கொள்ளையடித்தால்..?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 7,653 
 

அக்பருக்குக் கை துறுதுறுத்தது. பத்து நாட்களுக்கொருமுறை கை அரிக்கும். தீனி போட வேண்டும்.

‘கையில் மடியில் ஒன்றுமில்லை. ஆக… இன்றைக்குக் காரியம் நடத்தியே ஆகவேண்டும். ! ‘- மனசுக்குள் முடிவெடுத்துக்கொண்டு நகர சாலையில் ஆட்டோவை நிதானமாகச் செலுத்தினான்.

சிறிது நேரத்தில்….

“ஆட்டோ…! “- குரல் கேட்டது.

வண்டியை ஓரம் கட்டி நிறுத்தித் திரும்பிப் பார்த்தான்.

பிரம்மாண்டமான துணிக்கடை வாசலில் ஏகப்பட்ட பை மூட்டைகளுடன் வயதான தம்பதிகள்.

ஐம்பது வயது மதிக்கத் தக்கப் பெரியவர்தான் கையை ஆட்டினார்.

வட்டமடித்து சென்று அவர்கள் முன் நிறுத்தினான்.

அவர் அருகில் வந்து…

“தண்டையார் பேட்டைப் போகனும்…”என்றார்.

“ஏறுங்க..”

“கூலி…?”

“மீட்டருக்கு மேல பைசா வேணாம்.”

பெரியவருக்கு நம்பிக்கை இல்லை.

“இப்படித்தான் எல்லாரும் சொல்லி ஏத்துறாங்க. அப்புறம் இறங்கும்போது அதிகம் கேட்டு தகராறு பண்றங்க..”என்றார்.

“மீட்டருக்கு மேல பைசா தரவேணாம்ன்னு சட்டம்.! நான் வாங்க மாட்டேன். ! “இவன் உறுதியாய்ச் சொன்ன அடுத்த நிமிடம்…

“இதோ என் சம்சாரத்தையும் அழைச்சி வர்றேன் ! “சொல்லி பெரியவர் சென்றார்.

ஆளுக்கு நான்கு துணிப்பைகள், அட்டைப்பெட்டிகள், மேலும் சிறு மூட்டை துணிகளுடன் அவர்கள் வந்து ஆட்டோவில் அமர்ந்தார்கள்.

“விலாசம்…? ” கேட்டு அக்பர் வண்டியைக் கிளப்பினான்.

சொன்னார்.

அது சென்னையின் புறநகர்ப் பகுதி. தண்டையார்ப்பேட்டையைத் தாண்டி செல்ல வேண்டும். அவர் சொன்ன இடத்தில் இப்போதுதான் இங்கொன்றும் அங்கொன்றுமாய் நான்கைந்து வீடுகள் தோன்றிக்கொண்டிருந்தன.

அக்பர் ஆட்டோவை விட்டான்.

“குண்டு குழியெல்லாம் பார்த்துப் போப்பா. பைகள் நிறைய இருக்கு..”

“சரிம்மா…” நிதானமாக செலுத்தினான்.

“ஏங்க…! பெண்ணோடு பட்டுப் புடவை, மாப்பிள்ளையோட பட்டு வேட்டியெல்லாம் பத்திரமா எடுத்து வைச்சுட்டீங்கல்லே..? “- ஆட்டோவில் அமர்ந்திருக்கும் அம்மணிக்குத் திடீர் சந்தேகம். கணவரைக் கேட்டாள்.

“ம்ம்… நம்ப ஞாபக மறதி தெரிஞ்சுதான் ஒரு தடவைக்கு நாலு தடவைகள் பார்த்து சரி பண்ணிக்கிட்டேன். மோதிரம் போடுறவங்களுக்கும் தேவையான துணிமணிகளை தனியா மூட்டைக் கட்டி வைச்சுட்டேன்.”

“தங்க மாளிகையில் நகை எடுத்தோமே..அது எங்கே இருக்கு..?”

“அந்த நாலு சவரன் நெக்லசுதானே..! அது அட்டைப் பேட்டியோட கைப்பையில வைச்சிருக்கேன்.”

“மீதிப் பணம்..?”

“அம்பதாயிரம் மடியில இருக்கு..”

“அஞ்சு லட்சத்தை அலமாரியில் வைச்சுத்தானே பூட்டி வந்திருக்கீங்க…?”

‘வேட்டை உள்ளம் ! ‘விருக்கென்று முளைக்க…அக்பர் காதைத் தீட்டிக்கொண்டான்.

“ஆமாம் !”

“சாவி..?”

“வீட்டு சாவி, அலமாரி சாவி எல்லாம் என் இடுப்புல எப்போதும் போல் பத்திரமா இருக்கு..”

அந்த அம்மாள் சிறிது நேர யோசனைக்குப் பின்…….

“கல்யாண வேலையெல்லாம் ஏறக்குறைய முடிச்சிட்டோம்ல்லே..? ” கணவரைக் கேட்டாள்.

“இருபது சவரன் நகை அலமாரியில் இருக்கு. கையில் நாலு சவரன். பேசியபடி இருப்பத்திநாலு சவரன் இருக்கு. அப்புறம் துணிமணிகள் எடுத்தாச்சு. சீர்வரிசை முடிச்சாச்சு. சமையல், மண்டபம் , மேளம். ஐயர்ன்னு எல்லா வேலையும் முடுசாச்சு. “சொல்லி மூச்சு விட்டார்.

“ஏங்க..! வாசல்ல கட்ட வாழை மரம்…??… “அவளுக்கு அடுத்தும் சந்தேகம்.

“அதுவும் சொல்லிட்டேன்.”

‘எல்லாம் இருக்கு. இந்தா வந்து எடுத்துக்கோ !’என்று சொல்லாமல் சொல்லிய தம்பதிகள் இரண்டும் அடுத்து எதுவும் வாயைத் திறக்காமல் வந்தார்கள்.

அக்பர் மனம் குதூகளிக்க வண்டியை ஓட்டினான்.

அரைமணி நேரப்பயணத்திற்குப் பிறகு அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான்.

பெரியவர் இறங்கி சென்று அழைப்பு மணி அழுத்தினார்.

ஒரு இருபத்தைந்து வயது பெண் திறந்தாள். ஏறக்குறைய அவள்தான் மணப்பெண்ணாக இருக்க வேண்டும். களையாக இருந்தாள்.

அக்பர் வண்டியிலிருந்து துணிமணி, சாமான்களை வீட்டிற்குள் எடுத்து வைத்து உதவினான்.

பெரியவருக்கு மகிழ்ச்சி.

“ரொம்ப நன்றிப்பா..! “சொல்லி மீட்டருக்கு மேலேயே அவனுக்கு ஐம்பது ரூபாய்கள் கொடுத்து…தன் மனம் திருப்தியாய் ஆளை அனுப்பினார்.

இரவு…..

இரு சக்கர வாகனத்தில் சென்று சத்தம் போடாமல் அக்பர் அந்த பெரியவர் வீட்டு சுற்றுச் சுவர் ஓரமாக வண்டியை நிறுத்தியபோது மணி 12.30.

தெருவில் விளக்கு வசதி இல்லை. வசதியாக இருந்தது. தயாராக தான் கொண்டுவந்திருந்த கறுப்புத் துணியை எடுத்து.. மூக்கை மூடி முகத்தைப் பாதி மறைத்துக் கட்டிக்கொண்டு, இடுப்பிலிருந்து கத்திய எடுத்து நீட்டி கையில் பிடித்துக் கொண்டு, அந்த வீட்டு சுற்றுச் சுவரைத் தொட்டான்.

உள்ளே குதித்து… மழைநீர்க்குழாய் வழியே மாடி ஏறி உள்ளே குதித்தான்.

வீடு இருட்டாக இருந்தது.

கொஞ்சம் நிதானித்தான். கண்கள் பழகியது.

வலப்புற அறையிலும், இடப்புற அறையிலும் மங்கலான இரவு விளக்கு வெளிச்சம்.

அலமாரி எந்த அறையில்..? பூனைபோல் நடந்து… வலப்புற அறையை எட்டிப்பார்த்தான்.

காலையில் கதவு திறந்த பெண் கட்டிலில்…. முந்தானை நழுவ, புடவை முழங்கால் வரை ஏறிக் கிடைக்க… சரியான தூக்கம்.

கண்களைக் கசக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தான்.

மார்புத் திரட்சியும், கால்களின் பளபளப்பும்… இவனுக்குள் வெப்பத்தைப் பரப்பியது. இன்னும் நன்றாகப் பார்த்தான். அறையில் அவளைத் தவிர வேறு யாருமில்லை. துணிந்து உள்ளே நுழைந்தான்.

அடிமேல் அடி வைத்து அவள் அருகில் அமர்ந்தான்.

படுத்திருக்கும் மானை… வேட்டைப் புலி அழுத்திப் பிடிப்பது போல் ஒரே அமுக்கு. வலக்கையால் அவள் வாயைப் பொத்தினான்.

கண்விழித்தவள் மிரண்டு முரண்ட… இடது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவள் கண்களில் காட்டினான்.

முரண்டு நின்றது. கண்கள் மிரண்டது.

“துளி சத்தம் வந்துது….உடல்ல உயிர் இருக்காது..! ” அக்பர் அழுத்தி கிசுகிசுக்க… அதற்கு மேல் அவள் உடலில் அசைவில்லை.

காரியம் முடித்து வேர்த்து எழுந்த போதும் அவள் அப்படியே அசைவின்றிக் கிடந்தாள்.

கண்கள் மூடி இருந்தது.

பயம் நெஞ்சைக் கிள்ள… மூக்கில் விரல் வைத்துப் பார்த்தான். மூச்சு வந்தது. நெஞ்சு ஏறி இறங்கியது. மயக்கம். !

அக்பர் மெல்ல எழுந்து நடந்து இடப்புற அறைக்கு வந்தான்.

காலையில் ஆட்டோவில் பயணித்தத் தம்பதிகள். கட்டிலில் படுத்து தூங்கினார்கள். அருகே சுவர் ஓரத்தில் அலமாரி. அதற்குப் பக்கத்தில் பளபளவென்று சீர்வரிசை சாமான்கள். காலையில் கொண்டு வந்த துணி மூட்டைகள்.

மெல்ல நடந்து உள்ளே சென்று… சாவி தேடினான். அவர் இடுப்பில் கொத்தாகப் பளபளத்தது.

தொட்டு மெல்ல இழுத்தான்.

பெரியவர் சடக்கென்று விழித்தார்.

அக்பர் கொஞ்சமும் தாமதிக்காமல் வலக்கையால் அவர் வாயை இறுக்கி… இடக்கை கத்தியைக் காட்டினான்.

அவர் கண்களில் பயப் பீதி ! ஆடவில்லை.

அதே சமயம்…அவரை அடுத்துப் படுத்திருந்த அந்த அம்மாள் பதறி எழ…. எம்பி வலது காலைத் தூக்கி அவள் வயிற்றில் போட்டான்.

இரும்பு விழுந்த கனம். அதிர்ச்சி. அவள் எழவில்லை. நடப்புத் தெரிய…. வாயிலிருந்தும் சத்தம் வரவில்லை.

அடுத்து , அக்பர் முன்னைவிட சுறுசுறுப்பாக இயங்கினான்.

வாயில் கத்தியை வைத்துக் கொண்டு… பெரியவரின் இடுப்பு வேட்டியை எடுத்து அவர் கைகளைப் பின்புறமாக கட்டி இறுக்கினான். தலைமாட்டில் இருந்த துண்டை எடுத்து அவர் வாயைக் கட்டினான்.

அதே போல்…. முந்தானைக் கிழித்து அந்த அம்மாவின் கை, வாய்…. காரியம் கனகச்சிதம்.

“நான் இங்கே இருக்கிற எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போன அஞ்சாவது நிமிசம்தான் நீங்க அசையனும். மீறி அசைஞ்சா… அப்புறம் வாழ உயிரிருக்காது. ! “எச்சரித்து எழுந்தான்.

அவர்கள் உறைந்து கிடந்தார்கள்.

அக்பர் அலமாரியைத் திறந்தான்.

அல்வா போல… பணம், நகைகளை அள்ளி தான் தயாராக கொண்டு வந்திருந்த கருப்பு பைக்குள் திணித்தான்.

திருப்தியாக இரண்டு அடி எடுத்து வைத்தவன் திரும்பிப் பார்த்தான்.

சாமான்கள் பளபளப்பு கண்களை உறுத்தியது. அருகில் வந்தான். பக்கத்தில் கோணி.

முடிந்த மட்டிலும் திணித்துக் கட்டினான். பணம் நகைப் பையை கொஞ்சமாக ஒதுக்கி மூட்டையை லாவகமாக தூக்கி முதுகில் போட்டுக்கொண்டு கத்தியுடன் நான்கடி நகர்ந்தான்.

அறைக்குள் பளீர் வெளிச்சம்.

திடுக்கிட்டுப் பார்த்தான். அதிர்ச்சி.!

அறைவாசலில் பெண். அவள் ஆடவில்லை, அசையவில்லை. அப்படியே நின்றாள்.

ஆளை பார்த்த அக்பருக்கு குப்பென்று வியர்த்தது. சுதாரித்தான்…

“கத்தி கலாட்டாய் பண்ணினே..” கத்தியை நீட்டினான்.

அவள் முகத்தில் பயமில்லை. திடமாக நின்று அவனையேத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

அந்த பார்வை துணிச்சலே இவனுக்குள் ஆட்டம் கண்டது.

“என்ன பார்க்கிறே…? ” கரகரத்தான்.

“முதல் வேலையாய் என்னைக் கெடுத்தே. அடுத்து என் திருமண நகை, பணம், சீர்வரிசை சாமான்கள் எல்லாம் மூட்டைக் கட்டிட்டே. ஆக… தாலி கட்டாம எனக்குத் திருமணம் முடிச்சுட்டே. எல்லாத்தையும் எடுத்துப் போற நீ என்னை ஏன் விட்டுப் போறே..? என்னையும் உன்னோட அழைச்சுப் போ. ” சொன்னாள்.

இவன் அரண்டு பார்த்தான்.

“ஏய்….! ” எகிறினான்.

“என்ன தயக்கம்….? நீ கொன்னாலும் சரி, வைச்சி குடும்பம் நடத்தினாலும் சரி. நீ அழைச்சுப் போகலைன்னா.. கண்டிப்பா வருவேன். அடையாளம் தெரியும். வீட்டு விலாசம் இருக்கு.” கையில் உள்ளதை எடுத்துக் காட்டினாள்.

அக்பரின் ஓட்டுநர் உரிமம். ! அவளை ஆளும்போது நழுவியது.

அக்பர் உறைந்தான். தப்ப வழி இல்லை. அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான்.

என்ன பெண் இவள்..!! – வெறித்தான்.!!

Print Friendly, PDF & Email

கொலைக் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2023

விமான நிலையம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2023

காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)