ஆசையின் எல்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 3,773 
 
 

ராமநாதனுக்கு வெயிலோ, உடம்பை எரிக்கும் அந்த அனல் காற்றே ஒன்றும் விசேஷமாகப் படவில்லை. தூரத்தில், அந்தண்டைக் கோடியில், ‘கார்டு’டன் வம்பு அடித்துக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், அவருடைய கோலத்தையும் பார்த்துத் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். வண்டி முழுவதும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தபோது, இவன் மட்டும் இன்பலாகிரியில் கிறங்கிக் கிடந்தான்.

போன வாரம்தான் சுவாமி மலைக்குப் போய்விட்டு வந்தான். அதற்குள்ளாக மறுபடியும் பிரயாணம்!…

சுவாமிமலையை விட்டுப் புறப்படுவதற்கு முதல் நாள் இரவு. கையில் பால் டம்ளருடன் ருக்கு நின்றுகொண்டிருந்தாள். ராமநாதனுக்கும் அவளுக்கும் ஏதோ தர்க்கம் நடந்துகொண்டிருந்தது…

“பைத்தியக்காரி! இப்போது தான் படாத பாடு பட்டு லீவு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன், அதற்குள் அடுத்த வாரம் இன்னொரு தரம் துரை லீவு கொடுப்பானா? அசட்டுத் தனமாகப் பிடிவாதம் பிடிக்கிறாயே!”

“ஆமாம்! எல்லாம் மனசிருந்தால் மார்க்கம் இல்லாமலா போய்விடும்?”

“ருக்கு, இதோ பார்! இன்னும் குழந்தையாகவே இருக்கிறாய். என்னைக் காட்டிலும் உன்மேலே அதிகப் பிரியம் உள்ளவர் யாராவது உண்டா? நான் என்ன செய்யட்டும், சொல்லு. பணம் செலவழிக்க நான் கவலைப்பட வில்லை. ஆனால் லீவு கிடைக்க வேண்டுமே?” என்று ராமநாதன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

இரண்டு பேரும் யோசனையில் மூழ்கியிருந்தார்கள். ‘புதுக் குடித்தனம்’ வைத்த பிறகு இப்பொழுதுதான் முதன் முறையாகப் பிரியும் அந்த இளம் தம்பதிகளுக்கு ஒரு நிமிஷப் பிரிவு கூடச் சகிக்கொணாததாகத் தோன்றியதில் வியப் பொன்றும் இல்லை.

திடீரென்று ருக்கு சொன்னாள் : “எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆனால்…”

“என்ன, என்ன விஷயம் சொல்லேன்!” என்றான் ராமநாதன் வெகு ஆவலுடன்.

“வேறு ஒன்றுமில்லை. எனக்கு உடம்பு சரியாக இல்லை யென்று அப்பாவை விட்டு ஒரு பொய்த் தந்தி கொடுக்கச் சொல்கிறேனே! அதை ஆபீசில் காட்டி…”

அவன் பேசி முடிப்பதற்குள், ராமநாதன் குறுக்கிட்டான் “சீ, சி! அசடு! அந்தமாதிரி அச்சான்யமாக எதுவும் செய்து விடாதே! உனக்குத் தலைவலி என்கிற வார்த்தை கூட என் காதில் பட வேண்டாம்.”

இந்த ஆட்சேபணை ருக்குவின் காதில் ஏறவில்லை. “உங்களுக்கு இங்கே வர மனசில்லை. அதற்காகத்தான் இந்த நொண்டிச் சாக்கெல்லாம் சொல்கிறீர்கள்” என்று குறை கூற ஆரம்பித்தாள். முதலில் ராமநாதன் ருக்குவைச் சமாதானப்படுத்த வேறு வழியில்லையென்று இந்த யோசனையை ஏற்றுக்கொண்டான். ஆனால், சிறிது நேரத்தில் அவன் மனம் இப்படித்தான் எண்ணியது, “ஆஹா, ருக்குவைத் தவிர வேறு யாருக்காவது இந்த மாதிரி யோசனை தோன்றுமா? என்ன இருந்தாலும் ருக்குவின் புத்திசாலித்தனம் அலாதிதான்!” கன குஷியுடன், அடுத்த வாரம் ருக்குவைச் சந்திக்கப் போகும் உற்சாகத்துடன், மறுநாள் ராமநாதன் சென்னைக்குப் பயணமானான்…

திங்கள்கிழமை பிற்பகல் ஆபீசுக்கே வந்து சேர்த்தது தந்தி:

“ருக்கு அபாயம். உடனே புறப்படவும் – வைத்தீசுவர ஐயர்”.

ராமநாதன் முன்னே, பின்னே ஒரு நாடகத்தில், ஒர் ‘எக்ஸ்ட்ரா’ வேஷம் கூடப் போட்டுக் கொண்டதில்லை. ஆனாலும், அப்பா! அவன் ஆபீசிலே நேற்று படுத்திவைத்த பாடும், அலறின அலறலும்! முதல் காரியமாகத் துரை அவனுக்கு லீவு ‘சாங்க்ஷன்’ செய்து விட்டு, ‘அவனுடைய மனைவி குணமாக வேண்டுமென்று ஆண்டவனைப் பிரார்த்தி’ப்பதாகவும் தெரிவித்து அவனை அனுப்பி வைத்தார்.

ராமநாதன் துரையின் புத்திசாலித் தனத்தை நினைத்துக் கொண்டு வாய்விட்டுச் சிரித்தான், ருக்குவின் உடம்பு குணமாகப் பிரார்த்திக்கிறாராம்! இன்னும் கொஞ்சம் மூளையைக் கொடுக்கும்படி அந்த ‘ஆண்டவனை’ வேண்டுவது தானே!….

வண்டியின் ‘கடக், கடக்’ சப்தம் நின்றது; ராமதாதன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். மாயவரம் ஜங்ஷன் – சனியன் பிடித்த வண்டி இங்கே அரை மணி நேரம் நிற்கும்! கொஞ்சம் ‘பிளாட்பார’த்தில் இறங்கி, காப்பி சாப்பிட்டு விட்டு வந்தால்கூடத் தேவலை.

காப்பி சாப்பிட்டுவிட்டு, வெற்றிலையும் போட்டுக்கொண்ட பிறகு, ராமநாதன் தன்னைச் சுற்றி இருக்கும் ஸ்டேஷன் கோலாகலங்களைக் கவனித்துப் பார்த்தான்.

‘டாய்லட்’ சாமான் விற்பவன் பக்கத்தில் நின்று கொண்டு, ஆரஞ்சுப் பழக்காரனுக்கும், வண்டியிலிருந்த ஒரு கிழவருக்கும் கடந்து கொண்டிருந்த ‘லடா’வை நிரம்பச் சுவாரஸ்யமாகக் கவனித்துக் கொண்டிருந்தான். ‘டாய்லட்’ தட்டிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த ரிப்பன் ராமநாதனைத் தொட்டதும், ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.

பட்டணத்தில், ஆபீசுக்குப் போகும் ஒவ்வொரு தினமும், ருக்கு ராமநாதனுக்கு ஞாபகப் படுத்திக்கொண்டிருப்பாள், ஓரத்தில் மெல்லிய சரிகை போட்ட கறுப்புக் கரை ரிப்பன் அரை டஜன் வாங்கி வரும்படி; அவனம் தினம் மறந்து கொண்டே இருப்பான்.

ருக்குவுக்கு அதிர்ஷ்டம் தான், மாயவரத்தில், எதிர்பாராத சமயத்தில், அதே கறுப்புக் கரை ரிப்பன் அவன் எதிரில் வந்து நாட்டிய மாடுகிறது! அரை டஜனுக்கு ஒரு டஜனாக வாங்கிப் பையில் போட்டுக்கொண்டான். சில்லறையைக் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறுவதற்கும், அது கிளம்புவதற்கும் சரியாக இருந்தது.

அந்தக் கறுப்பு ரிப்பனுடன் ருக்கு எப்படிக் காட்சியளிப்பாள் என்று ஒரு கணம் ராமநாதன் தனக்குள் கற்பனை செய்து பார்த்துக்கொண்டான். கரு நாகம் போன்ற அந்தக் கூந்தலுக்கு இந்தக் கறுப்புக் கரை ரிப்பன் நிரம்பப் பொருத்தமானது தான். ருக்கு எற்கெனவே நல்ல அழகி, எட்டு மாதக் கர்ப்பம் அவளுடைய அழகுக்கு மெருகு கொடுத்திருந்தது. வெகு மோஹனமான உருவம்…..ராமநாதன் அந்த அழகுக் கற்பனையில் தன் ‘சிந்தை திறை கொடு’த்து விட்டான்.

‘வெட்டிவேர்’ என்று அவன் காதுக்கருகில் யாரோ கத்தியதற்கப்புறம் தான் அவனுக்கு இந்த உலக நினைவு வந்தது. ஆடு துறை வந்து விட்டது. இன்னும் ஐந்தோ அல்லது ஆறே ஸ்டேஷன்கள் தான் சுவாமிமலைக்கு. அப்புறம் ருக்குவைக் காணலாம், பேசலாம்…

வெட்டிவேர் என்றால் ருக்குவுக்கு உயிர் ஆயிற்றே! அதுவும் கொஞ்சம் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்…

சுவாமிமலை ஸ்டேஷனில் பார்சல் வண்டி வந்து நின்றதும், அதிலிருந்து இறங்கிய முதலாவது ஆசாமி, ராமநாதன்தான். மூட்டை, முடிச்சு ஒன்றும் கிடையாது. கையில் ஒரு பை. அதிலும் இரண்டு வேஷ்டி, சட்டை, வெட்டிவேர், ரிப்பன் இவைகள் தான்.

கையை வீசிக்கொண்டு ‘புதுப் பால’த்தைக் கடந்து ஊருக்குள் நுழைந்தான். மனம் எங்கேயோ சிட்டுக் குருவிபோல் பறந்து கொண்டிருந்தது உல்லாசமாக.

ஆயிற்று, தெற்கு மடவிளாகம் வந்தாகிவிட்டது. அடுத்த திருப்பம் ருக்குவின் வீடு இருக்கும் நடுத் தெரு.

தெருக் கோடிக்கும் வந்து விட்டான். அதோ, மாமனாரின் மாடி வீடு கம்பீரமாய்த் தலை நிமிர்ந்து நிற்கிறது. வாசலில் மாமனார் நின்றுகொண்டிருக்கிறார், நடையை எட்டிப் போட்டான்.

வீட்டு வாசற் படியில் காலை வைத்ததும் மாமனார் தான் அவனை முதலில் வரவேற்று “வாப்பா, ராமு!” என்றார். அவர் குரல் ஏன் இவ்வளவு கம்மிப் போயிருக்கிறது?

“என்ன் மாமா, நீங்கள் கூட ருக்குவின் விளையாட்டில் சேர்ந்து கொண்டீர்கள்?” என்று ராமு சிரித்துக்கொண்டே கேட்டான்.

“என்ன விளையாட்டு? நான் கொடுத்த தந்தி வந்து சேர்ந்ததா, இல்லையா” என்று சற்றுத் திகைப்புடன் கேட்டார் வைத்தீசுவர ஐயர்.

“வந்தது, வந்தது. அதைத் தான் நானும் சொல்லுகிறேன்!”

“அதில் விளையாட்டு என்ன இருக்கிறது? வாஸ்தவத்தைத் தானே அடித்திருந்தேன். நீ சொல்லுவது எனக்கு ஒன்றும் புரியவில்லையே! ருக்கு ஏதோ தலைவலி, ஜலதோஷம் என்று சொல்லிக்கொண்டு நேற்று மத்தியானம் படுத்துக் கொண்டாள். சாயந்திரம் நல்ல ஜுரம்; மூச்சுப் பேச்சு இல்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு, இன்னும் ஆறுமணி நேரம் தாண்டினதற்கப்புறம் தான் நிச்சயமாகச் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறாரே, அப்பா!” என்றார் அவர். அவர் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர் கீழே சிந்திற்று.

ராமநாதனுக்கு உலகமே சுழலுவதாகத் தோன்றியது. விட்டின் உள்பக்கம் நோக்கினான், குதுகலத்தின் சாயை கூடத் தென்பட வில்லை அங்கே. அதற்குப் பதிலாக இருட்டுத்தான் நிறைந்திருந்தது. நிசப்தம், பயங்கர நிசப்தம், மரண அமைதி குடி கொண்டிருந்தது.

இங்கே ராமநாதன் மனத்தை இருள் கவ்விக் கொண்டது. கையில் பிடித்திருந்த பை நழுவிக் கீழே விழுந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு டஜன் ரிப்பனும், கட்டு வெட்டி வேரும் தெருக் குறட்டிற்கு ஏதோ ஒரு வித பயங்கர சோபையை அளித்துக் கொண்டிருந்தன.

– சக்தி பொங்கல் மலர்-1947

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *