எங்காத்துக்காரருக்கு அரண்மனை வேலை…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 11, 2022
பார்வையிட்டோர்: 3,849 
 

ஏகாம்பரம் வயது 52. தன் இருக்கையில் அமர்ந்தபடி அக்கம் பக்கம் பார்த்து அலுவலகத்தை நோட்டமிட்டார். சுந்தரியைக் காணோம்.

‘அப்பாடா!’ என்று உள்ளுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டவர்… அடுத்து அமர்ந்திருந்தவனைப் பார்த்தார்.

கணேசன் வயது 25. மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தான்.

“உச்..!” அவன் பக்கம் சாய்ந்து மெல்ல சத்தம் கொடுத்தார்.

அவன் கவனம் இவர் பக்கம் திரும்பவில்லை.

இன்னொருதடவையும்….

“உச்!” இந்த முறை ஒலியை கொஞ்சம் உயர்த்திக் கொடுத்தார்.

ம்ஹும்…அவன் காதில் இவர் அழைப்பு விழவே இல்லை!

அதற்கு மேல் அவரால் பொறுக்க முடியவில்லை.

“கணேஷ்!” வாய்விட்டே அழைத்தார்.

“என்ன சார்…?” திரும்பினான்.

“என்னைப் போல் நல்ல சுதந்திரமா இணைய தளத்தில் பலான படம் பார்த்து மகிழ்ச்சியாய் இருந்தவனை எல்லாம்… பார்த்தால் சிறைன்னு தடை விதிச்சு… இப்படி சில்லறைத் தனமாய் பார்க்க வச்சுட்டானுங்க…” என்று முணுமுணுத்தவர்…

“நேத்திக்கு ஞாயிற்றுக் கிழமை. மலையாள படம் போனீயா..?” கிசுகிசுப்பாய்க் கேட்டார்.

அவன் தலையாட்டினான்.

“நல்லா இருந்ததா..?” அதே தொணியில் கேட்டார்.

“ம்ம்…..”

“எத்தனை பிட் போட்டான்…?”

“ரெண்டு!”

“எப்போ… ?”

“புரியல…?!”

“இடைவேளைக்கு முன்னாடியா பின்னாடியா…?”

“முன்னாடி ஒன்னு. பின்னாடி ஒன்னு!”

“நெனச்சேன்!! முன்னாடி போட்டா…. பாதி படதுக்கு மேல ஆட்கள் இருக்க மாட்டேன்கிறாங்க. பின்னாடி போட்டால் இடைவேளைக்கு அப்புறம்தான் கூட்டமே வருதுன்னு மக்களை உட்காரவைக்கனும்னன்னே முன்னாடி ஒன்னு பின்னாடி ஒன்னு போடறான் போல. அது சரி. நல்லா இருந்துச்சா…?”

“சூப்பர் சார்!” கணேசன் கையில் முத்திரைக்க காட்டி கண்கள் மிளிர சொன்னான்.

அவ்வளவுதான்!! ஏகாம்பரத்தின் முகம் சட்டென்று விழுந்தது.

“நான் கிளம்பலாம்ன்னு இருந்தேன். கடைசி நேரத்துல என் ஆத்துக்காரி முக்கிய வேலையைக் கொடுத்து கெடுத்திட்டா…முடியல…”பெருமூச்சு விட்டார்.

“அந்த சாந்தி திரையரங்குக்காரன் ரொம்ப புத்திசாலி சார். தனியா பிட் போட்டா போலீஸ் பிடிச்சுடும்ன்னு காட்சியெல்லாம் படத்தோடே வரும்படி படத்தையெல்லாம் கவனமா எடுக்கிறான் சார்.!”

“ஆமா ஆமா.! இந்த கரோனா காலத்துல காட்சிகள் கம்மி, ரசிகர்கள் குறைவு பணம் சம்பாதிக்கனும்ன்னு இப்படியெல்லாம் பண்ணுவாங்க. உஷா திரையரங்குல படம் போட்டானா…?”

“போட்டானோ போடலையோ..நான் அங்கெ போறதில்லே. அவன் சுத்த மோசம் சார். சுவரொட்டிகளை மட்டும் ரசிகர்களை இழுக்கிறாப்போல கவர்ச்சியாய் ஒட்டி…. உள்ளே உட்கார வச்சு ஒன்னும் போடுறதில்லே. காசை வாங்கி அவன் சம்பாதிச்சுக்கிட்டு வெறுப்பேத்தறான்.”

“ஆமா… ஆமா… நானும் ஒரு படத்துக்குப் போய் இந்த அவஸ்தையை அனுபவிச்சிருக்கேன். இருந்தாலும் மொத்தமா ஒரேயடியா ஏமாத்துறதில்லே. அப்பப்போ ‘ பிட்! ‘ போடுவான் அதெல்லாம் நம்ப அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.”

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது நரேன் எழுந்து இவர் இருக்கையை நோக்கி வந்தான்.

ஏகாம்பரம் கம்மென்றிருந்தார்.

“சார்! கையெழுத்து..!” அவன் இவர் முன் வந்து கோப்பை நீட்டினான்.

“வச்சுட்டுப் போ. டீ குடிச்சுட்டு வந்து கவனிக்கிறேன்!” என்றார்.

அவன் இவர் மேசை மீது வைத்துவிட்டு அகன்றான்.

“கணேஷ்! டீக்குக் கிளம்பு!” எழுந்தார்.

அவன் எழுந்தான்.

இருவரும் அலுவலகத்தின் பின்புறமுள்ள கேன்டீனுக்குச் சென்றார்கள்.

டீக்கு சொல்லிவிட்டு எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்தார்கள்.

“அப்புறம் கடற்கரைக்குப் போனீயா..?”

“போனேன் சார்.!”

“அங்கே எப்படி…?”

“பச்!”

“ஒண்ணுமில்லேயா…?!”

“ஆன்டிகளிலிருந்து வயசு பொண்ணுக வரை கரோனான்னு ஒன்னும் வீட்டை விட்டு கிளம்பமாட்டேங்குதுங்க.”சோகமாய் பெருமூச்சு விட்டான் கணேசன்.

“ஆமா…”இவரும் மூச்சு விட்டார்.

டீ வந்தது. இருவரும் குடித்தார்கள். அப்புறம் இருவரும் வெளியே வந்து … ஏகாம்பரம் ஓரமாய் போய் பொடி போட்டார். கணேசன் சிகரெட் பிடித்தான்.

இருவரும் முடித்து நடக்கும்போது…

“உங்க பெண்ணுக்கு எப்போ சார் சீமந்தம்..வளைகாப்பு..?” கேட்டான்.

“வர்ற ஞாயிறுக்கிழமைக்கும் அடுத்த ஞாயிறு. அந்த விசயமாத்தான் இந்த ஞாயிறு வேலை. படத்துக்கு வர முடியல. பணத்துக்கு நாயாய்ப் பேயாய் அலையுறேன்.!”என்றவர் கொஞ்சம் வேகமாக நடந்தார்.

“ஏன் சார் வேகமா போறீங்க…?”

“இன்னைக்கு ஒரு ஆள் பணம் தர்றேன்னு சொன்னார். நல்ல சமயத்துல நினைப்பு வந்தது. போய் போன் பண்ணனும்.” சொல்லி நடந்தார்.

இருவரும் இருக்கைகளில் வந்து அமர்ந்தார்கள்.

ஏகாம்பரம் நாற்காலியில் அமர்ந்ததும் தன் மேசை இழுப்பை இழுத்து திறந்து அதிலிருந்து தன் கை பேசியை எடுத்து…

“ராகவன் சார்.! இன்னைக்குச் சாயந்தரம் அஞ்சு மணிக்கெல்லாம் கண்டிப்பா வர்றேன்” சொல்லி அணைத்தார். அடுத்து மேலாளர் அறைக்குச் சென்றார்.

12. 30 மணிக்குத் திரும்பி வந்தார்.

“என்ன சார் பிளேடா…?” என்றான் கணேசன்.

“ஆமா அது சொந்தக்கதை சோகக்கதை!”

“சார்! வளைகாப்பு பத்திரிக்கையெல்லாம் கொடுத்தாச்சா… ?” விசாரித்தான்.

“அதெல்லாம் பையன் பொறுப்பாய் செய்யறான். நான் புதன் கிழமை இங்கே கொடுக்கிறதாய் இருக்கேன். மணி 12. 50 சாப்பிடப் போகலாம் கணேசன்!” எழுந்தார்.

இருவரும் சாப்பாட்டுக் கூடத்தில் அமர்ந்து தூக்குகளைப் பிரித்தார்கள்.

“என்ன சாம்பாரா..? வாசனைத் தூக்குது..?” என்றார்.

“ஆமாம் சார். நீங்க…?”

“தயிர் சாதம்.! வயசாயிடுச்சுல்லே அதனால காலையில எழுந்து வீட்டுக்காரியால சமையல் செய்ய முடியல. அதான் அப்பப்போ தயிர், புளிசாதம். எப்போதாவதுதான் சாம்பார் கூட்டு, பொரியல்.!” சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடித்து இருவரும் கேரம் ஆடினார்கள்.

2.10 க்கு இருவரும் இருக்கைக்கு வந்தார்கள்.

ஏகாம்பரம் , நரேன் வைத்து சென்ற கோப்புகளைப் பிரித்து இரண்டு ஏடுகள் புரட்டும்போதே…. தூக்கம் கண்களை இழுத்தது. இது அவ்வவ்வப்போது நடக்கும் நிகழ்வு.

கேண்டீனுக்குச் சென்று முகம் கழுவினார். பொடி போட்டார். ஒரு பத்து நிமிடங்கள் செலவழித்து தூக்கக்கலக்கத்தை விரட்டியடித்து விட்டு இருக்கைக்கு வந்தார்.

மாடசாமி தெரிந்த ஆள் வந்தான். அரைமணி நேரம் எதிரே அமர்ந்து சில விசயங்கள் பேசிவிட்டுச் சென்றான்.

மணியைப் பார்த்தார். 3.30.

“கணேஷ்! டீக்குப் போகலாமா..”

“இல்லே சார். நீங்க போய்வாங்க” அவன் வேலையில் மூழ்கினான்.

சென்று திரும்பி வந்தார்.

மணி 4.00.

மேலாளர் அறைக்குச் சென்றார்.

அரைமணி நேரத்தில் திரும்பி வந்தார்.

நரேன் எதிரில் வந்து….

“சார். கையெழுத்து!” நின்றான்.

“நாளைக்கு கவனிக்கிறேன். இப்போ முக்கிய வேலையாய் வெளியில போறேன்.”சொல்லி கை பேசியை எடுத்து சட்டைப்பையில் போட்டுக்கொண்டு மேசை இழுப்பைப் பூட்டி கிளம்ப ஆயத்தமானார்.

ராகவனிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு 5.00 மணிக்கு வாசலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு…

“வாசு….” குரல் கொடுத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார்.

“இதோ வந்துட்டேங்க..” அவளின் குரல்தான் கேட்டது ஆள் வரவில்லை.

“வேலைக்குப் போன புருசன் களைச்சு தவிச்சு வீட்டுக்கு வருவானே. அவனுக்கு ஒரு வாய் காப்பியைக் கலந்து தயாராய் வைச்சிருப்போம்ன்னு கிடையாது. எப்பப் பாரு தலையைக் கண்டதும்தான் பரபரக்கிறது..!” என்று முகம் மாறி ஏகாம்பரம் சத்தம் போட…

‘பாவம்! எவ்வளவு வேலையோ..? சத்தம் போடுறாரு!’ – என்று நினைத்துக் கொண்டே எப்போதும்போல் வீட்டு வேலைகளில் ஓயாமல் உழன்ற வாசுகி கை சுட்டு, கால் சுட்டு பரபரப்புடன் கணவனுக்குக் காபி ஆற்றிக் கொண்டு வந்தாள்!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *