ஊர் பெயர் தெரியாத உறவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 4,012 
 

எதிர்பாராத சந்திப்புகள் காதலில் போய் முடிவதுண்டு அதே மாதிரி தான் சாந்தி, ராம் என்ற ராமசாமியின் சந்திப்பும் . சாந்தி பிறந்தது வன்னியில் ஈழத்துப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் அருகே உள்ள உள்ள முல்லைத்தீவில். இராமசாமி பிறந்த ஊர் மலையகத்தில் உள்ள மஸ்கேலிய தேயிலை தோட்டம். இந்த இரு ஊர்களுக்கு இடையே உள்ள தூரம் சுமார் 340 கி மீ . சாந்தி ஈழத் தமிழிச்சி . ராமசாமி மலைநாட்டு தமிழன் ஆனால் இருவரும் மதத்தால் ,மொழியால் . இனப் பற்றால் . கொள்கையால் சிந்தனையால் ஓன்று பட்டர்கள் அதுவே அவர்களின் காதலுக்கு துணை போனது .

சாந்தி ஒரு நேர்ஸ். அவள் வேலை செய்தது முல்லைத்தீவு அரச வைத்தியசாலையில். எல்லா நோயாளிகளுடன் அன்பாக பழகுவாள். அவளின் கைப்பட கவனிப்பில் உள்ள நோயாளிகள் சீக்கிரம் குணமடைந்தார்கள் உயருக்கு ஆபத்து என்று வந்தால் எதிரிக்கும் வைத்தியம் செய்து குணப்படுத்த சாந்தி தயங்க மாட்டாள் . போரில் காயப் பட்ட விடுதலை புலி இயக்கத்தின் வீரர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று எவரும் அறியாத வாறு சிகிச்சை அளிக்க அவள் தயங்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் அவளின் அண்ணன் ஒரு மாவீரன், அதனால் தமிழ்இனத்தின் பற்று அவள் மனதில் ஆழப் பதிந்திருந்தது .

இராமசாமியின் தந்தை வேலுச்சாமி தேயிலைத் தொட்டத்தில் கண்காணி இருந்தவர் . தமிழ் நாட்டில் உள்ள சிவகங்கையில் பிறந்தவர் . பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு தொழில் தேடி வந்தவர்களில் ஒருவர் . இராமசாமி சிறு வயது முதல் கைத்திறன் உள்ளவன். மின் கருவிகளைத் திருத்துவதில் திறமைசாலி அதனால் மஸ்கெலியா தேயிலைத் தோட்டத்து தொழிற்சாலையில் எலக்ட்ரீஷியனாக வேலைசெய்தான் . அவனும் தமிழ் இனப் பற்றுள்ளவன் . ஈழத்து விடுதலை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து தனது கைத்திறனை பாவித்து இயக்கத்தின் மின் கருவிகளை திருத்த உதவினான்.

ஈழத்துப் போரினால் பாதிக்கப் பட்ட ஆயிரக் கணக்கான அகதிகளான மக்களில் சாந்தியும் இராமசாமியும் உள்ளடங்குவர். வவுனியாவுக்கு அருகில் உள்ள செட்டிக் குளம் அகதிகள் முகாமில் வாழ்ந்த இருவர்களுக்கும் இடையே சந்திப்பு ஏற்பட்டது. அகதிகள் முகாமில் இருந்தவர்கள் தங்களுக்கு ஏதும் உடல் நலம் சரியில்லை என்றால் சாந்தியின் உதவியை நாடுவார்கள். ஒரு நாள் இராமசாமி, முகாமில் உள்ள இராணுவத்தினரால் குறுக்கு விசாரணையின் போது தாக்கப் பட்டு சாந்தியிடம் சிகிச்சை பெறப் போனான் . அதுவே அவர்களின் முதல்சந்திப்பு ,

“என் ஆர்மி இப்படி மோசமாக அடித்ருக்கிறார்களே . ஈவிரக்கம் அற்ற மனிதர்கள் “ ராமின் உடலில் இருந் த காயக்களுக்கு கட்டு போட்ட படியே சாந்தி சொன்னாள்”

“எல்லாம் தலையாட்டிகளின் வேலையால் வந்தது ”.

“அவர்கள் அரசின் கூலிப்படைகள் . இயக்கத்தில் இருந்து ஒழுக்கம் தவறியதால் நீக்கப்பட்டவர்கள்”.

“எதுக்கும் ராம் எவரையும் இந்த முகாமில் நம்ப வேண்டாம். நீர் விரும்பினால் எனக்கு உதவியாளனாக இருக்கலாம். சம்பளம் இல்லாத வேலை” சாந்தி சொன்னாள்.

“உங்களுடன் சேர்ந்து இந்த முகாமில் உள்ளவர்களுக்கு சேவை செய்வது என் பாக்கியம்” ராம் சொன்னான்.

அந்த அகதிகள் முகாமில் சாந்தியின் பெற்றோரும், இராமசாமியின் பெற்றோரும் வெவேறு ஊர்களில் வாழ்ந்த தங்கள் குடும்பம் எவ்வாறு அகதிகள் முகாமுக்கு வர வேண்டி வந்தது என்பதை பற்றிய விசயங்களைப் பரிமாறிக் கொண்டனர் . சாந்தியின் தந்தை நடராஜா மலையக ஊரான ஹாட்டனில் உள்ள பாடசலையில் ஒன்றில் ஆசிரியராக இருந்தவர் . அதனால் அவர் தேயிலை தோட்ட வாழ்வு பற்றி நன்கு அறிந்திருந்தார். அது நடரஜாவும் இராமசாமியின் தந்ததை வேலுசாமியும் நண்பர்களாக உதவியது . பின் அவர்களின் மனைவிமார்களிடையே நட்பு வளர்ந்தது.

சாந்தி முகாமில் வைத்திய சேவை செய்யும் போது அவளின் சிகிச்சையால் குணமடைந்த இராமசாமி (ராம்) அவளுக்கு உதவியாக இருந்தான் . சாந்தியின் அமைதியான போக்கும், பணிவும் பற்றற்ற சேவையும் அவள் மேல் அவனுக்கு ஈர்ப்பை உருவாக்கியது . அந்த ஈர்ப்பு அவர்கள் இருவரின் மூன்று வருட அகதிகள் முகாம் வாழ்கையில் காதலாக மலர்ந்தது .

***

அகதிகள் முகாமில் இருந்து வெளியே வந்த பின் சில மாதங்களில் சாந்திக்கும் ராமுக்கும் பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் ஹட்டன் கோவில் ஒன்றில் நிறைவேறி முடிந்தது .

மணமகள் சாந்தியின் பெற்றோர் மணமகனின் வீட்டுக்கு வந்து பெண்ணை விட்டுச்செல்ல வந்திருந்தனர்.

மணமகன் வீட்டில் இருந்து சாந்தியின் பெற்றோர் விடை பெறமுன்

மகள் சாந்தியின் நெற்றியில் கலைந்துகிடந்த கூந்தலைத் தூக்கிவிட்டு வருடியவாறு அவளையே சற்று நேரம் உற்றுப்பார்த்தாள் அவளின் தாய். இருவரின் கண்களும்

கலங்கின. சமாளித்துக்கொண்ட தாய், “ சாந்தி நங்கள் வாரோம்மா. ஏதும் உனக்கு தேவைப் பட்டால் எனக்கு கோல் எடு ” .

சாந்தியின் தந்தை நடராஜாவும் மகளை பிரியும் கவலையில் சற்று உணர்ச்சிவசப்பட்டவராகவே காணப்பட்டார்.

“வாரோம் மதினி, என் மகளை பாத்துக்கங்க”

“ஒண்ணுக்கும் கவலப்படாதீங்க, மதினி, சாந்தி இனி எங்க பொண்ணு” என்றாள் சாந்தியின் மாமியார்., சம்பந்தியின் கையைப் பிடித்த படியே .

“என்ன மச்சான் இது” என்று சாந்தியின் தந்தையின் தோளைத் தழுவினார் சாந்தியின் மாமனார் வேலுசாமி.

“ஓன்றுமில்லை என் மகளை பிரிய வேண்டிய கவலை . அது தான் “

“எனக்கு மகள் இல்லாத வீடு, சாந்தி எனக்கும் பொண்ணுதான், நாங்க அவளை கவனமாக பாத்துக்கறோம்” என்று தழுவிய கைகளைத் தளர்த்தித் நடராஜரின் தோளைத் தட்டிக்கொடுத்தார் வேலு.

சாந்தியின் பெற்றோரை ஏற்றிச் சென்ற உடரட்ட மெனிக்கே ரயில், பார்வையில் இருந்து மறையு,ம மட்டும் எல்லோரும் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டேநின்றனர் .

தன் மனைவியின் காதில் குனிந்து சாந்தியின் மாமனார் சொன்னார் “பார்த்தாயா முத்தம்மா ஊர் பெயர் தெரியாத உறவின் இறுக்கத்தை”

“சரி சரி இது இறைனால் முடிவு செய்த உறவு. இனி சாந்தி எங்கள் மகள்” என்று கணவனின் காதுக்குள் இரகசியமாக சொன்னாள் முத்தம்மா.

****

மலர்களைத் தலைமுழுதும் சூடிக்கொண்டு சாந்தி அறைக்குள் நுழைந்தாள். நாணத்துடன் அவனருகே வந்து அமர்ந்த அவளின் நாடியைச் சற்றுத் தூக்கிப்பிடித்த ராம்

“இதென்ன மூன்று வருடங்கள் இல்லாத புது வெட்கம்? இன்னிக்கித்தான் என்னை பாக்குறயா சாந்தி?” என்றான் . அவன் தோள்களில் முகம் புதைத்தாள் அவள். மெத்தென்ற அந்த

மலர்க்குவியலை அப்படியே அள்ளித் தழுவிக்கொண்ட அவன் ‘கல கல’-வென்று சத்தம்போட்டுச் சிரித்தான். திடுக்கிட்டு நிமிர்ந்துபார்த்தாள் சாந்தி.

அவன் சிரிப்பு ஓயவில்லை. சற்று நேரத்தில் அவன் சிரிப்பு நின்றது .,

“ஆமாம், உன் அம்மா என் அம்மாவப் பாத்து என்ன சொன்னாங்க?”

“’வர்ரோம் மதினி, என் மகளை பாத்துக்கங்க’ –ன்னு சொன்னாங்க”.

“அதென்ன மதினி? எங்கம்மா ஒங்கம்மாவுக்கு அண்ணன் பொஞ்சாதியா?”

அவள் விழித்தாள்.

“சரி அது இருகட்டும் எங்கப்பா ஒங்கப்பாவப் பாத்து என்ன சொன்னார்?”

“ஒங்கப்பா ‘என்ன மச்சான் இது’-ன்னு எங்கப்பாவைத் தட்டிக்கொடுத்தாரு”

“அதென்ன மச்சான்? எங்கப்பா ஒங்கப்பாவுக்குத் தங்கச்சி புருசனா?”

“இதென்ன அத்தன பேச்சு, நமக்குத்தான் கலியாணமாகிப்போச்சுல்ல அதனால் அவர்கள்மனதில் வந்த உறவு”

“நமக்கு என்றால் ? நீ எங்கள் திருமனத்துக்கு முன்னால நீ யாரு நான் யாரு?”

“அதுக்கு என்ன? எதிர்பாராத சந்திப்பால் ஏற்பட்ட உறவு . ஆர்மிக்கு நன்றி சொல்லவேண்டும்”

அவன் பழைய கதையைக் கிளறியதும் சாந்தியின் மனம் கிறங்கிப்போனது.

“சாந்தி பல வருடன்க்ளுகு முன் நான் கேட்டு ரசித்த பாட்டுஎன் நெனவுக்கு வருது”

“என்ன பாட்டு சொல்லுங்க ராம் !”

“வாழ்கை படகு படத்தில் கேட்ட நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, இன்று முதல் நீ வேறோ நான் வேறோ… என்ற பாடல்”.

“புரியுதே என் தாயும் உங்கள் தாயும் யார் யாரோ – சரிதானே , மேலே சொல்லுங்க”

“என் தந்தையும் உன் தந்தையும் எந்தவழியில் உறவினர் – சரியா?”

“யானும் நீரும் எவ்வழிஅப்படியே. எல்லாம் எழுதிய படியே நடக்கும் ?”

“நானும் நீயும் ஒருவரையொருவர் எப்படி அறிவோம்?”

“செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!”

“புரிஞ்ச மாதிரி இருக்கு – ஆமா அதென்ன ராம் உவமை?”

“செம்புலம் என்கிறது செம்மண் நிலம். பெயல் என்கிறது மழை. உழுதுபோட்ட செங்காட்டுல ஓங்கி மழை பேஞ்சா என்னாகும்?”

“செக்கச் சிவீருன்னு சேறும் சகதியுமாப் போகும்”

“அந்த மழைத் தண்ணி?”

“ரத்தங் கெணக்கா செவப்பாப் போயிரும்”

“அப்புறம் அந்தத் தண்ணியிலிருந்து அந்தச் செவப்பு நெறத்தப் பிரிக்க முடியுமா?”

“முடியவே முடியாது, கலந்தது கலந்ததுதான்”

“வானமும் பூமியும் யார் யாரோ? மேகமும் காடும் எம்முறையில் உறவு? நீருக்கும் நிறத்துக்கும் எப்படி அறிமுகம்?

“அகதிகள் முகாமில் என்கிருந்தோ வந்து விழுந்த எங்கள் உறவு – அதுதான் எங்கள் காதல்’-என்ற புனிதம் ” என்று இறக்கத் தழுவியபடி ராமோடு ஒன்று கலந்தாள் சாந்தி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *