வாழ்க்கை பற்றி ஒளியாயும் ,இடறுகின்ற இருட்டாயும், நிறையச் சங்கதிக் கோர்வைகள்..இத்தனை வருட அனுபவத் தேய்மானத்திற்குப் பிறகு,,எல்லாம் கரைந்து போன நிழல்கள் மாதிரிப் பழசு தட்டிப் போனாலும், மறக்க முடியாமல் போன, சில சிரஞ்சீவி நினைவுகளினூடே, மனம் துல்லியமான,உயிர்ச் சிறகை விரித்து, உயர வானில் எழுந்து பறக்கும் போதே, அபிரிதமான மயக்கம் தீர்ந்த வாழ்க்கை ஞானமே கை வரப் பெற்ற, மாதிரி மாதுரிக்கு மனசெல்லாம் ,கறை தீர்ந்த ஒளிக் கடலாய் விரியும்/ இந்த ஒளிக் கடலினூடே பரபரப்பில்லாமல், மேலெழுந்து பிரகாசிக்கின்ற, உயிர் முத்துக்களெல்லாம் அவள் கை வசம்/ உன்னத உயிர்ப்பு நிலையின் இருப்பிடமேயானது அவள் மனம் அவள் மனம் அப்படியாகவே வாழ்க்கையென்ற பளிங்கு நிலம் சேர்ந்த படிக்கட்டுகள். அந்தப் படிக்கட்டுகள் கூட இன்னும் அவள் கண்ணை விட்டு மறையவில்லை.
அந்தப் படிக்கட்டுகளில் ஒன்று போலானது தான் அவளது கல்லூரி வாழ்க்கை அனுபவச் சுவடுகளும்.. இதில் உணர்ச்சிபூர்வமாக எவ்வளவோ மனதைக் கரைய வைக்கும் அனுபவங்கள். ஒன்றா? இரண்டா? அவளைப் பூரண நிறைகுடமாகப் புடம் போட்டுத் தெளிய வைத்து, வாழ்க்கை ஞானத்தில் அவள் தேறவே இந்த அனுபவச் சூடெல்லாம்/ அவளுக்கு நன்றாக ஞாபகமிருந்தது. நினைவில் இடறுகின்ற ஒரு கசப்பான அனுபவம்.. அதை இப்போது நினைத்தாலும் மனம் சிலிர்க்கிறது கேவலம் வெறும் ஆடை விவகாரம்/ உடம்பிற்கு அணி சேர்க்கத் தான் ஆடை அலங்காரம் பணக்காரக் களையோடு ஆடம்பரமாய் ,உடை உடுத்திக் கொண்டு வருகிற பெண்கள் ஒரு ரகம்.
இவர்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல கல்லூரியிலும் இவர்களே முன்னிலைப் பிரதிநிதிகள்…இவர்கள் இப்படியான மேனி மினுக்கி அழகு மூலமே கொடி கட்டிப் பறக்கும் பாக்கியசாலிகள்..இவர்களைப் பொறுத்த வரை படிப்புக் கூட இரண்டாம் பட்சம் தான். ஆனால் மாதுரி அப்படியல்ல படிப்பதற்காக மட்டுமே கல்லூரி வாழ்க்கையென்பது அவள் உயிருடன் கலந்த ஒரு மெய்யறிவு நிலை அதையும் தாண்டிப் புறம் போக்கான உடல் சார்ந்த நினைவுச் சுழிக்குள் என்றைக்குமே அவள் அகப்பட்டதில்லை. மானம் மறைக்க மட்டுமே, உடற் போர்வையாக வருகிற, ஆடை அணிகலன்களை என்றைக்குமே அவள் கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை.அப்பா அவளை வளர்த்த விதம் அப்படி. வருடத்திற்கு ஒரேயொரு முறை தான் அவர், அவளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் புதுத் துணிகள் வாங்கிக் கொடுப்பார் .அதிலும் கணுக்கால் தொடும்படியாக நீளமான பாவாடை சட்டை அணிகிற மிகவும் பின் தங்கிய எளிமையான, நிழல் தோற்றம் அவளுடையது.
அந்த உடுப்புடனேயே அவள் கல்லூரி வந்து போகின்றாள்.அவள் படிக்கிற அதே கல்லூரியில் தான் அவளது தாய் மாமன், மகள் சுகந்தியும் படிக்கிறாள்.. நவநாகரீகமான கொழும்பு நகரத்து வாழ்க்கையில் கொடிகட்டிப் பறக்கும், ஆடம்பர உடைகளையே போட்டுப் பழகியவள் அவள். நெருங்கிய உறவினர் மூலம் அவளுக்கு அந்த வசதி இருந்தது. அவளும் மாதுரியும் ஒரே இரத்தம் தான் என்று கல்லூரியில் எவருமே அறிந்திருக்கவில்லை. வெளிப்படையாகத் தானாக முன் வந்து அவர்களுக்கிடையிலான அந்த உறவைப் பிரகடனப்படுத்திக் கூற, என்றைக்குமே அவள் விரும்பியதில்லை. அது தெரிந்தால் பெரிய மானபங்கமாகிவிடுமே என்பது அவள் நினைவு மட்டுமல்ல உறுதியான கொள்கையும் கூட.
ஒரு சமயம் அவள் அம்மா ஏதோ அலுவலாக டவுனுக்குச் சென்றவள், மாலை கல்லூரி வந்து இருவரையும்,கூட்டிச் சென்ற போது நடந்த ஒரு கசப்பான அனுபவம் இது.. மாதுரி எவ்வளவு மறுத்தும்,, ஒரு புடவைக் கடையில் ஒரே தரத்தில் இருவருக்குமான உடைத் தேர்வு நிகழ்ந்த போது, சுகந்தி அதைத் தட்டிக் கேட்க வழியில்லாமல் முகம் கறுத்து அசடு வழிய நின்றதைக் கண்டு மாதுரி வெகுவாக மனம் நொந்து போனாள்.. சாம்பல் கலரில் பூப் போட்ட பட்டுப் பாவாடைக்கான துணி அது
அவளுக்கு மட்டுமல்ல.. சுகந்த்திக்கும் கூடத் தான். அதை அவள் கட்டுவாளோ தெரியவில்லை. மாதுரி கட்டுவதால் அதை அவளும் கட்டி வந்தால் என்ன நடக்கும்? இதுவரை காலமும் எல்லோர் கண்ணிலும் மண் தூவி வந்த நிலை மாறி இதைப் பார்த்து அவர்கள் கேள்வி கேட்டால் அவளிடம் என்ன பதில் இருக்கிறது?. உறவைத் திரை போட்டு மூடி மறைக்கத் தான் முடியுமா?அப்படிச் சந்தி சிரிக்கிற நிலைக்குத் தன்னைத் தள்ளி விட்ட அம்மா மீதே அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.. இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை
மாதுரியே அதைப் போட்டு, ஒரு அழகு தேவதையாய் பவனி வரட்டும் எனக்கென்ன வந்தது இதைத் தூக்கிக் குப்பையிலே போடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதை நிதர்ஸனமாகவே மாதுரி கண்டாள் .என்றைக்குமே அவள் அவள் அந்தப் பாவாடையோடு கல்லூரி வந்து போனதாக மாதுரிக்கு ஞாபகமில்லை. இது அவள் உணர்வுகளையே பங்கப்படுத்துகிற ஒரு தரங்கெட்ட செயல் தான். அதற்காக அவளோடு நெஞ்சை நிமிர்த்திச் சண்டை போடவா முடியும்?> சுகந்தி அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. மாதுரி போனாலென்ன அவள் பெருமையோடு பெயர் சொல்லி உறவு முறை கொண்டாட அவளின் சித்தப்பா பெண் ரமணி தான் இருக்கிறாளே
அவள் மாதுரியைப் போல ஏழ்மையின் ஒரு அவமானச் சின்னமல்ல காரில் வந்து இறங்கும் ஒரு பணக்காரத் தேவதை. சுகந்திக்கு அவள் உறவு என்று கல்லூரி நிழல் கூடச் சொல்லும். இப்படி நிழல் அறிந்த மனிதர்களான அவர்கள் எங்கே? பாவம் இந்த மாதுரி! எப்போதும் கரை ஒதுங்கியே போகும் பாதை அவளுக்கு. அவள் போல உடை அணிந்து கொண்டு வந்து அதைக் காட்டிக் கொள்ள விரும்பாத சுகந்தி,. ரமணி தனது சொந்தம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமித தலைக் கன மிடுக்கு நடை அவளுக்கு
எப்போது பார்த்தாலும் இரட்டைச் சகோதரிகள் மாதிரி, இணை பிரியாத உல்லாச நடை அவர்களுக்கு.. ஒரே தரத்தில் ஆடை அலங்காரம் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ரமணி அவளின் சித்தப்பா மகளாம். இதனால் சுகந்தி அவள் தோள் மீது கை போட்டுப் பகிரங்கமாக உலகறியப் பவனி வருவாள்.. இருவரும் மிகவும் நெருங்கிய உறவு என்று கல்லூரியே அறியும். இதைச் சான்றுபூர்வமாகப் பிரகடனப்படுத்திக் கூறுவது போலவே அநேக நாடகளில் இருவரினதும் உடை அலங்காரம் ஒரே பாணியில் ஒன்று போலவே இருக்கும்
மாதுரி போல உடை அணிந்து கொண்டு வந்து அதைக் காட்டிக் கொள்ல விரும்பாதவள்,,, ரமணி தன் சொந்தம் என்று சொல்லிக் கொள்வதில்,எவ்வளவு முன் மாதிரியாக இருக்கிறாள்.. அவளே எத்தனை தடவைகள் இதை ..இந்த உறவைப் பறை போட்டுப் பிரகடனப்படுத்திச் சொல்லியிருப்பாள், அவள் முகத்தில் கரி பூசுகிற மாதிரி ரமணி ஒரு முறை தடம் புரண்டு போனாளே!. அவள் தன் வீட்டுக் கார் டிரைவரோடு ஓடிப் போய் விட்டதாகக் கல்லூரி முழுவதும் கதை அடிபட்டது மாதுரியிடமும் வந்து, கேட்டார்கள் அவள் இது பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது. சுகந்திதான் அவளோடு நல்ல நெருக்கம். அவளைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி இது என்னைப் போய்க் கேட்கிறீர்களே” என்று அடிபட்ட உள் காயம் மாறாமல் மனம் வருந்திச் சொன்னது சுகந்தியையே அம்பு கொண்டு தாக்குவது போலிருந்தது
அவளையே முகத்தில் காறித் துப்பி சூறையாடி விட்டுப் போகிற மாதிரி
அவளிடம் கேள்வி கேட்கக் கல்லூரியே ஒட்டு மொத்தமாக வாசலில் அவளை வீடு போக விடாமல் வழி மறித்துத் திரண்டு நின்ற போது, அவளின் மானம் காற்றில் பறக்கும் அந்தக் குரூரக் காட்சியைக் காணப் பிடிக்காமல், மாதுரிக்குக் துக்கம் நெஞ்சை அடைத்தது தன்னால் மிகவும் இதயசுத்தியோடு விரும்பி நேசிக்கப்பட்ட உறவுப் பெண்ணொருத்தி இப்படி விதிவசத்தால் நடு வீதிக்கு வந்து மானமிழக்க நேர்ந்த ,கொடுமையினால் திரிந்து போன தன் உறவுகள் குறித்து அன்பு மேலோங்கிய அறிவு நிலை பெற்று, அவள் மனம் திருந்தித் தன் வழிக்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று மாதுரிக்கு யோசனை வந்தது.. அது நடக்க வேண்டுமே
அன்று கல்லூரி முடிந்து அவள் வாசலுக்கு வந்த போது வாசலை விட்டு வெளியேற முடியாமல் சுகந்தியைச் சுற்றிக் கூட்டம் அலை மோதியது. அந்த அலையினுள் அகப்பட்ட சிறு துரும்பு போலானாள் சுகந்தி., சூழ்ந்து பெருகும் கேள்விக் கணைகளுக்கு முகம் கொடுக்க முடியாதவளாய் அவள் தலை கவிழ்ந்து மெளனம் கனக்க நின்றிருந்தாள்
“சொல்லு! சுகந்தி இன்றைக்கென்ன ஒற்றையாளாய் வந்து நிக்கிறாய்? எங்கை உன்ரை கூட்டாளி உன்னைத் தான் கேக்கிறம். பதில் சொல்லு அந்த ஓடுகாலி எங்கை? ம்1 இனி அவள் எந்த முகத்தை வைச்சுக் கொBண்டு இஞ்சை வரப், போறாள்? இப்படி உன்ரை முகத்திலை கரி பூசின அவள் உனக்குப் பெரிய சொந்தக்காரி. தூ!! இப்படி நடந்ததற்காக இனி நீ முகத்தை மறைச்சு முக்காடு தான் போட வேணும் என்ன சொல்லுறாய்?”
இதைக் கேட்க நேர்ந்த பாவம் சுகந்திக்கு அந்தப் பாவத்தீயினுள் அகப்பட்டு அப்படியே கருகி அழிந்து விட்டாற் போல் அவள் முகம் இருள் அப்பிக் கிடந்தது. எல்லாம் ஒழிந்து போன, வெறும் சூனிய நிழல் போலக் காட்சி வெறித்து அவள் நின்ற கோலம் நெஞ்சைப் பிழிந்தது. புறப் பிரக்ஞையாக வரும் காட்சியழகை நம்பி, அன்பைக் கை விட்ட துரோகத்துக்காக இப்போது சிலுவையில் தொங்க நேர்ந்த அவளின் அந்த ரணகளம் தன்னிலும் பிடிபடுகிற மாதிரி வெளிவேஷத்தை நம்பி மானத்தை காற்றில் பறக்க விட்ட சுகந்தியை எண்ணி மாதுரி தன்னுள் இரத்தக் கண்ணீர் வடித்தவாறே வெகுநேரமாய் அங்கேயே நிலை அழிந்து நின்று கொண்டிருந்தாள்
“என்னவென்று சொல்வது? இப்போது தலை நிமிர்ந்து பேசக் கூடிய நிலைமையா சுகந்திக்கு? மாதுரியைப் பொறுத்த வரை இரத்தம் ஒன்றாக இருந்தாலும் உறவு எடுபடவில்லை.. வெளித் தோற்றமே வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. .இதில் ஆழமான அன்பென்பதெல்லாம், புறம் போக்குத்தான். அன்பு தெளிய இது ஒரு வழி,. உடல் மாயையை மீறி, உயிரைப் பார்ப்பது.. உணர்வுகளை வாழ்விப்பது ,அதை விடப் பெரிய கொடை.. சுகந்தி இதைப் புரிந்து கொண்டால் போதுமென்றிருந்தது.
முகத்தில் பூசப்பட்ட கரியை உள்வாங்கியவாறே அவள் உறைந்து போய் நிலை தளர்ந்து நின்று கொண்டிருந்தாள். அவளிடம் அன்பை யாசிக்கவல்ல அதை உணர்த்த இதுவே தருணமென்று மாதுரிக்கு யோசனை ஓடியது.. அப்படித் தான் வாய் திறந்து அன்பு பற்றிப் பேசமுடிந்தாலும், எவ்வளவு தூரத்துக்கு இது எடுபடுமென்று புரியவில்லை.. அதை விட இவள் போன்றவர்கள் மூலம் பெறுகிற வாழ்க்கை ஞானமே எதிலும் சரிந்து போகாமல் தன்னைக் காப்பாற்றப் போதுமென்று அவள் மிகவும் ஒளிப் பிரகாசமக நினைவு கூர்ந்தாள். வாழ்க்கையில் உண்மையான தாற்பரியத்தை, உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ள,, இப்படி எத்தனையோ நெருடலான மனதை உறுத்துகின்ற சம்பவம் இது ஒன்றுமட்டுமல்ல. இன்னும் வரும் அந்தத் துயரக் காயங்களிலிருந்து, மீண்டு எழுகிற போதே, வாழ்க்கை ஞானம் பற்றிய அறிவும் கைவரப் பெறுமென்று அவளுக்கு நம்பிக்கை வந்தது
– மல்லிகை (ஓகஸ்ட் 2010 )