உள்ளத்தால் அடிமைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 3,662 
 
 

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னை நிழலாகத் தொடர்ந்த துன்பத்தை விரட்டியடிப்பதற் காகவோ, மறப்பதற்காகவோ அல்லது மடியச் செய்து வெற்றி கொள் வதற்காகவோ தான் இத்தனை வருடமும் நான் உற்சாகத்துடன் போராடி வந்தேன். அந்த நிழல் போராட்டம் தோற்றுப் போய்விட்டது. நிழல் போராட்டங்கள் எப்போதுமே தோல்வியில் தான் முடிவடைந்திருக் கின்றன. அந்தச் சரித்திர நிர்ப்பந்தத்திற்கு விதிவிலக்காக முயன்று தோற்றுப்போய் இப்போது நானும் அந்தச் சரித்திர அடிமைகளில் ஒருத்தியாய்… இல்லை! அப்படி ஆகிவிடக் கூடாது!

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று எமது பெண்கள் அடிமை வேலை செய்கிறார்களாம். வேற்று நாட்டின் ஆடவர்களுக்குத் தொழில் செய்கிறார்களாம். பணத்திற்காக எதுவும் செய்யலாம் என்று ஆகிவிட்ட தாம். இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் பெண்களை அங்கே அனுப்பாதிருக்கும்போது. இலங்கை மாத்திரம் ஏன் அனுப்ப வேண்டு மாம். இலங்கையின் மானம் கப்பல் ஏறுகிறதாம். கதறிக்கொண்டு பிரசங்கமாரி பொழிந்துகொண்டு அலைகிறார்கள் எமது ஆண்கள்.

ஆனால் இங்கே ……

இலங்கையின் உள்ளே ….

மரியாதையான குடும்பத்தின் உள்ளே ….

மனைவி என்ற மகத்தான உரிமை வழங்கப்பட்டுப் பூஜிக்கப்படுவ தாகிய பொய்ம்மைத் தோற்றத்தின் உள்ளே நடப்பவைகள்!

அவை வெளி உலகுக்குத் தெரியாத பூடகங்கள்!

உடலால் அடிமையான பெண்களைப் பற்றித்தான் எல்லாரும் கூச்சல் போடுகிறார்கள்.

உள்ளத்தால் அடிமையாக்கப்பட்ட எங்களைப் பற்றி…..

“அழுவதற்கு நேரம் எங்கே இருக்கிறது இவ்வுலகில்? அப்படி அழுவதற்கு நேரம் இருப்பவர்களுக்கு வாழ்வதற்கு எங்கே நேரம் இருக்கப்போகிறது?”

என்று இளமைக் காலக் கனவு வேளைகளில் நான் அடிக்கடி சொல்லிக் கொள்வேன். அப்படிச் சொல்லிக்கொண்ட நானே தான் அன்று வாசல் படியில் அமர்ந்து அழுது கொண்டு முன்னே தெரிந்த முருங்கை மரக்காட்சியைத் தொடர்ந்து சென்றேன். தான் பெற்றெடுக்காத தன் வயிற்றில் உதிக்காத ஒரு குஞ்சுக்கு அந்தக் காகம் உணவூட்டிக் கொண்டிருந்தது. குயில் குஞ்சு “கூகூ” என்று கொஞ்சியபடி வாயைத் திறந்து தன் வாயில் அன்புடன் திணிக்கப்பட்ட உணவை விழுங்கியதும் மீண்டும் உணவு தேடுவதற்காகப் பறந்து சென்றது பெண் காகம்.

காகங்களுக்கிடையில் பாரதி பிறக்கவில்லை !

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்!” என்று ஒரு கவிஞர் காகமும் பாடவில்லை . ஆனாலும் அந்தப் பெண் காகம் மிகச் சுதந்திரமாய் தான் விரும்பிய நேரம் விரும்பிய உணவை அந்தக் குஞ்சுக்குக் கொடுப்பதைப் பற்றி “விமர்சனம்” செய்ய வேறு காகங்கள் வரவும் இல்லை .

சிறிய விம்மலாய் இருந்த என் அழுகை இந்தச் சிந்தனையைத் தொடர்ந்து பெரிய பிரவாகமாய் வெடித்துச் சிறதறியது.

என் நிலை…..?

தாய்மைப் பேறு என்ற பெரிய பொறுப்பைப் பெண்களுக்குக் கொடுத்திருக்கும் கடவுள் ஏன் அவர்களைப் பொறுப்பற்ற ஆண்களை நம்பி வாழும் அவல நிலைக்குக் கொண்டு வந்து வைத்திருக்கிறான்?

“என்ன பிள்ளை , இந்தப் பிஞ்சுக் குழந்தைக்குப் பப்பாசிப்பழம் குடுக்கிறதே…. சன்னியாக்கிப் போடுமெல்லே? இதென்ன கலி காலம்…. ஒரு வயது முடிய முந்தி ஒரு பழவகையும் குடுக்கப்பிடாது….”

“காய்ச்சல் விடும் வரைக்கும் ஒரு பாலும் குடுக்கப்பிடாது. பால் சரியான மந்தம்…… செமிக்காது….”

“தடிமன் வந்தால் சளி மாறும் வரையில் மல்லித் தண்ணியும் தேத்தண்ணியும் தான் குடுக்கிறது, யூனிவேசிற்றியிலை படிச்சாப் போலை எல்லாம் தெரிஞ்சிடுமே! பிள்ளை வளக்க அனுபவம் வேணும். எங்களைப்போலை வயதுக்கு மூத்த ஆட்கள், எட்டுப் பத்துப் பிள்ளை பெத்து வளத்தவை சொல்லிறதைக் கேட்கிற மனம் வேணும்…”

ஒவ்வொரு நாளும் என் காதில் வந்து விழுகின்ற மாமியின் அர்ச்சனைகள்.

“என்னப்பா… உங்கடை அம்மா இப்பிடிச் சொல்லுறா…. இங்கை பாருங்கோ இந்தப் புத்தகத்திலை மூண்டு மாதத்திலை பப்பாசிப்பழம் குடுக்கச் சொல்லி எழுதியிருக்கு… இதையெல்லாம் டொக்ரேஸ் தானே எழுதியிருக்கினம்…”

“காய்ச்சல் விடும் வரைக்கும் பால் குடுக்கப்பிடாது என்றால் எனேஜி கிடையாதே….. பிள்ளை எப்பிடி எழும்பி நிக்கிறது. ஏதாவது உணவு வேணும் தானே….”

“தடிமனுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தமப்பா… இஞ்சை நான் கேக்கிறன் நீங்கள்…..”

மாமியுடன் எதிர்த்துக் கதைக்க முடியாமல் என் கணவரிடம் நான் முணுமுணுத்துக் கொள்ளும் நினைவுகள்.

“அம்மா சொல்லும்படி செய்யுமன். உமக்கென்ன குறைஞ்சு போச்சே! இதுதான் பொம்பிளையள் படிக்கப்பிடாது எண்டு சொல்லுறது. யூனிவேர்சிற்றிக்குப் போயிட்டு வந்திட்டா தங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டு நினைச்சுக் கொள்கிறது…. அவ அனுபவப்பட்டவ சொல்லுறபடி செய்ய வேணும்… பிள்ளைக்குச் சாப்பாடு அம்மா பார்த்துக் குடுப்பா… நீர் அதிலை தலையிடாமல் போய்ச் சமையல் வேலையைப் பாரும்…..”

மாமிக்கு முன்னாலேயே கணவனால் அவமதிக்கப்பட்ட ஆத்மார்த்தமான காயங்கள். என் வயிற்றில் பத்து மாதம் சுமந்து, என் குருதியில் இருந்து உணவுண்டு வளர்ந்த என் பிள்ளைக்கு நான் உணவூட்ட முடியாத ஒரு படித்த அடிமையாய்… மூக்கை முட்டுகின்ற புகைமண்டலத்தினுள் நான் மீண்டும் நுழைந்து கொள்வேன்.

“கலியாணம் முடிஞ்சால் தனிக் குடித்தனம் போயிடவேணும். மாமன், மாமியோடை இருந்தால் எப்பவும் பிரச்சினைதான்…” ஆஸ்பத்திரி சக ஊழியர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொள்வார்கள்.

“என்னப்பா…. ஹாஸ்பிட்டல் குவாட்டர்சிலை போய் இருப்பமா? எனக்கும் வேலைக்குப் போய்வரச் சுகம். தனியா இருந்திட்டால் வீண் பிரச்சினைகளும் இல்லை …”

நான் ஆயிரம் தடவைகளுக்கு மேல் இப்படி ஒரு விண்ணப்பத்தை இவரிடம் விடுத்திருப்பேன்.

“உமக்கு நைற் டியூட்டி என்றால் நீர் போயிடுவீர், இரவு நேரத்திலை சேர்வன்ரை நம்பிப் பிள்ளையை விட முடியுமே! அதுகள் தூங்கி வழிஞ்சுகொண்டு பால் எண்டு நஞ்சையும் குடுத்திடுங்கள். எப்படியும் எங்கடை அம்மா பாக்கிற மாதிரி மற்றவை பாப்பினமே….”

“எங்கடை தங்கச்சியைக் கூப்பிட்டு வைச்சிருக்கலாம்……

“பிள்ளை பாத்துப் பழக்கம் இல்லாத உம்மடை தங்கச்சியைவிட எங்கடை அம்மா வடிவாய்ப் பார்த்துக் கொள்ளுவா. பேசாமல் இரும்…..”

முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுகின்ற கதைகளைத் தொடர் முடியாமல் நானும் இன்றுவரை அந்த முற்றுப் புள்ளியைத் தாண்டாமல் நின்று கொண்டிருக்கிறேன்.

பிள்ளைக்குக் குளிக்க வார்க்கும் போது முதலில் வாயினுள் நீர் விடவேண்டுமாம். பலமுறை சொல்லிச் சொல்லிக் காதில் ஏறாமல் போன நிலையிலும் வாயை மூடிக்கொண்டிருக்கும் தைரியம் இல்லாமல் நான் அன்றும் சொன்னேன்.

“இப்ப மழை காலம். தண்ணீருக்குள்ளை பல வகையான கிருமியள் இருக்கும். தொற்றுக்களை எதிர்க்க வலிமை இல்லாத நிலையிலை இருக்கிற குழந்தையிலை அவை பல நோய்களை உண்ணடாக்கியிடும். வெறும் கிணற்றுத் தண்ணியைப் பிள்ளையின்ரை வாயிலை விடாதேங்கோ மாமி….”

“இதென்ன பிள்ளை புது நாணயமான கதை. கிணற்றுத் தண்ணியிலை நஞ்சு இருக்கெண்டு வாசிற்றியிலை சொல்லித் தந்தவங் களோ? செத்தாப் பிறகுதான் காலிலை இருந்து தலைக்கு வாக்கிறது. உயிரோடை இருக்கிற பிள்ளைக்கு முதலிலை வாயிலை விட்டுத்தான் பிறகு குளிக்க வாக்க வேணும். நான் எத்தினை பிள்ளையை வளத்தனான். நீ எனக்குப் படிப்பிக்காத பிள்ளை ….”

எனது சொல் சபையில் ஏறாது என்பதுதான் தெரிந்த விடய மாயிற்றே!

இரண்டு நாளில் பிள்ளை வயிற்றோட்டத்தினால் பாதிக்கப் பட்டான்.

முதல் நாள் நோய் கண்டபோதே, நான் மருந்து கொடுக்கத் தயாரானபோது,

“அது பிள்ளை எழும்பி நடக்கத் துவங்க வயிற்றாலை போறது வழக்கம். அதுக்கு ஏன் மருந்து…..? சும்மா விடுங்கோ !”

என்ற கட்டளைக்கு அவர் பணிய, அவரின் சொல்லுக்குப் பணிந்து போக வேண்டியதாயிற்று.

அன்று வேலையில் இருந்து நான் திரும்பியபோது பிள்ளையின் நிலை மிக மோசமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் போனால் பிள்ளையின் உடலில் இருந்து நீர் அதிகமாக இழக்கப்பட்டு “டி கைட்ரேசன்” எனப்படும் ஆபத்தான நிலை உருவாகும் என்று எனக்குத் தெரிந்தது.

வெளியேறும் நீரை ஈடு செய்வதற்குப் போதிய அளவு நீர் உள்ளே கொடுக்கப்பட வேண்டும்.

“இளநீர் ஒன்று வெட்டித் தாங்கோ …. குடுப்பம்” கண்களில் துளிர்த்த நீர்த்துளிகளைத் தட்டி விட்டுக்கொண்டே நான் பணிவுடன் கேட்டேன்.

“இப்பிடி வயிற்றாலை போகேக்கை ஒண்டும் குடுக்கப்பிடாது. தண்ணி, சாப்பாடு ஒண்டும் கண்ணிலையும் காட்டப்பிடாது. தண்ணி குடிச்சால் இன்னும் வயிற்றாலை போகும்….”

வழமைபோல மாமியின் கட்டளைக்கு இவர் பணிந்து போனார். நான் வெளியே வந்து படியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். ஒரு நாளும் அழக்கூடாது என்று நினைத்திருந்த நான் இன்று… இதைப்போல இன்னும் பல இன்றுகள்…. ஓ……

வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்ற என் வீட்டு நிலை இது வென்றால்….. படிக்காத பெண்கள்… இந் நாட்டில் லட்சக் கணக்காக வாழுகின்ற அத்தகைய பெண்கள் கதி …..

இல்லை! இதற்கெல்லாம் விட்டுக் கொடுக்கக் கூடாது, நான் ஒரு வீறாப்புடன் எழுந்து சென்று நானாகவே இளநீரை அறுத்து வெட்டிப் போச்சியில் விட்டுக் குழந்தைக்குக் கொடுக்கத் தயாரானபோது,

“இதுதான் திமிர் எண்டு சொல்லிறது. நான் சொன்னால் கேக்கப் பிடாது எண்ட பிடிவாதம். படிச்சதாலை வந்த வினை…”

எனது கையில் இருந்த போச்சியைப் பறித்துக் கொண்டு அப்பால் சென்றார் கணவர்.

ஆணுக்குப் பிடிவாதம் இருந்தால் அது சுயகௌரவம்! பெண்ணுக்கு பிடிவாதம் வந்து விட்டாலோ அதன் பெயர் “திமிர்” என்று மாறிவிடும். இவ்வளவு காலமும் அவர்களின் திமிருக்கெல்லாம் நான் ஆடி வந்தேனே, பிள்ளையின் உயிர் ஆபத்தில் இருக்கிற இந்த நிலையில் கூடவா நான் விட்டுக்கொடுக்க வேண்டும்?

பாரதி பாடிப்பாடி அலுத்து நூறு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் பெண்ணடிமைத்தனம் எமது நாட்டில் ஒரு அங்குலம் தானும் குறைந்து போகவில்லை என்பதைப் பற்றி நான் கவலைப்படாதிருக்கலாம். ஆனால்… எனது குழந்தையின் உயிரைப் பற்றி….. எனது இரத்தத்தின் இரத்தம் இழக்கப்படப்போவது பற்றிக் கவலையற்றிருக்க நான் என்ன சடப்பொருளா?

மூட நம்பிக்கைகளின் தாக்கத்தினால் என் குழந்தை பலி எடுக்கப்படுவதைக் கண்ணால் பார்த்துக்கொண்டும் செயலிழந்திருப்ப தாயின் நான் பெற்ற அறிவின் பயன்தான் என்ன?

நடுநிசியில் எல்லாரும் உறங்கிப் போயிருக்கும் சமயத்தில் என் பிள்ளையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறேன் நான்! என் கணவர் ஒரு வேளை என்னைத் தொடர்ந்து வரக்கூடுமோ என்று நான் திரும்பிப் பார்க்கவில்லை!

தூரத்தில் காற்றிலே அசையும் ஒற்றைப் பெண் பனையை நோக்கி நான் விரைந்து நடக்கிறேன். அது என்னை நோக்கி,

“என்ன இத்தனை காயங்களுடனும் நான் இந்தப் பேய்க் காற்றுக்குத் தாக்குப் பிடிக்கிறேனே என்று யோசிக்கிறாயா? எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை! நான் பூத்திருக்கும்போதுகூட ஆண் பனையின் மகரந்த மணிகள்தான் என்னைத் தேடிவருமே தவிர நான் என் பூக்களை யாரிடமும் அனுப்ப மாட்டேன்! சீ… என்னளவு தையரியம் கூடவா ஒரு டாக்டர் பெண்ணாகிய உனக்கு இல்லாமல் போய்விடும்? தைரியமாகத் தொடர்ந்து செல்…..

என்று கூறுவது போல எனக்கு ஒரு ஒலி கேட்கிறது!

– 02-02-1983இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை இல் “சிறுகதை” நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *