இந்த மாதிரி நாங்கள் சந்தித்துக் கொள்வது ரொம்ப அபூர்வமாகப் போயிற்று. இந்த வாட்ஸப் யுகத்தில் அரட்டை அடிப்பதற்குக் கைபேசியே போதும் என்கிற நிலை வந்துவிட்டாலும், நாங்கள் தோழியர்கள் நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இரண்டு மாதங்களாக முயற்சி செய்து இன்றைக்குத் தான் அது நிறைவேறியது.
ரேணு வீட்டில் தான் இந்தச் சந்திப்பு நடந்தது. பன்னிரண்டு தோழியர்கள் சந்திக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் எட்டு பேர் தான் சேர முடிந்தது. மஞ்சுவிற்குத் திடீர் என்று அவள் மாமியார் ஊரிலிருந்து வந்து விட்டார். கௌரி வழக்கம் போல் கைக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் அம்மா வரவில்லை என்கின்ற பல்லவி. மற்ற இருவருக்கும் இப்படி ஏதோ ஒரு சாக்கு.
ரேணு வீட்டில் அவளுடைய கணவருக்கு வெளியூரில் வேலை. அவளுக்குக் குழந்தைகள் இல்லை. தனியாகத்தான் குடித்தனம் செய்கிறாள். சனி ஞாயிறு கணவர் வந்து போவார். அதுவும் இந்த வாரம் அவர் தம்பி வீட்டில் விசேஷம் என்று சென்றுவிட்டார் அதனால் அவள் வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது எளிதாயிற்று.
சோனா, கஸ்தூரி, அரவிந்தா, கிறிஸ்டினா,சுகந்தி, பாவனா, ரேணுவுடன் என்னையும் சேர்த்து எட்டு பேர் . தோழியர்கள் சந்தித்தவுடன் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கொண்டு ஒரே அமர்க்களம். நாங்கள் அனைவரும் ஒன்றாகப் படித்தவர்கள் அல்லர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மகளிர் விடுதியில் ஒன்றாகத் தங்கியிருந்தவர்கள். நாங்கள் பல்வேறு வயதினர் . விடுதியில் தங்கியிருந்த பொழுது ஒரு சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களிடையே வயது வேறுபாடு காணாத நட்பு ஏற்பட்டு இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தோழியர்கள் ஒவ்வொருத்தரும் விதவிதமாகப் பலகாரம் செய்து எடுத்து வந்து இருந்தோம் . ரேணுவும் ஏதோ செய்து வைத்திருந்தாள். ஐஸ்கிரீம் ஜூஸ் என்று வேறு அசத்தியிருந்தாள்.
ஒருத்தருக்கொருத்தர் நலம் விசாரித்துக் கொண்டு அப்படியே பேச்சைத் தொடங்கினோம். சமீபத்தில் பார்த்த மலையாள படமான “தி கிரேட் இந்தியன் கிச்சன்” பற்றிய பேச்சு வந்தது. அப்படியே ஒவ்வொருத்தரும் தங்களுடைய வீட்டுக் கதையைப் பேசத் தொடங்கினார்கள்.
அரவிந்தா சொன்னாள் “அப்படியே அந்தத் திரைப்படம் என் கதைதான். காலையில் தொடங்கி நாள் முழுக்க வீட்டு வேலை செய்தாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு திருப்தியும் கிடையாது . மாமனார் மாமியார் பிடுங்கல் வேறு. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க மாட்டார்கள். அதைத் திருப்பிக் கொண்டு வைப்பதே எனக்குப் பெரிய வேலையாக இருக்கும். ஒரு சின்ன முணுமுணுப்புக் கூட காட்ட முடியாது. என் வீட்டுக்காரர் சண்டைக்கு வந்து விடுவார்.
இப்பொழுது, மாம்பழ சீசனில் என் வீட்டில் நடக்கின்ற கதையைக் கேளுங்கள். மாம்பழம் சாப்பிட்டு விட்டு தட்டில் அப்படி அப்படியே போட்டுவிட்டுப் போயிடுவார்கள். சில சமயம் கொட்டையும் தோலுமாய் கிடக்கும் தட்டினைக் கொண்டு போய் கிச்சன் சிங்கில் அப்படியே போட்டுவிட்டுப் போவதும் உண்டு. சிங்கில் மாம்பழத் தோல் அடைத்து, தண்ணீர் தேங்கி நிற்கும். அதைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கும். மாம்பழத் தோலினை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடக் கூடவா தெரியாது. இவர்கள் எல்லாம் படித்து என்ன பிரயோஜனம். ஊரிலேயே மிகப் பெரிய ஃபேமிலி. சோஷியலி வெல் பிகேவியர் ஃபேமிலி என்ற பேச்சு வேறு. அவர்களுடைய பழக்க வழக்கத்தை வீட்டுக்குள்ளேயே சகிக்கமுடியாது அப்படின்னு அலுத்துக் கொண்டாள் அரவிந்தா.
நல்ல குடும்பத்தில் மணம் முடிக்கப்பட்ட அவள் கதையைக் கேட்க சகிக்கவில்லை.
சோனா ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவள். கை நிறைய சம்பளம் வாங்குபவள். “என் வீட்டுக் கதையைக் கேளுங்க. இது புது மாதிரி சிக்கல். உங்கள் எல்லாருக்கும் தெரியுமே . என் வீட்டுக்காரர் தினேஷ் பயங்கர செலவாளி. கையில் காசு இருந்தால் ராஜா தான் அவர். பிள்ளைகளுக்கு ஒன்று வாங்கித் தர மாட்டார். நான் தான் எல்லாவற்றையும் செய்யணும். அதனால் அவசரத்துக்குப் பயன்படட்டும் என்று கிரெடிட் கார்டு வாங்கி வைத்திருந்தேன். ரொம்ப ஒழுங்காக மாதாமாதம் கடன் வாங்கிய பணத்தைக் கட்டி விடுவேன். என் பண பரிவர்த்தனையைப் பார்த்து, அந்த பேங்க் அடிஷனல் கார்டு கொடுத்தது. எதற்கும் இருக்கட்டும் என்று கணவர் பெயரில் அதை வாங்கி வைத்திருந்தேன். வீட்டில் சேலைக்கு அடியில் ஒளித்து வைத்து விட்டுத்தான் வேலைக்குச் சென்றிருந்தேன். என் வீட்டு மனுஷன் இதை எப்படியோ அறிந்து அந்தக் கார்டை எடுத்து, இரண்டே நாளில் இருபதாயிரம் ரூபாய் செலவழித்து விட்டார். பேங்கில் இருந்து எனக்குப் போன் வந்தது. “அடிசனல் கார்டில் (Add oncard) இருபதாயிரம் ரூபாய் செலவழித்து இருக்கிறீர்கள். இனிமேல் அந்தக் கார்டை நீங்கள் பயன்படுத்த முடியாது” என்றார்கள். நான் அதிர்ந்து விட்டேன் .அதை வீட்டில் பூட்டி அல்லவா வைத்து விட்டு வந்தேன். யார் எடுத்துச் செலவழித்திருப்பார்கள். ஒன்றும் புரியவில்லை. தினேஷ் மேல் சந்தேகம் வந்தது. தலைவலி என்று பெர்மிஷன் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். வாசலிலே தினேஷ் நின்று கொண்டிருந்தார். நான் வீட்டுக்குள் நுழைந்தவுடன் என் கையைப் பிடித்துக் கொண்டு சிறு குழந்தை போல அழுதார் .” சோனா, தப்பு பண்ணிட்டேன் . ப்ளீஸ் , என்னை மன்னித்துவிடு . நான்தான் உனக்குத் தெரியாமல் கார்டினை எடுத்துக் கொண்டு போய் நண்பர்களோடு சேர்ந்து குடித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்ததேன். நம்ம காருக்கு பெட்ரோல் டேங்க் நிரப்பினேன். இனிமேல் கார்டினை எடுக்க மாட்டேன். உன் மேல் சத்தியம்” என்றார். எனக்கு அவர் மேல் கோபம் கோபமாக வந்தது. என்ன செய்யச் சொல்கிறாய். அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும் போன பணம் திரும்பாது. இப்பொழுது மூன்று மாதமாக வெட்டியாக அந்தக் கார்டுக்குப் பணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.
“இது என்ன அநியாயமாக இருக்கிறது” என்றாள் சுகந்தி.
“தினேஷையே பணம் கட்டச் சொல்லாமல் நீ பணம் கட்டுவது அநியாயம். மேலும் மேலும் உன்னை ஏமாற்றி பல தப்புப் பண்ணுவார் உன் வீட்டுக்காரர்” என்றாள் ரேணு.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாவனா கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அதனைத் தோழிகள் பார்ப்பதற்கு முன்னால் வேகவேகமாகத் துடைத்தாள். “ஏய் பவி! என்னம்மா ஆச்சு, எதற்கு அழுகிறாய் என்று கேட்டவாறு ரேணு பதறி ஓடி வந்தாள். பாவனா ரேணுவைக் கட்டிகொண்டு தேம்பினாள்.
“என்னடி ஆச்சு உனக்கு” அப்படின்னு தோழிகள் எல்லாம் கோரசாகப் பதறிக் குரல் கொடுத்தார்கள். ஒன்றும் இல்லை என்ற தயங்கியவாறு பதில் உரைத்தாள் பாவனா.
“ஏய் பவி! மனம் விட்டுப் பேச தானே இங்கே வந்து இருக்கிறோம். நம்ம மனசில் இருப்பதை எல்லாம் கீழே இறக்கி வச்சிட்டு போகத் தானே இந்தச் சந்திப்பு” என்றாள் கிறிஸ்டினா.
பாவனா தயங்கியவாறே பேசத் தொடங்கினாள். “உங்களுக்கெல்லாம் தெரியாது என் கதை. என் வீட்டுக்கார் ஏழு வருஷத்துக்கு முன்னால் வரைக்கும் துபாயில் வேலை பார்த்தார். சம்பாதித்த பணத்தைக் கொடுத்து எனக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கிக் கொடுத்தார். எனக்கு அவர் ட்ரீட்மென்ட் கொடுத்து, லட்சக்கணக்கில் பணம் செலவழித்ததால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதுவரைக்கும் உங்களுக்கெல்லாம் தெரியும் என்று நினைக்கிறேன். இப்பொழுதுப் படுகின்ற கஷ்டத்தைச் சொல்லி ஆற்ற முடியாது. எனக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு அவர் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன் என்கிற சாக்கில் வீட்டில் உட்கார்ந்து கிடக்கிறார். இதையெல்லாம் கூட நான் பெரிதாக நினைக்கவில்லை” என்று கூறிவிட்டு விக்கி விக்கி அழத் தொடங்கினாள். அவளைச் சமாதானப்படுத்தி “என்னதான் நடந்தது சொல்லு” என்று கேட்டபொழுது, தயங்கித் தயங்கி கூறத் தொடங்கினாள். “என் பெண் நேயாவிற்கு இப்பொழுது ஐந்தரை வயது ஆகுது. குழந்தைக்கு இரண்டு வயசு ஆகும் வரை வீட்டில் ஒரு ஆயா போட்டிருந்தேன். அப்புறம் இவர் “நானே பாத்துக் கொள்கிறேன். ஆயாவுக்கு ஏன் வெட்டியாகக் காசு கொடுக்கணும். நான் சும்மா தானே இருக்கிறேன்”என்று சொல்லி, தானே குழந்தையைப் பார்த்துக் கொண்டார். இருவரும் தவமிருந்து வயது போன காலத்தில் ஆசை ஆசையாகப் பெற்றெடுத்தோம். குழந்தையை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார். ஆனால், இப்பொழுது குழந்தை அவரைப் பார்த்தாலே அச்சம் கொண்டு அழுகுது. என்னை வேலைக்கு விட மாட்டேன் என்று அழுகிறாள். எனக்கு ஏதோ ஒன்று விளங்குவது போலவும் இருக்கிறது. விளங்காதது போலவும் இருக்கிறது” என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். அப்படியே தோழிகள் அனைவரும் ஸ்தம்பித்து விட்டோம். எங்களுக்கும் புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. அவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நேரம் அனைவரும் மௌனமாக இருந்தோம். மெதுவாக “ஏதாவது ஒரு பெண் வக்கீலைப் பார்க்க வேண்டியதுதான். எத்தனை நாளைக்குப் பயந்து நடுங்குகின்ற குழந்தையை அவனிடம் விட முடியும். நீ வீட்டை விட்டு வெளியேறுவது தான் ஒரே வழி” என்றாள் கிறிஸ்டினா. மற்றவர்கள் யாரும் பேசவில்லை. வாயடைத்து பேசாமல் அமர்ந்திருந்தோம்.
அதற்குள் பிற்பகல் ஒரு மணி ஆகிவிட்டது. ரேணு சூழலை மாற்றுவதற்காக “சரி வாருங்கள். சாப்பிடலாம்” என்று அழைத்தாள். டைனிங் டேபிளில் யாரும் எதுவும் பேசவில்லை . நிறைய அயிட்டங்கள். ஆனால் , யார் மனசும் அதில் ஒன்றவில்லை. கடமையே என சாப்பிட்டு முடித்து சோபாவில் அமர்ந்தவுடன், ரேணு கொடுத்த ஐஸ்கிரீம் சற்று இதமாக நெஞ்சுக்குள் இரங்கியது.
கஸ்தூரி பேச ஆரம்பித்தாள். அவள் குரல் சற்று ஆத்திரமாக வெளிப்பட்டது. “என் மாமனார் இறந்து பத்து மாதமாகிறது. அவர் ஏலச் சீட்டுப் பிடித்து 30 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தியவர். வெற்றிகரமாக அந்த ஏலச்சீட்டுகளை நடத்தி தன்னுடைய பிள்ளைகளைப் படிக்க வைத்து இரண்டு பெண்களுக்கு நன்றாகத் திருமணமும் செய்து கொடுத்தார். என் மாமியாருக்கு 25 சவரன் நகை செய்து தந்துள்ளார். யாருக்கும் எந்த குறையும் வைக்காமல் மனுஷன் நிமிஷமாக ஹார்ட் அட்டாகில் போயிட்டார். என் மாமியார் பேசாமல் நிம்மதியாக இருக்க வேண்டியது தானே. மாமா விட்டுச் சென்ற ஏலச்சீட்டினைத் தொடர்ந்து நடத்தினார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் புது சீட்டு இரண்டைத் தொடங்கினார் அவரிடம் நைசாகப் பேசி இந்த ஐந்து மாதத்தில் ஐந்து பேர்கள் சீட்டு எடுத்துட்டுப் போயிட்டாங்க. அவர்கள் எல்லாம் பணம் திருப்பி தர மாட்டேங்குறாங்க. அவை 10,000 ரூபாய் சீட்டுகள். மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் போட்டு என் மாமியார்தான் சீட்டு கட்ட வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு அவர் சீட்டு பணம் தர முடியும். இப்படி நான்கைந்து மாதமாகக் கட்டிக் கட்டி நொந்து போய் விட்டார்கள். எங்களிடம் ஒரு லட்சம் கேட்டு வாங்கி இருக்காங்க. இரண்டு மகளிடமும் ஐம்பதாயிரம் ஐம்பதாயிரம் வாங்கி இருக்காங்க. இதெல்லாம் எப்படி எங்களுக்குத் திருப்பித் தரப் போறாங்க. இன்னும் வரக்கூடிய மாதங்களில் மற்றவர்களுக்கு எப்படி தர போறாங்க என்று தெரியவில்லை. எங்களுக்கு இப்பொழுது பெரிய தலை வேதனையாகப் போயிற்று. சென்ற வாரம் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டு கட்டுப் போட்டுக்கிட்டு இருக்காங்க. என் வீட்டுக்காரர் என்ன செய்வது என்று தெரியாமல் எங்களிடம் கோபப்படுகிறார். இதெல்லாம் எங்களுக்குத் தேவையா? காலேஜ் படிக்கின்ற பையன்களை வைத்துக்கொண்டு, பீஸ் கட்டுவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற எங்களுக்கு இது பெரிய சுமையாக வந்து சேர்ந்துவிட்டது” என்று புலம்பினாள்.
சுகந்தி இடைமறித்தாள். உனக்குப் பணப்பிரச்சினை. எனக்கு மனப் பிரச்சினை. உங்களுக்கெல்லாம் தெரியுமே எனக்குதான் மூட்டுக்கு மூட்டு வலி எடுத்து கை முடங்கிப்போய் கிடக்குது. ருமட்டாய்டு ஆர்த்தரைடீஸ் என்று டாக்டர் சொல்கிறார். வீட்டில் ஒரு வேலையும் செய்ய முடிவதில்லை. நம்பிக்கையில் ஒரு வேலைக்காரியை சமையலுக்கு வைத்தேன். இன்றைக்கு வீட்டில் அவள் ராஜ்யம் தான். என் வீட்டுக்காரைக் கைக்குள் போட்டுக் கொண்டு ஒரே ஆட்டமாக ஆடுகிறாள். என் மகனும் மகளும் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதினால் அவர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. அவர்களிடம் சொல்லி தான், நான் என்ன செய்யப் போகிறேன். அவள், அவர்கள் இருவரும் வரும்பொழுது ஆசையாகச் சமைத்துக் கொடுத்து அசத்துகிறாள். அவரும் ஒன்றும் தெரியாத சாதுவாக நடந்து கொள்கிறார். என்னால் உடம்புக்கு முடியாத நிலையில் இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்னையும் குளிக்க வைத்து, டிரஸ் பண்ணி விட்டு, உணவு ஊட்டி விட்டு, ஆபீசுக்கு வண்டி ஏற்றி அனுப்புகிற வரைக்கும் அவள் தான் செய்கிறாள். அதனால் அவளை நான் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எல்லாம் என் கணவர் தப்புதான். அந்த ஆள் சூழலைப் பயன்படுத்திக் கொள்கிறார். குரல் தழுதழுக்க அவள் கூறியது எங்களுக்கெல்லாம் மிக வேதனையாக இருந்தது.
ரேணு வாய் திறந்தாள். அப்பப்பா நமக்குள்ள இவ்வளவு கஷ்டமா. வாழ்கிறோம் என்ற பெயரைத் தவிர, நிம்மதி என்பது அறவே இல்லை. ஒருவர் வாழ்விலும் மகிழ்ச்சி இல்லை. ஏதோ நான்தான் கணவனை விட்டுப் பிரிந்து, இப்படி அல்லாடிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து வருந்தியுள்ளேன்.
கணவன் வெளியூரில் வேலையில் இருக்கிறான் என்பதைத் தவிர, எனக்கு வேறு ஒரு குறையும் இல்லை. உங்கள் வருத்தங்களுக்கு முன்னால் என்னோட வருத்தம் ஒன்றுமே இல்லை என்பதை நான் இப்பொழுது விளங்கிக் கொண்டேன். பவி கதையைக் கேட்ட பின்பு, குழந்தை ஆசை கூட போய் விட்டது என்ற வருத்தத்துடன் பேசினாள்.
நான் இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்தேன். என் பிரச்சினையை இவர்களிடம் கூற வேண்டுமா? என்று யோசித்தேன். என்னை உலுக்கினாள் கஸ்தூரி. “என்னடி, என்ன யோசனை. எதுவுமே பேசாம இருக்கிறாயே. என்ன அதற்குள் ஒரு குட்டித்தூக்கமா..” என்றாள் அவள். நான் எழுந்து சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தேன். ரேணு நீட்டிய துண்டை வாங்கி முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டேன். எப்படித் தொடங்குவது என்று தயங்கிக்கொண்டே நின்றேன். என்னைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டாள் சோனா. லேசாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச்சைத் தொடங்கினேன். அவர் வீட்டை விட்டுப் போய் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நானும் என் பொண்ணு தியாவிற்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். வேறு வழி இல்லாமல் 19 வயதில் திருமணத்தை முடித்தேன். அவளும் தன் கணவனோடு வெளிநாடு சென்று விட்டாள். அடுத்த மாதம் குழந்தை பேறுக்காக வருகிறாள். வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதால் என் பொழுது நன்றாகப் போகிறது. இருந்தும் என் தலையெழுத்து என்னைச் சும்மா விடுமா? கூட வேலை பார்க்கின்ற என் மேனேஜர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுகிறார். அவருக்குச் சென்ற வருடம் மனைவி இறந்துவிட்டாள். குழந்தைகளும் கிடையாது. என்னை விட இரண்டு வயது சின்னவர் என்றாலும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள என்னிடம் அடிக்கடி வற்புறுத்துகிறார். நல்ல மனிதர் என்றாலும் என் மனதுக்கு அது ஒத்து வரவில்லை. என் பெண்ணுக்கு நான் செய்ய வேண்டிய கடமை எல்லாம் இருக்கிறதல்லவா? மாப்பிள்ளையும் அவளின் புக்காத்து மனிதர்களும் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். யோசித்து சொல்லு என்று என்னை அவர் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார். எனக்கு இஷ்டம் இல்லை என்ற முடிவை கூறி விட்டாலும் அவர் விடுவதாக இல்லை. ஆபீஸில் உள்ள மற்ற பெண்கள் மூலம் எனக்குத் தூது அனுப்புகின்றார். என் கஷ்டத்தை யாரிடம் சொல்லி அழுவது” என்று புலம்பினாள்.
“மேகலா, நீ உன் பெண்ணுக்காக, உன்னைத் தேடி வரும் நல்ல வாழ்க்கையை இழந்து விடாதே. நன்றாக யோசித்துப் பார் அவள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாள். அவள் கணவன் அந்த ஊர் சிட்டிசன். வீடும் வாங்கிவிட்டார். இனி உன் பெண், உன்னோடு வந்து தங்க போவது உறுதியாகக் கிடையாது. முதல் பிரசவம் முடித்துக் கொண்டு சென்று விட்டால், அதன் பின் அவள் எப்பொழுது வருவாளோ தெரியாது.
உன் மகள் வரும்போது அவளிடம் மனம் விட்டு பேசு. அவள் டெலிவரி முடித்துச் சென்ற பின்பு அவரை மணந்து கொள்ளலாமே” என்றாள் கஸ்தூரி. ஒருசிலர் அதுதான் சரி என்றார்கள். சிலர் “எதற்கும் யோசனை பண்ணி செய். நிச்சயமாக தியா வருத்தபடுவாள். அவள் தான் உனக்கு முக்கியம்” என்றார்கள். ரேணு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.. அவளுக்கு இதுபற்றிப் பேசப் பிடிக்கவில்லை. “தேவையில்லாத புது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு சிரமப்படாதே”என்றாள் அவள். “அதைத்தான் நானும் நினைக்கின்றேன்” என்றேன்.
கிறிஸ்டினா இடைமறித்தாள். என் வீட்டில் நடக்குற கூத்து உன் வாழ்க்கையில் நடத்துவிடக் கூடாது. எதையும் யோசித்து தான் செய்ய வேண்டும். என் தங்கை ஆலிஸை அவள் கணவன் விவாகரத்து செய்துவிட்டான். இரண்டு பையன்களை வைத்துக்கொண்டு தவித்த அவளுக்கு உதவ குமார் முன்வந்தார். அவரைத் திருமணம் செய்து கொண்டு வாழும்படி நண்பர்களெல்லாம் கூறினார்கள். அப்பா அம்மா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கருத்தை உதாசீனம் செய்துவிட்டு, இந்துவாக மாறி, அவளும் திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்கள் நன்றாகத்தான் வாழ்ந்தாள். குமார் ஒரு ஆக்சிடெண்டில் இறந்துவிட திரும்பவும் அவளுக்கு பழைய நிலைதான். இப்பொழுது அவள் எங்களோடு வாழவும் முடியவில்லை. குமார் வீட்டோடு இணைந்து வாழவும் முடியவில்லை. குமாரின் பெற்றோர் குழந்தைகளோடு அவளை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.வளர்ந்த பிள்ளைகளோடு, யாருடனும் ஒன்றி வாழ முடியாமல் தவித்து நிற்கிறாள்
இதுதான் இன்றைக்கும் இச்சமூகம் பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கேடாகும். இச்சமூகத்தோடும் குடும்பத்தோடும் ஒத்து வாழ்ந்தால் மட்டுமே ஒரு பெண் வாழ முடியுமே தவிர அவளுக்கு வேறு வழி இல்லை. நாம் பேசுகின்ற பெண் விடுதலை , பெண் சுதந்திரம் இதெல்லாம் மேடைக்கு மட்டுமே. நடப்பியலில் இதற்கெல்லாம் எந்தவித மரியாதையும் இல்லை. இதைப் படித்த பெண்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை எப்பொழுதும் கசக்கத்தான் செய்யும். வேறு வழி இல்லை. கசப்பு மருந்து குடித்து தானே ஆகணும். இந்த நவீன யுகத்திலும் கூட , இந்திய நாட்டில் பெண்கள் விடுதலை அடைய இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். இது இன்னும் கசப்பான உண்மை.
அரவிந்தா கூறினாள். உன் தங்கை வாழ்க்கையில் நடந்தது எல்லோருக்கும் நடக்கும் என ஏன் நம்புகிறாய். ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் வெவ்வேறு மாதிரி. ஒன்றைக் காட்டி ஒன்றை
நிராகரிக்கத் தேவையில்லை. ஆனால் எதையும் யோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. சரிம்மா. எனக்கு நேரம் ஆகிவிட்டது. இரண்டு மணி நேரம் பயணித்தால் தான் வீடு போய் சேர முடியும். நான் புறப்படுகிறேன் என்று விடை பெற்றுக் கொண்டாள்.
அவள் சென்றவுடன் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். யாரும் யாருடைய வாழ்க்கைக்கான முடிவினை எடுக்க முடியாது என்பதை, அவர்கள் புரிந்து கொண்டனர் என்பது அந்த மௌனத்தின் மூலம் வெளிப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக விடைபெற்றுச் சென்ற பின், ரேணுவிற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. கிறிஸ்டினாவின் கருத்தில் அவளுக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை. எத்தனை நாள் தான் பெண்கள் இந்தச் சமூகத்திற்கும் ,பண்பாட்டுக் கட்டுக்கோப்புகளுக்கும், மரபார்ந்த சிந்தனைகளுக்கும் செவிசாய்த்து தங்களை ஆமையாக உள்ளிழுத்துக் கொள்ள இயலும். இப்படியான அடிமை வாழ்க்கை வாழ்வதை விட, பாதிக்கப்பட்ட பெண்கள் கூட்டை உடைத்துக்கொண்டு வெளிவரத் துணிய வேண்டும். அதற்குத் தைரியமும், தன்னம்பிக்கையும் தேவை என்பது உண்மைதான் . அப்படி , இல்லக் கூட்டை விட்டு வெளி வந்தவர்கள் சிலருடைய வாழ்க்கை, பண்பாட்டு கட்டுமானங்களின் இறுக்கமான பிடியிலும், மரபார்ந்த சட்ட திட்டங்களின் அசுர பிடியிலும் சிக்கி, இந்தச் சமூகத்தில் கேள்விக் குறியாக்கப்படும் என்பதில் ஐயமில்லை. அதனைப் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட பெண்களில் சிலராவது அடிமைச் சிறையை உடைத்துக் கொண்டு வெளி வந்தால் தான் எதிர்காலத்தில் பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும். நியாயமான அவர்களின் விடுதலை உணர்வை இந்தச் சமூகம் அர்த்தத்தோடு பார்க்கத் தொடங்கும் . இதற்குச் சில காலம் ஆகும் என்றாலும், இந்தப் பச்சோந்தி சமூகத்திற்குப் பயந்து முயற்சியைக் கைவிட்டு விடக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள். தோழியர் சந்திப்பு மகிழ்ச்சியில் முடியும் என்ற எதிர்பார்ப்பு வேர் அறுந்து விட்டதால், தனிமை இன்று அவளுக்குப் பெரும் துயரமாயிற்று.