பூச்செண்டு போல ஒரு மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 5,254 
 
 

ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு கொலையை விவரிக்கப் போவதாகச் சொன்ன யேயோ இந்தக் கேள்வியோடு ஆரம்பித்தான். ‘ஆறு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன ஷிமி கிலாடன் என்பவள் உங்கள் மேலாளர் டெர்ரி கில்போர்ட் என்பவரின் மனைவியா?’

‘ஏன், எதற்காகக் கேட்கிறீர்கள்?’

‘உங்களுக்கு சங்கதி தெரியாதா? ஷிமி கிலாடன் சாதாரணமாக இறக்கவில்லை. செதுக்கிய நல்ல மனிதர் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கும் உங்கள் மேலாளர், தன்னுடைய மனைவியைக் கொன்றுவிட்டு இப்போது அப்பாவி போன்று நடித்துக் கொண்டிருக்கிறார்’ என்றான் யேயோ.

நான் இப்படிப் பதிலளித்தேன்.

‘எனது மேலாளரின் மனைவியின் பெயர் ஷிமி கிலாடன் என்பது நீங்கள் இப்போது சொல்லித்தான் தெரியும். என்னுடைய மேலாளரின் மனைவி இறந்துவிட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை; சாத்தியமும் இல்லை. அவளை நான் கண்டதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றாலும் அவள் உயிருடன்தான் இருக்கிறாள்’

அவள், ஷிமி கிலாடன் என்று பெயரிடப்பட்ட அவருடைய மனைவி இப்போதும் உயிருடன்தான் இருக்கிறாள் என்பதை நான் ஏன் உறுதியாகச் சொல்கிறேன் என்றால், அவருடைய கணவனான திரு டெர்ரி கில்போட் அவளுக்காக அடிக்கடி பூச்செண்டு வாங்குவார். அவள் பூச்செண்டை வெகுவாக விரும்புபவள். பூச்செண்டை நானும் அவரும் பூக்கடைக்குச் சென்று தெரிவு செய்வோம். அலுவலகத்தில் யாருக்காவது திருமண நாள் அல்லது பிறந்தநாள் வருகின்றபோது அல்லது மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறுகின்ற போது பூக்கடைக்காரன் ஏலவே அறிந்துகொண்டு ஒரு பூச்செண்டை டெர்ரிக்காகத் தயாராக வைத்திருப்பான். பூச்செண்டு யாருக்காகவென்றால் அவருடைய மனைவிக்காக.

‘நான் அலுவலகத்தில் சந்தோஷமாகப் பணியாற்றுவதை என் மனைவி விரும்புகிறாள். அதனைச் செயலில் காட்டும்படி அடிக்கடி என்னிடம் வேண்டிக் கொள்வாள். நான் வீடு திரும்பும்போது அவளிடம் பூச்செண்டை ஒப்படைப்பேன். ஒவ்வொரு முறையும் பூச்செண்டைப் பெற்றுக்கொண்டு அவள் என்னிடம் ‘நன்றி, நன்றி’ என்று இரண்டுமுறை சொல்வாள்’ என்பார் டெர்ரி.

‘திருமணத்தின் போது மணமகளின் கையில் வைக்கப்படும் பூச்செண்டுகள் மீது தான் அவள் அதிகமாக பிரியம் கொண்டிருக்கிறாள். முக்கியமாக லில்லி, Sweet Peas, Gardenia, Ranunculus, Hydrangeas அல்லது Peony’ என்றும் சொல்லுவார் டெர்ரி. யேயோ இவ்வளவும் உனக்குப் போதுமென்று நினைக்கிறேன். நான் சொன்னேன் அல்லவா, நீ செத்துப் போனதாகச் சொன்ன ஷிமி கிலாடன் இப்போதும் உயிருடன் தான் இருக்கிறாள்.

வேலைக்குச் சேர்ந்த முதல் தினத்திலேயே என்னையும் அழைத்துக் கொண்டு பூக்கடைக்குப் போனவர்தான் டெர்ரி கில்போட். பூச்செண்டுகள் மீது எந்த ஆர்வமும் இல்லாத நான் வசீகரமான நேர்த்தியுடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பூச்செண்டுகளைப் பார்த்து அசந்து போனேன். ‘நான் இன்று சந்தோஷமாக இருக்கிறேன்’ என்றார் டெர்ரி. அன்று தான் அவர் நானறிய முதன்முதலில் பூச்செண்டு வாங்கியது. ‘என் மனைவி இன்று மிகவும் ஆவலோடு என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்’ என்றும் சொன்னார்.

என்றாலும் எனது வியாக்கியானம் எதையும் சட்டை செய்யாது யேயோ தொடர்ந்து சொன்ன கதை என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

‘விசித்திரம் என்னவென்றால் அவருடைய மனைவியின் சடலம் அழகாகப் பூத்துக் குலுங்கும் ஒரு பூங்காவனத்தின் மத்தியிலே கிடந்தது. அது பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவமும் கூட. நீதிமன்றத்திலே நீதிபதியுட்பட அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். ஏனென்றால் கொலைகாரன் பூக்களை ரசிக்கக் கூடிய ஒரு கலைஞனாகவும் இருந்திருக்க வேண்டுமென்பதுதான்’

“இவ்வளவு விஸ்தாரமாக நான் துல்லியமாக சொல்கிறேனென்று நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அந்தக் கொலையின் முக்கியமான சாட்சி நான்தான். கண்கண்ட சாட்சி. அவள் இறக்கும் கடைசித் தருணம் வரை, அதாவது துடிதுடித்து இறுதி மூச்சை விடும்வரை நான் பார்த்துக் கொண்டிருந்தேனே, அது போதாதா? நூறு தடவைகள் கேட்டாலும் அந்தக் கொலையின் ஒவ்வொரு கணத்தையும் நான் இசகுபிசகின்றி விவரிப்பேன்’ என்றான் யேயோ.

யேயோவைப் பார்த்து, ‘நீ சொல்வது வேறு ஆளாக இருக்கக் கூடும்’ என்றும், ‘திரு டெர்ரி கில்போட்டுக்கு அழகான இளம் மனைவி இருக்கிறாள்’ என்றும் (அவள் பூச்செண்டை விரும்புவதால் அவள் அழகியென்று நினைத்துக் கொண்டேன்), ‘அவள் பூச்செண்டுகள் மீது மிகவும் ஆசை கொண்டவள்’ என்றும், ‘திரு டெர்ரி அடிக்கடி அவளுக்காக பூச்செண்டு வாங்கிக் கொண்டு போவார்’ என்றும், ‘அப்படியானால் அவள் யார்?’ என்றும் கேட்டேன் நான்.

‘அவள் அவருடைய புது மனைவியாக இருக்கக்கூடும்’ என்றான் யேயோ.

‘புது மனைவியா, இது எனக்கு புதுக்கதை’ என்றேன் நான்.

‘ஏனெனில் டெர்ரி இறுதியாகப் பணியாற்றிய அலுவலகத்தில் ஒருத்தி அடிக்கடி அவரைச் சந்திக்க வந்து கொண்டிருந்தாள். அவளுடைய பெயர் மியூரினா. அவள்தான் இந்தக் கொலை நடந்ததற்கு அடிப்படைக் காரணமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அவள் எல்லோரையும் கிறங்கடிக்கக் கூடிய அழகியாக இருந்ததாகவும் அவர்களிருவரும் அடிக்கடி பூச்செண்டுகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் நீதிமன்றத்தில் ஒரு சாட்சியம் வந்தது.

‘ யேயோ நீ மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதைக்கு பீடிகை போடுகிறாய்’ என்றேன் நான்.

‘வெறுமனே சுவாரஸ்யத்திற்காக மட்டும் அல்ல, அவரின் மனைவியினுடைய பரிதாபமான முடிவு குறித்தும் மிகவும் கவலைப்பட்ட ஒரு ஜீவன் நான். அதனால்தான் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்பதற்காக அதிக பிரயத்தனம் எடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக டெர்ரி கில்போட் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். அன்றுதான் வாழ்க்கையில் நான் மிகவும் கவலையடைந்த நாள்’ என்று சொன்னான் யேயோ.

மேலும், கொலை நடந்த தினத்திற்கு முந்திய மூன்று இரவுகளும் டெர்ரியின் மனைவி தொடர்ச்சியாக கூச்சலிட்டுக் கொண்டே இருந்ததை அவதானித்ததாகவும், வீட்டிலுள்ள பொருட்களை தூக்கியெறிந்து நொறுக்குவது போன்ற சப்தங்களும் கேட்டதாகவும், ஏதோ கணவன் மனைவிக்கிடையில் மனஸ்தாபத்தால் ஏற்பட்ட சிறிய சச்சரவு என்று நினைத்து கடந்து செல்ல நினைத்தாலும் மனது கேட்கவில்லையென்றும் தான் நீதிமன்றத்தில் சாட்சியளித்ததாகச் சொன்னான் யேயோ.

அதைவிடவும் அவர்களின் நடத்தை, அவன் உட்பட அண்டை வீட்டாருக்கும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் காரணம் அவர்கள் இருவரும் இப்படிச் சண்டை போட்ட சம்பவத்தை அவர்கள் ஒருபோதும் பார்த்ததோ கேட்டதோ இல்லை என்றும் யேயோ சொன்னான். மேலும், யேயோ நீதிமன்றில் இப்படிப் பேசினானாம்.

‘கனம் நீதிபதி அவர்களே, நாங்கள் வசித்த அந்தக் குடியிருப்பில் யாரும் கூச்சலிடுவதாகவோ சச்சரவில் ஈடுபடுவதாகவோ காண்பது கூட மிகவும் அபூர்வம். அது அமைதியானதும் ரம்மியமானதுமான சூழலைக் கொண்டிருந்தது. முக்கியமாக அந்தப் பிராந்தியத்திலேயே நல்ல பெயரைச் சம்பாதித்திருந்த டெர்ரி ஷிமி தம்பதியர் அயலவர்களுடன் மிக்க பண்புடன் பழகினார்கள். அவருடைய மனைவி ஒருபடி மேலே போய் எவரைக் கண்டாலும் புன்னகைத்து வந்தனம் கூறி, ஹாய் சுகமா என்று கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய எல்லாப் பிறந்த நாட்களையும் எங்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டாடுவாள். ஆதலால் தான் ஐயமற இந்த மூன்று நாட்களையும் குடியிருப்பாளர்கள் முற்றாக நிம்மதி இழந்து போயிருந்த நாட்கள் என்று நான் சொல்லுவேன். இவர்கள் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஜோடி இப்படியாகிப் போய்விட்டார்களே என்ற கழிவிரக்கமும் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்’

‘மேலும் நீதிபதி ஐயா அவர்களே, டெர்ரி பொதுவாக எவருடனும் முகம் கொடுத்து பேசாதவனாகவும் அல்லது பேசுவதாக இருந்தாலும் ஓரிரண்டு சொற்களோடு முடித்துக் கொள்பவனாகவும் இருந்தான். நான் சொன்ன களேபரமான இரவுகளை அவன் எப்படிக் கடந்தானென்றால் காலையில் மிகவும் அமைதியாக வேலைக்குச் சென்று மாலையில் அமைதியாகத் திரும்பி வந்து காப்பி ஒரு கோப்பை அருந்தினான்; பத்திரிகையிலே செய்திகளை வாசித்து தனக்குள் சிரித்துக் கொண்டான் இரவிலே எதுவுமே நடைபெறவில்லை என்ற தோரணையில். அவன் நிம்மதியிழந்து சஞ்சலத்தில் இருக்கிறான் என்ற எந்த அறிகுறியும் முகத்தில் இல்லை. ஏதோ எங்கோவொரு வீட்டில் கூச்சலும் குழப்பமும் நடப்பது போல் அவன் போக்கு இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் அவன் நெஞ்சழுத்தக்காரனாக இருந்தான்’

‘நீதிபதி ஐயா அவர்களே, கொலை நடந்த தினத்தில் பின்வரும் சம்பவங்கள் நிகழ்ந்தன:

கொலை நடந்த தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஷிமி கலவரத்தோடு வீட்டை விட்டு வெளியேறிப்போவதை நான் பார்த்தேன். உண்மையில் அவளுடைய கண்களில் மரணபயம் இருந்தது. அவள் மிக வேகமாகக் காரை கராஜிலிருந்து எடுத்து தாறுமாறாக ஓட்டிக்கொண்டு போனாள். அவள் விபத்தில் சிக்கி மாண்டு விடுவாளோ என்று நான் பயந்து போனேன். சுமார் பத்து நிமிடங்கள் கடந்ததும் டெர்ரி தனது காரை எடுத்துக்கொண்டு அதேபோல் வீட்டைவிட்டு வெளியேறினான். ஏதோ பயங்கரமான சம்பவம் ஒன்று நடக்கப் போகிறது என்று நான் பதற்றப்பட்டுக் கொண்டிருந்த சமயம் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது ஷிமியிடமிருந்து.’

‘நீதிபதி ஐயா அவர்களே, அவள் பதற்றத்துடன் யேயோ என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கிறது. தயவுசெய்து என் வாழ்க்கையைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினாள். அவள் மூச்சுத் திணறுவது அவள் சிரமப்பட்டுப் பேசுவதைக் கொண்டு என்னால் உணர முடிந்தது. ஷிமி இன்னும் என்னவெல்லாமோ கதைத்துக் கொண்டிருந்தாலும், எனக்கு இந்த வாக்கியம் மட்டுமே ஓரளவு தெளிவாகக் கேட்டது. எனக்கு மீதியைக் காது கொடுத்துக் கேட்க நேரமிருக்கவில்லை. எப்படியோ ஆபத்தில் சிக்கியிருக்கும் அவளைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக என்னுடைய காரை வேகமாக ஓட்டிக் கொண்டு நானும் போனேன்.நான் மிக வேகமாக பூங்காவனத்துக்குப் போய்ச் சேர்ந்தாலும் துரதிர்ஷ்டவசமாக எல்லாம் முடிந்து போயிருந்தது. அவள் இறந்து கொண்டிருந்தாள். அவளுடைய நெஞ்சுக்குழி மேலேயும். கீழேயும் துடிதுடித்து மூச்சுவிட அவஸ்தைப் படுவதிலிருந்து அவளுடைய இறுதி முடிவை அறிந்துகொண்டேன். அவளை டெர்ரி எப்படிக் கொலை செய்தாரென்று எனக்குத் தெரியாது. அவரின் கையில் எந்த ஆயுதமும் இருக்கவில்லை.ஆனால், நான் சென்ற வேளையில் டெர்ரி அவளுடைய மார்புகளில் கை முஷ்டியால் ஓங்கிக் குத்திக் கொண்டிருந்தார்’ (என்றாலும் பிணப் பரிசோதனை அறிக்கையின்படி விலாவெலும்புகள் முறிந்த அறிகுறிகள் எதுவும் சடலத்தில் இருக்கவில்லை)

‘முதலாவது கேள்வி ஷிமி கிலாடனின் தொலைபேசி இலக்கம் எப்படி உங்களுக்கு கிடைத்தது?’ எதிர்தரப்பு வக்கீல் கேட்டார்.

‘என்னுடைய தொழில் வீடுகளை வாங்கி விற்பது. ஷிமி நல்ல குடியிருப்பாளர்கள் இருக்கின்ற சுற்றாடலில் சிக்கனமான வீடொன்றைத் தேடிக் கொண்டிருந்தாள். அவளுடைய அந்த வீட்டை நான்தான் வாங்கிக் கொடுத்திருந்தேன்’

‘அவள் அடிக்கடி நள்ளிரவு வேளைகளில் கிளப்புகளுக்குப் போவதாகவும் அல்லது நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வந்து குடித்து கும்மாளமடிப்பதாகவும் அரசல்புரசலாக கதைகள் இருக்கின்றனவே. அதனைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

‘அவள் கொஞ்சம் ஜாலி டைப். அதைத் தவிர வேறொன்றுமில்லை. குடித்து கும்மாளமடிப்பது என்று சொல்வதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கூற்று. யாரின் பிறந்த நாளையோ திருமண ஆண்டு விழாவையோ வீட்டிலோ வெளியிலோ கொண்டாடுவாள், அவ்வளவுதான். ஒன்று உண்மை என்று ஒத்துக்கொள்கிறேன் அவளுக்கு நண்பிகள் அதிகம்’ ‘அவளுடைய கணவனான டெர்ரி இதைப்பற்றி ஒன்றும் கேட்பதில்லையா?’

‘டெர்ரிக்கு இப்படி விழாக்கள் கொண்டாடுவதில் எந்த ஆர்வமுமில்லை. பங்கு பெறுவதும் இல்லை. அதற்காக அவளை ஒருபோதும் தடுத்ததும் இல்லை. அவர் ஒரு நேர்மையான மனிதராகத் தோற்றமளித்தார். அது மட்டுமல்ல அவர் மனைவிக்கு தாராளமாக சுதந்திரம் கொடுத்திருந்தார் என்றுதான் கூற வேண்டும்’

‘இந்த அளவிற்கு அவளைப் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே, அவள் மீதான அதீத அக்கறைக்கு விஷேட காரணம் எதுவும் இருக்கிறதா??’

‘நான் சொல்லிய அத்தனை விவரங்களையும் அந்தக் குடியிருப்பிலுள்ள அத்தனை மனிதர்களும் அறிந்து வைத்திருந்தார்கள் என்பதுதான் உண்மை. நண்பன் என்ற ரீதியில் என்னிடம் சற்று மனந்திறந்து கதைப்பாள். மற்றும்படி அவள் மிகவும் நல்லவள் அவ்வளவுதான்’

‘கணவனால் அவள் கொடுமைப்படுத்தப்பட்டாளா?’

‘நிச்சயமாக இல்லை’

‘அவள் தன்னுடைய கணவனைப் பற்றி எப்போதாவது மோசமாகக் குறை கூறியிருக்கிறாளா?’

‘ஒருபோதுமில்லை. அவர்கள் கணவன் மனைவியாக மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கிடையில் எந்த மனக்கசப்போ பிரிவினையோ இருக்கவில்லை’

‘அப்படியானால் அவளை டெர்ரி கொலை செய்ததற்கான காரணம் என்னவாக இருக்கும்?’

‘அதுதான் புரியாத புதிராகி நானும் குழம்பிப் போயிருக்கிறேன். தன் கணவனால் தனக்கு ஆபத்து என்று அவள் ஒருபோதும் சூசகமாகக் கூட சுட்டிக் காட்டியதில்லை’

‘மியூரினா என்பவள் யார்?’

‘அவளின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அறிந்திருப்பதைத் தவிர விஷேமாக எனக்கு எதுவும் தெரியாது. மியூரினா என்ற இளம்பெண் டெர்ரியை அடிக்கடி சந்திப்பதாக ஷிமி என்னிடம் ஒருமுறை கூறியிருந்தாள் .அதுவும் சாதாரணமான ஒரு கூற்றாகச் சொன்னாளேயொழிய குற்றச்சாட்டாக அல்ல. அதுவும் ஒரேயொரு தடவை மாத்திரமே’

‘மியூரினாவுக்கும் டெர்ரிக்கும் இடையில் ஏதாவது தொடர்புகள் இருக்கக் கூடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?’

‘கொலையொன்று நடந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது நம்புவதற்கு வாய்ப்புகள் உண்டு. வரலாறு நெடுகிலும் இத்தகைய தகாத தொடர்புகளால் தான் கொலைகளும் குழப்பங்களும் நிகழ்ந்திருக்கின்றன. எனவே, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்’

***

பூக்களையும் புத்தகங்களையும் ஆழமாக நேசிக்கின்ற டெர்ரி கில்போட் என்ற விசித்திரமான மனிதருக்கும், பூக்களையும் புத்தகங்களையும் முற்றாக வெறுக்கின்ற ஷிமி கிலாடன் என்ற விசித்திரமான இளம் பெண்ணுக்கும் விசித்திரமான ஒரு திருமணம் நடக்க இருக்கிறது.

டெர்ரி கில்போட்டின் தாய் ஷிமி கிலாடனைச் சந்தித்து அந்தத் திருமணத்தை நிறுத்துவதற்காக டெர்ரி கில்போட் தொடர்பில், ‘என் மகன் உன் ஜாலியான வாழ்கைக்குப் பொருத்தமானவன் இல்லை என்றும், நல்லவனாக இருப்பது மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானது அல்ல என்றும், அவன் வெறும் மூடி வகையறா என்றும், எந்த வேளையிலும் வார்த்தைகளைக் கொட்டாது உம்மென்று இருப்பவனென்றும், பிறந்த நாளைக் கூட கொண்டாடுவதில்லையென்றும், எப்போதும் இரவு வேளைகளில் ஆகாயத்தைப் பார்த்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பவன் என்றும், புறக்கிருத்தியங்களை அவன் ஒருபோதும் விரும்புவதில்லை என்றும், அவனுக்கு நண்பர்கள் என்று சொல்ல யாருமில்லையென்றும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.

ஷிமி கிலாடனின் தாய் அவள் பங்கிற்கு டெர்ரி கில்போட்டிடம் சென்று, பின்வருமாறு சொன்னாள்.

‘நீங்கள் என் மகள் ஷிமியை மணமுடிப்பது குறித்து எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னுடைய கவலையெல்லாம் உங்களோடு அவள் நெடுங்காலம் பயணிக்க முடியுமா என்பதைப் பற்றித்தான். ஏனென்றால், உங்களைப் போல் அவள் எதையும் சீரியஸாக எடுப்பவள் அல்லள். அவள் வெறும் விளையாட்டுச் சிறுமி. அப்படித்தான் அவள் வளர்ந்தாள். எப்போதும் ஜாலியாக இருக்க விரும்பும் வகையறா அவள். அடிக்கடி தோழிகளோடு உல்லாசச் சவாரி போவாள். படகுச் சவாரியும் அவள் மிகவும் விரும்பும் ஒரு பொழுதுபோக்கு’ என்று இன்னுமின்னும் என்னவெல்லாமோ சொன்னவள் வண்ண வண்ண ஆடைகளோடு அவள் கூத்தடிப்பதைக் காட்டும் புகைப்பட ஆல்பமொன்றை அவனுக்கு முன்னே விரித்தாள். டெர்ரி கில்போட் மிகவும் அபூர்வமான புன்னகையோடு அவளைப் பார்த்து இறுதியிலே மிகவும் மென்மையான குரலிலே சொன்னது, ‘நான் அவளை மிகவும் ஆழமாக நேசிக்கிறேன்’ என்பதைத்தான். ஷிமியும் அதே போன்றதொரு பதிலைத்தான் ஏற்கனவே சொல்லியிருந்தாள்.

ஆகவே, உலகின் இரண்டு விசித்திரமான மனிதர்களும் திருமணம் செய்து கொண்டார்கள். மணமகளான ஷிமியின் கையில் மணமகளைச் சிறப்பித்தோ, அலங்காரப்படுத்தியோ காட்டும் பூச்செண்டு இருக்கவில்லை என்ற இன்னுமொரு விசித்திரமும் இந்தத் திருமணத்தில் இருக்கிறது. அவள் தோழிகள் புடைசூழ (அவர்களும் பூச்செண்டு வைத்திருக்காத பெண்களாக பொலிவுடன் காட்சியளித்தார்கள்) அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தாள். பூச்செண்டு இல்லாத உலகின் முதல் திருமணமாக அது நடந்து முடிந்தது. இதற்கெல்லாம் காரணம் அவளைப் பீடித்திருக்கின்ற தீவிரத்தன்மை கொண்ட மகரந்த ஒவ்வாமை வியாதி.

‘ஷிமி, பிறந்த நாளிலிருந்தே மகரந்த ஒவ்வாமையினால் மிகவும் தீவிரமாக அவதிப்படுகிறாள். அந்த ஒவ்வாமை இப்போது உச்ச நிலைமையை அடைந்திருக்கிறது. இப்போதெல்லாம் பூக்களைக் கண்ட மாத்திரத்திலேயே அவள் மூச்சுத் திணறுகிறாள். ஆகவே நண்பர்களே, தயவுசெய்து பூக்கள் வேண்டாம்’ என்றாள் அவளுடைய அம்மா.

(மேலும் அவ்வேளை அவள் மகரந்தம் அதிகமாகவும் பரவலாகவும் காணப்படும் பருவகாலங்களில் வெளியில் நடமாடக் கூடாது என்று டாக்டர் கண்டிப்பாகச் சொல்லியிருக்கின்ற குறிப்பையும் நினைத்துக் கொண்டாள்)

ஷிமியின் அம்மாவுக்கு பூக்களற்ற திருமணம் வெறுமையாகத் தோற்றினாலும் கல்யாண விருந்தாளிகள் பூச்செண்டுகள் இல்லாமல் வந்திருக்கிறார்கள் என்பதைக் கிண்டலுடன் விவரிப்பதற்காக அவளுடைய கல்யாணத்தை ‘நிறச் சேர்க்கையற்ற வெண்ணிற வானவில்’ என்று கருத்துச் சொல்லியிருந்தாலும் ஷிமி அந்தக் கிண்டல்களைக் குறித்து கவலைப்படாது மிகவும் குதூகலத்துடன் காணப்பட்டாள்.

***

திருமணத்தின் மூன்றாம் வருட நிறைவு நாளன்று ஷிமி இன்னுமொரு விசித்திரத்தை நிகழ்த்தத் துணிந்தாள். விஷேடமாகத் தயாரிக்கப்பட்ட இரவு ஆகாரத்தை ஒன்றாக இருந்து அனுபவித்து உண்டபின் அவள் கில்போட்டின் வாசகசாலை அறைக்குள் நுழைந்தாள். எதற்காகவென்றால் தன்னுடைய கணவன் இத்தனை ஆர்வத்துடன் புத்தகங்களை விழுந்து விழுந்து வாசிப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும் தானும் அவ்வாறே நூல்களை வாசிக்க ஆரம்பிக்கவும்.

விதி எப்படி வந்தது என்றால் ‘வெண்ணிறக்கோட்டை’ என்ற நாவலின் வடிவில். வாசகசாலை அவளுடைய வாழ்க்கையை உலுக்கிப்போடக் காத்திருந்ததை அவள் முற்கூட்டியே அறிந்திருந்தாளென்றால் அவள் அதற்குள் ஒருபோதும் நுழைந்திருக்க மாட்டாள். அல்லது வெண்ணிறக்கோட்டை நாவலை வாசித்திருக்கவும் மாட்டாள்.

ஷிமி வாசகசாலைக்குள் நுழைந்ததைக் கண்டு டெர்ரி வியப்புற்றவனாக, ‘என்னே ஆச்சரியம்!’ என்றான்.

‘நானும் புத்தகங்களை வாசிக்கப் போகிறேன். கணவனின் ஆசைகளில் சொற்பத்தையாவது மனைவியும் நிறைவேற்ற வேண்டாமா?’ என்று அவள் புன்னகைத்தவளாகக் கேட்டாள்.

‘என் அன்புடைய பஞ்சவர்ணக் கிளியே, (டெர்ரி அப்படித்தான் செல்லமாக அவளைக் கூப்பிடுவார்) நீ புத்தகங்களை வாசிக்காதது குறித்து எனக்கு எந்த மனக்குறையும் கிடையாது. உன் வாழ்க்கைப் பாணி வேறு; என்னுடையது வேறு. நான் ஐந்தாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தபோதே புத்தகங்கள் வாசிக்கப் பழகிவிட்டேன். என்னுடைய தந்தை ஒரு தீவிர வாசகர். அவருடைய நூலகத்தில் ஆயிரக் கணக்கான நூல்கள் இருந்தன. நான் வாசித்த முதல் நூல் தெரியுமா? சொன்னால் நம்பமாட்டாய். டால்ஸ்டாய் எழுதிய போரும் சமாதானமும். அது ஒரு பிரமாண்ட அளவான புத்தகம். அதனை வாசித்து முடிக்க எனக்கு இரண்டு வருடங்கள் பிடித்தன’ என்று டெர்ரி சொன்னதும் ஷிமி வாவ் என்றாள்.

‘எனக்கும் புத்தகங்கள் தாருங்கள். நானும் வாசித்துப் பார்க்கப் போகிறேன்’

‘இந்த வாசகசாலையில் உள்ள புத்தகங்கள் போகிறபோக்கில் வாசிக்கக் கூடிய புத்தகங்கள் அல்ல. ஓரிடத்தில் ஆற அமர்ந்து மனத்தைக் குவியப்படுத்தி வாசிக்க வேண்டும். அப்போதுதான் அதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும். உனக்கு அது முடியாதென்றுதான் நம்புகிறேன்’

இந்தப் பதிலைக் கேட்டு அவளின் முகம் வாடிவிட்டது. என்றாலும் அதனை சிரமப்பட்டு மறைத்துக் கொண்டு தாமாகவே ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வாசகசாலையை விட்டு வெளியேறினாள்.

இரண்டு வாரங்களில் அவளுக்கு என்ன நிகழ்ந்ததோ தெரியாது. ஒருநாள் மாலை தலையைக் குனிந்தவளாக வாசகசாலைக்குள் நுழைந்தாள். முகம் தெளிவாகவே அவள் களைப்படைந்திருந்த்தைக் காட்டியது. டெர்ரி கவலையுற்றவனாக என்ன நடந்ததென்று விசாரிக்க ஆரம்பித்தான். ஷிமி தான் கொண்டுபோன புத்தகத்தை டெர்ரிக்கு முன்னால் வைத்து ‘ஐயோ இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பதற்குள் எனக்கு வேண்டாம் வேண்டாம் என்று ஆகிவிட்டது. ஒன்றுமே புரியவில்லை. உண்மையிலேயே களைத்துப் போய்விட்டேன். இப்படியெல்லாம் புத்தகம் எழுதுவார்களா? இந்த கிரகர் சம்ஸா என்பவன் புழுவாகவோ பூச்சியாகவோ மாறுகிறான். ஏன் அவன் அப்படியான நிலைமைக்கு மாறினான் என்பது இப்போது வரை எனக்குப் புரியவில்லை’ என்றாள் ஷிமி.

டெர்ரிக்குப் புரிந்துவிட்டது வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் மிகவும் சிரமமான பிரான்ஸ் காஃப்காவின் உருமாற்றம் என்ற நாவலை அவள் கொண்டு போயிருக்கிறாள். அவன் அவளுடைய தலையை ஆதுரத்துடன் தடவியவாறே ‘கவலைப்படாதே, நான் ஒரு அழகான புத்தகத்தைத் தருகிறேன். அதை உன்னால் மிக இலகுவாக வாசித்து விளங்கிக் கொள்ள முடியும்’ என்றவன் வெண்ணிறக்கோட்டை என்ற அந்த நாவலை அவளுடைய கையில் ஒப்படைத்தான்.

வெண்ணிறக்கோட்டையின் விளைவுகள் இருபத்து நான்கு மணித்தியாலங்கள் முடிவதற்குள்ளாகவே தெரியவந்துவிட்டது. ஷிமி பதட்டமடைந்தவளாக தாயின் கதவைத் தட்டினாள். நேரம் அகாலமான நள்ளிரவுவேளை.

‘அம்மா திருமணத்திற்கு முன்பு நீங்கள் கூறியதுபோல் என் வாழ்க்கை ஆகிவிடுமோ என்று பயப்படுகிறேன்’ என்றால் ஷிமி.

‘இந்த நடுநிசியில் இந்த விஷயத்தைக் கதைக்கத்தான் வேண்டுமா?’

‘இது மிகவும் அவசரம் அம்மா. என் விருப்பங்களும் அவருடைய விருப்பங்களும் முற்றும் முற்றாக வேறு வேறாக இருப்பதை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்துகொண்டு வருகிறேன் அம்மா’ என்றாள் ஷிமி பெருங்கவலையுடன்.

‘ஏன் நீ சந்தோஷமாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறாய். வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஜாலியாகப் பேசும் நீ இப்படி மனமுடைந்து பேசுவதை பார்க்கும்போது எனக்கும் பெரும் கவலையாக இருக்கிறது’

‘திருமணமாகி மூன்று வருடங்களாகி விட்டன.எனக்கென்று சொல்லிக்கொள்ள இன்னும் ஒரு குழந்தையும் இல்லை’

‘ஒரு மகப்பேற்று நிபுணரை சந்திப்போம். எல்லாம் சரியாகிவிடும்’

‘அதையும் விட சீரியசாகச் சொல்கிறேன். என் வாழ்க்கையை இழந்து விடுவேனோ என்றும் அவர் வேறு பெண்களுக்கு பின்னால் போய்விடுவாரோ என்றும் இப்போது அடிக்கடி குமைந்து குமைந்து வேதனைப்படுகிறேன் அம்மா. ஓர் தாங்க முடியாத வேதனையாக அந்த உணர்வுகளை அனுபவிக்கிறேன் அம்மா’

‘வேறு பெண்களின் பின்னால் டெர்ரி போவதை நீ கண்டாயா?’

‘இல்லை. வெண்ணிறக்கோட்டை என்ற நாவலை நேற்று வாசிக்கத் தந்தார். அது காதல் பிரவாகித்து ததும்பும் ஒரு கதை. யாரோடென்றால் ஓர் அறிமுகமில்லாத பெண்ணுடன். என்னை காதலித்த ஆரம்ப நாட்களில் சரசமாடிய அதே வார்த்தைகள் அந்தக் கதையிலே இருக்கின்றன.. ஒவ்வொரு வரியையும் வாசிக்க வாசிக்க காதலில் மூழ்கிப்போன எனக்கே காதல் உணர்வுகள் கொடிகட்டிப் பறக்கிறதென்றால் அவருக்கு அது எப்படி சாத்தியமாகாமல் இருக்கும்?’

‘நீ வீணான கற்பனையில் மூழ்கி உன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறாய்’

‘வீணான கற்பனையில் அல்ல. உண்மையான அச்சம். டெர்ரி மியூரினா என்ற பெண்ணை அடிக்கடி சந்திப்பதாக எனக்கு அரசல் புரசலாக செய்திகள் வந்தன. நான் அவற்றைப் பெரிதாக எடுக்கவில்லை. இப்போது அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறேன். மியூரினா மிகவும் மோசமானவள். மாயாஜாலக்காரி.ஆண்களைக் கிறங்கடிக்கச் செய்வதில் கெட்டிக்காரி’

‘அவளைப் பற்றிய விஷயங்களை இப்படித் துல்லியமாகப் பேசுகிறாயே. அவளை உனக்கெப்படித் தெரியும்?’

‘அவள் என்னோடு படித்தவள். நாங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். ஆண்களைக் கவர்வதெற்கென்றே அந்தக் காலத்திலேயே அலங்கோலமாக ஆடை அணிந்து செல்வாள். அத்தோடு இன்னுமொரு விஷயமும் கேள்விப்பட்டேன். டெர்ரி அடிக்கடி அவளுக்கு பூச்செண்டு கொண்டு போய்க் கொடுக்கிறாராம். என்னையும் விட எல்லா விஷயங்களிலும் அவள் தோது என்று நினைக்கிறாராக்கும்’.

‘பைத்தியகாரத் தனமாக உளறி உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். மியூரினாவைப் பற்றிய எல்லாத் தகவல்களும் எனக்கு வந்துவிட்டன. டெர்ரி என்னிடம் எல்லாம் சொல்லிவிட்டான். சும்மா ஒரு வியாபாரத் தொடர்பாடல் தான் நடக்கிறது. அவள் பெரிய நிறுவனமொன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறாள். எனவே இப்படியான சந்திப்புகளும் பூச்செண்டு கொடுக்கும் விஷயங்களும் தவிர்க்க முடியாதவை. நீ எண்ணிக் கொண்டிருப்பதுபோல் நான் வேறு அர்த்தங்களைக் காணவில்லை’ என்றாள் ஷிமியின் தாய்.

***

ஷிமியின் தாய் மேலும் கூறினாள் .

‘ஷிமி எப்போதும் அவசரமாக முடிவுகளை எடுக்கும் உணர்ச்சி ததும்பிய பெண்மணியாக இருந்தாள். அது மட்டுமல்ல மற்றவர்களின் உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளத் தயங்கினாள். மற்றவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதைக் கூட அவள் விரும்பியிருக்கவில்லை’

‘தன்னுடைய திருமண விஷயத்தில் கூட தான் காதலித்த டெர்ரியையே திருமணம் முடிக்க வேண்டுமென்பதில் அவள் மிகவும் உறுதியாக இருந்தாள். என்பதை நான் சொல்லுவேன்’

‘உண்மையில் டெர்ரி உடனான அவளது காதல் மிகவும் ஆழமானதாக இருந்தது. டெர்ரியையே திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் மிகவும் பிடிவாதத்துடன் செய்த முடிவு சரியானதாகவே இருந்தது. அவளைப் பொறுத்தவரை அவர் ஒரு தங்கமான மனிதர். அவர் ஜாலி வகையறா இல்லையென்றாலும் அவளுடைய எந்த விருப்பங்களுக்கும் அவர் ஒருபோதும் வேண்டாம் என்று சொன்னது கிடையாது’.

‘துரதிர்ஷ்டவசமாக மியூரினா என்ற பெண் அவளுடைய உள்ளத்திலே சஞ்சலத்தை ஏற்படுத்திவிட்டாள். அது ஒரு அலுவலகத் தொடர்பாடல் என்று நான் எவ்வளவோ புரியவைக்க முயன்றும் இறுதியிலே தோற்றுப் போனேன். தன்னுடைய கணவனின் விருப்பங்களைத் தான் சரியாகப் பூர்த்தி செய்யாமையாலேயே டெர்ரி தன்னை விட்டு விலகிச் செல்கிறான் என்றொரு மனப் பிம்பத்தை அவள் தானாகவே கட்டமைத்துக் கொண்டாள்’

‘திருமணம் என்பதன் சரியான அர்த்தத்தை அவள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்று நினைக்கிறேன். திருமணம் முடித்து பலவருடங்கள் கடந்தபோதிலும் அவள் சிறுமியாகவே இருந்தாள். கணவனுக்காக தான் எதையும் செய்யத் தயாராக இருப்பதை அவள் நிரூபிக்க விரும்பினாள். அதன் முதற்படியாகத்தான் கணவன் ஆழ்ந்த மனோநிலையில் புத்தகங்கள் வாசிப்பதைப் போல் தானும் வாசிக்க வேண்டுமென்று விரும்பினாள். முதல் முயற்சியிலேயே அவள் தோற்றுப்போனாள். வெண்ணிறக்கோட்டை என்ற அற்புதமான கதையை தன்னுடைய வாழ்க்கையோடு சேர்ந்து அவள் குழப்பிக் கொண்டாள்’

‘டெர்ரி புத்தகங்களுக்கு அடுத்ததாக மிகவும் நேசித்த அடுத்த விஷயம் பூக்கள். என்றாலும் பூக்கள் விஷயத்தை எப்படிக் கையாளுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளுடைய முதல் எதிரியே பூக்கள் தான். அதிதீவிரமான மகரந்த ஒவ்வாமையால் அவள் பீடிக்கப்பட்டிருந்தாலும் தானும் பூக்களை நேசிக்கிறேன் என்ற செய்தியை கணவனுக்கு அனுப்ப அவள் திட்டமிட்டாள். அது ஒரு விஷப்பரீட்சை என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டே அதனைச் செய்தாள்’

‘நகரத்தின் மத்தியிலே இருந்த பிரசித்தி பெற்ற பூங்காவனத்திலே தன்னுடன் ஒருநாளைக் கழிக்க வரவேண்டுமென்று அவள் கணவனுக்கு அழைப்பு விடுத்தாள். டெர்ரி அதனை முற்றாக மறுத்ததோடு அது அவளுக்கு ஆபத்தாக முடியுமென்று எச்சரித்தான். ஏனென்றால், அது மகரந்தமணிகளின் பருவகாலமாக இருந்ததோடு அவள் இளவயதில் இப்படி ஒருமுறை விளையாட்டுத் தனமாக நடந்து நடந்து மயிரிழையில் உயிர் தப்பியிருந்த சமாச்சாரம் ஏற்கனவே அவனுக்குத் தெரிந்திருந்தது’

‘மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும் அவன் மறுத்ததால் அவள் அன்றிலிருந்து எல்லை மீற ஆரம்பித்துவிட்டாள். அவனோடு சண்டை பிடிக்க ஆரம்பித்ததோடு அடிக்கடி கூச்சலிட்டாள். யாரோ ஒருத்திக்காக – அதாவது மியூரினாவுக்காக தன்னைப் புறக்கணிப்பதாகவும் தன்னோடு வர மறுப்பதாகவும் அவள் அபாண்டமாகக் குற்றஞ்சாட்டினாள். அந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதியாகத்தான் அவள் காரையும் எடுத்துக் கொண்டு பூங்காவனத்திற்கு ஓட்டிச் சென்றாள். அது ஒரு அதிகாலை நேரமாக இருந்தது. அவள் வீட்டைவிட்டு வெளியேறும்போது இறுதியாகச் சொன்ன வசனம் இதுதான். ‘நீங்கள் என்னோடு இந்த நாளைக் கழிக்க பூங்காவனத்திற்கு வராவிட்டால் நான் ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை’

ஷிமியின் தாய் விசும்பினாள்.

‘அவள் சொல்லிச் சென்றதைப் போலவே திரும்பி வரவில்லை. ஆபத்தை உணர்ந்துகொண்ட டெர்ரி தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வேகமாகப் பூங்காவனத்தை நோக்கிச் சென்றும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. முற்று முழுதாக மகரந்த மணிகளால் சூழப்பட்ட பூங்காவனத்திற்குள் சென்றவுடன் அவள் மூச்சுத் திணற ஆரம்பித்தாள். அந்த வேளையில் பூங்காவனத்தில் யாருமே இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.. அவளுக்குப் பத்து வயதாக இருக்கும்போதும் இப்படித்தான் ஒருமுறை நிகழ்ந்தது. அவள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று வந்தாள். இம்முறையோ தவிர்க்க முடியாமல் அவள் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு இறந்து போனாள்.

***

பூக்களை ஆழமாக நேசித்த டெர்ரி எங்கள் அலுவலகச் சுற்றாடலை கிட்டத்தட்ட பூங்காவனமாகவே மாற்றியிருந்தார். சுவர்களிலே உலகப் பிரசித்தி பெற்ற ஓவியங்களின் நகல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அலுவலக முற்றத்திலே பூக்களின் நறுமணம் நாசியைத் துளைக்கும் வண்ணம் ஒரு சிறிய பூந்தோட்டம் இருந்தது. குழி தோண்டியும், செடிகளை நட்டும் தினசரி காலை மாலை நீர்பாய்ச்சியும் அந்தப் பூந்தோட்டத்தை டெர்ரியே தன கையால் அமைத்தார்.

டெர்ரி முதன்முதலாக எங்கள் காட்டு அலுவலகத்தில் பதவியேற்று கையெழுத்திட்டபின் அவருடைய அறைக்கு என்னை அழைத்து, ‘பூச்செண்டுகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்டார். எனக்கு அவர் கேள்வி கேட்ட பாணி புதுமையாக இருந்தது.

‘நினைப்பதற்கு என்ன ஐயா இருக்கிறது. பூக்கள் அழகாக இருக்கும். நறுமணம் வீசும். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் பூக்களில் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை’ என்றேன்.

அவர் தன் கையிலிருந்த Bouquet of Roses by Pierre Augustie Renoir (1890-1900) என்று தலைப்பிடப்பட்ட ஓவியத்தை என் கண்முன்னே விரித்துக் காட்டினார். முதல் பார்வையிலேயே நான் வசமிழந்து போனேன். ‘இத்துனை வசீகரத்துடன் பூக்களை வரைய முடியுமா?’ என்று நான் ஆச்சரியத்துடன் கேட்டேன். அவர் இலேசாக முறுவலித்தார்.

‘நாங்கள் பூக்களை ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஓவியம் உண்மையில் அசலல்ல நகல். இதுவே உன்னைக் கிறங்க அடிக்கிறதென்றால் நினைத்துப்பார் அசல் உன்னை என்ன பாடாய்ப் படுத்துமென்று.’ நான் ‘வாஸ்தவம்தான்’ என்றேன். அந்த ஓவியம் இப்போதும் அவருடைய அறையிலே சட்டகம் போடு தொங்க விடப்பட்டிருக்கிறது. நான் அவரில்லாத வேளைகளில் கூட அவருடைய அறைக்குள் நுழைந்து அந்த ஓவியத்தின் முன்னால் நின்று ரசித்துக் கொண்டேயிருப்பேன். அலுவலகத்திற்கு வரக் கூடிய விருந்தினர்களில் அநேகம்பேர் முதலில் கேட்கக் கூடிய கேள்வி.

‘இங்கு பூச்செண்டு போல் ஒரு மனிதர் இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். அது உண்மைதானா?’ என்பதாகவும் அதற்குரிய பதில் மிகச் சுருக்கமாக ஆமாம் என்றும் இருக்கும். அந்தப் பதிலோடு அவர்களும் அவருடைய அறைக்குச் சென்று ஓவியங்களை ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

***

நாங்கள் டெர்ரியின் மரண வீட்டிற்குச் சென்றபோது டெர்ரி மன அழுத்தத்தினால் இறந்ததாக ஒரு முட்டாள்தனமான காரணம் கூறப்பட்டது. மேலே சொன்ன வர்ணனைகளுக்கு முற்றிலும் நேர்மாறாக அவருடைய வீடும் சுற்றுப்புறமும் அமைந்திருந்தது. அதாவது பூக்களேயில்லாத முற்றிலும் வெறுமையான இடமாக அது இருந்தது. வீட்டைச் சுற்றிலும் ஒரு பூக்கன்று கிடையாது. உள்ளேயும் இல்லை. ஒரு பூச்சாடி கூட இருக்கவில்லை.

அந்த வீடு விசாலமானது. அவனுடைய அறையிலே ஓர் அழகியின் புகைப்படம் தொங்குகிறது. அவன் தினசரி அந்த புகைப்படத்திற்கு முன்னால் நிற்பான் என்றும் கொண்டு வரக்கூடிய பூச்செண்டை அவளுக்கு முன்னால் வைப்பான் என்றும் (அதற்கான ஒரு பீடம் முன்னால் அமைக்கப்பட்டிருந்தது) அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான் என்றும் .ஷிமியின் தாய் சொல்கிறாள். அவள் மேலும் சொல்கிறாள், அந்தப் புகைப்படத்தில் இருப்பவள்தான் ஷிமி.

‘பூக்களை வாழ்க்கை முழுவதும் நேசித்த அவன் வாழ்ந்த வீட்டில் ஒரு பூவைக்கூட காண முடியவில்லையே’

‘ஷிமி இறந்து போக முன்னும் பின்னும் அவன் இப்படித்தான் இருந்தான். அவள் விரும்பாத பூ எனக்கெதற்கு என்பான். ஏனெனில் புத்தகங்கள், பூக்கள் எல்லாவற்றையும் விட டெர்ரி ஷிமியை நேசித்தான்.’

‘அப்படியானால் என் கேள்விக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும். என் மனைவி சந்தோஷப்படுவாள் என்று டெர்ரி அடிக்கடி பூச்செண்டுகளை வாங்கிக் கொண்டு வருவார். ஒருதடவை இரு தடவைகள் அல்ல, நூறு தடவைகள் இருக்கும். அந்தப் பூக்களை அவர் எங்கே கொண்டு போனார் என்று உங்களால் சொல்ல முடியுமா? அவைகள் எங்கே? அல்லது அந்த பூச்செண்டுகளை காட்டிற்குள் எறிந்து விட்டாரா?’

ஷிமியின் தாய் அந்தக் கேள்வியில் தொக்கியிருந்த முடிச்சுகளை அவிழ்க்கும் தோரணையில் திறப்புக் கோர்வையைக் கொண்டுவந்து மூடி வைக்கப்பட்டிருந்த அங்கிருந்த எல்லா அலமாரிகளையும் திறந்து விட்டாள். எல்லா அலமாரிகளுக்குள்ளும் காய்ந்துபோன பூச்செண்டுகளின் பூ இதழ்கள் சிதறிக்கிடந்தன. எப்போதோ கொண்டு வந்து வைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பூச்செண்டுகளின் தடயங்கள்.

ஒரு அலமாரிக்குள் நறுக்கப்பட்ட பழைய ஒரு பத்திரிகைச் செய்தியும் அத்தோடு பிணைக்கப்பட்டதாக டெர்ரியினால் கையெழுத்திட்டு எழுதப்பட்ட, ‘ஷிமி என்னை மன்னித்துவிடு’ என்ற வசனமும் இருந்தது.

பத்திரிகை நறுக்கில் பின்வரும் செய்தி இருந்தது.

‘நகரமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் ஷிமி கிலாடன் கொலை வழக்கில் ஒரு பாரிய திருப்புமுனையாகப் புதிதாக ஒரு சாட்சி தோன்றியிருக்கிறான். அவன் ஷிமியின் மரணத் தருவாயில் நடந்த சம்பவங்களை தத்ரூபமாக விவரிக்கிறான். அந்தச் சாட்சியம் டெர்ரியைக் குற்றவாளியாக்கிவிட தாராளமாகப் போதுமானது. அவனுடைய மனைவி ஷிமி மூச்சுத் திணறலால் துடிதுடித்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த போது டெர்ரி பெண்ணின் மிகவும் அருகாமையில் நின்றபோதிலும் அவளைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவளை பக்கத்திலிருந்த வாகனத்தில் ஏற்றி உடனடியாக அவளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கலாம் என்றபோதிலும் டெர்ரி வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தொடர்ந்த செய்தி பின்வருமாறு முடிந்தது. எனினும், அந்த வேளையில் இந்தச் சாட்சி குடிபோதையில் இருந்ததாகக் கூறி சாட்சியம் நிராகரிக்கப்பட்டது.

– அக்டோபர் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *