கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 10,355 
 
 

அது 80களின் ஆரம்பம். கி-ஜெர்மனி நோக்கிப்பறந்த AEROFLOT / LOT போலந்தின் விமானங்கள் அனைத்தையும் நிறைத்துக்கொண்டு தமிழர்கள் அம்முலோதியாக வந்து இறங்கிக்கொண்டிருந்த சமயம். அவர்களைவிடவும் ஒருவருடம் முன்னதாக பெர்லினில் கால்களைப்பதித்துவிட்ட நானும் ராஜாவும் அரசு தந்த பென்ஷியோன்களின் (விடுதிகள்) கட்டில்களைத் தேய்த்துக்கொண்டிருக்கையில் எங்கள் பென்ஷியோனுக்கு இணுவிலிலிருந்து பாரிவேந்தன் என்றொருவரும் வந்து சேர்ந்தார். அவரிடம் வம்புதும்பு பிக்கல்பிடுங்கல்கள் எதுவுமில்லை,. பியர்கூட மாந்தமாட்டார். கொஞ்சம் சனாதனி, ஆசாரசீலர். அவருக்கு ஜெர்மனிக்குப் புறப்படமுதலே ஊரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர் இங்கு வந்திறங்கிய பின்னால் பாதைகளின் நேச்சர், துல்லியம், தெளிவு, காலதேச வர்த்தமானங்களை அவதானித்து அதே தடத்தில் மனைவியையும் அழைப்பதாக இருந்தது.

பெம்மான் இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் கோவிலின் சுற்றுவட்டகையில் வாழ்ந்ததனாலாக்கும் மூச்சாவுக்குப் போவதொன்றைத் தவிர்த்து எடுக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் நேரம் காலம் திக்கு ஓரை சூலம் பக்ஷி பார்த்துக்கொண்டிருந்தார்.

‘வாரும் இன்றைக்குப்போய் வதிவு அனுமதியைப் புதுப்பித்துக் கொண்டுவரலாம்’ என்றால் ‘இன்றைக்குப் படுபக்ஷி போகிறகாரியம் உருப்படாது, அதுக்குள்ள…… 13 ந் தேதிவேற, மூன்றும் ஒன்றும் நாலு. அது, சனி இலக்கத்தின்ரை பாதி, என்ன செய்யும் தெரியுமோ……..’ என்று மிரட்டுவார். அல்லது நீர் மேஷராசிக்காரன் உமக்கு இன்றைக்கு வடக்கில கண்டம் ஆபத்து. மேற்கில தண்டம் அதாவது அபராதம் வரும், என்று அனைவருக்கும் சாம்பிராணி போட்டுக்கொண்டிருப்பார். ராஜா எனும் உடனுறைபவன் கடுப்பாகி “ எனக்குக் இன்றைக்குக் கொன்டெம் வாங்கப்போகவேணும்……. எந்தத் திக்கிலபோனால் விக்கினமில்லாமல் கிடைக்கும் சொல்லும் ” என்றான்.

“ நான் பலனைச்சொன்னன் காணும், கேட்கிறதும் விடிறதும் உம்மிஷ்டம்” என்பார். இரண்டுநாட்கள் செல்லக்கேட்டோம்.

’வாருமன் ஒரு சீனா றெஸ்ரோறண்டில கிச்சின் ஹெல்ப்பர் வேல இருக்காம், போய்க் கேட்டுப்பார்ப்பம்”

’அது எந்தத்திக்கில கிடக்கு ஐஸே……….’

யாருக்குத்தெரியும். சுரங்கத்தொடரியில் ஏறியமர்ந்துவிட்டால் அவருட்பட எவருக்கும் திக்குத்திசைகள் தெரியாது. நம்மிடம் அப்போது என்ன GPS ஸுடனான எடுப்புத்தொலைபேசிகளா இருந்தன? சும்மா ‘கொஞ்சம் வடமேற்காய் வரும்’ என்றால் ‘சாய்க்….. இன்று கடகத்துக்கு மேற்கே சூலம்…….. ஓரை நல்லாயில்லை, நாளையின்றைக்கு மதியத்துக்கு முன்ன கிளம்பினால் ஜெயம் நிஜம்’ என்பார். அதாவது பரிதியை எதிர்த்துப்போகிற காரியம் சிதறுமாம். நாளையின்றைக்குப் போய்ப்பார்த்தால் அவன் அவ்வுணவகத்தை அதற்கு முதமாதமே விற்றுவிட்டுச் ஹொங்காங் போயிருக்க அவ்விடத்தில் ஒரு பாலியல்கூடம் முகாமிட்டிருக்கும்.

நாங்களோ வேலை வேலை என்றலைய பார்வேந்தனோ அழகிய இளமனைவியைப் பிரிந்து வந்த தாபத்திலும் பசலையிலும் தோய்ந்திருந்தார், ஆதலால் அப்பஞ்சாங்கத்தைக் காய்வெட்டிவிட்டு எண்திசைலும் பயணித்து வேலை தேடலானோம். அவ்வப்போ பண்ணைகளில் அமயமாகக் கோழிகளுக்குத்தீவனம் போடுதல், ஆப்பிள் பிடுங்குதல் போன்ற சில்லறை ஊழியங்கள் கிடைத்துவிடுவதுமுண்டு.

அப்போது பெர்லினில் நகரில் எல்லாவிடத்தும் மூலைக்கு மூலை ’பீப் ஷோக்கள்’ எனப்படும் நிர்வாண நடனக்கூடங்கள் இருந்தன. சுழன்றுகொண்டிருக்கும் ஒரு வட்டவடிவ மேடையில் அழகான உலல்வாகுள்ள ஒரு இளம் பெண் மிதமான வெளிச்சத்தில் வந்துநின்று தன்னிடமுள்ள அனைத்தையும் துலக்கி இரசிகர்களுக்குக் காட்டும்வகையில் உடலை வளைத்து- முறுக்கி, குவித்து- விரித்து ஆடிக்கொண்டிருப்பாள். அவளைச்சுற்றி 16 திக்குகளிலுமுள்ள ஜன்னலின் மாடங்களில் ஒரு மார்க் நாணயத்தை நுழைத்ததும் அதன் கண்ணாடிக்கதவு மெதுவாக ஒரு நிமிடம்வரை திறந்திருக்கும். கதவு மூடுவதற்கு முன் சமிக்கையாக ஒரு நீல ஒளி கதவில் வரும். உங்களுக்குத் தொடர்ந்து நடனத்தைப்பார்க்கவேண்டுமாயின் நீங்கள் தொடர்ந்தும் மார்க் நாணயங்களை நுழைக்கவேண்டியதுதான். (நடன தாரகைகளைப் பார்த்தபடியே சுயமைதுனம் செய்வோருக்கு டிஸு வசதிகள் உண்டு) இக்கூடங்களுக்குச் செல்வதை நாம் சங்கேதமாய் ‘அம்மன்தரிசனம்’ செய்தல் என்போம். மாதத்தில் 4 தரமாவது ’அம்மன்தரிசனம்’ செய்யாத இளைஞர்கள் இல்லை. பாரிவேந்தன்மட்டும் “வேண்டாம் பெடியள், அம்மாதிரியான ஆட்டங்கள் உங்க மனத்தைக் கெடுத்துப் பாதையை மாத்திவிடும். தமிழ் இளைஞர்கள் உள்ளும் புறமும் சுத்தபத்தமாய் இருக்கவேணும்” என்பார் அக்கட்டணமின்றிய கம்பவாரிதி.

ஆனால் ராஜா பாரிவேந்தன் தன்னிடம் முழுநீலப்படங்கள் ஓடும் தியேட்டர்பற்றித் தனிமையில் விசாரித்ததாகச் சொன்னான். அப்படியான போர்னோ படங்கள் ஓடும் தியேட்டர்கள் 3 பேர்தான் இருந்தாலும் தொடர்ந்து அவர்களிடமுள்ள படங்கள் அனைத்தும் தீரும்வரையில் ஓட்டிக்கொண்டிருப்பார்கள். ஒருமுறை கட்டணம் செலுத்தினால் போதும். சுவைஞன் எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் அங்கே குந்தியிருக்கலாம். பாரிவேந்தன் அதைப் பார்க்கப்போனாரோ இல்லையோ எனக்கதில் அக்கறையில்லை, அததது அவரவர் அந்தரங்கம் இரசனை துய்ப்பு சம்பந்தப்பட்ட சாங்கியங்கள்.

நாளடைவில் பாரிவேந்தன் என்னோடு நெருங்கிய தோஷ்தாகிவிட்டிருந்தார் ஆகையால் எனக்கு மட்டும் ஒருநாள் இரகசியமாக அவரின் மனைவியின் படத்தைக்காண்பித்துவிட்டு என் காதுக்குள்ளே ‘பெயர் ஷியாமளா’ என்றார். பெண் மாநிறத்திலொரு சீமைமுயலைப்போல, ஆனால் நிஜமாகவே நெடிய சியாமளத்துடன் ஒயிலாகத்தான் இருந்தாள். ‘ அண்ணே அண்ணியின் பெயரையும், பொலிவையும், ’அப்பியரன்ஸையும்’ பார்க்க ஐயர் ஆத்துப்பெண் மாதிரி இருக்காக…… எப்பிடிண்ணே உங்கிட்டச் சிக்கிச்சு’ என்றேன்.

‘சச்சச்சச்சாய்……….. ஐயர் ஒன்றுங்கிடையாது…………. எல்லாம் நம்ம ஆட்கள்தான், சைவப்பெண்’ என்றார் வெட்கத்துடன். சைவம் என்பதும் யாழ் ஜாதியமரபில் ஒரு பிரிவு, அதற்குள் கௌலசைவம், வீரசைவம் என்று உட்பிரிவுகள் எல்லாம் உண்டு, (அவ்வலசல் இக்கதைக்குள் வேண்டாமே.)

‘ அப்போ அவா பக்கத்துவீடு ஐயரதோ………’ என்றேன். அங்கதசூத்திரம் பிடிபடாமல் முழித்தார். ‘ இல்லேண்ணே எடுத்ததுக்கெல்லாம் திக்கு காலம் சூலம் ஓரை பக்ஷி பார்க்கிறியளே அதனால் கேட்டேன்’ என்று சடைஞ்சேன்.

பாரிவேந்தன் இரண்டொரு மாதத்துள் ஏதேதோ மாயங்கள்பண்ணித் தன்னை அனுப்பிய பயணமுகவர் மூலமே வரப்போகின்றவொரு தம்பதியுடன் ஷியாமளாவும் சேர்ந்துவருகிறமாதிரி ஒழுங்குகள் பண்ணிவிட்டிருந்தார். பொண்ணு அவர் விரும்பியமாதிரி ஒரு ஆவணியிலேயே வந்திறங்கினாள்.

நான் தூங்குகிறேன் என நினைத்து பாரிவேந்தன் ராஜாவுடன் அவள் வருகைபற்றி சம்பாதித்தது ஸ்படிகமாக என்காதுகளிலும் விழுந்தது.

“ நல்லகாலம்……….. ஷியாமி ஒருவேளை ஆடியில் வந்திடுவாளோவென்று பயந்துகொண்டிருந்தேன் ராஜா.”

“ ஆடியிலதான் வந்திருந்தாத்தான் என்னண்ணே…….. ஃப்ளைட்டுகள், மற்றப் பயணஒழுங்குகள் எல்லாம் ஒருங்கிசையவேணாமா?” அப்பாவியாக ராஜா கேட்டான்.

“ இல்லப்பா……… ஆடியில கூடக்கூடாதில்ல”

“ ஏன்ணே……. உடம்பின் ஹோமோனல்……… சென்ஸுவல் ஒப்பறேஷன்ஸ் சிஸ்டத்தின்ர மெயின் ஸ்விட்ச் எல்லாம் உங்களிட்டத்தானே இருக்கு?”

“ தியறி சரிதான் ராஜா……. ஆனால் மனுஷனோட உணர்ச்சிகளைச் சொல்லேலாதப்பன், ஒருநேரம்போல ஒருநேரமிருக்காது.”

ஆவணி மாதத்தின் முதல் வாரத்தில் முதல் விமானத்தில் ஷியாமளாவும் வந்து சேர்ந்தாள். பொண்ணு வந்தாலும் வந்தாள், இவரோ தாலிகட்டிய பின்னரே இருவரும் சேர்ந்திருப்பது என்பதில் உறுதியாயிருந்தார்.

அப்போது இலங்கையின் தமிழ் வந்தேறிகளுக்கு மாலைகளிலும், வாரவிடுமுறை நாட்களிலும் தமிழ்ப்படங்கள் காணொளியில் காட்டிச் உபரித்தேட்டம் பண்ணிக்கொண்டிருந்த ஒரு கோயம்புத்தூர்க்காரர் எமக்குப் பழக்கமாக இருந்தார். அவரிடம் விடயத்தை எடுத்துச்சொல்லி உங்கள் வீட்டில் ஷியாமளாவை ஒரு வாரம் பத்து நாட்கள் தங்கவைக்க முடியுமா என்று கேட்கவும் அவரும் பெருமனது பண்ணிச் சம்மதித்தார். ஷியாமளா அவள் பயணப்பொதி, பெட்டியுடன் அங்கே அனுப்பப்பட்டாள். மாலைகளில் பாரிவேந்தன் தினமும் அவர்கள் வீட்டுக்குப்போய் ஷியாமியைக் கொஞ்சிவிட்டு வருவார்.

அதேவாரத்தில் ஷியாமளாவுக்கு அலைச்சலில்லாமல் சுளுவாக வதிவிட அனுமதி எல்லாம் கிடைத்தது, ஆவணி முடியமுதல் தாலிகட்டவேணுமென்று பாரிவேந்தன் தன் திருமணத்துக்கான நாளெல்லாம் கணித்துவிட்டார். ஆனால் அதைக்கட்டி ஒப்பேற்ற ஒரு பொருத்தமான இடத்தைத்தான் எம்மால் கண்டுபிடிக்கமுடியவில்லை. உயர்தர ஹொட்டல்களில் அரங்கம் எடுத்துநடத்த எமது பொருளாதாரம் இடங்கொடுக்காது என்பது இரகசியமல்ல.

பொதுவாக அபரிமிதமான ஆடம்பரத்திருமணங்கள் எனக்கு எப்போதும் ஒவ்வாமை தருபவை. புகலிடநாடுகளில் ஐந்தாறு Lumousine வகையிலான மகிழுந்துகளிலிருந்து உலங்குவானூர்திகள்வரை வாடகைக்கு அமர்த்தியெல்லாம் இப்போது திருமணங்கள் சில நடந்தேறுவதை அறிந்திருப்போம். அப்படியொரு திருமணத்துக்கு என்னை யாரும் தப்பித்தவறி அழைத்தாலுங்கூடப் போகாமாட்டேன்.

கடைசியாக குர்திஷ்க்காரர் (இஸ்லாமியர்) ஒருவரின் கோடவுணின் சிற்றுந்தில் விநியோகவேலைகள் செய்யும் ஒரு தமிழரின் தயவால் அவரது கோடவுணின் பழவகைகள் சேமிக்கும் பகுதியை ‘சுபகாரியம் கோடி புண்ணியம்’ என்று ஒருநாள் பயன்படுத்த அனுமதித்தார். அத்துடன் அக்கோடவுணின் களஞ்சியப்பொறுப்பாளர் ஓய்வெடுக்கும் (ஒரேயொரு கட்டிலுடைய) ஒரு அறையையும் பயன்படுத்த அனுமதித்தார். இப்போ திருமணமண்டபம் தயார், சீர்திருத்தமுறையிலான கல்யாணத்துக்கெல்லாம் பரமவைதீகன் பாரிவேந்தன் தயாரில்லை. ஐயர் வந்தேயாகணுமென்று பிடிவாதமாயிருந்தார். பெர்லினில் முன்பு எங்களது சமறியில் ஒரு ஐயர் இளைஞர் இருந்தார். என்ன ஒரு முட்டைவறுவலோ அடையோ இல்லாமல் பெம்மானுக்குச் சாதம் தொண்டையால இறங்காது. அவரை இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் பிறேமனுக்கு மாற்றிவிட்டிருந்தார்கள், பியரோடான மாலைப்பொழுதொன்றில் ஐயர் பேச்சோடு பேச்சாக என்னிடம் ‘எனக்கு விவாஹ மந்திரங்கள் எல்லாம் தெரியும்…….

‘ஓம் சுக்கிலாம் பரதரம் விஷ்ணும் சஸிவர்ணம்

சதுர்புஜம் பிரஸன்ன வதனம் தியாயேத்

சர்வ விக்னோப சாந்தயே

மூஷிக வாகன மோதக கஸ்த்த

வாமன ரூப மகேஸ்வர புத்தர

விக்ன விநாயக பாத நமஸ்த்தே…… என்று விநாயகர் சங்கடஹர மந்திரம் சொல்லி ஆரம்பிப்பேன். அடுத்து தெரிந்த விவாஹ மந்திரங்களைச் சொல்வேன். அனைத்துந்தீர்ந்திடிச்சா. சங்கீதத்தில துக்கடாக்கள் மாதிரித் துணுக்குத்துணுக்கா சம்ஸ்கிருதத்தில் நிறைய ஸ்லோகங்கள் இருக்கு, அதில் சிலவற்றை முணுமுணுத்தபடி நீளமாய் மணியை ஆட்டிக்கொண்டு இந்தசொம்பை அதிலவைச்சு, குத்துவிளக்கில எண்ணெய்யை நிதானமாவிட்டு, அந்த அரிசியை இந்தத்தட்டில மாற்றிக்கொட்டி, இந்தப்பூக்களை அந்தப்பெட்டிக்குள் வைத்து நேரத்தை ஓட்டுவேன். அதெல்லாம் இருக்கிறவாளுக்கு ஏதோ சடங்குமாதிரித்தெரியும்……… நேரம் இன்னும் இருந்திச்சா…. நடுவில் எல்லாத்தும் கலந்துகட்டக்கூயமாதிரி ‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்’ என்று விநாயக சதுர்த்திச் ஸ்லோகங்கள் இருக்கு, அதுகளை இட்டுநிரவி ஒப்பேற்றிவிடுவன் சிம்பிள்வேலை காணும்…… புண்யகாரியம் ஒரு கடவுளும் கோவிச்சுக்காயினம்’ என்றது ஞாபகத்துக்கு வரவும் பிறேமனிலுள்ள இந்துமகேஷ் என்கிற இலக்கிய நண்பர் ஒருவர் மூலம் அவரைத்தொடர்புகொண்டு ஐயரை ‘பெர்லினுக்கு வந்து இத் திருமணத்தை நடத்தித்தரமுடியுமா’வென்று கேட்டேன். உடனே சம்மதித்தார். தானே பூக்களைவாங்கி, வேண்டிய மாலைகளைக் கட்டிக்கொண்டு வருவதாகவும், ஆனால் ‘எனக்கு அடுத்தநாள் விஸா றி-நியூவல் இருக்கு ஐஸே…….. அன்றைக்கு இரவே என்னை றெயின் ஏற்றிவிட்டிடவேணும் கண்டீரோ’ என்றார் நிபந்தனையாக.

கலைத்திறனுள்ள இளைஞர்கள் நாம் வாங்கிக்கொடுத்த, கிறேப் பேப்பர்கள், காகித அட்டைகள், ஃபோர்ம் றப்பர், தெர்மோகோல், டெகறேசன்சீட்கள் ஜிகினாக்கள், பலூன்களையும் வைத்து அழகான மணவறையும் செய்து, மண்டபத்தின் உத்தரத்தையும் அலங்கரித்துவிட்டிருந்தார்கள். ஒளி அலங்காரத்தையும் ஒரு நண்பர் தன்னார்வத்துடன் முன்வந்து பொறுப்பேற்றார். 50 கதிரைகளை வாடகைக்கு எடுத்துவிட்டிருந்தோம். திருமணம் முடிய இந்திய உணவகம் ஒன்றில் எளிமையான விருந்துக்கும் ஒழுங்கு பண்ணியிருந்தோம்.

மாலை ஏழேகாலுக்குத்தான் சுபநேரம். ஹொட்டலிலும் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுப்பதைத்தவிரச் செய்வதற்கு எதுவுமில்லை. எல்லோரும் மண்டபத்துக்கு மூன்று மணிக்கே போயிருந்தோம். கோயம்புத்தூரார் மனைவி பாரிஜாதம் மாமி கட்டணமின்றி 100 வடைகளும் 100 ரோல்ஸும் பண்ணித்தந்தார். நாம் போனதிலிருந்து உணவகமொன்றில் பணியாற்றும் தோழர் ஒருவர் கொண்டுவந்த பெரிய வாட்டர் குக்கரில் தண்ணீரைச் சூடாக்கிச்சூடாக்கி எமக்குக் கோப்பியும் தேநீருமாகத் தந்துகொண்டிருந்தார்.

கோடவுணின் களஞ்சியக்காப்பாளருக்கான அறையின் திறப்பு என்னிடந்தான் இருந்தது. நாலுமணிக்கு மேல் என்னிடம் வந்த பாரிவேந்தன் “அந்த அறைத்திறப்பை ஒருக்காத்தா ஷியாமிக்கு முதுகு உளையுதாம் கொஞ்சம் தேகத்தைச் சாய்க்கப்போறாளாம்………” என்றவர் “அப்படியே சாய்த்திட்டுப் பிறகு மணவறைப்புடவையையும் உடுத்தட்டன் ” என்ற விகுதியையும் அவரே சேர்த்தார். எனக்கென்ன கெட்டது. நான் விகற்பமில்லாமல் திறப்பைத் தூக்கிக்கொடுத்தேன்.

ஷியாமியின் பின்னால் ஓடிய பாரிவேந்தன் தானும் அதற்குள் நுழைந்து கதவைச்சாத்திக்கொண்டார். ஒரு மணிநேரம் அவர்கள் வெளியே வரவில்லை. ஆறுமணியாகியது. அவர்களை அப்போது எமக்கு அரங்கில் தேவையுமில்லை.

மாதேஷும் நாங்களுமாக விஸா அலுவலகத்தில் கண்டவர், சோஷியல் அலுவலகத்தில் சந்திச்சவர் , சுரங்கத்தொடரியில் பார்த்தவர் என்று எல்லோருக்கும் சொல்லி 50 பேரை வரவழைத்திருந்தோம்.

விருந்தினர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்துவிட்டனர். எமக்குப்போய் அவர்கள் கதவைத்தட்டுவதும் இங்கிதமாகப்படவில்லை. ஆறே காலாகிவிட்டிருந்தது, நானேபோய் அவர்களை வெளியே கூப்பிடுவோமோ என்றிருக்க ஒருவாறாக ஒரு பாரவுந்துக்குத் தனியாக வாழைப்பழப்பெட்டி லோடு ஏற்றியவர்மாதிரி பாரிவேந்தன் வியர்த்துக்களைத்து வெளியே வந்தார். வந்தவர் நேராகவந்து என் காதைக்கடித்தார்.

“ ஷியாமளாவுக்குக் குளிக்க வேணுமாம் என்ன செய்யிறது…………..?”

நான் அசட்டுத்தனமாக யோசித்து “ஏன்….ணே அவர் ஏதும் வீட்டுக்குவிலக்காகிட்டாரா……..” என்றேன்.

“ ச்சே…….. அப்படி எல்லாம் இல்லப்பா…… இது வேறமாதிரி……..” என்றுவிட்டுப் பாரிவேந்தன் நாக்கைக்கடித்தார்.

நான் அசட்டு விழிவிழிக்க என் கன்னத்தைத்தட்டி

“எங்க விரதத்தை காமனே முறிச்சிட்டான் ஐஸே.………..” என்றார் முகத்தில் நாணமும் சங்கடமுமாய்.

அவர் கோடிகாட்டும் விஷயம் பிடிபட்டாலும்….. என் அசட்டு முகத்தை அப்படியே மாற்றாமல் வைத்துக்கொண்டு

‘‘ஏன்….ணே………. வெளிக்கிடக்குள்ளதானே அந்தக்குளிப்புக் குளிச்சியள்….. இப்போ இதுக்குள்ள இரண்டாவது ஜலக்கிரீடை……… என்றால் ஆச்சாரத்துக்கும் (மனதுக்குள் – ஆச்சாரமசிருக்கும்) ஒரு லிமிட்டிருக்கோணும்……. இப்போ ஐயர்வாற நேரமாச்சு, மனுஷன் வந்து குதிக்கப்போகுது’’ என்று குரலை உயர்த்தினேன்.

“ நீர் சின்னப்பொடியன் ஐஸே, உமக்குப் பக்குவம்போதாது……….. இதெல்லாம் விளங்க…….. கண்டிப்பாய் ஷியாமளாவும் நானும் இன்னுமொருக்கால் குளித்தேயாகணும்பா……… அதுக்கொரு வழிசொல்லும்” என்று அழுத்திச் சொன்னவர் என்னைப்பார்த்துக் கண்ணையுமடித்தார்.

இத்தனைக்கும் எனக்கு 19 அவருக்கு 30. மௌனம் சங்கட சமயோசிதம், மௌனித்தேன்.

அங்கிருந்த குளியலறையில் வெந்நீராக்கும் கருவிவேறு இயங்கவில்லை. அதை முதலிலேயே சொல்லியிருந்தார்கள். அவர்களில் ‘வந்த காமன்’ எங்களையும் சேர்த்துப் படுத்தினான். கோடையானாலும் பச்சைத்தண்ணீரைத் திறந்துவிட்டு நேரடியாகக்குளிக்க முடியாது……… தண்ணீர் ‘சில்’லென்றிருக்கும். நானும் ராஜாவுமாக கோடவுணின் கோடிப்புறத்தில் காஸ் அடுப்பைவைத்து ஒரு அகன்ற அலுமினியப் பாத்திரத்திலும், இதுவரை காப்பி வைத்துக்கொண்டிருந்த வாட்டர் குக்கரிலுமாக தண்ணீரைச் சூடாக்கிச் சூடாக்கிக் கலந்து இருவரையும் இரகசியமாகக் குளிக்க வைத்தோம். மெல்ல மெல்ல இப்போது கணிசமான ஆட்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஐயரும் மாலைகளுடனும், சொம்புக்குடங்களுடனும் ஒரு சீருந்தில் வந்து பந்தாவாக இறங்கினார். பின் ஜாம் ஜாமென்று பாரிவேந்தன் – ஷியாமளா மாங்கல்யதாரணம் நிறைவேறியது.

*

இரண்டு நாட்கள் கழித்துத் தம்பதியை சோஷியல் அலுவலரிடம் அழைத்துச்சென்று அவர்கள் இருவருக்கும் தமிழர் மரபுமுறைப்படி திருமணமாகிவிட்ட விஷயத்தை எடுத்துச்சொல்லி படங்களை எல்லாம் காட்டி இருவரும் சேர்ந்து இருக்கும்படியாக ஒரு விடுதியோ அறையோ தருமாறு விண்ணப்பித்தோம். எம் கோரிக்கையைப்பரிசீலித்த அப்பெண்மணி ’கல்யாணத்தன்று ஷியாமளா உடுத்தியிருந்த பட்டுச்சேலையிலேயே வந்திருக்கலாமே அவர்களோடு சேர்ந்து நானும் சேர்ந்து ஒரு படம் எடுத்திருப்பேன்’ என்று ஜோக்கடித்துவிட்டு அவர்களுக்கு அலுவலக ஜாடியிலிருந்த பூங்கொத்தையும் தூக்கிக்கொடுத்து வாழ்த்தைக்கூறிவிட்டு அன்றைக்கே நாம் இருந்த பென்ஷியோனிலேயே இருவருக்கும் ஒரு தனியறையை வழங்கினார்.

அதற்கான இலிகிதங்களை அவர் தயார் செய்யும்வரை வெளியில் காத்திருந்தோம். எனது உதவிகளுக்காக பாரிவேந்தன் நன்றிசொல்லி நெகிழ்ந்துபோயிருந்த அத்தருணத்தில் ஷியாமளா வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் இவர் குனிந்து தரையைப்பார்த்தபடி சொன்னார் “கலியாணத்தன்றைக்கு இரண்டாவது குளிப்பு எதற்கு என்று குழம்பினீரில்லையா அதை விளக்கும்படியான சிஷுவேசன் அப்ப இருக்கேல்லைக்கிளி……….,” என்றவர் நிறுத்தி ஷியமளா அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு “அந்த அறைக்குள்ளயிருந்த நேரத்தில நாம காமனிடம் தோற்றுப்போயிட்டோம் கிளி……. ஆக்கப்பொறுத்த எமக்குக் கடைசியில ஆறப்பொறுக்கமுடியல ” என்றார்.

நான் மூணாம் வகுப்புச் சிறுவனைப்போலவும், அதைப்புரியாதவொரு பாவனையோடும் இருக்க முயற்சித்தேன்.

ஆறேழு ஆண்டுகள் கழித்து ஒருநாள் அவர்கள் வீட்டில் தனி மென்னிருக்கையொன்றில் நானும் மேடாவொன்றில் அவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் எம்மிருவரின் கால்களுக்கிடையால் காற்பந்தை உருட்டிக்கொண்டுவந்த அவர் பையன் அதை வாசலில் வைத்துத் தோட்டத்தில்போய் விழும்படி பலமாக எம்பி உதைத்தான்.

பாரிவேந்தனுக்கு அவன் அப்போதே ஒரு ‘மரடோனா’வாக மாறிவிட்டதாக மனதுக்குள் புளகாங்கிதம்.

“ அன்று நாம் காமனிடம் தோற்றதின் ரிசல்ட்ஸ்தான் இவன்” என்றவர் கண்களைக் கீழேவீசிப் அவனைப் பெருமையுடன் காட்டினார்.

“ ஐஸீ………..” என்றேன் அசுவாரஸியமாய், தொடர்ந்து

“ சும்மா சுனாமி மாதிரியல்லோ ஷியாமி பாய்ந்தென்னை மேவினா….. விடுபடமுடியாத மதுரலாகிரிப்பா அது ” என்றவருக்கு ’ அதெல்லாம் எம்மோட அந்தரங்கம்…… அனாவசியமாய் எதுக்கு இந்தப்பயலோட…….’ என்ற நினைப்பு வரவும், திடுப்பென்று அவ்விடத்தில் சம்பாஷணையைக் குறுக்கிவெட்டினார்.

அவரே “அதெல்லாம் உமக்கு எதுக்கு……. நீர் சின்னப்பெடியன் ” என்றிருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன்.

அவ்வேளை அவர்கள் சமையலறையூடாக நுழைந்த காற்று சுழன்றுவந்து எம் மன்றத்தில் அங்கே ஷியாமளா தோசைசுடும் செய்தியைத் தூது கொணர்ந்தது,

பாரிவேந்தன் எழுந்து தன் ஷேர்ட்டைக்கழற்றி அருகிலிருந்த கதிரையின் சாய்வின்மேல் போட்டுவிட்டு “ ஊர்லமாதிரியே இங்கயும் வெய்யில் சும்மா அனத்துது என்ன…. ஐஸே ” என்றார்,

நாங்கள் அதன் பிறகு இந்திய அமைதிப்படையின் இலங்கைப்பிரசன்னம் பற்றிக் கதைத்தோம்.

– 01.08.2019 பெர்லின் – அம்ருதா சஞ்சிகை – 157.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *