‘இமைகளை மூடி இருத்தும்போது,
தற்பொழுதும்கூட…
அந்த விரும்பத்தகாத காட்சியானது,
ஒருகணம் தோன்றி மறைவதை,
என்னால் நினைந்துணர முடிகிறது !’
‘எனக்கு ஐந்து வயது இருக்கும்போது தான், அதை முதன்முறையாக கண்டேன். இப்பொழுதுவரை ஒவ்வொருமுறை அதை காணும்போதும், தன்னிலை மறந்த குலைநடுக்கம் வந்துபோனதை எண்ணி, நான் பலமுறை வருந்தியிருக்கிறேன்.
மற்ற சிறார்களை காட்டிலும் நான், கொஞ்சம் வித்தியாசமானவன். தண்ணீர் தொட்டிக்குள்ளோ (அ) அடுக்கு பானை சந்திலோ.. சிலசமயம் கழிப்பறையிலோ.. சிலநேரம் படுக்கைக்கு அடியிலும்கூட … ஒளிந்துகொள்வதற்கு தோதான இடம் எங்கிருந்தாலும், எனக்கு ஆட்சேபனையே இருந்ததில்லை.’
‘செம்மண் காட்டில், இரண்டு அறைகளையுடைய, பூசப்படாத ஓட்டு வீடு எங்களுடையது. பதினாறு வயதுவரை, நான் அங்குதான் வளர்ந்தேன். அது எங்களின் பழைய வீடு.
என் தாயும், சகோதரியும் தைரியமானவர்கள். நானோ மண்ணெண்ணெய் விளக்கை விட்டு, எங்கும் அகன்றது கிடையாது.’
அதுவொரு அந்திநேர ஞாயிற்றுகிழமை…
‘விறகு பெருக்கி, வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அன்றையநாள் என் தாயின் உடல்நலம் குன்றி, வீட்டில் படுத்துகிடந்தார். சகோதரியை வழிநடத்தும் பொறுப்பு, எனக்கு வந்து சேர்ந்திருந்தது. ஆளுக்கொரு கூடையை சுமந்தவாறே, கதைகள் பேசி நடந்தோம்.-
வீட்டை நெருங்கையில், மழைத்துளி என்மீது விழவே, அண்ணாந்து பார்த்தேன். முழு வானமும், அடர் கருநீல நிறத்திற்கு மாறியிருந்தது. சகோதரியை வேகமாக நடக்கச்சொல்லி அவசரப்படுத்தினேன். நிலைதடுமாறிய அவள் கீழே விழுந்தாள்.
அபாயசங்கின் ஓசை ஒன்று, அச்சமயம் எங்கிருந்தோ ஒலித்தது. அது விட்டுவிட்டு ஒலித்தது. கடிகாரத்தின் பன்னிரண்டுமணி அலாரத்தைபோல, அது விட்டுவிட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. வானத்தின் எங்கோ ஓர் மூலையிலிருந்து, அது ஒலித்தென நினைக்கிறேன். ஓசையோ, வானமெங்கும் சிதறி கேட்டது.
இருண்ட வான்வெளியில் ஒரு வெளிச்சம் தோன்றியது. மேகங்களை கிழித்து வெளியேறிய அது, ஒரு சூரியன். சாயுங்காலம் அதில், மதிய நேரத்தை போன்ற ஓர் பிரகாசத்தை நாங்கள் கண்டோம்.-
கனநேரத்தில் மீண்டும் அதே அபாயசங்கின் ஓசை எழும்பியது. அது விட்டுவிட்டு ஒலித்தது. பட்டொளி வீசிய அச்சூரியன் திடீரென அணைந்துபோனது. சங்கின் ஓசை நின்றவுடன், வானத்தின் வேறொரு இடத்தில் வெளிச்சம் தோன்றியது. அதுவும் ஒரு சூரியன் தான்.
அடுத்த அபாயசங்கின் ஓசை எழுவதற்குள், வீட்டினுள் ஓடி ஒளிந்துகொண்டோம். கதவிடுக்கின் பிளவு வழியே, அடிவானத்தை மீண்டும் கண்டேன். ஒரேநேரத்தில் இரண்டு சூரியன்கள் தோன்றி மறைவதை கண்டேன். சிலசமயம் நான்கு சூரியன்களும் இருந்தன..
இருளும், வெளிச்சமும் மாறிமாறி தோன்றிய அவ்வானத்தை காண, கதவைத்திறந்து வெளியே வந்தேன். அண்ணாந்து பார்க்கையில், எண்ணிலடங்கா சூரியன்களால் வான்வெளி நிறைந்திருந்தது.’
‘ஒரு தடவை அதை கண்டிருந்தால், நான் பிரக்ஞையற்று இருந்திருப்பேன். ஆனால் தொடர்ச்சியாக அதே கனவை காணும்போது, ஆழமான யூகமின்றி என்னால் இருக்கமுடியவில்லை.’
‘மற்ற சிறார்களை காட்டிலும் நான், கொஞ்சம் வித்தியாசமானவன். படுக்கையில் சிறுநீர் கழிப்பது அவர்களின் இயல்பாக இருக்கலாம். ஆனால், நானோ தூக்கதிலேயே ஓடிச்சென்று எங்காவது ஒளிந்துகொள்வேன். என் கனவில் அடிக்கடிவந்து அச்சுறுத்தும் அது என்ன ? அதன் அர்த்தம்தான் என்ன ?’ இதில் கவனிக்கவேண்டிய ஒரு விசயம், அங்கு சந்திரனே கிடையாது.’
“Wait… கொஞ்சம் நிறுத்து… விடாமல் பெய்துகொண்டிருக்கும் இந்த மழையைகூட பொருட்படுத்தாமல், நீ கூப்பிட்டாய் என்பதற்காக, உன்னை நான் பார்க்க வந்தேன். ஏதாவது ஒரு முக்கியமாக விசயம் பற்றி பேசுவாய், என நினைத்தேன். ஆனால் நீயோ உனக்கு வந்த ஒரு கனவை பற்றி என்கிட்ட சொல்லிட்டு இருக்க ?!! ஏற்கனவே எனக்கு தலைபாரமாக இருக்கு.” – என ‘ஆலிம்’ விரக்தியடைந்தான்.
‘உனக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன். நான் வேணும்னா உனக்கு தேனீர் போட்டு தரட்டுமா..? கொஞ்சம் இஞ்சு தட்டிப்போட்டு…’
(தான் அமர்ந்திருந்த இறுக்கையின் பின்நோக்கி, படுத்தவண்ணம் சௌகர்யமாக அமர்ந்தான், ஆலிம்)
“எனக்கு.. எதுவும் வேண்டாம். நீ பேசவந்த முக்கியமான விசயம் இதுதானா ? அப்படியே இது முக்கியமாக இருந்தாலும், இந்த கனவுனால உனக்கு என்ன சந்தேகம் ?” – என ‘ஆலிம்’ கேட்டான்.
‘இந்த கனவு, ஒவ்வொரு வருடத்திலும் குறைந்தபட்சம் 3 (அ) 4 முறையாவது வந்துபோகிறது. நேற்றிரவு கூட இதே கனவைத் தான் கண்டேன்.’
“ஓ..அப்படியா ?! நீ நிறைய அறிவியல் புனைவு திரைபடங்களை பார்த்திருக்கலாம். அது உன் கனவில் வந்திருக்கலாம்.” – என ஆலிம் கூறினான்.
‘கிடையாது. நான் அதை ஐந்து வயதிலிருந்தே கண்டு வருகிறேன். என்னோட பதினாறு வயதுவரை, என் வீட்டில் மின்சாரம் கூட கிடையாது.’
“இப்போது புரிகிறது. நீ உன்னுடைய பால்ய காலத்தை, மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கழித்திருக்கிறாய். இருளின் மீதான உன் அச்சம். வெளிச்சத்தின் மீதான உன் ஈர்ப்பு. ஆக இதுவே உன் கனவாக அடிக்கடி வந்துபோகிறது.” – என ஆலிம் கூறினான்.
‘நான்கு வருடங்களுக்கு முன், என்னுடைய சகோதரியை சந்தித்தேன். அவள் திருமணமாகி தொலைதூரத்தில் வசிக்கிறாள். மாமா உடனான கருத்து முரண்பாட்டால், அன்றிலிருந்து இன்றுவரை எவ்வித தொடர்புமற்று இருக்கிறேன். அவள் தற்போது எங்கிருக்கிறாளென்று, எனக்கே தெரியாது. ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்கும்போது, தனக்கு வந்த ஒரு கனவை பற்றி என்னிடம் வினவினாள். அது அப்படியே, நான் கண்ட சூரியக் கனவின் பிரதி எடுத்ததை போலவே இருந்தது. அவளுக்கும் அது முதன்முறை கிடையாது’.
“கனவுல, இருட்டும் வெளிச்சமும் மாறிமாறி வந்தால், மிகப்பெரிய கஷ்டத்தை சந்திக்க நேரிடுமென்று, என் பாட்டி சொல்லி நான் கேள்விபட்டிருக்கேன்.” – என உணர்வுமேலோங்க ‘மோனா’ கூறினாள்.
(தான் அமர்ந்திருந்த இறுக்கையின் நுனிபகுதிக்கு வந்தமர்ந்தாள் ‘மோனா’.)
‘சரிதான். இப்பொழுது, நான் கஷ்டங்களை அனுபவிக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நான் ஒளிவீசப் போகிறேன். நன்றி மோனா’.
“எனக்கும் ஒரு சகோதரி இருந்தாள். விதிவசத்தால் கண்காணா இடத்திற்கு சென்றுவிட்டாள். நீ உன் சகோதரியை விட்டுவிலகியதில் வருத்தம் கொள்கிறாயா ?” – என மோனா கேட்டாள்
‘ரொம்ப மிஸ் பண்றேன்’. (சற்று மூச்சை வேகமாக தள்ளினேன்.)
“அப்படியென்றால், இது எதிர்காலத்தை காட்டும் கனவா ?” – என ஆலிம் கேட்டான்.
‘ஆமா, இதிலென்ன சந்தேகம். எதிர்காலம் என் கண்முன் அடிக்கடி வந்துபோகிறது.’
“நீ இப்போ இருக்கிற நிலையிலையை பார்த்தால், எனக்கே பறிதாபமாக இருக்கு. இந்த இக்கட்டான சூழலிலும் கூட, உனக்கு எங்கிருந்து அந்த நம்பிக்கை வந்தது ?! நீ கண்ட கனவுதான் அதற்கு காரணமென்று, மறுபடியும் சொல்லாதே !!” – என ஆலிம் முகஞ்சுழித்தான்.
‘நிச்சயமாக சொல்லமாட்டேன். ஆனால் அந்த கனவை நம்புவதற்கும் ஒரு காரணம் இருக்கு.- கோடைகாலத்தில் பருத்தி செடிகள் நோய்களினால் தாக்கப்படும். நோய்களை உண்டாக்கும் பூச்சிகளை சமாளிக்க, மருந்துகள் தேவைப்படும். அதில் ஒரு மருந்து தான் இது.’
“உன் இடது கையில் வச்சிருக்கியே அதுதான் அந்த மருந்தா ?” – என ஆலிம் கேட்டான்.
“அடக்கடவுளே அது விஷம் தானே ?” – என மோனா பதறினாள்.
‘சரிதான். இதை நான் குடித்து, 5 மணி நேரம் ஆகிறது. ஆனால் எனக்கு எதுவும் ஆகல. என் கையில் இருப்பது காலி டப்பா தான்.’
“அறையில் நுழையும்போதே, வரவேற்ற அந்த கெட்ட நாற்றம், உன் வாயிலிருந்து வந்தது தானா ?!” – என ஆலிம் சௌகர்யமாக கேட்டான்.
“கடவுளே, அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். எதனோடு விளையாடுவதென்று, ஒரு ஒழுங்கு வேண்டாமா ?!” – துடிதுடித்தாள் மோனா.
‘இது வீரியமான மருந்து. குடித்தவுடனே ஏற்படும் குமட்டலே, ஆளை கொன்றிருக்கும். அதிகபட்சமாக 20 நிமிடங்கள் தாண்டுவதே கடினம். ஆனால் என்னை பாருங்கள்’.
“நீ இன்னும் அவளை மறக்கலையா ?!” – என ஆலிம்.
‘யாரைபற்றி கேட்கிறாய் ?!’
“அதான் விழுந்து விழுந்து காதலித்தாயே ஒரு பெண்ணை. அவளுக்காகதானே இதெல்லாம் செய்ற ?” – என ஆலிம் கேட்டான்.
‘ம்… அப்படின்னு சொல்ல முடியாது. ஆனால் இப்போ அது விசயமல்ல. நான் சொல்வதை கேளுங்கள்’
“நீ எதுவும் சொல்ல தேவையில்லை. அந்த பொண்ணு கிடைக்கலன்னு தெரிஞ்ச உடனே, நீ தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணியிருக்க. ஆனால், அதிஷ்டவசமா உயிர் பிழைச்சுட்ட. ஒருவேளை உன்னோட எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கலாம். இதில் ஆச்சார்யபடுவதற்கோ, அதிசயிப்பதற்கோ எதுமில்லை. ஆனால் இதையும், அந்த கனவையும் தயவுசெய்து ஒப்பிட்டு சொல்லாதே.!” – என ஆலிம் கூறினான்.
‘கண்டிப்பா ஒப்பிட மாட்டேன். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, முதல் காதல் தோன்றிற்று. பின் ஐந்தாம் வகுப்பில். அதை தொடர்ந்து ஏழாம் வகுப்பில். அப்புறம் பதினொன்று, பன்னிரண்டு என என்னுடைய காதலுக்கு அளவே கிடையாது. எல்லோரும் என்னை உண்மையாகவே நேசித்தனர். ஆனால் என்னை யாரும் நெருங்க முடியவில்லை. ஏனெனில் நானொரு நெருப்பு பந்து.’
“சரிதான்.. இதுபோன்ற கிறுக்குதனமான சிந்தனைகளை உடைய உன்னிடம், யாருமே நெருங்கி பழகமாட்டார்கள்.” – என ஆலிம்.
“உன்னை புரிந்துகொள்ளும் ஒரு கூட்டம், ஓர்நாள் உன்னை வந்துசேரும். அதில் உனக்கென்ற ஒரு துணை, இல்லாமலா போய்விடுவாள் ?!” என மோனா ஆறுதல் வழங்கினாள்.
‘இல்லை. என்னிடம் யாரும் நெருங்க முடியாது. ஏனெனில் நான்தான் ஒளிபொருந்திய சூரியனாயிற்றே..’
“புரியல..” – ஆலிம்.
‘எங்களுடைய பூசப்படாத பழைய வீட்டை கட்டிக்கொண்டிருந்தார்கள். என் வயது பற்றி சரியாக நினைவிலில்லை. ஆனால், அப்போது நான் மிகவும் சிறுவனாக இருந்தேன்.
முந்தையநாள் பெய்துவிட்டிருந்த கனமழையினால், சிறுபள்ளமொன்று நிரம்பியிருந்தது. எதிர்பாராவிதமாய் எட்டிப்பார்த்த நான், அதில் சூரியனைக் கண்டேன். அந்த மதிய வேளையில் சூரியன் தகதகத்துக் கொண்டிருந்தது. மஞ்சள்நிற பந்தைப்போன்று அழகாக மின்னிக்கொண்டிருந்தது. ஐந்தாறு நிமிடத்திற்கு மேலாகியும், அப்பிம்பத்தைவிட்டு என் கண்கள் மட்டும் அகலவில்லை.
தகதகத்துக் கொண்டிருந்த அது. சற்று நேரத்தில் அசைய ஆரம்பித்தது. அது லேசான காற்றாக கூட இருக்கலாம். ஆனால், சில நிமிடங்களிலேயே மீண்டும் அது அசைந்தது. அசைவை உற்று நோக்கி காத்திருந்தேன். அது வட்டமடித்தது. அங்குமிங்கும் ஓடியது. நடனமாடியது.-
சட்டென நடுக்குற்ற நான், நீரின்மீது கல்லெறிந்துவிட்டு வெளியேறினேன். அது என்னை பின் தொடர்ந்தது. என் தோள்பட்னைக்கு அருகாமையில் அது வந்துவிட்டதை, நான் உணர்ந்தேன். திரும்பி பாராமல் ஓடித்தொடங்கிய என்னை அது துரத்தியது.-
சில மணி நேரங்கள் கழித்து, என் தாயின் மடியில் கண்விழித்தேன். என்ன நடந்திருக்குமென்பதை என்னால், அப்போது யூகிக்க முடியவில்லை.’
“இதுவும் கனவா ?!” – என ஆலிம்.
‘நிச்சயமாக கிடையாது. என்னுடைய சிறுவயதில் உண்மையாகவே நடந்தது.’
“ஒருவேளை அந்த சூரியன், உன்னுடம்பில் புகுத்திருக்கலாமென நினைக்கிறேன்.” – என மோனா பரிதபமாக என்னை நோக்கினாள்.
‘ஆம் சரிதான் அந்த சூரியன், என் நெஞ்சின் நடுவில் தான் இருக்கிறது.’
“ஓ.. சாத்தானே… இந்த முட்டாள் தனமான பேச்சை, இவ்வளவு நேரம் காதுகொடுத்து எப்படி கேட்டுக்கொண்டிருந்தேன். ஓ சாத்தானே… உன்னோடு என்னையும் நரகத்திற்கே கொண்டு சென்றுவிடு !!” – என ஆலிம் மன்றாடினான்.
‘நீ குழப்பத்திலிருக்கிறாய் என நினைக்கிறேன்.. நான் உனக்கு காபி போட்டு தரட்டுமா ? அது உனக்கு இதமாக இருக்கும்’.
“எனக்கு காபி பிடிக்காது”
(ஆலிம் கடுங்கோபத்துடன்) “நீ கண்களை மூடிக் கொண்டால், உலகம் இருண்டு விடுமா ?. ஏனென்றால், நீதான் அந்த சூரியன் என்கிறாயே..?!!”
‘இல்லை. என்னுடைய கனவில் நிறைய சூரியன்கள் இருந்தன.’
“ஆமாம் பால்வழி அண்டத்தில், ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சூரியன் தானே.” – என ஆலிம் கதறினான்.
‘நான் கண்டது, அந்த நட்சத்திரங்களை அல்ல. நம் பூமியின் மீது ஒளிபடரும் ஒரேயொரு சூரியனைபற்றித் தான்.’
“அப்படியானால், உன் கனவில் வந்த எண்ணிலடங்கா சூரியன்கள் எங்கே காட்டு” – ஆலிம் கேட்டான்.
‘அவை ஒரே நேரத்தில் ஒளிராது. ஒன்றன்பின் ஒன்றாக ஒளிரும்.’
“அப்படியானால், தினசரி ஒரு சூரியனால், பூமியே பிரகாசமாகிறது என்கிறாயா ?” – என ஆலிம்.
‘நிச்சயமாக,… என்னைபோன்று பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் வானத்தில் ஒளிவீசுகிறார்கள்.’
“அப்படியானால், உன்னுடைய ஒளியை காட்டு பார்க்கலாம்.” – என ஆலிம்.
‘நிச்சயமாக இப்போது அதைநிருவ முடியாது. நான் எதிர்காலத்தில் ஜொலிப்பேன். நான் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டேன். ஆனால் எனக்கான காலம்தான் இன்னும் வரவில்லை.’
“உன் பெயரை வேண்டுமானால், அப்படி மாற்றி வைத்துக் கொள்ளலாம். ஆனால் நீ எப்போதுமே சூரியனாக முடியாது.” – என ஆலிம் அசட்டுத்தனமானமாக பதிலுரைத்தான்.
“உன்னால் ஒரு சமுதாயத்துடன், நெருக்கமாக இருக்க முடியாது. ஆனால் ஒரு சமூகத்தை தூரத்திலிருந்து வழிநடத்த முடியும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. விபரீதமான முடிவுகளை விட்டுத்தள்ளி, முன்னேறு” – என மோனா ஆறுதல் உரைத்தாள்.
“நீ ஒரு விஞ்ஞானியாக இருந்திருந்தால், ஒருவேளை அது சாத்தியமாகலாம். என்றால் செயற்கை சூரியனை உருவாக்க முடிந்தால், நீ ஏன் சைனா-வுக்கு செல்லக் கூடாது. உன்னைபோன்றவர்களைத் தான் அவர்கள், தேடிக்கொண்டிருக்கிறார்கள்..-
“ஹா…ஹா…” – என ஆலிம்.
“நீ கேட்ட தேனீரும், காபியும் எனக்கு பிடிக்காது.
(என் மீதான மோனா-வின் கருணையும், பரிதாபமுமே.. ஆறுதலாக அவள் நாவிலிருந்து ஒலித்தது. ஆலிம்-ற்கு முன்னதாகவே, மோனா-வின் நட்பு எனக்கு கிட்டியிருந்தால், அவளை நான் அடைந்திருப்பேன். ஆலிமும், மோனாவும் எப்போதிலிருந்து தம்பதிகளாக வாழ்கிறார்கள் என நான் அறிந்ததில்லை. ஆனால் மோனா-வை போல், உணர்வயமிக்க ஒரு பெண் உடனிருந்தால், ஆறுதல் மிக்க என் வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும்..!)
“எவ்வளவோ அவமானங்களை பட்டும் கூட, நீ வழக்கத்திற்கு மாறாக நடந்துகொள்கிறாய். எங்களிடம் சொன்னதைபோல வெளியில் யாரிடமும் உளறி வைக்காதே!”
“தேனீரும் காபியும் எனக்கு பிடிக்காதுதான்.. ஆனால் இது இரண்டிற்கும் மூலமான பால்-ஐ சம்பாதிப்பதிப்பது எப்படி என யோசி !! நான் என் எண்ணத்தை மாற்றிக் கொளகிறேன்” – என ஆலிம் அறிவுறுத்தினான்.
‘நீ… அப்புறம் நீ…. ஒருநாள் நான் யாரென்பதை உணர்வீர்கள். அதை நீங்கள் இருவருமே ஓர்நாள், என்னுடைய ஒளியால்தான், ஜீவனம் நடத்தப்போகிறீர்கள்…’
(ஆத்திரத்திரமாக அறையின் கதவை திறந்து வெளியேறிய நான், மூடப்படாமல் விட்டுச்சென்ற அக்கதவிடுக்கின் வழியே, என்னுடைய வெளிச்சம் அறையை நிரப்பியிருந்ததை நானறிவேன்..)
‘அறிவிற்கும், மனதிற்கும் சவால்விட்ட நான் இப்பொழுதே ஜொலிக்க தொடங்கிவிட்டேன். இந்நேரம் ‘ஆலிம் மற்றும் மோனா’, இருவரின் இமைகளையும் என் முடிவிலா ஒளிக்கற்றை தொட்டிருக்கும்…’.