இறுதி மூச்சு

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 1,538 
 
 

வேலப்பன் கையிலிருந்த சில்லறையை எண்ணிப் பார்த்துக் கொண்டான். சரியாக ஒரு ரூபாய் நாற்பத் தைந்து சதம்.

முதுகு முறிய மூட்டைசுமந்து சம்பாதித்த பணம். பத்திரமாக வேட்டித்தலைப்பில் முடிந்து கொண்டான்.

வேலப்பனை எதிர்நோக்கிச் சேரியிற் கிடக்கும் ஆறு மனித உயிர்களுக்கு இந்த ஒரு ரூபா நாற்பத்தைந்து சதம் தான் ஒரு வேளைக் கஞ்சியாவது ஊற்றவேண்டும்.

அதாவது கிடைத்தால், அந்தச் சேரி உயிர்கள் அதிர்ஷ்ட சாலிகள். ஆனால், வழியில் அதை விழுங்கி விடு வதற்கென்றே கிடக்கிறது, ஒரு கள்ளுத் தவறணை.

அதற்கு யார் என்ன செய்வார்கள்? வேலப்பன் நல்லவன் தான். குறையில்லா தவன் யார் இருக்கிறான்?

குடிப்பழக்கம் ஒன்றை அவன் தெரிந்தோ, தெரியா மலோ கற்றுக்கொண்டு விட்டான்.

உடம்பை வருத்தி உழைக்காமல், அவன் சோம்பித் திரியவுமில்லை; தன் குடும்பத்தை வாழவைக்க வேண்டு மென்ற உணர்வு அவனுக்கு இல்லாமலும் இல்லை.

ஆனால், அவனையும் மீறிய அந்தக் குடிப்பழக்கம், அனைத்தையும் கெடுத்து விடுகிறது.

கரும்பில் எறும்பு மொய்ப்பது என்பார்களே. அது போல, வேலப்பனைப் போன்ற சேரிவாசிகள், மூட்டை தூக்கிப் பிழைப்பவர்கள், கூலிகள் கள்ளுத் தவறணை யை மொய்த்துக் கொண்டிருந்தனர்.

வேலப்பனும் அவர்களுள் ஒருவனானான். அவனுடைய வேட்டி முடிச்சு அவிழ்ந்தது. இரவு மணி பத்திருக்கும்.

கள்ளுத் தவறணையில் ஒரே கலகலப்பு.

இவ்வுலக நினை வற்றவர்களின் பிதற்றல் ஆரவாரம் வேலப்பன் வெளியே வந்தான்.

அவன் கையில் எஞ்சியிருப்பது முப்பத்தைந்து சதங் கள் மாத்திரந்தான்.

அவனுடைய குடிசையை நோக்கி அவன் கால்கள் தள் ளாடுகின்றன,

கொலன்னாவை மின்சார நிலையத்தை அடுத்துக் கிடக் கும் அந்தச் சேரிக் குடிசைகளுள் ஒன்று வேலப்பனுடை. யது. உக்கிப்போன ஓலைகள், உளுத்துப்போன கள்ளிப் பலகைத் துண்டுகள், கந்தற்சாக்குகள் எல்லாவற்றாலான ஒரு சிறு குடிசை அவனுடையது.

குடிசையா அது? அதைவிடச் சாக்கடை மேல்.

குடலை வெளியே கொண்டுவரும் குமட்டல் நாற்றம். சேரிமக்களுக்கு அது பழகிப் போய்விட்டது. அவர்களும் வாழ்கிறார்கள். எதுவுமற்ற வாழ்க்கை .

மீனாட்சி, வேலப்பனுக்கு மனைவி. பாவம். அவள் தான் என்ன செய்வாள்?

பசிக் கொடுமையாற் சாகும் குழந்தைகளை நாள் முழுவதும் அவள் தானே தாக்காட்டுகிறாள்.

குடும்பத்தைப் பார்க்கவேண்டியவன் குடித்துத் தள்ளுகிறான்.

வீட்டிலோ சோற்று அவிழையே கண்டறியாத சிறிசுகள்.

இருக்கிறதுகளுக்கு ஒரு வேளைக் கஞ்சி ஊற்ற வக் கில்லை. இந்த இலட்சணத்தில் வருடத்துக்கு ஒருகுழந்தை வேறு …….

வேலப்பனே சில வேளை தன் மனைவியின் தொல்லை களைப் பற்றிச் சிந்தித்திருக்கிறான்.

எல்லாம் குடிக்காத நேரத்தில் தான்.

குடிபோதை ஏறிவிட்டால் அவனுக்கு ஒன்றுமே தெரிவதில்லை.

அடி உதை!! குத்து!!!

இவற்றைத் தவிர வேறெதையும் அனுபவித்தறியாள் மீனாட்சி.

உலகில் துன்பத்தை அனுபவிக்கவென்றே பிறந்த கோடானுகோடி மனித உயிர்களுள் அவளுமொருத்தி.

‘துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்’ என்று ஏசுநாதர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் மீனாட்சி இந்த உலகத்துக்கு வந்தது முதல் ஒரே துயரத்தைத்தான் கட்டியழுகிறாள்.

அவள் பிறந்ததும் சேரியில், வளர்ந்ததும் சேரியில், வாழ்க்கைப்பட்டதும் அதே சேரிக்குள் தான்.

அவள் வாழ்க்கையே அந்தச் சேரிதான்.

அந்தச் சேரியைத் தவிர்ந்த வெளி உலகத்தைப்பற்றி அவளுக்கு அவ்வளவாகத் தெரியாது.

உலகத்து வாழ்க்கை வசதிகள் எல்லாம் அவளுக்கு வேண்டாம். உடலில் உயிர்த்துடிப்பை நிலைக்கச் செய்ய ஒரு வழி வேண்டாமா?

ஒரு நேரங்கிடந்து ஒரு நேரமாவது ஒருவாய் கஞ்சி வயிறு நனையக் கிடைக்கவேண்டுமே?

கிடையாது. தன் ஊனைத்தானே தின்று ஜீரணித்துக்கொண்டாள்

இந்த நிலையில், அவளின் ஊனை வேறு உறிஞ்சி யெடுக்க வருடமொரு குழந்தை ……..

அவளின் அடிவயிறு முதுகோடு ஒட்டிவிட்டது. வயது முப்பதுக்கு மேலிராது. வயதை மீறிய முதுமை! கண்கள் குழிவிழுந்து, கன்னங்கள் சுருங்கி…… பார்க்கச் சகிக்காது.

அவள் ஈன்றெடுத்த குழந்தைகளோ, அவளை விடக் கேவலம்.

அந்தக் குழந்தைகள் இந்தச் சேரியிற் பிறக்காமல், எங்காவது ஒரு பணக்காரவீட்டுநாயாகப் பிறந்திருந்தால் எவ்வளவோ நல்லது.

அக் குழந்தைகளின் அதிர்ஷ்டம் அவ்வளவுதான். சேரியிற் பிறந்து அழுந்துகின்றன. மீனாட்சியின் உடலில் ஓடியாடி வேலை செய்ய உர மில்லை .

சும்மா இருந்தால் முடியுமா? கெஞ்சிக் கூத்தாடி, ஒரு வீட்டிற் கூலிவேலை தேடிக் கொண்டாள். ஊதியமோ சொற்பம்.

அதைக்கொண்டுதான் குழந்தைகளின் உயிரை அவற் றவற்றிற்குரிய எலும்புக் கூட்டோடு ஒட்டவைக்கும் போராட்டத்தைச் சமாளித்து வந்தாள்.

மூன்று நாட்களாக அதுவும் இல்லை. உடம்பு ஒரு இயந்திரந்தானே? மந்திரத்தால் ஓட்ட முடியுமா ஒரு இயந்திரத்தை?

அதற்கான சக்தியைக் கொடுத்தால் தானே அது இயங்கும்.

தனது வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி, குழந்தைகளின் உயிரைக்காப்பாற்ற முயன்றாள்!

எத்தனை நாளைக்கென்றுதான் வயிற்றை வஞ்சிக்க முடியும்?

மூன்று நாட்களாக மீனாட்சியால் எழுந்து நடக்கவே முடியவில்லை .

குடிசைக்குள் சுருண்டு கிடப்பதைத்தவிர, அவளால் வேறென்ன செய்யமுடியும்?

குழந்தைகள் குடிசை மூலையில் முடங்கித் துடித்தன.

பசியென்று சொல்லக் கூட அவற்றிற்குச் சக்தியில்லை.

வயிற்றுக்குள் வெறும் காற்றை அடைத்துக்கொண்டு யாரால் தான் கிடக்க முடியும்? மீனாட்சிக்கு ஒரே பசி மயக்கம்.

ஓடத்துடிக்கும் உயிரைப்பிடித்துக்கொண்டு குடிசை வாசலிற் காத்துக் கிடக்கிறாள், மீனாட்சி.

வேலப்பனின் வருகை நோக்கி …….

மண்ணெய் தீர்ந்த குப்பிவிளக்குத் தானாக அணைந்து வெகுநேரமாகி விட்டது.

சேரிமக்களின் வாழ்க்கைபோல, குடிசை முழுவதும் ஒரே இருள்!

இருந்தாற்போல் ஒரு வெளிச்சம் சேரிப்பகுதி முழுவ தும் பரவுகிறது.

கார் ஒன்று வேலப்பனின் குடிசைக்கு முன்னால் வந்து நிற்கிறது.

யார் யாரோ எல்லாம் நாலாபுறக் குடிசைகளில் இருந் தும் ஓடி வருகிறார்கள்.

காரைச் சூழ்ந்து கொள்கிறார்கள். ‘கச முச’ வென்று பேசிக் கொள்கிறார்கள். காரிலிருந்து ஒருமனிதன் கீழே இறக்கப் படுகிறான். பேச்சு மூச்சில்லை! நிலத்தில் வளர்த்துகிறார்கள்.

அதென்ன சிவப்பாக?

இரத்தம்!

காரிலடிபட்டிருக்கிறான் –

வேலப்பன்! தட்டுத்தடுமாறி எழுகிறாள், மீனாட்சி. நிற்க இயக்கமில்லை. இது என்ன சந்தடி?

காரை அனுகுகிறாள். பசி மயக்கம்.

ஒன்றும் புரியவில்லை. கீழே குனிகிறாள். இது என்ன இரத்தமாக? வேலப்பன்விறைத்துக் கிடக்கிறான் . ”ஐயோ! என்ரை ராசா!” அலறி விழுகிறாள். அவள் அழுகுரல் கேட்கவில்லை! அவள் மூச்சு நின்றுவிட்டது….. நிரந்தரமாக

– முத்து-சிவஞானம் – கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

முத்து-சிவஞானம் : வசாவிளானைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியின் பழைய மாணவர்; அச்சிலேறும் முதற்கதை இதுவே;’தின கரன்’ முதலிய பத்திரிகைகளிற் கவிதைகள் பல எழுதி யுள்ள இவர், இலக்கியப் பித்துக்கொண்டவர்; துடிப் புள்ள இளைஞர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *