(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த அலுவலகம், ‘கோரப்பட்ட’ நேரம் – அதாவது காலை பதினோரு மணி ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வேலையைத் துவக்கவில்லையானாலும், வேலைக்காக கூடிவிட்ட வேளை…
இவர்களுக்காக, ‘காபி’ வாங்கிக் கொண்டு திரும்பிய வேதமுத்து, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தவுடனேயே, என்னமோ – ஏதோவென்று எக்கி எக்கி ஓடினான். யூனிபார பழுப்பு சட்டைக்கு மேல், பூணுல் போட்டது மாதிரியான வெள்ளை பிளாஸ்டிக் பட்டையின் அடிவாரத்தில் தொங்கிய ‘இரண்டு லிட்டர்’ பிளாஸ்க். கிட்டத்தட்ட அறுந்து விழப்போனபோது, அவன் வாசற்படிக்கு வந்துவிட்டான். அங்கே கண்ட காட்சியைப் பார்த்ததும், ஒரு காலை வாசல் படியில் வைத்து, தூக்கிய மறுகாலை, தலையில் பதிய வைக்காமல், நிலைப்படியினை ஆதாரமாய் பிடித்தபடி அவன், ஒற்றைக் காலில் நின்றபோது –
அந்த அலுவலகத்திற்குள் ஏறிக் கொண்டிருந்த ஒற்றைக் குரல், இப்போது எகிறியது.
‘என்னம்மா… காது குத்தறே… ஒருத்தன் போயிட்டா… ஆபீஸே போயிடுமா என்ன… முதலமைச்சர், கவர்னரை வீட்டுக்கு அனுப்பினாலும் கவர்னர், முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பினாலும் சர்க்கார்னு ஒண்ணு இருக்கத்தானமா செய்யும்? இந்திராகாந்தி செத்துட்டதால கவர்ன்மெண்ட் செத்துட்டா என்ன? அப்படி இருக்கையிலே… இவன் சுண்டக்காய் ஆபீஸரு… பிள்ளைக்காப் பயல்… இவன் போயிட்டால்… எங்க பணமும் போகணும்னு அர்த்தமா… தெரியாமத்தான் கேக்கேன். விளையாடுறதுக்கு ஒனக்கு வேற ஆளு கிடைக்கலையா…’
செம்மண் நிறத்திலான திரைத் துணியால் ‘கோஷா’ போடப்பட்ட கிழக்குப் பக்கத்து ஆபீஸர் அறைக்கும், காலிழந்த நாற்காலிகளையும், ஓட்டை ஒடிசல் மேஜைகளையும் கொண்ட மேற்கு பக்கத்து ‘மூளி’ அறைக்கும் இடைப்பட்ட செவ்வக அறைக் கூடத்தில், கடற்கரைப் பாண்டி, நர்த்தனமே ஆடினார். காலில் சலங்கையில்லாக் குறையைப் போக்குவது போல், இருபக்கமும் போடப்பட்ட மேஜை நாற்காலியை தட்டியபடியே அங்கும் இங்குமாய் ஆடியும் ‘பாடியும்’ அவர் சுழன்றபோது –
அதிகாரி அறைக்கு வெளியே, நான்கு அடி இடைவெளியில், அதன் வாசலுக்கு முன்பக்கமாய் போடப்பட்ட ‘எஸ்’ நாற்காலியில் நுனிக்கு நகர்ந்துவிட்ட அக்கவுண்டண்ட் பாத்திமா, மேஜையில் கையூன்றி, அதன்மேல் முகம் போட்டுக் கிடந்தாள். கடற்கரைப் பாண்டியின் குரல் ஏற ஏற, அவருக்கு பயப்படவில்லை என்பதுமாதிரி முகத்தை நிமிர்த்தினாள். அதேசமயம், உடல் எதிர் விகிதாச்சாரத்தில் கூனிக் குறுகியது. கூடவே, ஜன்னலுக்கு வெளியே, பிற அலுவலக வாசிகளும், ‘பப்ளிக்கும்’ ஜன்னல்களை மொய்த்தார்கள்.
போதாக்குறைக்கு. அவள் ஏதோ செய்யத்தகாத தப்பைச் செய்து விட்டதுபோன்ற பார்வை…
இதனால் பாத்திமா, தனது பச்சைச் சேலையால் தலைக்கு முக்காடு போட்டு, தென்னை ஓலைகளுக்குள் மின்னிய செவ்விளணி போல் முகங்காட்டி தன்னை வேடிக்கைப் பார்த்த கூட்டத்திற்கு ஒரு தன்னிலை விளக்கம்போல் கடற்கரைப் பாண்டியைப் பார்க்காமல், அந்தக் கூட்டத்தை ஓரங்கட்டிப் பார்த்தபடியே பேசினாள்.
‘அவர் டிரான்ஸ்பரில் போனாலும்… இன்னும் வீட்டைக் காலி பண்ணல… எப்படியும் வருவாரு… வந்துதான் ஆகணும்… அநேகமாய் ஒரு வாரத்துல…’
‘ஒரு வாரம்… ஒரு வாரமுன்னு மூணுமாசமா… இப்படித்தான் சப்பக்கட்டு கட்டுறேம்மா… மூணு மாசமா சம்பளம் வாங்காமல் இருந்திருப்பானா… மூணுமாசமா வீட்டுக்கு செலவழிக்காமல் இருந்திருப்பானா… மூணுமாசமா… பெண்டாட்டிகிட்டே…’
‘பெரியவரே…
பாத்திமா, காதுகளைப் பொத்திக்கொண்டு, தலையைக் குனிந்து கொண்டாள். அழுதாளோ இல்லையோ, அழுவதுபோல் முகத்தை அப்படி பண்ணினாள். இவளுக்கு வேண்டியதுதான், என்பதுமாதிரி இதுவரை வேடிக்கைப் பார்த்த சகாக்களில் அருதிப் பெரும்பான்மையினருக்கு அந்த ஆசாமியின் பேச்சு அதிகப்படியாய் தோன்றியது. ‘கிரேட் ஒன்’ கிளார்க் ஜோதியம்மா, பாத்திமாவின் பக்கத்தில் போய் நின்று கொண்டாள். அவள் போனதாலயே, ‘கிரேட் டு’ ஆறுமுகமும், அவளை பின் தொடர்ந்தான். எந்த பாத்திமாவுக்கு பாதுகாவலாய் நிற்க போவதுபோல் போனானோ, அந்த பாத்திமாவை விட்டு விட்டு, பழகுதற்கு ‘இனிய’ ஜோதிக்கு மெய்க்காவலன்போல் மெய்யோடு மெய்பட நின்றான். அந்த ஆசாமியின் ஆட்டத்திற்கு ஜால்ரா போடுவதுபோல் அரசாங்க கவர்களில் சாப்பா போட்டுக் கொண்டிருந்த ‘டெப்திரி’ சாமிநாதன், அங்கிருந்தபடியே, கடற்கரைப் பாண்டியன் முதுகைப் பார்த்து முறைத்தான். ‘பராஸ்’ (மேஜை நாற்காலி களை துடைப்பவர்) சண்முகம், கையில் பிடித்த ஈரத் துணியை பிழிந்தபடியே, தகராறுக்கு உரிய இடத்தை நோக்கி பாய்ந்தான். வெளியே கூடிய கூட்டத்தை துரத்திவிட்டு உள்ளே வந்த பியூன் வேதமுத்து. அந்த ஆசாமியை கையைப் பிடித்து வெளியே கொண்டு விடலாமா என்பதுபோல் யோசித்தான். இதற்குள், அந்த ஆசாமியான கடற்கரைப் பாண்டி சவாலிட்டார்.
‘நீ அழுதாலும் சரி… இந்த பயலுக அடிச்சாலும் சரி… போவதாய் இருந்தால், மூவாயிரத்து முந்நூறு ரூபாயோடத்தான் போவேன். இல்லாட்டா, இங்கிருந்து இம்மியும் நகரமாட்டேன்… ஒங்களால ஆனதை நீங்க பாருங்க… என்னால ஆனதை நான் பாக்கேன்…’
அந்த அலுவலகவாசிகள், ஆடிப்போனார்கள். ஏற்கனவே அடிபட்டதுபோலவே அரற்றும் கடற்கரைப் பாண்டியை விட்டு, சிறிது விலகி நின்றார்கள். கிரேட் டு ஆறுமுகம், கிரேட் டு ஜோதியை தோளைப் பிடித்து இருக்கையை நோக்கி, மெல்லத் தள்ளிவிட்டு, அந்த சாக்கில் அவனும் நடந்தான். ஆக மொத்தத்தில், எல்லோரும் மூச்சைக்கூட மெல்ல விட்டார்கள். ஆனால், வேதமுத்துதான், பாத்திமாவிற்கு கேடயம்போல், நின்றுகொண்டு ‘யோவ்’ என்று ஊளையிட்டான். இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிட்டது. இதனாலேயே, கடற்கரைப் பாண்டி ஒரு காரியம் செய்தார்.
கடற்கரைப் பாண்டி, திடீரென்று. ஆபீஸர் அறை முக்காட்டுத் துணியை சுருட்டி நிலைப்படிக்கு மேலே உள்ள பக்கவாட்டு கம்பியில் சொருகிவிட்டு, அந்த அறைக்குள் ஓடினார். அங்கே உள்ள சன்மைகா போட்ட வளைவு மேஜையை ஒரு பக்கமாய் இழுத்துப்போட்டுவிட்டு, அதற்குப் பின்னால், புத்தம் புதிதாய் கிடந்த மெத்தை நாற்காலியை இழுத்தபோது, சக்கரச் செருப்புகள் போட்ட அதன் கால்கள், அவர் பக்கமாய் நகர்ந்தன. நீலக் கலர் நாற்காலி. பின் வளைவாய் வளைந்து, இரு பக்கமும் யானைத்தந்தம் போல் வழுவழுப்பான கைப்பிரேம்கள் கொண்ட கலைவடிவு. ஒருவர் படுக்க இருவர் உட்காரும் அளவிற்கான சுகமான இருக்கை. உட்கார்ந்திருப்பவர் பின்னால் சாயச் சாய, அதற்கு ஏற்ப அது வளைந்து கொடுக்கும். முன்னால் நகர நகர, தன்னைத் தானே முன்பக்கமாய் மாற்றிக்கொள்ளும். அப்படிப்பட்ட முதுகு மெத்தை.
இப்படிப்பட்ட இந்த நாற்காலியை, வாசல் முனைக்கு கொண்டு வந்துவிட்ட கடற்கரைப்பாண்டி, அதன் உச்சியை, ஆபீஸரின் தலையாய் அனுமானித்து, வலது கையால் அதை திருகியபடியே, இடது கையை ஆட்டி ஆட்டிப் பேசினார்.
‘இது எவன் அப்பன் வீட்டுச் சொத்து? பணம் கொடுக்க வக்கில்ல… வகையில்ல. இந்த லட்சணத்துல… நீ வேற, இதுல கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தே… இதோ இந்த ரூமுக்குள்ள, மல்லலாக்கப்படுத்து உட்கார நல்லா இருக்கே பெரியவரேன்’னு சொன்ன வாயி… இப்ப ஏமா பேச மாட்டேங்குது.’
பாத்திமாவுக்கு வெட்கமாகி விட்டது. கண்களைக் குறும்புத்தனமாய் படரவிட்ட வெட்கமல்ல. நிர்வாணப் பட்டது மாதிரியான அவமானகரமான வெட்கம். அலுவலக சகாக்களைப் பார்க்காததுபோல் பார்த்தாள். அவர்கள் தன்னையே தரம் தாழ்த்திப் பார்ப்பதுபோல் இருந்தது.
பொதுவாக, ஒரு அதிகாரியின் நாற்காலியில், அலுவலர்கள் உட்காருவது இல்லை. கூடாது. அப்படி உட்கார்ந்தால் அது இன்டிஸ்ஸிப்ளின். ஆனால், இந்த பாத்திமாவோ அலுவலகத்தில் எவரும் இல்லாத சமயங்களில், மூட்டைப்பூச்சிகள் வாழும் தனது நாற்காலிக்கு காலால் ஒரு உதை கொடுத்துவிட்டு, அதோ அந்த அறைக்குள் போய் இந்த அரியாசன நாற்காலியில் உட்காருவாள். முதுகைப் பின்னால் வளைத்து, கால்களை முன்னால் நீட்டி அந்த நாற்காலியையே கட்டிலாக்கி, மெய்மறந்து கிடப்பாள். பிறகு நிமிர்ந்து உட்கார்ந்து, தானே ஆபீஸரானதுபோல் கற்பனை செய்துகொண்டு. எதிர்ச் சுவரில் பொருத்திய கண்ணாடியை எழுந்து நின்று பார்ப்பாள். பிறகு மீண்டும் கம்பீரமாய் உட்கார்ந்து, மேஜையில் உள்ள பென் செட்டில் பச்சைப் பேனாவை எடுத்து, ‘பேடில்’ கையெழுத்துப் போடுவாள். பச்சையாய் இனிஷியலிட்டு ரசிப்பாள். (பச்சை இங்க் பேனாவை ஒரு ஆபீஸர் மட்டுமே பயன்படுத்தலாம். இப்படி பல நாள் நடக்கும் சங்கதியை இந்தக் கிழம், வழக்கமாய் பாக்கி கேட்க வந்த ஒரு நாள் பார்த்துவிட்டது…
என்ன செய்வது என்று புரியாமல் அவள் தடுமாறிபோது கடற்கரைப் பாண்டிக்கு அதுவே வெல்லக்கட்டியாகியது. வீறிட்டுக் கத்தினார்.
‘ஏம்மா நீயும்… அவன் கூட ஜீப்பில ஏறி வந்தியே… அவனுக்கு இந்த நாற்காலிய செலக்ட் செய்து கொடுத்தது நீதானே. அப்போ ஒனக்கும் காசு கொடுக்கிறதுல ஒரு பொறுப்பு இருக்குதுல்ல? ஏன் பேசாமல் அப்படி பாக்கிற தெரியாமத்தான் கேட்கேன்… எதுக்காக நாம் வேட்டி… சேலை உடுத்துறோம்.”
அலுவலக சகாக்களுக்கு பாத்திமா, ஜீப்பில் ஆபீஸ்ரோடு போன விபரம் மட்டும்தான் கேட்டது. அந்த விவரத்திலேயே அவர்கள் நின்று நிதானித்து சுவைஞர்களாகி விட்டதால், அவர் சொன்ன ‘வேட்டி சேலை’ விவகாரம் கேட்கவில்லை. ‘ஜீப்பில இவள் ஆபீஸரோட முன்னால உட்கார்ந்திருப்பாளா, இல்ல பின்னால இருந்திருப்பாளா..’ என்ற ஆராய்ச்சியில் அவர்கள் மூழ்கியபோது, வேதமுத்து ஒருவன் மட்டுமே சுயமாய் நின்றான். நிலைமை ‘கட்டுக்கு’ மீறிப் போவதை புரிந்து கொண்டு, கடற்கரைப் பாண்டியை அதட்டினான்.
‘யோவ்… இதுக்கு மேல… ஒனக்கு மரியாதி இல்ல… மொதல்ல எதைக் கேட்டாலும், முறையாய்க் கேட்க தெரிஞ்சிக்கணும்?
வேதமுத்து, கடற்கரைப் பாண்டியை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக, நெருங்கிப் போனான். ஆனால், அவரோ, அவனைப் பார்ப்பதற்கு முகத்தைகூட நிமிர்த்தவில்லை. எவனோ ஒருத்தன் எதிரில் நிற்கிறான் என்ற அனுமானத்துடன் கத்தினார்.
‘என்னய்யா… மொறையக் கண்ட.. பொல்லாத மொறைய மொதல்ல என்ன விஷயம்னு கேளு… அதுதான் முறை… மூணு மாசத்துக்கு முன்னால… இங்கே ஒருத்தன் இருந்தானே… சூட்டும் கோட்டுமாய்… சொட்டத் தலையன்… ஆபீஸராம் ஆபீஸ்ரு… இவனுவல்லாம் ஆபீஸரானதால்தான் இப்போ இந்தியாவே நாறுது, அவனும், இந்த பொண்ணும் எங்க பர்னிச்சர் கடைக்கு ஜீப்புல வந்தாங்க… இந்த நாற்காலி வேணுமுன்னாங்க. இதை மூவாயிரத்தி முன்னுறு ரூபாய்க்கு பேசி முடித்து அங்கேயே அசோக முத்திரத் தாளுல ஆர்டர் கொடுத்தாங்க ‘கிரிடிட் பில்’ தந்திங்கன்னா… அதை ஹெட் ஆபீசுக்கு அனுப்பி அங்கே இருந்து செக் வந்து… அதை மாத்துறத்துக்கு நாளாகும்… அதனால கேஷ் பில்லா கொடுங்க… ஒரு வாரத்துல பணம் வந்துடுமுன்னு சொன்னாங்க… நானும்… அந்த ஜீப்பையும்… அதுல வந்த மூஞ்சிகளையும் பார்த்து நம்பிட்டேன். மூணு மாசமாயிட்டது… இன்னும் பணம் வந்தபாடில்ல. வரும் என்கிறதுக்கு அத்தாட்சியும் இல்ல… சீவி சிங்காரிக்க தெரியுது… சொன்ன வாக்கை காப்பாற்ற தெரியல்ல… தூ….”
எல்லோரும் சும்மா நின்றபோது, கடற்கரைப் பாண்டியிடமும் ஒரு நியாயம் இரப்பதை புரிந்துகொண்ட வேதமுத்து, இப்போது இதமாகப் பேசினான்.
‘பெரியவரே உங்களுக்கு மனசு சரியில்ல. இன்னிக்கு போயிட்டு நாளைக்கு வாங்க… பேசிக்கலாம்…’
ஒனக்கு ராமபிரான்னு நெனப்போ… என் நிலம ஒனக்கு தெரியுமாய்யா? ஒங்கள மாதிரி நான் சர்க்கார் மாப்பிள்ளை இல்லய்யா…
காலையில எட்டு மணிக்கு கடைக்குப் போய்… கூட்டிப் பெருக்கி, தண்ணி தெளிச்சு, ஒவ்வொரு மேஜையாய் நகர்த்தி… திங்கள் கிழமையிலிருந்து ஞாயிற்றுகிழமை மத்தியானம் வரைக்கும் உழச்சும் இருபது வருஷத்துல தொளாயிர ரூபாய் சம்பளத்துல கஷ்டப்படுற தொழிலாளிய்யா… முதலாளி இல்லாத சமயத்துல கேஷ் பில் போட்டு இந்த நாற்காலிய கொடுத்தேன். இப்போ, எங்க முதலாளி நானும் கூட்டுக் களவாணி என்கிறான். பணத்தை வட்டியோட கட்டாட்டால் போலீஸ்ல ஒப்படைப்பாராம். சர்க்கார் முத்திரையோட ஒரு ஏழைய ஏமாத்துறது நியாயமாய்யா..? பேச வந்துட்டான் பேச. நான் லாக்கப்புக்கு போனா, எவன்யா ஜாமீன் எடுப்பான்? என் குடும்பம் நடுத்தெருவுல நிக்கப் போவுது… வேணுமுன்னா வந்து வேடிக்க பாருய்யா…’
இப்போது கடற்கரைப் பாண்டியின் ஓங்காரக் குரல், உடைந்து ஓலமிட்டது. எல்லோரும், அவரை ஒருமித்தும், ஒரே முனைப்பாகவும் பார்த்தார்கள். உயரத்துக்கு ஏற்ற உடம்பில்லாதவர்… பைசா நகரம்போல் ஒடிந்து விழப் போவது மாதிரியான முன்வளைவு. வெடு வெடுப்பான பார்வை… முண்டா பனியனைக்காட்டும் காட்டா மோட்டா கிழிசல் சட்டை. நார் நாராய் போன நாலுமுழ வேட்டி…
தலையில் கைவைத்தபடியே. தரையில் உட்கார்ந்த கடற்கரைப் பாண்டியை பார்க்க சகிக்காத வேதமுத்து, பாத்திமாவிடம் கிசுகிசுத்தான்.
மேடம்… ஓங்க பணத்துல இருந்து கொடுத்துடுங்க. அப்புறமாய் ஆபீஸர்கிட்ட வாங்கிக்கலாம்.’
‘ஒன்கிட்ட சொல்லக் கூடாது… ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்துல சொல்றேன் முத்து… ஆபீஸ் சம்பளத்தை ‘அவர்’கிட்ட அப்படியே கொடுத்திடணும். அப்புறம் தினமும் பஸ் சார்ஜ்க்கும், ஒரு கப் காபி குடிக்கிறதுக்கும் அவர்கிட்ட கையேந்தி பிச்சை வாங்கணும்… இதுதான் என்னோட பிழப்பு…
பாத்திமா ஏதோ பணம் கொடுப்பாள் என்பத மாதிரி வேதமுத்துவின் கிசுகிசுப்பின் மூலம் நம்பிக்கைப் பெற்ற கடற்கரைப் பாண்டி, அவள் கையை விரித்து பதிலுக்கு கிசுகிசுப்பதில், ஏமாற்றமடைந்து ஒப்பாரி போடுவதுபோல் பேசினார்.
ஏமா… உனக்கும் புள்ளக்குட்டி இருக்கு… என் வயிற எரியவிடாதே
பாத்திமாவுக்கு திடீரென்று, இன்னும் மஞ்சள் காமாலை சுகமாகாத தனது மூன்று வயது மகளின் நினைவு மனதை உடனடியாய் அரித்தது. இந்த ஆசாமியின் சாபத்தால், மரணம் மகளை பறித்துவிடக் கூடாது என்கிற பயம். அப்படி பயப்பட பயப்பட அதுவே கோபமாய் குணமாறியது. ஆபீஸ்ரைக் காட்டிக் கொடுத்தால், அவன் தனது அந்தரங்க குறிப்பேட்டில் வில்லங்கம் செய்து, அதனால் நெருங்கி வரும் பதவி உயர்வு ஓடிவிடக் கூடாதே என்று இதுவரை பல்லைக் கடித்து பொறுத்தவள். இப்போது வட்டியும் முதலுமாய் முழங்கினாள். ஆபீஸ் ரகசியத்தை எல்லோருக்கும் கேட்கும்படி கத்தலாகச் சொன்னாள்.
‘நாள்காலி பணம் மூணு மாசத்துக்கு முன்னாடியே வந்துட்டுது… இங்க இருந்த ஆபீஸ்ருதான் முழுங்கிட்டான்… கவலப்படாதிங்க பெரியவரே… இப்பவே மெட்ராசுல இருக்கிற எங்க டெப்டி டைரக்டருக்கிட்ட டெலிபோன்ல பேசி, நடந்ததைச் சொல்றேன்… உங்க மொதலாளிக்கும் டெலிபோன்ல விஷயத்தை சொல்றேன்…’
‘சாகப் போறவனுக்கு பாலு கேட்டால், பசுமாடு குட்டி போடட்டும்னு சொல்ற கதை மாதிரி இருக்கு…’
பாத்திமாவின் முகம் இறுகியது. கடற்கரைப் பாண்டி சொன்னதை காதுகள் உள்வாங்கவில்லை. மஞ்சள் காமாலை மகள் டெலிபோன் குமிழை எடுத்துக்கொடுப்பது போன்ற பிரமை, சுழற்றினாள். ஏழு அதிசயங்கள் எட்டானதுபோல் சென்னைக்கு லைனும் கிடைத்து விட்டது. அதுவே ஒன்பது ஆனதுபோல் ‘ஊர் சுற்றி’ டெப்டி டைரக்டரும் உடனே கிடைத்து விட்டார். அவர், தன் கண் முன்னால் நிற்பது போல் அனுமானித்து எல்லா விவரத்தையும் விளக்கமாய்ச் சொன்னாள். இடையிடையே பேசாமல் கேட்டாள். பிறகு டெலிபோனை வைத்துவிட்டு பொதுப்படையாக ஒரு விவரம் சொன்னாள்.
‘நம்ம டெப்டி டைரக்டருக்கு மூளையே இல்லை. நான் ஆப்ட்ரால் ஒரு அக்கவுண்டன்ட்… ஒரு கிளாஸ் ஒன் அதிகாரியைப் பற்றி எப்படி கம்ப்ளைன்ட் செய்திருக்க முடியும்… எனக்கும் ‘மெமோ’ கொடுக்கப் போறாராம்… கேட்டால், ‘தலைக்கு வந்தது பூவோட போச்சுதுன்னு நினைச்சுக்கோனு சிரிக்கிறார்…’
பாத்திமா அழுகையும், சிரிப்புமாக சொல்லி முடிக்குமுன்பே, இப்போது சென்னையிலிருந்தே டெலிபோன் வந்தது. அதை எடுத்து வார்த்தைக்கு வார்த்தை, எஸ் சார் போட்ட பாத்திமா, டெலிபோனை வைத்ததும் கடற்கரைப் பாண்டியை ஆற்றுப்படுத்தினாள்.
‘கவலைப்படாதிங்க பெரியவரே… நடந்த விஷயத்தை விளக்கி… நீங்களும் ஒரு புகார் கொடுங்க… ஒரு வாரத்துல செட்டிலாகிவிடும்.
‘எம்மா… ஒன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன்… அஞ்சு நாள் இல்ல பத்து நாளுன்னு சொல்லு ஒரு வாரமுன்னு புளிச்சிப்போன வார்த்தையை மட்டும் சொல்லாதே.’
‘கடைசியில புலி வந்துட்டுப் பெரியவரே… ஒங்கப் பணத்தை வாயில போட்டவரு சஸ்பெண்ட் ஆகப்போறாரு… வேணுமுன்னா பாருங்க.”
‘கடைப் பணம் வந்தால் போதும்மா. அவன் கெட்டுப் எனக்கு ஒண்னும் ஆக வேண்டியதில்ல…’
‘சரி சரி இந்தப் பக்கமா வாங்க… இந்தாங்க பேப்பர்… இந்தாங்க பேனா… எழுதுங்க… ஏன் தயங்கறீங்க… எழுதிக் கொடுக்காட்டால் பணம் வராது. நான் சொல்ற மாதிரி எழுதுங்க…’
பாத்திமாவுக்கு சந்தோஷம்தான். இந்த பழைய ஆபீஸர் சஸ்பெண்ட் ஆகி, விசாரணை முடிய ஒரு வருஷம் ஆகலாம். அதுவரைக்கும், இவளே இன்சார்ஜ் ஆகி, அவள் ஆசைப்பட்ட அந்த நாற்காலியில் பகிரங்கமாகவே உட்காரலாம். அதற்குள் புரமோஷன் வந்துவிடும். இங்கேயே வரலாம். வருதோ வரலையோ மகளுக்கு இருக்குற மஞ்சக்காமாலை போயிடும்…
வேதமுத்துக்கு என்னவோ போலிருந்தது. இன்னும் பிளாஸ்கை திறக்கவில்லை. அதைத் திறக்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை. உள்ளே இருந்த காபியைப்போல், அவன் மனமும் மண்டிவிட்டது. பழைய அதிகாரியான பால் வண்ணன், அடுத்த திங்கட்கிழமை அலுவலகம் வந்து எல்லோருமாய் எனக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுத்துட்டிங்களே. ஒங்களுக்கு சந்தோஷம்தானே! ன்னு அழத்தான் போறான். அதை எப்படி தாங்கிக்க முடியும்…. பாவம் புள்ளக்குட்டிக்காரன்….’
வேதமுத்து, எழுதிக் கொண்டிருக்கும் கடற்கரைப் பாண்டிக்கும், சொல்லிக் கொண்டிருக்கும் பாத்திமாவுக்கும் இடையே போகப் போனான். பிறகு, முன் வைத்த காலை பின் வைத்தான். அங்கே எழுதப்படுவதை கேட்கவோ அல்லது படிக்கவோ மனங்கேட்காமல் வெளியே வந்தான். உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடித்துத்தான் ஆகவேண்டும் என்ற பழமொழியை நினைத்துப் பார்த்தான். ஆனாலும் மனம், கடல் உப்பாய் அரித்தது. அலுவலகத்தில் இந்த பாத்திமா உட்பட எல்லா ஊழியர்களும் இந்த வேதமுத்துவை ‘வா போ’ என்று பேசும்போது, அதிகாரி பால்வண்ணன்தான் ‘நீங்க’ என்று அழைப்பான். ஆசாமி ஷோக் பேர்வழிதான். ஆபீஸிலேயே ‘குவார்ட்டர்’ போடுகிற வன்தான். ஒருதடவை இவனைக்கூட வாங்கிவரச் சொன்னவன்தான். ஆனால், இவன் முறைத்த முறைப்பில், அவன், அன்று போடவில்லை. இவனையும் அதற்கு பிறகு அப்படிக் கேட்டதில்லை. மரியாதை கொடுப்பதில் பின்வாங்கவும் இல்லை. அதோடு, அதிகாரியின் மனைவி அசல் லட்சுமி. லட்சுமி பக்தர்களை எப்படி நடத்துவாளோ ஆனால், இந்த மானுட லட்சுமி, ஓரிரு தடவை, இந்த பியூன் வேதமுத்துவை டைனிங் டேபிளில், தன் குழந்தைகளோடு சரி நிகர் சமானமாய் வைத்து சாப்பாடு போட்டவள். இவன், தட்டைக் கழுவ எழுந்தபோது அதை தடுத்தாட் கொண்டவள். அப்படிப்பட்ட அந்த உத்தமியை கணவன் செய்த காரியத்திற்காக வேதனைபட வைப்பதா… கூனிக் குறுகி வீட்டுக்குள்ளேயே முடங்க வைப்பதா… ஒருவேளை அந்த அம்மாவிடமே விஷயத்தை சொல்லலாமா… வேண்டாம். ஒரு பெண்ணுக்கு நிம்மதியே-அவள் புருஷனைப் பற்றி தெரியாத வரைக்கும் தான்.
வேதமுத்து. ஒரு முடிவோடு அலுவலகத்திற்கு வெளியே வந்தான். பால்வண்ணனிடம் விஷயத்தை சொல்லிவிட்டால் போதும் சமாளித்து விடுவான். அசல் இந்திரஜித்.
வேதமுத்து, வேகவேகமாய் நடந்து, கண்ணாடிக் குடில் மாதிரி இருந்த ஒரு எஸ்.டி.டி. பூத்துக்கு போனான். நல்ல வேளையாக பக்ரீத் கொண்டாடப் போவதாக அவன் போட்ட (வேதமுத்து இந்துவாக்கும்) பெஸ்டிவல் அட்வான்ஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னுறு ரூபாய் இன்றைக்குத்தான் கிடைத்தது. டெலிபோன் கட்டணம் நூறு ரூபாய்க்கு மேல் போகாது. ஆனாலும், இந்தப் பணத்தை வைத்து பசங்களுக்கு ஸ்கூல் யூனிபார்ம் வாங்கலாம் என்று நினைத்திருந்தான். பரவாயில்லை. தலைமை ஆசிரியரிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு வாரத்தை தள்ளிவிடலாம். பால்வண்ணனிடமே டெலிபோன் கட்டணத்தை வாங்கலாம். சீ… சீ… அது தப்பு உதவி செய்தால், அதை உருப்படியாய் செய்யனும், அவுரு பிழச்சிக்கிறதுக்கு ஒரு நூறு ரூபாய் செலவழிக்கிறதுல தப்பில்ல…
நல்லவேளையோ – கெட்ட வேளையோ, லைன் கிடைத்துவிட்டது. பால்வண்ணனே போனை எடுத்தான். எடுத்த எடுப்பிலேயே மறுமுனைக்காரன் ‘உஷாவா’ என்றபோது, இவன் ‘வீட்டிலிருக்கும் லட்சுமிக்கு துரோகம் செய்யலாமா சார்’ என்று கூட உபதேசிக்கப் போனான். பிறகு டெலிபோன் கட்டணத்தைக் கருதியும், அப்போதையை சூழலை நினைத்தும் அதே சமயம் அந்த உஷா யாராக இருப்பாள் என்ற அடி மன உந்தலோடும், அவன் வெளிமனம், நடந்த விஷயங்களை, அவன் வாயில் மீன் துள்ளலைப் போல், வார்த்தைகளாகப் போட்டது. இவன் விஷயத்தை திருக்குறளாய் சொன்னாலும், எதிர்முனை பால்வண்ணன் பெரிய புராணமாய் விளக்கம் கேட்டான். இவனோ, பில் போட்டு காட்டப்போகிற அந்த சின்ன பிசாசையே பயந்து பார்த்து, விவரம் சொன்னான். பிறகு உஷாவும், கட்டண நினைப்பும் அற்றுப்போக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டான். ‘அழாதிங்க… அழாதிங்க… சார்’ என்று அழுதழுது சொன்னான். நீண்ட நேர தயக்கத்திற்குப் பின், ‘சரி சார்… நானாச்சு… நானாச்சு…’ என்று மறுமுறைக்காரனுக்கு கேட்கும்படி மார்த்ட்டிக்கூட உறுதியளித்தான்.
எப்படியோ, அவன் வைத்திருந்த பணத்தில் பஸ் சார்ஜுக்கு காசு இருந்தது. அவ்வளவு பணம் செலவானது கூட பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் பால்வண்ணன் சொன்னதை எப்படி நிறைவேற்ற முடியும்… ஜி.பி.எப். பணம், ஆயிரத்து ஐநூறு இருக்கத்தான் செய்யுது. ஆனால், அது இன்றோ… நாளைக்கோ என்று இருக்கும் கர்ப்பிணி மனைவிக்காக உள்ள பணம். ஏற்கனவே, அவளுக்கு சிசேரியன் ஆப்பரேஷன். டாக்டர்கள், ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். மீதிப்பணம், வேறு திரட்ட வேண்டும். ஆனாலும் பால்வண்ணன் அடுத்த திங்கட்கிழமை வந்து அவ்வளவு பணத்தையும் கொடுக்கிறதா உறுதியளித்திருக்கார். மார்த்தட்டி சொல்லி விட்டு, முதுகை காட்டுவது தப்பிலும் தப்பு… பெரிய தப்பு.
வேதமுத்து, வீட்டுக்கு போனதும், மனைவியை குசலம் விசாரித்தான். இனிமேல் மத்தியானத்திற்கும் அவள் கைப்பட சமைக்கும் சாப்பாட்டுப் பொட்டலத்தை எடுத்துப் போவதாக வாக்களித்தான். அடுத்தாண்டு ‘எல்.டி.சி.’ எனப்படும் அரசாங்க பணத்துடன், அவளையும் பிறந்த பேய்களையும், பிறக்கப்போகும் தேவதையையும் கூட்டிக்கொண்டு, பத்ரிநாத், கேதார்நாத், தாஜ்மஹால் போன்ற இடங்களை காட்டப்போவதாக வாக்களித்தான்.
வேதமுத்துவின் மனைவிக்கு ஒரே கொண்டாட்டம். மகிழ்ச்சியை மனதிற்குள் வைக்காமல் அதை அவன் கழுத்தில் கைபோட்டுக் காட்டினாள். அவன் அந்த கைகளை நீவிவிட்டான். அவற்றில் கிடந்த இரண்டு தங்க வளையல்களையும் உருட்டி விட்டான். பிறகு தர்மம் தலைகாக்கும் என்பதற்கு ஒரு கதையைச் சொன்னான். அப்புறம் விவரம் சொன்னான். அவன் எதிர்பார்த்தது போல், அவள் குமுறவில்லை. கொந்தளிக்கவில்லை. சிறிது யோசிக்கத்தான் செய்தாள். பிறகு வளையல்களை அவனிடம் கழற்றி கொடுத்தாள். இவன், வெள்ளிக்கிழமை ஆயிற்றே என்று இழுத்தபோது, அவளோ நாளும் கிழமையும் பால்வண்ணணுக்கு கிடையாது என்றாள். அப்போதே, அடகு வைத்து, அந்த வேகத்திலேயே பணத்தைக் கட்டச் சொன்னாள். அதோடு அவனுக்குத் தோன்றாத ஒன்றையும் சொன்னாள். பழைய ஆபீஸர் டெலிபோனில் (பக்கத்து வீட்டு டெலிபோன்) வருவது வரைக்கும் காத்திருக்க வேண்டாமாம். இன்றைக்கே பணம் கட்டிய விவரத்தைச் சொல்லி, அதற்காக ரசீதையும் கூரியரோ, கேரியரோ அதுல வச்சு அனுப்பிடனுமாம். இவனாவது பழைய ஆபீஸருக்கு விசுவாசமாய் இருக்கனுமாம்.
வேதமுத்து, மனைவியை கையெடுத்து கும்பிட்டபடியே எழுந்தான்…
மறுநாள், இரண்டாம் சனி… அப்புறம் ஞாயிறு… திங்கட் கிழமை அரசாங்கமே ‘பந்தாடிய’ விடுமுறை.
செல்வாய் கிழமை, மனைவி நீட்டிய சாப்பாட்டுப் பொட்டலத்தை (பராஸ் சண்முகத்திடம் கொடுத்திடணும்… ருசி தெரியாமலேயே சாப்பிடுறவன்) பயபக்தியாய் வாங்கி, தூக்குப் பையில் போட்டுக்கொண்டு, பஸ் நிலையம் நோக்கி நடந்தான். வெயில் சுட்ட சூட்டில் அடுத்த மாதமாவது தவணை முறையில் ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். கால் சுட்டாலும், மனம் குளிர்ந்தது. ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிவிட்ட தலை நிமிர்வு. மனம் பூரணப்பட்ட பெருமிதம்.
வேதமுத்து, அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக பழைய ஆபீஸருக்கு தான் செய்த பரோபகாரத்தை எல்லோரிடமும் சொல்லப்போனான். பிறகு காலையிலேயே சண்முகத்திடம் சொன்னதை மீண்டும் சொல்வது தற்பெருமையாகி விடும் என்றும் எண்ணினான். இந்த சண்முகம் நல்ல செய்திகளைச் சொல்ல தவறியதே இல்லை. இவனே சொல்லியிருப்பான் என்று நினைத்து, குவிந்த உதடுகளை உள்பாய்ச்சிய படியே அவனைப் பார்த்து அர்த்தம் அர்த்தமாய் சிரித்தான். இந்த சண்முகம் இவனுக்கு பெஸ்டிவல் அட்வான்ஸ் வந்திருப்பது தெரிந்து, காலையிலேயே இவன் வீட்டுக்கு கடன்படை எடுத்தான். அடுத்த வாரம், ஏதோ ஒரு கிறிஸ்த்துவ பண்டிகையை கொண்டாடுவதற்கு தான் கேட்டு இருக்கும் அரசாங்க அட்வான்ஸ் வந்துவிடும் என்றும், அதுவரைக்கும் நூறே நூறு ரூபாய் தரும்படியும் கேட்டான். வேதமுத்து பதில் சொல்வதற்கு முன்பே அவன் மனைவி தேநீர் டம்ளரை நீட்டியபடியே விளக்கினாள். பணம் போன காரணத்தையும், கணவனின் தயாள குணத்தையும் விளக்கும் வகையில் பெருமை பிடிபடாமல் பேசினாள். இறுதியில் சண்முகத்திற்கு கைவிரிக்க வேண்டியிருக்கிறதே என்று குரலை வருத்தத்தோடு முடித்தாள். அப்போது இந்த சண்முகம் வருத்தப்படாமல் ‘வாழ்க’ போட்டான். ஊரான் கடனை அடைத்தாள், தன் கடன் தானாக அடைபடும் என்று தமர்ஷ்கூட செய்தான். ஆனால் அதே டெப்திரி சண்முகம், இப்போது ஏன் இப்படி கத்துறான்?.
‘பாவிப் பயலே!… நடுத்தெருவுக்கு வந்துட்டியடா உனக்கு மூளை எங்கடா போச்சு.’
வேதமுத்து திக்கித் திணறியபோது, பாத்திமாவும் கத்தினாள்.
‘ஒன்னை யாருய்யா… அவனுக்குப் போய் பணம் கட்டச் சொன்னது…’
வேதமுத்து திருப்பிக் கத்தினான்.
‘ஒங்கள… மாதிரி என் மனசு கல் இல்ல…’
‘அய்யா புண்ணியவானே… அதுக்கு ஒரு பரிசும் வந்திருக்குது தெரியுமா.. மூன்று மாதத்துக்கு முன்னால, டிரான்ஸ்பர் வந்த அவசரத்துல, உன்கிட்டயே மூவாயிரத்து முன்னூறு ரூபாயைக் கொடுத்து நாற்காலி கடனை அடைக்கும்படி பால்வண்ணன் சொன்னானாம். நீதான் பணத்தைக் கட்டாமல் கையாடல் செய்துட்டியாம். இதுக்கு நீ அனுப்புன ரசீதையும் ஆதாரமாக் காட்டி உன் மேலேயே ஒரு புகார் கொடுத்திருக்கான், நம்ம பழைய ஆபீஸர்.’
‘துரோகிப் பயல்… நான்தான் அவனுக்கு டெலிபோன்ல விஷயத்தை சொன்னேன்…’
‘நீ ஆயிரம் சொல்லுவே… அதை மேலிடம் நம்பணும்’ என்கிறது கட்டாயமா… அப்படியே நம்பினாலும்… நீ ஆபீஸ் ரகசியத்தை வெளியிட்டதுக்காக மேற்கொண்டும், ஒன்மேல் ஆக்ஷன் எடுக்கலாம் இல்லையா… பணத்தை கடன் கொடுக்கலாம்… ஆனால் மூளய கடன் கொடுக்கலாமா…’
‘எதுக்காகம்மா இப்படி சுத்தி வளைச்சு பேசுறீங்க..’
என்னால எப்படி சொல்னும்னே தெரியல… துஷ்டனுக்கு உதவுற ஒரு நல்லவனையும் உலகம் துஷ்டனாத்தான் நினைக்கும். சண்முகம் எனக்கு சொல்றதுக்கு வாய் வரமாட்டேங்குது. நீயாவது சொல்லு…
பாத்திமாவின், கண் கலங்கலுக்குக் கட்டுப்பட்டதுபோல், ‘டெப்திரி’ சண்முகம், பியூன் வேதமுத்துவைக் கட்டிப் பிடித்தபடியே கண்ணிர் மல்க சொன்னான்.
‘ஒன்னை சஸ்பென்ட் செய்திருக்காங்கடா… மேலதிகாரியிடம் நம்பிக்கை மோசம் செய்து… அரசாங்க பணத்தை தவறாப் பயன்படுத்தி, டிபார்ட்மென்டுக்கும்… கெட்ட பேர் வாங்கிக் கொடுத்ததுக்காக, ஒன்ன சஸ்பென்ட் செய்திருக்காங்கடா…’
டெப்திரி சண்முகம், கேவிக் கேவி அழுதான். வேதமுத்துதான், அப்படியே அழாமல் நின்றான்.
– சுபமங்களா, செப்டம்பர் 1994
– சிக்கிமுக்கிக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.