ஒரு குழந்தையின் மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 8,018 
 

எப்போதும் பரபரப்பாக இருக்கும் ‘தாமு பேன்சி’ கடையில் பம்பரமாய் சுழலும், கார்த்திக்கை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிடிக்கும். காரணம் அவன் சிறுவன் என்றாலும், அனைவரிடமும் சிரித்து பேசி, வேகமாக செயல்பட்டு, அனைவரையும் கவர்ந்து வைத்திருந்தான். அவனின் முதலாளி தாமோதரன் உட்பட. கடையில் வேலை செய்யும் அனைவரும் வெளியில் தான் சாப்பிடுவார்கள். ஆனால் கார்த்திக் மட்டும் தினமும் காலை எட்டு மணிக்கு தாமோதரன் வீட்டுக்கு சென்று விடுவான். அங்கேயே சாப்பிட்டு விட்டு தன் முதலாளி மகன் விஜயை, பள்ளிக்கூடத்தில் கொண்டு விட்டு விட்டு கடையையும், அவன்தான் திறப்பான். தாமோதரன் ஒரு வங்கியில் மேலாளராக வேலை செய்கிறார். கடையை அவரும் அவரின் மனைவியும் சேர்ந்து கவனித்து கொள்வார்கள்.

கார்த்திக் பெற்றோர் கிராமத்தை சேர்ந்தவர்கள். அவனை இக்கடையில் ஒரு வருட குத்தகைக்கு விட்டு சென்று இருக்கிறார்கள். தாமோதிரன் தன் மகனுக்கு துணி எடுக்கும் போது, கார்த்திக்கும் துணி எடுப்பார். இருவருக்கும் ஒரே வயதுதான்.

வழக்கம் போல் கார்த்திக் காலையில் முதலாளி வீட்டிற்கு சென்றான். அங்கு விஜய் பள்ளி கூடத்திற்கு புறப்பிட்டு கொண்டிருந்தான் “”என்ன விஜய்! இன்றைக்கு வேற கலர் துணி போட்டுருக்க” “ஆமாம் கார்த்திக். நான் இன்றிலிருந்து, ஆறாம் வகுப்புக்கு போறேன். இனிமே இந்த துணிதான். சரி! சரி! நீ சிக்கிரம் சாப்பிட்டு வா. நாம ஸ்கூல்க்கு போகலாம். இன்றைக்கு நான் சீக்கிரம் போனும்” “சரி”’ என கூறி, கார்த்திக் சாப்பிட்டு விட்டு விஜயை பள்ளியில் விட புறப்பிட்டான். தினமும் இருவரும் பேசிக்கொண்டே போவார்கள். விஜயை பள்ளிக்குள் அனுப்பும் போதேல்லாம், தனக்கும் இப்படி படிக்க வாய்ப்பு கிடைக்காததை, நினைத்து அவன் மனம் வாடும்.

தாமோதரனின் வங்கியில் “நாட்டின் வளர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் நாட்டின் வளர்ச்சி பற்றி பேசிய தாமோதரன், பலரது பாராட்டையும், கைதட்டலையும், பரிசையும் பெற்றார். அத்தோடு வங்கியில் வேலை செய்த அனைவரும், ‘நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரிவோம்’ என சத்தியம் செய்தனர்.

தாமோதரன் அன்று இரவு தன் மனைவி, மகன் விஜயுடன் படுக்கையில் அமர்ந்து, தான் கூட்டத்தில் பேசியதை பற்றி பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட விஜய் “நாட்டின் வளர்ச்சி என்றால் என்ன அப்பா?” என கேட்க “நீயும், நானும் நம்மை போல் அனைவரும், நன்றாக படித்து நல்ல வேலை செய்து, நாட்டின் சட்டதிட்டத்தை மதித்து, நடப்பதே, நாட்டின் வளர்ச்சின்னு சொல்லாம்“ “அப்போ கார்த்திக் மட்டும் ஏன் படிக்காம நம்ம கடையில வேலை செய்ரான். அது அவன் நாட்டிக்கு செய்யிற துரோகமா? அவனுக்கு நாம கடையில் வேலை கொடுத்து, நீங்களும் நாட்டிக்கு துரோகம் செய்றிங்களா அப்பா?” என்ற விஜயின் கேள்விக்கு, அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினர். கார்த்திக்கை வேலையை விட்டு நிறுத்திவிடுவரோ? என தாமோதரனின் மனைவி நினைத்தாள்.

மறுநாள் வழக்கம் போல் கார்த்திக் வேலைக்கு வந்தான். தாமோதரன் பார்வையில் கடும் கோபம் தெரிந்தது. “சீக்கிரம் சாப்பிடு. இன்னக்கி நானும், உன் கூட ஸ்கூலுக்கு வறேன். உங்க அப்பாவையும் போன் பண்ணி வர சொல்லிருக்கேன்” “சரிங்க சார்” நான் ஏதும் தவறு செய்து விட்டேனோ? என்னை வேலையை விட்டு நிறுத்தி விடுவார்களோ? என பயத்துடன் சாப்பிட்டு விட்டு, தாமோதரனுடன் விஜயையும் அழைத்துக்கொண்டு புறப்பிட்டான். அங்கு ஏற்கனவே கார்த்திக்கின் தந்தை காத்திருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்றார் தாமோதரன்.

கார்த்திக்கு ஒன்றும் புரியவில்லை` தாமோதரன் தலைமை ஆசிரியரிடம் “நான் போன்ல சொன்ன பையன் இவன்தான். இவன் படிப்பு செலவு எல்லாம் நான் ஏத்துக்கிறேன். இன்றைக்கு அட்மிஷன் போடலாம்” என தாமோதரன் கூற உற்சாகத்தில் குதித்தான் கார்த்திக். குழந்தையின் படிப்பு, வருங்கால நாட்டின் நலன், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என அனைத்தையும் கார்த்திக்கின் தந்தைக்கு புரியவைத்தார் தாமோதரன்.

ஒரு குழந்தையின் மனம், இன்னோரு குழந்தைக்கு தான் தெரியும் போல, கார்த்திக்கின் மனம் விஜய் புரிந்திருக்கிறது என தனக்குள் பேசிக்கொண்டே வேலைக்கு சென்றார் தாமோதரன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *