ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 22,521 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 6 | அத்தியாயம் 7 | அத்தியாயம் 8

ஆதிகேசவனின் உடல் நிலை இப்பொழுது கொஞ்சம் அபி விருத்தி அடைந்திருந்தது. ஆனால் அவர் விட்டைவிட்டு வெளி யேறாமல் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். தன் பங்களாவின் முன்னால் இருந்த சிறிய பூந்தோட்டத்தில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ஆராய்ச்சி சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் புரட்டிய வண்ணம் இருந்தார். அவர் இன்னும் பூரண குணமடைய வில்லை என்று முகத்தோற்றம் வெளிப்படுத்தியது. அந்தச் சமயத்தில்தான் அவரைத் தேடிக்கொண்டு அங்கு வந்து சேர்ந் தார் துளசிங்கம்.

“ஓ! நீங்களா? உட்காருங்கள். குற்றவாளியைக் கண்டு பிடித்து விட்டீர்களா?” என்று ஆவலுடன் கேட்ட வண்ணம் எதிரிலிருந்த மற்றொரு நாற்காலியை அவர் அருகில் நகர்த்தினார்.

“குற்றவாளியைக் கண்டுபிடிக்கத்தான் நான் பெரு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் தில்லைநாயகத்தின் குறிப்பு கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டேன்” என்று கூறியவண்ணம் அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார் துளசிங்கம்.

“குறிப்புகளைக் கண்டுபிடித்து விட்டீர்களா? அவைகள் எங்கே இருக்கின்றன?” என்று பரபரப்பும் மகிழ்ச்சியும் ஏற் படக் கேட்டார் அவர்.

“நீங்கள் பதட்டப்பட வேண்டாம். வக்கீல் பஞ்சநாத னிடம் தில்லைநாயகத்தின் தஸ்தாவேஜுகள் அனைத்தும் பத்திர மாய் இருக்கின்றன!” என்று கூறி அவரை ஆசுவாசப்படுத்தினார் துளசிங்கம்.

“ஓ! வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனவா? அவர் அவைகளைப் படித்திருந்தாலும் அவருக்கு ஒன்றும் புரிந் திருக்காது. தில்லைநாயகம் விளக்கமாக எதையும் எழுதி வைத்துக்கொள்ளமாட்டார். பல விஷயங்கள் அவருடைய மூளை யிலேயே இடம்பெற்று இருக்கும். தான் மறந்துவிடலாம் என்ற பயம் ஏற்பட்டால்தான் அவைகளைக் குறித்து வைத்துக் கொள்வார். அதை நான் பார்த்தால்தான் எதைக் குறித்து வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியும்!”

“அது சரி, மிஸ்டர் ஆதிகேசவன்! நீங்கள் தில்லை நாயகத்துடன் எவ்வாறு பழகினீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார் துளசிங்கம்.

“என்னையே நீங்கள் சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?”

“நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை! நீங்கள் இருவரும் பழகிய விதத்திலிருந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க வழி யிருக்கிறதா என்றுதான் அறிய முயலுகிறேன்.”

-தில்லைநாயகம் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்ற முறை யில்தான் நான் அவருக்கு மரியாதை கொடுத்து வந்தேன். ஆராய்ச்சி சம்பந்தமான விஷயங்களை அலசிப்பார்ப்பதிலும், எந்த விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பதிலும் மிகுந்த அனு பவம் கொண்டவர். எடுத்த காரியத்தை ஒழுங்காகச் செய்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர். அவர் விஷயத்தில் எவரும் தலையிடமுடியாது. யாரும் அவருடைய தீர்மானத்தைச் சுலபத்தில் மாற்றிவிட முடியாது. எதைச் செய்யவேண்டும் என்று நினைத்தபோதிலும் அதை அவர் பிடிவாதமாகச் செய்து முடித்துவிடுவார். எங்கள் ஆராய்ச்சி எங்களுக்குப் பலன் அளித்து வந்திருக்கின்றன. அவருடைய ஒத்துழைப்பினால் நான் லாபம் அடைந்திருக்கிறேன் என்று சொன்னாலும் மிகையாகாது. அவர் உயிருடன் இருந்திருந்தால் நான் பல நன்மைகளை அடைந்திருப்பேன். ஓர் ஆராய்ச்சியாளர் என்ற முறையில் அவருக்கு நான் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.”

“நண்பர் என்ற முறையில் அவருக்கு நீங்கள் மதிப்பு கொடுக்கவில்லையா?”

“நான் அவரை ஒரு மனிதராகவே மதிக்கவில்லை என்று சொன்னாலும் மிகையாகாது! பழங்காலத்துப் பழக்க வழக்கங் கள் மிகுந்தவர். பழகுவதற்குத் தகுதியானவர் அல்ல. முரட்டுச் சுபாவமும் முன்கோபமும் கொண்டவருடன் எவ்வாறு நல்ல முறையில் பழக முடியும்?”

“குடும்ப விஷயங்களைப்பற்றி நீங்கள் அவருடன் பேசி யிருக்கிறீர்களா?”

“சதா சர்வகாலமும் ரசாயனங்களைப்பற்றியும் ஆராய்ச்சி களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தால் மூளை குழம்பிவிடு மல்லவா? அதனால் அவ்வப்பொழுது பொது விஷயங்களைப் பற்றியும் நாங்கள் பேசுவதுண்டு. அந்தச் சமயங்களில் நான் அவருடைய குடும்ப விஷயங்களை விசாரித்திருக்கிறேன். அப் பொழுதுதான் அவர் பெற்றோர்களையும் உற்றார் உறவினர் களையும் பகைத்துக்கொண்டு தனியாக வந்துவிட்டது எனக்குத் தெரியவந்தது!” அவைகளைக் கேட்டு நான் ஆச்சரியப்பட வில்லை! தில்லைநாயகத்தைப் போன்ற துர்க்குணம் மிகுந்த ஆசாமிகள் எவ்வாறு அமைதியோடு குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும்?”

“அவர் மணமானவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“ஆம், அவராகவே அதை என்னிடம் சொல்லியிருக்கிறார். மிருகத்திற்கு ஒப்பான தில்லைநாயகத்துடன் அவருடைய மனைவி எவ்வாறு வாழ்ந்து வருகிறாள் என்று நான் ஆச்சரியமடைந்தது உண்டு! கொஞ்ச காலத்திற்கு முன்பு அவருடைய மனைவி விஜயவல்லி அவருடன் மனஸ்தாபங்கொண்டு சென்றுவிட்ட தாகக் கூறியதைக்கேட்டு நான் சற்றும் வியப்படையவில்லை. இவ்வளவு நாள் அவள் அவருடன் வாழ்ந்ததுகூட ஆச்சரியம் என்றுதான் நான் எண்ணினேன். தில்லைநாயகம் தன் மனைவி யின்மீது பல குற்றங்களைச் சுமத்தினார். தங்களுக்குள் மனஸ் தாபம் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் சொன்னார். அவர் என்னதான் சொன்னபோதிலும் விஜயவல்லி வீட்டை விட்டு வெளியேறியதற்கு அவர் தான் காரணம் என்ற முடிவிற்கு வந்தேன் நான்!”

“விஜயவல்லியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”.

“பார்த்திருக்கிறேன். அவள் ஓர் அழகி; நன்கு படித்தவள்; நாகரிக மோகம் கொண்டவள். இத்தகைய ஒரு மங்கை, முரட்டுத் தனமும் முன்கோபமும் கொண்ட ஒருவருடன் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தியிருக்கமுடியுமா?”

“தில்லைநாயகத்தினிடம் விரோதித்துக்கொண்டு செல்வதற்கு முன்பு நீங்கள் அவளைப் பார்த்தீர்களா?”

“இல்லை; பிறகுதான் பார்த்தேன். அதுவும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான்.”

“என்ன காரணம்?”

“என்னைத் தனிமையில் சந்தித்துச் சில வார்த்தைகள் பேச விரும்புவதாக அவள் எனக்குக் கடிதம் எழுதி இருந்தாள். அதனால் தான் அவளை நான் சந்திக்க நேர்ந்தது !”

“அவளை நீங்கள் எங்கு சந்தித்தீர்கள்?”

“தாசப்பிரகாச ஓட்டலில் அவள் வந்து இறங்குவதாயும், அங்கு வந்து தன்னைச் சந்திக்கும்படியும் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள்.”

“எதற்காக அவள் உங்களைப் பார்க்க விரும்பினாள்?”

“அது எனக்குத் தெரியாது; அவள் குறிப்பிட்ட தினத் தன்று நான் தாசப்பிரகாச ஓட்டலுக்குச்சென்று இருந்தேன். தில்லைநாயகத்தின் துர்க்குணங்களைப்பற்றியும், தன் கணவன் செய்த கொடுமைகளைப் பற்றியும் கூறிக் கண்ணீர் வடித்தாள். தன்னை வாழவும் விடாமல், சாகவும் விடாமல் சித்திரவதை செய்துகொண்டிருக்கும் தன் கணவனின் கொடுமையைப்பற்றிக் கூறினாள். கலியாண பந்தத்திலிருந்து தன்னை விடுதலை செய்யா விட்டால் எதற்கும் தான் துணிந்துவிடப் போவதாக அவள் கூறினாள்!” |

“விஜயவல்லி உங்களிடம் ஏன் தன்னுடைய குறைகளைச் சொல்லவேண்டும்?”

“நான் தில்லைநாயகத்தின் நண்பன் என்று எண்ணிக் கொண்டு, தான் நிரபராதி என்று நிரூபிக்கவும் தில்லைநாயகத்தின் பிடிவாதத்தைத் தணித்துத் தனக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்வதற்காகவும்தான் என்னை அவள் தனிமையில் சந்தித்தாள். நெருங்கிய நண்பர் சொன்னால் அவருடைய பிடி வாதம் குறையாதா என்று அவள் எண்ணியிருக்கிறாள். ஆனால் யாராலும் தில்லைநாயகத்தின் தீர்மானத்தை மாற்ற முடியாது என்பது அவளுக்குத் தெரியாதுபோலும்!”

“தில்லைநாயகத்தின் மரணத்திற்கு அவள் காரணமாய் இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“அவள் தன் கணவனுடன் மனஸ்தாபம் கொண்டிருப்பத னாலேயே அவளைக் குற்றவாளி என்று தீர்மானித்துவிட முடியுமா? ஒரு பெண் என்ன தான் பகைமை கொண்டிருந்த போதிலும் தன் கணவனைக் கொலை செய்யுமளவிற்கு அவளுக்குத் துணிவு ஏற்படாது என்றே நான் எண்ணுகிறேன்.”

“அப்படியானால் வேறு யார்மீதாவது உங்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறதா?”

“வேறு யாரைச் சந்தேகிப்பது? ….ம். இப்பொழுதுதான் நினைவு வருகிறது. சென்ற செவ்வாய்க்கிழமை யன்று, அதாவது தில்லைநாயகம் மரணமடைந்த தினத்தன்று ஒருவன் அவருக்கு டெலிபோன் செய்தான். அவன் ஏன் குற்றவாளியாக இருக்கக் கூடாது?”

“யார் அந்த ஆசாமி?”

“அன்று மாலை மூன்று மணி சுமாருக்கு ஆராய்ச்சிச்சாலையின் நடு ஹாலில் இருந்த டெலிபோன் மணி ஒலித்தது. அந்த மணி

யோசை என் கவனத்தைக் கலைத்தபடியால் நான் தான், அந்த டெலிபோனைக் கவனித்தேன். மாரிசாமி, தில்லைநாயகத்துடன் பேசவேண்டும் என்று சொன்னான். அவர் ஆராய்ச்சியில் கவன மாய் இருக்கும்போது ஒருவருடனும் பேசமாட்டார் என்பது எனக்குத் தெரியுமாகையினால் அவருடன் பேச முடியாது என்று கூறிவிட்டேன். ‘பரவாயில்லை, பிறகு பேசிக்கொள்கிறேன்’ என்று மாரிசாமி டெலிபோனைக் கீழே வைத்து விட்டான். அன்று மாலை நாங்கள் இருவரும் பனகல் பார்க் வழியாகச் சென்றபோதுதான் நான் மாரிசாமி டெலிபோன் செய்ததை அவரிடம் கூறினேன்,”

“மாரிசாமியை அவர் புரிந்து கொண்டாரா?”

“இல்லை! அந்தப் பெயரையே கேள்விப்பட்டதில்லை என்று கூறிவிட்டார். அதனால் தான் நான் அந்தப் பேச்சை அத்துடன் விட்டுவிட்டேன்.”

“அது சரி! அவருடைய உறவினர்களில் ஒருவனான தனஞ் சயன் என்பவனைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“அவர் பெற்றோர்களையும் உற்றார் உறவினர்களையும் விட்டு விட்டுத் தனியாக வந்து விட்டதாய்க் கூறினாரே தவிர, ஒருவரைப் பற்றியும் விவரமாகக் கூறியதில்லை. நீங்கள் குறிப்பிடும் அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதில்லை.”

“இப்பொழுது உங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிக் கருவிகள் பழுதாக்கப்பட்டிருக்கின்றன. உங்களுடன் ஒத்துழைத்து வந்த ஆசாமியும் இறந்துவிட்டார். அடுத்தபடி யாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை. அவரும் உயிருடன் இருந்திருந்தால் இன்று எங்கள் புகழ் வானளாவ ஓங்கி இருக்கும். பத்திரிகைகளில் எங்கள் ஆராய்ச்சியைப் பற்றிய செய்திதான் பத்திப் பத்தியாக வெளி வந்திருக்கும். நாங்களும் விரைவில் பெருஞ் செல்வந்தர்களாகி இருப்போம். ஆனால் நாங்கள் ஒன்று நினைக்க அது ஒன்றாய் முடிந்துவிட்டது. அன்று மாலை அவர் என்னுடன் பேசிய விதத்திலிருந்து மறுநாள் எங்கள் ஆராய்ச்சி முடிவடைந்து விடும் போல்தான் இருந்தது. நானும் ஓரளவு வெற்றி பெற்றிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கள் இருவரின் பரிசோதனையையும் ஒன்று சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்தால் எங்கள் ஆராய்ச்சி ஒருவித முடிவிற்கு வந்திருக்கும். கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டதே என்று நினைக்கும்போதுதான் என் மனம் துடிக்கின்றது.

இன்னும் சில நாட்களுக்கு நான் ஆராய்ச்சி சம்பந்தமாக எந்த விதமான நடவடிக்கையையும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்று கூறிவிட்டுத் தன்னையும் மீறிவந்த கண்ணீர்ப் பொட்டு களைத் துடைத்துவிட்டுக் கொண்டார் துளசிங்கம்.

அந்த விசாரணை அவருக்கு மிகுந்த திருப்தியை அளித்தது! விஜயவல்லிதான் தில்லைநாயகத்தின் மரணத்திற்குக் காரணமாய் இருக்கவேண்டும் என்பது சந்தேகமற விளங்கி விட்டது. ஆனால் மாரிசாமி என்ற ஆசாமி யாரென்றுதான் அவருக்குப் புரிய வில்லை. அவன் விஜயவல்லிக்கு வேண்டிய ஆசாமியாக இருந்து, தில்லைநாயகத்தின் பிடிவாதத்தைப் போக்கி அவளுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் பாடுபடுபவனாக இருந்தால் ஏன் அவன் தில்லைநாயகத்துடன் பேசவேண்டும் என்று வற்புறுத்தவில்லை? ஒருவேளை அவர் ஆராய்ச்சி சாலையில்தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவன் போன் செய்திருப்பானோ? அவன் தான், அடையாறுக்குச் சென்று மின்சாரம் பாய்ந்தவுடன் வெடிக்கக்கூடிய பல்பைப் பொறுத்தியிருக்க வேண்டும் என்றும், அவனேதான் உஸ்மான் ரோடில் இருக்கும் ஆராய்ச்சி சாலை கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே பிரவேசித் திருக்கவேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. அவன் தான் உணவில் விஷம் கலந்து தில்லைநாயகத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் எவ்வாறு ஆதிகேசவனும் அந்த சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொண்டார் என்பதுதான் துளசிங்கத்திற்குப் புரியவில்லை. மறு கணம் அவருக்கு தனஞ்சயனின் நினைவு வந்தது. அவன் ஏன் தில்லைநாயகத்தைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்? மாரிசாமி குற்றவாளியா? தனஞ்சயன் குற்றவாளியா? என்று புரியாமல் குழப்பமடைந்த வண்ணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார் துளசிங்கம். இன்ஸ்பெக்டர் சங்கரன், தில்லை நாயகத்தின் வழக்கு விஷயமாகத் தன்னால் முடிந்த விசாரணைகளை செய்துகொண்டிருந்தார். அதிலிருந்து மாரிசாமி என்ற ஆசாமி விஜயவல்லிக்கு மிகவும் வேண்டியவன் என்றும், அவனைத்தான் அவள் அநேகமாக பதிவுத் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்திருக்க வேண்டும் என்றும் கூறினார் இன்ஸ்பெக்டர். இப்பொழுது மாரிசாமிதான் குற்றவாளி என்பது விளங்கி விட்டது. அவன் யார்? எங்கு இருக்கிறான்? எவ்வாறு அவன் அந்தத் திட்டத்தை நிறைவேற்றினான்? சிந்தனை சிறகடித்தது. துளசிங்கத்திற்கு.

அந்த சமயத்தில் டெலிபோன் மணி ஒலித்தது. இன்ஸ் பெக்டர் ரிஸீவரைக் கையில் எடுத்தார். “ஹலோ போலீஸ் ஸ்டேஷனா?”- குரல் வக்கீல் பஞ்சநாதனுடையது.

“ஆமாம்! இன்ஸ்பெக்டர் சங்கரன் பேசுகிறேன்”

நான் துளசிங்கத்தினிடம் தனஞ்சயன் என்ற ஆசாமி யைப்பற்றிச் சொல்லி இருக்கிறேன். அவன் நாளைக் காலை சென்னைக்கு வரப்போவதாய்த் தெரிகிறது. அவனுடைய அங்க அடையாளங்கள் அவருக்குத் தெரியும். அவசியமானால் அவனைச் சந்தித்து விசாரிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார் வக்கீல்.

இச்செய்தியை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தார் துள சிங்கம். தனஞ்சயனை விசாரித்தால் மாரிசாமியைப் பற்றிய உண்மைகளை அறியலாம் என்ற எண்ணம் ஏற்பட்டபடியால் அவனைச் சந்திக்கத் தீர்மானித்தார் அவர், ஆதிகேசவனின் பேட்டியும் வக்கீல் பஞ்சநாதனிடமிருந்து வந்த செய்தியும் துப் பறியும் துளசிங்கத்திற்கு ஒருவித உற்சாகத்தையும் குற்ற வாளியை விரை வில் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையை யும் கொடுத்த போதிலும், அதிலும் சில குழப்பங்கள் இருப்பதை அவர் உணராமல் இல்லை. மாரிசாமி தில்லைநாயகத்தின் கொலை வழக்கில் எவ்வாறு சம்பந்தப் பட்டிருக்கிறான்? தனஞ்சயன் எதற்காக சென்னைக்கு வரப்போகிறான்? இந்த இரண்டு ஆசாமி களும் இவ்வளவு நாட்கள் எங்கு இருந்தார்கள்?–இவ்விதக் கேள்விகள் சற்று நேரம் துப்பறியும் துளசிங்கத்தைக் குழப்பின.

தில்லைநாயகத்தின் மரணச் செய்தியைப் பற்றி கேள்விப் பட்டபோது அது தற்செயலாய் ஏற்பட்டதாக இருக்கும் என்று தான் நினைத்தார் துளசிங்கம். உஸ்மான் ரோடு ஆராய்ச்சி சாலையில் நடந்த சம்பவத்திற்கும் தில்லைநாயகத்தின் மரணத் திற்கும் சம்பந்தம் இருக்கும் என்று அவர் எண்ணவில்லை. வக்கீல் பஞ்சநாதனிடம் தில்லைநாயகம் ஒப்படைத்திருந்த உயிலும், அடையாறு பங்களாவில் தில்லைநாயத்தின் அறையில் அவருடைய உயிரையே போக்குமளவிற்கு ஏற்பட்ட சம்பவமும் அந்த வழக்கில் மேலும் சில சந்தேகங்களை உண்டுபண்ணி விட்டன.

தில்லைநாயக கொலை வழக்கின் தற்போதைய நிலைமை ஒரு முறை துளசிங்கத்தின் மனதில் வந்து நின்றது. ரத்தத்தில் விஷக்கலப்பு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தில்லைநாயகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஏறக்குறைய அதே சமயத்தில் மாம்பலம் உஸ்மான் ரோட்டில் இருக்கும் ஆராய்ச்சி சாலையில் குற்றவாளி ரகசியமாகப் பிரவேசித்து ஆதிகேசவனின் பரிசோதனைகளைப் பாழாக்கி இருக்கிறான். அத்துடன் குற்ற வாளியினால் உபயோகப்பட்டதாகக் கருதப்படும் சுத்தி ஒன்றும் தில்லைநாயகத்தின் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக் கிறது. துளசிங்கம் ஆராய்ச்சிசாலையைப் பரிசோதனை செய்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் தில்லைநாயகம் ஆஸ்பத்திரியில் மரணமடைந்திருக்கிறார். இரண்டு ஆராய்ச்சியாளர்களும் பழ கிய விதத்தில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. ஆதி கேசவனின் ஆராய்ச்சி அறை பாதிக்கப்படாமல், தில்லைநாயகம் துர்மரணமடையாமல் இருந்திருந்தால் அவர்களின் ஆராய்ச்சி மகத்தான வெற்றிபெற்றிருக்கும். உலகம் போற்றிய புகழ்க் திருக்கும். விரைவில் பெருஞ்செல்வந்தர்களாகி இருப்பார்கள், ஆனால் அவர்களிள் துரதிருஷ்டம்தான் வேறுவிதமாக முடி வடைந்து விட்டதே!

அடுத்தபடியாக வக்கீல் பஞ்சநாதனின் விஜயம், அவர் கண்டெடுத்த விஜயவல்லியின் கடிதம், ஆதிகேசவனின் மூலம் விசாரித்தறிந்த உண்மைகள், தனஞ்சயன், மாரிசாமி இவர் களைப்பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள், அனைத்தும் அவருடைய அகக் கண்முன்னால் வந்து நின்றன. எவ்வளவு யோசித்தும் அவரால் ஒருவித முடிவிற்கு வரமுடியவில்லை.

ஆகவே, டைரியை எடுத்துக் கரத்தில் புரட்டிய வண்ணம் தான் சந்தேகிப்பவர்களைப் பற்றி ஆராய்ந்தறிய ஆரம்பித்தார்! முதன் முதலில் ஸ்ரீமதி விஜயவல்லியின் பெயர்தான் அவருடைய கண்ணில் பட்டது.

ஸ்ரீமதி விஜயவல்லி- காலம் சென்ற தில்லைநாயகத்தின் மனைவி : அவளாகவே தன் கணவனை விரோதித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வந்திருக்கிறாள். வேறு ஒருவனை பதிவுத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற துணிவும் கொண்டிருக்கிறாள் அவள். அந்த விஷயத்தை அவள் ரகசிய மாக வைத்திருக்கவில்லை. தன்னைக் கலியாண பந்தத்திலிருந்து விடுவித்து விடும்படி தன் கணவருக்குப் பல கடிதங்கள் எழுதியும் இருக்கிறாள். ஆனால் அவள் எந்தக் கடிதத்திலும் தான் யாரை மறுமணம் செய்துக்கொள்ளப் போகிறாள் என்பதை வெளிப் படுத்தவில்லை. தில்லைநாயகம் மரணமடைந்த தினத்தன்று காலை விஜயவல்லியிடமிருந்து அவருக்கு கடைசியாக ஒரு எச்சரிக்கைக் கடிதம் வந்திருக்கிறது. அவளுக்கு மறுநாள் காலையில்தான் தில்லைநாயகம் மரணமடைந்த செய்தி கிடைத்திருக்கிறது. அதைக்கேட்டு அவள் ஆச்சரியப்படவில்லை ; துயரப்படவும் இல்லை. ஆனால் அவள் சில மணி நேரத்திற்குப்பிறகு தான் தங்கி யிருந்த ஓட்டலிலிருந்து புறப்பட்டுவிட்டான். குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட வேண்டிய ஆசாமிகளில் ஒருத்தி விஜயவல்லி, அப்படி அவள் குற்றவாளியாக இருந்தால் தன் னுடைய கலியாண பந்தத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்பது ஒன்றே அதற்குக் காரணம்! ஆனால் அந்த ஒரு காரணத் திற்காகத் தன் கணவனைக் கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்குமா? . அவள் படித்தவள் ; நாகரிக வாழ்க்கையில் மோகம் கொண்டவள்; முற்போக்கு வாதி! கணவனின் சம்மதத்திற்காகக்கூட காத்திருக்காமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டிருக்கலாம் அல்லவா? அதற்காக அவள் ஏன் தன் கணவனைக் கொலைசெய்ய திட்டமிடவேண்டும்?

அடுத்ததாகச் சந்தேகப்படவேண்டிய குற்றவாளி மாரிசாமி! விஜயவல்லியின் காதலன் அவனாகத்தான் இருக்கவேண்டும்! அவனைத்தான் அவள் மறுமணம் செய்துக்கொள்ள எண்ணி இருக்கவேண்டும். தில்லைநாயகம் மரணமடைந்த தினத்தன்று அவன் சென்னையில் இருந்திருக்கிறான் என்பதும், தில்லைநாய கத்தின் மரணச்செய்தியை விஜயவல்லியின் மூலம் கேள்விப்பட் டிருக்கிறாள் என்பதும் தெரியவருகின்றன. தில்லைநாயகத்தின் மரணத்திற்கும் பிறகும் அவள் அவனுடன் தான் வாழ்ந்து வந்திருக்கவேண்டும், விஜயவல்லியை மணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால்தான் அவன் தில்லைநாயகத்தை கொலை செய்திருக்கவேண்டும்.

விஜயவல்லி மாரிசாமியை மணந்துகொள்ள சித்தமாய் இருந்திருக்கிறாள். அவர்களின் தொடர்பைப் பிரிக்கவோ, அல்லது அவர்களின் அன்பிற்கு இடையூறாகவோ ஒருவரும் இல்லை! தில்லைநாயகத்திற்கு மாரிசாமியைத் தெரியாது, அப்படி தெரிந் திருந்தாலும் அவர் தன் மனைவியின் விஷயத்தில் தலையிட்டிருப் பார் என்று சொல்லுவதற்கும் இல்லை. ஆகவே, அதிகமான சிரமமின்றி விஜயவல்லியை மணந்துகொள்ள வழியிருக்கும் போது மாரிசாமி ஏன் தில்லைநாயகத்தைக் கொலைசெய்யத் துணியவேண்டும்?

இந்தக் கொலை வழக்கில் சந்தேகிக்க வேண்டியவர்களில் மூன்றாவது குற்றவாளி தனஞ்சயன்! தில்லைநாயகத்தின் சகோதரியின் மகன். தில்லைநாயகத்தின் உயிலின்படி பாதி சொத்து அவனுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் இன் னும் சில தினங்கன் உயிருடன் இருந்திருந்தால் உயிலை மாற்றி வைத்திருப்பார். அவருடைய சொத்துகள் அனைத்தும் வக்கீலிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கும். தில்லைநாயகம் மரண மடைந்த தினத்தன்று மாலை அவன் ஐஸ்கிரீம் பாரில் அவரைச் சந்தித்துப் பேசி இருக்கிறான். ஆனால் என்ன பேசினான், ஏன் அவன் ஆராய்ச்சிச்சாலையிலிருந்து வந்திருக்கிறான் என்பவை களுக்குக் காரணம் விளங்கவில்லை! தனஞ்சயன், தில்லைநாய கத்தின் நடவடிக்கைகளை மறைவாக இருந்துகொண்டு கவனித்து வந்திருக்கிறான் என்று தெரியவருகிறது. அவன் தான் மறுநாள் விஜயவல்லியைச் சந்தித்து அவளிடம் தில்லைநாயகத்தின் மரணச் செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறான் என்றும் தோன்றுகிறது.

தனஞ்சயன் குற்றவாளியாக இருந்தால் தில்லைநாயகத்தின் சொத்தை அடையவேண்டும் என்பது மட்டுமே காரணமாக இருந் திருக்கவேண்டும். அவர் உயிலை மாற்றிவைப்பதற்குள் அவரைக் கொலை செய்துவிடவேண்டும் என்று எண்ணியிருக்கிறான். தனஞ்சயனையே குற்றவாளி என்று வைத்துக்கொண்டால் தில்லைநாயகம் உயிலை மாற்றி எழுதத் தீர்மானித்துவிட்டார் என்பது அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? அந்த விஷயத் தைத் தெரிந்துகொண்டே தில்லைநாயகத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டான் என்று வைத்துக்கொண்டாலும் அன்று மாலை அவர் பாண்டிபஜார் ஓட்டலுக்குச் சிற்றுண்டி புசிக்கச் செல்லப் போகிறார் என்பது அவனுக்கு எவ்வாறு தெரிந்திருக்க முடியும்? மேலும் தில்லைநாயகமும் ஆதிகேசவனும் ஓட்டலினுள் சிற்றுண்டி புசித்துக்கொண்டிருந்த சமயத்தில் தனஞ்சயன் ஓட்டலுக்கு வெளியே இருந்திருக்கிறான் என்றல்லவா தெரியவந்திருக்கிறது? இந்த நிலையில் தனஞ்சயனை எவ்வாறு சந்தேகிப்பது?

துப்பறியும் துளசிங்கத்தின் மனது இப்பொழுது முன்னை விட அதிகமாகக் குழம்பியது. முக்கிய குற்றவாளியாகக் கருதிய மூன்றுபேரின் மீதுள்ள சந்தேகமும் ஆதாரமற்றதாக இருப்பதை நினைக்கும்போது அவருக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது! வக்கீல் பஞ்சநாதனின் நினைவு மெல்ல ஒருபுறம் எழுந்தது. சில வழக்குகளில் வக்கீல்களே தங்களிடம் ஒப்படைக்கப்படும் பொருள்களை அபகரிப்பதற்காகக் கொலைசெய்யத் துணிந்திருக் கிறார்கள் என்பதைத் துளசிங்கம் அறிந்திருந்தபடியால்தான் பஞ்சநாதனின் பேரில் ஓரளவு சந்தேகம் ஏற்பட்டது. இந்த வழக்கில் பஞ்சநாதத்தைச் சந்தேகிப்பதற்குச் சரியான காரணம் இருந்தது! தில்லைநாயகம் தன் சொத்தில் பாதியை அவருடைய பெயருக்கு எழுதிவைத்திருக்கிறார். தில்லைநாயகத்தின் மரணத் தினால் மற்ற எல்லோரையும்விட வக்கீலுக்குத்தான் பொரு ளாதார வகையில் பலன் அதிகம்! இதை அவரே ஒப்புக்கொள் கிறார். ஆனால் அதற்காக அவர் தில்லைநாயகத்தைக் கொலை செய்திருப்பார் என்றோ, அல்லது அவருடைய மரணத்தில் சம்பந்தப்பட்டிருப்பார் என்றே நினைப்பது எவ்வளவு தவறானது? தில்லைநாயகம் விஷம் கலக்கப்பட்ட உணவைப் புசித்து மரணமடைந்திருக்கிறார் என்று எண்ணப்படுவதினால் அவரை இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்துவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அவரைக் குற்றவாளி என்று நிச்சயிக்க முடியாவிட்டாலும் நிரபராதி என்று கூறிவிட முடியாது. ஏனென்றால், மற்றவர்களை விட அவர் தான் இந்த வழக்கில் அதிகமாகச் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

அவர் தான் முதன் முதலாக விஜயவல்லியின் கடிதத்தைக் கண்டெடுத்து இருக்கிறார், தில்லைநாயகத்தைப்பற்றியும், விஜய வல்லியின் குணாதிசயங்களைப்பற்றியும் தனஞ்சயனைப்பற்றியும் அவர்தான் வெளியிட்டிருக்கிறார். அத்துடன், தில்லைநாயகம் வசித்துவந்த அடையாறு பங்களாவில் குற்றவாளியின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் அவர்! அவர் கூறிய விஷயங் கள் அனைத்தும் நியாயமானதாகவும் நம்பக்கூடியதாகவும் இருக் கிறது. இந்தக் கொலையில் வக்கீலைச் சந்தேகிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

வழக்கமான கேசுகளைப் போல் இருந்தால் இத்தனை குழப் பங்கள் ஏற்பட்டிருக்காது என்றே அவருக்குத் தோன்றியது. ஒருவன் முதுகிலோ உடம்பிலோ கத்தியினால் குத்தப்பட்டு இறந்து கிடப்பான். அல்லது துப்பாக்கி வெடி அவனுடைய மண்டையையோ மார்பையோ துளைத்துக்கொண்டு சென்று இருக்கும். அவன் யார்? அவனுக்கு விரோதிகள் யாராவது இருக்கிறார்களா? அவர்கள் ஏன் அவனை விரோதித்துக் கொண்டனர்?–என்பவைகள் போன்ற கொள்கைகளை ஆராய்ந்து கொண்டே சென்றால் குற்றவாளி யாரென்பது விளங்கி விடும். ஆனால் இந்த வழக்கில் ஆராய்ச்சிசாலை பழுதாக்கப்பட் டிருக்கிறது ; ஒருவர் ரத்தத்தில் ஏற்பட்ட விஷக்கலப்பினால் மரணமடைந்திருக்கிறார்; மற்றொருவர் வெகுவாகப் பாதிக்கப் பட்டு உடல் நிலை சுகமின்றி இருக்கிறார் – தில்லைநாயகத்தைக் கொலை செய்யுமளவிற்கு விரோதிகள் ஒருவரும் இல்லை. அத்துடன் சந்தேகப்படக்கூடிய நபர்கள் அனைவரும் நிரபராதி களைப்போல் காணப்படுகிறார்கள். இந்த நிலையில் யாரைச் சந்தேகிப்பது? எவரைக் குற்றவாளியாக்குவது?

எல்லாவற்றையும்விட தில்லைநாயகத்தின் மரணம் ஏன் தற் செயலாக ஏற்பட்டதாக இருக்கக்கூடாது என்று எண்ணும் போது தான் துளசிங்கத்தின் மூளை வெகுவாகக் குழம்பியது. அவ்வாறு நினைப்பதற்கும் காரணம் இருந்தது. தில்லைநாயகம், ஆதிகேசவன் இருவரும் பாண்டிபஜார் ஓட்டலில் சிற்றுண்டி புசித்து இருக்கிறார்கள்! அதற்குப் பிறகுதான் இருவருடைய உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளி இருவரையும் கொலைசெய்யவேண்டும் என்று தீர்மானித்து, அவர்களின் சிற்றுண்டியில் விஷத்தைக்கலக்க ஏற்பாடு செய்திருந்தால் ஒருவர் மட்டும் எவ்வாறு தப்பிப் பிழைத்திருக்கமுடியும்? அவ்விருவரும் புசித்த சிற்றுண்டியில் வேண்டுமென்று விஷம் கலக்கப்பட்டதா? அல்லது தற்செயலாக விஷக்கலப்பு ஏற்பட்டதா? அந்த ஓட்டலில் ஏற்கனவே விசாரித்தறிந்த விஷயங்களிலிருந்து அவர் களின் சிற்றுண்டியில் எந்தவிதமான தவறும் இருக்காது என்று அறிந்திருந்தபடியால் வேண்டுமென்றுதான் சிற்றுண்டியில் விஷத்தைக் கலந்திருக்கவேண்டும் என்று தோன்றியது துளசிங்கத்திற்கு! ஆனால் அதைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் போது அதிலும் அவருக்குச் சில சந்தேகங்கள் எழுந்தன. அந்த ஓட்டலில் சம்பந்தப்பட்டவர்களின் உதவி இல்லாமல் சிற்றுண்டியில் விஷம் கலப்பது கடினம் என்று தோன்றியது. அப்படியானால் அந்த ஓட்டல் முதலாளி தில்லைநாயகத்தின் மரணத்தில் சம்பந்தப்பட்டிருக்கமுடியுமா? அவ்விருவர்களையும் கொலைசெய்ய ஏன் அவர் எண்ணவேண்டும்? தில்லைநாயகம் எதைப் புசிக்கப்போகிறார் என்பது எவ்வாறு அவருக்குத் தெரிந் திருக்கமுடியும்? ஒருவேளை அவர் வழக்கமாகப் புசிக்கும் சிற்றுண்டி யைத் தவிர்த்துவிட்டு வேறு ஏதாவது புசித்திருந்தால் குற்ற வாளியின் திட்டம் எவ்வாறு வெற்றிகரமாக முடிந்திருக்கும்? இவ் விதக் கேள்விகள் எழுந்தபோது அவர்கள் அந்த ஓட்டலில் புசித்த சிற்றுண்டிக்கும் அவ்விருவரின் உடல் நிலை பாதிக்கப் பட்டதற்கும் சம்பந்தம் இருக்குமா என்பதே சந்தேகத்தில் வந்துவிட்டது. பாண்டிபஜார் ஓட்டலுக்குச் செல்வதற்கு முன்பே அவ்விருவரின் ரத்தத்திலும் ஏன் விஷக்கலப்பு ஏற்பட் டிருக்கக்கூடாது என்ற எண்ணம்கூட அப்பொழுது துப்பறியும் துளசிங்கத்திற்கு ஏற்பட்டது. அப்பொழுது அவருக்கு முன்னால் குறிப்பிட்ட மூவரின் நினைவு மீண்டும் எழுந்தது.

தில்லைநாயகம் மரணமடைந்த தினத்தன்று விஜயவல்லி சென்னையில் இல்லை. அவளுக்குத் தன் கணவன் எந்த ஓட்டலுக்குச் செல்கிறான், என்ன புசிக்கிறான் என்பவைகள் ஒன்றும் தெரியாது. ஆகவே அவள் எவ்வாறு தில்லைநாயகத்தின் உடலில் விஷக்கலப்பு ஏற்பட்டதற்குக் காரணமாய் இருக்கமுடியும்?

மாரிசாமி சென்னையில் இருந்தான் என்று நினைக்க இட மிருக்கிறது. அவனே அவருடைய ஆராய்ச்சி சாலையினுள் ரகசிய மாகப் பிரவேசித்திருக்கலாம். மேலும் அவனைத்தான் விஜயவல்வி தன் காரியத்தை வெற்றிகரமாக முடிக்க ஒரு கருவியாகப் பயன் படுத்தி வருகிறாள் என்றும் தோன்றுகிறது. ஆனால் அவன் தில்லைநாயகத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு எவ்வாறு காரணமாக இருக்கமுடியும்? தனஞ்சயன் தில்லைநாயகத்தைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான். தில்லைநாயகத்தைச் சந்தித் துப் பேசியும் இருக்கிறான் அவன். ஆனால் அவன், தில்லைநாயகத் தின் உயிரைப் போக்கக்கூடிய விஷத்தை எவ்வாறு உபயோகித்து இருக்கமுடியும்?

எவ்வாறு யோசித்தும், எவ்வளவுதான் மூளையைக் குழப்பிக் கொண்டபோதிலும் யார் குற்றவாளி என்று அவரால் நிச்சயிக்க முடியவில்லை. ஆகவே, அந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களின் மீது பொறாமை கொண்டயாரோதான், அவர்களின் பரிசோதனை களைப் பாழாக்கிவிட்டு இருவரையும் ஒழித்துக்கட்டத் தீர்மானித் திருக்கவேண்டும் என்ற முடிவிற்கு வந்தார் அவர்.

அந்த ஆராய்ச்சியாளர்கள் சிற்றுண்டி புசித்த ஓட்டலுக்குச் சென்று மீண்டும் விசாரித்தால் வேறு ஏதாவது உண்மை கிடைக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டபடியால் பாண்டி பஜாருக்குச் சென்றார் அவர். அந்த ஓட்டலின் முதலாளி முதல் முறையைவிட மரியாதையுடனும் பணிவுடனும் துளசிங்கத்தை வரவேற்று உபசரித்தார். துளசிங்கம் கேட்ட கேள்விகளுக்குத் தயக்கமின்றி பதில் சொன்னார். முதல் முறையைப் போலவே ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று ஒவ்வொரு சிப்பந்தியை யும் வரவழைத்துத் துளசிங்கத்திற்கு அறிமுகப்படுத்தி அவருடைய சந்தேகத்தைப் போக்குவதற்கான முயற்சிகளைச் செய்தார். தில்லை நாயகத்தின் மர்மக் கொலை வழக்கில் தன்னுடைய ஓட்ட லின் பெயர் சம்பந்தப்படுத்தப்பட்டு விடப் போகிறதே என்று தான் மிகுந்த கவலை அடைந்தார் அவர்.

துளசிங்கத்திற்கு இப்பொழுது சந்தேகம் நீங்கிவிட்டது. ஆராய்ச்சியாளர்கள் இருவரும் அந்த ஓட்டலுக்கு வருவதற்கு முன்புதான் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சந்தேகமற விளங்கிவிட்டது.

உஸ்மான் ரோடு ஆராய்ச்சிச் சாலையில் தில்லைநாயகத்தின் அறையிலிருந்து கண்டெடுத்த சிறிய சுத்தியைப்பற்றி இதுவரை அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார் துளசிங்கம். ஆனால் இப்பொழுது அது ஏன் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கக் கூடாது என்று தோன்றியது அவருக்கு!

அதைப்பற்றியும் விசாரித்து தன்னுடைய சந்தேகத்தை அறவே போக்கிக்கொண்டு விடவேண்டும் என்ற எண்ணத் துடன் மீண்டும் அடையாறுக்குப் புறப்பட்டார் துளசிங்கம்.

துப்பறிபவர் அடையாறில் இருந்த தில்லைநாயகத்தின் பங்களாவை அடைந்து முன்புறமிருந்த காலிங் பெல்லை அழுத் தினார். சிறிது நேரமாகியும் பதில் வரவில்லை. கதவும் திறக்கப் படவில்லை. மறுமுறை விசையை அழுத்தினார். அப்பொழுதும் எந்தவிதமான மாறுதலும் ஏற்படவில்லை. துளசிங்கத்திற்குச் சந்தேகம் வந்துவிட்டது! காந்திமதி, தில்லை நாயகத்தின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பாளா? ஒன்றுமறியாதவள் போல் நடித்துவிட்டு, ஊரைவிட்டு வெளியேறிவிட்டாளா? நிரபராதி களைப் போல் தோற்றமளிப்பவர்கள் குற்றவாளிகளாகவும் குற்றவாளிகள் போல் தோன்றுபவர்கள் நிரபராதிகளாகவும் இருப்பது இம்மாதிரியான வழக்குகளில் சகஜமல்லவா? காந்திமதி கபடமாக நடித்து என்னை ஏமாற்றிவிட்டாளா? இவ்விதக் கேள்விகள் எழுந்து அவருடைய சந்தேகத்தைப் பலப்படுத்தின. ஆனால் மூன்றாம் முறை விசையை அழுத்த முயன்றபோது கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்துவிட்டாள் காந்திமதி.

அவளுடைய உடைகளில் கரி படிந்திருந்தது. தலைமயிர் கலைந்து கிடந்தது. உடல் சோர்வுற்று இருந்தது. அவள் வீட்டு வேலையில் மும்முரமாக இருந்திருக்கிறாள் என்பதை அந்தக் காட்சி வெளிப்படுத்தியது. காந்திமதி புருவங்களை உயர்த்திச் சற்று ஆச்சரியத்துடன் துப்பறிபவரைப் பார்த்தாள்.

“ஓ! நீங்களா? நான் யாரோவென்று நினைத்துவிட்டேன்! உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை. உள்ளே வாருங்கள்” என்று வரவேற்றாள் அவள்.

“தில்லைநாயகத்தின் மரணம்தான் என்னைக் குழப்பிக்கொண் டிருக்கிறது. எவ்வளவு யோசித்தும் என்னால் ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை. உங்களை மீண்டும் சந்தித்துப் பேசினால் வேறு ஏதாவது துப்புக் கிடைக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் இங்கு வந்தேன்!” என்று கூறியவண்ணம் உள்ளே பிரவேசித்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டார் துளசிங்கம்.

“என் எஜமானரின் மரணம் எல்லோரையும்விட என்னைத் தான் அதிகமாகப் பாதித்து இருக்கிறது. இங்கேயே இருந்து கொண்டு மீதி இருக்கும் நாட்களைக் கழித்துவிடலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அது இப்பொழுது நிறைவேறாமல் போய்விட்டது. அவரைப்பற்றி எனக்குத் தெரிந்தவைகளை ஒளிவு மறைவின்றி கூறிவிட்டேன். உங்களுக்கு என் வாக்கு மூலத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவைகளைப் போக்க வும் நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியவண்ணம் உடம்பிலிருந்த தூசிகளை உதறிவிட்டுக்கொண்டு தலையைக் கோதியவண்ணம் அவருக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள் காந்திமதி.

“ நீங்கள் தவறாக எண்ணவேண்டாம். உங்கள் வாக்கு மூலத்தில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. தில்லை நாயகத்தின் குணாதிசயங்களைப் பற்றியும் அவருடைய வாழ்க்கை யைப் பற்றியும் பேசினால் ஏதாவது புதிய உண்மைகள் கிடைக்க லாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதனால் தான் இங்கு வந்தேன். நீங்கள் வீட்டு வேலைகளில் முனைந்திருப்பது போல் தோன்றுகிறது. உங்கள் வேலையை முடித்துக்கொண்டு வாருங்கள். பிறகு சாவகாசமாய்ப் பேசலாம்” என்று எதிரிலிருந்த டீபாயின் மீது புரண்டு கிடந்த பேப்பரைக் கையில் எடுத்துக் கொண்டார் அவர்.

“எனக்கு அவசரமான வேலை ஒன்றும் கிடையாது! நிதான மாகப் பேசிக்கொண்டிருக்கலாம். எஜமானர் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன் என் மனமும் உடைந்து விட்டது. உடனே நான் இங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எஜமானரின் வழக்கு ஒரு முடி விற்கு வரும் வரையில் நான் இங்கேயே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபடியால் நான் இங்கு இருக்கிறேன். சில தினங் களுக்கு முன்பு வழக்கம்போல் கடையிலிருந்து ஒரு மூட்டை கரி வந்துவிட்டது. பெரிய பெரிய கட்டிகளாக இருந்தன. அவைகளை உடைத்துக் கைகள் சோர்ந்துவிட்டன. அதனால்தான் உடனே என்னால் கதவைத் திறக்க முடியவில்லை” என்றாள் அவள்.

“நல்ல கரியாக வாங்கினால் இந்தக் கஷ்டம் இருக்காதே!” என்று கேட்டார் அவர்.

“உண்மைதான்! குடும்பத்தில் பொறுப்புள்ள யாராவது கடைக்குச் சென்று கவனித்துப் பார்த்துப் பொருள்களை வாங்கி வந்தால் இத்தனை கஷ்டம் இருக்காது. எஜமானருக்கு புத்தகங் களைப் படிப்பதற்கும், ஆராய்ச்சி சம்பந்தமாக ஆலோசிப்பதற் கும் தான் பொழுது சரியாக இருந்தது. எனக்கோ வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நேரமில்லை. விறகுக் கடையிலிருந்து கரி மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. கடைக்காரர்களுக்குப் பொருளைப்பற்றி அக்கறையில்லை. எஜமானரோ இந்த விஷயங் களில் தலையிடுவதில்லை. நான் இங்கு வந்து இதுவரை ஒருமுறை கூட நல்ல கரியாக வந்தது கிடையாது. கரிமூட்டை வந்து விட்டால் அன்றெல்லாம் அவைகளை உடைத்துச் சரிப்படுத்தி ஒழுங்காக வைப்பதற்கே நேரம் சரியாகிவிடும். அப்படியே கும் மட்டியில் வைத்து எரிக்கமுடியாது, அதிகமாக உடைத்தால் தூளாகி ஒன்றிற்கும் பயன்படாமல் போய்விடும். பிறகு எஜமானரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதனால்தான் அத்தனை ஜாக்கிரதையுடன் கரிக்கட்டையை ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டி இருக்கிறது.”

“சிறிய சுத்தியாக வாங்கி வைத்துக்கொண்டால் கரிக் கட்டிகளை வீணாக்காமல் உடைத்துப் போடுவதற்குச் சௌகர்ய மாக இருக்கும். உங்களுக்கும் இத்தனை கஷ்டம் இருக்காது. வேலையும் சீக்கிரத்தில் முடிந்துவிடும்!”

“ஆரம்பத்தில் எஜமானரிடம் அவ்வாறுதான் கூறினேன், ஆனால் அவர் என் யோசனையை ஏற்கவில்லை. கடைசியில் பெருமுயற்சி செய்து ஒரு சிறிய சுத்தியை வாங்கிக் கொடுக்கும் படி செய்தேன்.”

“இப்பொழுது நீங்கள் அதைத்தானே உபயோகித்து வருகிறீர்கள்?”

“இல்லை! அந்தச் சுத்தி காணாமல் போய்விட்டது!”

“எப்பொழுது காணாமல் போயிற்று?”

“சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கரி மூட்டை வந்தது. அப்பொழுதுதான் அதைக் கடைசி முறையாக உப யோகித்தேன். அன்று, அதாவது எஜமானர் மரணமடைந்த தினத்தன்று ஒரு கரி மூட்டை வந்தது. அன்றுதான் அந்த சுத்தியைத் தேடினேன். நான் வைத்த இடத்தில் அது இல்லை. வீடு முழுவதும் தேடினேன்; அகப்படவில்லை!”

“தில்லைநாயகம் வேறு ஏதாவது ஒரு முக்கிய வேலையாக அதை எடுத்துச் சென்று இருக்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படவில்லையா?”

“எங்கு தேடியும் அது கிடைக்காததினால் கடைசியில் எனக்கு அந்தச் சந்தேகம் தான் ஏற்பட்டது. அவர் வீடு திரும்பிய பிறகு அதைப்பற்றிக் கேட்க வேண்டும் என்று எண்ணி இருந் தேன், ஆனால் அதற்குள் தான் அவர் மரணமடைந்து விட்டாரே!”

“தில்லைநாயகம் மாம்பலத்தில் இருக்கும் ஆராய்ச்சி சாலைக்கு அந்தச் சுத்தியை எடுத்துச் சென்று இருக்கலாம் அல்லவா?”

“அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவர் அந்தச் சுத்தியை அன்று காலையில் உடன் எடுத்துச் சென்றாரா என்று எனக்குத் தெரியாது. ஆராய்ச்சிசாலையில் தேடிப்பார்த் தால் அந்த சந்தேகம் நீங்கிவிடும்.”

“அந்தச் சுத்தியை உங்களால் அடையாளம் கண்டு பிடிக்க முடியுமா?”

“எனக்கு நன்றாகத் தெரியும். அதன் கைப்பிடியில்கூட ஒரு சிறிய பிளவு இருக்கும்” என்றாள் காந்திமதி.

துளசிங்கம் தில்லைநாயகத்தின் அறையிலிருந்து கண்டெடுத்த சுத்தியை அவளிடம் காண்பித்தார்,

“ஆமாம். இதுவேதான்! இது எங்கே இருந்தது? எங் கிருந்து கிடைத்தது?” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டாள்.

துளசிங்கம் அதைக் கோட்டுப் பையில் திணித்துக்கொண்டார்.

“தில்லைநாயகத்தின் ஆராய்ச்சி அறையிலிருந்து கண்டெடுத் தேன். தில்லைநாயகம் ஏதோ ஒரு முக்கிய காரணத்துடன் இதை அங்கு எடுத்துச் சென்றிருக்கிறார். குற்றவாளி இதைப் பயன் படுத்திக்கொண்டு இருக்கிறான். இதன் மூலம் தான் ஆதிகேச வனின் அறையில் இருந்த ஆராய்ச்சிக் கருவிகளையும் பழுதாக்கி இருக்கிறான் என்று எண்ணுகிறேன். நான் நினைத்தது போல் இந்தச்சந்திப்பு மிகவும் பலனுள்ளதாக இருக்கிறது. இந்தச்சுத்தி குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்கு உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பிறகு நான் உங்களைச் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார் துப்பறியும் துள சிங்கம்.

– தொடரும்…

– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *