அப்பா… அப்பா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2023
பார்வையிட்டோர்: 2,690 
 
 

“அப்பா…” பெரிதாகக் கத்திக் கொண்டே ரவி வீட்டுக்கு வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம் போல் அப்பா வாசலுக்கு வந்து வரவேற்கவில்லை. ரவிக்கு ஏமாற்றமாக இருந்தது.

தெருத் திண்ணையில் ஏறி, வலப்பக்க அறைச்சன்னல் மேல் கால் வைத்து லேசாய்த் தள்ளியதில் அது திறந்தது. உள்ளே கைவிட்டு முக்கோண மாடத்திற்கு எம்பிய போது கால் நழுவியது. “அப்பா…” மீண்டும் கத்தியவாறு ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பிடித்தான்… விழாமல் தப்பித்தான்.

அதற்குள் உள்ளே சப்தம் கேட்டது. “ரவி…கண்ணு… இதோ வந்துட்டேன்…” என்று அப்பாவின் குரல்தான்… ரவிக்கு நிம்மதியாக இருந்தது.

கதவு திறந்தவுடன் தோளில் இருந்த புத்தகப் பையை அப்படியே திண்ணையில் எறிந்து விட்டு உள்ளே ஓடினான். அப்பாவின் மடியில் தாவி ஏறினான். சக்கர நாற்காலியில் இருந்த கண்ணப்பன் சமாளிக்கத் தடுமாறினார். “பார்த்து பார்த்து… மெல்ல ரவி… அப்பாவுக்கு வலிக்குமில்லை?” நாற்காலி உருண்டு பின்னோக்கி நகர்ந்தது. முற்றத்துத் தூண் மேல் இடித்து நின்றது.

“ரவி… பை எங்க?” கேட்ட குரலுக்கு ரவி வாசலைக் கை காட்டினான். “அப்பா… இன்னிக்கு எங்க ஸ்கூல் பின்னால இருக்கற வேப்ப மரத்தில ஏறினோம்… செந்தில் கீழ விழுந்துட்டான், மருந்தெல்லாம் போட்டாங்க” என்று கைகளை விரித்துச் சொன்ன போது கண்ணப்பனுக்குக் கவலையாக இருந்தது. முரட்டுப் பிள்ளையாக இருக்கிறானே!

“ரவி… பாரு… புஸ்தகப் பையை இப்படி எல்லாம் வெளியிலேயே போட்டுட்டு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனில்லை… அம்மா பார்த்தா அவ்வளவுதான்… தொலைஞ்சோம்… போ… முதல்ல எடுத்துட்டு வந்து ஆணியில மாட்டி வைச்சிட்டு கைகால் கழுவிட்டு வா… ரெண்டு பேரும் காப்பி குடிக்கலாம்… சரியா?” என்று சொல்ல, ரவி கொஞ்ச நேரம் யோசித்தான்.

“அப்பா… சீக்கிரம் குடிச்சிட்டு இன்னிக்கும் கிரிக்கெட் விளையாடலாமாப்பா? அம்மா வர்றதுக்குள்ள?” குரல் கெஞ்சியது.

கண்ணப்பன் மனம் நெகிழ்ந்தது… “விளையாடலாண்டா கண்ணா… ஆனா நான் சொன்னபடி கேட்கணும்… நல்ல பிள்ளையா இருந்தாதான் எல்லாம், என்ன?”

“சரிப்பா” என்றபடி மடியிலிருந்து இறங்கி திண்ணைக்கு ஓடினான். விலுக்கென்று உதைத்து அவன் இறங்கியதில் கண்ணப்பனின் கட்டுப்போட்ட காலில் சுரீரென்று வலி… பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டார்.

வெயில் தாழத் தொடங்கியிருந்தது. நாலரை மணிக்கு வெயில் பளிச்சென்றிருந்தாலும் இன்னும் அரை நேரத்தில் சட்டென்று விழுந்து விடும். காலையிலிருந்து வீட்டில் கவிழ்ந்திருந்த நிசப்தம் இப்போது விடைபெற்றுக் கொண்டாலும் உள்ளறைச் சுவர்களில் இன்னும் அந்த மௌனம் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மல்லிகா பஸ் மாற்றி வீடு வந்து சேர இன்னும் குறைந்தது ஒரு மணி நேரமாகும். ஆறு மணியல்லாமல் வீடு வர அவளால் முடிவதில்லை. இதில் ஓவர்டைம் என்றால் இன்னும் நேரமாகும்… பஸ் நிறுத்தத்தில் வெளிச்சம் இருந்தாலும் நடந்து வருகிற பாதை இருட்டுதான். நேரமாகி வருகிற மனைவியைப் போய் அழைத்து வர இயலாத நிலை எத்தனைக் கொடுமை!

அமுதா பள்ளி முடிந்ததும் தட்டச்சு வகுப்பிற்குப் போய்விடுவாள். பஸ் நிலையத்துக்கு அருகில்தான்… சில சமயம் அம்மாவும் மகளும் சேர்ந்து வருவார்கள். அவர்கள் வரும் வரை ரவியை சமாளிக்க வேண்டும். ரொம்ப முரடனாக இருக்கிறான். நீண்ட நாள் கழித்துப் பிறக்கிற குழந்தைகள் இப்படித்தான் துறு துறுவென்று இருக்கும் போல…

மல்லிகா வரும் போதே அலுத்துக் களைத்து வருவாள். கோபமும் எரிச்சலும் சட்சட்டென்று தெறிக்கும். அவளைக் குறை சொல்வதில் நியாயமில்லை, இருந்திருந்தாற் போல் கணவன் உடல் நிலை சீர்கெட்டு, இதய அறுவை சிகிச்சை, சர்க்கரையில் அஜாக்கிரதையாக இருந்து ஒரு கால் துண்டாடப்பட்டு வீட்டோடு சக்கர நாற்காலியில் கிடப்பதில், வெளியே போய் அறியாதவள் மேல் திடீரென்று வீட்டுப் பொறுப்பு முழுவதும் விழுந்தால்… ஒற்றை ஆளாக அவள்தான் என்ன செய்வாள்? நடுத்தரக் குடும்பத்துக்கு இத்தனை சோதனை தாங்குமா?

கண்ணப்பன் வேலை செய்த கம்பெனி ஆதரவு கொடுத்ததில் குடும்பம் அந்த மட்டுக்கும் இவ்வளவாவது நிற்கிறது. மல்லிகாவின் எப்போதோ படித்த எஸ்.எஸ்.எல்.சி.க்கு வந்த மவுசு… தூசி தட்டின சான்றிதழ் போதுமென்று கம்பெனி கொடுத்த குமாஸ்தா உத்யோகம் பெரும் வரம்.

தள்ளியிருக்கிற கோயமுத்தூர் ஜிஹெச்சில் ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பிய பிறகு ஆயிரத்தெட்டு எச்சரிக்கை. சர்க்கரை விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடு, நேர நேரத்துக்கு மருந்து மாத்திரைகள், எப்போதும் ஓய்வு, “சிரமப்படவே கூடாது, அடிபடக்கூடாது…”

ஆனால் அது எப்படி முடியும்? ஓடியாடி வேலை செய்த கால்களால் சும்மாயிருக்க முடியுமா? கால்கள் இல்லை, கால்தான்… இன்னும் அந்தப் புண் ஆறவில்லை. மனைவி வெளியே போய் வேலை பார்க்கும்போது வீட்டு வேலையாவது செய்து வைத்தால் அவளுக்கு எத்தனை உபயோகமாக இருக்கும்!

சக்கர நாற்காலியை உருட்டி உருட்டி, சின்னச் சின்ன வேலைகளைச் செய்து முடிப்பார். வீட்டை அரைகுறையாகக் கூட்டி, முற்றத்தில் காய்கிற துணிகளை உட்கார்ந்தபடியே கம்பி நீட்டி சேகரித்து, மடித்து அலமாரியில் வைத்து, காலையில் போட்டு வைத்து விட்டுப் போன பாத்திரங்களைத் துலக்கி அடுக்கி… சமையலறைக்குப் போவதில்தான் சிரமம்.

கொஞ்சம் உயரமான நிலைப்படியைத் தாண்டுவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். மல்லிகா “நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம்… பேசாம ஓய்வு எடுங்க… எதையாவது செய்யப் போய் மறுபடியும் உங்களுக்கு ஒண்ணு ஆச்சுன்னா முதல்ல நான் இருக்க மாட்டேன்” என்பாள்…

அச்சம்… நியாயமான அச்சம்… பெயரளவுக்காவது புருஷன் இருந்தால் போதும். நடமாடக்கூட வேண்டாம். உயிரும் சதையுமாய் அசைந்து கொண்டிருந்தால் போதும், எத்தனைக் கஷ்டமும் படத்தயார். ஆனால் மொத்தமாக கணவனே இல்லாது போனால் வரக் கூடிய இருட்டுக்கு அவள் தயாராயில்லை.

அமுதா விவரம் தெரிந்தவள். வீடு வந்ததும் முதலில் அப்பாவுக்குத் தேவையானதைச் செய்து விட்டுப் பிறகுதான் உடை மாற்றுதல் முதற்கொண்டு மற்றதெல்லாம். ஆனால் துறு துறுவென்றிருக்கிற ஆறு வயதுப் பிள்ளையை எப்படிக் கட்டுப்படுத்துவது? சதா விளையாட வேண்டும். மரமேற வேண்டும், திண்ணையில் ஏறி ஜன்னல் மேல் கால் வைத்து தொப்பென்று தெருவில் குதிக்க வேண்டும்.

மல்லிகாவின் முதல் அச்சம் ரவிதான். ஓய்வெடுக்க வேண்டிய கணவரைப் பாடாய்ப்படுத்துகிறானே என்று… சதா “அப்பா… திருடன் போலீஸ் விளையாடலாம்பா, அப்பா மாடிக்குப் போலாம்பா, அப்பா அத்திப் பழம் அடிக்கலாம்பா…” இவனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது? காலையில் கையோடு பள்ளிக்கு அழைத்துப் போய் விடலாம், மதியம் வீட்டுக்கு வர முடியாதபடி கையில் டிபன் பொட்டலம்… ஆனால் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடி வருகிற பிள்ளையை என்ன செய்ய முடியும்?

அடக்கிப் பார்த்தாள். ஆர்ப்பரிக்கிற அலை, போவது போல போக்குக் காட்டி விட்டு மீண்டும் பெரிதாகத் திரும்பி வருவது போல்… திட்டையும் அடியையும் வாங்கிக் கொண்டு மீண்டும் அதையேதான் செய்வான். “நாசமாப் போறவனே, கடங்காரா” என்று ஒரு நாளைக்கு நூறு முறை வசவு வாங்குவான். கண்ணப்பனிடம் கெஞ்சினாள். “நீங்களாவது ஜாக்கிரதையா இருங்களேன்… செல்லம் கொடுக்காதீங்க… பக்கத்தில் விடாதீங்க… ரெண்டு அதட்டல் போட்டு தூரத்தில் வையுங்க… உங்க கால்ல விழுகறேன்…”

சொன்னதல்லாமல் அவர் காலில் விழுந்து அழுதாள். மகளும் அழுதாள். அம்மாவும் அக்காவும் அழுவதைப் பார்த்து ரவியும் அழுதான். “உன்னால்தாண்டா குட்டிப் பிசாசே இத்தனைக் கஷ்டமும்” என்று அக்கா புலம்புவது கேட்டாலும் ரவிக்கு புரியவில்லை.

கண்ணப்பன் எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தையை நிஜமாக அதட்ட முடியவில்லை. மேலே வந்து விழுகிறவனை “தூரப்போ” என்று தள்ள முடியவில்லை. மற்ற நேரங்களில் கடுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் மல்லிகா வீட்டில் இல்லாத அந்த மாலை நேரத்து இரண்டு மணி நேரமும் ரவிக்கு எந்த அணையும் போட முடியவில்லை.

பழைய காலத்து வீடு. பெரிய வீடு. கண்ணப்பனின் அப்பா தந்து விட்டுப்போன ஒரே சொத்து. முற்றமும், நாலு பக்கம் தனித்தனி அறைகளும், இரண்டாவது கட்டும், கொல்லைப்புறமும், முற்றத்து உள்ளிலிருந்து மேலே வளைந்து வளைந்து போகும் மாடிப்படியும், சிறிய மாடியறையும் கொல்லென்று கிடக்கும். இப்படியொரு வீட்டில் ஓடிப் பிடித்து விளையாடக்கூடாது என்று அந்தச் சிறு பிள்ளைக்குக் கட்டளை போடுவது எத்தனைக் கொடுமை!

திருடன் போலீஸ் விளையாடப் போய் சக்கர நாற்காலி திட்டில் முட்டிக் கீழே விழுந்து காலில் அடிபட்டு இரத்தம் வர ஆரம்பித்து… மல்லிகா “ஜாக்கிரதை ஜாக்கிரதை” என்று எதற்கு அத்தனை அஞ்சினாளோ அது நடந்தே விட்டது. இரத்தம் உறையாமல் பெருகுகிற தன்மை… கீழே விழுந்து, அக்கம்பக்கம் யாரையும் கூப்பிட முடியாமல் அப்படியே கிடந்து, இரத்தம் ஏகத்திற்கு சேதம் ஆகி, அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த மல்லிகா நிலைமையைக் கண்டு அலறி, அதிர்ச்சியில் நின்றதில் மறுபடியும் நேர விரயமாகி…

அன்றைக்கு ஏதோ நல்ல காலம்… பக்கத்து வீட்டுக்கு உறவுக்காரர்கள் யாரோ காரில் வந்திருந்தார்கள். உடனே அள்ளிப் போட்டுக் கொண்டு போய் துடியலூரில் ஒரு நர்சிங் ஹேமில் முதலுதவி செய்து, ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டு… கண்ணப்பன் உயிர் பிழைத்தது அதிசயம் தான்…

வீடு வந்த பிறகு கையில் கிடைத்த ஸ்கேலால் ரவியை விளாசித்தள்ளி விட்டாள் மல்லிகா. கண்ணப்பன் பல நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, அவர் இருக்கும் அறைப் பக்கம் கால் போனால் காலை ஒடித்து விறகாக அடுப்பில் வைத்து விடுவேன் என்று மிரட்டி வைத்தாள். அதற்கெல்லாம் அஞ்சி கொஞ்சம் அடங்கியிருந்த ரவி, அவர் உடல் கொஞ்சம் தேறியதும் பழையபடி உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்து விட்டான்.

மல்லிகா பட்ட சிரமங்களைப் பார்த்து வேதனைப் பட்டுப்பட்டு கண்ணப்பனுக்கு மனம் காய்த்துப் போய் விட்டது. ஏனோ அர்த்தமற்ற இந்த வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும் என்று தோன்றவும் தொடங்கி விட்டது. அதற்குள் ரவியைக் கட்டுப்படுத்துவானேன் என்று முன்னெப்போதுமில்லாத வாஞ்சை… போதாதா ரவிக்கு?

கொஞ்ச நாட்களாக, பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு பழகிக் கொண்டு வந்து தினம் வீட்டில் அதை விளையாட வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான். கண்ணப்பன் மல்லிகாவுக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டில் சொல்லி ஒரு பிளாஸ்டிக் மட்டையும் பந்தும் வாங்கி வரச் செய்திருந்தார். அதைக் காப்பாற்றத்தான் பெரிய யோசனையாக செய்ய வேண்டியிருந்தது. ரவியின் விளையாட்டு சாமான்கள் பூராவும் தூக்கி நிஜமாகவே அடுப்பில் போட்டுப் பொசுக்கி விட்டிருந்தாள் மல்லிகா. “எதையாவது விளையாடறேன்னு அப்பா மேல பட்டுதோ தொலைச்சுருவேன் கடங்காரா…” வீட்டில் மல்லிகா கண்ணுக்குப் படாமல் இந்த மட்டையையும் பந்தையும் எங்கே ஒளித்து வைப்பது?

ரவிதான் அற்புதமான ஓரிடைத்தைக் கண்டு பிடித்தான். இருட்டான மாடிப்படி வளைவில் மேலறைக்குத் திரும்புமுன் இடது பக்கம் ஒரு சிறு மரப்பலகை பெயர்ந்திருந்தது. ஒரு பக்கம் நன்றாக சுவரோடு ஒட்டிக் கொண்டிருந்ததால் மறு பக்கம் திறந்து மூடும்படி அமைந்து விட்டது. திறந்தால் ஓரடி உயரத்திற்கு ஓர் இடம். இருட்டுக்குள் இருட்டாக ஒரு பெட்டி போல் இருந்தது. கிரிக்கெட் மட்டையும் பந்தும் அங்கே ஒளிந்தன. மாலை வந்ததும் அதை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து ஆசை தீர விளையாடுவதும் அம்மா வருமுன்பு சர்வஜாக்கிரதையாக மாடி வளைவில் ஒளித்து வைப்பதுமாக இருந்தான்.

வைப்பதுமல்லாமல் அப்பாவிடம் வந்து கண்களை மட்டும் ரகசியமாக உருட்டி “ஒளிச்சு வைச்சிட்டேன்” என்று தலையை ஆட்டுவான். ஞாபகமாக “நாளைக்கு மறுபடியும் விளையாடலாம்பா… நீ இன்னிக்கு காஜி குடுக்கவேயில்லை” என்பான். இத்தனூண்டு பிள்ளைக்கு எத்தனை விவரம்!

கண்ணப்பன் அமுதாவின் பரீட்சை அட்டையை ஒரு கையில் கேடயமாக வைத்துக் கொண்டு அடி ஏதும் மேலே படாமல் மட்டை பிடித்து சமாளித்து வந்தார். முதலில் மட்டை அவர் பிடித்தால், ஆட்டம் முடிகிற போது ரவி பிடிக்க வேண்டும். ரவி மட்டை பிடிக்கு முன்பு மல்லிகா வரும் சப்தம் கேட்டால் ஆட்டம் அத்தோடு முடிந்து விடும். ஆனால் ரகசியமாக ராத்திரி தூங்கும் வரை, “அப்பா எனக்கு நீ காஜி குடுக்கவேயில்லை” என்று சொல்லிக் கொண்டே இருப்பான். தூக்கத்தில் கைகளைத் தூக்கி மட்டை வீசுவான். “காஜி, காஜி'” என்று முனகுவான்.

ரவி பள்ளியிலிருந்து கற்றுக் கொண்டு வந்த எண்ணற்ற சங்கேத வார்த்தைகளில் காஜியும் ஒன்று. கிரிக்கெட் மொழி. முதலில் மட்டை பிடிப்பவர், ஆட்டம் முடியும்போது பந்து வீசுபவராக இருக்க வேண்டும். நேரமில்லாமல் அல்லது அவுட்டாகாமல், முதலில் பந்து வீசியவருக்கு மட்டை சந்தர்ப்பத்தை மிச்சம் வைத்தால் அது “காஜி'”. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்டத்துக்காகவே பள்ளி விட்டதும் தலை தெறிக்க ஓடி வருவான். மாடிக்கு ஓடி மட்டையைத் தூக்கிக் கொண்டு வருவான்.

“அப்பாவ் வந்துட்டேன்…” கத்தியபடி வந்தவன் கை காலைத் துடைத்துக் கொண்டு, வேகவேகமாக காபி குடித்து விட்டு, மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு வந்தான். விளையாட்டு தொடங்கியது. அரை மணிக்குப் பிறகு கண்ணப்பனுக்கு முடியவில்லை. மூச்சு வாங்கியது. வேர்க்கத் தொடங்கிது. “விபரீதம்” என்று உள்ளம் எச்சரித்தது. மெதுவாக ஆட்டத்தை நிறுத்தினார். ரவி அடம்பிடிப்பான் என்று தெரிந்து, “அம்மா சீக்கிரம் வர்றா போலிருக்கு, சீக்கிரமா ஓடிப் போய் மட்டையை வைச்சிட்டு வந்திரு” என்று அவசரப்படுத்தவே, ரவி தலைதெறிக்கப் படியேறி ரகசிய இடத்தில் வைத்து விட்டு சாது போல் இறங்கி வந்து அப்பா அருகே நின்று கொண்டான். ஆனால் அம்மாவைக் காணோம். ஏமாற்றம்!

“என்னப்பா அம்மா வரவேயில்லை? நீ அவுட்டானதும் நான்தான் பேட்டிங் பண்ணணும், அதுக்குள்ள ஏன் நிறுத்தின?”

“கண்ணு, அம்மா வர்ற மாதிரி சத்தம் கேட்டதா அதனாலதான்… திடீர்னு வந்துட்டா என்ன பண்றது? அப்புறம் தெரியாம விளையாடறதும் நிண்ணு போயிடும்… மட்டையெல்லாம் அடுப்புக்குப் போயிடும். உனக்கு அடி விழும் இல்லை? அதனாலதான் ஜாக்கிரதையா இருக்கணும்ணு அப்படிச் சொன்னேன்.”

கண்ணப்பன் சமாதானப்படுத்தியதில் கொஞ்சம் ஆறுதலடைந்தான். இருந்தாலும் அடுத்த நிமிஷமே “அப்பா ஐஸ் நம்பர் விளையாடலாம்பா” என்று ஆரம்பித்தான்.

போச்சுடா, மல்லிகா வரும் வரை இவனை எப்படி சமாளிப்பது? பேசிகீசித்தான் பிடித்து வைக்க வேண்டும்.

“வேண்டாம் கண்ணு… நாம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிகிட்ட இருக்கலாம். இன்னிக்கு ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க?”

“கழித்தல் கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க. எங்க கணக்கு டீச்சர் ரெஜிஸ்தர்ல இங்க்கை கொட்டினதுக்காக பெருமாளை அடிச்சாங்க. கடங்காரா, இனிமே இங்க் மேல கையை வைப்பியான்னு திட்டினாங்க… அப்பா, கடன்காரன்னா என்னப்ப?”

“கடன்காரன்னா… நாம யார் கிட்டயாவது ஏதாவது வாங்கியிருந்தோம்னா உடனே திருப்பிக் கொடுத்திடணும். அப்படிக் கொடுக்கலேண்ணா அவங்க வந்து திருப்பிக் கேட்பாங்க. கொடுக்காம விட்டோம்னா நாம கடங்காரங்க ஆயிடுவோம்…”

“அன்னிக்கு மீசை மாமா வந்து உங்ககிட்ட கடனைத் திருப்பித்தான்னு கேட்டாரே, அந்தக் கடனா?”

எல்லாவற்றையும் இந்தப் பொடியன் கவனித்திருக்கிறான். வீட்டு மேல் வாங்கிய கடன். வட்டி ஒழங்காய்க் கொடுத்தும் அசலைத் திருப்பிக் கேட்கிறார் செட்டியார்.

“ஆமாப்பா… அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவர்கிட்டதான் கடன் வாங்கியிருக்கோம்? திருப்பிக் கொடுக்கணுமில்லை? அதைத்தான் கேட்கிறார்.”

“ஏம்பா திருப்பிக் கொடுக்கலை?”

ஆரம்பித்து விட்டது. குழந்தைகளின் கேள்விகள். எண்ணற்ற கேள்விகள். ஒன்று சொன்னால் அதிலிருந்து இன்னொரு புதுக் கேள்வி… நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேள்விகளெல்லாம் எப்படித்தான் இந்தப் பிஞ்சுத் தலைகளிலிருந்து உதயமாகிறதோ?

“நம்ம கிட்ட இப்ப இல்ல… அதனால கொடுக்கல.”

“கொடுக்காமயே போன்னு துரத்திலாமாப்பா?”

“ஐயையோ… அப்படி எல்லாம் செய்யக் கூடாது. வாங்கின கடனை ஒழுங்கா திருப்பிக் கொடுக்கிறவங்கதான் ரொம்ப நல்லவங்க. நம்மகிட்ட இருந்தால் நாமே திருப்பிக் கொண்டு போய் கொடுத்திடணும். கடனை அவங்க கேட்கிற மாதிரி வச்சுக்கக்கூடாது.”

“நீ நல்லவனாப்பா?”

கண்ணப்பனுக்குக் கண்கள் பொங்கின. யார் நல்லவன் யார் கெட்டவன்? எல்லாம் நல்லபடியாக இருக்கிற போது நல்லவனாக இருக்க முடிகிறது. கொஞ்சம் தாழுகிற போது எல்லாமே மாறிப் போய் விடுகிறது. கனவிலும் நினைத்துப் பார்த்திராத வார்த்தைகள் எதிர்பாராதவர்களிடமிருந்து வருகிற போது… ஒரு வேளை கெட்டவனாகி விட்டோமோ? வாழ்க்கை கெட்டுப் போனவன் கெட்டவனா?

“நா எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா… கண்டிப்பா கடனை திருப்பிக் கொடுத்திருவோம். நீ கவலைப்படாதே, என்ன கண்ணு?”

“இல்லப்பா… கெட்டவங்கன்னா சாமி வந்து ராத்திரி கண்ணைக் குத்துமா… எங்க டீச்சர் சொன்னாங்க. அப்பா, நான் நல்லவனாப்பா?” குழந்தையின் கேள்வியில் ஒரு கெஞ்சல் இருந்தது. உடனே பதில் தெரியாவிட்டால் கடவுள் எதிரே வேலை வைத்துக் கொண்டு கண்ணைக் குத்தக் தயாராக இருக்கிற பயத்தில் கண்கள் விரிந்திருந்தன.

“இப்பதான சொன்னேன்? நாம எல்லாம் நல்லவங்க… நீ நல்லவன், அம்மா நல்லவ, அமுதா நல்லவ…”

“அப்புறம் ஏம்ப்பா அம்மா சும்மா என்னை கடங்காரான்னு திட்டறாங்க? நான் கடன் ஏதும் அம்மா கிட்ட வாங்கவேயில்லப்பா.” இதைச் சொல்லும் போது அழுகை.

“அதுக்கில்லை கண்ணு… அம்மா சும்மா கோபத்தில சொல்றது அது…”

“ஆனா நான் கடன் வாங்கவே இல்லைப்பா… நிஜமா…”

“கடன்னா பணம்தானா? நாளைக்கு நீ பெரியவனாகி அம்மாவுக்கு வீடு, கார் எல்லாம் வாங்கிக் கொடுக்கணுமில்லை, அதுக்காகத்தான் இப்பவே சும்மா சொல்லி வச்சுக்கறா…”

அடுத்த கேள்விக்கு அவன் வாயைத் திறப்பதற்குள் வாசலில் செருப்பு சத்தம் கேட்டது. ரவியின் வாயும் அடைபட்டது. கண்ணப்பன் அவனை மடியிலிந்து இறக்கிவிட்டு, வாய்மேல் கை வைத்து, “ஒழுங்கா இருக்கணும். என்கிட்ட வரக்கூடாது. போய் கதவைத் திறந்து விட்டுட்டு அம்மாவோட பையை வாங்கிட்டு வா…” என்று இரகசியம் போலச் சொன்னார். ரவி இறங்கி ஓடினான்.

வீடு அமைதியாக இருப்பதை ஒரு சந்தேகத்தோடு பார்த்தபடியே உள்ளே வந்தாள் மல்லிகா. நேரே கண்ணப்பனிடம் போனாள். “ரவி ஏதாவது படுத்தினானா? உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கு? நல்லா இருக்கீங்க இல்லை?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

“ம்… ஒண்ணுமில்லை… அசதியா இருக்கிற மாதிரி இருக்கு… நல்லாத்தான் இருந்தேன்… மாத்திரையெல்லாம் சரியா சாப்பிட்டேன்… ஆனா இப்ப லேசா சிரமமா இருக்கு” என்றார்.

அன்றிரவு அவரால் தூங்க முடியாமல் காலில் விண்விண்ணென்று வலி. பல்லைக் கடித்துக் கொண்டு புரண்டு படுத்தார். பக்கத்தில் ரவி தூக்கத்திலேயே “அப்பா காஜி கொடுப்பா…” என்று முனகினான். மல்லிகா எழுந்து வலி குறைக்க மாத்திரை தந்து விட்டு, ரவி முனகுவதைப் பார்த்து “என்ன, என்னவோ உளர்றானே” என்றாள். அதற்கு, “அவன் ஸ்கூல்ல கிரிக்கெட் விளையாடிட்டு வந்திருக்கான். அதைத்தான் சொல்றான்” என்றார்.

அடுத்த மூன்று நாட்களும் அமுதா பள்ளிக்குப் போகவில்லை. அப்பாவுடனே இருந்தாள். மல்லிகா ஒரு நாள் விடுப்பு எடுத்து உடன் இருந்தாள். விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு ரவியால் அப்பாவின் கிட்டக்கூட நெருங்க முடியவில்லை.

ஒரு வாரத்தில் கண்ணப்பனை மருத்துவமனையில் சேர்க்கும்படியாயிற்று. பத்தாம் நாள் கதை முடிந்தது. உடலை வீட்டுக்குக்கூட கொண்டு வராமல் மருத்துவமனையிலிருந்தே தகனத்துக்குக் கொண்டு செல்லும்படியாயிற்று.

வீடு முழுக்கக் கூட்டம், உறவுக்காரர்கள் மயம், அழுகை… ஏனென்று ரவிக்குப் புரியவில்லை. எல்லோரும் இவனையல்லவா இழுத்து வைத்துக் கொண்டு அழுதார்கள்! அப்பா ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று தெரியவில்லை. எப்போது மருத்துவமனைக்குப் போனாலும் கொஞ்ச நாள் கழித்து கட்டுடனோ, சக்கர நாற்காலியுடனோ திரும்பி வந்துவிடுவார். இந்த முறை இன்னும் வரவில்லை. கேட்டால் “அப்பா செத்துப் போயிட்டார். இனிமே வர மாட்டார்” என்றுதான் எல்லோரும் சொன்னார்கள்.

ரவியால் அதை நம்பமுடியவில்லை. அதெப்படி அப்பா வராமல் இருப்பார்? கண்டிப்பாக வருவார். எப்போதும் அடிக்கிற அம்மாவிடம் என்னை விட்டு விட்டுப் போகவே மாட்டார்.

வாங்கிய கடனெல்லாம் அடைக்க வேண்டி வீட்டை செட்டியாருக்கே விற்று விட்டு, வேறு சிறு வீட்டிற்குப் போவதென்று முடிவானதும் ரவி வீட்டை விட்டு வெளியே வர முடியாதென்று அடம்பிடித்தான் “அப்பா இந்த வீட்டுக்குத்தான் திரும்பி வருவார்… அவருக்கு வேற வீடு தெரியாது” என்று கத்தியழுதான்.

கூட சேர்ந்து மற்றவர்கள் அழுதாலும் வேறு வீட்டிற்குக் கட்டாயமாகக் கொண்டுபோய் விடுவார்கள் என்று ரவிக்குத் தெரிந்தே இருந்தது. “தூங்கும் போது தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.” அவனுடைய கவலையெல்லாம் அப்பா திரும்பி வந்தால் அந்த வேற வீடு எங்கேயிருக்கிறது என்று யார் காட்டுவார்கள்?

நான்கு தெரு தள்ளி இவன் பள்ளிக்கு அருகே இருந்த சிறு வீட்டிற்கு சுத்தம் செய்ய அமுதா போன போது இவனும் கூடப் போனான். சட்டென்று ஒரு யோசனை வந்தது. இந்தப் புது வீட்டு அடையாளத்தை எழுதி அந்தப் பழைய வீட்டில் வைத்து விட்டால் என்ன? அப்பா வந்தால் பார்த்துத் தெரிந்து கொள்வார்.

பள்ளியில் இருந்த போது கணக்கு நோட்டிலிருந்து பேப்பர் கிழித்த புழுக்கைப் பென்சிலை சுவரில் தேய்த்து எழுத்துக் கூட்டி, “ஸ்கூல் கிட்ட பச்சை வீடு” என்று நினைத்துக் கொண்டு அடித்து அடித்து எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

வீட்டில் எங்கும் உடனே வைக்க முடியாதபடி வீட்டு சாமான்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை கட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

செட்டியாருக்குக் கைகூப்பி சாவியைக் கொடுத்து விட்டு, சாமான்கள் எல்லாம் ஏறிப் போன மாட்டு வண்டியில் கடைசி ட்ரிப்பில் ஏறிக்கொண்ட மல்லிகாவும் அமுதாவும் ரவியை ஏறச் சொன்னபோது பெரியதாக அழுது பார்த்தான்…

“நான் வர மாட்டேன்… அப்பா வருவாரு…”

“ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். நீ வேற ஏண்டா படுத்தற நாயே” என்று இரண்டு அறை முதுகில் வைத்து வண்டியில் ஏற்றிக் கொண்டாள் மல்லிகா.

வண்டி தெருத் திரும்பும் போது, யாரும் எதிர்பாராத சமயம், டக்கென்று கீழே குதித்து வீட்டை நோக்கி ஓடினான் ரவி. செட்டியார் தெரு இறங்கிப் பக்கத்து வீட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

உள்ளே ஓடியவன் தலைதெறிக்க மாடிப்படி ஏறினான்… “அப்பா வந்தா இங்கதான் வருவார். அவருக்கு நல்லாத் தெரியும் இந்த இடம்… வேற யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க… வர மாட்டாராமே… அதெப்படி? அப்பா நல்லவர்னு சொன்னாரே… கடன் வாங்கினா நாமே திருப்பிக் கொடுத்திடணும்னு சொன்னாரே… எனக்க காஜி கடன் வச்சிட்டுப் போயிருக்காரு… திருப்பிக் கொடுக்க வருவாரு… நான் இந்த வீட்டில இல்லாவிட்டாலும் இங்க வந்து பார்த்துட்டு நேரா வேற வீட்டுக்கு வருவாரு…” என்று எண்ணங்கள் குதித்தோடி வந்தன.

அப்பாவுக்கும் பிள்ளைக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசிய இடத்தில் ரகசிய விலாசக் கடிதம் ஒளித்து வைக்கப்பட்டது. ஏற்கெனவே பந்தும் மட்டையும்

பின்னாலேயே ஓடி வந்த அமுதா இவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றினாள். “எங்கடா போன? ஏண்டா என் உயிரை வாங்கற கடங்காரா? என்று மல்லிகா அழுது கொண்டே தப்தப்பென்று நான்கு அறை வைத்தாள் முதுகில்.

ஓவென்ற அழுகைக்கிடையே, “நான் கடங்காரனில்லை, அப்பாதான் கடங்காரன்” என்று பெரிதாக அவன் அலறியதற்குப் பிரதிபலனாக மேலும் இரண்டு மொத்து விழுந்தது.

– சந்திரக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1998, சென்னை பல்கலைப் பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *