என் கண்ணுக்கெதற்கேயே ….அவன் ஹீரோ இருசக்கர வாகனத்தில் கிளம்ப….
‘நான் போடா.. போ !’- கறுவினேன்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பதுபோல் என்னை உசுப்பிவிட்டுச் செல்கின்றவனே அவன்தான். !
ஏதோ வறுமை… வைத்த டீக்கடையில் நஷ்டம். ஆபத்பாந்தவனாக அக்கம் பக்கம் கடன் கொடுக்கும் அந்த தவணைக்காரர் கண்ணில் பட்டார்.
பணம் வேண்டுமென்று கேட்டேன்.
என் கடை, வறுமை, தாடி, மீசை, அழுக்கு, இயலாமையைப் பார்த்து…
“யோக்கியமாக நடப்பதாக இருந்தால் உதவி செய்கிறேன் !” சொன்னார். வட்டிக்குத்தான். !
“சரி”நான் தலையாட்ட…
“வீட்டுக்கு வாங்க..”என்று சொல்லிவிட்டு அகன்றார்.
அவர் வீடிருக்கும் இடம் புறநகர்ப்பகுதி. மூன்று வீடுகள் சேர்ந்தாற்போல் உள்ள சிறு காலனியில் ….. முதல் வீட்டில் குடி இருக்கிறார். மனைவி மக்கள் இல்லாமல் தனியே வசிக்கிறார். அவர்கள் இருந்தால் தொல்லையோ என்னவோ தெரியவில்லை.
அந்த ஏரியாவில் அவர் இருக்கும் அந்த சிறு காலனிதான் கடைசி குடியிருப்பு. அதற்கு கிழக்கு, மேற்கு பொட்டல் வெளி. இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் அவைகள் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு குடியிருப்புகளாகிவிடும். வடக்கு சவுக்குத் தோப்பு. காற்றில்…’ ஹோ’ சத்தம். வெட்ட இரண்டு மூன்று வருடங்களாகும். தெற்கில் சிறிது தொலைவு தள்ளி வீடுகள். தெரு ! அப்புறம் ஊர்.
நான் அவரைத் தேடி சென்றபோது வீட்டில் ஆளில்லை.
‘சரி வரட்டும் !’ – என்று நினைத்து வாசலில் அமர்ந்தேன்.
அடுத்த வீடு பூட்டி இருந்தது. அதற்கும் அடுத்த கடைசி வீட்டில் இரண்டு ஆண் குழந்தைகள் படிக்கும் சத்தம் கேட்டது.
சிறிது நேரத்திற்கு முன்…. இப்போது என் கண்ணுக்கெதிரில் செல்லும் அவன் வந்தான். சாலை ஓரம் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான். என்னைத் தாண்டி காலனி கடைசி வீட்டிற்குச் சென்றான்.
படித்த சிறுவர்கள்…
“அப்பா !”என்று அழைத்து கதவைத் திறந்தார்கள்.
அவன் உள்ளே சென்றான். சிறிது நேரம் கழித்து திரும்பினான்.
பத்து வயது. ஐந்து வயது சிறுவர்கள் வீட்டு வாசல் படியில் நின்று டாடா காட்டி அப்பனை வழியனுப்பினார்.
அவனும் பதிலுக்கு டாடா காட்டி…
“சரி. சரி. உள்ளாற போங்க. பரீட்சைக்கு நல்லா படிங்க. வழக்கம் போல் கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டு பத்திரமா இருங்க. யார் வந்து அழைச்சாலும் ஜன்னலைத் திறந்து பார்த்துட்டு தெரிந்தவர்களாக இருந்தால் அப்பறம் கதவைத் திறங்க . அப்பா அலுவலகம் விட்டு வர்றேன். !” சொல்லி நடந்தவன் என்னைப் பார்த்ததும் துணுக்குற்று நின்றான்.
‘ஏன்..?’- நான் திடுக்கிட்டேன்.
“யார் வேணும்..?” விசாரித்தான்.
“தவணைக்காரரைப் பார்க்க வந்தேன் !”என்றேன்.
“சாதாரணமா அவரை இந்த நேரம் பார்க்க முடியாது”என்றான்.
“இல்ல… பதினோரு மணிக்கு என்னை வந்து காத்திருக்கச் சொன்னார்.”
“அப்படியா..? ! உங்க பேரு..?”கேட்டான்.
இவனுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை. பார்த்தது கிடையாது. பழகியது கிடையாது. அப்படி இருந்தும் இப்படி அக்கறையாய் கேட்க காரணம்.? தாடியைச் சொறிந்தேன்.
பளீரென்று மனதில் மின்னல்.
என் யோசனையைப் பார்த்த அவன் சுதாரித்து….
“அவரை பார்த்தால் நீங்க காத்திருக்கறீங்கன்னு சொல்லத்தான் !” சமாளித்தான்.
நானும் சுதாரித்து…..
“பழனிசாமி !”சொன்னேன்.
“ஊர்..?”
“வரிச்சுக்குடி !”
“சரி. பார்த்தா கண்டிப்பா சொல்றேன். !” என்று அடிக்கண்ணால் என்னை ஆழமாக பார்த்து அளந்துவிட்டு தன் வாகனத்தில் ஏறி பறந்தான்.
“அப்படியா சமாச்சாரம்..? போ.. போ…”கறுவினேன்.
அவனுக்கு …..இந்த நினைப்புதான்..!!
‘பையன்கள் தனியாக இருக்கின்றார்கள். நாம் அந்தண்டை நகர்ந்து காணாமல் போனதும் இவன் உள்ளே புகுந்து குழந்தைகள் கழுத்தைத் திருகிப் போட்டுவிட்டு இருப்பதை அள்ளிக் கொண்டு சென்றால்… காவல் நிலையத்தில் ஆளின் ஊர், பேர், அடையாளத்தைச் சொல்லி சுலபமாக மாட்டவைக்கலாமென்கிற நினைப்பில் எல்லாம் கேட்டு விட்டுப் போகிறான். !’
– ஆள் முகத்தைப் பார்த்தாலே அகத்தைக் கண்டுபிடித்துவிடும் எனக்கு ஆள் மன ஓட்டத்தைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன..?!
இல்லையென்றால் அவன் இப்படி அக்கறையாய் விசாரிக்கக் காரணம்..?!
இவன் தவணைக்காரனைப் பார்ப்பானாம். நான் காத்திருக்கிறேன் ! என்று அக்கறையாய்ச் சொல்வானாம்..! எல்லாம் கதை !
இவன் எப்போதும் போல் வீட்டிற்கு வந்து வந்தவேலை முடித்து சிவனே என்று சென்றிருந்தால் எனக்கு இந்த நினைப்பெல்லாம் வந்திருக்காது. விசாரிக்க வந்துதான் மனம் வில்லங்கமாகி விட்டது.
‘நமக்குத் தேவை பணம். அவன் நினைத்துச் செல்வதையே நாம் மெய்யாக்கினால் என்ன.. ?’ – எனக்குள் வில்லங்கம் விகாரமாகி விட்டது. !
ஆள்… உயர்ரக இருசக்கர வாகனம் வைத்திருக்கிறான். கிட்டத்தட்ட ஐயாயிரம் கொடுத்து வாடகை வீட்டில் இருக்கிறான் . கணவனும் மனைவியும் சம்பாதித்தால்தான் இவ்வளவு செல்வ செழிப்பாக இருந்து பிள்ளைகளை இப்படி தனியே விட்டுப் போகமுடியும். வேலையை விட்டு மனைவி அடிக்கடி வரமுடியாத காரணத்தால் வேலை நேரத்தில் கணவன் வந்து பார்த்துச் செல்கிறான். ! – எனக்குப் புரிந்தது.
இந்தச் சிறுவர்களைக் கதவைத் திறக்கச் சொல்வது சுலபம்.
கதவைத் தட்டி…”தண்ணி குடுப்பா !” என்று கேட்டால் கொடுப்பார்கள்.
இவர்கள்தான் அப்பா போகும்போது நான் இங்கே இருப்பதைப் பார்த்தார்களே..! அந்த அறிமுகத்திலேயே கதவைத் திறப்பார்கள்.
படக்கென்று உள்ளே புகுந்து கழுத்தில் கை வைத்தால் குழந்தைகள் உயிர் பொசுக்கென்று போய்விடும். பூஞ்சை உடல்.
‘ஆனால் இதைச் செய்த மறுவினாடி நீ எந்தவித சந்தேகமும் இல்லாமல் உள்ளே இருப்பாய் !’- மனசு எச்சரித்தது.
‘எப்படி..?’
‘அவன்தான் உன்னைப் பற்றி கேட்டு சென்றிருக்கிறானே !’
‘அவன் ஜித்தானென்றால் நான் எத்தன். அவன் விசாரிக்கும்போதே.. என் மனதில் இவன் எதற்காக விசாரிக்கிறான் என்று பட… சபாபதி உண்மைப் பெயரை மறைத்து பழனிசாமி சொன்னேன். வடபாதி பெயரை மாற்றி வரிச்சுக்குடி சொன்னேன். தாடி மீசை முகம். இரண்டையும் எடுத்துவிட்டால் அடையாளம் தெரியாது.!’
‘அடப்பாவி !’யோக்கிய மனசு அலறியது. அப்புறம் கப்சிப் அடங்கிவிட்டது.
எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டியதுதான் ! – எழுந்து அக்கம் பக்கம் பார்த்தேன். மனித நடமாட்டமில்லை.
தவறு செய்யும்போது தடையங்கள் சிக்கக்கூடாது ! நினைப்பில் என்னையே ஒரு சுற்றுச் சுற்றி நோட்டமிட்டேன். கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை. மனித வாடை தென்படுகிறதா…? கண்ணுக்கெட்டிய தூரம் வரை நுகர்ந்தேன். இல்லை. !
நடந்தேன்.
“தம்பிகளா..?”கதவைத் தட்டினேன்.
“யாரு…?”பையன்கள் எச்சரிக்கையாய் ஒன்றாகக் கேட்டு வாசல் ஜன்னல் கதவைத் திறந்தார்கள்.
“தாகமா இருக்கு. தண்ணி தர்ரீங்களா…?”
“இதோ..”
பெரியவன் உள்ளே ஓட…
சின்னவன் கதவைத் திறந்தான்.
உள்ளே பளீர் வெளிச்சம்.
சுவரில்….. மாலை போட்ட பெரிய படம். புன்னகையுடன் பெண் ! முகத்தைப் பார்க்க இதயத்தில் திடீர் வலி.
பெரியவன் தண்ணீர் சொம்பை நீட்ட….
“அந்தப் படத்துல இருக்கிறது உங்க அம்மாவா..?”
“ஆமா…”
‘தாயில்லாப் பிள்ளைகள் !’சுருக் – சாட்டை அடி.
‘இந்தக் குழந்தைகளையா கழுத்தைத் திருகி….’நினைக்க இம்சை….. .
“பிடிங்க மாமா…”
குனிந்து பார்க்க…. எதிரில் நிற்பவன் எண்ணம் தெரியாத கள்ளம்கபடு இல்லாத முகங்கள்.
ச்சே !
சட்டென்று சொம்பை வாங்கி தாகமே இல்லாமல் மடக் மடக்கென்று குடித்தேன்.
வயிறு நிரம்ப. மனதில் பாரம் நீங்க…
“அப்பா வர்றவரைக்கும் பத்தரமா இருங்க…”வாஞ்சையாய்ச் சொல்லி சொம்பைத் திரும்பினேன்.
“சரி மாமா..!”அவர்கள் கதவு சாத்தி தாழ் போட்டார்கள் .
நான் நிம்மதியாய் வந்து தவணைக்காரரைப் பார்த்தேன் .
அவர் தூரத்தில் தன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.