எங்கட அப்பா எப்ப வருவார்?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதந்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 7,908 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அப்பா இண்டைக்கு வருவார்!” காலையிலிருந்தே அம்மா இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். கடந்த சில நாட்களாய் இதே பாட்டுத்தான்.

‘அப்பாவைக் கண்டவுடனை அழக்கூடாது! கட்டிப்பிடிச்சுக் கொஞ்சவேணும்.”

பிள்ளைக்குச் சரியாக அப்பாவை ஞாபகமில்லை. ‘அப்பா.. அப்பா’ என அம்மா அடிக்கடி சொல்லும்பொழுதெல்லாம் ஒரு நிழலுருவம்மாதிரி அப்பாவின் தோற்றம் தெரிவது போலிருக்கும். அப்பா ஒருமுறை வந்து நின்றது.. போனது எல்லாம் ஏதோ கனவுபோலத்தான்!

‘இந்த முறை வந்து பார்த்தாரெண்டால் எவ்வளவு சந்தோஷப்படுவார்! நீங்கள் நல்லாய் வளர்ந்திட்டீங்கள். மூன்று வயசுப்பிள்ளை மாதிரியே இல்லை..! எத்தனை கிழட்டுக் கதையள்!”

அப்பாவின் போட்டோவைக் கண்டால் ‘இது அப்பா’ எனப் பிள்ளைக்குச் சொல்லத் தெரியும். ஒருநாள் ‘அல்பத்தை’ பார்த்துக்கொண்டிருந்தபொழுது அப்பாவின் படத்தைக் கண்டவுடன் ‘இந்தா… அப்பா!” எனத் தொட்டுக்காட்டினாள். அதைப் பார்த்து எல்லோரும் சிரித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். ‘கெட்டிக்காரி!” என்று அம்மா சொன்னாள். அது பிள்ளைக்கு நல்ல விளையாட்டாக இருந்தது. அதன் பின்னர் அப்பாவின் போட்டோவைக் காணும்பொழுதெல்லாம் எல்லோருக்கும் காட்டிக் குதூகலிப்பாள்.

அதனால்தானோ என்னவோ.. அப்பா என நினைத்தால் பிள்ளைக்கு அவர் ஒரு படமாகத்தான் தெரிகிறார்.

‘அப்பா இண்டைக்குப் பிளேனிலை வருவார்!”

‘பிளேன்| என்று சொன்னதும் நிலா ஒருமுறை நெஞ்சதிர்ந்தாள். பிளேன் வரும் சத்தம் தூரத்தில் கேட்கும்போதே நெஞ்சதிரும் பயத்தில் வீரிட்டுக் குளறும் வேளைகள் நினைவில் வந்தன…

‘அம்மா..! ஊக்குங்கோ..! ஊக்குங்கோ..!”

அம்மா ஓடிவந்து தூக்கியதும், ‘பங்கல்! பங்கல்..” (பங்கர்) என பதுங்குகுழியைக் காட்டுவாள். அதற்குள்ளே ஓடிச்சென்று பதுங்கிவிட்டால் சரி.. பிள்ளையின் அழுகை நின்றுவிடும்.

குண்டுகளின் அகோரச் சத்தமும்.. அதிர்வும் நினைவில் வர.. உடல் நடுங்குகிறது. குண்டுகள் வானத்தில் சீறி வருகையில் அம்மா பிள்ளையை அணைத்துத் தூக்கிக்கொண்டு பாதுகாப்புத்தேடி ஓடுவாள். அப்போதெல்லாம் அதிகரித்த பயமும் அதிர்ச்சியும் அப்படியே நிலாவின் மனதில் பதிந்து வளர்ந்தன. விமானம் என்றால் குண்டு போடுகிற சாமான் என்றுதான் பிள்ளை நினைத்திருந்தாள்.

‘அப்பா குண்டுபோடுகிற பிளேனிலையா வருவார்?” அம்மாவைப் பார்த்துக் கேட்டாள் நிலா.

‘இல்லையம்மா..! அப்பா வேறை பிளேனிலை வருவார்..! அந்தப் பிளேன் குண்டு போடாது! பயப்பிடாதையுங்கோ!”

இது நிலாவுக்குப் புதினமாயிருந்தது.

‘அப்பாவைக் கண்டவுடனை அழுவீங்களா?” அம்மா கேட்டாள்.

‘இல்லை.”

மாலை நேரம் போல நிலா தானும் தன் பாடுமாக விளையாடிக்கொண்டிருக்கையில் வெளியே கார் ‘ஹோர்ன்’ ஒலித்தது! அதைக் கேட்டதும் அம்மா சட்டென பிள்ளையைத் தூக்கிக்கொண்டு கேற்றடிக்கு ஓடினாள். அம்மாவுக்கு முன்னே நாய் ஓடி வந்து கேற்றில் முன் கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு ‘ஊ.. ஊ..’ என மகிழ்ச்சியில் அழுது கத்தியது.

கார் உள்ளே வந்து கதவைத் திறக்க அப்பா இறங்கினார்.

நாய் அவர்மேல் தொங்கித் தொங்கிப் பாய்ந்து கைகளை நக்கியது. அப்பா அதைக் கவனியாதவர்போல அம்மாவை அணைத்துக்கொண்டு கண்கள் கலங்கினார். பின்னர் கைகளை நீட்டி பிள்ளையைத் தூக்க எத்தனித்தார்.

அப்பா திடுதிப்பென வந்தது, நாய் குரைத்து ஆரவாரித்தது, அம்மா சட்டென பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பங்கருக்கு ஓடுவது போன்ற வேகத்தில் ஓடியது, குண்டு போடும் பிளேனில் அப்பா வரும் நினைவு எல்லாம் சேர்ந்த அமர்க்களத்தில் நிலா பயந்து வீரிட்டுக் குளறியவாறு அம்மாவின் கழுத்தைக் கட்டிப்பிடித்து முதுகுப் பக்கம் சாய்ந்தாள். அப்பா அந்தப்பக்கமாக ஓடிவந்து பிள்ளையைக் கொஞ்சுவதற்கு முயன்றார். பிள்ளை மூச்சடங்கி அலறினாள்.

‘இதென்ன பழக்கம்? அப்பாதானே? அழமாட்டனெண்டு சொன்னீங்கள்!” என அம்மா பிள்ளையை அப்பாவிடம் கொடுப்பதற்கு முயற்சித்தாள்.

‘சரி.. சரி.. பிள்ளை பயப்படுகிறாள்போல.. கொஞ்ச நேரத்திலே சரியாயிடும்!” என்றவாறு அப்பா அப்பால் சென்றார்.

‘சீ.. அழக்கூடாது! கெட்ட பழக்கம்!” அம்மா கோபத்துடன் கூறியவாறு ‘வாங்கோ! அப்பா பிள்ளைக்கு என்ன கொண்டுவந்தவர் எண்டு பாப்பம்!” என பிள்ளையின் கவனத்தைத் திருப்புவதுபோலக் கூறிக்கொண்டு எழுந்து போய் அப்பா கொண்டுவந்திருந்த பெரிய ‘பாய்க்’கின் பிடியைப் பிடித்து இழுத்தாள். ஒரு மிருகத்தைப் போல அது கொற இழுவையில் வருவதைக் கண்டு பிள்ளை மீண்டும் பயந்து குளற ஆரம்பித்தாள்.

‘பிள்ளையைக் குழப்பாமல்.. கொஞ்ச நேரம் வேறை பிராக்குக் காட்டி அழுகையை நிப்பாட்டுங்கோ!” அப்பு பிள்ளைக்குப் பரிந்து பேசியவாறு வந்து நிலாவை வேண்டிக்கொண்டார்.

அப்பா குளிப்பதற்கு அம்மா ஆயத்தங்கள் செய்து கொடுத்தாள். துவாய் எடுத்துக் கொடுத்தாள். அப்பா குளிப்பதற்கு துவாய் எடுத்துக் கொடுத்த சம்பவங்கள் நிலாவுக்கு நினைவில் வருவது போலிருந்தது. பெரிய துவாய் நிலத்தில் முட்டாதவாறு கைகளை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக் கொண்டு போகவேண்டும். துவாயை வேண்டிக்கொண்டு அப்பா, ‘கெட்டிக்காரி| என்று சொல்லுவார். ஒருநாள் துவாயைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடிப்போக அது அந்தச் சின்னக் கால்களுக்குள் தடுக்குப்பட்டு விழுத்திவிட்டது. அப்பா ஓடிவந்து தூக்கினார். பிள்ளை நிலத்தைக் காட்டிக் காட்டி அழுதாள். நிலத்துக்கும் துவாய்க்கும் நல்ல அடி போட்டு நிலாவின் அழுகையை அப்பா நிறுத்தினார். அந்த அப்பாதானே.. என்ன பயம்?

‘இந்தச் சட்டை பிள்ளைக்கு.. இது சிவப்புக்கார், நடக்கிற பொம்மை.. பெரிய சொக்லட்..”

அறையிலிருந்தவாறு அப்பா சொல்வது வெளியே நிலாவுக்குக் கேட்டது.

‘வாங்கோ! போய் பாப்பம்! அப்பா பிள்ளைக்கு நடக்கிற பொம்மை கொண்டுவந்திருக்கிறார்!” என அப்பு நிலாவை அழைத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தார். நிலா உள்ளே போகாது அறை வாசலில் நின்றாள். அப்பா பாய்க்கிலிருந்து ஒவ்வொரு பொருட்களாக வெளியே எடுத்து வைத்தார்: ‘வாங்கா..! இந்தாங்கோ!”

நல்ல.. சிவப்பு மஞ்சள் பச்சை வர்ணங்களில் விளையாட்டுப் பொருட்கள், சொக்லட், சட்டை, சிறிய தொப்பி, கலர் பென்சில்கள்.

‘போங்கோ, போய் வேண்டுங்கோ!” அப்பு மெதுவாக முன்னோக்கித் தள்ளிவிட.. பிள்ளை அப்பாவை நோக்கி நடந்தாள்.. அவருக்கு எட்டாத தூரத்தில் நின்றுகொண்டு கைகளை நீட்டினாள்! அப்பா சொக்லட் கவரை பிரித்தவாறு ‘இருங்கோ! இதிலை இருங்கோ!” என மெதுவாக பக்கத்தில் நகர்ந்தார். நிலா அவரது தந்திரத்தை அறிந்து நழுவ முற்பட அம்மா டக்கென வந்து பிள்ளையை மடியில் இருத்திக்கொண்டு அமர்ந்தாள்.

அப்பா சொக்லட்டை ஒவ்வொரு துண்டாக உடைத்துக் கொடுத்தார். பிள்ளை ஒவ்வொன்றாகச் சாப்பிடும்வரையும் அலுக்காதவர்போல் பார்த்துக்கொண்டே இருந்தார். சற்றும் எதிர்பாராதவிதமாக அவர் நிலாவின் கையைப் பிடித்துக் கொஞ்சப் போக.. பிள்ளை முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு ஓட்டமெடுத்தாள்.

இரவு படுக்கைக்குப் போனபொழுது பிள்ளைக்கு புதிய பிரச்சினை ஒன்று தோன்றியது. உறங்காது கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருந்தாள். அம்மா எவ்வளவு உத்திகள் செய்தும் பலனில்லை. அம்மாவின் மடியிற் கிடந்தவாறே யோசித்தாள்.

‘அப்பா எங்கே படுக்கப்போகிறார்? ஒரு வேளை இந்த அறைக்கே வந்துவிடுவாரோ..?’ இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில்.. அப்பா அம்மாவுடன் ஏதோ கதைத்தவாறு அறையினுள் நுழைந்து கட்டிலில் அமர்ந்தார்.

‘போங்கோ! போங்கோ!” அறைக்கு வெளியே கையைக் காட்டியவாறு பிள்ளை சிணுங்கத் தொடங்க அப்பா எழுந்து வெளியே ஓடினார்.

காலையில் நிலா உற்சாகம் பொங்க எழுந்தாள். ஸ்கூலுக்குப் போகவேண்டும். நிறையப் பிள்ளைகள் வருவார்கள். எல்லோரோடும் சேர்ந்து விளையாடலாம். ரீச்சர் வட்டமாக எல்லோரையும் நிறுத்திப் பாட்டுச் சொல்லித் தருவார். பாடிப் பாடி ஆடலாம்.

குளித்துக்கொண்டிருக்கையில் அம்மா கதை கொடுத்தாள் ‘பிள்ளையை இண்டைக்கு அப்பா ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டு போவார்.. என்ன?”

‘இல்லை.. நான் அப்புவோடதான் போவன்!”

அம்மா எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை. பிள்ளை அப்பாவோடு போக மறுத்துவிட்டாள். அப்புவை ‘வாங்கோ’ என இழுத்துக்கொண்டு போய் சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அம்மாவைப் பார்த்துக் கையசைத்தாள்.

‘அப்பாவுக்குச் சொல்லயில்லையா?”

நிலா அப்பாவை ஓரக்கண்ணால் பார்த்து கையை அசைத்தவாறு ஓசையின்றி மறுபக்கம் திரும்பினாள்.

‘இனி சரிவரும்! பிள்ளை சேர்ந்திடுவாள்!”

அப்பா எப்போதும் பிள்ளையைச் சுற்றிச் சுற்றியே வந்தார். காலையில் நிலா எழும்வரை பக்கத்திலே படுத்துக்கிடப்பார். எழுந்ததும் தூக்கிப்போவார். ‘வாங்கோ! தோட்டத்திலை நல்ல வடிவான பூக்களெல்லாம் பூத்திருக்கும்.. பாப்பம்!”

காலையில் சில்லிடும் குளிரில் அப்பாவின் அணைப்பில் இருந்துகொண்டு புதிதாகப் பூத்த ரோஐhக்களையும் செவ்வந்திப் பூக்களையும் பார்க்கும்போது குதூகலமாக இருக்கும் விடியற்காலையில் ஒரு சிறிய குருவி வந்திருந்து வாலை ஆட்டி ஆட்டி கீச்சிடும் குரலில் பாடும். குயில் கூவினால் அப்பா அதோடு தானும் சேர்ந்து கூவி விளையாட்டுக் காட்டுவார். இன்னும் சில பறவைகள் சிறகை விரித்து ஒவ்வொரு கிளையாகத் தாவும். அப்பா சொல்லித்தருவார் ‘இது சிட்டுக்குருவி.. இது புலுனி.. இது தேன் குருவி.. இது மைனா..’

ஒரு சோடி மைனாக்கள் ஒவ்வொரு நாளும் வந்து முற்றத்தில் தீன் பொறுக்கும். அவை இடுப்பை அசைத்தசைத்து மெல்ல நடந்து நடந்து தீன் பொறுக்குவதைப் பார்த்தால் அவற்றுடன் விளையாடவேண்டும் போலிருக்கும்.

‘அதைப் பிடிச்சுத் தர்றீங்களா?”

‘பிடிக்கேலாதம்மா! கிட்டப்போனால் பறந்திடும்!”

‘ஏன்?”

‘அதுக்குப் பயம்! அப்பா பிடிச்சுப்போடுவாரெண்டு.. நீங்கள் அப்பாவைக் கண்டு பயப்பிடயில்லையா? அது மாதிரித்தான்!”

அப்பா அலுத்துக்கொள்ளாமல் நிலாவின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டேயிருப்பார். ஒவ்வொரு விஷயங்களையும் சொல்லித்தருவார். ஒவ்வொரு சின்னச் சின்னக் கதைகளைப்போலச் சொல்லுவார்.

‘அது அப்பாக்குருவி.. மற்றது அம்மாக்குருவி.. அதுதான் சோடியாய் திரியினம்.”

‘அப்ப பிள்ளைக் குருவி..?” என அப்பாவின் கண்களைப் பார்த்துக் கேட்டாள் நிலா.

‘பிள்ளைக் குருவி இந்தா இருக்கு!” என நிலாவை இறுக அணைத்துக்கொண்டார் அப்பா.

நிலா அப்பாவுடன் நன்றாக அணைந்துகொண்டாள்.

இப்போது பிள்ளைக்கு அப்பாதான் எல்லாம். அப்பாதான் சாப்பாடு ஊட்டிவிடவேண்டும். அப்பாதான் சட்டை அணிந்துவிடவேண்டும். அப்பாதான் ஸ்கூலுக்கு கூட்டிப்போகவேண்டும்.

அப்பா பிள்ளையோடு ஓடி விளையாட்டுக் காட்டுவார்.

‘நான் ஒளிக்கிறன்.. நீங்கள் தேடிப்பிடிக்க வேணும்.. சரியா?”

நிலாவுக்கு இது புதுமாதிரியான விளையாட்டாக இருந்தது.

அப்பா பிள்ளையோடு தானும் ஒரு குழந்தையைப்போல ஓடித்திரிவார். வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடுவார். ஓடிப்போய் கட்டிலின் கீழாக அல்லது கதவு இடுக்கில்.. சுவர் மறைவில் ஒளித்திருப்பார்.

ஓடி.. ஓடிக் கண்டு பிடித்ததும் வெற்றிப் பெருமிதத்தில் பிள்ளை அப்பாவுக்குத் தன் பிஞ்சுக் கையால் அடி போடுவாள். அந்த அடியை எதிர்பார்ப்பதுபோல அப்பா அடிக்கடி நின்று முதுகை வளைத்துக்கொடுப்பார். அடி விழுந்ததும் பிள்ளையைத் தூக்கி அணைத்துக் கொஞ்சுவார்.

நிலாவுக்கு ஒரு புதுவிளையாட்டு தோன்றியது. அப்பாவுக்கு கையால் அடித்தாலே சந்தோஷப்படுகிறார். தடியால் ஒன்று போட்டால் இன்னும் சந்தோஷப்படுவார். பெரிய தடியாக இருக்க வேண்டும். குசினியுள் அகப்பை கழன்ற பிடியொன்று இருந்தது. நல்ல பெரிய கொட்டன் பொல்லு போல! அதை எடுத்துவந்து அப்பாவைத் தேடினாள் நிலா.. அறையுட் கதவு இடைவெளியில் மறுபக்கம் பார்த்தவாறு நல்ல வாகாக முதுகைத் திருப்பி வைத்துக்கொண்டிருந்தார் அப்பா! மெதுவாகப் பின்னே சென்று நன்றாகக் கையை ஓங்கி.. ஒரு போடு!

‘ஆ..! ஆ..!” அப்பா துடித்துக்கொண்டு எழுந்து முதுகை நெளிந்தபடி.. ‘ஏனம்மா அடிச்சனீங்கள்?” என அழாக்குறையாகக் கேட்டார். நிலா ஏதோ தவறு செய்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தாள். பிள்ளையின் முகம் ஓடிக் கறுத்தது. சொண்டு விம்மியது.

‘பரவாயில்லையம்மா! நோகயில்லை..” அப்பா பிள்ளையைத் தூக்கியணைத்தார். நிலா அப்பாவின் கழுத்தை இறுகக் கட்டி அணைத்தாள். அப்பாவை இப்படி அணைத்துக்கொள்ளும் பொழுது நல்ல சுகமாக இருக்கிறது. அப்பா எப்போதுமே வீட்டில் இருந்தால் எவ்வளவு நல்லது!

பிள்ளையோடு சேர்ந்து விளையாடுவார். வெடிச்சத்தம் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடிவந்து தூக்கிக்கொள்ளுவார்.

‘அது ஒண்டுமில்லையம்மா..! சீன வெடி! கலியாண வீட்டிலை கொழுத்துகினம்!”

‘இல்லை ஷெல் அடிக்கிறாங்கள்!”

அப்பாவைவிட பிள்ளைக்கு சத்த வித்தியாசத்தைக் கொண்டே வெடியின் ரகத்தைச் சொல்லுகிற பரிச்சியம் இருக்கிறது. வெடிச்சத்தம் கேட்கும்போது நெஞ்சை உலுக்குவது போன்றதொரு பயம் பிடிக்கிறது. ஓயாது குண்டுச் சத்தம் கேட்ட நாட்களெல்லாம் நினைவில் வருகின்றன. அம்மாவின் மடியில் நடுங்கிக்கொண்டே விடிய விடிய விழித்திருந்த இரவுகள் நினைவில் வருகின்றன.

‘அது ஒண்டும் செய்யாதம்மா.. அப்பா இருக்கிறன்தானே..? என்ன பயம்..?” என அப்பா தனது நெஞ்சைத் தட்டிக் காட்டுவார்.

அப்பா இப்படிச் சொல்லி அணைத்துக்கொள்ளும்போது உண்மையாகவே பயமெல்லாம் பறந்து போகிறது. அப்பாவின் அரவணைப்பில் நல்ல பாதுகாப்பாக இருக்கும் தைரியம் கிடைக்கிறது.

அப்பா கொண்டுவந்த சொக்லட் ஒரு பெட்டியில் இருந்தது. ஒரு சொக்லட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு பெட்டியை மூடி வைப்பார். இப்பொழுது கடைசி சொக்லட்டையும் எடுத்துக் கொடுத்துவிட்டு வெறும் பெட்டியைக் காட்டினார்.

‘இதுதான் கடைசி சொக்லட்..!”

‘எனக்கு இது விருப்பம்..! இன்னும் வாங்கித் தர்றீங்களா?”

‘போயிட்டு.. அடுத்த முறை வரையிக்கை வேண்டியாறன்!”

நிலா அதிர்ச்சியுற்று அப்பாவின் முகத்தைப் பார்த்தாள்;. பின்னர் கொஞ்சும் குரலில் சொன்னாள்.

‘அப்பா! போகாதைங்க அப்பா!”

‘ஏனம்மா?”

‘ஷெல் அடிப்பாங்க.. எங்களுக்குப் பயம்.”

அப்பாவிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

0

காலை விடியும்பொழுது நிலாவுக்குக் குதூகலமாக இருந்தது. விழிப்பு ஏற்பட்டுவிட்டாலும் படுக்கை அறையிற் கிடந்தவாறே நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள். ஏற்கனவே அம்மா எழுந்து குசினியில் அலுவல்களில் ஈடுபட்டிருந்தாள். இடையில் வந்து அப்பாவிடம், ‘எழும்புங்கோ.. நேரம் போகுது..” என்று சொன்னாள். அப்பா எழுவதற்கு மனமில்லாதவர்போல இன்னும் படுத்துக்கிடந்தார்.

வெளியே மரக்கிளையில் குயிலொன்று வந்திருந்து இனிமையாகப் பாடத் தொடங்கியது. திறந்திருந்த ஐன்னலூடு நிலா அதையே உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்க.. அது ஏதோ நினைத்துக்கொண்டது போல சட்டெனப் பறந்து போனது.

அம்மா வந்து பிள்ளையை அழைத்தாள்.

‘நிலா.. எழும்புங்கோ!”

விடியற்காலையிலே வெளிக்கிடுவதானால் கோயிலுக்காக இருக்கும். அல்லது அம்மம்மா வீட்டுக்கு. அம்மம்மா வீடு தூர இருக்கிறது. போகும்போது காட்டுப் பாதையில் மயில் பார்க்கலாம்.

எல்லோரும் வெளிக்கிட்டதும் அப்பா நிலாவைத் தூக்கி அணைத்துக்கொண்டு வந்தார். பஸ் நிலையத்துக்கு வந்ததும் அப்பா அம்மாவை அணைத்துக்கொண்டு கண் கலங்கினார். நிலா அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். அம்மாவின் கண்களும் ததும்பிக்கொண்டிருந்தன. நிலாவுக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

‘அப்பா போகப்போகிறார்!”

அந்தச் சிறிய கண்கள் தீப்பிழம்புகளைப்போலச் சிவந்தன. நெஞ்சிலிருந்து உடைந்துவரத் துடிக்கும் குமுறல்..

அப்பா எங்களை விட்டுப் போகப் போகிறார்..

அப்பா நிலாவைக் கட்டியணைத்து முத்தமிட முனைந்தார். நிலா சட்டென மறுத்து மறுபக்கம் திரும்பினாள். பிள்ளையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு.. அப்பா ஓடிப்போய் பஸ்ஸில் ஏறினார். எதையுமே கவனிக்காததுபோல பஸ் ஒரு உன்னலில் அப்பாவை இழுத்துக்கொண்டு போனது. கையை அசைத்துக்கொண்டிருந்த அப்பா பின்னர் கண்களைத் துடைப்பது தெரிந்தது.

நிலாவின் குமுறல் வெடித்து அழத் தொடங்கினாள்.

அன்று வீடு வெறுமையாக இருப்பது போல நிலாவுக்குக் காட்சியளித்தது. கூட விளையாட யாருமில்லாததுபோல உணர்ந்தாள். அப்பா நின்றால் சதா கலகலத்துக்கொண்டு நிற்பார். பூக்கன்றுகளைப் பார்க்கும்போது அழுகை வரும் போலிருந்தது.

அப்புவிடம் ‘அப்பா போயிட்டார். இனி நாங்கள் தனியத்தான் இருப்பம்..” என அடிக்கடி சொல்லியவாறு பிள்ளை கவலையில் மூழ்கியிருந்தாள். இரவு படுக்கைக்குப் போன பொழுது.. ‘அப்பா இல்லாமல் தனியப் படுக்கிறம்” என அம்மாவிடம் சொன்னாள்.

காலையில் எழுந்து முற்றத்துக்குச் சென்ற நிலா.. திரும்ப அம்மாவை அழைத்தவாறு குசினிக்கு ஓடிவந்து பதற்றமடைந்து கொண்டுநின்றாள். விஷயத்தைச் சொல்லமுடியாது மூச்சு வாங்கியது.

‘என்னம்மா? எதையோ கண்டு பயந்திட்டீங்களா?” அம்மா பிள்ளையை ஆதரவாகக் கேட்டாள்.

‘இல்லை.. அப்பாக் குருவியைக் காணயில்லை..! வாங்கோ..!” என அம்மாவின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள்.

முற்றத்தில் ஒரே ஒரு மைனா மட்டும் தீன் பொறுக்கிக்கொண்டு நிந்பதை நிலா அம்மாவுக்குக் காட்டினாள்.

‘அந்தா.. பாத்தீங்களா.. அப்பாக்குருவியைக் காணயில்லை.”

‘இல்லையம்மா! இதுதான் அப்பாக்குருவி! அம்மாக்குருவி முட்டை இட்டிருக்கு.. குஞ்சு பொரிக்கிறதுக்காக கூட்டில இருக்குது. இது அவையளுக்காகத் தீன் பொறுக்க வந்திருக்கு!”

நிலா மௌனமாக அந்தக் குருவியையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

‘எங்கட அப்பா இனி எப்ப வருவார்?”

அம்மா சற்றுநேரம் யோசித்துவிட்டுச் சொன்னாள்: ‘பிள்ளையின்ரை பேர்த்டேய்க்கு!”

இரவு படுக்கும்பொழுது நிலா அம்மாவிடம் நினைவாகக் கேட்டாள்: ‘எப்ப என்ட பேர்த்டே?”

அம்மா நிலாவை அணைத்துக்கொண்டு சொன்னாள்: ‘அப்பாவுக்குக் கடிதம் எழுதுவம்.. கெதியிலை வாங்கோ எண்டு!”

‘எழுதினால் வருவாரா?”

‘நான் பாட்டுப் பாடுறன்.. நீங்கள் படுங்கோ..” அம்மாவின் கை பிள்ளையை படுக்கையில் சாய்த்தது. தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு பிள்ளை பாட்டை கேட்டுக்கொண்டே கிடந்தாள்.

‘காயிதம் எழுதினால் அப்பா வருவாரா?”

பிறகு அப்படியே உறங்கிப்போனாள்.

அடுத்த நாள் மத்தியான நேரம்போல நாய் கேற்பக்கம் நின்று குரைத்து ஆரவாரித்தது. அறையில் விளையாடிக்கொண்டிருந்த நிலா ஓடிவந்து கேற்றடியைப் பார்த்தாள்.

‘ஏனம்மா நாய் கத்துது? நான் நினைச்சன் அப்பா வாறாராக்கும் எண்டு!”

‘அப்பா வர இன்னும் கனநாள் இருக்கு! நீங்கள் இஞ்சை வாங்கோ!”

அம்மா பிள்ளையை உள்ளே அழைத்துச் சென்றாள்.

ஒவ்வொரு நாளும் அப்பாவின் நினைவுகளுடனே கழிந்தன. இரவில் அப்பா கனவுகளில் வருவார்.

தபால்காரன் வரும் நேரங்களிலெல்லாம் அம்மா கேற்றடிக்கு ஓடி வருவதை நிலா கவனித்தாள். ‘போய் மூன்று கிழமையாச்சு! இன்னும் ஒரு கடிதத்தையும் காணயில்லை!” அம்மாவோடு சேர்ந்து நிலாவும் ஓடிவந்து கடிதத்தை எதிர்பார்க்கத் தொடங்கினாள். ஸ்கூல் முடிந்து வந்தவுடன் அம்மாவிடம் கேட்பாள்: ‘அப்பாண்ட காயிதம் வந்ததா?”

‘வரும்!”

ஆனால்.. நாட்கள் சில கழிந்தன.. கடிதம் வரவில்லை.

பொழுதுபடும் நேரம்.. அம்மா பிள்ளையையும் கையணைப்பில் தூக்கியவாறு முற்றத்தில் மெல்ல நடந்துகொண்டிருந்தாள். எதைப் பற்றியோ யோசிப்பவள்போல அம்மா அதிகம் கதைக்காமல் நடந்து திரிவது நிலாவுக்கு மனதில் கவலையை அளித்தது. அம்மாவின் முகத்தை தனது சின்னக் கைகளால் திருப்பிக் கேட்டாள்.

‘அப்பா காயிதம் போடுவாரா?”

‘அவர் போனவுடனை போட்டிருப்பாரம்மா! தபாலிலைதான் சுணங்குது!”

நிலாவுக்குப் புரியவில்லை. ‘ஏன் தபால் சுணங்குது!” நிலாவின் கேள்விக்கு அம்மா பதில் சொல்லவில்லை. வானத்தைக் காட்டிக் கதையை மாற்றினாள்.

‘அந்தா..! பாத்தீங்களா அம்புலிமாமா! அவரிட்டை கேப்பம்.. அப்பாவைக் கண்டீங்களா எண்டு!”

நிலா பேசவில்லை.

‘கேளுங்கோ.. அம்புலிமாமா! அப்பாவைக் கண்டீங்களா?”

‘அவருக்கு அப்பாவைத் தெரியுமா?”

‘ஓம்! அம்புலிமாமா அங்கை இருந்தபடியே எங்களைப் பார்க்கிறார்தானே? அதே மாதிரி அப்பாவையும் பார்ப்பார்! அவருக்கு எல்லாம் தெரியும்.”

‘அம்புலிமாமா.. அப்பாவைக் கண்டீங்களா?” நிலா வானத்தைப் பார்த்துக் கேட்டாள்.

அடுத்த நாள் பொழுது படும்போது நிலா மறக்காமல் அம்மாவிடம் கேட்டாள்: ‘அம்புலிமாமாவைப் பாப்பமா?”

அம்மா பிள்ளையைத் தூக்கிக்கொண்டு முற்றத்துக்கு போக.. அவள் வானத்தைப் பார்த்துக் கேட்டாள்:

‘அம்புலிமாமா, அப்பா வருவாரா?”

‘வருவார்.. பிள்ளையை விட்டிட்டு அவர் எப்படி தனிய இருப்பார்?” என அம்மா சொன்னாள்.

காலையில் விழிப்புற்றதும் நிலா அம்மாவைத் தேடி ஓடிவந்தாள். கிட்ட வந்து.. எப்படி கேட்பது என்று தெரியாமல் யோசனையில் ஆழ்ந்தாள்.

‘என்ன சொல்ல வந்தனீங்கள்?” என அம்மா கேட்டாள்.

‘அப்பா இனி வந்து.. என்னை எப்படிக் கூப்பிடுவார்?”

‘நிலா எண்டுதான் கூப்பிடுவார்.. ஏன் கேக்கிறீங்கள்?”

‘அப்பா என்னை நினைச்சிருப்பாரோ தெரியாது!”

‘அப்பா பிள்ளையை ஒருநாளும் மறக்கமாட்டார்! அங்கை படுக்கைக்குப் பக்கத்தில பிள்ளையின்ரை பெரிய போட்டோ வைச்சிருக்கிறார்!”

அம்மா வழக்கம்போல பிள்ளையைத் தூக்கியணைத்துக்கொண்டு கேட்டாள்..

‘என்ன..? கனவு கண்டனீங்களா?”

பிள்ளை பதில் பேசாது முகம் சிவந்து சிரித்து மழுப்பினாள்.

‘இதிலை என்ன வெக்கம்? நானும் கனவு காணுறனான்தானே?” என அம்மா சொன்னாள்.

அன்று அப்பாவின் கடிதம் வந்தது.

‘அப்பா உங்களுக்கு எழுதியிருக்கிறார்” என அம்மா நிலாவிடம் வாசித்துக் காட்டினாள்.

‘என் அன்பு மகள் நிலாவுக்கு

கண் காணாத தேசத்தில் இருந்தாலும்

கனவுகளில் எப்போதும் உங்களைக் காண்கிறேன்!

தூர தேசத்தில் இருந்தாலும்

என் மனம் தூர விலகாது

உங்களுடனே இருக்கிறது!

உங்களை எண்ணித்தான் என்

உயிர்மூச்சே இயங்குகிறது!

-அன்புள்ள அப்பா.”

நிலாவுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்பா தன்னை மறக்காமல் கடிதம் எழுதியிருக்கிறார்! பின்னர் அப்பாவின் கடிதங்கள் அடிக்கடி வந்தன.

00

ஒருநாள் பெரியப்பா வீட்டுக்கு அம்மாவுடன் நிலா சென்றிருந்தாள். பெரியப்பா அவர்களது தோட்டத்தில் மண்ணை வெட்டி வேலை செய்துகொண்டிருந்தார். அவருக்கு நாலு பிள்ளைகள். அந்த அக்கா அண்ணன்மார் எல்லோரும் தோட்டத்தில் நின்று விளையாடிக்கொண்டிருந்தார்கள். நிலாவும் ஓடிப்போய் அவர்களோடு சேர்ந்து விளையாடினாள். பெரியப்பா அடிக்கடி பிள்ளைகளோடு சத்தம் போட்டுக்கொண்டு தன் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

‘விளையாட்டை விட்டிட்டு புல்லைப் பிடுங்குங்கோ.. பிள்ளையள்!” புல்லைப் பிடுங்கிக் குவிப்பதே நல்ல விளையாட்டாக இருந்தது. அவர்கள் தங்களது அப்பாவுடன் விளையாடி விளையாடிப் புல்லைப் பிடுங்கினார்கள்.

அவர்கள் வீட்டில் சில மாடுகள் இருந்தன. கன்றுக்குட்டிகள் துள்ளி விளையாடின. நிலாவுக்கு வீட்டில் தன்னுடன் விளையாடுவதற்கு கன்றுக்குட்டிகளுமில்லை.. ஒருவருமில்லை என்ற உணர்வு அரும்பி மறைந்தது.

பெரியப்பா வேலையை இடையில் நிறுத்திவிட்டு வந்து அம்மாவுடன் கதைத்துக்கொண்டிருந்தார் பிள்ளைகள் தோட்டத்திலிருந்து ஓடிவந்து அவரது வியர்த்த தேகத்தில் கட்டிப்பிடித்து விழுந்து விளையாடினார்கள்.

அவர்கள் வீட்டிலிருந்து திரும்பியபோது பெரியப்பா நிறையக் காய்கறிகள் பிடுங்கி அம்மாவிடம் கொடுத்து விட்டார். வரும்போது நிலா அம்மாவிடம் கேட்டாள்.

‘எங்கட அப்பா எப்ப வருவார்?”

‘ஏனம்மா?”

‘எனக்கு.. எங்கட அப்பாவிலை விருப்பம்..”

அம்மா பேசவில்லை. நிலா மீண்டும் கேட்டாள்;: ‘எங்கட அப்பா.. எப்ப வருவார்?” அம்மா பிள்ளையின் முகத்தைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

இரவு அம்மாவின் பக்கத்திலிருந்து சாப்பிடும்போது நெடுநேரமாக அம்மா எதுவும் பேசாமல் சாப்பாட்டை மெல்ல மென்றுகொண்டிருப்பதைப் பிள்ளை கவனித்தாள். நிலாவும் ஒவ்வொரு பருக்கையாகச் சோற்றைக் கொறித்துக்கொண்டு அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்;. அம்மாவுக்குச் சாப்பாடு இறங்கவில்லைப்போலும்! அந்த மௌனம் நிலாவுக்கு ஒருவித கவலையை ஊட்டியது.

‘அம்மா! நீங்க.. அப்பாவிண்ட நினைவிலையா சாப்பிடுறீங்கள்?”

அம்மா நிலைகுலைந்து நிலாவைப் பார்த்தாள். பிறகு மென்மையான குரலில் சொன்னாள்:

‘ஓம்! ஓன் கேட்டனீங்கள்?”

‘சும்மாதான்!”

அம்மா கண்கள் சிவக்கக் கேட்டாள்:

‘நீங்களும் அப்படியா?”

‘ஓம்!” என்றவாறு மென்மையாகச் சிரிப்பைக் காட்டினாள் நிலா. அம்மா பிள்ளையைச் சமாதானம் செய்து படுக்கைக்குக் கூட்டிவந்தாள். நிலா உறங்குவதற்காக அம்மாவின் மடியில் படுத்தாள். அம்மாவின் கை பிள்ளையைத் தட்டிக்கொடுத்தது. நீண்ட நேரமாகப் பிள்ளைக்கு உறக்கம் வரவில்லை. அம்மா பாட்டுப் பாடவும் இல்லை. அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். அம்மா கையில் சில தாள்களை வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.

‘அப்பாண்ட காயிதமா?”

அம்மா நிலாவைப் பார்த்து, ‘ஓம்” எனப் புன்சிரித்தவாறு தொடர்ந்தும் கடிதத்தை வாசித்தாள். நிலா இடையிடையே நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தாள்.

‘அப்பா அங்கையிருந்து.. அழுது.. அழுது.. கடிதம் எழுதியிருக்கிறார்..’ என நிலாவுக்கு அம்மா சொன்னாள். நிலா துடிதுடித்துப்போனாள். பதைத்து எழுந்து உட்கார்ந்தாள்.

‘ஏன் அப்பா அழுகிறார்?”

‘உங்களை நினைச்சுத்தான்! உங்களை விட்டிட்டு அப்பாவுக்குத் தனிய இருக்கேலாதாம்!”

‘அப்பா ஏன் அங்கை தனிய இருக்கிறார்?”

‘காசு உழகை;க!”

‘ஏன்?”

‘உங்களுக்காகத்தான்!”

நிலாவுக்குப் புரியவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாக இருந்தது. அம்மாவிடம் கேட்டுப் பார்த்தாள்.

‘ஏன் காசு”

‘உங்களுக்குச் சாப்பிட.. மில்க் குடிக்க.. புத்தகம் வேண்ட.. வீடு கட்ட.. எல்லாத்துக்கும் காசு தேவைதானே?”

நிலாவின் கண்கள் கலங்கிச் சிவந்தன. சொண்டு துடிதுடித்தது. பெரியதாக மூச்சை இழுத்து நெஞ்சுக்குள் அடக்கினாள். விசும்பல்.. மெல்ல மெல்ல விம்மி வெளிப்பட்டது. இமைகளில் முட்டிய கண்ணீர் உடைந்து கொட்டியது.

அம்மா கவனித்துவிட்டு பிள்ளையின் கன்னத்தைத் தடவியவாறு கேட்டாள். ‘ஏனம்மா?”

அதற்கு மேலும் அடக்க முடியாமல் அழுகை நெஞ்சிலிருந்து உடைந்து வந்தது. மூச்சடக்கி அழுதவாறு அம்மாவின் மடியில் முகம் புதைத்தாள் நிலா.

அம்மா ஆதரவாகப் பிள்ளையை அணைத்துத் தடவிக் கொடுத்தாள். அழுகை குறைந்து வர பிள்ளைக்கு உறக்கம் தழுவியது. அம்மா நிலாவின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். விம்மலுக்கிடையே பிள்ளை சொன்னாள்:

‘எனக்கு அப்பா வேணும்!

– சிரித்திரன் 1992.

– தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: பிப்ரவரி 1997, மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்.

விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *