உயிர்ப்பு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 9,390 
 
 

பெங்களூரிலிருந்து காரில் திருக்கடையூர் வந்து சேர்வதற்கு மாலை நான்கு மணியாகி விட்டது.

ஸ்ரீராம், அவர்கள் தங்க வேண்டிய வாடகை வீட்டைக் கண்டு பிடித்து, வீட்டின் முன் தன் காரை நிறுத்தினான். ஏ.சி. காரின் கதவுகளைத் திறந்ததும் உள்ளே அனலடித்தது. உக்கிரமான வெய்யில். அவனுடைய அப்பாவும், மனைவி கமலாவும், மூன்று வயது மகன் ஹரனும் காரை விட்டு இறங்கிக் கொண்டார்கள்.

திருக்கடையூர் கோவிலில் நாளை காலை பதினோரு மணிக்கு ஸ்ரீராமின் அப்பாவுக்கு ஹோமங்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அப்பாவுக்கு வயது அறுபது. அறுபது வயதில் திருக்கடையூரில் ஹோமங்கள் செய்து கொண்டால் நல்ல ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்று பெங்களூர் வாத்தியார் சொன்னார். அப்பாவின் நட்சத்திரம் பார்த்து நாளை காலையில் ஹோமங்கள் செய்யலாம் என முடிவு செய்யப் பட்டது.

ஸ்ரீராமின் பத்து வயதிலேயே அவனுடைய அம்மா மஞ்சள் காமாலையில் தவறி விட்டாள். அப்பாதான் அவனை படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர வைத்து, நல்ல குடும்பத்தில் பெண் எடுத்து, தற்போது தன் குலக் கொழுந்தான பேரன் ஹரனை கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீராமுக்கு அப்பாவின் ஆசைகளும், விருப்பமும்தான் பிரதானம். இன்றைக்கு தான் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் சின்ன வயதிலேயே டெலிவரி ஹெட்டாக இருப்பதற்கு அவருடைய வழி நடத்தல்தான் காரணம் என்று நம்பினான்.

மாலை ஐந்து மணிக்கு, ஹோமங்கள் செய்யப் போகும் வாத்தியாரை நேரில் பார்த்து அட்வான்ஸ் பணம் கொடுத்துவிட்டு, எல்லா ஏற்பாடுகளையும் உறுதி செய்து கொண்டான். திரும்பி வந்து, வீட்டிற்குள் நுழையும் முன், அப்பா எதிர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த ஒரு மாமியிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். யாராவது தெரிந்தவர்களாக இருக்கும் என நினத்துக் கொண்டான். உள்ளே வந்து கா•பி குடித்துவிட்டு அங்கே இருந்த அன்றைய மாலை தமிழ் தினசரியைப் புரட்டினான். நேரம் போனதே தெரியவில்லை. வீட்டிற்கு உறவினர்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். திடீரென அப்பாவின் ஞாபகம் வர, அப்பா வீட்டினுள் இல்லை என்பது புரிய, வெளியே சென்று பார்த்தான். அதே மாமியுடன் அப்பா பேசிக் கொண்டிருந்தார். மாமி சிரித்த முகத்துடன் கோதுமை நிறத்தில் வளப்பமாக இருந்தாள்.

ஸ்ரீராமுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் அப்பா இன்னொரு பெண்ணுடன் பேசியதை தன் வாழ் நாளில் இதுவரையில் அவன் பார்த்ததேயில்லை. பொதுவாகவே அப்பா யாரிடமும் அதிகம் பேச மாட்டார். இப்ப எதுக்கு இந்த மாமியிடம்…?

அப்பா வருவதற்கு ஏழு மணியாகி விட்டது. அப்பாவை உறவினர்கள் சூழ்ந்து கொண்டு குசலம் விசாரித்தனர். அவருக்கு சற்று தனிமை கிடைத்தவுடன், ஸ்ரீராம் அவரருகில் சென்று மெல்லிய குரலில், “யாருப்பா அந்த மாமி?” என்றான்.

இந்தக் கேள்வியை அப்பா சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு “உனக்கு மூணு வயசுல ஒரு குழந்தை இருக்கு, உன்னிடம் எதற்கு மறைக்கணும்? நான் உங்கம்மாவை திருமணம் செய்வதற்கு முன், நீ பார்த்தியே அந்த மாமி…. அவள விரும்பி கல்யாணம் செய்து கொள்ள ஆசைப் பட்டேன் ஸ்ரீராம். அப்ப நாங்க திம்மராஜபுரம்கிற அக்ரஹாரத்தில் குடியிருந்தோம்.”

“அந்த மாமியும் உங்கள விரும்பினாளாப்பா?”

“ஆமாண்டா, ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சோம்…ஒருத்தர ஒருத்தர் மனசார காதலித்தோம்..”

“அப்ப ஏம்பா கல்யாணம் பண்ணிக்கல?”

“அவ அப்பாகிட்ட நான் நேர்மையா பொண்ணு கேட்டேன்.. அவரு, என்னோட அப்பா ஒரு கோயில் குருக்கள்ங்கறதுனால, அவர் தகுதிக்கு நாங்க சமமில்லைன்னு எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கலடா.. அவர மீறி எங்களால ஒண்ணும் செய்ய முடியல …அந்த மாமியோட அக்காவுக்கு நாளைக்கு சஷ்டியப்த பூர்த்தியாம், அதான் இங்க வந்திருக்கா.
மாமிக்கு கல்யாணமான நாலு வருஷத்துல, அவளோட கணவர் கோர்ட் மூலமா அவள டிவோர்ஸ் பண்ணிட்டு மலேஷியால செட்டில் ஆயிட்டாராம். மாமி இப்ப தனியா சென்னைல இருக்காளாம். மாமியின் ஒரே மகள் சுகுணா தன் கணவர் குழந்தையுடன் நியூஜெர்ஸியிலிருந்து இப்ப இங்க வந்திருக்கா… எதிர் வீட்ட வாடகைக்கு எடுத்திருக்காளாம்…எது பிராப்தமோ அதுதான நடக்கும் ஸ்ரீராம்.”. சட்டையை கழட்டி கதவு மேல் தொங்கவிட்டார்.

அரை மணி நேரம் சென்றிருக்கும். ஸ்ரீராம் தலை வாரிக் கொண்டான், சட்டையை மாட்டிக் கொண்டு, கமலாவை அழைத்துக் கொண்டான்.

எதிர் வீட்டில், சுகுணாவை தேடிப் போய்ப் பார்த்தான். நடுத்தர வயதில் சுகுணா மாடர்னாக இருந்தாள்.

“என் பெயர் ஸ்ரீராம், இவ என் வை•ப் கமலா… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…”

அவர்களை பின்புறத்திலிருந்த துளசி மாடத்திற்கருகில் அழைத்துச் சென்றாள்.

“என் ஹஸ்பண்ட் சுரேஷ¤ம், டாட்டர் மாயாவும் கோவிலுக்கு போயிருக்கா… இப்ப வந்துடுவா, பரவாயில்ல நீங்க பேசலாம்.”

“இன்•பாக்ட் என்னோட அப்பா, உங்க அம்மாகிட்ட சாயங்காலம் ரொம்ப நேரம் பேசிண்டிருந்தார்”

“ஆமா பார்த்தேன். கிட்டதட்ட ரெண்டு மணி நேரம் பேசிண்டிருந்தா. அப்புறமா அம்மா எல்லாத்தயும் எங்கிட்ட சொன்னா” ‘எல்லாத்தையும்’ சொன்னபோது சற்று அழுத்தம் தொனித்தது.

“நீங்க நியூஜெர்ஸியில் இருப்பதாகவும், அம்மா சென்னையில் தனியாக இருப்பதாகவும் அப்பா சொன்னார். மிஸர்ஸ் சுரேஷ், நம்ம ரெண்டு பேரும் நெனச்சா அவாள சேர்த்து வைக்க முடியும். அவா சந்தோஷமா சேர்ந்து வாழ்ந்தா நமக்கும் அது மகிழ்ச்சிதானே?”

“நாம மட்டும் எப்படி ஸ்ரீராம் இத டிசைட் பண்ண முடியும்?.. என் ஹஸ்பெண்ட் சுரேஷ் என்ன சொல்வாரோ? தவிர அம்மா இதுக்கு ஒத்துக்கணும், சொந்தக்காரால்லாம் என்ன நெனப்பா? ”

அப்போது சுரேஷ¤ம், மாயாவும் அவர்களை நோக்கி வந்தார்கள்.

ஸ்ரீராம், சுரேஷிடம், “சார் நான் ஸ்ரீராம், இவ என் வைப் கமலா” கைகளை கூப்பினான்.

“…….”

“சார், நான் நேர விஷயத்துக்கு வரேன்… நாங்க என் அப்பாவின் அறுபது வயதுக்கு ஹோமம் பன்ண இங்க வந்தோம்… எதிர் வீட்ட வாடகைக்கு எடுத்திருக்கோம். வந்த இடத்துல என் அப்பாவும், சுகுணா மேடத்தின் அம்மாவும் தற்செயலா சந்திச்சிருக்கா. ரெண்டு பேரும் அவளோட கல்யாணத்துக்கு முன்னால ஒருத்தர ஒருத்தர் விரும்பியிருக்கா…ஆனா அவா ஆசைப்பட்டது நடக்கல. ரெண்டு பேரும் தன்னுடைய கடமைகளையும், பொறுப்புகளையும் முடித்துவிட்டு, தன் வாழ்க்கைத் துணைகள் இல்லாம இப்ப தனி மரமா இருக்கா..அவாளோட எஞ்சிய வாழ் நாளுக்காவது நாம எல்லாருமா சேர்ந்து அவாள சேர்த்து வெச்சா என்னன்னு எனக்கு தோணித்து, அதான் சுகுணா மேடமை பார்த்து பேசிண்டிருந்தேன்.”

“நீங்க இப்ப சொல்றது அவர்களோட மறுமணம். இது வித்தியாசமா, ரொம்ப நல்லா இருக்கு… உங்க அப்பாவும், இவ அம்மாவும் சம்பந்தப்பட்ட குடும்பம் நாம நாலுபேர்தான்… உங்க அப்பாகிட்ட இத பத்தி பேசிட்டீங்களா, என்ன சொன்னாரு?”

“இல்ல சார், யார்கிட்டயும் இன்னும் பேசல…நீங்கதான் பொ¢யவா, உங்க சம்மதம் முதல்ல வேணும்.”

“ஐ… பாட்டிக்கு புது ஹஸ்பெண்ட்.. எனக்கு புது தாத்தா” குதூகலித்தாள் எட்டு வயது மாயா.

“ச்சீ வாயப் பொத்திண்டு, வெளில போய் விளையாடு போ” சுகுணா விரட்டினாள்.

நால்வரும் அம்மாவைப் போய்ப் பார்த்தனர். சுரேஷ் விஷயத்தை சொன்னார். அம்மா, தன் மாப்பிள்ளையிடமிருந்து இந்தத் தாக்குதலை சற்றும் எதிர் பார்க்கவில்லை. பதில் சொல்லாது அமைதியாக இருந்தாள்.

சுகுணா, “அம்மா நீ தனியா ஓரிக் காக்கா மாதிரி சென்னையில இருப்ப… நாங்க நியூ ஜெர்ஸில உன்னப் பத்தி கவலைப் பட்டுக் கொண்டிருக்கணும்…நீ லவ் பண்ண ஒருத்தர்கிட்டதான உன்ன சேர்த்து வைக்க ஆசப் படறோம்” என்றாள்.

“…….”

சுரேஷ், “மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி… ஸ்ரீராம், மணி இப்ப எட்டு. நீங்க உடனே கிளம்பி உங்க அப்பாகிட்ட போய் சம்மதம் வாங்குங்க, போங்க” சிரித்தார்.

ஸ்ரீராம், சுரேஷின் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு, அப்பாவைப் பார்க்க கமலாவுடன் விரைந்தான்.

கமலாவும், ஸ்ரீராமும் அப்பாவிடம் விஷயத்தை உடைத்தபோது, அவர் சந்தோஷத்தில் திணறிப் போனார்.

ஸ்ரீராமின் கைகளைப் பற்றிக் கொண்டு, “டேய் என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கற.. தோற்றுப் போன என்னோட முதல் காதல முப்பத்தியிரண்டு வருடங்கள் கழித்து ஜெயிக்க வெச்சிட்டியடா…அதுக்கு இப்ப உயிர் கொடுத்திட்டியே”

“உங்க சந்தோஷத்துக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்ப்பா…” கமலா சொன்னாள்.

ஸ்ரீராம் கிளம்பிச் சென்று சுரேஷை தன்னுடன் அழைத்துக் கொண்டு வாத்தியார் வீட்டிற்குச் சென்றான்.

விசிறியால் முதுகைச் சொறிந்து கொண்டே கதவைத் திறந்த வாத்தியார், “வாங்கோ, சாயங்காலம்தான அட்வான்ஸ் கொடுத்துடுட்டுப் போனேள்…என்ன விஷயம்?” என்றார்.

ஸ்ரீராம் சுருக்கமாக அவரிடம் நடந்தவைகளைச் சொல்லி, “ஹோமங்களுக்குப் பதிலா நாளைக்கு ஒரு நல்ல முகூர்த்தம் பாருங்கோ” என்றான்.

“ஓ..பேஷா பண்ணிடலாமே”. பஞ்சாங்கத்தில் இருவரின் நட்சத்திரப் பொருத்தம் பார்த்தார்.

பத்தரை மணிக்கு முகூர்த்தம் என்று முடிவாயிற்று.

“கல்யாணம்னா, எல்லாம் கும்பகோணத்துக்கு போய் வாங்கியாகணும், மணி இப்ப ஒன்பது, பத்து மணிக்கெல்லாம் கடையை மூடிடுவா… டேய் விச்சு கல்யாண லிஸ்ட எடுத்துண்டு இவாளோட உடனே கும்பகோணம் போ” தன் மகனை விரட்டினார்.

கடைக்கு போன் பண்ணி காத்திருக்கச் சொன்னார்.

ஸ்ரீராமும், சுரேஷ¤ம் விச்சுவுடன் காரில் கும்பகோணம் விரைந்தனர்.

மறு நாள்…

கோவிலில் – மாயா, தாத்தா மடியிலும்; ஹரன், பாட்டி மடியிலும் அமர்ந்திருக்க, திருக்கடையூர் அபிராமி அம்பாள் முன்னிலையில் இருவரும் முகத்தில் பொலிவுடன், கண்களில் ஒரு உயிர்ப்புடன் மாலை மாற்றிக் கொண்டனர். சந்தோஷத்துடன் ஒரு புதிய வாழ்க்கைக்கு தயாராகினர்.

Print Friendly, PDF & Email

1 thought on “உயிர்ப்பு

  1. ஐ.. இது ரொம்ப நல்லா இருக்கே. இது மாதிரி முதல் காதல்கள் மீண்டும் உயிர்ப்பு பெற்று கல்யாணத்தில் முடிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் !
    ஜனனி ராம்நாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *