இடுக்கண் களைவதாம் நட்பு!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 5,656 
 
 

உங்களில் எத்தனை பேர் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தினமும் மாலையில் நடக்கப் போவீர்கள்?

அப்படியானால் உங்களுக்கு இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான்! கண்டிப்பாக இவர்களைப் பார்த்திருப்பீர்கள்!

ஆனால் வேறு விவரம் ஒன்றும் தெரிய நியாயமில்லை! தெரிந்து கொண்டால் தேவலை என்றுதானே இப்போது நினைக்கிறீர்கள்! எனக்கும் அதே ஆர்வம் தான்!

தயவு செய்து பயங்கர கற்பனையில் இறங்கிவிடாதீர்கள் இவர்கள் யாரும் பதினாறும் நிறையாத பருவ மங்கைகள் கிடையாது!

எல்லாருமே எழுபது எண்பதுகளில் இருப்பவர்கள்! தலை நரைத்து , வழுக்கை விழுந்தவர்கள்!

இப்போது சுவாரசியம் கொஞ்சம் குறைந்திருக்குமே!!!

பீச்சில் நடக்க வருபவர்கள் சிலர்…. உட்கார்ந்து காத்து வாங்குபவர்கள் பலர்…..நண்பர்களுடன் உட்கார்ந்து ஒரு மணிநேரம் அரட்டை அடித்து விட்டு போகிறவர்கள் ஒருசிலர்!!

நமது கதாநாயகர்கள் மூன்றாவது ரகம்! நேராக வந்து அவர்கள் எப்போதும் உட்காரும் இடத்தில் ஒவ்வோருத்தராய் உட்காருவதே அழகாக இருக்கும் !

எண்ணிக்கொள்ளுங்கள் ! மொத்தம் ஆறு பேர்! போன வருஷம் வரை ஏழு பேராயிருந்தவர்கள்!

யாருடைய கண் பட்டதோ பரமு என்ற பரமேஸ்வரன் திடீரென்று மாரடைப்பில் போய்விட்டார்!

நண்பர்கள் எல்லோருமே மனதளவில் தங்களது இறுதி யாத்திரைக்கு தயாராகிவிட்டிருந்தாலும் அதை எதிர் கொள்ளும்போது ஆடித்தான் போனார்கள்!

சரி இப்போது இருப்பவர்களை பார்க்கலாம்!

கோபாலன் வயதில் எல்லோருக்கும் மூத்தவர்!

எண்பத்து மூணு வயது!

கும்பகோணம் சொந்த ஊர்! நாலு வருஷம் முன்னால் ஸ்ட்ரோக் வந்தபின் அவரது மனைவி விஜயா வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் கண்டிப்பாய் வெளியே போகக்கூடாது என்று கூறிவிட்டாள்! 5th அவென்யூவில் தான் வீடு! நடந்தே வந்துவிடுவார்!

வயதில் மூத்தவர் என்பதாலும், ரொம்ப முன்கோபக்காரர் என்பதாலும் மற்றவர்கள் அடக்கியே வாசிப்பார்கள்!

இரண்டு பையன்கள்!

இருவரும் அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்!

இந்தியா வர நேரமில்லை!

ஆனால் வாரம் ஒரு முறை பேசிவிடுவார்கள்!

கோபாலனும் நல்ல வேலையிலிருந்ததால் கைநிறைய பென்ஷன்….

கவலைப்படஒன்றுமில்லை!

அடுத்தது சர்மா!

பெயரைப் பார்த்து வடக்கத்தியர் என்று எண்ண வேண்டாம்! அசல் தஞ்சாவூர்!

முழுப் பெயர் விஸ்வநாத சர்மா! வயது எண்பது.. சர்மா என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தமாம்!

உண்மையாகவே எப்போதுமே சிரித்த முகம்! யாரையும் அதிர்ந்து ஒரு வார்த்தை சொல்லாத சுபாவம்! ரொம்ப நிதானம். அமைதியின் இருப்பிடம்…..

அதனாலேயே சர்மா சொன்னால் சரியாயிருக்கும் என்று எல்லொருடைய ஏகோபித்த ஆதரவைப்பெற்றவர்!

குழந்தைகள் இல்லை! அவரும் , மனைவி சுபத்ராவும் அன்னியோனிய தம்பதிகள்! வீடு வரசித்தி விநாயகர் கோவிலுக்கு பக்கம்தான்!

அண்ணாமலைக்கு எழுபத்தைந்து வயது இருக்கும்!

பார்த்தால் அவ்வளவு மதிக்க தோணாது! நல்ல டிரிம்மான உடம்பு!

இரண்டு வருஷமாகத்தான் டென்னிஸ் விளையாடப் போவதில்லை !

ஊர் காரைக்குடியில் பள்ளத்தூர்! ஏகப்பட்ட சொத்துக்கள்! சொந்த ஆடிட்டிங் கம்பெனி….கணக்கு வழக்குகள் விரல் நுனியில்!

எல்லோருக்கும் இவர் financial advisor! ரொம்பவே யதார்த்தவாதி…

ஆனால் வீட்டில் எப்போதும் பிரச்சினைகள்! மனைவியும் மூன்று பையன்களும்.

இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள்!

அண்ணாமலை அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

வேலையும் நண்பர்களும்தான் அவரது உலகம்!

குரியன் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் !

அவருக்கும் அண்ணாமலையின் வயதுதான் இருக்கும்! மனைவி மைதிலி பாலக்காட்டைச் சேர்ந்தவர்!

இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்!

எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பொருளாதாரத்தில் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்!

குரியன் பள்ளிக்கூட ஆசிரியர்…. ஒரே மகள்‌ சாவித்திரி….

Astrophysics படித்துவிட்டு திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்கிறாள்!

முப்பத்தைந்து வயதாகிறது! திருமணம் வேண்டாமென்று கூறிவிட்டாள்! அமைதியான , எளிமையான குடும்பம்!

குரியன் நிறைய படிப்பவர் ! ரொம்ப ஜாலி பேர்வழி!

நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டால் அப்படியே பேச்சைத் திருப்பி சிரிக்க வைத்துவிடுவார்.

ரங்கராஜன் வயதில் எல்லோரையும் விட சின்னவராயிருந்தாலும் பார்ப்பதற்கு கொஞ்சம் தளர்ந்தவராய் தெரிவார்!

ஒரு கோவில் குளம் விடமாட்டார்! நெற்றியில் எப்போதும் திருமண்!

நல்ல பணக்கார வீட்டில் இருந்து வந்த பெண் தேவகி! ஒரு பெண் துபாய்! பையன் சிங்கப்பூர்!

ஆனாலும் முகத்தில் ஒரு நிரந்தர சோகம்!! திடீரென்று அமைதியாகி விடுவார்! ஒன்று இரண்டு தடவை திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து போனதும் உண்டு!

இதோ கடைசி கதாபாத்திரம்! பசுபதி ராவ்! மங்களூர்காரர்! சென்னையில் குடியேறி பல வருஷம் ஆகிவிட்டது ! ஆனாலும் தமிழ் கொஞ்சம் தடுமாறும்!

சக்கர நாற்காலியில் தான் வருகை! குடும்ப சொத்தாக சர்க்கரை நோய்…. இன்சுலின் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்!

காலிரண்டிலும் நரம்புகள் பாதிப்பால் வெளியில் வருவது சக்கர நாற்காலியில்தான்!

மூணு வருஷம் ஆச்சு மனைவி சுஜாதா போய்! கொஞ்சம் கூட சுய பச்சாதாபம் கிடையாது! யாரும் இரக்கம் காட்டுவது சுத்தமாய் பிடிக்காது!

இரண்டு பெண்கள்! இரண்டு பேரும் டாக்டர்!

ஒருத்தி லண்டன்!

இரண்டாவது பெண்ணும் மாப்பிள்ளையும் திருவான்மியூரில் பெரிய கிளினிக் வைத்திருக்கிறார்கள்.

அப்பா கண்டிப்பாக கூட இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார்கள்!

பேரன்கள் இரண்டு பேருக்கும் தாத்தா என்றால் உயிர்!

பெசன்ட் நகரில் , கடற்கரைக்கு எதிர் புறமாக பெரிய வீடு!

பசுபதியைப் பார்த்துக்கொள்ள தனியாக குமார்!

சாயங்காலம் ஒரு மணிநேரம் பீச்சில் அரட்டை! சிறந்த பாசிட்டிவ் மனிதன்… வேறென்ன வேண்டும்?

இதில் குரியனைத்தவிர எல்லாருக்குமே நரைத்த தலை! கோபாலன் முழு வழுக்கை! அண்ணாமலைக்கு நரைத்த முடி ஆனால் அடர்த்தியான கேசம்!

குரியன் மீன் சாப்பிடுவதால்தான் முடி நரைக்கவில்லை என்பது அனைவரின் ஏகோபித்த கருத்து!!

இரண்டு வருஷமாக தொடரும் நட்பு! ஆழமாக பிரிக்க முடியாதபடி வளர்ந்துவிட்டது! இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் பீச்சில் சந்திப்பதோடு சரி! யாரும் யார் வீட்டுக்கும் போனதில்லை! அதற்கு அவசியமும் இல்லை !

பரமேஸ்வரன் போனபோது கூட நேரில் போய் துக்கம் கேட்கவில்லை! செய்தி அறிந்ததும் நண்பருக்கு இரண்டு நிமிஷம் அஞ்சலி செலுத்தினார்கள்!

சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் மீறிய நட்பு இவர்களுடையது!

இவர்களுக்குள் சாதி மத பேதமோ , ஒளிவு மறைவோ , வரட்டு கௌரவமோ எதுவுமே இல்லை!

‘ உவப்பத் தலை கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’ என்பதற்கு இவர்களது நட்பு ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்!

இவர்கள் எங்கே எப்படி முதலில் சந்தித்துக் கொண்டார்கள் என்று பார்ப்போமே!

சர்மா வெள்ளிக்கிழமைகளில் பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு போவது வழக்கம்!

கோபாலனும் போயிருக்கிறார்! அங்கிருந்து பீச்சுக்கு நடக்கக் கிளம்பினார் சர்மா!

பத்தடி முன்னால் கைத்தடியுடன் கோபாலன்! பீச் ரோடை க்ராஸ் பண்ணும் போது வேகமாய் வந்த ஸ்கூட்டர் இடித்து விட்டது!

பதினைந்து வயது கூட இல்லை அந்தப் பையனுக்கு! நிறுத்தாமல் போய்விட்டான்!

நல்ல வேளை! கீழே
விழப்பார்த்த கோபாலனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார் சர்மா!

கோபாலன் கோபத்தில் கத்த கூட்டம் சேர்ந்து விட்டது!

அவரைக் கூட்டிக்கொண்டு இதோ இப்போது உட்காரும் இடத்தில் இருக்கச் செய்து கொண்டு வந்த தண்ணி பாட்டிலைத் திறந்து குடிக்க வைப்பதற்குள் அந்தப் பாடு படுத்தி விட்டார்!

” Bloody bastard! இவனுக்கு லைசென்ஸ் கூட இருக்காது! என்ன திமிர்! நாளைக்கு , ‘ letters to the editor’ ல் எழுதிப் போடப்போறேன்!

” Besant Nagar Beach! Beware Senior Citizens!!!’

கோபமெல்லாம் அடங்கின அப்புறம்தான் அறிமுகமே !

இரண்டு பேரும் டாண்ணு ஐந்து மணிக்கு பீச்சில் ஆஜர்!

இப்படி இரண்டு மாசம் போயிருக்கும்! நிறைய விஷயங்கள் பேசுவதற்கு இருந்தது! வழியில் வீல்சேரில் ராவ் உட்கார்ந்திருப்பார்!

அவருக்கு முன்னாலிருக்கும் இருக்கையில் அன்றைய தினசரி, , தண்ணீர் பாட்டில் , ஒரு சின்ன டப்பா ( ஏதாவது நொறுக்குத்தீனி) வைத்துவிட்டு கூட வந்த பையன் எதிரே பீீச்சைப் பார்த்து உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாலும் ஒரு கண் அவர் மேலேயே இருக்கும்!

வெறும் ஒரு ஹலோ….!!! இவருடன் அந்த அளவுக்குத் தான் பரிச்சயம்!

ஒரே நாள் அந்தப் பையன் இவர்களிடம் வந்து ” சார்! எனக்கு அவசரமாய் வீடு வரைக்கும் போவணும்!

இங்க ஊரூர் குப்பத்திலதான் ‌! பத்து நிமிஷத்துல வந்திருவேன்! சார உங்க கிட்ட உக்கார வெச்சிட்டு போலாங்களா? ”

பவ்யமாய் கேட்ட விதம் பிடித்துப்போனது! சரியாக பத்து நிமிஷத்தில் திரும்பி வந்தான்! ஆனால் ராவ் இவர்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார்!!

மூன்று பேரும் சேர்ந்து கொண்டால் பொழுது போவதே தெரியாது!

மூன்று பேரும் நிறைய ஊர்சுற்றிப்பார்த்த ஆட்கள்! அந்த கால அனுபவங்களை அசை போடுவதே ஆனந்தம் தான்!

ஒரு மாசம் கூட இருக்காது! குமார் வழக்கமாய் வீல் சேரில் க்ராஸ் பண்ணி இவர்கள் உட்காரும் இடத்தில் கொண்டு வரும்போது இடைவெளியே இல்லாமல் கார்கள் நிறுத்தியிருந்தது!

அவன் தவிப்பதைப்பார்த்த ஒருவர் உடனை ஓடி வந்து ” சாரி.. ஸார்…!! ஒரு நிமிஷம் காரை நகர்த்தி விடறேன்!”

பதிலுக்குக் கூட காத்திருக்காமல் காரை ரிவர்ஸ் பண்ணி இடம் பண்ணி கொடுத்து விட்டார்!

” I’m Annamalai! M.G. road ல் ஆடிட் ஆபீஸ் ! வீடு M.R.C. Nagar ‘ காலேல வந்தா வீட்டுக்குப் போக ஒம்பது மணியாயிடும்! நடுவில் ஒரு பிரேக்… ! முருகன் இட்லியில்‌ ‌ டிபன்! சின்ன நடைப் பயிற்சி… Back to work”

அண்ணாமலை நிஜமாலுமே ஒரு charming personality! இப்போது ஆறிலிருந்து ஏழு வரை இவரும் சேர்ந்து நாலுபேர்……

குரியன் சேர்ந்து கொண்டதும் தானாக நிகழ்ந்துதான்!

ஆறு பேரில் முதலில் வருவது ராவ்! குமார் அவரை‌க் கூடிக்கொண்டு வந்து எல்லாவற்றையும் எடுத்து வைத்து newspaper ஐயும் விரித்து வைப்பான் !

ஒரு நாள் அவர் வரும்போது அதே இடத்தில் இரண்டு பேர் உட்கார்ந்து மலையாளத்தில் சம்சாரித்துக்கொண்டிருந்தார்கள்! இவரைப் பார்த்து சட்டென்று எழுந்து விட்டார்கள்…

” சாரி…. நீங்க எப்போதும் இங்கே உட்கார்ந்து கொள்ளுவீங்க இல்லையா? நாங்கள் எழுந்து கொள்கிறோம்..”

“No! No! இங்கேயும் ரிசர்வேஷனா….??

Please continue…” என்றவரை விடவில்லை!

நான் வர்கீஸ் குரியன்.. ! இவர் என் நண்பர்! தாமஸ்! எர்ணாகுளத்திலிருந்து வந்திருக்கார்! இப்ப கிளம்பிட்டே இருக்கார்!

அப்புறம் ராவும், குரியனும் பேசிக்கொண்டு இருக்கும் போது மற்றவர்கள் வந்துவிட்டார்கள்!

” குகனுடன் சேர்ந்து ஐவரானோம் என்று கம்பராமாயணத்தில் ராமர் சொன்னதுபோல் இவர்கள் ஐவரானார்கள் “

ரங்கராஜன் கதை கொஞ்சம் வேற மாதிரி ! நிறைய தடவை இவர்களைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்து இருப்பார் !

சிறிது தள்ளி! அவர்களின் பேச்சும் சிரிப்பும் இவருக்கு பொழுது போவதே தெரியாது!

எத்தனையோ தடவை அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாமா என்று கூட தோன்றும்! ஆனால் இவரது கூச்ச சுபாவம் தடுத்து விடும்!

ஒரு நாள் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக்கொண்டு அவர்கள் பக்கத்தில் போய் நின்றார் ….

” ஹலோ….வாங்க சார்…” குரியன் தான் ஆரம்பித்தார்!

” உட்காருங்களேன் “

” தினமும் உங்களைப் பார்த்துக் கொண்டு ‌இருப்பேன்! என் பேர் ரங்கராஜன்! அடையார் டீச்சர்ஸ் காலனியில் வீடு”

” உக்காருங்க sir! Join us if you don’t mind ”

” With pleasure “

சரியாக கடிகாரத்தில் மணி பார்த்தீர்களானால் ஐந்திலிருந்து ஐந்தரைக்குள் ஒவ்வோருத்தராய் வர ஆரம்பிப்பார்கள் !

ஆறுக்குள் எல்லோரும் வந்துவிடுவார்கள்…! ஏழு மணி வரை அரட்டை!

இதில் அண்ணாமலையும் குரியனும் வருஷத்தில் இரண்டு முறை பத்து நாள் காணாமல் போவார்கள்! சொந்த ஊர் பயணம்!

சர்மா வருஷம் ஒரு தடவை டூர்!

மற்றவர்கள் அனேகமாய் இங்குதான்!

இவர்கள் அரட்டையின் ஒரு சாம்பிள்… …

” இந்த சபரிமலை contovery தேவையா? ”

” என்ன கோபாலன் இப்படி கேட்கிறீங்க? பெண்கள் போறதில் என்ன தப்பு? “

” கோவில் பக்கமே எட்டிப்பாக்காத பெண்கள்தான் பிரச்சனையே பண்றாங்களோன்னு தோணுது!” சர்மா சார்!”

” விராட் கோலி இந்த மாட்சில் பின்னிட்டானே! சச்சினெல்லாம் கிட்ட வர முடியாது!”

அண்ணாமலைக்கு சச்சினை விமரிசித்தால் பிடிக்காது! தெய்வம் மாதிரி!

” என்ன ராவ் காரு! விராட்டே சச்சின்தான் என் ரோல் மாடல்ன்னு சொல்லியிருக்கார்!”

ரங்கராஜனுக்கு சிவாஜி என்றால் உயிர்! குரியன் மலையாள சினிமாவை விட்டுத்தரமாட்டார்!

” மோகன்லால் , மம்முட்டி , திலகன் , நெடுமுடி வேணு, சத்யன் ! இவங்க ஒவ்வொருத்தரும் சிவாஜிதான்!”

” குரியன் ஸார் ! நாகேஷூக்கு சும்மா ஒருத்தர சொல்லுங்கோ பார்ப்போம்! சர்வர் சுந்தரத்தில ‘ அம்மாவோட பாசத்துக்கு உதாரணமாக ஒரு கதை சொல்லுவான் பாருங்க! “

இவர்கள் அரசியல் பேசுவதை விட்டு நாளாச்சு! இவர்களுக்கு இப்போது யார் மீதும் நம்பிக்கை இல்லையாம்!

ஆனால் இந்தியாவின் எதிர்காலம் ரொம்ப பிரகாசமாய் இருக்கும் என்று ஒட்டுமொத்தமாக நம்பிக்கை வைத்திருக்கும் optimists!

கதையின் க்ளைமாக்ஸ் வருவதற்குள் பரமேஸ்வரனை அறிமுகம் செய்வது அவசியம் என்று தோன்றுகிறது!

பரமுதான் கடைசியில் ஒட்டிக்கொண்டவர்! நமது கதாநாயகர்கள் மும்மரமான ஒரு சர்ச்சையில் ஈடுபட்டிருக்கும் சமயம் சற்று தொலைவில் உட்கார்ந்திருந்த முதியவர் ஒருவர் திடீரென்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலியில் துடிப்பது தெரிந்தது!

சர்மாவும் குரியனும் உடனே பக்கத்தில் போனார்கள்!

வேர்த்துக்கொட்டியபடி ஷர்ட் பாக்கெட்டைத் தொட்டு சைகை செய்தார்! அதில் நைட்ரோ கிளிசரின் மாத்திரை இருந்தது !

அண்ணாமலை காரை எடுக்கத் தயாரானார்! ஆனால் முதியவர் மறுத்து விட்டார்! பத்து நிமிடத்தில் சரியாகி விட்டது!

அப்புறம் என்ன? ஆறு பேர் ஏழுபேரானார்கள்!

பரமு என்ற பரமேஸ்வரன் ஒரு இருதய நோயாளி….இரண்டு அட்டாக்கில் தப்பிப் பிழைத்தவர்!

ஒரே பெண்ணுக்கு சீரும் சிறப்புமாய் கல்யாணம் செய்தார்! ஆரம்பத்திலிருந்தே பிரச்சினை !

அடியும் உதையும் வாங்கிக்கொண்டு எத்தனையோ நாள் வீட்டுக்கு வருவாள்!

இவரும் கற்பகமும் சமாதானம் செய்து அனுப்பி வைப்பார்கள்! ஆனால் கடைசியில் திரும்பி வர முடியாத இடத்துக்கு போய்விட்டாள்!

கற்பகம் ஒரு வருஷம் தான் அவளை விட்டு பிரிந்து இருந்தாள்! பரமுவும் தன்னுடைய நேரத்துக்கு காத்திருக்கிறார்!

பரமு போனதில் ரொம்பவே ஒடிந்து போனவர் ரங்கராஜன் தான் !

ஒரு மாசம் வரை அவரையே நினைத்துக் கொண்டு இருந்தார்!

சில நாள் ‘ நா வரேன் சார்! மனசே சரியில்லை’ என்று கிளம்பி விடுவார்!

ஒரு நாள் யாரும் எதிர்பார்க்காமல் பெரிதாக அழ ஆரம்பித்தார் !

குரியன் தான் எல்லோரிடமும் ‘ அழட்டும் ! விட்டு விடுங்கள்’ என்று சொல்லி சிறிது நேரம் பேசாமலிருந்தார்கள்!

பத்து நிமிடம் போயிருக்கும்! கண்ணைத் துடைத்துக் கொண்டு ரங்கராஜன் பேச ஆரம்பித்தார்!

” நான் முதல்ல உங்ககிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கணும்! என்னைப் பற்றி நான் சொன்னதெல்லாம் சுத்த பொய்! உங்களை ரொம்ப நாளாகவே பாத்துண்டிருந்தேன்!

உங்களுடன் சேர்ந்துக்க மனசு ஆசைப்படும்!

ஆனால் நீங்களெல்லாம் சிரித்து பேசறததைப்பார்த்தப்போ எல்லோருமே குடுத்து வைத்தவர்கள்!

பிரச்சனையோ கவலையோ இல்லாதவர்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டேன்!

நம்முடைய பிரச்சினை நம்மோடு போகட்டும்! இவர்களாவது சந்தோஷமாயிருக்கட்டும் என்று நினைத்து விட்டேன்!

அதனால் தான் உங்களிடம் குடும்பத்தைப் பற்றி நிஜத்தை மறைத்து விட்டேன்!

ரங்கராஜன் சிறிது அமைதியாய் இருந்து விட்டு தொடர்ந்தார்!

” உங்களிடம் பேசின கொஞ்ச நாளிலேயே எனக்கு புரிந்தது!

ராவ், அண்ணாமலை , சர்மா யாருமே அவர்களுக்குள்ள பிரச்சினைகளை பெரிதாகவே நினைக்கவில்லை!

அதுவும் பரமின் கஷ்டத்தை நீங்கள் பகிர்ந்து கொண்டபின் அவரது மனசு லேசானதைப் பார்த்தேன் .

ஆனாலும் எனக்கு தைரியம் வரவில்லை! பரமேஸ்வரன் போனப்புறம்தான் எனக்கு தோணித்து !

நண்பர்கள் எதுக்கு இருக்கிறார்கள்? அவர்களிடம் பொய் சொன்னால் அது நட்பை களங்கப்படுத்துவதாகாதா?

என்னுடைய மனைவி தேவகி , எனக்கு ஒரு பையனும் , பெண்ணும் என்பது மட்டும் தான் உண்மை!

பையன் மூத்தவன் பத்தாவது வரை நன்றாகத்தான் படிததுக்கொண்டிருந்தான்!

அப்புறம் அவனுடைய நடவடிக்கைகள் மாற்றத் தொடங்கியது! சிகரெட் , குடி என்று சீரழிந்து போனான் !

குடித்துவிட்டு தெருவில் கிடந்த அவனை யாரோ பார்த்து வீட்டில் விட்டபோது நன்றாக அடித்து விட்டேன்! அப்போது ஒடிப்போனவன்தான்! எங்கே இருக்கானோ?

பவானி செய்ததோ அதைவிட மோசம்! பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே பக்கத்து வீட்டு கார் டிரைவருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டாள்!

அவன் ஏற்கனவே குழந்தை குட்டியுடன் இருப்பவன் ! திரும்பி எட்டிக்கூட பார்க்கவில்லை!

குழந்தை கூட இருப்பதாய் கேள்வி! ரோஷக்காரி!

தேவகி இப்போது ஒரு மனநோயாளி…! பார்த்து பார்த்து பண்ண வேண்டும்!

உயிரோடு குடும்பத்தையே பறி
குடுத்துட்டு நிற்கிறேன், கோபாலன்”

யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை! மௌனம் கூட ஒரு மொழிதானே ! அன்றைக்கு எல்லோருமே மனபாரத்துடன்தான் பிரிந்தார்கள்!

இப்போதெல்லாம் ரங்கராஜன் முகத்திலிருந்த சோகம் மெல்ல மெல்லக் குறைந்தது விட்டது!

நீங்கள் மறுபடி பீச் பக்கம் நடக்கப் போனால் இவர்களை சுலபமாக அடையாளம் கண்டு பிடிப்பீர்கள்தானே!

ஆனால் தெரிந்தமாதிரி காட்டிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் சுதந்திரத்தில நாம் ஏன் தலையிட வேண்டும்???

குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
உரை: http://www.thirukkural.com/2009/02/blog-post_24.html#787

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *