‘நானே கொன்றேன்!’

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 34,910 
 
 

லக்ஷ்மிகாந்தம் ஒரு நூதனமான மனிதர். அவர் மனதில் என்னதான் எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று ஒருவராலும் லேசில் அறிந்து விட முடியாது. அவர் தொழில் – அதுவும் பொழுதுபோக்காகத்தான் – கதை, நாவல்கள் எழுதுவது. எந்தப் பழைய நைந்த விஷயத்தையும் ரஸமாகவும் மனதைக் கவரும்படியாகவும் ஒரு புதிய தோரணையில் தான் எழுதுவார். அதிலே இவருக்கு நல்ல பெயர். ஏன்? புகழும் உண்டு. ஆள் பார்வைக்குக் கம்பீரமான, மனதை அப்படியே தன்னுள் வசீகரிக்கும் தன்மை வாய்ந்த தோற்றம். நாற்பது வயதிருக்கும் கபோலத்தில் சிறு நரை இருந்தாலும் ஆள் பார்வையில் ‘ஒரு கம்பீரம், சிறிது மமதை, இவை எல்லாம் தோன்றும். உலகத்தின் கோழைத்தனம், சிறுமைக்குணம் எல்லாம் இவர் முன் நிற்கக் கூசும். எப்பொழுதும் ஒரு சிரிப்பு – விதியின் அற்ப விளையாட்டுக்களையும் உலகத்தின் அசட்டுத்தனத்தையும் துச்சமாக நினைப்பது போல் ஒரு புன்சிரிப்பு.

இவருக்கு ஒரு இளைய சகோதரன் உண்டு – பெயர் மகரபூஷணம். இருவரைப் போலும் இரண்டு விதமான தனிக்குணம் படைத்த ரத்தக் கலப்புள்ள, ஒரே மரத்தின் இரட்டைக் கிளைகள் போன்ற, இருவரைக் காண முடியாது. அண்ணன் உலகத்தில் வெறுப்பைக் கேவலத்தைப் பார்த்து நகையாடும் தனிச் சிறப்புடையவர். தம்பி உலகத்திலே காதலும், கனவுகளும் கண்டு களிக்கும் இலக்ஷியவாதி. படங்கள் வரைவதில், இவரது கனவுகளைத் திரைச்சீலையில் உருவாக்குவதில் பெரிய மோகம். இப்பொழுது இருக்கும், படம் எழுதும் வாத்தியார்ப் பாடத்தை, ஓவியம் என்று சொல்லிக்கொண்டு வரும் சித்திரக்காரர்களைப் போலல்ல இவருடைய படம். இம்மாதிரியாக தனிப்பட்ட எதிர் எதிரான குணங்கள் படைத்த இரு சகோதரரிடையே இருந்த பாசம், மனித உலகத்தில் காணப்படாதது. அது வெறும் சமாச்சாரமாக மட்டுமல்லாமல் ஒரு பெரும் கதையாக ஒரு இலக்ஷியமாக ஜனங்கள் பேசிக்கொண்டு வந்தார்கள்.

மகரபூஷணம் இறந்த பிறகு லக்ஷ்மிகாந்தம் சமூகத்திலிருந்தே மறைந்துவிட்டார் என்று சொல்லிவிடலாம். பிறகு எங்குச் சென்றார் என்ன செய்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது.

இப்படியிருக்கையில் இவருடைய நண்பர்களுக்கு ஒரு அழைப்புக் கடிதம் வந்தது. ஒரு புதிய வீடு, பெரிய மாளிகை என்றே சொல்லலாம், மாம்பலத்தில் வாங்கியிருப்பதாகவும் அதற்குப் புண்யாவசனம் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு ஒரு பெரிய விருந்து நடத்தப் போவதாகவும் அவசியம் வரவேண்டும் என்றும் எழுதியிருந்தது. அவருடைய நண்பர்கள் அவரைப் பார்க்க வேண்டிய ஆவலில் அன்று அவரைக் காண்பதற்குத் தீர்மானித்ததில் ஆச்சரியமில்லை.

‘லக்ஷ்மி விலாசம்’ – அதுதான் அவர் மாம்பலத்தில் வாங்கிய பங்களா – ஒரு பழைய கட்டிடம். ஊருக்குச் சற்று வெளியே மரமடர்ந்த சாலையில் ரஸ்தாவிற்குச் சற்று உள்ளடங்கி இருந்தது. பெரிய ‘காம்பௌண்டு’, கட்டிடத்தை மறைக்கும்படி மரங்கள் ஆகியவை ஒருவிதப் பயத்தைக் கிளப்புவதாயிருந்தன. லக்ஷ்மிகாந்தத்தின் மனப்போக்கையறிந்தவர்களுக்கு அவர் இந்த வீட்டை வாங்கியதில் ஆச்சரியமிருக்காது. வந்த விருந்தினர்கள் எல்லாரும் அதைப் பற்றி ஏகமாகப் புகழ்ந்தார்கள்.

“உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்றால் எனக்கும் திருப்திதான்” என்றார் லக்ஷ்மிகாந்தம். அந்த குரலிலே அவருக்கு இயற்கையான கேலி, கோபம் எல்லாம் கலந்திருந்தது.

இந்த விருந்தில் இன்னும் ஒரு விசேஷம். இந்தச் சமயத்தில்தான் இவருக்கும் இவரது சகோதரன் மகரபூஷணத்தின் மனைவிக்கும் இடையே இருந்த மனத்தாங்கல் தீர்ந்து ஒரு சமாதானம் ஏற்பட்டது.

மகரபூஷணத்துடன் இவள் தனது வாழ்க்கையைப் பிணித்துக் கொண்ட பிறகு முதல்முதலாக இப்பொழுதுதான் லக்ஷ்மிகாந்தத்தின் வீட்டிற்கு விருந்தினளாக வருகிறாள். மகரபூஷணம் இறக்குமுன்பு இருவருக்கும் சண்டைதான். லக்ஷ்மிகாந்தம் அந்தக் கலியாணத்தைத் தடுக்கத் தன்னாலானவரை முயன்று பார்த்தார். முடியவில்லை. லக்ஷ்மிகாந்தம் தனது சகோதரனை விட பதிநான்கு வருஷம் மூத்தவர்.

அது ஒரு கடற்கரைக் காதல். சுலோசனா – அவள்தான் மகரத்தின் மனைவி – ஒரு மலையாளப் பெண். அழகு ஆளை மயக்கும் போதை வஸ்து போன்றது. அதில் அழகையே எப்பொழுதும் தியானித்துக் கொண்டிருக்கும் மகரம் விழுந்ததில் அதிசயமில்லை. இருவரும் ரிஜிஸ்டர் கலியாணம் செய்துகொண்டார்கள்.

லக்ஷ்மிகாந்தம் எவ்வளவோ சொன்னார். “அந்தப் பெண்ணின் குணம் உனக்குத் தெரியாது. அவள் மனம் ஒரு பரத்தையின் மனம். தன்னைத் தவிர வேறு யாரையும் அவளால் நினைக்க முடியாது. அவள் உன்னைவிட ஐந்து வயது மூப்பு. கலியாணம் செய்துகொள்ள வேண்டுமானால், ஷாப்பில் வேலை செய்யும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணை வேண்டுமானாலும் கலியாணம் செய்துகொள். நான் எனது உள்ளன்புடன் ஆசிர்வதிப்பேன். உனக்கு வேண்டியது தாயின் பரிவும் மனைவியின் காதலும் கொடுக்கக்கூடிய பெண். இவளோ? தன் சுகத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்வாள்.”

பிரயோஜனமில்லை. மகரமே அண்ணனுடன் கோபித்துக் கொண்டு ரிஜிஸ்தர் கலியாணத்தை நடத்திவிட்டான்.

பிறகு நடந்தது அந்தக் கோரமான சம்பவம். அவனது மரணம். போன வருஷம் உதகமண்டலத்திற்குக் கணவனும் மனைவியும் சென்றார்கள். அங்குதான்…

அதன் சிகரமான தொட்டப்பெட்டாவைப் பார்க்கச் சென்றார்கள். அந்தப் பாழடைந்த நட்சத்திரச் சாலையின் பக்கத்தில் செங்குத்தான வீழ்ச்சி ஒன்று. அதில் எட்டிப் பார்த்த பொழுது மகரம் சறுக்கி விழுந்து உயிர் துறந்தார். பிறகு ஏதோ ஒருமாதிரி சுலோசனாவிற்கும் லக்ஷ்மிகாந்தத்திற்கும் சமாதானம் ஏற்பட்டது. இருவரும் மகரத்தின் திதியில் சந்தித்தார்கள்; பிறகு ஜி.டி.யில் ஒரு தடவை எங்கோ சந்தித்தார்கள்.

இப்பொழுதுதான் முதன்முதலாக லக்ஷ்மிகாந்தத்தின் விருந்தினளாக வருகிறாள். ‘லக்ஷ்மி விலாச’த்தின் பெரிய ஹாலில் சுலோசனாவின் படம் – மகரம் இறக்கும்பொழுது எழுதியது – தொங்கவிடப்பட்டிருந்தது. விருந்தினருக்கு எல்லாம் இது அதிசயமாக இருந்தது. எல்லாரும் தாழ்ந்த குரலில் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒருவேளை மகரத்தின் மேல் இருந்த அளவு கடந்த அன்பினால் இருக்கலாம்.

எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, “உங்களில் யாருக்காவது பேயில் நம்பிக்கை உண்டா?” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

“ஏன் இந்த வீட்டில் இருக்கிறதா?” என்றாள் சுலோசனாவின் கூட வந்த ஒரு பெண்.

“ஆம்! அதில்தான் சுவாரஸ்யம். என்னைப் போன்ற பிரம்மசாரிகளுக்குத் துணை யாரிருக்கிறார்கள். ஒரு பேயாவது இருக்க வேண்டாமா?” என்று சிரித்தார் லக்ஷ்மிகாந்தம்.

“இங்கே நடந்த விஷயங்களைக் கேட்டால் ரஸமாக இருக்கும். இந்த வீட்டு மெத்தையில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அந்த ஜன்னல் நீங்கள் எப்படித்தான் மூடித் தாழ்போட்டு வைத்தால் கூடத் தானே திறந்து கொள்ளும்” என்றார் மீண்டும்.

“நன்றாகப் பூட்டிவிட்டால்” என்றார் அங்கிருந்த இன்னொருவர்.

“இருபது வருஷத்திற்கு முன் இங்கே சுமதி என்ற பெண் தனது கணவனை அந்த ஜன்னல் வழியாகப் பிடித்துத் தள்ளிவிட்டாள். அன்று அவன் சூரியாஸ்தமனத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தானாம். ஒரு தள்ளு, அவ்வளவுதான், கீழே புருஷனைப் பெட்டிவைத்துத்தான் பொறுக்க வேண்டியிருந்தது” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

“அவளைத் தூக்குப் போட்டார்களா?” என்றார் பிரகாசம் என்ற நண்பர்.

“இல்லை, இல்லை. அதெப்படி முடியும்? ஏதோ தவறி விழுந்து விட்டதாக நினைத்தார்கள். யாரால் அதை நிரூபிக்க முடியும்? பேயைச் சாட்சியத்திற்குக் கோர்ட்டில் சம்மன் கொடுக்க முடியுமா?” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

“தப்பித்துக் கொண்டாள் போலிருக்கிறது” என்றார் துப்பறியும் நாவல்கள் மொழிபெயர்ப்பதில் பெயர்போன பராங்குச நாயுடு.

“அப்படியல்ல. பேயை ஒரு தடவை நேருக்கு நேர் பார்த்து பயத்தால் பேச முடியாது வாயடைத்துப் போய் கிலியடித்த வியாதியாலேயே உயிரைவிட்டாள்” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

“எல்லாம் வெறும் மனப் பிராந்தி. குற்றமுள்ள நெஞ்சு. பேயாவது உருளைக் கிழங்காவது” என்றார் திவான்பகதூர் சம்பந்த சாரணாலயம்.

“பேயை வேறு யாராவது பார்த்திருக்கிறார்களா?” என்றார் வேறு ஒரு நண்பர்.

“பிறகு ஒரு பெண் பார்த்திருக்கிறாள்” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

“பெண்கள் கண்ணுக்குத்தான் தென்படும் போலிருக்கிறது” என்றார் பராங்குசம் நாயுடு.

“ஆமாம் குற்றமுள்ள நெஞ்சுடைய பெண்களுக்குத்தான்” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

எல்லோரும் பின் தொடர்ந்தார்கள். கூரைக்கும் இரண்டாவது மாடிக்கும் இடையில் ஒரு சிறு காமிரா அறை. அதற்குச் செல்லுவதற்கு ஒரு சிறு ஏணி.

“இங்குதான் அவன் உட்கார்ந்திருந்தானாம். இதுதான் அந்தச் சன்னல். அடே! இதை யார் திறந்தது” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

“இந்த ஜன்னல்தானா” என்றாள் சுமதி. அவள் தான் சுலோசனாவுடன் வந்தவள்.

“இதுதான். வருஷத்தில் ஒரு நாள்தான் இம்மாதிரித் தொந்தரவு செய்யும். அதுவும் இன்றுதான் போல் இருக்கிறது” என்று சிரித்தார் லக்ஷ்மிகாந்தம்.

எல்லோரும் நெருங்கினார்கள்; உள்ளுக்குள் பயந்தான்.

திடீரென்று எங்கும் இருண்டது. அறையில் ஒருவருக்கொருவர் முகந் தெரியவில்லை.

“அதென்ன என்னவோ இருட்ட…ரதே” என்று சற்று உரத்த சத்தத்தில் நடுநடுங்கிக் கொண்டே கேட்டாள் சுமதி. “ஒன்றுமில்லை, மேகமாக இருக்கும்” என்றார் லக்ஷ்மிகாந்தம். “கீழே விழும்பொழுது என்ன நினைத்தானோ? யார் கண்டார்கள்? ஒரு வேளை ஓலமிட்டிருக்கலாம்…”

யாரோ இருட்டில் அசைந்தார்கள். தரையில் காலடிச் சப்தம். யாரோ ஒரு பெண் ‘ஐயோ அம்மாடி’ என்று ஏங்கும் குரல். “எனக்கிங்கிருக்கப் பிடிக்கவில்லை” என்றாள் சுமதி.

“பின் வாருங்கள் போவோம். ஜன்னலைச் சாத்திவிட்டு வருகிறேன்” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

எல்லோரும் பயம் தெளிந்த மாதிரி ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பினார்கள். லக்ஷ்மிகாந்தம் ஜன்னலைச் சாத்திவிட்டுத் திரும்பினார். பாதி அறையைக் கடந்திருக்கலாம். திடீரென்று கூச்சல் போட்டுக் கொண்டு திரும்பினார்.

அந்த ஜன்னல் கதவு மெதுவாகத் தானே திறந்துகொண்டு இருந்தது.

“ஐயோ அங்குப் பாருங்கள்” என்றார் திவான்பகதூர். “மிஸ்டர் பேய்க்கு நம்முடன் பேச இஷ்டம் போல் தெரிகிறது” என்று சிரித்தார் லக்ஷ்மிகாந்தம். இதற்குள் மற்றவர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள். இவரும் அவர்களைத் தொடர்ந்து கீழே இறங்கினார். “கொஞ்சம் கூல்டிரிங் சாப்பிடுவோமா?” என்று மணியை அடித்தார்.

பேசிக்கொண்டிருக்கும்பொழுதே திடீரென்று விளக்குகள் மங்கிவிட்டன.

எங்கோ தடால் என்ற சப்தம். விருந்தினர்கள் பயத்தில் உளறியடித்துக்கொண்டு எழுந்தார்கள். யாரோ ஒரு பெண் பயத்தால் கூச்சலிட்டாள். வெளிச்சம் மறைந்த மாதிரியாகத் திடீரென்று வந்தது. சுலோசனாவின் படம் கீழே சுக்கல் சுக்கலாக நொறுங்கிக் கிடந்தது. லக்ஷ்மிகாந்தம் வேலைக்காரர்களைக் கூப்பிட்டு அதை அப்புறப்படுத்தச் சொன்னார். அதற்குள் பரிசாரகன் கூல் ட்ரிங்குகளைக் கொண்டுவந்தான்.

“இதைச் சாப்பிடுங்கள் பயம் தெளியும்” என்றார் லக்ஷ்மிகாந்தம். “என்ன சுலோசனா பயந்துவிட்டாயா? இதில் என்ன இருக்கிறது? மகரம் எழுதிய படம் வீணாகப் போனது வருத்தந்தான். நீ இதைக் குடி; மேல் எல்லாம் வியர்த்துவிட்டதே!” என்றார் மறுபடியும்.

சுலோசனா கையிலிருந்ததை வாங்கிக் குடித்தாள். அப்பொழுது ஒரு வேலைக்காரன் உள்ளே ஓடிவந்து, “பங்களாக் காம்பவுண்டில் யாரோ இறந்து கிடக்கிறான். வெளியே சென்றபொழுது பார்த்தேன்” என்றான்.

எல்லோரும் திடுக்கிட்டுப் பேச நாவெழாமல் மௌனமாக இருந்தனர்.

“அவனை இங்கு எடுத்துக்கொண்டு வாருங்கள். கிழே இரத்தம் கித்தம் சிந்தி இருந்தால் கழுவிவிட்டுவிடு. யாரும் வழுக்கி விழுந்து விடாமல்” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

“சரி சார்” என்று வேலைக்காரன் போனான்.

“இன்றைக்கு வேடிக்கையாக இருக்கவில்லையா? துப்பறியும் நாவல் மாதிரி சம்பவங்கள் நடக்கிறதே” என்று விருந்தினரைப் பார்த்துக் கூறினார்.

அந்தச் சமயத்தில் வேலைக்காரர் இருவர், பிணத்தை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தனர். அங்கிருந்த பெண்கள் மயங்கிவிடுவார்கள் போல நடுநடுங்கினர்.

“அந்த மேஜையில் வையுங்கள்” என்றார் லக்ஷ்மிகாந்தம். எல்லோரும் அதையே நோக்கினர். பராங்குச நாயுடு அதைக் கூர்ந்து கவனிக்க நெருங்கினார்.

அந்தப் பிணம் உண்மையில் துணியினால் செய்யப்பட்ட பொம்மை. சாக்கைப் போட்டு மூடப்பட்டிருந்தது.

“மிஸ்டர் லக்ஷ்மிகாந்தம். நீர் ஒரு பெரிய ஆசாமி!” என்று விழுந்து விழுந்து சிரித்தார்.

மற்றவர்களும் அதை நெருங்கிக் கவனித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

“இப்பொழுது பிணத்தைப் பார்த்தாகிவிட்டது. இவனை யாரோ வீட்டிலிருப்பவர்களில் ஒருவர் தான் கொன்றிருக்கிறார்கள். உளவுகளை வைத்துக்கொண்டு உண்மையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 100 சிகரெட்டு பந்தயம்” என்றார்.

“நான் தான் துப்பறியும் கோவிந்தன்; நான் கண்டுபிடிக்கப் போகிறேன்” என்று சிரித்தாள் சுமதி.

“என்ன சுலோசனா குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போறதில்லையா” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

“இந்த முட்டாள்தனமான விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை” என்று முகத்தைச் சுளித்தாள் சுலோசனா.

அந்த அறையைச் சுற்றிக் கவனித்த சுமதிக்கு ஒரு கிழிந்த கடிதம் அகப்பட்டது. அதில் “விருந்திற்குப் பிறகு என்னைச் சந்தி… சனா” என்று மட்டும் தெரிந்தது.

பிணத்தையும் பரிசோதிக்க வேண்டும் என்று அந்தத் துணிப்பதுமைக்கு அணிந்திருந்த சட்டைகளில் என்னவிருக்கிறது என்று கையை விட்டுத் தடவினாள். அதிலே ஒரு கைக்குட்டை கிடைத்தது. அதன் மூலையில் “சு” என்ற எழுத்துப் பின்னப்பட்டிருந்தது.

“சு…சனான, சுலோசனா; அவள் தான் கொலை செய்தவள். அவள் தான் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவள் தான் குற்றவாளி. துப்பறிவனுக்குப் பேசிய 100 சிகரெட்டுகளைக் கொடுத்துவிட வேண்டும்” என்று உரத்த குரலில் சுமதி சிரித்துக் கொண்டு கேட்டாள்.

“அவசரப் படாதே. கோர்ட்டு என்ன தீர்ப்பு செய்கிறதோ அதிலிருந்துதான் முடிவுகட்ட வேண்டும். திவான்பகதூர்தான் ஜட்ஜ். பராங்குச நாயுடு வாதி வக்கீல். நான் பிரதிவாதி வக்கில். மற்றவர்கள் எல்லாம் ஜுரிகள்.”

“குற்றத்தின் காரணம், அது ஒரு விதத்தில் எப்படி நியாயமானது என்பதும் காண்பிக்கிறேன். பிணத்தின் நிலைமையிலிருந்து உயரத்திலிருந்து விழுந்தது என்று தெரிகிறது. அதன் உள் பையில் இருக்கும் கைக்குட்டை இறந்தவர் குற்றவாளியின் மீது அதிகப் பிரியம் வைத்திருந்தார் என்பதைக் காண்பிக்கிறது. அவருடைய நேசம், பாசம் எல்லாம் தொந்திரவைக் கொடுத்தது. அவன் இல்லாவிட்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று பட்டது. அவன் எதிர்பார்க்காத பொழுது ஒரு தள்ளு தள்ளிவிடுகிறது இயற்கைதானே. அவ்வளவு தானே சுலோசனா! அவன் இல்லாவிட்டால் நல்லதுதானே.”

விருந்தினர்கள் எல்லாரும் விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். சுலோசனாவின் முகத்தை கவனித்தவுடன் சிரிப்பு அடங்கிவிட்டது.

“நீங்கள் சொல்வது அர்த்தமாகவில்லை. யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்” என்றாள். முகம் பயத்தால் வெளிறி இருந்தது.

“அவனால் இடைஞ்சல்கள் அதிகமாக இருந்தது. அங்கு ஒருவரும் இல்லை. சான்ஸ் கிடைத்தால்… பிறகு என்ன?”

“அவர் மயங்கித்தான் விழுந்து உயிர் துறந்தார்.”

“அவன் பயங்கொள்ளியல்ல தலை சுற்றிக் கீழே விழுவதற்கு. சரியாக ஒரு வருஷமாகிவிட்டது. அப்பொழுது சௌகரியமாகக் கீழே வந்து உன் கதையைச் சொன்னாய். உன்னைத் தடுத்து மறுத்துப் பேச அவன் அங்கு இல்லை.”

“சத்தியமாக அவர் மயங்கித் தான் விழுந்துவிட்டார்.”

“நிஜமாகவா? அவனை உன் முன்பு கொண்டுவந்து நிறுத்தினால் அப்படி சத்தியம் செய்வாயா?”

“உங்களால் அவரைக் கொண்டுவர முடியாது.”

“கொண்டுவர முடியும். மகரம். மகரம். இங்கே வா!” என்று சற்று உரத்த சத்தத்தில் கூப்பிட்டார்.

எங்கும் நிசப்தம்.

பிறகு வெளியே டக், டக் என்று செருப்புச் சத்தம். யாரோ ஜன்னலைத் தட்டுவது மாதிரி…

“அவரை உள்ளே கூப்பிடவேண்டாம். நான் தான் கொன்றேன்… ஐயோ” என்று சொல்லிக்கொண்டே சுலோசனா மயங்கி விழுந்தாள்.

விளக்குகள் மறுபடியும் பிரகாசமாக எரிந்தன.

“ஜுரர்களே கைதி குற்றவாளியா அல்லவா” என்றார் லக்ஷ்மிகாந்தம்.

– ஊழியன், 21-09-1934 (புனைப்பெயர்: மாத்ரூ)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *