ஒரு பிணத்தின் தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2022
பார்வையிட்டோர்: 5,157 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஊரின் வழக்க மேளங்கள் நிரையாய் அமர்ந்து திருவாசகம் படிக்கின்றன. அப்போதுதான் உள்ளே நுழைந்த நடராசர், தனது சயிக்கிளடிக்கு விரைந்தோடிச் சயிக்கிளில் தொங்கிக் கொண்டிருந்த கிழிந்த ஓலைப்பாயினுள் துளாவி, இராவணன் பூச்சிகள் நன்றாகப் படித்துக் கிழித்திருந்த திருவாசகப் புத்தகம் ஒன்றினைத் தடவி எடுத்துக்கொண்டு வந்து அந்த வரிசையில் தானும் அமர்ந்து கொண்டு கண்ணாடிக்கூட்டைத் திறந்து, பொருத்தெல்லாம் அழுக்கேறிப் போயிருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்கிறார். பிறகென்ன? ஒரே காட்டுக் கூச்சலும் கழுதைக் கத்தலும் தான்!

மருமகள் பூரணமும் மற்றவர்களும் பலதையும் – சொல்லிப் புலம்புவதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று திருவாசகம் படிக்கச் சொன்னால் அந்த இதமற்ற கூச்சலும் மனதுக்கு நிம்மதியைத் தராது போகவே வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடவேண்டும் போன்றதொரு துறு துறுப்பில் தவித்தார் தம்பிமுத்துக்கிழவர். உள்ளே குமைந்து கொண் டிருந்த எத்தனையோ மனப் போராட்டங்களின் புறக்காட்சியாய்க் கண் களில் கனத்த நீர்த்துளிகளைச் சால்வைத் தலைப்பால் துடைத்துக் கொண்டார்.

திண்மையான உடலும் செழிப்பான முகமுமாய் இன்னும் உயிருடன் உறங்குவது போலவே படுத்திருக்கும் தன் கணவனை… வெள்ளைப் பழந்துணியினால் கட்டப்பட்டிருக்கும் அவனது அதரங் களைக்கூட வெறிகொண்டவள் போலக் கட்டி அணைத்து முத்தமிடுகிறாள் பூரணம்.

“என்ரை தேவா…! என்ரை ராசா! என்னை விட்டிட்டுப் போட்டியே! ஐயோ நான் இனி ஆற்ற உழைப்பை நம்பியிருப்பான். அப்பூ.. நான் என்ன செய்யப்போறன்…. என்னை இப்படிக் கதறவிட்டுப் போட்டியே ராசா…” என்று இடையிடை பெரிய அவலக்குரல் எடுத்துப் பக்கத்து வீட்டுக்குக் கேட்கும்படி குழறி அழுவதும் இடையிடை வார்த்தைகளற்று யோசிப் பதும், திடீரென்று மௌனமாய் உட்கார்ந்து மானசீகமாகப் புலம்புவது மாய் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கும் பூரணத்தைப் பார்த்தால் கல்நெஞ்சங்கள் கூடக் கரையுந்தான். செழிப்பாக நடமாட வேண்டிய நாற்பது வயதில் ஒரு ஆண்மகனைப் பறிகொடுத்து நிற்ப தென்றால் அதுவும் ஒன்றும் இல்லாமல் வந்த காய்ச்சல் “மெனிஞ் சைட்டிஸ்” என்ற பெயரில் உயிரைக் குடித்துவிட்டுப் போவதென்றால் எவருடைய உள்ளமும் நொந்து வலிக்குந்தான்.

கூடத்தில் ஒரு மூலையில் வட்டமாகக் குந்தியிருக்கும் பெண்கள் கூட்டத்தில் பலவிதமான ஊர்க்கதைகள் மெல்லப்படுகின்றன.

“மெய்யே, உதென்ன உப்பிடி ஒரு காய்ச்சல். காய்ச்சல் வந்து இரண்டு நாளிலை உயிர் போறதை நானெண்டால் கேள்விப்படேல்லை…” மஞ்சள் இந்தியன் வொயில் தொடக்கிய கதைக்குப் பக்கத்தில் இருந்த பச்சை நைலக்ஸ் இரகசியமாய்ச் சொல்கிறது.

“ஆஸ்பத்திரியிலை கைகாலைப் போட்டடிச்சு எழும்பித் திரிஞ்ச வராமெல்லே…. நஞ்சைக் கிஞ்சைக் குடிச்சாரோ ஆர்கண்டது…” கிழக்குக் கரையில் இருந்த நீல போர்டர் தானும் சேர்ந்து தாளம் போட்டது. உவையின்ரை குடும்பத்துக்குள்ளை நெடுகப் பிரச்சினை. அவற்றை ஆக்களுக்கும் பெண்சாதியின்ரை ஆக்களுக்கும் இடையிலை ஆர் எழுப்பம் எண்டு நெடுகப் புடுங்குப்பாடு…. தற்கொலை எண்டாலும் சொல்லுவினமே… பூசி மெழுகிப் போடுவினம்…”

அவர்களின் கதைக்குக் கையும் காலும் முளைக்கிற வேகத்தைப் பார்த்தால் மிக விரைவில் அது தற்கொலைதான் என்று நிரூபித்தே விடுவார்கள் போல் இருந்தது.

“டாங்கு… டுக்கு.டு.. டுக்குடு.. டாங்கு…. டாங்கு” மேள ஒலி கேட்கத் தொடங்கும் போதே உட்கார்ந்த இடத்தில் இருந்து உரத்துக் குரல் கொடுத்தார் நடராசர்.

“மேளத்தை நிப்பாட்டச் சொல்லுங்கோ…. இஞ்சை இன்னும் தேவாரம் படிச்சு முடியேல்லை …”

“ஆர் அவர் நிப்பாட்டச் சொல்றவர்? மேளம் பிடிச்சது நான்… நான் சொல்றன் அடிக்கச் சொல்லி… அவருக்கென்ன அதுக்கை ஒரு முன்னூடு…” இது தம்பிப்பிள்ளைக் கிழவரின் மூத்த மகன் முத்தையா வின் குரல். நடராசருக்கு மனதுக்குள்ளே ஆவி பறந்தாலும் சந்தர்ப் பத்தை எதிர்நோக்கி அவர் காத்திருக்கின்றார். கொழும்பிலிருந்து வரவேண்டியவர்கள் எல்லாம், யாழ்தேவியில் மாலை மூன்று மணியளவில் வந்து சேரும் வரை செத்தவீடு களை கட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஸ்டேசனுக்குப் போயிருந்த காரின் “ஹார்ண்” ஒலி கேட்டதுமே செத்தவீட்டில் களைத்துப் போய் மூலைக்கு மூலை உட் கார்ந்து ஊர்க்கதைகளை அசைபோட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் சுறுசுறுப்படைந்தனர். காரிலிருந்து இறங்கிய தம்பிப்பிள்ளையின் இளையமகன் சிவராஜா ஒரு அடி எடுத்து வைக்க முதலே ஓடிச் சென்று கட்டிக்கொண்டார் தம்பிமுத்துக் கிழவர்.

“கொண்ணையை உனக்கு உயிரோடை காட்ட முடியாத பாவியாயிட்டேனடா! வருத்தம் எண்டு கூட உனக்கு அறிவிக்காமல் விட்டிட்டனே…. ஐயோ இப்பிடி நடக்குமெண்டு ஆர் கண்டது? இந்த வயதிலை அவன் போகப் போகிறான் எண்டு…. ஒரு சாத்திரி கூடச் சொல்லேல்லையே” என்று பலமாக நெஞ்சில் அடித்துக் கொண்டே தனது தந்தை முழக்கித் தீர்த்த ஒப்பாரி சிவராஜாவின் உள்ளத்தின் உள்ளே சென்று வேதனை செய்கிறது. அவன் நெகிழ்ந்து மாலை மாலையாகக் கண்ணீர் உதிர்த்ததைக் கண்டு தம்பிப்பிள்ளை நிலத்தில் விழுந்து உருண்டு பிரண்டு குழறுகிறார்.

“ஐயோ…. எனக்குக் கொள்ளி வைக்கவெண்டு உன்னைப் பெத்தனே.. உனக்கு என்னைக் கொள்ளி வைக்க வைச்சிட்டுப் போட்டியேடா. ஐயோ என்னாலை ஏலாது. நான் வைக்கமாட்டன்”

தம்பிப்பிள்ளை கிழவரைத் தூக்கி அணைத்தபடி “இனி அழுது என்ன செய்யிறது? உந்த இங்கிலீசு வைத்தியங்களை நம்பாமல் கையோடை என்னட்டை ஒரு ஆள் விட்டிருந்தா நான் காப்பாத்தித் தந்திருப்பன். உது சன்னிக்குணம். இங்கிலீசு வைத்தியத்தாலை ஏலாது. ம்…. இனி நடந்ததைக் கதைச்சு என்ன பிரயோசனம், நடக்க வேண்டி யதைப் பாருங்கோ ” என்று கிழவருக்கு ஆறுதல் கூறும் சாட்டில் தனது தமிழ் வைத்தியப் பெருமைகளையும் சரியான இடத்தில் போட்டு வைக்கிறார் ராமுப் பரியாரியார்.

தனது சோலிகளை எல்லாம் முடித்துக்கொண்டு “கறுப்பும்” ஒரு அரை அடித்துவிட்டு அப்போதுதான் செத்தவீட்டுக்கு வந்து சேர்ந்த நடேசுச் சாத்திரியார், “போனவருசம் உவர் தம்பிப்பிள்ளையற்றை சாதகம் பாக்கேக்கை நான் சொன்னனான். உனக்கு ஒரு பெரிய இழப்பு வரப்போகுது. சனியனுக்கு எண்ணெய் சாத்தச் சொல்லி. நான் சொன்னதை நம்பியிருந்தால் இப்பிடி நடக்குமே! இனியாவது உவை எல்லாரும் என்ரை சாத்திரத்தை நம்புவினம்” என்று தனது பெருமை களை அங்கிருந்து யாருக்கோ அளந்து கொண்டிருந்தார்.

பான் குளிப்பாட்டுவதற்காகச் சடலத்தை வீட்டுக்குப் பின்புறம் கொண்டு போகிறார்கள். நெடு நேரமாக மிகவும் சூட்சுமமாக நடந்து கொண்டிருந்த சண்டை இப்போதுதான் வெடித்தது. குளிப்பாட்டி முடிந்தவுடன் எவ்வாறு சடலத்தை அலங்காரம் செய்வது என்பதில் தான் பிரச்சினை தொடங்கியது!.

“மாப்பிள்ளைக் கோலத்திலை இந்த வீட்டுக்கு வந்தமாதிரிப் பட்டு வேட்டியும் சால்வையும் தலைப்பாகையுமாகத்தான் காட்டுக்கு அனுப்ப வேணும்” என்று பூரணத்தின் தமையன் நடராசா சொன்னதை சிவராஜா ஒப்புக்கொள்ளவில்லை. ஏதோ கருத்து வேற்றுமை ஏற்படுவதை அவதானித்த கிழவர், விரைவாக ஓடி வந்தார். அதற்குள் புதிய சால்வையொன்றை எடுத்துத் தலைப்பாகை கட்டி முடித்துவிட்டார் நடராசர். அவர் சொன்னபடி இந்தச்சபையிலை நடக்க விட்டுவிட்டால் தனக்கு இந்த வீட்டில் மதிப்பில்லை என்றாகிவிடுமே என்று புழுங்கிய கிழவர், “இஞ்சை வந்து தலைப்பா கழண்டு சாயம் கெட்டுத்தானே அவர் இருந்தவர், பிறகு என்னத்துக்குத் தலைப்பா அவருக்கு…” என்று பொருமித் தலைப்பாகையைப் பிடித்துக் கழற்றி எறிந்து விட்டார். “உது உங்கடை பரம்பரைப் புத்தி.. சாதிக் குணம், எந்தச் சபையிலும் விஷயங் களைக் குழப்பிறது…” நடராசர் சொல்லிவிட்ட இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததோ இல்லையோ, “ஆரடா அவன் என்ரை சாதியைப் பற்றிக் கதைக்கிற வடுவான், உன்ரை மனிசி எப்பிடியான சாதியெண்டு இந்தச் சபையிலை சொல்லிக் காட்டட்டே…” சுண்ணம் இடிக்கவெனக் கொணர்ந்து வைத்திருந்த உலக்கையைத் தூக்கிவிட்டார் கிழவர்.

“வடுவான்” என்று கிழவனால் அழைக்கப்பட்டு விட்ட ஆத்மார்த்த மான அவமதிப்பைத் தாங்க முடியாமல் தேங்காய் உடைக்க வைத்திருந்த கத்தியைத் தூக்கிக்கொண்டார் நடராசர்.

பின்னால் நின்று எட்டிப் பார்த்த நீல போர்டர் சிவப்பு நைலக்ஸுக்குச் சொன்னது. “பார்த்தியே அக்கா நான் வெள்ளனச் சொன்னது சரியாப் போச்சு….” “உவைக்கிள்ள நெடுகப் பிரச்சினை. ஆர் சாதியிலை கூட எண்டு”. *இனி இப்போதைக்குச் சவம் தூக்க மாட்டினம்.. நான் போகப் போறன்…”

“நில்லுங்கோ. என்ன நடக்கிறதெண்டு பார்த்திட்டுப் போவம். வெட்டுப் பட்டாலும், வெட்டுப்படுவினம்…” சிவப்பு நைலக்ஸுக்குப் புதினம் பார்க்காமல் போக விருப்பமில்லை. எப்போது வெட்டுப்படுவார் கள் என்பது போல் எட்டி எட்டிப் பார்த்தது அது.

“கேடு கெட்ட சாதியளோட உங்களுக்கு என்ன கதை” என்று நடராசரின் கையைப் பிடித்து இழுத்தாள் அவர் மனைவி. வெறி அடங்காத அவர் “விடு என்ர கையை. உவங்களை ஒரு கை பார்க்கத் தான் வேணும்…” என்று இரைந்து கொண்ட மனைவியின் பிடியிலிருந்து திமிறித் திரும்பினார்.

நடராசரின் உறவினர் போல் தோன்றிய சிலர் பந்தலுக்குப் போட்டிருந்த தடிகளை முறித்துக் கொள்ளப் பல பெண்கள் பயந்து அங்கும் இங்கும் சிதறி ஓடியதில் யாரோ நீல போர்டரை நெரிக்க அது கீழே விழுந்து எழுந்தது. குழந்தைகள் வீரிட்டு அலறும் ஒலியுமாக …. அங்கே என்ன நடக்கின்றது என்று தெரியாத ஒரு சூழ்நிலை ஏற்படு கின்றது. உறவினர் அல்லாத அயலவர்கள், நண்பர்களில் பலர் “இனி உவை சமாதானப்பட்டுச் சவம் தூக்க இருளும். நாங்கள் போவம்” என்று பேசிக்கொண்டு விலகிக்கொள்ள, சற்று நேரத்துக்கு முன் பெரிய கூட்டமாய் இருந்த முற்றத்தில் இப்போது மிகச் சிலரே காணப்படு கின்றனர். காலையில் இருந்து இவ்வளவு நேரமும் துல்லியமாகத் தெரிந்து கொண்டிருந்த கவலைகள் எல்லாம் எங்கே போனதென்று தெரியாத ஒரு திசையில் போய்விட்டன போலத் தோன்றுகிறது.

“என்ரை பிள்ளையை ஒருத்தரும் தொடப்பிடாது, நான் தனியாத் தூக்கிக்கொண்டு போய்க் கொள்ளி வைச்சிட்டு வருவன்… எல்லா நாயளும் வெளியில போங்கோ..” தம்பிப்பிள்ளைக் கிழவரின் கோப மெய்ப்பாடு எல்லை மீறி வார்த்தைகள் நெருப்பாய் வெளிவர, சிங்கம் போலக் கர்ச்சித்தார் அவர்.

நடுத்தர வயதில் அநியாயமாய் இறந்துவிட்ட தன் பிரிவினால் கவலை கொண்டு யாரும் செத்தவீட்டுக்கு வரவில்லை என்பதையும், தமது திறமைகளைப் பறை சாற்றிக் கொள்வதற்கும் தமது உயர் சாதிப் பெருமைகளை நிரூபணம் செய்து கொள்வதற்கும் இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தும் சுயநல நோக்கத்துக்காகவே எல்லோரும் வந்திருக்கிறார்கள் என்பதையும் நிரூபிக்கும் அசிங்கமான பல நிகழ்வுகளைத் தரிசித்துக் கொண்டே அந்த மனிதரின் சவம் அங்கே கவனிப்பாரற்றுக் கிடந்தது.

– நீர்ப்பாசனத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகப் போட்டியில் பரிசு – 1980 ஈழநாடு – பாரிஸ் வாரமலர் மறுபதிப்பு – பெப் 1992,

– ஈழத்துச் சிறுகதை மஞ்சரி 1982

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *