபோன்று ஏன்? இதைவிடக் கேவலமாக கொடூரமாக குடிவெறி தலைக்குமேல் ஏறி, கட்டிய மனைவியை அடித்தும் உதைத்தும் தினம்… தினம் சித்திரவதைக்கு உள்ளாக்கும் கணவன்மார்களிடம் கோபித்துக்கொண்டு மனைவிமார்கள் துறவறம் பூண வேண்டும் என்று கிளம்பிவிட்டால்… அதோ… அங்கே தெரிகிறதே அந்தப் பெண் துறவிகள் சங்கமிக்கும் நாகா சதுக்கத்தின் கதி என்ன ஆகும் மிஸ்டர் வெகுளா?”

வெகுளாபரணன் சற்றே தடுமாற விஜயலெட்சுமி மேலும் தொடர்ந்தாள்.

“”ஏதோ நீங்கள் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அரசாங்க வேலையை ராஜிநாமா செய்ததைப் போல, உங்கள் மனைவி ராஜீயும் அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு சொல்லக்கூடாத வார்த்தைகளைக் கூறி விட்டாள். அதற்காக அவள் என்னிடம் பல முறை கண்ணீர் விட்டு அழுது புலம்பி வருந்தி இருக்கிறாள். நீங்கள் இல்லையே என்ற கவலையில் உங்கள் மகள் புவனாவின் உடம்பு பாதியாகக் குறைந்துவிட்டது மிஸ்டர் வெகுளா.

ஊரார் பாராட்டும் வகையில் தன் கணவனுக்கு ஒரு நல்ல உத்தியோகம் இல்லையே என்ற ஏக்கம், கல்யாணத்திற்குத் தயாராகிக் கொண்டு இருக்கும் மகளின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலை போதாக்குறைக்கு இந்தப் பாழாய்ப்போன போலீஸூக்கே உரித்தான சில அதிரடிப் பேச்சுக்கள் எல்லாம் சேர்ந்து ராஜீயை அப்படிப் பேச வைத்துவிட்டது மிஸ்டர் வெகுளா. மற்றபடி அவள் ரொம்ப ரொம்ப நல்லவள் மிஸ்டர் வெகுளா. எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் எங்கள் கூட வாருங்கள் மிஸ்டர் வெகுளா”.

“”ஆமாம் வெகுளா எங்கள் கூடவே நீங்களும் வந்து விடுங்கள்” வாஞ்சையுடன் அழைத்தார் சுப்பிரமணியன்.

“”எது எப்படியோ சுப்பிணி, உங்கள் மனைவி விஜி சொன்ன ஒரு விஷயம் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டது. கணவன்மார்களிடம், மனைவிமார்கள் கோபித்துக்கொண்டு துறவறம் பூண கிளம்பிவிட்டால், அந்த நாகா சதுக்கத்தின் கதி என்ன ஆகும்? என்று கேட்டாரே ஒரு கேள்வி. அதற்காகவே நான் உங்களோடு வந்து விடுகிறேன் சுப்பிணி” என்றார் சிரித்தபடியே வெகுளாபரணன்.

– ஷிவ்ராம் (டிசம்பர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *