கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 3,045 
 

கொஞ்ச காலமாக இருட்டு என்னை அதிகமாக அலைக்கழிக்கிறது. அதுவும் சில நேரங்களில் என் உணர்வுகளை தூண்டி இனி வாழ்ந்துதான் என்ன பயன்? என்கிற எண்ணத்தையும் தூண்டி விடுகிறது.

இருபது வருட காவல் துறையில் நான் பார்க்காத பயமுறுத்தல்களா? மிரட்டல்களா? ஆனால் இந்த மூன்று மாத காலமாய் இருட்டு என் உள் மனதுக்குள் புகுந்து பல கேள்விகளை எழுப்பி விடுகிறது.

நடு இரவில் கூட எழுப்பி விட்டு இத்தகைய எண்ணங்களை உருவாக்கி விடுகிறது. சரி பகலிலாவது பலரிடம் பேச்சு கொடுத்து தப்பிக்க நினைத்தாலும் என்னுள் புகுந்து கொண்ட இந்த இருட்டு என் வாழ்க்கையில் நடந்த பல நினைவுகளுக்கு காரணமே நான்தான் என்பது போல் கொக்கரிக்கிறது.

என்னை வந்து பார்த்து விட்டு அன்பாய் பேசுவது போல் பேசிவிட்டு செல்பவர்கள் அந்த பக்கம் போனதும் இவன் செஞ்ச கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமா? அதுக்கெல்லாம் கடவுள் தண்டனை கொடுக்க வேண்டாமா? இப்படி பேசுவது என் காதுகளுக்கும் வந்து விழுகத்தான் செய்கிறது.

இபபொழுது என்னால் என்ன செய்ய முடியும்? என்கிற தைரியமாக இருக்கலாம்.

ஐயா என் புருசனை காப்பாத்துங்க அந்த பெண் தலை விரிகோலமாய் என்னிடம் வந்து நின்றது இப்பொழுதும் கண் முன்னால் நிற்கிறது.

அதே பெண் என்னை மண்ணை வாரி தூற்றி சென்றதும் ஞாபகம் இருக்கிறது. நான் என்ன செய்ய முடியும், இவள் குற்றம் சாட்டி பேசுபவர் பெரிய அரசியல்வாதி, அவரை எதிர்த்து நான் என்ன செய்ய முடியும்?

கிரிமினலோ, சிவிலோ எனக்கு இந்த காக்கி உடையும் தோளில் குத்தியிருக்கும் நட்சத்திர உலோகங்களும் பெரிய மதிப்பை தரும்போது என்னால் அதை கெடுத்து கொள்ள முடியுமா?

ஐயோ அந்த ஆபிசரா? பயம் வர உடலை ஒடுக்கி என் முன்னால் வந்து நிற்கும் ஒவ்வொருவரையும் பார்க்கும் போது என் மனசுக்குள் வரும் பரவசம், சரியான பின் புலம் இல்லாத விவகாரங்களை தகுந்த தான தண்டங்களின் மூலம் வாய் மூட வைத்த என் சாமார்த்தியம்,

நான் நல்லவனா கெட்டவனா? இப்படி எல்லாம் என்னை எண்ண வைத்து முடக்கி போட நினைக்கிறது இந்த இருட்டு. நானும் மூன்று மாதங்களாய் அதனிடமிருந்து தப்பித்து போவதற்கு என்னுடைய சாதனைகளையும், அரசு கொடுத்த பாராட்டுக் களையும், அரசியல் லாபங்களையும் நினைத்து தப்பித்து வந்து விட்டேன்.

கழிவறைக்கு கூட யாராவது கை பிடித்து அழைத்து செல்ல வைத்து விட்டேன் பார், இந்த இருட்டு என்னை பார்த்து நக்கலாய் சிரிப்பது போலத்தான் எனக்கு தெரிகிறது.

ஆரம்பத்தில் என்னை கை பிடித்து அழைத்து சென்ற பெண்கள் கூட தொடுதலில் நான் காட்டும் பாவனைகளை கண்டு கொண்டு ஒரு ஆண் உதவியாளரை எனக்காக விட்டு போயிருக்கிறார்கள்.

இந்த மூன்று மாதங்களாய் என்னை சித்திரவதை செய்து கொண்டிருக்கும் இருட்டு, என் தன்னம்பிக்கைகளை எல்லாம் பொடிப் பொடியாக்கி கொண்டிருக்கும் இருட்டு, அதற்கு முன்னால் எப்படி இருந்தது?

எனது களியாட்டங்களுக்கு துணை போனதுதானே. என்னை முழுவதுமாக மோசமாக்கியதும் இந்த இருட்டுத்தானே. நான் கையாலாகாமல் உன்னையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விட்ட பின்னால் தைரியமாய் என்னை பார்த்து சிரிக்கிறது, கொக்கரிக்கிறது.

இதை எல்லாம் விட்டு விட்டு வரப்போகும் காலங்களில் நாம் ஏன் மனிதனாக வாழக்கூடாது? இப்படி ஒரு எண்ணத்தை திடீரென மனதுக்குள் விதைத்தது இந்த இருட்டு. மனம் அதற்கு சரி என்று கூட சமாதானமாய் சொல்லி வைத்திருக்கிறது. பார்க்கலாம் நாளை என்ன நடக்கும் என்று?

மனசை ஸ்டெரெயின் பண்ணாம அப்படியே உட்கார்ந்திருங்க, இப்ப கண் கட்டை அவுக்க போறேன். மெல்ல மெல்ல கண்ணை திறங்க.

மெல்ல..மெல்ல.. மனம் முழுக்க பயத்துடன் கண்ணின் இமைகளை விரிக்க

எதிரே..வெள்ளை கோடுகளாய் ஆரம்பித்து சிறிது சிறிதாக அழுத்தமாக்கி அது ஒரு கோட் என மூளைக்குள் உறைக்க கண்களை மெல்ல உயர்த்தி பார்க்க, அழகிய பெண்ணின் முகம் புன்சிரிப்புடன்

அழகிய முகத்தில் மனம் கரைய ஓஹோ..ஓஹோ.. இருட்டு என்னை விட்டு விலகி விலகி ஓட வெளிச்சத்தின் வக்கிரங்கள் மனதுக்குள் புகுந்து கொண்டது.

நல்லா தெரியுதா? பின்புறமிருந்து ஆண் டாக்டரின் குரல்.. தெரியுது டாக்டர்..ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், நான் நல்லாவேன்னு நினைச்சு கூட பார்க்கலை..

நோ நோ எங்க கடமையைத்தான் செஞ்சோம், அதுவும் நீங்க இந்த ஊர்ல பெரிய காவல் அதிகாரி, ஒரு குற்றவாளியை பிடிக்க போறப்போ அவன் உங்க முகத்துல ஆசிட் வீச முயற்சி பண்ணியிருக்கான், நல்ல வேளை அது உங்க கண்ணை பாதிக்காம தப்பிச்சிட்டீங்க டாக்டர் சொல்லிக்கொண்டிருக்க..

ஆசிட் வீசியவன் குற்றவாளியா? அவனை என் மீது வீச செய்யும் அளவுக்கு நான் செய்தது என்ன? ஒவ்வொன்றாய் மனதுக்குள் வர இருடா..மகனே.. வர்றேன்,.உடல் முறுக்கியது.

அடுத்த முறை அவனை சந்திக்கும்போது மொத்த இருட்டுக்குள் என்னை அனுப்ப அவன் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான் என்பது தெரியாமலே..

இந்த இருட்டு பொல்லாதது. நன்றாய் இருக்கும் வரை நம்மிடம் அடங்கியிருக்கிறது, ஏதாவது நடந்து படுக்கையில் கிடந்து போனால் அவ்வளவுதான்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *