ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 15,467 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4

காலை நேரம். ஓட்டலில் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்த ஓட்டலின் முதலாளி ரகுராமன் துப்பறி யும் துளசிங்கத்தை அறிந்திருந்தபடியால் அவர் ஓட்டலுள் நுழைந்தவுடன், அருகில் சென்று அவரை உபசரித்தார். துப்பறி யும் துளசிங்கம் ஆரஞ்சுக் கிரஷைக் கொண்டு வரச்சொல்லி அதை உறிஞ்சிய வண்ணம் தான் வந்த விஷயத்தை ஆரம்பித்தார்.

முதல் நாள் மாலை தன் ஓட்டலில் சிற்றுண்டி புசித்த இரு வரில் ஒருவர் திடீரென்று இறந்து விட்டதும், மற்றொருவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து திடுக்கிட்டுப் போனார் ரகுராமன்! ஓட்டலின் நல்ல பெயர் கெட்டுவிடப் போகிறதே என்று அஞ்சினார் அவர்.

துளசிங்கம் குறிப்பிட்ட இரண்டு ஆசாமிகளையும் அவருக்குத் தெரியும். வழக்கமாக அவர்கள் அந்த ஓட்டலுக்கு வந்து கொண்டிருந்தபடியால்தான் அவ்விருவரையும் அவர் அறிந்திருந்தார், ஓட்டலில் எந்தப் பொருளும் தன் கண்முன்னாலேயே தயாரிக் கப்படுகின்றன வென்றும், எந்தவிதமான விஷப்பொருளும் கலக் கப்படுவதற்கு வழியில்லை என்றும் கூறினார். பிறகு துளசிங்கத்தை ஓட்டலின் பின்புறமாக அழைத்துச் சென்று, சாமான்கள் வைக்கும் அறையிலிருந்து சிற்றுண்டி தயாரிக்கப்படும் இடம் வரையில் காண்பித்தார். எந்தெந்த பொருள்கள் எப்படி எப்படி தயாரிக்கப்படுகின்றன, யார் யார் என்னென்ன வேலைகள் செய்கிறார்கள், ஒவ்வொரு பொருளும் தயார் செய்யப்பட்ட பிறகு எவ்வாறு வினியோகம் செய்யப்படுகின்றன என்பவைகளைக் கூறினார். அத்துடன் ஒவ்வொரு தின்பண்டமும் தயாரானவுடன் தான் அதை ருசி பார்த்த பிறகுதான் வெளியே கொண்டுவரப் படுவதாவும் கூறினார். ஓட்டல் முதலாளி கூறிய விளக்கம் திருப்திகரமாக இருந்தபோதிலும் ஏன் அந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதுதான் அவருக்குப் புரியாத புதிராக இருந்தது! இருவரும் சிற்றுண்டி புசித்துக் கொண் டிருக்கும் சமயத்தில் குற்றவாளி அவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு அவர்களின் சிற்றுண்டியில் விஷத்தைக் கலந்திருக்கலா மல்லவா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஆதிகேசவனும் தில்லைநாயகமும் ஆறரை மணிக்கு ஆராய்ச்சிசாலையை விட்டுப் புறப்பட்டு இருக்கிறார்கள். இரவு எட்டுமணி சுமாருக்குத்தான் இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். ஆராய்ச்சிச்சாலை இருக்கும் உஸ்மான் ரோடுக்கும் பாண்டி பஜாரில் இருக்கும் ஓட்டலுக்கும் சுமார் இரண்டு பர்லாங்கு தூரம்தான் இருக்கிறது. ஆகவே அந்த ஒன்றரை மணி நேரம் அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? ஓட்டலில் தான் விசாரித்த விஷயங்களை டைரியில் குறித்துக்கொண்டு ஆதிகேசவனைப் பார்க்கப் புறப்பட்டார் துளசிங்கம்.

மைலாப்பூர் பரமசிவநாடார் வீதியில் ஆதிகேசவன் வசித்து வந்த வீடு கிளிக்கூண்டைப்போல் சிறியதாக இருந்தது. அந்த வீட்டின் முன்புறமிருந்த காலிங்பெல்லின் விசையை அழுத்தினார் துள்சிங்கம். மறுவினாடி வீட்டினுள் இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்தாள். ஆதிகேசவன் உடம்பு சரியாகி இருக்கும் என்று எண்ணி இருந்தார் அவர். ஆனால் நர்ஸைப் பார்த்தவுடன் அவருடைய உடல்நிலை மோசமாகி விட்டதோ என்று அஞ்சினார்.

“நான் அவசரமாய் ஆதிகேசவனைப் பார்க்கவேண்டும்” என்றார் அவர் பரபரப்பான குரலில்.

“அவர் உடல் நிலை மோசமாய் இருக்கிறது. அவர் பூரண ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று டாக்டர் உத்தரவிட்டிருக்கிறார்” என்றாள் அந்த நர்ஸ்.

“நான் துப்பறியும் இலாகாவைச் சேர்ந்தவன். அவர் ஒரு முக்கியமான விஷயம் ஒன்றை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அதற்காக நான் உடனே அவரைப் பார்த்தாகவேண்டும்” என்றார் துளசிங்கம்.

“ஓ, அப்படியா? தன் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு துப்பறிபவரை நியமித்திருப்பதாயும், அவருடைய வரு கையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் சொல்லிக் கொண்டிருந்தார், நீங்கள் தானே அந்தத் துப்பறி பவர்?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம்! அவருடைய பாகஸ்தர் தில்லைநாயகம் இறந்து போன செய்தி அவருக்குத் தெரியுமா?” என்று கேட்டார் அவர்.

“அவர் அதிர்ச்சி அடைந்துவிடப் போகிறாரே என்று அந்த விஷயத்தைச் சொல்லாமல் இருந்துவந்தேன். ஆனால் அவர் காலையிலிருந்து தில்லைநாயகத்தை டெலிபோன் மூலம் அழைத்துத் தன்னுடைய ஆராய்ச்சிக் கருவிகள் நொறுக்கப்பட்ட விஷயத்தைத் தெரிவிக்கும்படி வற்புறுத்த ஆரம்பித்து விட்டார்! நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவர் கேட்கவில்லை. வேறு வழியின்றி நான் விஷயத்தை வெளியிட்டுவிட்டேன். தில்லைநாயகம் இறந்து போய்விட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் அனலிலிட்ட புழுவைப்போல் துடித்தார்; அலறினார்; கட்டிலிலிருந்து புரண்டு கீழே விழுந்துவிட்டார்; மறுகணம் மூர்ச்சையாகி விட்டார்.”

“அப்படியா? இப்பொழுது எப்படியிருக்கிறது?”

“ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அவருக்கு உணர்வு வந்தது. ஆனால் உடல் நிலை முன்னை விட மோசமாகிவிட்டது. நல்ல சிகிச்சைபெற்று பூரண ஓய்வு எடுத்துக்கொண்டால் தவிர உடம்பு குணமாகாது என்று டாக்டர் சொல்லிவிட்டு ஊசி போட்டுவிட்டுப் போயிருக்கிறார். அதிகமாக அவரைச் சிரமப்படுத்தாமல் விரைவில் உங்கள் பேச்சை முடித்துக்கொண்டு வந்து விடுங்கள்” என்று கூறினாள் நர்ஸ்.

துப்பறியும் துளசிங்கம் வீட்டினுள் நுழைந்து ஹாலிற்குப் பக்கத்தில் இருந்த அறையினுள் பிரவேசித்தார். கண்களை மூடியவண்ணம் கட்டிலில் படுத்திருந்தார் ஆதிகேசவன். முதல் நாள் இரவு பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. சிலமணி நேரங்களுக்குள் அவர் எவ்வளவு மாறிவிட்டார் என்பதை நினைக்கும்போது அவருக்கு மிகவும் அனுதாபமாக இருந்தது. விஷக்கலப்பினால் ஏற்பட்ட கோளாறும், தன்னுடைய பாகஸ்தரின் அதிர்ச்சியும் சேர்ந்து அவருடைய உடல்நிலையை மோசமாக்கி இருக்கின்றன என்பதை உணர்ந்துகொண்டார் துளசிங்கம்.

கட்டிலில் படுத்திருந்த ஆதிகேசவன் தன் அறையினுள் காலடியோசை கேட்டுக் கண்களைத் திறந்தார். துப்பறியும் துளசிங்கத்தைக் கண்டவுடன் அவருடைய முகம் சற்று மலர்ந்தது. தலையை அசைத்து அவரை வரவேற்று சற்றுத் தூரத்தில் இருந்த நாற்காலியில் அமரச்செய்தார்.

“நான் உங்களுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும் என்று எண்ணியிருந்தேன். நீங்களாகவே என்னைப் பார்க்க வந்தது குறித்து மகிழ்ச்சி. என்னுடைய ஆராய்ச்சிக் கருவிகள் நொறுக்கப் பட்டிருக்கின்றன. என்னுடன் ஒத்துழைத்த என் நண்பர் தில்லை நாயகமும் மரணமடைந்து விட்டார். அவைகளை நினைக்கும்போது என் மனம் வேதனையினால் வெடித்துவிடும்போல இருக்கிறது” என்று மெலிந்த குரலில் கூறியவண்ணம் தன்னையும் மீறி வந்த துயரத்தை அடக்கிக்கொண்டார் ஆதிகேசவன்.

“உங்கள் நண்பர் தில்லைநாயகம் ரத்தத்தில் விஷக்கலப்பு ஏற்பட்டு இறந்து போனதாகத் தெரியவருகிறது. ராயப் பேட்டை ஆஸ்பத்திரியில் அவரைச் சிகிச்சை செய்த டாக்டரும் விஷக்கலப்பினால் தில்லைநாயகத்தின் வயிற்றில் ஏற்பட்ட கோளாறு அதிகமாகி அவர் இறந்துவிட்டதாக ரிபோர்ட்டு எழுதி அனுப்பியிருக்கிறார்”.

“என்ன? அவருடைய ரத்தத்திலும் விஷக்கலப்பு ஏற்பட்டிருந்ததா?”

“ஆமாம்! உங்கள் இருவரையும் கொலை செய்ய யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள். நீங்கள் பிழைத்து விட்டீர்கள். உங்கள் நண்பர் இறந்துவிட்டார். அது விஷயமாய் உங்களை விசாரிக்கத்தான் வந்திருக்கிறேன். ஓட்டலில் சிற்றுண்டி புசிக்கப் பட்ட பிறகு இருவருடைய உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக் கிறது. ஆகவே அதற்கு முன்பு நடந்த விஷயங்களை நான் அறிய விரும்புகிறேன். சிற்றுண்டி புசிக்க நளினா கேபிற்குச் செல்ல வேண்டும் என்று யார் முதலில் கூறியது?” என்று ஆரம்பித்தார் துளசிங்கம்.

“நான் எந்த ஓட்டலுக்கு வேண்டுமானாலும் செல்வேன். மேலும் ஒரே ஓட்டலுக்குச் செல்வதும் எனக்குப் பிடிக்காது. மாறுதல் வேண்டும் என்று தினம் ஒரு ஓட்டலுக்குப் போவேன்! ஆனால் தில்லைநாயகம் அப்பேர்ப்பட்டவர் அல்ல ; சென்னையில் எத்தனையோ ஓட்டல்கள் இருந்தபோதிலும் நளினா கேப்தான் அவருக்கு பிடித்தமான ஓட்டல். அந்த ஓட்டலில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களைப்பற்றி அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொண்டே யிருப்பார். அன்று மாலை நாங்கள் இருவரும் ஆராய்ச்சிச் சாலையைவிட்டு வெளியே வந்தவுடன் அவர் தான் நளினா கேபிற்குப் போகலாம் என்று கூறினார், அதனால் தான் நாங்கள் அங்கு புறப்பட்டோம்.”

“நீங்கள் இருவரும் எந்த வழியாகச் சென்றீர்கள்?”

“இருவரும் பனகல் பார்க்கினுள் புகுந்து பாண்டி பஜா ருக்குச் சென்றோம்.”

“வழியில் யாரையாவது சந்தித்தீர்களா? யாருடனாவது பேசினீர்களா?”

“பார்க்கினுள் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் எங்கள் இரு வரையும் யாரோ ஒருவன் பின்தொடர்ந்து வருவது போன்ற சந்தேகம் ஏற்பட்டது. நாங்கள் சற்று நிதானித்ததால் அவனும் நிதானித்தான். நாங்கள் நடந்தால் அவனும் நடந்தான். இந்த விஷயத்தை தில்லைநாயகத்தினிடம் தெரிவிக்கவேண்டும் என்று தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் தில்லைநாயகம் அப்பொழுது கலவரமடைந்த முகத்தோற்றத்துடன் காணப் பட்டபடியால் நான் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை. பனகல் பார்க்கைக் கடந்து வெளியே வந்து நின்றவுடன் வலது பக்கமாக இருந்த ஓர் ஐஸ்கிரீம் பார் என் கண்ணில் பட்டது. அங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் எனக்குப் பிடித்திருந்தபடியால் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று சொன்னேன். அவர் என்னு டைய யோசனையை ஏற்றுக்கொண்டார். உடனே நாங்கள் இருவரும் அந்த ஐஸ்கிரீம் பாருக்குச் சென்றோம். இரண்டு ஐஸ்கிரீம்களைக் கொண்டுவரச் சொன்னோம். அந்தச் சமயத்தில் நாகரிக உடைகள் அணிந்த வாலிபன் ஒருவன் அந்தக் கடையி னுள் நுழைந்தான். எங்களைப் பனகல் பார்க்கில் பின்தொடர்ந்து வந்த ஆசாமி அவனாகத்தான் இருக்கவேண்டும் என்று நான் முடிவு செய்துகொண்டேன். அதற்கேற்றாற்போல் கடையினுள் நுழைந்த அந்த வாலிபன் எங்கள் இருவருக்கும் மத்தியில் வந்து நின்று, “நீங்கள் தானே மிஸ்டர் தில்லைநாயகம்?” என்று மெல்லிய குரலில் கேட்டான். அந்த வாலிபன் யாரென்று அவருக்குப் புரியவில்லை. ‘ஆமாம், நான் தான்’ என்றார் அவர். ‘நான் உங்க ளுடன் சில வார்த்தைகள் பேசவேண்டும். கொஞ்சம் வெளியே வருகிறீர்களா?’ என்று விநயமான குரலில் கேட்டான் அவன். தில்லைநாயகம் சற்றுத் தயங்கினார். ஆயினும் ஒருவிதத் தைரியத் துடன் எழுந்து அந்த வாலிபனுடன் சென்றார். அவ்விருவரும் வாசல் பக்கத்தில் இருந்த படிக்கட்டில் நின்று பேசிக்கொண் டிருந்தபடியால் உள்ளேயிருந்தவாறே அவர்களை என்னால் நன்கு பார்க்க முடிந்தது. அந்த வாலிபன் கரங்களையும் தலையையும் அசைத்த வண்ணம் அவரைத் திருப்திப்படுத்த முயலுபவன் போல் ஏதோதோ சொல்லிக்கொண்டிருந்தான். தில்லைநாயகம் தலையை லேசாக அசைத்த வண்ணம் அவ்வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர, ஒன்றும் பதில் பேசவில்லை. அந்த வாலிபன் தன் பேச்சை நிறுத்தினான். ‘முடியாது! கண்டிப் பாக முடியாது’ என்று உரத்த குரலில் கூறிவிட்டு விரைந்து பாருக்குள் வந்துவிட்டார் தில்லைநாயகம். அந்த வாலிபன் அவரைப்பார்த்து மௌனமாகப் புன்னகை புரிந்தான். ஏதோ ஒருவித முடிவிற்கு வந்தவன் போலத் தலையை அசைத்துவிட்டுச் சென்றுவிட்டான். தில்லைநாயகத்தின் முகத்தில் எள்ளும் கொள் ளும் வெடிக்கும்போல் இருந்தன. அந்த வாலிபனின் சந்திப்பு அவருடைய கோபத்தைக் கிளறிவிட்டிருக்கிறது என்று நான் யூகித்துக்கொண்டேன். அந்த வாலிபன் யார், அவன் என்ன பேசினான் என்பவைகளை நான் விசாரிக்கவில்லை. அவரும் அதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லை. சிறிதுநேரத்திற்குள் நாங்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு விட்டோம்!”

“அந்த வாலிபனின் அங்க அடையாளங்களைக் கூற முடியுமா?”

“தூரத்திலிருந்து தான் இரண்டொரு நிமிடங்கள் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆகவே எவ்வாறு நான் அவனைப் பற்றிக் கூறமுடியும்?”

“அது சரி! நீங்கள் மறுபடியும் அந்த வாலிபனைப் பார்த்தீர்களா?

“ஆமாம். நாங்கள் இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வந்தபோதும் அங்கும் அவன் எங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் முதல் முறையைப்போல் எங்கள் அருகில் வரவில்லை. தில்லைநாயகத்தினிடம் பேசவும் அவன் முயற்சிக்கவில்லை. தில்லைநாயகம் டாக்ஸியில் அடையாறுக்குப் புறப்பட்டவுடன் அவனும் ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்துகொண்டு புறப்பட்டு விட்டான்.”

“டாக்ஸியின் நம்பரைச் சொல்ல முடியுமா?”

“நான் அதைக் கவனிக்கவில்லை. விர்ரென்று பறந்து தில்லை நாயகத்தின் வண்டியைப் பின்பற்றிச் செல்ல ஆரம்பித்து விட்ட து!”

“அது சரி! ஐஸ்கிரீம் பாரிலிருந்து புறப்பட்டு ஓட்டலுக்கு நீங்கள் இருவரும் நேராகச் சென்றீர்களா? அல்லது வேறு எங் காவது போனீர்களா?”

“ஐஸ்கிரீம் பாரிலிருந்து புறப்பட்டு நடைபாதையில் நடந்து சென்ற நாங்கள் பாண்டிபஜாரில் இருந்த ஒரு மருந்துக் கடையினுள் சென்றோம்.”

“மருந்துக் கடைக்கா? ஏன் சென்றீர்கள்?”

“தில்லைநாயகத்திற்குத் தொண்டை கட்டிக்கொண் டிருந்தது. நாலைந்து நாட்களாக இருமலினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். தொண்டைக் கட்டைப் போக்குவதற்காக அவர் குறிப்பிட்ட மாத்திரை ஒன்றைப் புசித்துவந்தார். அந்த மாத்திரைகளை வாங்குவதற்காகத்தான் மருந்து கடைக்குச் சென்றார்.”

“இருமலினாலும் தொண்டைக் கட்டினாலும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த அவர் எவ்வாறு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்குச் சம்மதித்தார்? அது அவருடைய நோயை அதிகப்படுத்தி இருக்குமே?”

“எனக்கு ஐஸ்கிரீம் என்றால் உயிர். குளிர்காலத்தில்கூட நான் அதைச் சாப்பிடுவேன். என் உடம்பிற்கு அது ஒன்றும் செய்யாது. அதனால்தான் ஐஸ்கிரீம் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. நான் ஐஸ்கிரீம் பாருக்குச் செல்ல வேண்டும் என்று கூறியவுடன் என்யோசனையை ஏற்றுக்கொண்டு விட்டார். அவர் இருமல் நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதைப் பற்றி எச்சரிக்கை செய்தேன். ஐஸ்கிரீம் ஒன்றும் செய்யாது என்றும், சூட்டைக் கொண்டு சூட்டைத் தணிக்கவேண்டும் என்று சொல்வதுபோல் குளிர்ச்சியான பொருள்களினாலேயே உடம்பில் இருக்கும் குளுமையைப் போக்கவேண்டும் என்றும் வேடிக்கையாகக் கூறினார்! ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு அவ ருடைய உடல்நிலை மோசமாகி விட்டதோ என்னவோ! அதனால் தான் மாத்திரைகளை வாங்க அவர் மருந்துக் கடைக்குச் சென்றிருக்கலாம்”.

உஸ்மான் ரோட்டிலிருந்து பாண்டி பஜாருக்குப் போய்ச் சேருவதற்கு அவர்களுக்கு ஏன் ஒன்றரை மணி நேரமாகியது என்று இப்பொழுது துப்பறியும் துளசிங்கத்திற்கு விளங்கி விட்டது. ஆனால் தில்லைநாயகத்தைச் சந்தித்த அந்த வாலிபன் யாரென்பதுதான் புரியாத புதிராக இருந்தது! வக்கீல் கண் டெடுத்த கடிதத்தைப் படித்த பிறகு விஜயவல்லியின்மீது சந் தேகம் ஏற்பட்டது. இப்பொழுது அந்த வாலிபன்மீது அதிக மான சந்தேகம் உண்டாகியது!

“மிஸ்டர் துளசிங்கம்! உங்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லி உங்கள் சந்தேகங்களைப் போக்கிவிட்டேன். அதற்குப் பிரதியாக நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும்.”

“என்னால் முடிந்த உதவியைச் செய்யக் காத்திருக்கிறேன்.”

“தில்லைநாயகத்தின் திடீர் மரணம் எனக்குப் பெரும் கவலை யைக் கொடுத்திருக்கிறது. ஆனால் அவருடைய ஆராய்ச்சிக் குறிப்பு களைப் பற்றித்தான் இப்பொழுது அதிகமாக நான் கவலைப்படு கிறேன். அவர் தன்னுடைய குறிப்புகளை அநேகமாக தன்னு டைய மேசை டிராயரில்தான் வைத்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். அவைகள் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்தக் குறிப்புகள் வேறு யாருடைய கையிலா வது கிடைத்துவிட்டால் நாங்கள் இவ்வளவு காலம் செய்த முயற்சிகள் அனைத்தும் பாழாகிவிடும். அந்தக் குறிப்புகள் வேறு ஒருவரிடமும் கிடைக்காதபடி செய்யவேண்டுமே?” என்று வேண்டினார் ஆதிகேசவன்.

அதுவிஷயமாய்த் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாய்க் கூறிவிட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார் துப்பறியும் துளசிங்கம்.

– தொடரும்…

– ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?, முதற் பதிப்பு: பெப்ரவரி 1957, தி லிட்டில் ப்ளவர் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *