அழகுதான் போய்!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 10,681 
 
 

“”என்னங்க, நம்ம ரெண்டாவது பெண் மாப்பிள்ளை மாதிரி மூத்த பெண் மாப்பிள்ளையும் அழகா அமைஞ்சிருக்கக் கூடாதோ?” என்றாள் தீட்சா.

“”ஷ்! பெரிய மாப்பிள்ளை காதுல விழுந்து வெக்கப்போவுது…” என்றார் அவளின் கணவர் மிருத்யுஞ்ஜயன்.

“”அவர் இல்ல. தன் மனைவி மிருச்சகடிகாவைக் கூட்டிக்கிட்டு அப்பவே ஒரு டாக்சி ஏறி கோயிலுக்குப் போயாச்சு. நீங்க அப்ப மளிகைக் கடைக்குப் போயிருந்தீங்க. ரெண்டாவது மாப்பிள்ளையும் அவர் மனைவி சுலபாவோட ஒரு திருமண வரவேற்பிற்குப் போயிட்டாங்க…”

“”சரி, என்னை நிம்மதியா பேப்பர் பாக்க விடலாமே?” என்றார் மிருத்யு, “”ஆமா, சாயங்காலத்துல தான் பேப்பர் படிப்பாங்களாக்கும்!” என்றாள் தீட்சா.

அழகுதான் போய்எல்லா இடங்களிலும், எல்லாப் பொருட்களிலும் அழகு பார்ப்பவள் தீட்சா. டி.வி.யில் டைம் அட்ஜஸ்ட்மெண்டுக்காக வண்ண மலர்களை மாற்றி மாற்றிக் காண்பிக்கிறானா, ஆஹா! பௌர்ணமி முழு நிலவு தெளிந்த வானில் பளிச்சென்று நிற்கிறதா, அடடா! நர்சரிக் குழந்தைகள் ரிக்ஷாவில் போகையில் துறுதுறுப்பான ஒரு குழந்தை முகம் கண்டு அங்கே பாருங்களேன்! ஸ்வீட் ஸ்டாலில் மைசூர்பாகு அடுக்கி இருப்பதைப் பார்த்து அற்புதங்க! ஒரு நீளப் பெரிய லாரியில் குட்டி குட்டி கார்களை ஏற்றிப் போகிறானா? அது ஓர் அழகு.

அப்படிப்பட்டவள் தன் மூத்த பெண்ணுக்கு மட்டும் அழகான மாப்பிள்ளை தேடாமல் இருப்பாளா? ஆனால் பெண் பார்க்க சம்பந்தி வீட்டார் மட்டுமே வந்தனர். மாப்பிள்ளை சரயூகுமார் வரவில்லை. அவர் ஜாயிண்ட் டைரக்டர் பதவியில் இருப்பவர். வர நேரம் இல்லை. போட்டோ மட்டுமே வந்தது.

கோட்டும், டையும், எக்சிக்யூடிவ் மூக்குக் கண்ணாடியும், மேல் தூக்கி வாரிய தலையுமாக கலர் போட்டோவில் சரயுகுமார் அழகாகவே தெரிந்தார். மகள் மிருச்சகடிகா ஓகே சொல்லு முன் டபுள் ஓகே சொன்னவள் தீட்சா. ஆனால் மாப்பிள்ளை அழைப்பிற்கு சரயு வந்திறங்கியபோது அவரின் இடது மூக்கின் பக்கம் ஒரு பெரிய மணத்தக்காளிப் பழம் போன்ற கருநீல மருவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவளும் தீட்சாதான் “”அடியே கடிகா..” ஆனால் கடிகா பதறவில்லை. “”போம்மா ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. நான் ஜேடியின் மனைவி என்பது ஒன்றே போதும்” என்றாள்.

தீட்சாவுக்கு மனம் சமாதானப்படவே இல்லை. அதனால்தான் அடுத்தவள் சுலபாவுக்கு வரன் பார்த்தபோது போட்டோ சமாசாரங்களை ஒப்புக்கொள்ளாமல் பேச்சு வார்த்தை ஆரம்பித்த உடனே அவளே நேரில் பையனின் வீட்டிற்குச் சென்றாள். இவன்தான் மாப்பிள்ளை என்று ஸ்ரீவத்ஸை காட்டியபோது ராமாயணம் சீரியலில் ராமனாக அல்லது மகாபாரதத் தொடரில் கிருஷ்ணனாக நடித்தவன் இவன்தானோ என்று கேட்கத் தோன்றியது.

ஸ்ரீவத்ஸ் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவன். ஜோக்குகளுக்கு வாய்விட்டு வெடிச் சிரிப்புச் சிரிப்பவன். எதிலும் பொறுப்பில்லாதவன். “”எந்த விஷயமானாலும் என் பேரன்ட்ஸ் கிட்டப் பேசுங்க ப்ளீஸ்!” ஸ்ரீவத்ஸின் அப்பா கறார் பேர்வழி, வரதட்சணைக்கு, மாப்பிள்ளையின் ட்ரெஸ்சுக்கு, தங்கள் உறவினர் கார்களில் வந்து போவதற்கு என்று ஒவ்வொன்றிற்கும் சம்பந்தியிடம் பணம் கறந்தார்.

திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் என்ன மனிதர்கள் என்று கசந்து போயிற்று மிருத்யுஞ்ஜயனுக்கு. இப்படியா பணம், பணம், வெள்ளிச் சீர் என்று பேயாய்ப் பறப்பார்கள்? இருக்கட்டும், குங்குமச் சிமிழ் ஜோடிபோல, சிறு குத்து விளக்குகள் போல சுலபா

தம்பதிகள் எவ்வளவு லட்சணம்? இதுக்காக எவ்வளவும் கொட்டிக் கொடுக்கலாம் என்று மகிழ்ந்தாள் தீட்சா.

ஹனி, டியர், டார்லிங், சுலூ… என்று விதம் விதமாய் அழைத்து மனைவியின் கன்னத்தை நிமிண்டுவதும், கூந்தலைப் பிடித்து இழுப்பதும், இடுப்பில் கை போட்டுக் கொள்வதுமாக வெளிப்படையானவன் ஸ்ரீவத்ஸ். அருகில் யார் இருந்தாலும் பொருள்படுத்துவதே இல்லை. அவளும் சார் என்பதும், மிஸ்டர் என்பதும்… ஸ்ரீ… என்று அவன் கிராப் தலையை இழுப்பதும், அவன் காது மடல்களை லேசாய் கடிப்பதும்…

ஸ்ரீவத்ஸ், டிவியில் நிகழ்ச்சிகளை நடுக் கூடத்தில் சோபாவில் அமர்ந்து சுலபாவின் தோளில் கை போட்டு உரத்த குரலில் விமர்சிப்பதும், சிரிப்பதும், “”சின்ன மாப்பிள்ளை வந்துட்டாலே வீடு ரெண்டு பட்டுப் போவுது போங்க…” தீட்சாவுக்கு பெருமிதம்.

சரயூகுமார் தனி ரகம். கையோடு ஒரு போர்டபிள் டி.வி. கொண்டு வருவார். கதவை மூடிக்கொண்டு மரியா பூசோ, ஸ்டீபன் கிங், ஹெரால்டு ராபின்ஸ் படித்தபடி டி.வி.யில் நியூஸ் பார்ப்பார்.

இரண்டு மகள்களும், மாப்பிள்ளைகளும் சேர்ந்து ஒரே சமயத்தில் தீட்சாவிடம் வந்தது இதுதான் முதல் தடவை. இரு மாப்பிள்ளைகளும் மாமனார் ஊரில் ஒரு வாரத்திற்கு ஆபீஸ் வேலையாக கேம்ப் வர நேர்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.

இரவு தீட்சா சப்பாத்தி இட்டுக் கொண்டிருந்தாள். அடுப்பில் முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணிக் கூட்டு பெருங்காய வாசனையுடன் தளதளத்தது. கடிகா, தீட்சா தம்பதிகளுக்குத்தான் சிற்றுணவு. சுலபா தம்பதிகள் ஒரு திருமண ரிசப்ஷன் சென்றிருந்தனர்.

வீட்டு வாசலில் கார் ஹாரன். சரயூ தம்பதிகள் வந்தாயிற்று, கார் டிரைவர் ஒரு பழக் கூடையை நடுக் கூடத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார். “கம்’ என்று பழங்கள் வாசனை.

“”வரட்டுமா சார்?” என்கிறார் டிரைவர்.

“”அந்த மருந்துகள் பை?…” என்கிறார் சரயூ.

“”ஓ, சாரி சார்…” டிரைவர் கொண்டு தருகிறார்.

“”மருந்தா! யாருக்கு?” தீட்சா திகைக்க,

அருகில் வந்து உள்ளங்கையை மலர்ந்துகிறாள் கடிகா. “”விபூதி குங்குமம் எடுத்துக்கோம்மா…”

“”உங்களுக்கு இருமல் மருந்து, மாமாவுக்கு நீரிழிவு ஆயுர்வேத மருந்து…” என்கிறார் சரயூ.

“”அப்பா எங்கேம்மா?” என்று ஓரடி நகரும் கடிகா, “”ஆ அய்யோ, காலை ஊன முடியலையே, பித்த வெடிப்பு என்னைப் பாடாய் படுத்துதே!” என்று கத்துகிறாள்.

“டர்’ என்று வீட்டு வாசலில் ஆட்டோச் சத்தம். ஸ்ரீ வத்சவ் சுலபா ஜோடி. சந்தோஷமாகப் பேசிக் கொண்டே அவர்கள் நுழைவார்கள். “”அம்மா” என்று சுலபா தீட்சாவை நெருங்கி, “”இந்த ஸ்வீட்டைச் சாப்பிட்டுப் பாரேன்” என்று அம்மாவின் வாயில் ஊட்டுவாள்.

“”அதிருக்கட்டும். பொண்ணு மாப்பிள்ளை ஜோடி எப்படி இருந்தது?” என்றாள் தீட்சா.

“”அய்ய… இவங்க எல்லாம் எப்படித்தான் மனம் ஒப்பித் திருமணம் செய்துக் கொள்கிறார்களோ… அவள் ஒரு இட்லிப் பானை கறுப்பி. இவன் ஒரு பல்லாண்டு – பல்லிலேயே தேங்காய் துருவலாம். பின் தலை அச்சு வெல்ல அரை உருண்டை போல வழுக்கை…”

என்று சுலபா அடுக்க,

“”அதானே, நம் வீடு போல எங்காவது ஆயிரத்துல ஒன்றுதான் அமையும்” என்று பெருமிதப்படுவாள் தீட்சா.

ஆனால் இப்போது ஸ்ரீ வத்ஸ் மட்டும் விரைந்து வருகிறான்.

“”போச்சு போச்சு, என் பேவரைட் மாதுரி தீட்சித் நடித்த படம் பாதி போச்சு” டிவியை ஆன் பண்ணி நடுக்கூட சோபாவில் அமர்கிறான்.

சுலபா நெற்றியில் ஒரு கைக்குட்டையை அழுத்திக் கட்டிக் கொண்டிருக்கிறாள்.

“”அம்மா” என்று வீறிட்டபடி ஓடி வந்து அம்மாவின் தோளில் முகம் புதைக்கிறாள்.

“”தலைவலி பொறுக்க முடியலம்மா”

“”அப்படியே ஒரு டாக்டர் கிட்டக் காட்டிட்டு வர்றதுதானே?” என்கிறாள் தீட்சா பதறி.

“”அவருக்கு மாதுரி தீட்சித் படம் போயிடுமாம். வீட்டுக்குப் போய் ஏதாவது பில்ஸ் முழுங்கு டியர்னுக் கூட்டி வந்துட்டார்மா”

“”உன்னை விடப் படமாடீ முக்கியம்? இதோ வர்றேன்” என்று வேகமாக எழுந்திருக்கிறாள் தீட்சா.

“”இதப் பாருங்க. உங்க சம்சாரத்தை உடனே டாக்டர் கிட்டக் கூட்டிப் போங்க”

“”என்னை டிஸ்டர்ப் பண்ணாத டார்லிங், தலைவலி ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. ஸ்ட்ராங் காபி சாப்பிடு. டேப்லட்ஸ் எடு. படு. சரியாயிடும்” என்றான் ஸ்ரீ வத்ஸ்.

“”என் பைலயும் மாத்திரை இருக்கு, கெட் மீ மை பேக்” என்று எழுந்த கடிகா, தரையில் கால் ஊன்றும்போது, “”ஆ… வலி… உயிர் போகுதே” என்றாள்.

“”கால்ல சிவியர் க்ராக்குடி”

“”நம்ம வம்சத்தில் யாருக்கும் பித்த வெடிப்புக் கிடையாது. உனக்கு மட்டும் எப்புட்றீ அதிசயமா” என்றாள் தீட்சா.

“”மெதுவா பாத்து, பதமா காலை ஊனுடிம்மா”

கடிகா தந்த இரண்டு மாத்திரை ப்ளஸ் தீட்சா தந்த சூடான இஞ்சி ஏலக்காய் டீயில் சோபாவில் சுருண்டு படுத்துவிட்டாள் சுலபா. தீட்சாதான் பரிதாபத்துடன் தலையணையைக் கொண்டு வந்து அவள் தலைக்கடியில்வைத்தாள். தொடை அருகில் கைகளைக் கொடுத்து சுலபா புழுப்போல சுருண்டதில் மேலும் பரிதாபம் கொண்டு, ஒரு போர்வையையும் எடுத்து வந்து போர்த்தினாள்.

“”மாப்பிள்ளை, ரெண்டு ரெண்டு சப்பாத்தி” என்று மரியாதையாகக் கருதி ஸ்ரீ வத்சைக் கேட்டாள் தீட்சா, “”யூ கேரி ஆன்” என்று ஜாடை காட்டினான் அவன்.

“”சுலபா கண்ணு?”

“”அவளை நிம்மதியா தூங்க விடும்மா. அவதான் ரிசப்ஷன்ல ஒரு பிடி பிடிச்சிருப்பாளே?” என்றாள் கடிகா.

ஓட்டல் சப்பாத்திகள் போல தடிதடியாக. பார்த்ததுமே எரிச்சலைக் கிளப்புபவை அல்ல தீட்சாவின் கை வண்ணம். மென்மையானவை. சரயூ விரும்பிச் சாப்பிடுவார்.

சாப்பிட்டு முடிந்தது. ஆளுக்கு ஒரு டம்ளர் பாலும் விநியோகித்தாயிற்று.

ஒவ்வொரு தம்பதி ஒவ்வொரு படுக்கை அறையில், பிரதான விளக்குகளை அணைத்து ஆங்காங்கே சன்ன ஒளி பரப்பும் சைபர் வாட் விளக்குகள்.

மிருத்யுவுக்குத் தான் தூக்கமே வரவில்லை. கொட்டாவியாய் விட்டுப் படுத்திருந்தார். பழங்காலச் சுவர்க்கடிகாரம் வேறு உளியால் தட்டுவது போல “டக்’, “டக்’ என்றது.

குருமாவில் ஓர் உப்புக்கல் தூக்கல். தாகமாய் எடுத்தது. எழுந்தார் மிருத்யு. அடுத்த அறை சென்று பாட்டில் நீர் எடுத்து…

“”அதுக்குத்தான் கோவிலுக்கு வராதேன்னேன். கேட்டியா? கால் வலிங்கற” என்று சரயுவின் குரல் கேட்டது.

இன்னும் தூங்கலையா. என்ன செய்கிறார்? திறந்திருந்த அவர்களின் ஜன்னல் வழியே ஒரு காட்சி.

கடிகாவின் கால்களை தன் மடியில் இழுத்து வைத்து அவளின் பாதங்களில் முழுவதும் தன் கையால் களிம்பு எடுத்து அழுத்தி, அழுத்தித் தேய்த்துவிட்டார் சரயு.

அடுத்திருந்த அறை ஜன்னலும் திறந்துதான் இருந்தது.

“”ஐயோ என்ன பண்ணியும் தலைவலி போகலியே. மண்டையிடி பயங்கரமா இருக்கே, ஏங்க, உங்க கையால கொஞ்சம் என் நெத்தீல, முதுகுல அழத்தி தேய்ச்சுவிடக் கூடாத?”

“”சாரி டியர்… என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா? என் தூக்கம் கலைஞ்சுப் போனா மறுபடி பொழுது விடியும் வரை எனக்குத் தூக்கமே வராம அவதிப்பட்றது என் வழக்கம் ஆச்சே? ப்ளீஸ் என்னை உருப்படியாயத் தூங்க விடும்மா. நீயே தைலம் தடவிக்கோ, வெரி சாரி” சொன்னதோடு ஸ்ரீ வத்ஸ் காலோடு தலை இழுத்துப் போர்த்துக் கொண்டான்.

தீட்சாவை எழுப்ப நினைத்தார் மிருத்யு. பாவம் அவளும் அயர்ந்து உறங்குகிறாள். குறட்டை வேறு. தூங்கட்டும்.

பெருமூச்சோடு வந்து தீட்சாவின் அருகில் படுத்தார் மிருத்யுஞ்ஜயன்.

– கண்ணன் மகேஷ் (ஜூலை 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *