அடி உதவுறது மாதிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 10,503 
 
 

உழைத்து உழைத்து உரத்துப்போன கை. அந்தக் கையின் மூலமாக விழுந்த அடி ஒவ்வொன்றும் இடியைப் போல மதியின் முதுகில் விழுந்து கொண்டிருந்தது. அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருந்தான் முத்து. மாதம் ஒரு முறையோ, இருமுறையோ அம்மாவைப் பார்க்க கிராமத்திற்கு வரும் முத்துவுக்கு அப்போதுதான் அவனது அம்மா, சோற்றை வடித்து, கறிக்கொழம்பை ஊத்தினார். பக்கத்தில் வறுத்த கோழி வேறு இருந்தது. ஆசையாக சாப்பிடப்போகும் நேரந்தான் இந்தச்சத்தம் கேட்டது. அண்ணே, அடிக்காத, அடிக்காத, படிச்சிறேன், நான் படிச்சிறேன் என்னும் சத்தமும் அழுகையும், அடி விழும் சத்தமும் கேட்க ,சாப்பாட்டுத் தட்டை தூக்கி வைத்து விட்டு வெளியே ஓடி வந்தான் முத்து.

எப்போது வந்தாலும், ஊரில் முத்துவின் தெருவில் ஏதாவது ஒரு ரகளை நடந்து கொண்டிருக்கும். தெரு முழுக்க இருப்பவர்கள் எல்லோரும் சொந்தக்காரர்கள்தான் இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தால் சண்டை நடந்து கொண்டிருக்கும். சில சண்டைகளை எட்டி நின்று வேடிக்கை பார்ப்பான், சில சண்டைகளைப் பார்த்தவுடன், பார்த்தும் பார்க்காததுபோல உள்ளே போய் விடுவான், சில சண்டைகளப் பார்த்தவுடன் , நடுவில் போய் நின்று தடுத்து விலக்கி விடுவான், இன்று நடந்து கொண்டிருந்தது சண்டையில்லை. மதியின் அண்ணன் பேரின்பம் மதியை அடித்து வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான்,. விழும் அடியைத் தாங்கமுடியாமல் ,ஓட முயன்ற மதியை, ” ஓடவா பாக்கிற, முடடாப் பயலே , இன்னைக்கு ஒன்னைய அடிச்சு கொல்லாமல் விடப்போறதில்ல” என்று பேரின்பம் துரத்தி துரத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டி மதியை அடித்து கொண்டிருந்தான். எச்சில் கையோடு வெளியில் வந்த முத்து, பேரின்பத்திற்கும், மதிக்கும் இடையில் போய் நின்று ” ஏய், நிப்பாட்டு மாமா, பச்சப் பயலைப் போட்டு ஏன் இப்படி எருமை மாட்டை அடிக்கிறது மாதிரி அடிச்சுகிட்டு இருக்க” என்றான்.

முத்துவை எதிர்பார்க்காத பேரின்பம் ஒரு கணம் நிறுத்தி சுதாரித்து ” ஏய், மாப்பிள்ளை நீ எப்ப, ஊர்ல் இருந்து வந்த ” என்று கேட்கவும் “காலையில்தான் வந்தேன் ” என்று பதில் சொன்ன முத்துவின் பக்கத்தில் ஒட்டி நின்று கொண்டான் மதி. ஏதோ தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து சாகப்போனவனுக்கு , பிடிக்க ஒரு மரக்கிளை கிடைத்து உயிர்தப்பியவன் போல மதி இப்போது நன்றாக முத்துவின் அருகில் வந்து நின்று கொண்டான்.பேரின்பம் ஏதும் குடி வெறியில் அடிக்கிறானோ என்று நினைத்து பேரின்பத்தின் கண்ணையும் முகத்தையும் பார்த்தான். முத்து என்ன நினைக்கிறான் என்பதை ஊகித்தவன் போல ‘மாப்பிள்ளை, நான் ஒன்னும் குடிச்சுப்போட்டுலாம் இவனை அடிக்கல ” என்றான் பேரின்பம்

” பிறகு ஏன் அடிக்கிற மாமா ?” என்று கேட்ட முத்துவிடம் ” இந்தப் பய்லை படிக்க வைக்க என்னா பாடுபட்டு படிக்க வைச்சிக்கிட்டு இருக்கேன், எட்டாவது படிக்கிற இவன் கால்பரிட்சையிலே , பெயில் மார்க்கு எடுத்திருக்கான், நேத்துத்தான் இவன் வாத்தியார் கூப்பிட்டு விட்டாருன்னு பள்ளிக்கூடத்துக்குப்போனேன், அப்ப வாத்தியாரு, இவன் சரியாகவே படிக்க மாட்டிங்கிறான், வகுப்புக்கு வராம கூட சில நேரம் பெத்தனசாமி கோயிலுப்பக்கம் இருக்கிற லவா மரத்துல போயி, லவாப்பழம் பொறுக்கப்போயிறான்னு சொன்னாரு, இவனை படிடான்னு பள்ளிக்கூடத்திற்கு அனுப்புனா இப்படி பண்றான்னே மாப்பிள்ளை ” என்றவனின் உள்ளம் புரிந்தது முத்துவுக்கு.

” மாப்பிள்ளை, எங்க அப்பா என்ன பாடுபட்டாரு, என்னைப் படிக்க வைக்க, அடிச்சாரு, கெஞ்சினாரு, அழுதாரு, படிடா, படிடான்னு எத்தனை தரம் சொன்னாரு, கேட்டனா மாப்பிள்ளை ” என்று பேரின்பம் சொல்ல ஆரம்பித்தவுடன் முத்துவுக்கு பழைய நினைவுகள் ஓடின,.

பேரின்பம், மதியோடு சேர்த்து ஆறு குழ்ந்தைகள் பேரின்பத்தின் அப்பா மாணிக்கத்திற்கு. மிக அருமையான மனிதர் மாணிக்கம். சிறு வயதில் முத்து சில நேரம் கிழிந்து போன பழைய சட்டைகளைப்போட்டுகிட்டு பள்ளிக்கூடத்திற்கு போன நிலையில் பேரின்பம் ஜம்மென்று பள்ளிக்கூடம் வருவான்.முதல் வகுப்பு படிக்கும்போதே டவுனில் படிக்கும் பிள்ளைகள் போல டை போட்டு,சூ கட்டி எல்லாம் வருவான். அவனது அப்பா வெளி மாநிலங்களில் எல்லாம் போய் மிலிட்டரியில் வேலை பார்த்தவர். தன் பிள்ளைகளை மிக நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். பேரின்பத்திற்கும் மதிக்கும் 15, 16 வயது வித்தியாசம் இருந்தது. பேரின்பம் இரண்டு வயது மூத்தவன் முத்துவுக்கு . முத்து ஆறாவது படிக்கும்போது பேரின்பம் எட்டாவது படித்தான். இப்போயிருக்கிற ஹெட்மாஸ்டர் பரவாயில்லை, மாணவர்களின் படிப்பில் அக்கறை எடுத்து வீட்டிற்கு எல்லாம் சொல்லி விட்டு படிக்க வைக்கின்றார். அப்போது அப்படியில்லை. கவர்மெண்ட பள்ளிக்கூடம். உயிரைக் கொடுத்து பாடம் எடுக்கும் வாத்தியார்களும் இருந்தார்கள், ஏனோ தானோ, ஒன்றாம்தேதி வந்தால் நமக்கு சம்பளம் வரப்போகிறது என்று நினைக்கும் வாத்தியார்களும் இருந்தார்கள். பேரின்பம் சரியாகப் படிக்கவில்லை. நல்லா மற்ற பையங்களோடு சுற்றினான். பம்பரம் சுத்தி சூப்பரா விடுவான். நொண்டிக்கால் விளையாட்டை சூப்பரா விளையாடுவான். கபடி, கோகோ, உப்பு மூட்டை என்று சின்னப்பையங்க விளையாட்டு எல்லாத்திலேயும் கலந்து கலக்குவான்.ஆனால் வகுப்பறைக்குள் மட்டும் ரொம்ப அமைதியாகி விடுவான். எதையோ பறிகொடுத்தவன்போல உட்கார்ந்திருப்பான். கை நிறைய வேப்பங்கொழுந்த அள்ளி வாயில போட்டுட்டு , அந்த கசப்பில முகத்தை சுளிக்கிறவன் மாதிரியே வகுப்புக்குள்ள உட்கார்ந்திருப்பான். எட்டாவது வகுப்பில் இரண்டு முறை பெயிலாகி முத்துவோடும் சேர்ந்து படித்தான். பின்பு என்ன நினைததானோ , சின்னப்பையல்களோடு எல்லாம் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கிறது, நான் பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று சொல்லி நின்றுவிட்டான்

இப்போ இருக்கிற மாதிரி அப்ப கவர்மெண்ட் பள்ளிக்கூடம் இல்லே. கூரைக்கட்டிடம்தான் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரைக்கும். அன்னைக்கொரு தடவை மூக்கையா வாத்தியார் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்பொழுது தொப்பென்று கூரையிலிருந்து பாம்பு ஒன்று விழுந்தது. கையிலிருந்த பிரம்பை வைத்தே மூக்கையா வாத்தியார் பாம்பை அடித்துக்கொன்று விட்டு பாடம் நடத்தினார். மகாராசன் மதுரையிலிருந்து வீரிசெட்டி என்னும் ஒரு தலைமையாசிரியர் வந்தப்பறம்தான் பள்ளிக்கூடமே மாறுச்சு. முத்து பத்தாவது படிக்கும்போதுதான் வீரிசெட்டிசார் வந்தார் . வந்த ஒரு மாதத்திலேயே பள்ளிக்கூடத்தை தலை கீழாக மாற்றி காட்டினார். பள்ளிக்கூடத்திலே கரண்ட் இல்லே. பள்ளிக்கு அருகில் இருந்த ஜமீந்தர்ர் பங்களாவுக்குப்போய் அவரைப் பார்த்து பள்ளிக்கூடத்திலே கரண்ட் இல்லை என்பதைச்சொல்லி, தங்கள் பங்களாவில் இருந்து ஒரு வயரை ஒரு லைட்டுக்கு இழுக்க அனுமதி கேட்டு வாங்கி வந்தார். இரவு முழுக்க படிக்க வசதி செய்து கொடுத்தார். பின்பு மேல் அதிகாரிகளுக்கு எழுதி நிரந்தரமாக கரண்ட் வாங்கித்தந்தார். முத்துவின் வீட்டில் எல்லாம் அப்போ கரண்ட் இல்லை . பள்ளிக்கூடத்தில் போய் இரவு முழுவதும் தங்கிப் படித்தான். சுப்பையா, சுப்பிரமணி, சுந்தரசேகர், இராமநாதன். நவநீதகிருஷ்ணன்,இராஜேந்திரன்,சொக்கர், ஜெயராஜு, குருசாமி,பழையூர் ரவி, மெய்யுனத்தம்பட்டி ராஜாராம் என்று பலரின் வீட்டிலும் கரண்ட் இல்லை . வீரிசெட்டி சாரின் வரவு மிகப்பெரிய வாய்ப்பை அந்தப் பள்ளி மாணவர்களுக்கு அதுவும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுத்தது. எல்லோரும் நல்ல மதிப்பெண் எடுத்தார்கள், . பேரின்பமும் படித்திருந்தால் பத்தாம் வகுப்பை பாஸ் பண்ணியிருக்கலாம். அவனுக்கும் ஒரு மாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். அவன் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே படிப்பைப்பார்த்து பயந்து ஓடிவிட்டான்.

முத்து கல்லூரிக்கு படிக்கப்போன காலத்தில் பேரின்பம் வண்டி மாடு வைத்து ஊரில் வேலை செய்து கொண்டிருந்தான். காள வாசலுக்கு மண் அடிக்கப்போவான் . காலையிலிருந்து மாலைவரை வண்டியோடும் மாட்டோடும் அந்த செம்மண்ணோடும் அவனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. முத்து கல்லூரி முடித்து அரசு வேலையில் சேர்ந்த நேரத்தில் பேரின்பத்திற்கு திருமணம் ஆனது. ஒருமுறை முத்து ஊருக்கு வந்த நேரத்தில் தனது மனைவி இளவரசியை அடித்து வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான் பேரின்பம். அம்மா மிகவும் வருத்தமாக ” டேய், பேரின்பம் இப்போ நல்லா குடிச்சு பழகிட்டாண்டா, நாசமாப்போற கவர்ண்மெண்ட், ஏந்தேன்,இப்படி ஊரு ஊருக்கு சாராயக்கடை திறந்து விட்டு அநியாயம் பண்ணுதோ , நல்லா உழைக்கிற பயலுக எல்லாம் இப்படி குடிச்சுப்பழகி நாசமாப்போறாங்க், குடிச்சுபோட்டு, அகம்பாவமா பேசிக்கிட்டு, பொண்டாட்டியைப் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கான், நீ அங்கே போக வேணாம் தம்பி ” என்றார்கள். முத்து அன்று வெளியே செல்லவில்லை.

ஊருக்குள்ளேயும் பேரின்பத்தைப் பற்றிச்சொன்னார்கள். நல்ல முரட்டு உருவம் உள்ளவன் பேரின்பம். நல்ல கடுமையான உழைப்பாளி.அசால்ட்டா பச்சை நெல்லு மூட்டையைத் தூக்கி தனியாளா வண்டியிலே போடுவான். எவ்வளவு பெரிய பாரத்தையும் வண்டியில் ஏற்றி கட்டி ஓட்டிப்போவான். வம்புக்கு வந்தா ஒத்த ஆளா எவனையும் தெம்பா அடிச்சு நொறுக்குவான். மிகத்துணிச்சலானவன். ஆனால் குடி அவனை முழுவதுமாக மாற்றியிருந்தது. ” ஏய் , நல்லா குடிச்சுப்போட்டு வேட்டி அவிழ்ந்து கீழே விழுந்தது கூடத்தெரியாமல் பல நேரம் தெருவில் விழுந்து கிடக்கின்றான ” என்று சொன்னார்கள். எப்படி இருந்த பேரின்பம் இப்படி மாறிப்போய்விட்டானே என்று வருத்தமாக இருந்தது முத்துவுக்கு. ஆனால் குடிபோதையில் ,தெருவில் எதையாவது உளறிக்கொண்டிருந்தாலும் முத்துவைப்பார்த்தவுடன் கொஞ்சம் அமைதியாகி விடுவான் பேரின்பம். தன்னோட மாமன் மகன் படிச்சு வேலைக்குப்போனதில் உண்மையிலேயே பேரின்பத்திற்கு மகிழ்ச்சி இருந்தது. பேரின்பத்தின் மேல் முத்துவுக்கும் மரியாதை இருந்தது, அதனாலேயே ஊருக்கு வந்த நேரங்களில் அவன் வம்பு பண்ணிக்கொண்டிருக்கும் இடங்களில் அவனைப் பார்க்காதவன் போல தாண்டிப்போய்க்கொண்டிருந்தான்.

இன்று பேரின்பம் தனது தம்பி மதியைப்போட்டு இந்த அடி அடிக்கும்போது தாள முடியவில்லை முத்துவிற்கு. ” ஏய் என்ன ஒண்ணும் சொல்லாமா , பேசாம நின்னுக்கிட்டு இருக்கிற ” என்று பேரின்பம் கேட்டவுடன் நிகழ்காலத்திற்கு வந்தான். முத்துவின் கைப்பிடியில் இருந்த மதியை இழுத்த பேரின்பம் மேலும் இரண்டு அடியைப் போட்டான். தடுக்கப்போன முத்துவுக்கும் இலேசாக ஒரு அடி விழுந்தது. ” படிப்பியாடா, படிப்பியாடா, பன்னிப்பயலே படிப்பியாடா ” என்று சொல்லி மேலும் அடிக்கப்பாய்ந்தவனை , ” ஏய் நிப்பாட்டு மாமா, அடிச்சாப்பில உன் தம்பி படிச்சிருவானா ? மாமாவும்தான் அத்தனை அடி அடிச்சாரு உன்னையே , நீ படிச்சயா ” என்று முத்து கேட்டவுடன் ஒரு மாதிரி அழப்போறவன் போல ஆன பேரின்பம் ” எப்படி மாப்பிள்ளை , இவனைப் படிக்க வைக்கிறது ?” என்றவன் பேச ஆரம்பித்தான்..

” ஏய் முத்து , நானும்தான் ஊங்கூடப் படிச்சேன். படிடா ,படிடான்னு இராத்திரி பகலா எங்கப்பா சொன்னாரு. கேட்கலை நான். படிச்சாத்தாண்டா பிழைக்க முடியும், நாலு பேரு மத்தியிலே கவுரவமா வாழ முடியுமுன்னு படிச்சு படிச்சு சொன்னாரு. கேட்கலையே மாப்பிள்ளை, கேட்கலையே. படிப்புனா என்னான்னு தெரியலையே மாப்பிள்ளை எனக்கு அப்ப . நீ படிச்சே, ஒரு வேலைக்கு போனே. அன்னைக்கு உன்னையை திண்டுக்கல்ல வந்து பார்த்துவிட்டு வநத சுப்பு மாமன் என்னமா சொன்னாரு. ஏலே முத்து வேலை பார்க்கிற ஆபிஸுக்குப்போயிருந்தேன். கலர் கலரா லைட்டா எரியுதுடா,எவ்வளவு பிரமாதமா ஆம்பிளையும் , பொம்பளையும் சேர்ல உக்காந்து வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம முத்துவை அந்த அறைக்குள்ள பார்த்தவுடன் எவ்வளவு பெருமையா இருந்துச்சு. ஏலே, முத்து அங்க வேலை பாக்கலைன்னா நம்மளை உள்ளேயாவாது விடுவாங்களான்னு ? ” சொல்லிச்சொல்லி பெருமையா சொன்னாரு மாப்பிள்ளை. உனக்கு எப்படி இது கிடைச்சது படிச்ச படிப்புதானே காரணம் ?

அடுத்த தெருவிலே சிங்கம் மாமா அவரு பையனை படிக்க வச்சாரு,சிங்கம் மாமாவும் அந்த அக்காவும் அமெரிக்காவிற்கே போய் அங்க வேலை பார்க்கிற மகனை, மருமகளை, பேரப்பிள்ளைகளை பார்த்துவிட்டு வந்துட்டாங்க . இந்த வானம் பார்த்த பூமியிலே பிறந்து , வயக்காட்டுலேயும் செவக்காட்டுலேயும் உழைச்சு உழைச்சு ஓடாப்போய் உட்கார்ந்திருக்கேன் நான். என் பிள்ளைகளை வளர்த்திக்கிட்டு, எங்க அப்பா செத்துப்போனதால நான் இவனுக்கும் பள்ளிக்கூடத்திற்கு பணத்தைக்கட்டி படிக்க வச்சுக்கிட்டிருக்கேன். படிக்க மாட்டேங்கிறான்னே, மாப்பிள்ளை இவன் படிக்க மாட்டேங்க்கிறான்னே ” என்று மதியைக் காட்டி குமுற ஆரம்பித்தார்.

மதிக்கும் பேரின்பத்திற்கும் 15, 16 வய்து வித்தியாசம் இருக்கும். வீட்டில் கடைசிப்பையனான மதி படிக்கவில்லையே என்னும் குறையை தான் படிக்காததால் காட்டிலும் மேட்டிலும் அலையும் அலைச்சலையும் வயித்துக்காக பட வேண்டிய பாட்டையும் எண்ணி, தன்னுடைய தம்பியாவது படித்து ஏதாவது ஒரு வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்னும் விரக்தியில்தான் மதியை பேரின்பம் இந்த அடி அடித்திருக்கின்றான் என்ற எண்ணம் முத்துவின் மனதில் ஓடியது.

“நீ போ மாமா, நான் மதிகிட்டே பேசுறேன், ஏன் படிக்கலேன்னு கேட்கிறேன் ” என்று பேரின்பத்திடம் சொல்லி விட்டு தனது வீட்டிற்குள் மதியையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான் முத்து. “எம்மா, மதிக்கும் சேர்த்து சோத்தைப் போடுங்க” என்று சொன்னவுடன் மிரண்டு போயிருந்த மதி , அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றான். “வாடா, வா,உட்கார், உக்காந்து சாப்பிடு” என்று முத்து அம்மா சொன்னவுடன் அவனும் முத்துவின் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். உடம்பெல்லாம் அடி வாங்கியது , தடிப்பு தடிப்பாக இருந்தது. இன்னும் அழுதுகொண்டேதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் மதி.

” ஏன் படிக்கலை, எத்தனை பாடத்தில காப்பரிட்சையில் பெயிலு நீ ” என்று மதியிடம் முத்து கேட்டான். ” படிச்சேன் மாமா, இருந்தாலும் இங்கிலீசு பாடத்திலேயும் , கணக்கிலேயும் பெயிலு ” என்றான் மதி.

” சைக்கிள் ஓட்டத் தெரியுமா ? ” என்றான் முத்து மதியிடம் . ஆர்வமாக ” நல்லா ஓட்டுவேன் மாமா, வாடகைச்சைக்கிள் எடுத்து ஓட்ட காசுதான் கிடைக்க மாட்டேங்குது ” என்றான் மதி.

” கிணத்துல் நீச்சல் அடிக்கத்தெரியுமா ? ” என்றவுடன் குறுக்கிட்ட முத்து அம்மா, “ஏண்டா , நம்ம ஊர் பிள்ளைக யாருக்குடா நீச்சல் தெரியாம இருக்கு, எல்லாம் முங்கி , முங்கி தண்ணியைக் குடிச்சாவது நீச்சல் கத்துக்கிறாங்கெடா ” என்று சொன்னார்.
“சைக்கிள் எத்தனை நாளில கத்துக்கிட்ட” என்ற முத்துவிடம் “அது இரண்டு மூணு மாசம் ஆச்சு மாமா. வாடகைக்கு சைக்கிள் எடுத்து போயி கத்துக்கிட்டது. கத்துக்கொடுக்கிறதுக்கு ஆள வேற கூட்டிக்கிட்டுப்போய்த்தான் கத்துக்கிட வேண்டியிருந்துச்சு ” என்றான் .
” நீச்சல் கத்துகிறது, சைக்கிள் ஓட்டக் கத்துக்கிறது மாதிரிதான் படிக்கிறது. நீச்சல் பழக பயந்துகிட்டு , கிணத்து மேட்டுலேயே நின்னுக்கிட்டு இருந்தா நீச்சல் கத்துக்கிட முடியுமா , முடியாது. அது மாதிரி படிப்பு வரலைன்னு சொல்லி , புத்த்கத்தை மூடி வச்சுக்கிட்டே இருந்தா படிப்பு வராது ” என்று மதியிடம் சொன்ன முத்து, மேலும் தொடர்ந்தான்.

” கணக்கை போட்டுப்போட்டு பாரு. பயிற்சிக்கணக்கை எடுத்து போட்டுப்பாரு. மறுபடியும் மறுபடியும் போட்டுப்போட்டு பாரு. கணக்கு வந்துரும். தெரியாத கணக்கை வாத்தியார் கிட்ட கேளு,. நான் வந்தா எங்கிட்ட கேளு, அல்லது நம்ம தெருவிலே படிச்சவங்க யாருகிட்டேயும் கேளு. கேட்டுப் போட்டுப்பாரு. விழுந்து விழுந்து எந்திருச்சு சைக்கிள் ஓட்டிப் பழகினதுமாதிரி, முயற்சி பண்ணிக்கிடடே இரு. கணக்கு வந்துடும் . ”

“நம்மள மாதிரி கிராமத்துப்பிள்ளைக பயப்படுற்தே இங்கிலீசைப் பார்த்துத்தான். பயப்படுற அளவுக்கு அதுல ஒண்ணும் இல்லே. நம்ம பள்ளிக்கூடத்திலே தக்கி முக்கி இங்கிலீசு படிச்சவர்தான் வக்கீல் அழகு. இன்றைக்கு மதுரையிலே பெரிய வக்கீல். இங்கிலீசுலே அடிச்சு வெளுத்து வாங்கிறாரு. பழக்கம்தான், பயப்படாம முயற்சியும் பயிற்சியும் பண்றதுதான் படிப்பு.இங்கிலீசைப் பார்த்து பயப்படாதே.சத்தம் போட்டு எஸ்ஸேயைப் படி. சத்தம் போட்டு பத்துத் தடவை, பதினைஞ்சு தடவை நீயாப் படி. அப்புறம் ஒவ்வொரு பாராவா மனப்பாடம் பண்ணு. ஒரு பாராவை மனப்பாடம் பண்ணி முடிச்சவுடனே எழுதிப்பாரு. அப்புறம் அடுத்த பாரா.எழுதிப்பாரு. அப்புறம் மொத்தமா படிச்சுட்டு எழுதிப்பாரு. நீயா திருத்து. மனப்பாட இங்கிலீசு பாட்டை ஒவ்வொரு வரியா மன்ப்பாடம் பண்ணு. ஒவ்வொரு வரியா எழுதி, எழுதி கூட்டிக்கிட்டே எழுதிப்பாரு. ” என்று முத்துவுக்கு தெரிந்த வழிமுறையை எல்லாம் மதிக்கு சொல்லிக்கொடுத்தான். “விடாதே பிடின்னு மாட்டை விரட்டுனாத்தானா மாட்டைப் பிடிக்க முடியும், என்னால பிடிக்க முடியாதுன்னு சொல்லி வீட்டுக்குள்ளேயே உக்காந்துகிட்டா மாட்டைப் பிடிக்க முடியுமா ? அது போலத்தான் படிப்பும். நீயா , நானான்னு பார்த்துருவோம்ன்னு மனசைத் திடம் பண்ணி, படிச்சாத்தான் நமக்கு உசத்தி என்கிறதை உணர்ந்து உக்காந்திட்டா போதும் , தானா படிப்பு வந்திரும், மார்க்கும் வந்திரும் ” என்றவுடன் மதி நிமிர்ந்து உட்கார்ந்தான்.

சாப்பிட்டு, பின்பு சாப்பிட்டு முடித்து ஒரு ஒரு மணி நேரம் உட்கார்ந்து அவனோடு பேசிய பிறகு அவனுக்கு ஏதோ பிடிபட்டது போல , ” முத்து மாமா, இனி நான் நல்லாப்படிச்சிருவேன் மாமா ” என்றான் மதி தன்னம்பிக்கையோடு.

அடுத்த வருடம் தைப்பொங்கலுக்கு ,ஊருக்கு போன போது தனது மார்க் கார்டைக் கொண்டுவந்து காட்டினான் மதி. எல்லாவற்றிலும் எழுபதுக்கு மேல் மதிப்பெண் எடுத்திருந்தான். மகிழ்ச்சியாக இருந்தது. ரோட்டுக்கு வந்தவுடன் பேரின்பம் நின்று கொண்டிருந்தான். முத்துவைப் பார்த்ததும் வேகமாக வந்த அவர்” சும்மாவா சொன்னாங்க, அடி உதவுறது மாதிரி,அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்கேன்னு, காப்பரிட்சையிலே பெயிலானதுக்கு போட்ட அடியில , உன் மச்சுனன், அதுதான் என் தம்பி மதி எல்லாத்திலேயும் பாஸ் மார்க்கு, அதுவும் நிறைய மார்க்கு எடுத்திருக்கிறான் தெரியும்ல ” என்றான். ” அப்படியா , சந்தோசம் மாமா ” என்று சொல்லிக்கொண்டே பேரின்பத்தை தாண்டிச்சென்று கொண்டிருந்தான் முத்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *