இருளாகும் வெளிச்சங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 10,999 
 

சாப்பிட்டுவிட்டு, அப்படியே முகத்தைக் கழுவி, பொட்டு வைத்துக்கொண்டு புறப்பட்டாள். மட்டை எடுக்கப் போகும்போது நல்ல புடவையெல்லாம் கட்டிக்கொள்ள முடியாது. ஆனால், அவளுக்கு ஆசையாக இருந்தது. மஞ்சள் பொட்டு போதும் என்று முடிவு செய்து புறப்பட்டாள். செல்லப்பாண்டி வருவான். பாலமேடு போகும் சாலையில் நான்கு மணிக்குத் காத்திருப்பான். அவன் தண்டல் வசூல் செய்யப் போகும் வழி அதுதான். பாலமேட்டை முடித்துவிட்டு அப்படியே அலங்காநல்லூர் வழியாக மதுரை போய்ச் சேர்வான்.

இவளுக்குப் பயமாக இருக்கும். இப்படி பைக்கில் சுத்துகிறானே? எத்தனை லாரிகள் போகும் வரும்? லாரிக்காரர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவார்கள் என்பதை டிரைவராக இருக்கும் தன் மாமன் மூலம் தெரிந்து வைத்திருந்தாள். மாமன் வண்டியில் ஏறினாலும் குடிப்பான். இறங்கினாலும் குடிப்பான். 15 நாட்கள் டூட்டி. அவன் வீட்டில் இல்லாத அந்த நாட்கள்தான் இவளின் சுதந்திர நாட்கள். இவளுக்கு மட்டுமல்ல இவளின் அக்கா பாண்டீஸ்வரிக்கும் அவைதான் சுதந்திர நாட்கள்.

வேகமாக நடந்தாள். செல்லப்பாண்டி இவளுக்கு இரண்டு ஆண்டாகப் பழக்கம். கோடாங்கிப் பட்டியின் காலனிக்கு அவன் வருவான். ஒரு நாள் பழைய ஆள் வந்து அறிமுகம் செய்து வைத்தான். ஓனரின் மருமகனாம். இவள் முழங்காலிட்டு உட்கார்ந்து முடிந்த மட்டையின் பிசிறுகளை வெட்டிக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து பார்த்தவளுக்கு செல்லப்பாண்டி தன்னையேப் பார்க்கிறான் என்று தெரிந்தது. அதுதான் அவனைப் பார்த்த முதல் நாள். மாராப்பை சரி செய்துகொண்டு எழுந்தாள். புடவையைக் கால் வரை இழுத்துவிட்டுக்கொண்டு திரும்பினாள்.

இனி செல்லப்பாண்டிதான் வசூலுக்கு வருவான் என்று வழக்கமாக வருபவர் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. வேப்ப மரத்துக்கு அந்தப் பக்கம் சென்று மறைவாக உட்கார்ந்து கீற்றை இழுத்துப் போட்டுக் கொண்டாள். பைக் புறப்பட்டுச் சென்ற சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். பைக்கை ஓட்டியபடியே செல்லப்பாண்டி திரும்பிப் பார்ப்பது தெரிந்தது. கவனிக்காதவள் போலத் திரும்பிக் கொண்டாள்.

வழக்கமாக பணம் வசூல் செய்ய வரும் ஆள் போல செல்லப்பாண்டி இல்லை. பேண்ட்டும் சர்ட்டும் அப்படிப் பொருத்தமாக இருக்கும். இன் செய்து பெல்ட் போட்டிருப்பான். காதில் செல்போன் வயர் தொங்கும். ஒரு தடவை அவன் செல்போனை இவள் பார்த்தபோது அது பெரிதாக அழகாக இருந்தது தெரியவந்தது.

‘என்ன பார்க்குறீங்க?’ என்றான் செல்லப்பாண்டி.

‘இல்ல.. இது எங்க போனுங்க மாதிரியில்ல.. பெரிசா.. அழகா இருக்கு’ என்றாள். ’எவ்வளவு?’ என்று ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.

அவள் சொன்னபோது இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘இம்புட்டு காச போட்டா போன் வாங்குவாங்க?’ என்று ஆச்சரியப்பட்டாள்.

‘இது போன் மட்டும் இல்ல… சின்ன கம்ப்யூட்டர்’ என்று அவன் விளக்கம் சொல்ல, சுற்றி நின்ற பெண்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், அவர்களுக்குப் புரியவில்லை. ‘சரி, நில்லுங்க எல்லாரையும் படம் எடுக்கலாம்’ என்று போன் வழியே படம் எடுத்துக் காட்டினான். படம் பளிச்சென்றிருந்தது. முருகேஸ்வரி முகத்தைப் பெரிதாக்கிக் காட்டினான்.

இப்படித்தான் அவர்களின் பழக்கம் ஆரம்பமாயிற்று. முதலில் செல்லப்பாண்டியை இவளுக்கும் பிடிக்கவில்லை. செல்லப்பாண்டியை என்ன, எந்த ஆணையும் பிடிக்கவில்லை. இவளின் மாமன், அதான் பாண்டீஸ்வரியின் வீட்டுக்காரன் வந்துவிட்டால், இவளுக்குச் சிக்கல் ஆரம்பிக்கும். அக்கா வெளியே போயிருக்கும்போது சீண்டுவான். குடித்துவிட்டு படுத்திருப்பவன், படுத்தபடியே இவளின் மீது பார்வையை ஒடவிடுவான். இவளுக்கு உடல் மீது கரப்பான் பூச்சி ஊர்வது போல இருக்கும்.

ஒரு நாள் பாண்டி அலங்காநல்லூருக்கு டாக்டரைப் பார்க்கச் சென்றிருந்தாள். நடு அக்காவான நாகேஷ்வரி அழைத்துப் போயிருந்தாள். மட்டையை முடைந்து போட்டுவிட்டு வீட்டுக்கு இவள் வந்து சேர்ந்தாள். ஊரே வெறிச்சோடியிருந்தது. நிறைய பேர் 100 நாள் வேலைக்குப் போயிருந்தார்கள். மாமா தூங்கிக்கொண்டிருந்தான். சப்தம் போடாமல் பானையைத் திறந்து சோற்றைப் போட்டுக்கொண்டு வெளியே வந்து தெருவில் உட்கார்ந்து சாப்பிட்டாள். தட்டைக் கழுவிக்கொண்டு உள்ளே சென்றவளை அவன் மறித்துக்கொண்டு கதவைச் சாத்தினான். அவளுக்குப் புரிந்துவிட்டது.

‘வேணா மாமா… இது தப்பு’ என்று அவன் கண்ணைப் பார்த்துச் சொன்னாள்.

‘எது? இதுவா? ஒனக்கு எதுடி தப்பு? ஓடிப்போயிட்டு வந்தவதானே.. அவங்கிட்ட தப்பு செய்யிலியா?‘, என்று அவன் நெருங்க, இவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள். அன்று துவங்கி நெருப்பில் வாழ்வது போல அக்கா வீட்டில் இவள் இருக்கும்படி ஆனது.

இவளோடு பிறந்த மூன்று பேர் பெண்கள். ஒரு ஆண் பிள்ளை. கடைசியாக இவள் பிறந்தாள். எட்டு பிள்ளை பெற்று மூன்றைப் பறிகொடுத்த அம்மா சீக்காளி ஆகியிருந்தாள். மூன்றுப் பெண்களைக் கட்டிக்கொடுப்பதற்குள் அப்பா கடன்காரர் ஆகியிருந்தார். இருந்த ஒரு ஏக்கர் காட்டையும் விற்றுவிட்டு மாடுகளை வாங்கி மேய்த்துக் கொண்டிருந்தார். காடு நல்ல விலைக்குப் போகவில்லை. ஊரைச் சுற்றி கிரசர்கள் வந்திருந்தன. அவை விட்ட தூசு படிந்து விவசாயம் செத்துப்போயிருந்தது. கிரசர்காரர்கள் எல்லாம் மதுரைக்காரர்கள்… கட்சிக்காரர்கள். இவளின் அப்பா நாகலிங்கம் போன்ற ஏழைகள் என்ன செய்ய முடியும்? விளையாத நிலத்தை வாங்க ஆளில்லை. விற்றுத் தீர்த்த பின்னரும் கடன் தொல்லை முடியவில்லை.

எல்லா அக்காக்களுக்கும் பதினைந்து பதினாறு வயதிலேயே கல்யாணம் ஆனது. எல்லாம் சொந்தத்தில்தான். இவள் அப்பனின் வீட்டிலும், அவர்கள் வீட்டிலும் என்று மூன்று அக்காக்களும் வாழ்ந்தார்கள். அப்பாவுக்கு இரண்டு வீடு இருந்தது. வீடு என்றால் வீடில்லை. மண் சுவர் ஓட்டுக் குடிசைகள். ஒரு வீட்டில் அப்பாவும் அண்ணனும் இருக்க இவள் அக்கா பாண்டி வீட்டில் தூங்குவாள். கதவை மூடிவிட்டால் காற்று உள்ளே வராது. விளக்கில்லாவிட்டால் ஓட்டு இடைவெளியில் நட்சத்திரங்கள் தெரியும். இவள் இந்த சுவற்றோரத்தில் படுத்திருப்பாள். அந்த சுவற்றின் ஓரத்தில் மாமா.. இடையில் அக்கா. அதற்கு மேல் அந்த வீட்டில் இடமில்லை.

சில நாட்களில் இரவில் விழிக்கும்போது விக்கித்துப் போயிருக்கிறாள். திரும்பிக் கொண்டு, சுவற்றைப் பார்த்து, கண்ணை இறுக்கி மூடிக்கொள்வாள். ஆனால், காதுகள் திறந்திருக்குமே.. சப்தம் கேட்கும். ஆர்வம் அதிகரிக்கும்.. ஆனால், என்ன செய்ய முடியும்?

இவள் பத்தாவது பெயில், அப்புறம் மாடு மேய்க்கப் போனாள். சில நாட்கள் மட்டை முடைவாள். இப்படி இவள் உழைத்துச் சேர்த்து வைத்திருந்த நான்கு பவுனுக்கு மேல் கையில் ஏதுமில்லை. மாடு சினை பிடிக்கட்டும் என்று அப்பா காத்திருந்தார். நல்ல விலைக்கு விற்று கடைசிப் பெண்ணுக்கு கல்யாணம் என்று இரண்டு வருஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். மாடு சினை பிடித்தாலும் அவரின் திட்டம் பலிக்கவில்லை. கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கையே முருகேஸ்வரிக்குப் போய்விட்டது.

அக்கா மாமாவோடு உள்ளே படுத்தாள்தானே பிரச்சனை என்று வெளியே அம்மாவுடன் தெருவில் படுக்க வந்தால், அம்மா விரட்டுவாள்.

‘வயசுப் பொண்ணுடி.. நீ அப்புடி இப்புடின்னு தூங்கிட்டா.. போடி உள்ளே’ என்று விரட்டுவாள்.

இப்படியே அல்லாடிய முருகேஸ்வரி ஒரு நாள் ஓடிப்போனாள். ஓடிப்போனவள் ஒரே வாரத்தில் தனியாளாகத் திரும்பி வந்தாள். போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் பிரச்சனை போனது. அந்தப் பையனையும் பிடித்து வந்தார்கள். ஏதோ பஞ்சாயத்து நடந்து, அவன் ஒரே வாரத்தில் வெளியே வந்துவிட்டான். அய்யா கட்சியும் அம்மா கட்சியும் அவனுக்கு ஆதரவாக நின்றன. பையனின் அப்பா செலவு செய்தே நொடித்துப் போனார். அப்புறம், கட்சிக்காரர்கள் பாட்டில் இல்லாமல், பிரியாணி இல்லாமல், கைநிறைய காசு கொடுக்காமல் எப்படி ஸ்டேஷன் வருவார்கள்? ஸ்டேஷன் செலவுக்குப் பணம் வேறு கொடுத்திருந்தார் அந்தப் பையனின் அப்பா.

அவன், அந்தப் பையன் ஆறு மாதத்தில் இன்னொரு பெண்ணுடன் ஒடிப்போனான்.

ஆனால், முருகேஸ்வரி யாரிடமும் பேசவில்லை. எதுவும் சொல்லவில்லை. ஏன் அவனுடன் போனாள், ஏன் திரும்பி வந்தாள், என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அப்பா தென்னை மட்டையை எடுத்துக்கொண்டு நாயை அடிப்பது போல அடித்துப்போட்டார். பாதகத்தி வாயைப் பொத்திக்கொண்டு அழுதாளே தவிர ஒரு வார்த்தைப் பேசவில்லை. அவள் போகும்போது எடுத்துச்சென்ற நான்கு பவுன் நகையும் கூட பத்திரமாக இவளுடன் வந்திருந்தது.

பாண்டி ஒரு நாள் முருகேஸ்வரியைத் தனியே அழைத்துச் சென்று கேட்டாள். இவள் அதற்கும் அசையவில்லை. ‘பொம்பளயா பொறந்திருக்கக் கூடாதுக்கா’, என்று அழுததோடு சரி. அதற்கப்புறம் அவள் அனேகமாக பேசுவதில்லை. எந்த ஆணையும் பார்ப்பதில்லை. ஏன் நினைப்பதேயில்லை.

அப்படியிருந்தவளைத்தான் பைனான்சுக்கார செல்லப்பாண்டி மாற்றிப் போட்டிருந்தான். கீற்று முடையும்போது பணம் வசூலுக்கு வருபவன் இவளைப் பேச்சுக்கு இழுப்பான். யாரோடும் பேசாத இவளா பேசுவாள்..? ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, செல்லப்பாண்டி வரும் நேரத்திற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். இருந்தாலும் இவளுக்குப் பிடிக்கவில்லை… எத்தனை முறை அடித்தாலும் வாலைக் குழைக்கும் நாய் போல, ஆணுக்குக் காத்திருப்பது பிடிக்கவில்லை. ஆனாலும் செல்லப்பாண்டி வரும் வழியைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள். இபபோதெல்லாம், இவள் மட்டை தூக்கப் போகும்போது பாதையை மறித்து பேச ஆரம்பித்திருந்தான். இவளும் புறப்படுவதற்கு முன்பு பொட்டு வைத்துக்கொள்ள துவங்கியிருந்தாள்.

சும்மாடு கட்டுவதற்கான துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தவளுக்கு தூரத்தில் செல்லப்பாண்டி பைக் வருவது தெரிந்தது. சிவப்பு கலர் பைக். சைடு பெட்டியில் கணக்கு நோட்டு துருத்திக்கொண்டிருக்கும் தோளில் தொங்கும் பையில் தண்டலுக்குக் கொடுக்க வேண்டிய பணமும் வசூலித்த பணமும் கனத்துக்கொண்டிருக்கும்.

இவள் அருகே வந்தவுடன் நிறுத்தியவன், ‘என்ன முருகு… அந்தக் கடனெல்லாம் முடிஞ்சுப் போச்சா’, என்று ஆரம்பித்தான். பளீரெனத் தெரியும்படி வைத்திருந்த மஞ்சள் பொட்டை அவன் பார்ப்பது தெரிந்து. நெளிந்து சுருண்டு கிடக்கும் நெற்றி முடியை அவன் இரசிப்பதை உணர்ந்தாள். தலையைக் குனிந்துகொண்டாள்.

இவளை முருகு என்று கூப்பிடுவது அவன் மட்டும்தான். ஏன் இத்தனை நாள் யாருக்கும் அப்படித் தோன்றவில்லை என்று இவள் யோசித்திருக்கிறாள். தெரியவில்லை. ஆனால், சுகமாக இருந்தது. அதுவும் இவர்கள் இரண்டு பேர் இருக்கும்போது மட்டும்தான் ‘முருகு’ என்று உருகுவான்.

இவள் சாலையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். பாலமேடு செல்லும் சாலையின் மேடு வரைக்கும் யாரையும் காணோம். இந்தப் பக்கம் இவள் கிராமத்துக்கு செல்லும் சரிவிலும் ஈ காக்கா இல்லை. சாலை ஓரத்து தென்னந்தோப்பை ஊடுருவிப் பார்த்தாள். காய் சுமக்க இவள் ஊரிலிருந்தும் ஆட்கள் வந்திருப்பார்கள். நல்லவேளை… யாரும் இல்லை.

‘என்ன பதிலக் காணோம்?’, என்று மறுபடியும் கேட்டான் செல்லப்பாண்டி.

‘முடிஞ்சிடுச்சி… எதுக்கு அவ்வளவு பணத்தைக் கொடுத்த நீயி..? ஒங்க மாமா கணக்கு கேக்க மாட்டாரா?’ என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவன் களையான முகத்துக்குச் சொந்தக்காரன். நெற்றியில் எப்போதும் சந்தனப் பொட்டிருக்கும்.

‘நானென்ன ஒரே தடவையாவா கொடுத்தேன்…? நீ வாங்குன தவணைய வரவு வைச்சேன். என்னோட ஒரு நாளு செலவு வராது ஒன்னோட ஒரு நாத் தவணை’. என்றவன் யோசித்தவாறே, ’எதுக்கு முருகு அவ்வளவு பணம் தவணை வாங்கின’, என்றவுடன் அவளுக்குத் திடுக்கென்றிருந்தது. எதைச் சொல்வாள்..? எப்படிச் சொல்வாள்?

‘போய்யா.. போ’, என்றவாறே இவள் விலகி நடந்தாள். பாலமேடு செல்லும் பஸ் சாலையில் வருவதைக் கண்ட அவன், சாலையை விட்டு விலகி இவளைப் பார்த்தான். அதற்குள் இவள் தென்னந்தோப்புக்குள் நுழைந்து விட்டிருந்தாள்.

முருகேஸ்வரி காதைத் தடவிப் பார்த்துக்கொண்டாள். அந்தத் தோடு இருந்தது. இவள் உழைத்து காசு சேர்த்து கல்யாணத்துக்கென்று எடுத்த நகையில் ஒன்று அது. ஆனால், அந்தத் தோடு இதில்லை. இது அந்த குவாரிக்காரன் வாங்கிக் கொடுத்த கவரிங் தோடு. இவள் சம்பாதித்த நான்கு பவுன் நகையும் நெட்டையன் கைக்குப் போயிருந்தது. அந்த குவாரி ஏஜெண்டை இவர்கள் நெட்டையன் என்றுதான் சொன்வார்கள். பணத்துக்காக அவனிடம் கொடுத்த நகையை மீட்க, இன்னமும் மீதியுள்ள பத்தாயிரத்தைக் கட்ட என்று இவள் கடன் வாங்கி அல்லல்பட்டுக்கொண்டிருந்தாள். ஆனால், இவளுக்கு யார் ஒரே தடவையாக ஐம்பாதினாயிரம் கடன் தருவார்கள்?

பவுனை விற்றுவிட்டு கவரிங் வாங்கி மாட்டிக்கொண்டு வீட்டை ஏமாற்றிக் கொண்டிருந்தாள். பற்றாக்குறைக்கு தவணை வேறு. எல்லாம் அக்கா பாண்டீஸ்வரியின் வேலை.

அப்போதெல்லாம் பாண்டீஸ்வரி கல்லுடைக்கப் போவாள். அங்கே வேலை பார்த்தவன்தான் அவன். நெடுநெடுவென்று வளர்ந்தவன். கயிற்றைப் பிடித்துக் கொண்டு கரட்டின் மீதேறி, துளை போட்டு வெடிவைப்பவன். அவன் உடைத்துத் தள்ளிய பாறைகளை உடைத்து கிரசருக்கு அனுப்புவது பாண்டி போன்ற பெண்களின் வேலை. அங்கேதான் நெட்டையன் பழக்கமானான். பாண்டியின் வீட்டுக்காரன் ஆக்சிடன்ட் ஆகி மதுரை ஆஸ்பத்திரியில் படுத்திருந்த நேரம். கையிலிருந்த காசெல்லாம் காணாமற் போயிருந்தது. கல்லுடைத்த காசு பற்றாக்குறை ஆனபோதுதான் பாண்டி நெட்டை மேஸ்திரி கேட்டதையெல்லாம் கொடுத்து காசு பார்க்க வேண்டியிருந்தது.

ஓடிப்போய் திரும்பி வந்திருந்த முருகேஸ்வரி அதற்குப் பின்தான் சிக்கலில் மாட்டினாள்.. அக்கா போக்கு சரியில்லை என்று கூடவே கல்லுடைக்கப் போகும் இவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், என்ன செய்ய? குடிகார மாமன் எழுந்தால் தானே குடும்பம் வாழும்.

மாமன் எழுந்து டூட்டிக்குச் சென்ற பின்பு பாண்டி கல்லுடைக்கப் போகவில்லை. நெட்டையன் தேடி வந்துவிட்டான். கொடுத்த பணத்தைக் கேட்டான். பாண்டி அவனிடம் நைச்சியமாகப் பேசி காசு தருவதாகச் சொல்லிவிட்டு இவளின் காலைப் பிடித்துக்கொண்டாள். ‘ஒரு வாரத்துல காசு வராட்டி, நீ வா.. இல்லன்னா தங்கச்சிய அனுப்புடி’ என்று நெட்டையன் மிரட்டிக்கொண்டிருப்பதைச் சொன்னாள் பாண்டி.

இப்படித்தான் முருகேஸ்வரியின் தோடும் நகைகளும் போய்ச் சேர்ந்தன. அந்தக் கடனைக் கட்டத்தான் முருகேஸ்வரி தண்டல் வாங்கி அதனைக் கட்ட மட்டை முடைந்து கொண்டிருந்தாள்.

நெட்டையனிடம் இருந்து வாங்கிய பணத்தில் இன்னமும் பத்தாயிரம் நிற்கிறது என்று அவன் மிரட்ட, பாண்டி நொந்துபோனாள். லாரிக்குச் செல்லும் வீட்டுக்காரனுக்குத் தெரிந்துவிட்டால், கொலைதான் நடக்கும் என்று தெரியும். நைச்சியமாகப் பேசி நெட்டையனிடம் முருகேஸ்வரியை அனுப்பி வைத்தாள்.

தோப்புக்குள் மட்டையைப் பொறுக்கிச் சேர்த்து அணைத்துக் கட்டிய முருகேஸ்வரிக்குத் தன் உடல் நாறுவதாகப் பட்டது. எத்தனை மிருகங்கள் என்று யோசித்தாள். ‘நெஞ்சுல மயிறு மொளச்ச ஒரு பயலுக்கும் நெஞ்சுல ஈரம் சொரக்க மாட்டேங்குதே’, என்று யோசித்தாள்.

அந்த நாய் அழைத்துச் சென்று செய்த காரியம், வீட்டுக்குள்ளே மாமன் ஆட்டும் வால், நெட்டையனோடு குவாரியின் ஆலமரத்து மறைவில் நாறிப்போய் கிடந்தது… தன்னைத் தானே காறித் துப்பிக்கொண்டாள். இந்த இருபத்தியெட்டு வயதில் எதையும் காணாமல் வாழ்க்கை தொலைந்து போயிருந்தது. உடல் நொந்துபோயிருந்தது.

‘இதத்தானே அந்த பைனான்ஸ் பாண்டியும் கேக்குறான்’, என்று யோசித்தபடியே சாலையில் ஏறியவள் பயந்துபோனாள். சரிவிலிருந்து ஏறிக்கொண்டிருந்த அந்த காலத்து சுசுகி பைக் சப்தம் நெற்றிப் பொட்டில் அடிப்பது போலிருந்தது. அவன்தான்… நெட்டையன்தான்.

அவள் தலைச்சுமையோடு அப்படியே நின்றுவிட்டாள். இவளைத் தேடித்தான் வருகிறான் என்று தெரிந்தது. அருகே வந்தவுடன் காலை ஊன்றிக்கொண்டு இவளின் அருகே நின்றான்.

‘என்னாடி ஆளக் காணோம்.. காசு எப்படித் தருவிங்க..? ஒங்கக்காவக் கேட்டா ஒன்னக் கை காட்டுறா?’

இவளுக்குப் பதில் பேச வாய்வரவில்லை. பொழுது இறங்கும்போது கேட்கும் சில்வண்டுகள் சப்தத்தைத் தவிர வேறு சப்தம் ஏதும் இல்லை.

‘அதான்..’, என்று இவள் இழுத்தாள்.

’என்ன அதான்ங்.. பத்தாயிரண்டி பாக்கி.. ஒன்னு பணத்தைக் கொடு இல்லாட்டி ஒங்கக்காவ அனுப்பி வையு… இல்லாட்டி நீ வா’ அவன் கறாராகப் பேசினான். அவன் பார்வை இவளின் முகத்தில் இல்லை. அதற்கும் கீழேயிருந்தது.

இவள் மாராப்பைச் சரிசெய்துகொண்டு, போன வாரந்தானே… வந்தேன்’, என்பதற்குள் அவன் குதறினான்.

’ஓகோ பத்தாயிரத்துக்கு ஒரு தடவயாடீ..? நீ என்னாடி சினிமா ஸ்டாரா?’

இவள் குறுகிப்போய் சரிவில் நடந்தாள். சரிவும் பயமும் இவளை விரட்டின. தலைச்சுமையுடன் ஓடினாள். சரீரம் நடுங்க ஓடினாள். செத்துப்போய் விட வேண்டும் என்று ஓடினாள்.

அவன் கோபத்தோடு பைக்கை மிதிக்கும் சத்தம் கேட்டது. விரட்டப்போகிறான் என்று நினைத்து இன்னும் வேகமானாள். நல்ல வேளை பைக் பாலமேடு நோக்கிச் சென்றது சத்தத்தில் தெரிந்தது.

எப்படி வீட்டுக்கு வந்தாள் என்று தெரியாது. மட்டையை தெருக்குழாய் பக்கத்தில் போட்டவள், அப்படியே வீட்டுக்குப்போய் படுத்துவிட்டாள். ஓடிவந்த ஓட்டத்தில் நொந்து போயிருந்தவள் கண் அசந்தபோது செல்போன் ஒலித்தது.

அது பாண்டீஸ்வரியின் போன். கண்ணை இறுக்கிக் கொண்டாள். போனின் ஓசை நெற்றிப் பொட்டில் அடிப்பது போல இருந்தது. ‘எங்க போனா இவ’ என்று யோசித்தபடியே போனை எடுத்தாள்.

எடுத்தவுடனேயே தெரிந்துவிட்டது அவன்தான்… செல்லப்பாண்டிதான்.

’பாண்டீஸ்வரிதானே’, என்றான் அவன்.

‘இல்ல நாந்தான்..’, என்று இவள் முனகினாள்.

‘ஒனக்குத்தான் போன் போட்டேன்.. என்ன பிடிக்கிலியா? ஒன்னுஞ்சொல்லாம ஓடிப்போயிட்ட?’

‘இல்ல..எனக்கு ஒடம்பு சரியில்ல..அதோட யாராவது பார்த்துட்டா என்னாகும்’ என்று சமாளிக்கப் பார்த்தாள்.

அவன் விடுவதாக இல்லை. அவனுக்கு மெட்ராசில் வேலை கிடைத்துவிட்டதாம். வட்டிக்கு விட்டு வசூலிக்கும் மாமனை விட்டுப் போகப் போகிறானாம்.. ’நீயும் என்னோட மெட்ராசுக்கு வாயேன்’, என்று அவன் சொன்னபோது இவள் அதிர்ந்துபோனாள்.

எப்படி இது கதைக்காகும்?

அவன் மதுரை வட்டிக்காரக் குடும்பம். முக்குலத்தில் ஒர் குலமாக இருக்க வேண்டும். இவளோ பள்ளச் சாதி. வெட்டுக்குத்துதான் நடக்கும். கல்யாணம் நடக்காது. ‘அதா அவன் ஒடியாரச் சொல்ரான்’, என்று மனம் சொன்னது.

எத்தனை முறை ஓடுவது? எங்கே ஓடுவது? அல்லது எங்கே பதுங்குவது? அன்று முருகேஸ்வரி சாப்பிடாமலேயே தூங்கிப் போனாள்.

சில வருடங்களாகவே முருகேஸ்வரிக்குத் தூக்கத்தைப் பிடித்திருந்தது. எல்லாம் செத்துப்போன அமைதி தூக்கத்தில்தான் வரும். சாவுதான் தூக்கம். ஆனால், எத்தனையோ முறை அவள் சடச்சியம்மாவை வேண்டிக்கொண்டும் ஒவ்வொரு நாளும் கண் விழித்தாள். முடங்கிப் படுத்துக்கொண்டு கண்ணை இறுக்கிக்கொண்டாலும் விடிந்த பின் தூக்கம் வராது. பாண்டியின் குரல் விரட்டும். தவணை நாளாக இருந்தால் அவள் குரல் கொடூரமாக இருக்கும். மனதைத் திடப்படுத்திக்கொண்டு முருகேஸ்வரி எழுந்திருப்பாள்.

அன்றும் அப்படித்தான் நடந்தது. ஐந்து மணிக்கெல்லாம் பாண்டி எழுப்பினாள். ‘வாடி விடிஞ்சா எப்புடிடீ ஒதுங்கிறது’, என்று இழுத்துச் சென்றாள். கருவைக் காட்டு மறைவில் பாண்டி குசுகுசு என்று சொன்னபோதுதான் இவளுக்கு விஷயம் புரிந்தது. நெட்டையன் போன் போட்டிருக்கிறான். இவளிடம் பேசியது போலவே பாண்டியிடம் பேசியிருக்கிறான். ‘அடியே.. சின்னப் புள்ள… எம்புருஷன் கோபக்காரன்டி.. ஒனக்குத் தெரியுமே. நானு அப்படின்னு அவருக்குத் தெரிஞ்சிடுமோன்னு பயமா இருக்குடி.. நெட்டையன் மெரட்ராண்டி’.

லேசான அதிகாலை வெளிச்சத்தில் பாண்டியின் முகத்தை உற்றுப் பார்த்தாள் முருகேஸ்வரி. பாண்டியின் கண்கள் கெஞ்சின.

‘இன்னொரு நாளு ஒன்ன கூப்பிடுறாண்டி.. நீ வராட்ட நானே போகனுமான்டி..’

முருகேஸ்வரி பேசவில்லை.

இவளுக்கு நேர் எதிர் பாண்டி. முருகேஸ்வரி மாநிறம். அவள் கருப்பு. இவள் ஒல்லி. பாண்டியோ குண்டு. அவளோ குடும்பப் பெண்.. இவளோ ஓடுகாலி…

‘ஆனா.. ரெண்டு பேருமே பொண்ணுங்க… ஒடம்பாள பொம்பளைங்க.. அதான் பெரச்சனையே’, என்று முருகேஸ்வரிக்குத் தோன்றியது. பேசாமல் திரும்பி நடந்தாள்.

அன்று மாலை இவள் தண்ணித்தூக்கும் குழாய்க்கே செல்லப்பாண்டி வந்துவிட்டான். கணக்கு நோட்டை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு பேசினான். அருகில் யாரும் இல்லை. தூரத்திலிருந்து பாண்டி குழாய்க்கு வந்து கொண்டிருந்தாள்.

‘முருகு.. நானு திங்கக் கெழமை மெட்ராஸ் போறேன். காலைல வைகையில டிக்கெட் போட்டுட்டேன். வந்துரு ஞாயிறு நைட்டு 12 மணிக்கு சுடுகாட்டுப் பாதையில பைக்கோட நிப்பேன் வந்துடு’, என்று சொல்லவும் பாண்டி அருகே வந்துவிட்டாள்.

‘என்ன பேச்சியிங்கே’ என்றான் அவளின் வழக்கமான குரலில்.

‘இல்லக்கா.. ஒங்க தங்கச்சி கணக்கு முடிஞ்சிடுச்சி.. அடுத்த தவண வேணுமான்னு கேட்டேன்’ என்று செல்லப்பாண்டி சமாளித்தான்.

முருகேஸ்வரி விலகி நடந்தாள். இடுப்பில் தண்ணீர் குடம் தளும்பியது. இவள் மனமும்தான்.

இரவுப் படுக்கப் போகும்போது பாண்டி மறுபடியும் கேட்டாள், ‘என்னடி நெட்டையனுக்கு என்ன சொல்ல?’

முருகேஸ்வரி யோசித்தாள். பின்னர் சொன்னாள்.‘ சந்தைக்குப் போறேன்னு சொல்லிட்டு செவ்வாய்க்கெழமை சாயுங்காலமா வாரேன்னு சொல்லுக்கா’, என்றவள் திரும்பிப் படுத்துகொண்டாள். வா வா என்றபடி சாவு போன்ற தூக்கத்துக்கு கெஞ்சினாள்.

தூக்கம் வரவில்லை. ஞாயிறா செவ்வாயா என்று தன்னையே கேட்டுகொண்டு உறங்காமல் படுத்திருந்தாள்.

மறுநாள் துவங்கி முருகேஸ்வரி ஊரை விட்டு வெளியே போகவில்லை. அந்த நெட்டையன் ஊருக்குள் வரமாட்டான். உள்ளூர் சின்ன ரெட்டியார் தோட்டத்தில் மட்டை எடுத்துக்கொண்டாள்.

ஞாயிறும் வந்தது. என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தபடியே நாளைக் கழித்தாள். ’என்னடி என்னிக்கும் ரெண்டு வார்த்தை பேசுவ.. இன்னிக்கு அதையும் காணோம்’ என்ற தனத்தக்காவுக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்தாள்.

இரவு எல்லோரும் படுத்த பின்னர் யோசித்தபடியே இருந்தவளுக்குத் தூக்கம் வரவில்லை. இப்போதெல்லாம் மின்சாரம் போகும் நேரம் பார்த்து மணி சொல்ல ஊருக்கே தெரிந்திருந்தது. 11 மணிக்கு வந்த கரெண்ட் போய்விட்டது. அப்படியனானால் மணி 12. சப்தமேயில்லாமல் எழுந்தாள். சரிதானா என்று யோசித்தாள். தெரியவில்லை.

கருவைக்காட்டு வழியாக சுடுகாட்டுப் பாதையை நெருங்கியபோது செல்லப்பாண்டியின் பைக் தெரிந்தது. இவளுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக பார்க்கிங் லைட் போட்டிருந்தான். இவளைச் சுற்றியிருந்த காரிருளுக்கு அது வெளிச்ச ஊற்றாகத் தெரிந்தது. நடந்தாள். அது வெளிச்சம் தானா? அல்லது மற்றொரு இருளின் தொடக்கமா?

தெரியவில்லை.. ஆனாலும் அதனை நோக்கி கால்கள் பின்னலிட நடந்தாள்.

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *