கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 2,648 
 
 

“அம்மா விடுதலை ஆகிட்டா. எவ்வளவு சீக்கிரம் இந்தியா வர முடியுமோ வா.”

ஃபோனில் பாட்டி சொன்ன இந்த வார்த்தைகள் எனக்குள் ஒரு சிலிர்ப்பையும் சந்தோஷத்தையும் ஒருசேரக் கொடுத்தது. என்ன என்னவோ கேட்க நினைத்து “எப்ப?” என்ற ஒற்றைச்சொல் மட்டும் வெளிவந்தது.

“நேத்து சாயந்திரம்.. திருவனந்தபுரம் ஜெயில்ல இருந்து நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்ததும் உனக்குச் சொல்லலாம்னு இருந்துட்டேன். பிரமை பிடிச்ச மாதிரி இருக்கா. அதிகம் பேச மாட்டேங்கறா. கண்ணன் எப்ப வருவான்னு மட்டும் அடிக்கடி கேக்கறா. உடனே கிளம்பி வாடா”

“சரி பாட்டி” என்று உதடுகள் சொன்னாலும் எங்கே உடனே புறப்படுகிறது? நான் இருப்பதோ சிங்கப்பூர். எப்படியும் டைரக்ட் ஃப்ளைட் பிடித்துப் போனாலும் எங்கள் கிராமம் போய்ச்சேர ராத்திரி அல்லது நாளை காலைகூட ஆகிவிடும்.

ஃபோனை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தேன். மாலினி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை எழுப்பலாமா என்று யோசித்து மணியைப் பார்த்தால் 5.30 தான் ஆகியிருந்தது. சரி முதலில் டிக்கட் புக் செய்துவிட்டு அவளை எழுப்பி விஷயம் சொல்லலாம் என்று மொபைலை எடுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றேன்.

டிக்கட் புக் செய்துவிட்டு நிமிர்ந்தபோது மணி ஆறு. கிச்சன் சென்று ஒரு கப் காஃபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தேன். “அம்மா” என்று என்னையும் அறியாமல் வாய் முணுமுணுத்தது.

பதினைந்து வருஷங்களுக்கு மேல ஆச்சு அம்மாவப் பார்த்து. அப்பாவக் கொலை செஞ்சுட்டான்னு போலீஸ் பிடிச்சுக்கிட்டு போகும்போது என் வயது பதினைந்து. எவ்வளவோ வக்கீல் கோர்ட் என்று அலைந்தும் manslaughter என்று முடிவாகி தண்டனைக் கிடைத்தது. பதினைந்து வருடங்கள்!

‘அம்மா ஏன் அப்படிச் செஞ்சே? அப்பா என்ன செஞ்சார்? இதெல்லாம் தெரியாமயே இத்தனை வருஷம் போயிடித்து அம்மா. எனக்கு நிச்சயம் சொல்லித்தான் ஆகவேண்டும். இதோ வருகிறேன் இந்தியா.’

நான் வாய்விட்டுப் பேசியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். திடீரென்று “ரிலாக்ஸ் கண்ணா” என்றது மாலினியின் குரல். என் அருகில் நின்றுகொண்டிருந்தாள்.

“அம்மா..” என்று ஆரம்பித்த என்னை “கொஞ்சம் கொஞ்சம் உன் பேச்சைக் கேட்டேன். உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு எழுந்து வரல. என்ன ஆச்சு?” என்றாள்

நான் பாட்டி சொன்னதைச் சொன்னேன். கேட்டு மாலினியின் கண்கள் விரிந்தன. “என்னது! அத்த வந்தாச்சா? உடனே கிளம்பணும். டிக்கட் புக் ஆச்சா” என்று கேட்டாள். மாலினிக்கு என் அம்மா சொத்த அத்தையும் கூட .

அதற்கப்புறம் எல்லாம் துரித கதியில் நடந்தது. மறுநாள் அதிகாலை எங்கள் கிராமத்தை வந்தடைந்தோம். அது அப்படியே நான் விட்டுச் சென்றது போலவே மாறாமலேயே இருந்தது.

பாட்டி எங்களை வரவேற்று டீ தந்தாள். என் பரபரப்பைப் பார்த்து “மாடில இருக்கா” என்றாள்

“நீங்க மட்டும் முதல்ல போயி பார்த்துட்டு வாங்க. நான் அப்புறம் வரேன்” என்ற மாலினியை நன்றியுடன் பார்த்துவிட்டு நாலெட்டில் மாடியை அடைந்து அம்மா ரூம் கதவைத் தட்டினேன்.

தாளிடப்படாத கதவு திறந்து கொண்டது. உள்ளே கட்டிலில் அம்மா உட்கார்ந்து கொண்டிருந்தாள், பார்வை எங்கோ நிலைத்திருந்தது.

நான் வந்த சப்தம் கேட்டு திரும்பியவள் முகத்தில் பல சலனங்கள். உதடு துடித்து கண்கள் தளும்பின.

“கண்ணா!”

“அம்மா” என்று நான் அவளிடம் சென்று கட்டிக்கொண்டேன். என்னாலும் என் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. பெருங்குரலெடுத்து அழுதேன். அம்மா என் தலையைக் கோதி விட்டாள். சிறிதுநேரம் கழித்து என் அழுகை ஓய்ந்தது. கதவருகில் நிழலாட மாலினி.

“அத்தே” என்று வந்து அணைத்துக் கொண்டாள்.

இப்படியே சில நேரம் சென்றதும் எல்லாரும் சாப்பிட கீழே சென்றோம். சாப்பிடும் போது யாரும் பேசவில்லை. பிறகு சாப்பிட்டு எழுந்து மாடிக்குப் போக எத்தனித்த அம்மா “கண்ணா கொஞ்சம் என்னோட வா! உன்கிட்ட நிறைய பேசணும். மாலினி, பாட்டி ரெண்டு பேரையும் கூட்டிட்டு வா. நான் மேல போறேன்” என்றாள்

எல்லாரும் மேலே சென்றோம். அம்மாவின் கட்டிலில் ஒரு தகரப் பெட்டி திறந்து இருந்தது. அதனுள்ளே ஒரு கம்பளியும் ஒரு சிறிய குப்பியில் ஒரு விதமான திரவமும் இருந்தது. கூடவே கட்டுக் கட்டாக பணமும் இருந்தது.

“என்னம்மா இது?”

“இது உன் அப்பா மணியோட பெட்டி. அவரோட சுயரூபம்”

புரியாமல் விழித்த என்னிடம் “உன் அப்பா ஒரு ஒடியன்” என்றாள்.

இதைக் கேட்டதும் பாட்டியிடமிருந்து ஒரு விதமான கேவல் எழுதந்தது. “எனக்குப் அப்பவே சந்தேகம் தான். உன் அப்பா செத்தபோதே சந்தேகம்தான்” என்று அம்மாவைப் பார்த்து அழ ஆரம்பித்தாள்

ஒன்றும் புரியாமல் நானும் மாலினியும் திகைத்து நின்றோம். ஓடியனா? அப்படினா என்ன? யாரு?

“அப்படின்னா என்னம்மா? கொஞ்சம் விவரமா சொல்லு “

அம்மா சொன்னதைச் சொல்ல இங்கே இடம் போதாது. அதனால் சுருக்கமாக,

ஒடியன் கேரளாவில் ஜமீன்தார்களால் தங்கள் எதிரிகளைக் கொல்ல உபயோகக் படுத்தப்பட்ட காண்ட்ராக்ட் கில்லர்ஸ். அந்தக் காலத்தில் கேரளத்தில் பெரும்பான்மையானவர்கள் களரி வர்மம் முதலியவற்றில் தேர்ந்தவர்களாக இருந்ததால் நினைத்தபடி சென்று யாரையும் கொல்ல முடியாது. அதைச் செய்து முடிக்க வந்தவர்கள்தான் ஓடியன்கள்.

முழுமை அடையாத மனிதக் கருவில் இருந்து ஒருவித எண்ணைத் தயாரித்து அதை காதின் பின்புறம் தடவிக்கொள்வார்களாம். அதன் மாந்த்ரீக சக்தியால் ஏதேனும் மிருக உருவை எடுத்துக் கொள்வார்களாம். அதாவது உண்மையை உருவம் எடுக்க மாட்டார்கள். பார்ப்பவர் கண்களுக்கு அப்படித் தெரியுமாம். ஆனால் தேர்ந்த மாந்த்ரீகர்களும் மற்ற ஓடியன்களும் அவர்களைக் கண்டுபிடித்து விடுவார்களாம்.

டார்கெட் தேர்ந்து எடுத்து இப்படி அவர்களை மெஸ்மரைஸ் செய்து அவர்களை நெருங்கிக் கொன்று விடுவார்களாம். உடலை டிஸ்போஸ் செய்வதிலும் வல்லவர்களாம். ஆனால் அவர்கள் எடுக்கும் உருவில் ஏதேனும் ஒருகுறை வைப்பார்களாம். உதாரணத்துக்கு மாடு உருவை எடுத்தால் அதற்கு வால் இருக்காது. அல்லது மூன்று கொம்பு இருக்கும். இப்படி. அந்த விநோதத்தில் சொக்கிய விக்டிம்களை அவர்கள் சுதாரிப்பதற்குள் கொன்று விடுவார்களாம்.

இப்படிப்பட்ட ஓடியன்தான் என் அப்பா என்று சொல்லி முடித்தாள்.

நானும் மாலினியும் ஒரு வித அர்ஜுன மயக்கத்தில் இருந்தோம்.

“அவர் என்னைக் கல்யாண செஞ்சுக்கிட்டதே என் அப்பாவை அதான் உன் தாத்தாவைக் கொல்லத்தான். தாத்தா களரி வித்தகர். அவரோடு நேருக்கு நேர் மோத முடியாதுன்னுதான் இப்படி தந்திரமா என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு அப்புறம் ஒரு நாள் ராத்திரி அவரைக் கொன்னுட்டார். தாத்தா மாடில இருந்து விழுந்து இறந்ததா எல்லாரையும் நம்ப வச்சுட்டார்.

ஒரு ஆறு மாசம் இருக்கும். ஒரு நாள் அவர் இல்லாத போது அலமாரியைத் திறந்து ஒழுங்குப் படுத்திக்கிட்டு இருந்ததபோது இந்தப் பெட்டி கெடச்சது. திறந்து பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி. அதில் இருந்த பொருள்களோடு என் அப்பா படமும் இருந்தது. எல்லாம் புரிஞ்சிடுத்து. எனக்குள்ள எழுந்த கோவம் கட்டுக்கு அடங்காம போச்சு.

அந்தச் சமயத்துல உங்க அப்பா வந்துட்டார். நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு என்ன ஓங்கி அறைஞ்சார். நான் கத்திக்கிட்டே வெளில ஓடி வந்தேன். என் பின்னாலேயே ஓடி வந்தார். மாடிப்படி கிட்ட வந்து என்னப் பிடிக்கப் பார்த்தபோதுதான் நான் ஒரு திமிறு திமிறினேன். அவர் மாடில இருந்து கீழ விழுந்துட்டார். உடனே உயிர் போச்சு.

இத நம்ம வீட்டுல இருந்த வேலைக்காரங்க பார்த்துட்டாங்க. அப்புறம் போலீஸ் வந்ததும் விசாரணையில் இதெல்லாம் சொல்லிட்டாங்க. கோர்ட்ல வச்சு இது தற்காப்புக்காகத் தான்ன்னு வக்கீல் வாதாடியும் எனக்கு பதினஞ்சு வருஷம் தண்டனை கொடுத்துட்டாங்க” என்று சொல்லி முடித்து ஓவென்று அழுதாள்.

அம்மாவைச் சமாதானம் செய்ய ரொம்ப நேரம் ஆச்சு. அதுக்குள் ராத்திரியே ஆகிடுத்து.

அம்மாவும் பாட்டியும் அம்மா ரூமில் படுத்துக் கொண்டார்கள். நானும் மாலினியும் பாட்டி ரூமில்.

மணி ஒன்பதுதான் இருக்கும். ஆனால் கிராமம் அதுவும் மரங்கள் சூழ்ந்த இடமானதால் இருட்டு கவிந்திருந்தது.

நான் உட்கார்ந்து யோசனையில் இருந்தேன். திடீரென்று மாலினி “என்னங்க! ஏதோ சத்தம் கேக்கறாப்போல இருக்கு வெளில. போய் பாருங்களேன் ” என்றாள். சரியென்று நான் எழுந்ததும் என்ன நினைத்தாளோ “நானும் வர்றேன்” என்றாள். ஒரு டார்ச் எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

சுவர்க்கோழி ரீங்காரமிடும் கும்மிருட்டு. வீட்டைச்சுத்தி வந்தோம். திடீரென்று மாலினி என் கைகளைப் பிடித்தாள். “அங்க பாருங்க ரெண்டு பெரிய ஓநாய்” என்று காதில் கிசுகிசுத்தாள்.

அவள் காட்டிய திசையில் நான் பார்த்தேன். இரண்டு பெரிய தேகம் கொண்ட கருத்த மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் கண்களைப் பார்த்தேன். அவர்களும் என் கண்களைப் பார்த்தார்கள்.

அவர்களின் ஒருவன் மலையாளத்தில் “அவன் மணிண்டே மகனாணு. நம்மட ஆள்” என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *