அடையாளம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 6,279 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவன் சாலையின் மறுபுறம் சென்று மறைந்த பிறகு சுய நினைவு அடைந்தவராகப் பெருமூச்சு விட்டுக் கொண்டார் ஹாலீத் ராவுத்தர். ‘ம்! காலம்….., எப்படியெல்லாம் கெட்டுப்போயிருக்கிறது. எங்கள் காலத்தில் முகம் தெரியாத பெரியவங்ககிட்டே பேசவே தயங்குவோம். இரண்டு மூணு வயசு கூடுனவங்க முன்னாடியெல்லாம் புகைக்கவே மாட்டோம். பதினஞ்சு வயசிருக்குமா இவனுக்கு…! தன்னோட தாத்தாவுக்கு தெரிஞ்சும், எவ்வளவு தைரியமா எங்கிட்டேயே ஒரு பகுதி ரூபாய்க்கு பீடி வாங்கிட்டுப் போறான்? காசு அதிகமாக இல்லை போலும். இருந்திருந்தால் சிகரெட்தான் வாங்குவான்.’

பெட்டிக்கடையில் மறைவில் நின்று, நீளமாய் இழுத்து அவன் புகைவிடுவதைப் பலமுறை பார்த்திருக்கிறார் ஹாலித் ராவுத்தர். முதல் தடைவையாகப் பார்த்தபோது, பயந்து போய் ஓடினான். பிறகு கண்டு கொள்ளாதவனாக நின்று கொள்ள ஆரம்பித்து, இவரிடமே நேரிடையாக வாங்கும் அளவுக்குத் தைரியம் பெற்று விட்டான். ‘உன்னால் என்னய்யா பண்ண முடியும். தாத்தாகிட்ட சொல்லுவியா..? சொல்லிக்க. அவர் என்னய என்ன செய் திருவார்? அப்பா கிட்டே கண்டதையும் சொல்லிக் கொடுத்து, தாத்தாவுக்குத் திட்டுவாங்கிக் குடுத்திருவேனாக்கும்.’ இன்றைய தலைமுறை இப்படித்தான் வளர்கிறது. யாருக்கும் பயமில்லாமல் மதிப்பும் கொடுக்காமல்!

மெல்ல தன் கிளைகளை அசைத்துக் கொண்டது அரச மரம். இலைகள் சலசலக்கும் மெல்லிய ஓசை. சூரியக் கதிர்கள் இலைகளினூடே செலுத்திய வெளிச்சம், சிதறல்களாய்த் தரை யெங்கும் மரத்தைச் சுற்றிலும் காசுகளாய் மரத்தின் அடியில் இருப்பதால் எவ்வளவு வெய்யில் அடித்தாலும் உக்கிரம் தெரியாது. கடைக்குக் கொஞ்சம் தள்ளி, நிழலில் சிறுவர்களின் விளையாட்டு. இப்போது பம்பரம்.

அது எப்படிப் பருவங்கள் போல விளையாட்டுக்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன? கோலி, கில்லிதாண்டு, பட்டம் விடுதல், பம்பரம், திடீரென்று சடுகுடுக்கு மாறிவிடுகிறார்கள். ஹாலீத் ராவுத்தரின் சிறுவயது ஞாபகங்களும் அவருக்குள் எட்டிப் பார்த்தது. அவருடைய குழந்தைகள் சலீமும், அப்துல் கலாமும், மும்தாஜும் இதே மரத்தடியில் விளையாடியிருக்கிறார்கள். இன்று அவரின் பேரக் குழந்தைகள் விளையாடுகிறார்கள். எல்லாவற்றையும் இந்த அரச மரம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது, தன் நிழலில் நடப்பவர்களை, நிழலில் நடப்பவைகளை உள்வாங்கிக் கொண்டு.

ஹாலித் தாவுத்தரின் மளிகைக்கடை இருந்த இடத்தில் இப்போது சின்னதாய் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார் பாலுத்தேவர். மும்தாஜ் கல்யாணத்துக்கு வேண்டிக் கடையை விற்க வேண்டியதானது. வேறு எங்காவது சின்னதாய் ஒரு கடை போட பெரிதும் முயற்சித்தார். உடனடியாகப் பணம் புரட்டிப் பெண்ணுக்கு வளைகாப்பு, பிரசவச் செலவு, குழந்தைக்குச் செய்ய வேண்டியது என தொடர்ந்து செலவுகள். வேறு வழியில்லாத நிலையில் வீட்டுக்குப் பக்கத்தில் இந்த அரச மரத்தடியிலேயே சல்லிசாய்க் கிடைத்த பெட்டி ஒன்றை வாங்கிப் போட்டு உட்கார்ந்து விட்டார். பெரியவன் சலீமுக்கும் கல்யாணத்தை நடத்தி விட்டார். அப்துல்கலாம் ரேடியேட்டர் கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறான். மும்தாஜின் மகன் – ராவுத்தரின் முதல் பேத்தி – சித்தாரா பர்வீனுக்குப் பதின்மூன்று வயது பூர்த்தியாகிவிட்டது. அது ஒரு பெரிய செலவிருக்கிறது! இன்றோ நாளையோ உட்கார்ந்து விடுவாள்.

ராவுத்தரின் மனைவி கதீஜா இதை அடிக்கடி சொல்லி ராவுத்தரைப் பெருமூச்சு விட வைப்பாள். “பசங்க கையவே நம்புனா நாம் எதுவும் செய்ய முடியாதுங்க. நீங்கதா நாலு காசு சேக்கணும். மருமகன் வீட்ல எதும் கோவிச்சுக்காம், நல்ல படிக்கு சீர் செய்யணும். ஆமா! அந்த நேரத்துக்கு காசில்ல அது இதுனு பொலம்பக்கூடாது…”

பேத்தியப் பார்க்கும் போதெல்லாம் ராவுத்தருக்குக் கவலை கூடும். சலீம் தனிக் குடித்தனம் போகாமலிருந்தால் இப்படிப் பயப்பட வேண்டியிருக்காது. தாய் மாமன் சீரை அவனே செய்து விடுவான். வாய்த்த மருமகள் சரியில்லை. கல்யாணமான ஒரு வருஷத்துக்குள்ளேயே சட்டியைத் தூக்கி விட்டாள். கலாமின் படிப்பு தடைபட்டு இப்போதுதான் வேலைக்குப் போகிறான். பெட்டிக்கடையில் விற்கும் பீடி, தீப்பெட்டி, பழ வியாபாரத்தில் பெரிதாய் என்ன கிடைத்து விடப்போகிறது? நாலு காசு பார்க்க வேண்டுமானால் கடையைப் பெரிசு பண்ணனும். முதல் போட்டால்தான், முதல் எடுக்க முடியும். இன்னொரு பெட்டி வாங்கி அரிசி, பருப்பு என்று கடையைப் பெரிசு படுத்த வேண்டி இரண்டொரு பைனான்சியர்களிடம் பணத்துக்குச் சொல்லி வைத்திருக்கிறார் ராவுத்தர்.

பிள்ளையார் கோயிலின் முன்பு கூட்டம் கூடுவதைப் பார்த்தார் ராவுத்தர் இரண்டு, மூன்று நாட்களாகவே ஊருக்குள் பேசிக் கொண்டுதானிருந்தார்கள் – இந்த வாரமே கோயில் விசேஷம் ஆரம்பமாகும் என்று. நல்ல வியாபாரம் ஆகும். தின்பண்டங்கள் கொஞ்சம் வாங்கிப் போட வேண்டும். கூல்ட்ரிங்ஸ் கூட வாங்கிவைக்கலாம். ஒரு வாரத்திற்கு இந்தப்பகுதி ஜே. ஜே. என்று தானிருக்கும். இப்படியே கடையைப் பெரிது படுத்திவிடலாம். நாளை ராமசாமியிடம் சொல்லி உடனே பணம் கேட்கவேண்டும்.

கூட்டம் முடிந்து வந்த கோபாலனிடம் கேட்டபோது, “புதன்கிழமை காப்புக் கட்டு பாய் அடுத்த வாரம் சாமி சாட்டு.” என்றார்.

“இதென்ன, இந்தத் தடவை பூரா இளவட்டங்களாகவே தெரியுது ! பசங்க திருந்திட்டாங்கபோலத் தெரியுது..?” ராவுத்தர் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“ஆமா பாய்! கோவில் விழாக் கமிட்டி கூட, இந்தத் தடவ பசங்கதா, பெரியவங்க ஒதுங்கியிருக்க முடிவு செய்திருக்கோம்.”

“என்னாச்சு! எதும் பிரச்சனையா கோபால்..?”

“ஆமாங்க பாய்! நாங்க செய்யறது எதும் சரியில்லயாம். அது இதுன்னு என்னன்னவோ புகார் சொன்னானுங்க. தலைவருக்கு கோபம் வந்துருச்சு. போன வாரம் நைட்ல நடந்த கமிட்டிக் கூட்டத்துல கை வைக்கிற அளவுக்கு ஆயிப்போச்சுனாப் பாருங்களேன். பசங்க போக்கே ஒண்ணும் சரியில்ல பாய்! கோவிந்தசாமி பய்யன், மூர்த்தியோட ரெண்டாவது மகன் அப்பறம் பொன்னுசாமி. இவுனுங்கதா. யாருக்கும் அடங்கமாட்டேங்கறாங்க! பெரியவங்கனு ஒரு மரியாதையே இல்ல. என்னமோ பண்ணிக்குங்கனு நாங்க ஒதுங்கிட்டோம். இனி அவுனுங்களாச்சு. விழாவாச்சு..” சலிப்புடன் சொன்னார் கோபாலன்.

“இந்தத் தலைமுறையே சரியில்ல கோபாலன்! தான் தோன்றித் தனம் ஜாஸ்தியாப் போச்சு. பிரச்னையேதும் வராமப் பாத்துக்குங்க. ஒண்ணு கிடக்க, ஒண்ணாயிடப் போவுது.”

“பொறுப்புல உள்ளவங்க பாத்துக்குவாங்க பாய்!” சொல்லி விட்டு, ஆழமாய்ப் புகையை இழுத்துவிட்டுக் கொண்டு போனார் கோபாலன். இன்னும் கோபம் தீரவில்லை போல..என்று நினைத்துக் கொண்டார் ராவுத்தர்.

புதன்கிழமை காலையிலிருந்தே கோவில் வளாகம் அமளிதுமளிப்பட்டது. ராவுத்தர் அந்த நிற தோரணங்களை ஊரில் இதுவரை பார்த்ததே இல்லை. கட்சிக் கூட்டங்களுக்குத்தான் கொடித் தோரணம் கட்டுவதைப் பார்த்திருக்கிறார். கோவில் விசேஷத்தில் இதென்ன புதுசா..? பிறகுதான் பார்த்தார் – அதே நிறத்தில் கொடிகளும் பறந்து கொண்டிருப்பதை! அரச மரத்தின் மீது பெரிய கொடி ஒன்று முக்கோண வடிவில் பறந்து கொண்டிருந்தது.

காலையிலிருந்தே பீடி, சிகரெட், மிட்டாய்கள், பழம், வெத்திலை, பாக்கு என்று வழக்கத்தை விட வியாபாரம் அதிகமாயிருந்தது. இன்னிக்கோ, நாளைக்கோ ராமசாமி பத்தாயிரம் தருவதாகச் சொல்லியிருக்கிறார். முதலில் பெட்டி செய்ய ஆர்டர் கொடுக்க வேண்டும். கறிக்கடை வகாப் பெட்டி வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தார். போத்தனூரில் ஒரு பெட்டி விலைக்கு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். போய் பார்த்து வரவேண்டும்.

கோவில் விசேஷம் ஆரம்பித்துவிட்டால், டவுனிலிருந்து மும்தாஜ் வந்துவிடுவாள் குழந்தைகளுடன் ஒருவாரம் வாப்பா வீட்டில் இருந்து விட்டுதான் போவாள். சின்ன வயதிலிருந்தே கோவில் திருவிழா நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துப் பழகிவிட்டதில், இப்போதும் சாமி சாட்டுதல், ஊர்வலம், மாவிளக்கு, பாட்டுக்கச்சேரி, நாடகம், மஞ்சத்தண்ணி விளையாட்டு. இவைகளைப் பார்க்க வேண்டி வந்து விடுவாள். ஒரு வாரம் போவதே தெரியாது.

ஆரம்பத்தில் ஜமால் கிண்டல் செய்தபோது, “கம்மா வேடிக்கை பாக்கத்தாங்க. எங்க ஊர் கோயில் திருவிழாவ நா பாக்க வேண்டாமாக்கும்..? சின்ன வயசிலிருந்தே பாத்துட்டு வர்றது…” என்பாள் மும்தாஜ் ஜமாலும் மனைவியுடன் பிறகு வந்து விடுவான்.

காப்புக்கட்டு முடித்த கையோடு கணேசன், பொன்னுசாமி மற்றும் நிறைய இளைஞர்கள் ராவுத்தர் கடையை நோக்கிக் கும்பலாக வர, டொனேசன் கேட்க வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு “வாங்க, தம்பிகளா”என்றார் ராவுத்தர் மகிழ்ச்சி பொங்க.

“பாய்! இந்தத் தடவ இந்த அரச மரத்தடியிலிருந்துதா சாமி ஊர்வலம் புறப்படுது. சாமி அலங்காரமும் இங்க வச்சுத்தா.. அதனால கடைய காலி பண்ணணும் நீங்க…’’கணேசன் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனார் ஹாலீத் ராவுத்தர். அவர்களை மலங்க மலங்கப் பார்த்துவிட்டு,”என்னப்பா சொல்றீங்க…? ஒவ்வொரு வருஷமும் ஆத்தோட மண்டபத்துலருந்துதானே சாமி ஊர்வலம் புறப்படும். இதென்ன இந்த வருஷம் புதுசா.. இங்கிருந்து…?”தயங்கியபடி சந்தேகமாகவே கேட்டார்.

“ஏன்.. இங்கிருந்து புறப்பட்டா… என்னா ..?” கணேசனின் தொனி மாறியது.

“சரி. கடயப் பூட்டிடுறேன்.” ஏன் இவர்களிடம் வம்பு.

ஒத்துக் கொண்டார் ராவுத்தர்.

“கடயப் பூட்டுறதா..! நாளைக்கு இங்கிருந்து பெட்டியத் தூக்கியாகணும்… நீங்க நிறைய வேலையிருக்கு இங்க…. இன்னையிலிருந்து இது கோயில் மரம்…!”

அவரால் நம்ப முடியவில்லை. அவர் தண்ணீர் ஊற்றி வளர்த்த மரம். சலீமும், சலாமும் பாதுகாத்த மரம். இது எப்படி கோவில் மரமாகும்…? இவர்களிடம் பேசினால் சரிப்படாது. இரவே ஊர்ப் பெரியவர்களைப் போய்ப் பார்த்தார்.

இது கோவில் மரம்! இதற்கு யாரோட அனுமதியும் எங்களுக்குத் தேவையில்லை. இங்கிருந்து சாமி ஊர்வலம் புறப்பட்டால் என்ன.. என்று முரண்டு பிடித்தது இளைஞர் கூட்டம்.

அன்று கடை திறக்கவில்லை ராவுத்தர். ஜமாத்திலும் அவர் முறையிட்டார். ஊர் முழுதும் அரச மடித்தடியில் கூடியிருக்க, ஊர் இரண்டுபடும் நிலை உருவாகிக் கொண்டிருந்தது.

விவரம் எதுவும் தெரியாத வகாப், ஹாலீத் ராவுத்தரிடம் வந்து, “பாய்! போத்தனூர்ல ஒரு பெட்டி இருக்குனு சொன்னனே வெலை பேசிட்டு வந்திருக்கேன். வாங்க போய் பாத்துட்டு வந்துரலா…’’என்றார்.

“இருக்கும் ஒரு பெட்டிக்கே இப்ப மோசம் வந்துருச்சு வகாப்பு!” ராவுத்தர் விவரம் சொல்லிக் கதறினார்.

“கொடி பறக்கும் போதே நெனச்சேன். இப்படி எதாச்சும் ஆகும்னு நாங்களும் இத்தன வருஷமா திருவிழாவ நடத்தினோம். ஒரு பிரச்சனையும் இல்லாம மொதத் தடவயா இவனுங்க தலையிட்டானுங்க. ஊருக்குள்ள பிரச்சனையும், பிரிவினையும் ஆரம்பிச்சாச்சு..” ஆதங்கத்துடன் கவலைப்பட்டுச் சொன்னார் முன்னாள் கமிட்டித் தலைவர் வெள்ளிங்கிரி.

யாரும் எதிர்பார்க்கவில்லை – இப்படி நடக்கும் என்று! விடியற்காலம். திருதிகுவென எரியும் ஜ்வாலை கண்டு தூக்கம் கலைத்துக் கூட்டம். மக்களிடையே பதற்றமும் பரவிக் கொண்டிருந்தது. எங்கும் கூக்குரல்கள்!

ராவுத்தரின் பெட்டிக் கடையைத் தீ நாக்குகள் கபளீகரம் செய்து கொண்டிருந்தன. அரச மரத்தின் பச்சை இலைகளும், காய்ந்த சருகுகளும் வெடித்துச் சிதறும் ஓசை! மரமும் பற்றிக் கொண்டது.

“கோயில் மரம் என்றார்களே பாவிகள்!”

பதறியடித்துக் கொண்டு வந்தனர் ராவுத்தரும், அவர் குடும்பமும். வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறினாள் கதிஜா பீபி கண் முன்னாடி பெட்டிக்கடை சாம்பலாகிக் கொண்டிருக்க, அதிர்ச்சியில் சிலையாகிப் போயிருந்தார் ஹாலீத் ராவுத்தர். கலகம் சூழ்ந்த காலை விடிந்து கொண்டிருந்தது.

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

1 thought on “அடையாளம்

  1. இளைஞர்களின் மனதில் விளைகிற மதவெறி, அதன் விளைவாய் இழக்கும் மனித நேயம், வன்முறை இவைகளை கோடிட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
    மனித நேயத்தை வலியுறுத்தும் நல்லதொரு விழிப்புணர்வுச் சிறுகதை.
    சிறுகதை ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *