அன்னை பூமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2024
பார்வையிட்டோர்: 308 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கார் நிதானமாக அந்த நீண்ட சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. காரைச் செலுத்துவதில் கவனத்தைப் பதித்திருந்தாலும் சரவணன் தன் பக்கத்துச் சீட்டில் அமர்ந்திருக்கும் மாமாவுக்கு ஒரு சுற்றுப்பயண வழிகாட்டியாய் மாறி பினாங்கைப் பற்றி பல விஷயங்களை விளக்கிக் கொண்டு வந்தான்.

பிரபல சர்வதேச பத்திரிகையின் நிருபரும் நிழற்படக் காரருமான அவன் மாமா அவன் பேச்சை மட்டும் அல்லாமல் அவனையும் வெகுவாக ரசித்துக்கொண்டுவந்தார்.

பினாங்கில் வசிக்கின்ற தன் தங்கை ஜானகியின் ஒரே மகனான சரவணன் கடந்த இருபது ஆண்டுகளில் இப்படி மளமளவென்று தன் தோளுக்குச் சமமாய் வளர்ந்துவிட்டதில் அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி. அறிவுஜீவியான ஜானகியின் மகன். அவளைப்போல் தெளிவான அறிவும், தீர்க்கமான பார்வையுமாய் இருப்பதில் பெருமை கூடியது.

“அங்கிள்.. நான் பொறந்து இருபதாம் நாள் நீங்க என்னைப் பார்க்கவந்ததா அம்மா சொல்வாங்க… அப்புறம் என்னோட படத்தையும் போன்ல என் குரலையும் தான் நீங்க பார்த்து. கேட்டிருப்பீங்க.. ஆனா நான் எப்படி உங்களை எந்த சிரமமும் இல்லாம அடையாளம் கண்டு பிடிச்சேன்”

குழந்தைபோல் கேட்கும் அவனைப் பார்க்கையில் தாயின் குணம் அங்கே பளிச்சிட்டது. அவர் சிரித்துக் கொண்டார்.

“நீயே சொல்லேன்… எப்படி கண்டுபிடிச்சே?”

“உங்களுக்குச் சேலைகட்டி ஜடைபோட்டா நீங்க அம்மாதான்…! எனக்கு ஆச்சரியமா இருக்கு அங்கிள்! நீங்களும் அம்மாவும் ரெட்டைப் பிள்ளைங்க மாதிரி… ஒரே அச்சில வார்த்த பொம்மை மாதிரி இருக்கீங்க

அவன் தன் வியப்பை வார்த்தையில் வெளிப்படுத்தினான். அவர் அவன் தோளில் தட்டிக் கொடுத்தார். தங்கையின் நினைவு நெஞ்சை நிரப்பியது. அவளது அன்பு கண்களில் நீரை நிரப்பியது.

சின்ன மனவருத்தத்தில் அவளைப் பிரிந்து சென்று சில காலம் அவள் நினைவே இல்லாமல் இருந்து கிறிஸ்டினாவைத் திருமணம் செய்து கொண்டபின், அவள் தொல்லையும் வற்புறுத்தலும் தாங்க முடியாமல் மலேசியா திரும்பி தங்கையையும் அவள் கணவனையும் பார்த்து அப்போதுதான் பிறந்திருந்த சரவணனைத் தொட்டில் பிள்ளையாய்ப் பார்த்து விட்டுப் போனவர் அவர்.

அந்தச் சிறுமழலை இப்போது சிங்காரத் தமிழில் இவ்வளவு அழகாய் பேசுவதைக் கேட்க அவருக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

“அங்கிள்.. இதெல்லாம் எங்க நாட்டு மேம்பாட்டுச் சின்னங்கள்… நாங்க தொழில் துறையில எவ்வளவு முன்னேறிட்டோம் என்பதற்கு. இவை முக்கிய அடையாளங்கள்”.

மாமாவின் நினைவைத் திருப்பினான் அவன். புரோட்டன் வீராவில் சௌகரியமாய்ச் சாய்ந்து கொண்டுச் சாலையின் இருமருங்கிலும் நிரம்பி நிற்கும் கட்டிடங்கள் வாகனங்கள். தொழிலாளர்கள் முதலியவற்றைப் பார்க்கும்போது அவருக்கு ஆச்சரியம் அதிகமாகியது. நிஜம்…! அவன் சொல்வது அனைத்தும் நிஜம்!?

இந்த இருபது ஆண்டுகளில்தான் எத்தனை பெரிய மாற்றம்?

வாகனங்கள் ஓடுகின்ற தரமான சாலைகள்…? வரிசை பிடித்ததுபோல் எழுந்து நிற்கும் அடுக்குமாடிக் கட்டிடங்கள்…! எங்கோ ஒரு வெளிநாட்டில் நிற்பது போன்ற உணர்வு தோன்றியது.

உண்மையிலேயே மிகப்பெரிய மாற்றம்தான்! சுதந்திரமடைந்த முப்பத்தெட்டு ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளில் மலேசியா பெருமைப்படும் அளவுக்கு முன்னேறி எல்லாநிலையிலும் வெற்றி கண்டிருப்பது பெரிய விஷயம்தான். மனதுக்குள் சிலிர்த்துக் கொள்கிறார் அவர்.

“உண்மைதான் சரண்! உன்னோட வளர்ச்சியும் உன்னோட நாட்டின் வளர்ச்சியும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு! இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்னால எங்கப்பா அம்மாவோட சண்டை போட்டுகிட்டு இந்த மண்ணைவிட்டு ஓடினேன்… அப்புறம் மனுஷனாகி உங்க அத்தையோட உன்னைப் பார்க்க வந்தப்ப இந்த சாலைகள்லாம் எவ்வளவு மோசமாகியிருக்கும் தெரியுமா… ரெண்டு பக்கமும் காடும். கண்டகண்ட மரங்களும் அடர்ந்து கிடக்கும்.

ஒரு கார் போனா… அடுத்தப்பக்கம் இன்னொரு கார் போறதுக்குத் தெணறும்… ஆனா இப்பப் பாரேன்! இந்தச் சாலைகளோட அழகே நாட்டின் வளர்ச்சியைச் சொல்லாம சொல்லுதேபா…”

அவர் சொல்லி முடிக்கையில் அவர்களின் கார் காணர்வென் ஸ்டீரிட்டில் நுழைந்து விட்டது.

“வீட்டுக்குப் போறதுக்கு முன்னால ஒரு வட்டம் போட்டுட்டு போகலாம் மாமா…”

சொல்லிக் கொண்டே பிட்ஸ்டீரிட்டில் நுழைகிறான் சரவணன். இடது புறமாய்ப் பார்வையைப் பதித்திருந்த மாமாவின் கண்களில் அந்த உயரமான வெள்ளை நிறக் கட்டிடமும் அதில் பறந்துகொண்டிருக்கும் கொடிகளும் வந்து நிறையும் சனங்களும் கண்ணில் பட்டுவிட சரவணனை விசாரிக்கிறார் அவர்.

“இதுதான் சைனீஸ் டவுன் ஹால் அங்கிள்… பினாங்கில இருக்கிற சீனர்கள் பொது மண்டபம்…! சீனர்கள் மண்டபமா இருந்தாலும் மற்ற இனத்தவர்கள் தங்களின் பொது நிகழ்ச்சி, கல்யாணம், பொதுக் கூட்டம். கருத்தரங்கு. விருந்து நிகழ்ச்சியெல்லாம் நடக்கும். இன்றைக்கு ஏதோ நம்ம ஆளுங்க கல்யாணம் நடக்குது. அதுதான் இவ்வளவு கூட்டம்!”

“சரவணா… இதுமாதிரி ஒரு கட்டிடம்தானா? இல்லே இன்னும் இருக்கா….?”

ஏதோ ஒரு ஆற்றாமை மனதில் எழ மாமா கேட்கிறார்.

“நெறைய இருக்கு மாமா… சீனர்கள் தங்களுக்கென்று மூலைக்கு மூலை கட்டிடத்தைக் கட்டிப் போட்டுவெச்சிருக்காங்க…” என்றவன் ஏன் மாமா… ஏன் கேட்டீங்க..!” என்று திரும்பவும் மாமாவைப் பார்த்துக் கேட்கிறான். மாமாவின் முகத்தில் ஓர் இனம் புரியாத கவலை படர்கிறது.

தான் சிறுபிள்ளையாய் இருந்தபோது தன் தாய் வழி தந்தை வழி உறவுகள் இந்தப் பினாங்சில் வாழ்ந்திருந்த நிலையும் அன்று அவர்கள் வைத்திருந்த நிலபுலன்களும் கட்டிடங்களும் இன்று சீனர்களின் பெயர்களில் அடங்கிப் போய், அந்த இடங்களில் ஒண்டிக் குடித்தனக்காரர்களாய் உடம்பில் ஓர் வலி..

“ஒன்றுமில்லேப்பா.. உன்னைப் போல நான் இருந்த காலத்தில் இந்த இடம் இருந்த நிலைமையை எண்ணிப் பார்த்தேன்.. அதான் கேட்டேன் இந்தச் சீனர்கள் பேர் தொங்குற இடமெல்லாம் நம்ம ஆளுங்க பேர் தொங்கின காலத்தை நெனச்சேன்…”

சரவணன் மாமாவை வியப்புடன் பார்த்தான் நெஜம்தான்பா… இதெல்லாம் கதை இல்லே… அந்த நாள்ல நம்ம ஆளுங்க இங்கே ஆட்சி பண்ணிக்கிட்டிருந்தாங்க… இந்த பினாங்குல மட்டுமில்லே நாடு பூரா நம்ம ஆளுங்க நல்லாத்தான் இருந்தாங்க. ஆனா இப்ப

சட்டென்று தன் பேச்சை நிறுத்திக் கொண்டவர் “சரவணா இந்தக் கட்டிடம் மாதிரி நம்ம ஆளுங்க பேர்ல எதாச்சும் கட்டிடம் இருக்கா இங்கே…!”

கேள்வியில் ஒருவித ஏக்கம்! சரவணன் மாமாவின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொண்டவனாய்

“இல்லே அங்கிள்.. நமக்குன்னு ஒரு கட்டிடமோ. ஒரு பொதுமண்டபமோ இங்கே இல்லை. நல்லது கெட்டது எதுவானாலும் நாமெல்லாம் சீனர்களைத் தேடித்தான் போகணும். இல்லேன்னா பொது மண்டபங்கள். சமூக மண்டபம்னு போய்டுவாங்க. நமக்குன்னு கல்யாண மண்டபமோ பொதுமண்டபங்களோ இங்கே இல்லே மாமா… ஒரு சில கட்டிடங்கள் இருக்கு. இருந்தாலும் அதெல்லாம் சாதிச் சங்கங்கள் போல இருக்கு”

இருபது வயது இளைஞன் தன் பார்வையில் பட்டதைச் சொல்கிறான். மாமாவின் மனதில் ஒரு மணி நேரத்துக்கு முன்பு இருந்த பிரமிப்பு ஆச்சரியம் பெருமை எல்லாம் எங்கோ ஓடி மறைகின்றன. இரண்டு புறமும் அமைந்துள்ள கம்பீரமான வீடுகள்! நிமிர்ந்து பார்க்கிறார்.

இரண்டாவது மாடியின் பால்கனியில் நின்று தங்கை ஜானகி கையசைக்கிறாள். அந்த உயரமான வீட்டின் பின்னால் உயர்ந்து நிற்கும் மலையில் நின்றிருக்கும் பசுமையான மரங்களின் குளுமை அருமைத் தங்கையைப் பார்த்ததும் கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைகிறது.

உற்சாகமாய் உள்ளே நுழைந்து தங்கையை ஆரத்தழுவி உச்சிமோந்து நெற்றியில் முத்தமிட்டு உட்கார்ந்தபின் உரையாடல்கள் தொடங்குகின்றன.

“இங்கே நம்ம வீடு மட்டும்தான் தமிழ்க் குடும்பம். மற்றதெல்லாம் சீன சனங்கதான்…! எல்லாம் வசதியானவுங்க… நூறு குடும்பம் இருக்குண்ணா… நல்ல சனங்க. நம்ம தாய்பிள்ளைங்க மாதிரி..”

“நம்ம ஆளுங்க யாருமே இல்லேயாம்மா” கவலையோடு கேட்கிறார்.

“இருக்காங்க… அதோ அங்கே..!” தங்கை காட்டிய திசையில் கண்கள் ஓடுகின்றன. அடுக்கு மாடி வீடுகள் எல்லாம் மலிவு விலை புறாக் கூண்டுகள்! நெற்றி சுருங்குகிறது.

“அங்கே நம்ம ஆளுங்க இருக்காங்கண்ணா…” தங்கையின் வார்த்தைகள் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. இப்படி வளர்ச்சியடைந்து வரும் நாட்டில் இந்த சிறுபான்மை சமுதாயம் ஏன் முழுவளர்ச்சி அடையாமல் இப்படி குட்டையும் நெட்டையுமாய்?

“அதெல்லாம் வசதி குறைவானவுங்களுக்கான வீடுங்கண்ணா.. அரசாங்கம் எல்லா மக்களுக்கும் வீடு இருக்கணும்கிற நோக்கத்தில் இந்த மாதிரி நெறய வீடுங்கள கட்டிக் கொடுத்துட்டு வருது. விலையும் ரொம்பச் சீப்பா இருக்கு. ஆனா நாம இருக்கிற இந்த தெரு வீடுகள்லாம் சீனர்கள் கட்டி விற்கிற வீடு.. இந்த வரிசையில ஒவ்வொருத்தன் நாலு அஞ்சுன்னு வாங்கிப் போட்டுட்டான். இப்ப வெலையை நெனைச்சுப் பார்க்க முடியாது..

தங்கை தான் சொன்னாள். அண்ணனின் முகத்தில் ஓர் இறுக்கம்! அதைத் தொடர்ந்து அது இளகிப்போய் ஓர் நெகிழ்வு!

பொன் கொழிக்கும் இந்த மண்ணில் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தும் இப்படி ஒரு நிலைக்கு வராத சமுதாயத்தில் தன் மைத்துனராவது கொஞ்சம் கௌரவமாக வாழ்ந்து வருவது அவருக்கு நிம்மதியாக இருந்தது.

இருந்தாலும் தனி மனிதன் ஒருவரின் வளர்ச்சி மட்டும் சமுதாயத்தின் பெருமையை வளர்ச்சியை எடுத்துக் காட்டி விட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

பிழைப்பு தேடி வந்த நாட்டில் அடுத்த இனம் என்று அந்த நாளில் வரலாறு வைத்திருந்த சமுதாயம் இப்போது இப்படி தாழ்வுற்றுப் போய்விட்டதே என்ற கவலையும் எழுகிறது.

இந்த முப்பத்தெட்டு ஆண்டு கால சுதந்திர வாழ்க்கையில் இவர்களால் ஏன் முழுமையான வளர்ச்சி காண முடியவில்லை… எங்கே ஒளிந்து கிடக்கிறது அந்த ஊனம்?”

“அங்கிள் வாங்க மேலே போகலாம்…” சரவணன் அழைத்தான். அவனோடு நடந்தார். அந்த மூன்றாவது மாடியில் வந்து நின்றபோது மொத்தம் முப்பத்தெட்டு படிகள் முடிந்திருந்தன. கால்களில் சோர்வு! வெளியே வந்து பால்கனி கம்பியைக் கைகளில் பற்றுகிறார்.

“அங்கிள்… மைடியர் அங்கிள்… நாளைக்கு எங்களுக்கு. மெர்டேகாடே. முப்பத்தெட்டாவது சுதந்திர தின நாள்! இந்த நல்ல நாள்ல நிங்க எங்களோட இருக்கிறதில எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா அங்கிள்… நீங்களும் என்னோட நாளைக்கு அணிவகுப்புக்கு வர்றீங்க…!”

சரவணன் அழைப்பு கொடுப்பது போல் சொன்னான். அங்கிள் சிரித்துக் கொண்டே மலைமுகடுகளில் கண்களைப் பதித்தார். கதிரவன் மெல்லப் போய்த் தன் வீட்டில் இறங்கிக் கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாய் இருள் கவியத் தொடங்கியது.

“நிச்சயம் நாளைக் காலையில் அவன் வரும்போது இவ்வையகம் வெளிச்சம் பெறும். அந்த விடியலில் எண்ணற்ற எழுச்சிகள் தோன்றும்… என் சமுதாயம்… என் இனம்.. நிச்சயம் விடியல் பெறும்.. எழுச்சி பெறும்!!”

மாமா அவன் கையைப் பற்றிக் குலுக்குகிறார்.

“வருகிறேன் இளைஞனே! உன் தாய்த் திரு நாட்டின் சுதந்தர தின கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ள நிச்சயம் நான் வருகிறேன்! அதற்கு முன் இப்போதே என் இனிய திருநாள்… சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்..”

சொல்லிக்கொண்டே அவனைத் தோளில் கைபோட்டு அணைத்துக் கொள்கிறார். மெய்சிலிர்க்கிறது.

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *